Tagged: வைரமுத்து Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:40 am on May 6, 2013 Permalink | Reply
  Tags: , , வைரமுத்து   

  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த… 

  நண்பர் @rsGiri ஒரு பதிவில் கம்பன் ஏமாந்தான் பாடல் பற்றி சொல்ல ட்விட்டரில் அந்த பாடல் என்ன வகை என்று ஒரு சிறு விவாதம். என்ன வகை? யோசித்தால் இது ரியாலிட்டி செக் பாடலோ என்று தோன்றுகிறது,

  பொதுவாக கவிஞர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். கவிதைக்கு பொய் அழகு என்று சொல்லி மிகை நவிற்சியில் திளைப்பவர்கள்.  நிலவே முகமாக, மேகமே குழலாக, வில்லினை ஒத்த புருவம் , செம்பவளம் இதழாக, முத்தே பல்லாக , மான் விழி தேன் மொழி என்று கவிதையாய் வர்ணித்து பாடல் எழுதுவர்.

  நிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப்பாடுவதாகவே அமைவதுண்டு. சில வரிகளைப் பார்க்கலாம். ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்   http://www.youtube.com/watch?v=Lam8AsnE3OE

  ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ

  பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ

  செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன

  சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன

  படைத்தவனே பல  நாள் முயன்று வண்ணம் கொண்டு வந்த கற்பனையின் மிகை ரசமானது. வைரமுத்து பூவே இளைய பூவே பாடலில் http://www.youtube.com/watch?v=podBImbK5D0 சொன்னதும் இதே போல் மிகைதான்

  குழல் வளர்ந்து அலையானதே

  இரவுகளின் இழையானதே

  இரு புருவம் இரவானது

  இருந்தும் என்ன வெயில் காயுது

  இதில் இருபுருவம் இரவானது என்றால் பிறை நிலவு போல் என்றுதானே அர்த்தம்? ஆனால் சுட்டும் விழிச்சுடர் என்பதால் வெயில் காயுதா?

  கண்ணதாசன் செய்யாத வர்ணனையா? சிவந்த மண் படத்தில் பார்வை யுவராணி என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=0jn0ZS5ePlU

  பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

  நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

  என்ற வரிகளின் நயம் பாருங்கள். இந்த பாடலில் தொடர்ந்து ‘ மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே’ என்னும் போது மிகைதான் எவ்வளவு அழகு

  ராஜபார்வை படத்தில் அழகே அழகு பாடலும் வர்ணனை தான். ஆனால். மேகம் போல் கூந்தல் செவிகள் கேள்விக்குறி போல் என்று ஓவியம் வரைந்து பாடல் காட்சியில் இந்த மிகையான வர்ணனை பற்றி ஒரு நக்கல் இருக்கும். http://www.youtube.com/watch?v=jqCH3PK6GxQ

  இப்போது கண்ணதாசனின் கம்பன் ஏமாந்தான் பாடல் வரிகளைப் பாருங்கள்

  அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்

  அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

  அழகை வர்ணித்த வார்த்தைகளின் இன்னொரு கோணம் சொல்லி ஒரு வஞ்சப்புகழ்ச்சி. கவிஞர் ஒரு பழைய பாடலிலும் இதே போல் எழுதியிருக்கிறார். ‘ பாடினார் கவிஞர் பாடினார் பாடினார் கவிஞர் பாடினார்’ என்று ஒரு பாடல். பாடல் வரிகள் இந்த சுட்டியில்

  http://powsdouble.blogspot.in/2013/01/blog-post.html

  (நான் வானொலியில் கேட்டபோது இந்த பாடல் ‘நிச்சய தாம்பூலம்’ படத்தில் என்றே அறிவிப்பார்கள். ஆனால் இப்போது இணையத்தில் தேடியபோது இது ‘தென்றல் வீசும்’ என்ற படத்தில் இடம் பெற்றதாக படித்தேன்)

  மான் என்றால் புள்ளி இல்லை

  மயில் என்றால் தோகை இல்லை
  தேன் என்றார் மீன் என்றார்
  தெரிந்து சொன்னாரா ?
  கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
  ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே

  என்று கிண்டலான வார்த்தைகள்.

  நமக்கும் தெரியும் இந்த வர்ணனை எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்று. ஆனாலும் கண்ணதாசன் காதலியின் அணைப்பை வர்ணிக்க ‘ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து என்னை சிறை செய்ததோ’ என்று எழுதி அதை SPB குரலில் கேட்டால் என்ன சுகமோ சுகம்! மிகை நல்லது.

  மோகனகிருஷ்ணன்

  156/365

   
  • GiRa ஜிரா 9:49 am on May 6, 2013 Permalink | Reply

   கவிதைக்குப் பொய் அழகு என்பது ஒருபுறம் இருக்க… இந்தப் புகழ்ச்சிகளை காதலும் காதலியரும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மைதான்.

   ஒடிவது போல் இடையிருக்கும். இருக்கட்டுமே என்று கூட கவிஞர் ஒருவர் எழுதினார். எனக்குத் தெரிந்து அப்படியொரு இடையை பார்த்ததேயில்லை.

   காயாத கானகத்தே பாட்டில் கூட…

   மேயாத மான்
   புள்ளி மேவாத மான் என்று வரும்.

   மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது என்றும் கவியரசர் பாட்டுண்டே.

   ஆனால் மான் போன்ற கண்களும் மயிலின் தோகையும் ஒரு அன்னத்துக்கு இருந்தால் அது கேலியாக முடியும் என்று அறிவுரைக் கதை ஒன்று சொல்கிறது.

