என்றும் இளமை

  • படம்: ஆட்டோ ராஜா
  • பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4

மூவாத உயர் தமிழ்ச்

சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் தந்தது?

சந்தத்தில் மாறாத நடையொடு, என்முன்னே யார் வந்தது?

பிரபலமான பாடல்தான். ஆனால் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்காவிட்டால், சரணத்துக்கும் பல்லவிக்கும் நடுவே வரும் அந்த வார்த்தையைக் கவனிக்கக்கூடமாட்டோம், ‘மூவாத’!

அதென்ன மூவாத?

’மூவாத் தமிழ்’ என்று கேட்டிருக்கலாம், மூப்பு அடையாத, என்றைக்கும் வயது ஆகாமல் இளமையோடிருக்கிற தமிழ் என்று பொருள்!

’ஏவா மக்கள் மூவா மருந்து’ என்று ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம், அப்பா, அம்மா ஒரு செயலைச் செய் என்று ஏவாத முன்பே அதைச் செய்து முடிக்கிற குழந்தைகள் இருந்துவிட்டால், அந்தப் பெற்றோர் அமிர்தம் சாப்பிட்டதுபோல் தலை நரைக்காமல், உடம்பு தளராமல் வாழ்ந்துவிடுவார்களாம்!

மூவா மருந்து என்றால், நம்மை மூப்பு அடையாதபடி இளமையாகவே வைத்திருக்கும் மருந்து!

திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பாடும்போது, ‘மூவா மேனியான்’ என்பார். நம்மாழ்வாரும் திருமாலை ‘மூவா, முதல்வா!’ என்று அழைத்து நெகிழ்வார்.

புலமைப்பித்தனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் இதையெல்லாம் படித்திருக்கிறார், ‘மூவாத உயர் தமிழ்’ என்று அதே சொற்களால் அவருக்குப் பிடித்த கடவுளைப் பாடிவிடுகிறார்!

‘மூவா’ எப்படி ‘மூவாத’ ஆனது?

ம்ஹூம், ‘மூவாத’தான், ‘மூவா’ ஆனது, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்!

டென்டிஸ்ட் சமாசாரம் இல்லை, ‘மூவாத’ என்ற வார்த்தைக்குப்பின்னே ஒரு பெயர்ச் சொல் வந்தாகவேண்டும் (மூவாத மேனியான், மூவாத முதல்வன், மூவாத மக்கள், மூவாத தமிழ்… இப்படி), ஆகவே, அது ‘பெயரெச்சம்’ எனப்படும்.

இந்தப் பெயரெச்சம் எதிர்மறையாக வரும்போது, அதாவது ‘பாடும் கவிதை’ என்று இல்லாமல், ‘பாடாத கவிதை’ என்று Negative பொருளில் எதிர்மறைப் பெயரெச்சமாக வரும்போது, அதன் நிறைவில் (அதாவது ஈறாக) உள்ள எழுத்து, ‘த’, அது கெடும், அதாவது நீங்கும், ‘மூவாத தமிழ்’ என்பது, ‘மூவாத் தமிழ்’ என்று மாறிவிடும், அதைதான் ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்பார்கள்!

இதேபோல், ‘எழுதாத கவிதை’ என்பது ‘எழுதாக் கவிதை’ எனவும், ’பேசாத பேச்சு’ என்பது ‘பேசாப் பேச்சு’ எனவும் மாறும். எல்லாம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்!

தமிழுக்கு ஈறு ஏது? அந்த விதத்திலும் அது மூவாத் தமிழ்தான்!

***

என். சொக்கன் …

15 07 2013

226/365