Tagged: K.J.Yesudas Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 10:23 am on December 17, 2012 Permalink | Reply
  Tags: Aingurunooru, Chandrabose, K.J.Yesudas, P.Suseela   

  மாம்பூ 

  ஒரு அழகான பாடல் தொலைக்காட்சியில் வந்தது. மிக இனிமையான பாட்டு.

  படம் : மச்சானைப் பாத்தீங்களா
  இசை : சந்திரபோஸ்
  பாடியவர்கள் : இசையரசி பி.சுசீலா & கந்தர்வக் குரலோன் கே.ஜே.ஏசுதாஸ்
  எழுதியவர் : வாலி
  பாடலின் சுட்டி : http://www.youtube.com/watch?v=NcvYJiPUU48

  ஆண்: மாம்பூவே சிறு மைனாவே
  எங்க ராஜாத்தி ரோஜாச்செடி
  முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
  நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ
  நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா

  பெண்: மாம்பூவே சிறு மைனாவே
  நான் மச்சானின் பச்சைக்கிளி
  தொத்திக்கொள்ள தோள் கொடுத்தான்
  எனக்கது சுகமாக இருக்குது ஆஆ
  என் மனம் எங்கெங்கோ பறக்குது

  இந்தப் பாடலில் என்னை மிகவும் ஈர்த்தது பாடலின் தொடக்கம்.

  காதலியை எத்தனையெத்தனையோ பூக்களுக்கு ஒப்பிட்டுப் பாட்டெழுதியிருக்கிறார்கள். அழகிய தாமரை, மணமிகு மல்லிகை, செந்நிற ரோஜா என்று எத்தனையெத்தனையோ மலர்கள் இருக்க, மாம்பூவே என்று கவிஞர் தொடங்கியிருக்கிறார்.

  மாம்பூ மிகச்சிறியது. பொடிப்பொடியாக இருக்கும். ஒருவித மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதில் சிறப்பான நறுமணமும் இருக்காது.

  பிறகு ஏன் மாம்பூ என்று சொல்கிறார் கவிஞர்?

  பழைய தமிழ்ப் பாடல்களில் மாம்பூ வருகிறதா என்று தேடினேன்.

  ஐங்குறுநூறு என்ற நூலில் ஓரம்போகியார் ஒரு விளக்கம் கூறியிருக்கிறார். அது ஒரு 18+ குறும்புக் குறிப்பு.

  யாரெல்லாம் மாம்பூக்களை முகர்ந்து பார்த்திருக்கிறீர்கள்?

  சரி. ஓரம்போகியாரின் பாட்டுக்குப் போகலாம்.

  எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ் சினை,
  புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்,
  வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
  ஊரன் ஆகலின் கலங்கி,
  மாரி மலரின் கண் பனி உகுமே

  முழுப்பாட்டையும் விளக்க வேண்டாம். நேரடியாக மாம்பூவுக்கு வருகிறேன்.

  எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை
  புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்

  கொஞ்சம் பிரித்துச் சொல்கிறேன் பொருள் புரியும்.

  எக்கர் மாஅத்துப் – மணல்மேட்டிலுள்ள மாமரத்தின்
  புதுப் பூம்பெருஞ்சினை – புதிதாக பூத்துள்ள பெரிய அரும்புகள்
  புணர்ந்தோர் மெய்ம் மணம் – ஆணோடு கூடிய பெண்ணின் மேனி மணத்தை(ப் போன்றது)
  கமழும் தண்பொழில் – கமழும் குளிர்ந்த சோலை

  மாம்பூவின் மணம் எப்படிப்பட்டது என்று தெரிகிறதா?

  ”மாம்பூவே சிறுமைனாவே” என்ற பாடலை எழுதியவர் வாலி. மாம்பூவுக்கு இலக்கியம் சொல்லும் நறுமணத்தைத் தெரிந்துதான் அவர் எழுதியிருக்க வேண்டும்.

  சற்று யோசித்துப் பாருங்கள்.. ஒரு காதலன் காதலியை மாம்பூவே என்று அழைக்கிறான் என்றால்… வேண்டாம். வேண்டாம். நான் இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.

  அன்புடன்,
  ஜிரா

  016/365

   
  • Samudra 10:34 am on December 17, 2012 Permalink | Reply

   ஹா ஹா.முழுவதையும் சொல்லவில்லையே

  • MGR 12:30 pm on December 17, 2012 Permalink | Reply

   ””மாம்பூவே சிறுமைனாவே” என்ற பாடலை எழுதியது யாரென்று தெரியவில்லை. “இதை மட்டும் மாற்றி விடுங்கள்!