   அந்தக் கதையை பனி தீராத்த வீடு படத்தில் அணியம் மணியம் பொய்கையில் கண்டோர் அரையன்னம் ஒன்னாயிருந்து என்று பாடலானது.

   அந்த அன்னம் மானைப் பார்க்கிறது. அதன் கண்களைப் பார்க்கிறது. அது போல தனக்கும் கண்களை வாங்கிக் கொள்கிறது. மயிலைப் பார்க்கிறது. தோகையைப் பார்க்கிறது. அந்தத் தோகையை வாங்கிக் கொள்கிறது.

   மானிண்ட கண்ணுகளோடே
   மயிலுண்ட பீலிகளோடே..
   அன்ன நட காணான்
   ஆவழி வந்தவர்
   அவளுடே விக்ருதிகள் கண்டு
   பிறகு சிரித்தார்கள் என்று வரும்.

  • என். சொக்கன் 10:44 am on May 6, 2013 Permalink | Reply

   Comment From Sushima (Via Email)

   உண்மையாகவே ஒரு அழகான பெண்ணைப் பாருங்கள். அவள் அழகை வர்ணிக்க வேண்டும் என்றால், அழகா இருக்கா என்று சும்மா சொல்லிவிடமுடியாது இல்லையா? இயற்கையில் உள்ள நமக்குத் தெரிந்த அழகிய காட்சிகளோடு ஒப்பிட்டுத் தானே ஆகவேண்டும். மானின் மருண்ட விழிகள், தாமரையின் மென்மை/நிறம், கிளியின் பேச்சு, மீனின் வடிவம், மாலை வெயிலின் மஞ்சள் நிறம், நிலவில்லா இரவின் அடர்ந்த கருப்பு, நெளிந்து ஓடும் அமைதியான ஆறு, அத்தனையையும் ஒரு பெண்ணைப் புகழ பயன் படுத்தினால் அங்கே ஒரு ரசிகன் கவிஞன் ஆகிறான், கவிஞன் ரசிகனாகிறான் 🙂

   amas32

  • anonymous 10:45 am on May 6, 2013 Permalink | Reply

   ஒங்கள ஒன்னு கேப்பேன், கோச்சிக்கக் கூடாது:)

   //நிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப் பாடுவதாகவே அமைவதுண்டு//

   சுசீலாம்மா, ஜானகி, ஜென்சி, சித்ரா -ன்னு எத்தனையோ பெண் குரல்கள் உண்டே;
   அவையெல்லாம் பெண் பாடுவது தானே?
   அவற்றில் எல்லாம், ஒரு பெண், ஏன் ஆணின் அழகைப் பாடுவதாக அமையவில்லை?:)

   ஒரு வேளை…
   கவிதைக்குப் “பொய்” அழகு… ஆண்கள் தான் “பொய்” சொல்வார்கள்
   பெண்களுக்குப் “பொய்” சொல்லத் தெரியாது; அப்படித் தானே?:)) #ஓடீறேன்
   ——-

   • anonymous 10:56 am on May 6, 2013 Permalink | Reply

    //இளம் சிரிப்பு ருசியானது – அது கனிந்து இசையானது
    குயில் மகளின் குரலானது – இருதயத்தில் மழை தூவுது
    இரு புருவம் இரவானது – இருந்தும் என்ன வெயில் காயுது//

    இரவு எப்போ வரும்?
    =கொஞ்சம் கொஞ்சமா, வானம் மூட மூட வரும்
    அதே போல், வெட்கத்தால், அவ கண்ணு மூட மூட, வருவது புருவம் தானே?
    =அதான் “இரு புருவம் இரவானது”…

    அவள் வெட்கப்பட்டு கண்ணை மூடிக்கிட்டா;
    இவன் வெட்கப்பட்டா ஆகுமா? பணியில் தளராதவன்:)
    கொஞ்சம் கொஞ்சமா வேர்க்குது இவனுக்கு
    = அதான் “இருந்தும் என்ன வெயில் காயுது?”:)
    ——-

    இது அகநானூற்றில், இளங் கீரனார் காட்டும் காட்சியும் கூட;
    =அவ கிட்ட புருவ வில், இவன் கிட்ட அம்பு
    =அவள் இமை மூடியதால், அவளுக்கு இரவு தோன்றுகிறது = உடல் வெண்ணிலா நிறம் கொள்கிறது;
    =இவன் மனம் மூடாததால், இவனுக்குப் பகல் காய்கின்றது = உடல் வியர்த்து, ஈரம் கொள்கிறது;

    சங்கத் தமிழில், கற்பனை இருக்கும்; ஆனா “பொய்” இருக்காது;
    அந்தக் கற்பனையும் “Realism” ஒட்டியே அமையும் – அவன் வியர்வை/ அவள் உடலில் வெள்ளைப் படுதல் போல..

