இல்லமும் உள்ளமும்

1990களின் மத்தியில் வந்த ஒரு இந்திப் பாடல் திடீரென நினைவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.

Ghar se nikalte hi
kuch door chalte hi
Raste main hai uska ghar

இந்த வரிகளின் பொருள் என்ன?

வீட்டில் இருந்து புறப்பட்டு
சற்று தொலைவு போனால்
வழியில் அவள் வீடு உள்ளது

மெட்டுக்குள் அழகாக உட்கார்ந்து கொண்ட இந்தி வரிகளை என்ன நினைத்து கவிஞர் எழுதினார் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆனால் எனக்கு இப்படித் தோன்றுகிறது.

All roads lead to Rome என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. எந்தச் சாலையில் போனாலும் அது ரோம் நகரத்துக்குச் செல்லும் என்பது அதன் பொருள். அதாவது ரோம் நகரம் அந்த அளவுக்குப் புகழ் வாய்ந்ததாம்.

உலகத்துக்கு ரோம் நகரம் என்றால் அவனுக்கு அவள் வீடு. அவன் எந்தத் தெருவில் போனாலும் கால்களும் மனமும் அவனைக் கொண்டு சேர்க்கும் இடம் அவளுடைய வீடு. All roads lead to lover’s house.

வீடு வரை உறவு என்று கண்ணதாசன் சொன்னதை உறவு இருக்கும் இடம் தான் வீடு என்று மாற்றிக் கொள்ளலாம்.

ஜெண்டில் மேன் திரைப்படத்தில் செஞ்சுருட்டி ராகத்தில் “நாதவிந்து கலாதீநமோ நம” என்ற திருப்புகழின் சாயலில் அமைந்த பாடல் “என் வீட்டுத் தோட்டத்தில்” என்ற பாடல்.

காதலி அவளுடைய காதலை அவளுடைய வீட்டுக்குச் சொல்லியிருக்கிறாள். வீடு என்றால்? தோட்டத்துப் பூக்கள், ஜன்னல் கம்பிகள், தென்னை மரங்கள், அந்த மரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
உன் பேரைச் சொல்லுமே!

வீட்டில் உள்ளவர்களால் காதலுக்கு உதவி இருக்கிறதோ இல்லையோ. வீட்டால் உதவி இருக்கிறது. அவன் பெயரை அவள் அத்தனை முறை வீட்டிடமும் வீட்டில் இருக்கின்ற பொருட்களிடமும் சொல்லியிருக்கிறாள்.

இதை வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இன்னும் அழகாகச் சொன்னார் கவிஞர் தாமரை.

காதலன் தன்னுடைய காதலை காதலியிடம் சொல்கிறது போல காட்சியமைப்பு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ரசனை மிகுந்த வரிகள். தாமரை நீருக்குள் மூழ்குவதே இல்லை. வெள்ளத்து அணையது அதன் மலர் நீட்டம். ஆனால் காதல் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது தாமரையாவது தாவும் மரையாவது?

அப்படிப் பட்ட காதலைச் சொல்லும் போது தன்னுடைய வீட்டைப் பற்றி அழகாகச் சொல்கிறான் அவன்.

என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

அட! அசத்தி விட்டானே! ஆம். ஒருவருடைய வீட்டுக்குப் போனாலே அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டை வைத்திருக்கும் பாங்கு மட்டுமல்ல… வீட்டில் இருப்பவர்களின் பாங்கினாலும்.

இந்த ஒருவரியையே ஒரு நாள் ஒரு கனவு திரைப்படத்துக்காக ஒரு முழுப் பாடலாக்கித் தந்தார் வாலி. காதலன் காதலியை அவனுடைய வீட்டுக்கு கூட்டிச் செல்கிறான். அது வீடே அல்லது என்பது போல இருக்கிறது அவளுடைய அனுபவம். வீட்டில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது தெய்வங்கள் குடியிருக்கின்றனவா என்று அவள் ஆனந்தமாக ஆச்சரியப்படுகிறாள்.

ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் ஏது சொல் தோழி

வீடு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? மிகமிகப் பழக்கமான சொல்தான். ஆனால் பொருள் பலருக்கும் தெரியாது. விடுவதனால் அது வீடு எனப்பட்டது. எதை விடுவதனால்? நமது துன்பங்களை விடுவதால் வீடு. நாம் துன்பங்களைப் படுவதால் அதற்குப் பெயர் பாடு. அது போல நாம் துன்பங்களை விடுவதால் அதற்குப் பெயர் வீடு.

வாலி எழுதிய பாடலைப் போல ஒரு வீடு இருந்தால் துணிந்து காதலிக்கலாம். காதற்துணையையும் வீட்டுக்கு கூட்டிச் செல்லலாம்.

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – என் வீட்டுத் தோட்டத்தில்
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை – ஏ.ஆர்.ரகுமான்
படம் – ஜெண்டில்மேன்
பாடலின் சுட்டி – http://youtu.be/Qg3uqQgizyI

பாடல் – நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
வரிகள் – கவிஞர் தாமரை
பாடியவர் – ஹரிஹரன், தேவன், பிரசன்னா
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
படம் – வாரணம் ஆயிரம்
பாடலின் சுட்டி – http://youtu.be/QqI2woQjWK4

பாடல் – காற்றில் வரும் கீதமே
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி
இசை – இளையராஜா
படம் – ஒரு நாள் ஒரு கனவு
பாடலின் சுட்டி – http://youtu.be/pnteqlhXlS4

பாடல் – Ghar se nikhalte hi
பாடியவர் – உதித் நாராயணன்
பாடலின் சுட்டி – http://youtu.be/arK4ybYfH4k

அன்புடன்,
ஜிரா

287/365