   • என். சொக்கன் 12:39 pm on December 17, 2012 Permalink | Reply

    என் கவனக்குறைவுதான். மன்னிக்கவும். இந்தப் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. சரி செய்துவிட்டேன் 🙂

  • Kannabiran Ravi Shankar (KRS) 12:35 pm on December 17, 2012 Permalink | Reply

   “மாம்பூவே” – ஒரு இலக்கியப் பாட்டு!
   இசையும் அப்படியே!
   மனசுக்குள்ள பல முறை ரீங்காரம் பண்ணும்…

   “மாம்பூவே” -ன்னு தொடங்குறதுக்கு முன்னாடி மெல்லிய தபேலா இசை..
   ஆண் குரல் முடிஞ்சதும் கொலுசு ஒலிக்கும் இசை = தந்தன-தன்; தன-தன்; தந்தன-தன் ன்னு ரொம்ப நல்லா இருக்கும்

   அப்பறம் ஜேசுதாஸ் பாடிக்கிட்டு இருக்கும் போதே, சுசீலாம்மா ஓஓ ன்னு இழுக்க ஆரம்பிப்பாங்க;
   நாலு வரிக்கும் முழு இழுப்பு…எப்படித் தான் மூச்சு பிடிச்சாங்களோ?… இழுத்து முடிச்ச அடுத்த நிமிசமே, “மாம்பூவே” ன்னு பிசிறில்லாமப் பாடத் தொடங்குவாங்க
   = இசை அரசி ங்கிற பட்டம் “வாங்குனதோ/ கொடுத்ததோ” இல்ல; “அமைஞ்சது” -ன்னு தெரிஞ்சிப் போகும்;

   சந்திரபோஸ் is a singer too, apart from Music Dir
   He wud have sung along with TMS in this same movie – எங்கம்மா மகராசி பாட்டுல அவரும் பாடுவாரு; நல்ல இசையமைப்பாளர்; காலம் அற்பாயுசுல பிரிச்சிருச்சி:(

   • Kannabiran Ravi Shankar (KRS) 12:46 pm on December 17, 2012 Permalink | Reply

    இந்தப் பாடம் பாக்கும் ஆசையைத் தூண்டிருச்சி

    Sivakumar, Sridevi & Sumithra – Kinda complex romantic flick
    ஸ்ரீதேவி அதிகம் ஆசையுள்ள, ஆனா வெளிக்காட்டிக் கொள்ளாத பொண்ணோ? ரொம்ப ஏக்கம் இருக்கும் அந்தக் காதல்ல;

    ஸ்ரீதேவி போட்டிருக்கும் அந்தக் குட்டைப் பாவாடை – தாவணி – பின்னல்; அதுக்காகவே படம் பார்க்கலாம்!
    “கொட்டடிச் சேலை” கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட = கொட்டடிச் சேலை -ன்னே எழுதி இருப்பாரு வாலி; Any1, what is கொட்டடிச் சேலை?:))

    வாலி, இது மாதிரி, போற போக்குல, நுண் வர்ணனைகள் அசால்டாத் தூவிச் செல்வதில் கில்லாடி

    முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
    மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து – மன்னவன் பூச் சூட
    மடல் வாழை மேல் – குளிர் வாடை போல் – அவனோடு நான்

    கிராமத்துல, மடல் வாழை பாத்தாத் தெரியும், ரொம்ப விரியாது; அது போல இந்தப் பொண்ணு; ஆசை இருக்குது ஆனா, ஆனா… Vaalee’s apt example
    பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்…

  • Kannabiran Ravi Shankar (KRS) 1:02 pm on December 17, 2012 Permalink | Reply

   “மாம்பூ”
   = இத பத்திக் கொஞ்சமே கொஞ்சமே சொல்லணும்; 18+ ரொம்ப இல்லாம சொல்ல முனைகிறேன்:)
   = வரம்பு மீறுச்சு-ன்னா பழியைச் சங்கத் தமிழ் மேல போடுங்க:) ஏன்னா, இது சங்கத் தமிழில், “அப்படியான” பூ:)

   மாம்பழத்துல வண்டு -ன்னு பாத்து இருக்கீங்க-ல்ல?
   ஏன் பலாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், இன்னும் எத்தனையோ பழம்… அதுல எல்லாம் வண்டு இல்ல? Why Mango Only?:)

   அதாச்சும், பல பூக்களில் வண்டு வந்து உட்காரும்; “மோகம்” முடிஞ்சதும் பறந்துரும்!
   ஆனா, மாம்பூவில் வண்டு உட்கார்ந்தா…?
   அவ்ளோ சீக்கிரம் போக முடியாது; அவ்ளோ இன்பமா? பல நேரங்களில் வண்டு உள்ளேயே தங்கிக், காயாகிக், கனியாகி விடுவதும் உண்டு!