    ஆனால் பின்னாளில் தான், அரசவைப் புலவர்கள், ஒருவரையொருவர் மிஞ்ச, அதீத கற்பனைகளின் போக்கை உருவாக்கி விட்டனர்;
    உலா வரும் அரசனைக் கண்டு, பேரிளம் பெண்களும் மறுபடியும் பூப்படைந்தனர்-ன்னு எல்லாம் “உலா” பாடினர்:))

   • Saba-Thambi 9:49 pm on May 7, 2013 Permalink | Reply

    அவற்றில் எல்லாம், ஒரு பெண், ஏன் ஆணின் அழகைப் பாடுவதாக அமையவில்லை?:)

    பாடலாசிரியர்கள் அநேகமாக ஆண்கள் அதனால் தானோ? 🙂

  • anonymous 11:15 am on May 6, 2013 Permalink | Reply

   நீங்க குறிப்பிட்ட அந்த “ராஜபார்வை”க் காட்சி, என் மனசுக்கு ரொம்ப பிடித்தமானது:)

   கண் தெரியாத கமல், மாதவியை, அங்கம் அங்கமாக உணரும் காட்சி;
   இது வரைக்கும் இலக்கியத்தில், பெண்ணின் பாகங்களுக்கு, என்னென்ன உவமை சொல்லி இருக்காங்களோ,
   எல்லாத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே இடத்தில் குடுப்பாரு கண்ணதாசன்…

   கடேசீல, கற்பனை போன போக்குல, அடுப்புல சாப்பாடு கருகீரும்:)
   —–

   கூந்தல் வண்ணம் மேகம் போல – குளிர்ந்து நின்றது
   கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் – கேள்வி ஆனது
   =இதெல்லாம் சாதாரண உவமை தான்…

   பூ உலாவும் கொடியைப் போல – இடையைக் காண்கிறேன்
   //போகப் போக வாழை போல – அழகைக் காண்கிறேன்//
   =இதான் கண்ணதாசன் மென்-குறும்பு:) தொடை-ன்னு சொல்லாமச் சொல்லும் மென்-காமம் (softcore)

   மாவிலை பாதமோ
   மங்கை நீ வேதமோ
   //ஒரு அங்கம் கைகள் அறியாதது// -ன்னு கண்ணில்லா அவன் ஏக்கத்தில் அழகா முடிச்சிருவாரு..

   எத்தனை திறமை மிக்க வாலிகள், வைரமுத்துகள், பா.விஜய்கள் வந்தாலும்…
   கண்ணதாசனின் “நேர்மை” மட்டும் பளீர்-ன்னு அடிச்சி நிக்கும்!

  • rajnirams 11:40 am on May 6, 2013 Permalink | Reply

   அருமை.நம் கவிஞர்களின் வர்ணனைகளுக்கு அளவும் இல்லை,அதை சொல்ல ஆரம்பித்தால் இடமும் இல்லை.வர்ணனையின் உச்சம் என்பது என்னை பொறுத்த வரை தன் காதலியை தமிழகத்தோடு ஒப்பிட்ட வாலியின் “மதுரையில் பறந்த மீன் கொடியை” தான் சொல்வேன்.அதே போல பஞ்சவர்ணக்கிளியில் தமிழோடு ஒப்பிட்ட அவளுக்கும் தமிழ் என்று பேர் பாடலும்.உ.சு.வாலிபனில் வரும் நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ வும் சூப்பர்.அவள் ஒரு நவரச நாடகம் பாடலில் கண்ணதாசனும் அவளும் தமிழும் ஓரினம் என்று அசத்தியிருப்பார். காதலர் தினத்தில் வாலியின் வரிகள்-பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் பெண்ணென வந்தது இன்று சிலையே,உன் புகழ் வையகம் சொல்ல சிற்றன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல”வரிகள் ஈடு இணையற்றவை.”உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி,உன்னை கண்டாலும் அவன் கூட தொலைந்தானடி,இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது,அது கோடானும் கோடியை ஏய்க்கின்றது என்ற புலமைப்பித்தன் வரிகளும்,தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ,நீ மாலை நேர பொன்மஞ்சள் நிலவோ என்ற முத்துலிங்கத்தின் வரிகளும் சூப்பர். நன்றி. வாழ்த்துக்கள்.

  • rajnirams 4:19 pm on May 6, 2013 Permalink | Reply

   மேலே குறிப்பிட்ட படைத்தானே பிரம்ம தேவன் பாடலை எழுதியவர் கண்ணதாசன்,புலமைப்பித்தனின் பாடல் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ,ராஜ சுகம் தேடி வர தூதுவிடும் பெண்ணோ,சேலை சோலையே” என்ற வர்ணனை பாடல்.நன்றி.

 • mokrish 11:04 am on May 3, 2013 Permalink | Reply
  Tags: , பைபிள், வைரமுத்து   

  நல்ல நல்ல நிலம் பார்த்து 

  சென்னை வெயில் கடுமையாகி எல்லாரும் கோடை மழையைப் பற்றி பேசுகிறார்கள் எனக்கு என் சுவாசக்காற்றே படத்தில் வரும் சின்ன சின்ன மழைத்துளிகள் பாடல் நினைவுக்கு வந்தது. வைரமுத்து மழையை சிலாகித்து எழுதிய வரிகள் http://www.youtube.com/watch?v=TC61Of_ZYKw 

  சிறு பூவினிலே விழுந்தால்

  ஒரு தேன்துளியாய் வருவாய்

  சிறு சிப்பியிலே விழுந்தால்

  ஒரு முத்தெனவே மலர்வாய்

  பயிர் வேரினிலே விழுந்தால்

  நவதானியமாய் விளைவாய்

  என் கண்விழிக்குள் விழுந்ததனால்

  கவிதையாக மலர்ந்தாய்

  மழைத்துளி சேர்ந்த இடம் பொருத்து அதன் உருமாறும் என்று அழகாக ஒரு Outcome Analysis. இதே போல் வேறு ஏதொ படித்தது போல் தோன்றி, கொஞ்சம் யோசித்தவுடன் நினைவுக்கு வந்தது பைபிளின் உவமைக் கதைகள் . நான் படித்த பள்ளி, கல்லூரி இரண்டும் கிறிஸ்துவ நிறுவனங்கள் என்பதால் பைபிளோடு அறிமுகம் உண்டு. கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் படித்ததால் ஒரு மறு அறிமுகம் கிடைத்தது. இயேசு விதைப்பவனும் விதையும் என்று ஒரு உவமைசொல்கிறார் .

  விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான் அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதை உண்டு எச்சமாய் போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்பதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

  இதற்கு விளக்கம் சொல்லும்போது விதை என்பது இறைவனின் செய்தி என்று குறிப்பிடுகிறார்.  இயேசு காவியத்தில் கண்ணதாசன் வார்த்தைகளில் இந்த விளக்கம்

  விண்ணரசின் செய்தியினை உணரா தானே

     வீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!

  கண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான்

     கல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!

  எண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன்

     எப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்!

  நண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன்

     நல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்!

  அருமையான விளக்கம். சரி ஆனால் கொஞ்சம் நெருடல். என்ன சொல்கிறார்? அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை என்றால் , விதை விழுந்த இடமே விளைவுகளை நிர்ணயிக்கும் என்றால் கொஞ்சம் கடுமையாக இருக்கிறதே? விதைக்கு இடம் பெயர வழியில்லைதான் ஆனால் மனிதர்களுக்கு உண்டே?  என்ன செய்யவேண்டும் அதையும் கண்ணதாசன் சொல்கிறார் இக்கரைக்கு அக்கரைப் பச்சை  என்ற பாடலில்

  http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Ikkaraikku%20Akkarai.eng.html

  கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்

  கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்

  வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள்

  போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்

  வாய்த்த இடம் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்தால் நல்ல விளைவுகள் வரும். தெளிவான அறிவுரை.

  மோகன கிருஷ்ணன்

  153/365

   
  • Saba-Thambi 2:18 pm on May 3, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு!
   உவமைகள் பொதுவாக பூலோக கதைகள் மேலோக அர்த்தங்களைக் விவரிக்கும். (earthly stories with heavenly meaning)
   விவரணம் பல கோணங்களில், உங்கள் பதிவு அழகாக திரைப்பாடலுடன் அமைகிறது.

   I have been searching for the “yesu kaaviyam” for the last 20 years. whenever I visited Sri Lanka I have searched most of the Tamil bookshops but was unsuccessful. Finally with the link suggested by Mr. N.Sokkan I have placed an online order and eagerly waiting for the arrival.

   Saba

   • Mohanakrishnan 8:31 am on May 4, 2013 Permalink | Reply

    நன்றி.

  • rajnirams 6:29 pm on May 3, 2013 Permalink | Reply

   அருமை,பல வருடங்களுக்கு பிறகு கவியரசரின் அக்கரைப்பச்சை பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் திங்கிங்கிற்கு பாராட்டு,லிங்க்கிற்கு நன்றி:-))

  • rajnirams 6:30 pm on May 3, 2013 Permalink | Reply

   பதிவு அருமை,பல வருடங்களுக்கு பிறகு கவியரசரின் அக்கரைப்பச்சை பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.தங்கள் திங்கிங்கிற்கு பாராட்டு,லிங்க்கிற்கு நன்றி:-))

   • Mohanakrishnan 8:17 am on May 4, 2013 Permalink | Reply

    ‘திங்கிங்கிற்கு – அட !

  • GiRa ஜிரா 10:13 pm on May 3, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. விதைகள் எங்கு விழ வேண்டும் என்று விதைகள் முடிவு செய்ய முடியாது.

   அதைத்தான்.. நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா.. இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா என்று கவியரசர் சொல்லியிருப்பார்

   இக்கரைக்கு அக்கரைப் பச்சை .. என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை… மெல்லிசை மன்னரின் குரலில் அட்டகாசமான பாடல்.

  • amas32 10:44 pm on May 3, 2013 Permalink | Reply

   இந்த மாதிரி பாடல்களைத் தேடிப் பிடிக்கவே ஒரு தனித் திறமை வேண்டும். அது உங்களிடம் நிறைய இருக்கிறது. வைரமுத்துவின் கவிதை பிரமாதம்.

   இயேசு காவியத்திலும் அதை அடுத்து நீங்கள் கொடுத்திருக்கும் திரைப் பா டலிலும் கவியரசரின் மேதமையையும் எளிமையையும் ஒரு சேரக் காணலாம்.

   படித்துப் படித்து இன்புறுகிறேன்.

   amas32

   • Mohanakrishnan 8:30 am on May 4, 2013 Permalink | Reply

    நன்றி. சில பாடல்களும் பாடல் வரிகளும் என்றும் நினைவில். மறக்கவே முடியாது

  • Mohanakrishnan 8:24 am on May 4, 2013 Permalink | Reply

   அந்த உவமை வழிச்செய்தியை கண்ணதாசன் வார்த்தைகளில் படிக்க http://goo.gl/5Chl8

  • rvpp 4:58 pm on May 4, 2013 Permalink | Reply

   Koadaiyil Jannalai thiranthu vaithean. Kaatru varavillai. Kavidaiyum, paniththuliyum mattrum vithai kalum vanthu vizhukindrathu. Kilpauk (veedu irukkum idam) illai illai…MALEpaukil irunthu. Valthukkal sir.

