ஒரு சொல், பல பொருள்

பேசுறதையே பேசுற நீ” என்று தமிழ்த்திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. ”பாடுறதையே பாடுற நீ” என்று பாட்டு உண்டா?

ஒன்றல்ல பல பாடல்கள் உண்டு. கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் கூட்டணி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இப்படிப் பாட்டுகள் நிறைய வந்தன. காய் பாட்டு. லா பாட்டு. மே பாட்டு என்று பல பாட்டுகள். பிறகு இந்த வகைப் பாடல்கள் திரைப்படங்களில் வழக்கொழிந்து போனாலும் ஒரு மிகமிக அருமையான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்தது.

கண்களால் கைது செய்” என்று தலைப்பே கவித்துவமாக இருக்கும் ஒரு திரைப்படத்தில் வந்த பாடல் அது. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். மெட்டமைத்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான். மெட்டு பாரதிராஜாவுக்கும் உடனே பிடித்துப் போய்விட்டது. அடுத்தது என்ன? பாட்டெழுத வேண்டியதுதானே.

முதலில் ஒரு கவிஞர் வந்தார். முயன்று முடங்கினார். இன்னொருவரிடம் மெட்டு போனது. அவர் எழுதிய பாடல் மெட்டுக்குப் பொருந்தாமல் பட்டுப் போனது.

இவ்வளவு அருமையான பாடலை விட்டுவிடவும் மனமில்லை. அப்போது வந்தார் ஒரு திடீர் கவிஞர். அவர் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர். ஈரநிலம் படத்திற்கு வசனமும் எழுதியவர். புதுக்கவிதை எழுதுகின்றவர்.

ஆனால் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதேயில்லை. சொற்களை மெட்டு என்னும் நாற்காலிக்குள் அடிக்கடி உட்கார வைத்துப் பழகியதும் இல்லை. தமிழ் ஆர்வமும் கவிதை ஆர்வமும் கொண்ட அவர் மெட்டைச் செவி கொடுத்துக் கேட்டார். சற்று யோசனைக்குப் பிறகு மடமடவென்று வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டாராம்.

தீக்குருவியாய்
தீங்கனியினை
தீக்கைகளில்
தீஞ்சுவையென
தீப்பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரா…..

அப்பப்பா எத்தனை தீ! பாட்டு வரிகள் மெட்டுக்குள் கச்சிதமாகப் பொருந்திவிட்டன. ஹரிணியும் முகேஷும் அந்தப் பாடலை மிக அழகாகப் பாடி மெருகேற்றினர்.

முன்பு சொன்ன காய் பாடல், மே பாடல், லா பாடல் போல இது ஒரு தீப்பாடல். எத்தனை தீ பாருங்கள். ஆனால் ஒவ்வொரு தீக்கும் ஒவ்வொரு பொருள்.

தீக்குருவியாய் – சுறுசுறுப்பான குருவியாய்
தீங்கனியினை – அழகான கனியினை
தீக்கைகளில் – துடிப்பான கைகளில்
தீஞ்சுவையென – இனிப்பான சுவையென
தீப்பொழுதினில் – மிகப் பொருத்தமான பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரா………………

அதெல்லாம் சரி. பாடலை எழுதியவர் யார்? சொல்லவே இல்லையே! அவருடைய இயற்பெயர் ரோஸ்லின் ஜெயசுதா. ஆனால் இனிமையாகப் பாடும் குரலால் தேன்மொழி என்ற பட்டப் பெயரே அவர் பெயராயிற்று.

இவரைப் போன்ற கவிஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள். இன்னும் நிறைய வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்ப்போம்.

கவிஞர் தேன்மொழியின் பழைய பேட்டியொன்று – http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=169
பாடலின் ஒளிச்சுட்டி : http://www.youtube.com/watch?v=7-gKENfRMxc

அன்புடன்,
ஜிரா

096/365