   இத்தனைக்கும் மாம்பூ ரொம்ப பெருசோ, அழகோ கிடையாது;
   ஆனா அதன் வாசம் = இலை வாசமா? பூ வாசமா? -ன்னு சொல்ல முடியாது
   “ஒரு மாதிரி” வாசம் = எனக்கு ரொம்பவும் பிடிக்கும்:)

   விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த -ன்னு திருப்புகழ்!
   மாரன் (மன்மதன்) அம்பில் ஐந்து மலர்கள் = தாமரை, அசோகம், நீலோற்பலம், முல்லை, மாம்பூ! மாம்பூ தான் கடைசி; அப்பறம் No Escape:)

   • Kannabiran Ravi Shankar (KRS) 1:31 pm on December 17, 2012 Permalink | Reply

    ஆனா, இந்த மாம்பூ பின்னாடி ஒரு சோகம் உண்டு; பலர் கண்ணுக்கும் தெரியாத சோகம்; அவனுக்கு மட்டுமே தெரிந்த சோகம்!

    “மாம்பூ” சூல் கொள்வது (pollination) = வண்டால் அல்ல;
    பெரும்பாலும் காற்றில் பரவி வரும் மகரந்தம் தான்;

    அதான் பாத்தீங்க-ன்னா, மாங்காய்/ மாம்பழ விளைச்சல் கூட, ரொம்ப அதிகமா இருக்காது;
    தனி மரமா இருந்தா, ரொம்பக் கடினம்; எப்போ காத்து அடிச்சி, எப்போ மகரந்தம் வந்து, எப்போ காய்/ கனி ஆவது?
    அதான் மாமரங்களைத் தனியா நடாமல், தோப்பாவே நடுவாங்க, வெவசாயம் பாக்குறவங்க; வீட்டுல தனியா வளரும் மாமரம் ரொம்பக் காய்க்காது;

    வண்டுகள் ரொம்பச் சட்டை பண்ணாத பூ;
    ஆனா, அமர்ந்த பின், மீட்சி இல்லாமல், இறுதி வரை உள்ள பூ = மாம்பூ!
    ————

    இந்தக் குணத்தை வச்சித் தான், அதிக வெட்கமுள்ள ஸ்ரீதேவிக்கு, “மாம்பூவே” ன்னு வாலி தொடங்குனாரா? -ன்னு எனக்குத் தெரியாது;
    ஆனா, வாலி அறிவாரோ/ இல்லையோ, இந்தக் குணம் சங்கத் தமிழ் அறியும்!

    அவரோ வாரார்; தான் வந்தன்றே
    பொரி கால் “மாஞ் சினை” புதைய
    எரி கால் இளந் தளிர் ஈனும் பொழுதே
    -ன்னு, Sanga Tamizh records this Nature’s Harmony to the minutest detail

    அவரோ வாரார்; தான் வந்தன்றே -ன்னு பூக்கும் “மாம்பூ”
    =தன்னை அதிகமா யாருக்கும் குடுக்காத பூ!
    =குடுத்த பின் மீட்சி இல்லாத பூ
    அந்தப் பூவின் வாசம் கூட அப்படித் தான்! அது போதையோ/ பேதையோ தெரியாது; ஆனா அது அப்படித் தான்!

    விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்து போல,
    தமிழும் முருகுமாய்…
    முருகவனிடம் மீட்சியே இல்லாத “மாம்பூ” வாசமே, என் மனசிலும் மணக்கக் கடவது!
    =மாம்பூவே!

  • Rie 1:41 pm on December 17, 2012 Permalink | Reply

   இப்படி பிரித்தால் 18+ கிடையாதே? புணர்ந்தோர் – புணர்ந்து +ஓர். மணல் மேட்டில் உள்ள மாமரத்தில் புதிதாய் பூத்துள்ள அரும்போடு காற்று வந்து கலந்து, அங்கே ஒரு நறுமணத்தை கமழச் செய்யும் பூஞ்சோலை.