  • anonymous 5:01 am on May 5, 2013 Permalink | Reply

   sema post, mokrish;
   pl. pardon my english

   there is a great song (sonnet) by John Milton – On His Blindness
   that exactly captures the contemplative mood of our Kannadasan

   God, has thousands of angels at his bidding speed; over the land & ocean
   Milton speaks to himself –
   “Then what did I do or achieve? What did I do to make my creation purposeful?”

   That murmur soon replies, “God doth not need either man’s work or his own gifts”
   = Who best bear his mild yoke, they serve him best;

   கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
   கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
   வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
   //போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//

   The last line is the explosion of Kannadasan
   //போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
   = They also “serve”, who only “stand” & wait

   நிற்பவர்கள் நில்லுங்கள் = Only Stand….
   Whattay flashing lightning thoughts of both Kannadasan & Milton!

   = They also “serve”, who only “stand” & wait
   உன் அருளே புரிந்து “இருந்தேன்”, இனி என்ன திருக் குறிப்பே?
   வாழும் சோம்பரை உகத்தி போலும், அரங்க மா நகருளானே!

   • anonymous 5:12 am on May 5, 2013 Permalink | Reply

    விண்ணரசின் செய்தியினை உணரா தானே = வீதியிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!
    = வீதியில் விழும் விதை ரொம்ப மிதிபடும்; ஆனாலும் வீதியிலும் மரங்கள் இருக்கே!

    கண்ணிறைந்த அவர்மொழியை ஏற்றும் ஏலான் = கல்லினிலே விதைக்கின்ற விதைபோல் ஆவான்!
    = கல்லிலே விழும் விதை மடமட-ன்னு வளராது; ஆனா, கல்லிலும் வேர் கொள்ளும் செடிகள் இருக்கே!

    எண்ணத்தில் இவைஇருந்தும் மாயை மிக்கோன் = எப்போதும் முள்விழுந்த விதைபோல் ஆவான்!
    = முள்ளில் விழுந்த விதை முள்ளாய்த் தான் போவும்; ஆனா கள்ளியிலும் பால் இருக்கே!

    நண்ணுமிதை முற்றிலுமே பற்றிச் செல்வோன் = நல்லநிலம் தனில்விதைத்த விதையே ஆவான்!
    = நல்ல நிலத்தில் விளைந்தவை தான் அறுவடை ஆகும்; (பிறர் உண்ணப் பயன்படும்);
    = ஆனா, அதுக்காக, மற்ற நிலத்தில் விளைபவையும், வளர்ச்சி உள்ளவையே!
    = They also serve who only stand & wait

    இயேசு நாதப் பெருமானின் உள்ளத்தை, அப்படியே கொண்டாந்து கொடுக்கும் கண்ணதாசன் வாழ்க!

   • anonymous 5:35 am on May 5, 2013 Permalink | Reply

    ஒரு வகையில், இது கண்ணதாசனின் Life Confession கூட:)

    //வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
    போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
    —–

    கண்ணதாசன் வாழ்க்கை வரலாற்றைப் படிச்சிப் பாருங்க (குறிப்பா: வனவாசம் & மனவாசம்)

    கண்ணதாசனுக்கு அருகில் இருந்தோர் பலருக்கு
    =அவரைப் பிடிக்கவே பிடிக்காது
    கண்ணதாசனைப் பிடித்தவர்கள்
    =அவர் அருகில் இல்லாத/ முகம் தெரியாதவங்க தான்!
    (MSV was the only one near soul, who really “understood” him)
    ——

    கண்ணதாசனின் “உறுதி” அப்படி;
    =தன் முனைப்பு செய்யவே மாட்டாரு
    =பிரபலங்களிடம் ஒட்டிக்கிட்டு வாழ மாட்டாரு;

    எது-ன்னாலும் பளீர் தான்;
    கொள்கை மாறினாலும், அதையும் பளீர் -ன்னு அவரே சொல்லீருவாரு;

    ஐயோ, என் நண்பர்கள் தப்பா நெனச்சிக்குவாங்களோ?
    பாட்டுக்காக அமைஞ்ச Social Networking கலைஞ்சீருமோ? -ன்னு எல்லாம் துளியும் கவலைப்படாத குணம்;

    அதான் போல, அவர் அருகில் இருப்போர் எல்லாம், அரசியலில்/ அதிகாரத்தில் முன்னேற…
    இவர் மட்டும், “தான் தானாகவே” இருந்து கொண்டார்;

    //வழிச் சாலை கண்டோர்கள் செல்லுங்கள்
    போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்//
    = They also “serve”, who only “stand” & wait

    அருகில் இருப்போருக்கு பிடிக்கலீன்னாலும்
    முருகில் இருப்போனுக்கு என்றும் பிடித்தமான கண்ணதாசன்;

  • psankar 11:08 pm on May 13, 2013 Permalink | Reply

   ஒரு முறை பாண்டியராச(ஜ)ன் மிகவும் சோகமாக இருந்தாராம். அப்போது வினுச் சக்கரவர்த்தி, அவரிடம், “வீழ்வது பாறையாக இருந்தாலும் விதைக்கு வீரியம் இருந்தால் பிழைத்துக் கொள்ளும்” என்றாராம். இதனைக் கேட்ட பின் பாண்டியராசனுக்கு மிகவும் வீரம் வந்து அதன் பின் முன்னேறினாராம். உங்கள் பதிவைப் படித்தவுடன், பாண்டியராசனும், வினுவும் இந்த சேதியைப் பகிர்ந்து கொண்ட பேட்டி நினைவுக்கு வந்தது.

 • mokrish 10:57 am on April 27, 2013 Permalink | Reply
  Tags: , , வள்ளுவர், வைரமுத்து   

  துயிலாத பெண் ஒன்று 

  காதலர்கள் நிறைய பேசுவார்கள். ஒருவரை மற்றவர் புகழ்ந்து, வர்ணித்து என்று ஆயிரம் இருக்கும். கூடவே சண்டையும் இருக்கும். கொஞ்சம் நிஜம் கொஞ்சம் பொய் என்று சண்டையிலும் பல வகைகள் உண்டு. இருவரில் யாருடைய அன்பு உயர்வானது என்று விவாதிக்கலாம். காதலில் யாருக்கு அவஸ்தை அதிகம் என்றும் விவாதிக்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் ‘ம்ம் அப்புறம் ‘ என்ற sweet nothings ஐ கிண்டல் செய்வார்.  அழகன் படத்தில் நாயகனும் நாயகியும் விடிய விடிய பேசுவது ஒரு பாடல் காட்சியாக வரும்.

  புதுமைப்பெண் படத்தில் வைரமுத்து எழுதிய  காதல் மயக்கம் என்ற பாடல் வரிகள்  http://www.youtube.com/watch?v=7Qd2Hy2kpFs

   ஆண் : நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

  பெண் : நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

  இந்த பாடலில் வரும் மற்ற வரிகள் வழக்கமான தேகம் சிலிர்க்க மேகம் மிதக்க, உன் பாதமே வேதம்  போன்ற Cliche வரிகள். ஆனல் இந்த தூக்கம் கனவு பற்றிய வரிகள் முதல் முறை கேட்கும்போதே பிடித்த வரிகள்.  ஆண் பெண் இருவரும் தூக்கம் பற்றியும் கனவு பற்றியும்  அவரவர் நிலை சொல்வது போல்.ஆண் சொல்வதென்ன? அவன் தூங்கும்போது நிறைய கனவுகள் வருகிறதாம். அதனால் தொல்லையாம். இதற்கு பெண் சொல்லும் பதில்தான் சுவாரஸ்யம்.

   நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை

  மெய்யா…பொய்யா.. மெய்தான் ஐய்யா

  நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை 

  என்று சொல்கிறாள். ‘அடப்பாவி உன்னால் தூங்க முடிகிறது அதில் கனவு வருகிறது, வேறென்ன வேண்டும்? என்னைப்பார் எப்போதும் உன் நினைவில் இருக்கும் என்னால் தூங்கவே முடியவில்லை. அதனால் எனக்கு கனவே இல்லை என்று அவள் அனுபவிக்கும் வேதனை  சொல்கிறாள் இந்த வரிகளில் கொஞ்சம் இலக்கிய வாசம் .தேடினால் கம்பனிடம் போய் நிற்கிறது.

   துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்;

  வெயிலிடைத்தந்த விளக்கு என ஒளி இலா  மெய்யாள்;

  சீதை அசோகவனத்தில்  உறங்கவேயில்லை. தூக்கம் என்று இமைகளை மூடுவதையும் திறப்பதையும் மறந்துவிட்டாள் என்ற கற்பனை. ஏன் இதை மறந்தாள்? வள்ளுவன் சொல்லும் விளக்கம் பாருங்கள்

  இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

  ஏதிலர் என்னும் இவ்வூர் 

  என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை என்று சாலமன் பாப்பையா உரையில் சொல்கிறார்.கம்பன் வேறு ஒரு இடத்திலும் இந்த தூங்காத நிலைப்பற்றி சொல்லும் வரிகள்

   துயில்இலை ஆதலின் கனவு தோன்றல

  அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்

  திரிசடை சீதையிடம் கூறுவது  – நீதான் தூங்குவதே இல்லையே அதனால்தான் உனக்கு கனவுகளே இல்லை. நான் கண்ட கனவை சொல்கிறேன் கேள் என்கிறாள். வைரமுத்துவின் புதுமைப்பெண் நாயகியும் தான் இதே நிலையில் இருப்பதை காதலனிடம் சொல்கிறாள்.

   உறவோடு விளையாட எண்ணும்

  கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

   என்று கண்ணதாசன் சொல்வதும் துயிலாத ஒரு பெண்தான். 

  மோகனகிருஷ்ணன்

  147/365

   
  • Arun Rajendran 12:05 pm on April 27, 2013 Permalink | Reply

   ”அவள் அனுபவிக்கும் வேதனை சொல்கிறாள்” -> வேதனை அல்லவே…பரிதவிப்பு / மோகம் நு சொல்லலாமா? இதுக்கு இணையா கம்ப இராமாயணத்துல
   ‘பண்ணே ஒழியா, பகலோ புகுதாது,
   எண் ஏ தவிரா, இரேவா விடியாது,
   உள் நோ ஒழியா, உயிர் ஓ அகலா,
   கண்ணே துயிலா; இதுவோ கடன் ஏ?’ பொருந்தி வருதுங்களா…

  • amas32 8:43 pm on April 28, 2013 Permalink | Reply

   Men are from Mars and Women are from Venus 😉 அதனால் காதல் வயப்படும் போது ஒருவர் உறஙுவதில்லை, கனவும் இல்லை. மற்றவர் உறங்கிக் கனவும் காண்கிறார். இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.

   amas32

  • Saba-Thambi 9:41 pm on April 29, 2013 Permalink | Reply

   இன்னொரு பாடல்…
   துயில்லாத பெண்ணொன்று கண்டேன்… (மீண்ட சொர்க்கம்)
   (http://www.youtube.com/watch?v=OvSf2xV2rjo)

 • mokrish 11:24 am on April 18, 2013 Permalink | Reply
  Tags: அறிவுமதி, , ரா பி சேதுப்பிள்ளை, , வைரமுத்து, PB ஸ்ரீநிவாஸ்   

  எந்த ஊர் என்றவனே 

  ஒருவர் நமக்கு அறிமுகமான சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்விகளில்  ஒன்று – ‘நீங்க எந்த ஊர்? என்பது. ஒரே ஊர் என்றோ ஒரே மாவட்டம் என்றோ தெரிந்தால் ‘ அட நீங்களும் வேலூர் தானா என்று உடனே ஒரு புன்முறுவல். நட்பு சுலபமாகும். நாம் பிறந்து வளர்ந்த ஊரை நினைத்தாலே சந்தோஷம் பொங்கும். வெளிநாட்டில் வாழும்போது சொந்த ஊரில் / மாவட்டத்தில் இருந்து வருபவர்களுடன் பேசும்போது ஒரு extra connect இருப்பதை உணர்ந்திருக்கிறேன்

  ஊர்ப்பெயர்களை அதன் வேர்ச்சொல் அறிந்து ஆராய்வது ஒரு பெரிய சவால்.இடப்பெயராய்வு. கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பல ஆய்வுகள் உண்டு. ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற ஆய்வை இணையத்தில் படித்தேன். சுவாரஸ்யமான ஆய்வு.

  http://www.tamilvu.org/library/lA475/html/lA475con.htm

  ஒரு கவிஞனை எந்த ஊர் என்றால் என்ன சொல்வான்? திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch?v=eyIWD8FOh4g

  உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்

  கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!

  என்று பிறப்பையும் பின் வரும் வரிகளில்

  வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்

  காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்

  கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

  பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு

  மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

  காதலில் விழுந்ததையும் பின் பள்ளத்தில் விழுந்ததையும் சொல்கிறார்

  வாலி தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை வைத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறார். மதுரையில் பறந்த  மீன் கொடியை அவள் கண்ணில் பார்த்து  சேரன் வில்லை புருவத்தில் பார்த்து புலிக்கொடியை அவள்  பெண்மையில் பார்த்து என்று அலங்காரமான பாடல் ஒன்று

  http://www.youtube.com/watch?v=GN5JGwKojgk அதில் தொடர்ந்து

  காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

  குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ

  சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?

  தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

  பாடல் முழுவதும் வரிகளின் முதலில் ஒரு ஊர்ப்பெயரை வைத்து அழகான கவிதை.

  வைரமுத்துவும் பெண்ணை வர்ணிக்கவே ஊர்பெயரை வரிகளில் வைக்கிறார். ஒவ்வொரு ஊரிலிருந்தும் விசெஷமான பொருள் எடுத்து அந்த பெண்ண சிலை செய்ததாக கற்பனை தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலில் வரும் வரிகள் http://www.youtube.com/watch?v=NzRHBQRpqkI

  கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு

  ஒதடு செஞ்ச மண்ணு  மட்டும் தேனூரு

  நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க

  நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

  வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு – அட

  கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு

  கண்ணதாசனின் காதல் தோல்வி வரிகள் ஒரு extreme என்றால் வாலியும் வைரமுத்துவும் சொல்லும் வர்ணனைகளும் மிகையானவை. எனக்கு அறிவுமதி எழுதிய அழகூரில் பூத்தவளே பாடல வரிகள் இயல்பாக இருப்பதாய் தோன்றுகிறது http://www.youtube.com/watch?v=83Zq_Bh3mCg

  அழகூரில் பூத்தவளே

  எனை அடியோடு சாய்த்தவளே

  மழையூரின் சாரலிலே

  எனை மார்போடு சேர்த்தவளே

  உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்

  உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

  அவள் பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் அதுவே அழகான ஊர் என்பதில் ஒரு உணர்வுபூர்வமான நியாயம். அவள் சுருட்டி போட்ட முடியை மோதிரமாகியது அவள் சோம்பலில் இவன் முறிந்து போனது – மிகை தான் என்றாலும் சுவாரஸ்யம்தான். ,’என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்’ என்று சொன்னவுடன் நெகிழ்ந்து ‘அன்பூரில் பூத்தவனே என்கிறாள்.  அழகு.

   மோகனகிருஷ்ணன்

  138/365

   
  • amas32 11:51 am on April 18, 2013 Permalink | Reply

   எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் “தஞ்சாவுரு மண்ணெடுத்து” பாடல் 🙂 http://www.youtube.com/watch?v=Ebw2V22-mZI

   அதெ மாதிரி இந்த வரிகலும் அருமை!
   /காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

   குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ/

   நமக்கு எப்படி தாய் மொழி முக்கியமோ அதே மாதிரி பிறந்த மண்ணும் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயம். அந்த ஊரை விட்டு வந்து வெகு காலம் ஆகியிருந்தும் மண்ணின் மணம் மனத்தை விட்டு அகலுவதில்லை. அதனால் காதலிக்கும் பெண்ணின் வடிவிலும் அதைக் காண்கிறோம்!

   amas32

  • n_shekar 4:26 pm on April 18, 2013 Permalink | Reply

   எனக்கும் “அழகூரில் பூத்தவளே” பாட்டுதான் மிகவும் பிடிக்கும் – பாடிய விதமும் மிக இனிமை 🙂

  • GiRa ஜிரா 2:17 pm on April 19, 2013 Permalink | Reply

   நீங்க சொல்லியிருக்கும் அத்தனை பாட்டுகளும் நல்ல பாட்டுகள்.

   பெண்ணை நிலமென்றும் நீரென்றும் கவிஞர்கள் பாடிப் பாடி பாட்டுகள் நூறு வந்தாலும் இன்னும் அலுக்கவில்லை போலும்.

   ஊரு விட்டு ஊரு வந்து வம்பு செய்யக்கூடாதுங்குறது மறை பொருள் இதுதானா? 🙂

 • G.Ra ஜிரா 11:15 am on December 29, 2012 Permalink | Reply
  Tags: எஸ்.ஜானகி, ஏ.ஆர்.ரஹ்மான், குமரகுருபரர், முருகன், வைரமுத்து   

  முதல்வனின் முத்தம் 

  முதல்வனே என்னைக் கண் பாராய்
  முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
  காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
  முத்த நிவாரணம் எனக்கில்லையா
  படம் – முதல்வன்
  பாடல் – வைரமுத்து
  பாடியவர் – எஸ்.ஜானகி
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  ஆண்டு – 1999

  இந்தப் பாடலின் காட்சியமைப்பே சிறப்பானது. இயக்குனர் ஷங்கர் கம்ப்யூட்டர் கிராபிக்சில் புகுந்து விளையாண்டிருப்பார்.

  காதலனாக இருப்பவன் நாட்டுக்குக் காவலனாகவும் இருந்தாலே தொல்லைதான். வேளைக்கொரு ஊடலும் நாளுக்கொரு கூடலும் கிடைக்கவே கிடைக்காது. பசிக்குச் சாப்பிடாமல் கிடைத்த போது மட்டும் சாப்பிடும் காதல் பிச்சைக்காரி நிலை.

  அப்படியாக காதல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடப்பவளுக்கு ஒரு முத்த நிவாரணம் கிடைக்காதா என்றொரு ஏக்கம். அந்த ஏக்கத்தின் தாக்கத்தில் பாடுவதுதான் இந்தப் பாடல்.

  பின்னே… முதல்வன் முத்தம் எளிதாகக் கிடைத்து விடுமா?

  முதல்வனிடம் முத்தம் வேண்டுமென்று அந்தப் படத்தின் நாயகி மட்டும் கேட்கவில்லை. குமரகுருபரரும் கேட்கிறார்.

  ஆனால் அவர் கேட்கும் முதல்வன் நாட்டுக்கு முதல்வனல்ல. எத்தனை அண்டங்களுண்டோ அத்தனை அண்டங்களுக்கும் முதல்வன்.

  மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்
  வனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்
  புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்
  புதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புய
  கதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்
  கனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தல
  முதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே
  முனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே

  என்னடா… குமரகுருபரசுவாமிகள் முருகனிடம் முத்தம் கேட்கிறார் என்று பார்க்கின்றீர்களா? ஆம். கேட்கிறார். முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூலில் அல்லவா கேட்கிறார்!

  முருகனைத் தவிர பிற பந்தங்களை நீங்கிய ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பிரபந்தங்களில் ஒன்றுதான் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். கந்தர் கலிவெண்பாவும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் கூட அவர் எழுதிய பிரபந்தங்களில் அடங்கம்.

  பிரபந்தம் என்று சிறுகாப்பிய வகையில் அடங்கும். தமிழறிவும் இறையருளும் இருந்தால் நாமும் பிரபந்தம் எழுதலாம். ஆனால் அவை ஆழ்வார் அருளியது போலவோ குமரகுருபரசுவாமி அருளியது போலவோ இருக்குமா!

  உலகத்தைப் படைத்து – அதில்
  உயிர்களைப் படைத்து – அவைகட்கு
  உணர்வைப் படைத்து – அது தணிக்க
  உணவைப் படைத்து – அவற்றிலெல்லாம்
  உள்ளிருக்கும் உயர்வான பொருளைக்
  குழந்தையென்றும்
  மழலையென்றும்
  சின்னஞ் சிறுவனென்றும்
  எண்ணி எண்ணிக்
  கொஞ்சிக் கொஞ்சி உருகும் போது
  திருச்செந்தூர்க் குழந்தையாம்
  முத்துக்குமரன் முத்தமும் முக்தியன்றோ!

  அந்த வீடுபேற்றுக்காகத்தானே குமரகுருபரன் தமிழ்க்கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார். பிறப்பிலே ஊமையாய்ப் பேசாத அவரைத் திருச்செந்தூரிலே பேச வைத்ததும் அந்த முருகக்குழந்தைதானே!

  காதல் பஞ்சத்துக் கதாநாயகி முத்த நிவாரணம் கேட்டால், அருள் நிறைந்த குமரகுருபரரோ முத்த முக்தி கேட்கிறார். அது சரி. கேட்பதையும் கேட்கும் இடத்தில்தானே கேட்க வேண்டும்.

  அன்புடன்,
  ஜிரா

  028/365

   
  • Arun Rajendran 12:50 pm on December 29, 2012 Permalink | Reply

   முதல்வனின் முத்தம் இனித்தது..:-)

   • GiRa ஜிரா 9:09 pm on December 29, 2012 Permalink | Reply

    நன்றி அருண். முத்தமிழ் முதல்வன் முத்தம் இனிப்பதோடு எல்லாமுமாய் இருக்கும்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel