பேராசை தரும் பேரழகு!

பொதுவாகவே பெண்களின் அழகைப் பார்த்து ஆண்களுக்கு ஆசை வரும். அந்த அழகு ஒரு பெண்ணுக்கு அளவுக்கு மீறி கூடிக்கொண்டே போனால்?

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன். சில பெண்களை விட மாட்டேன்” என்று வைரமுத்து அவர்கள் எழுதிய நிலைதான் உண்டாகும்.

அந்தப் பேரழகி நடக்கும் தெருவில் ஆண்கள் நுழைந்தால் அவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதால் ஆண்களை விடமாட்டேன் என்கிறான் காதலன். ஆனால் சில பெண்களையும் விட மாட்டானாம். ஏன்? அவளைப் பார்த்தால் பெண்களுக்கே பேராசை வந்து விடுமாம்.

அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆம். செந்தமிழ்த் தேன்மொழியாள் பாடலில் “பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுகிறார்.

இப்படி பெண்ணுக்குப் பெண் பேராசை கொள்ளும் பெண்கள் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குற்றாலத்தில் அப்படியொரு பெண் இருந்திருக்கிறாள். அவளைப் பற்றி திருக்குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியிருக்கிறார்.

கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்
நூல் – திருக்குற்றாலக் குறவஞ்சி
எழுதியவர் – திரிகூட ராசப்பக் கவிராயர்

அவள் பெயர் வசந்தவல்லி. காலையில் எழுந்து குளித்து முடித்து அழகு செய்து கொண்டு கிளம்பி வந்தாள். குற்றாலத்துப் பெண்கள் அவளைப் பார்க்கின்றார்கள். அவர்கள் கண்களே அவர்களுக்கு வசந்தவல்லியின் அழகை விளக்கிவிடுகின்றன. அவளைப் பார்த்து பெண்கள் மயங்கும்படியாக பேடையன்னம் போல வசந்தவல்லி நடந்துவந்தாள்.

அன்றைக்கே பெண்ணுக்குப் பெண் மயங்கும் அழகு இருந்திருக்கிறது. அதைப் பின்னாளில் கவியரசர் “உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும். பெண்களுக்கே ஆசை என்றால் என் நிலையை என்ன சொல்வேன்” என்று பூவும் பொட்டும் திரைப்படத்தில் எழுதினார்.

பழமை மாறாத புதுமை” என்று மெல்லிசை மன்னர் அடிக்கடி சொல்வார். கண்ணதாசன் எழுதியதும் அப்படித்தான். புதுமையான முறையில் சொன்னார். ஆனால் பழையதையே சொன்னார். ஆம். கம்பராமாயணத்தில் சொல்லப்பட்ட பழைய கருத்தையே புதுமையாகச் சொன்னார். கவியரசர் படிக்காத கம்பராமாயணமா?!

கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு? என்றாள்
நூல் – கம்பராமாயணம்
காண்டம் – ஆரண்ய காண்டம்
காட்சிக் குறிப்பு – சீதையைக் கண்ட சூர்ப்பனகை வியத்தல்
எழுதியவர் – கம்பர்

சூர்ப்பனகை இராமனைக் கண்டு மயங்கி அவனோடு பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது அந்தப் பக்கமாக சீதை வருகிறாள். அவளைப் பார்த்ததுமே அவள் திருமகளோ என்று ஒரு ஐயம் சூர்ப்பனகைக்கு வருகிறது.

சீதையினுடைய அழகு அவளையே மயக்கக் கண்டாள். அவளைப் பார்த்த கண்ணால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. அவள் அழகைக் கண்டு எண்ணிய கருத்தை வேறெதிலும் செலுத்த முடியவில்லை. ஒரு பெண்ணான தன்னுடைய நிலையே இப்படியிருக்கிறதே ஒரு ஆண் கண்டால் என்னாகும் என்று வியக்கிறாள்.

அன்று சூர்ப்பனகை நினைத்ததையே ஆணின் கூற்றாக மாற்றி கவியரசர் எழுதியிருக்கிறார்.

காலங்கள் மாறினாலும் காதலியின் அழகை ஆண்கள் இப்படிப் பெருமையோடு வருணித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்

செந்தமிழ்த் தேன்மொழியாள்
………………………
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ
படம் – மாலையிட்ட மங்கை
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – டி.ஆர்.மகாலிங்கம்
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் டி.கே.இராமமூர்த்தி
பாடலின் சுட்டி – http://youtu.be/WPDRRh1Ve6M

உன்னழகைக் கண்டுகொண்டால்
பெண்களுக்கே ஆசை வரும்
பெண்களுக்கே ஆசை வந்தால்
என் நிலமை என்ன சொல்வேன்
படம் – பூவும் பொட்டும்
பாடல் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை – ஆர்.கோவர்தனம்
பாடலின் சுட்டி – http://youtu.be/o2Iu8lXOlcs

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
…………………………….
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன்
சில பெண்களை விடமாட்டேன்
படம் – இந்தியன்
பாடல் – வைரமுத்து
பாடியவர் – ஹரிஹரன், ஹரிணி
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலின் சுட்டி – http://youtu.be/SfHbknfOOuA

அன்புடன்,
ஜிரா

160/365