   • Kannabiran Ravi Shankar (KRS) 8:52 pm on December 17, 2012 Permalink | Reply

    Nice thinking Rie. We can take like that also.
    But, புணர்ந்து “ஓர்” மணல் மேடு ன்னு வராது; “ஒரு” மணல்மேடு ன்னு தான் வரும்;
    “ஓர்” = பொதுவா உயிர் எழுத்தின் முன்பே;
    பின்னாளில் (பாரதி காலம்) இவ்விதி தளர்ந்திடினும், சங்கத் தமிழில் அப்படியில்லை;
    பாடலில் “புணர்ந்தோர் மெய் மணம்” என்றே உள்ளது;

    இங்கு ராகவன் சொன்னது சரியே!
    இலக்கியத்திலும். உரைகளிலும் மாம்பூ வாசம் அப்படியே பயில்கிறது;
    Itz a speciality description:)
    சங்கத் தமிழில் பொருள் கொள்ளும் போது, எழுத்து-அசை-சீர் ன்னு இத்தனையும் பாக்கணும்:)

    • Rie 9:57 pm on December 17, 2012 Permalink

     Oh! Thank you.

    • Rie 6:16 am on December 18, 2012 Permalink

     ராகவன் பிரித்து சொல்லியிருப்பது தான் சரி. இப்படியும் பிரிக்கலாம் , பிரித்தால் தயக்கம் தேவைப்படாத உரையாக இருக்கும் என்பது தான் என் எண்ணம். ஓர் என்னும் சொல்லை ஒன்று என்பதற்கு பதில் அறிந்து கொண்ட என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

     “மணல் மேட்டில் உள்ள மாமரத்தில் புதிதாய்ப் பூத்துள்ள அரும்போடு காற்று வந்து கலந்து உணர்ந்த நறுமணம் கமழும் பூஞ்சோலை.”

     அப்புறம் பாட்டில் காற்று எனச் சொல்லப்படவில்லையே என ஒரு சந்தேகம் வரலாம். ‘காற்றுக்கு உருவம் கிடையாது என்பதைப் புலவர் நயமாகக் காட்டியிருக்கிறார்’ அப்படின்னு சொல்ல வேண்டியிருக்கும். 🙂

    • Kannabiran Ravi Shankar (KRS) 7:22 pm on December 18, 2012 Permalink

     ha ha ha; good try Rie:)

  • rajesh 11:16 am on December 19, 2012 Permalink | Reply

   Maanthalir meni endru solvomillaya.. thangam pol jolikkum .. appadi nayagiyai solliyirukkalame

 • G.Ra ஜிரா 10:06 am on December 14, 2012 Permalink | Reply
  Tags: கபிலர், பாரி, , K.J.Yesudas, M.S.Viswanathan, MGR, Valee, Vani Jayaram   

  புகழ்ச்சி 

  புகழ்ச்சி யாருக்குத்தான் பிடிக்காது! அதிலும் கையில் காசு சேர்ந்து விட்டாலோ, துதிபாடும் கூட்டம் சுற்றி வந்து விட்டாலோ…. ஆகா ஆகான்னு புகழ்ச்சி உச்சந்தலை வரைக்கும் பிடிக்கும். அது கூடிப் பெருகி ஒரு கட்டத்தில் தன்னைப் புகழ்கிறவர்களை மட்டுந்தான் பிடிக்கும். சரிதானே?

  தமிழ் சினிமா தொடங்கிய போது புகழ்ச்சியெல்லாம் திரைக்கு வெளியேதான் இருந்தது. 1960களின் தொடக்கம் வரை அப்படித்தான். ஆயிரத்தில் ஒருவன் படம் முடியும் போது கதாநாயகப் பாத்திரத்தையும் கதாநாயகனையும் மறைமுகமாகப் புகழ்வது போல ஒரு பாட்டு வரும். அதுவொரு சிறிய தொடக்கம்.

  கவியரசர் கண்ணதாசனோ பட்டுக்கோட்டையோ எடுத்துச் செய்யாத இந்த ஹீரோ புகழ்ச்சிப் பாடல்கள் பிற கவிஞர்கள் வரவால் மாறியது. அந்த மாற்றம் வளர்ந்து இன்றைக்கு ஒவ்வொரு கதாநாயகனும் அறிமுகப் பாடல் (Introduction song) கேட்கும் அளவிற்கு வந்திருக்கிறது.

  இது சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நாம் போகப் போவதில்லை. இந்த ஹீரோ புகழ்ச்சியையும் எந்த அளவுக்கு நம் கவிஞர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டு பார்க்கப் போகிறோம்.

  எதையும் பாடல் வரிகளில் அடித்து ஆடும் வாலி இதிலும் அடித்து ஆடியிருக்கிறார்.

  படம் – ஊருக்கு உழைப்பவன்
  பாடல் – கவிஞர் வாலி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  பாடியவர்கள் – வாணி ஜெயராம் & ஏசுதாஸ்
  ஆண்டு – 1976
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=WgCneO_FIss
  ஆண்: இதுதான் முதல் ராத்திரி
  அன்புக் காதலி என்னை ஆதரி
  பெண்: தலைவா கொஞ்சம் காத்திரு
  வெட்கம் போனதும் என்னைச் சேர்த்திரு
  ஆண்: திருமுக மங்கை திங்களின் தங்கை
  நான் பாடும் நவராகமாலிகை

  கதைப்படி இது முதலிரவுப் பாட்டு. இந்தப் பாடலின் நடுவே பெண் பாடுவது போல ஒரு வரி.
  கைகளில் வாரி வழங்கிய பாரி
  தந்தானோ நீ தந்த மாதிரி

  அதாவது பாரி வள்ளலே அந்தக் குறிப்பிட்டவரிடமிருந்துதான் வள்ளல்தன்மையைக் கற்றுக் கொண்டு கொடையாளியானாராம்.

  அடேங்கப்பா!!!!!!!!!!!!!!!!!

  கடையெழு வள்ளல்கள் எழுவர். அவர்களில் அனைவருக்கும் சட்டென்று தெரிவது பாரியின் பெயர். அடுத்தது அதியமான்.

  அப்படியிருக்க, அந்தப் பாரியே இவரிடம் கொடையைக் கற்றார் என்று சொல்வது…. டூமச் புகழ்ச்சிதான். சினிமாவில் இதெல்லாம் மிகச்சாதாரணம்.

  சரி. அந்தப் பாரியை இலக்கியத்தில் எப்படிப் புகழ்ந்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?!

  கபிலர் என்னும் பெரும்புலவர் பாரியின் நண்பர். அவர் பாடிய ஒரு பாடலையே எடுத்துப் பார்ப்போம். பாரி பற்றிய நிறைய பாடல்கள் இருந்தாலும் பாரியின் கொடைத்தன்மையை எடுத்துச் சொல்ல இதை விடச் சிறந்த பாடல் இல்லையென்பது என் கருத்து.
  பாரி பாரி யென்றுபல வேத்தி (பாரி பாரி என்று பல ஏத்தி)
  ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் (ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்)
  பாரி யொருவனு மல்லன் (பாரி ஒருவனும் அல்லன்)
  மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே. (மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே)

  சுருக்கமாகப் பொருள் சொல்கிறேன். பாரி பாரி என்று புலவர்கள் பலவித புகழ்ச்சிகளை ஏற்றிச் சொல்வார்கள். ஆனால் பாரி மட்டுமல்ல இந்த உலகத்தில் மாரியும்(மழையும்) உண்டு.

  இதன் வழியாக புலவர் சொல்ல வருவது மழையின் கொடையானது எவ்வளவு சிறப்பானதோ அவ்வளவு சிறப்பானது பொதுவானது செழிப்பானது பாரியின் கொடை. இது வஞ்சப் புகழ்ச்சி. நேரடியாகப் புகழாமல் மறைமுகமாகப் புகழ்வது. புகழ்ச்சிக்கு இல்லாமல் தேவைக்குக் கொடுத்தவன் பாரி.

  அப்படிப்பட்ட கொடையாளின் பெயரைச் சொல்லி “கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ நீ தந்த மாதிரி என்று பாடுவது என்ன அணியோ! பொய்யான வகையில் ஒருவரை மேம்படுத்திச் சொல்வதால் பொய் மேம்பாட்டு அணி என்று சொல்லலாம்.

  இப்படியான டூமச் பொய் மேம்பாட்டு அணியில் நீங்களும் நிறைய பாட்டுகள் கேட்டிருப்பீர்கள். உங்களுக்கு எதெல்லாம் உடனே நினைவுக்கு வருகிறது?

  அன்புடன்,
  ஜிரா

  14/365

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel