Tagged: வாலி Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:40 am on May 6, 2013 Permalink | Reply
  Tags: , வாலி,   

  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த… 

  நண்பர் @rsGiri ஒரு பதிவில் கம்பன் ஏமாந்தான் பாடல் பற்றி சொல்ல ட்விட்டரில் அந்த பாடல் என்ன வகை என்று ஒரு சிறு விவாதம். என்ன வகை? யோசித்தால் இது ரியாலிட்டி செக் பாடலோ என்று தோன்றுகிறது,

  பொதுவாக கவிஞர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். கவிதைக்கு பொய் அழகு என்று சொல்லி மிகை நவிற்சியில் திளைப்பவர்கள்.  நிலவே முகமாக, மேகமே குழலாக, வில்லினை ஒத்த புருவம் , செம்பவளம் இதழாக, முத்தே பல்லாக , மான் விழி தேன் மொழி என்று கவிதையாய் வர்ணித்து பாடல் எழுதுவர்.

  நிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப்பாடுவதாகவே அமைவதுண்டு. சில வரிகளைப் பார்க்கலாம். ரகசிய போலீஸ் 115 படத்தில் வாலி எழுதிய கண்ணே கனியே என்ற பாடலில் நாயகியின் அழகு பற்றி வரும் வரிகள்   http://www.youtube.com/watch?v=Lam8AsnE3OE

  ஒரு நாள் இரவு நிலவை எடுத்து உன் உடல் அமைத்தானோ

  பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் தந்தானோ

  செம்மாதுளையோ பனியோ மழையோ உன் சிரித்த முகம் என்ன

  சிறு தென்னம் பாளை மின்னல் கீற்று வடித்த சுகம் என்ன

  படைத்தவனே பல  நாள் முயன்று வண்ணம் கொண்டு வந்த கற்பனையின் மிகை ரசமானது. வைரமுத்து பூவே இளைய பூவே பாடலில் http://www.youtube.com/watch?v=podBImbK5D0 சொன்னதும் இதே போல் மிகைதான்

  குழல் வளர்ந்து அலையானதே

  இரவுகளின் இழையானதே

  இரு புருவம் இரவானது

  இருந்தும் என்ன வெயில் காயுது

  இதில் இருபுருவம் இரவானது என்றால் பிறை நிலவு போல் என்றுதானே அர்த்தம்? ஆனால் சுட்டும் விழிச்சுடர் என்பதால் வெயில் காயுதா?

  கண்ணதாசன் செய்யாத வர்ணனையா? சிவந்த மண் படத்தில் பார்வை யுவராணி என்ற பாடலில் http://www.youtube.com/watch?v=0jn0ZS5ePlU

  பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

  நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

  என்ற வரிகளின் நயம் பாருங்கள். இந்த பாடலில் தொடர்ந்து ‘ மான் வண்ணம் என்றாலும் மலர் வண்ணம் என்றாலும் குறைவென்று தமிழ் சொல்லுமே’ என்னும் போது மிகைதான் எவ்வளவு அழகு

  ராஜபார்வை படத்தில் அழகே அழகு பாடலும் வர்ணனை தான். ஆனால். மேகம் போல் கூந்தல் செவிகள் கேள்விக்குறி போல் என்று ஓவியம் வரைந்து பாடல் காட்சியில் இந்த மிகையான வர்ணனை பற்றி ஒரு நக்கல் இருக்கும். http://www.youtube.com/watch?v=jqCH3PK6GxQ

  இப்போது கண்ணதாசனின் கம்பன் ஏமாந்தான் பாடல் வரிகளைப் பாருங்கள்

  அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்

  அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

  அழகை வர்ணித்த வார்த்தைகளின் இன்னொரு கோணம் சொல்லி ஒரு வஞ்சப்புகழ்ச்சி. கவிஞர் ஒரு பழைய பாடலிலும் இதே போல் எழுதியிருக்கிறார். ‘ பாடினார் கவிஞர் பாடினார் பாடினார் கவிஞர் பாடினார்’ என்று ஒரு பாடல். பாடல் வரிகள் இந்த சுட்டியில்

  http://powsdouble.blogspot.in/2013/01/blog-post.html

  (நான் வானொலியில் கேட்டபோது இந்த பாடல் ‘நிச்சய தாம்பூலம்’ படத்தில் என்றே அறிவிப்பார்கள். ஆனால் இப்போது இணையத்தில் தேடியபோது இது ‘தென்றல் வீசும்’ என்ற படத்தில் இடம் பெற்றதாக படித்தேன்)

  மான் என்றால் புள்ளி இல்லை

  மயில் என்றால் தோகை இல்லை
  தேன் என்றார் மீன் என்றார்
  தெரிந்து சொன்னாரா ?
  கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
  ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே

  என்று கிண்டலான வார்த்தைகள்.

  நமக்கும் தெரியும் இந்த வர்ணனை எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்று. ஆனாலும் கண்ணதாசன் காதலியின் அணைப்பை வர்ணிக்க ‘ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து என்னை சிறை செய்ததோ’ என்று எழுதி அதை SPB குரலில் கேட்டால் என்ன சுகமோ சுகம்! மிகை நல்லது.

  மோகனகிருஷ்ணன்

  156/365

   
  • GiRa ஜிரா 9:49 am on May 6, 2013 Permalink | Reply

   கவிதைக்குப் பொய் அழகு என்பது ஒருபுறம் இருக்க… இந்தப் புகழ்ச்சிகளை காதலும் காதலியரும் விரும்புகின்றார்கள் என்பதும் உண்மைதான்.

   ஒடிவது போல் இடையிருக்கும். இருக்கட்டுமே என்று கூட கவிஞர் ஒருவர் எழுதினார். எனக்குத் தெரிந்து அப்படியொரு இடையை பார்த்ததேயில்லை.

   காயாத கானகத்தே பாட்டில் கூட…

   மேயாத மான்
   புள்ளி மேவாத மான் என்று வரும்.

   மானல்லவோ கண்கள் தந்தது மயிலல்லவோ சாயல் தந்தது என்றும் கவியரசர் பாட்டுண்டே.

   ஆனால் மான் போன்ற கண்களும் மயிலின் தோகையும் ஒரு அன்னத்துக்கு இருந்தால் அது கேலியாக முடியும் என்று அறிவுரைக் கதை ஒன்று சொல்கிறது.

   அந்தக் கதையை பனி தீராத்த வீடு படத்தில் அணியம் மணியம் பொய்கையில் கண்டோர் அரையன்னம் ஒன்னாயிருந்து என்று பாடலானது.

   அந்த அன்னம் மானைப் பார்க்கிறது. அதன் கண்களைப் பார்க்கிறது. அது போல தனக்கும் கண்களை வாங்கிக் கொள்கிறது. மயிலைப் பார்க்கிறது. தோகையைப் பார்க்கிறது. அந்தத் தோகையை வாங்கிக் கொள்கிறது.

   மானிண்ட கண்ணுகளோடே
   மயிலுண்ட பீலிகளோடே..
   அன்ன நட காணான்
   ஆவழி வந்தவர்
   அவளுடே விக்ருதிகள் கண்டு
   பிறகு சிரித்தார்கள் என்று வரும்.

  • என். சொக்கன் 10:44 am on May 6, 2013 Permalink | Reply

   Comment From Sushima (Via Email)

   உண்மையாகவே ஒரு அழகான பெண்ணைப் பாருங்கள். அவள் அழகை வர்ணிக்க வேண்டும் என்றால், அழகா இருக்கா என்று சும்மா சொல்லிவிடமுடியாது இல்லையா? இயற்கையில் உள்ள நமக்குத் தெரிந்த அழகிய காட்சிகளோடு ஒப்பிட்டுத் தானே ஆகவேண்டும். மானின் மருண்ட விழிகள், தாமரையின் மென்மை/நிறம், கிளியின் பேச்சு, மீனின் வடிவம், மாலை வெயிலின் மஞ்சள் நிறம், நிலவில்லா இரவின் அடர்ந்த கருப்பு, நெளிந்து ஓடும் அமைதியான ஆறு, அத்தனையையும் ஒரு பெண்ணைப் புகழ பயன் படுத்தினால் அங்கே ஒரு ரசிகன் கவிஞன் ஆகிறான், கவிஞன் ரசிகனாகிறான் 🙂

   amas32

  • anonymous 10:45 am on May 6, 2013 Permalink | Reply

   ஒங்கள ஒன்னு கேப்பேன், கோச்சிக்கக் கூடாது:)

   //நிறைய பாடல்களில் எல்லா வரிகளும் பெண்ணின் அழகைப் பாடுவதாகவே அமைவதுண்டு//

   சுசீலாம்மா, ஜானகி, ஜென்சி, சித்ரா -ன்னு எத்தனையோ பெண் குரல்கள் உண்டே;
   அவையெல்லாம் பெண் பாடுவது தானே?
   அவற்றில் எல்லாம், ஒரு பெண், ஏன் ஆணின் அழகைப் பாடுவதாக அமையவில்லை?:)

   ஒரு வேளை…
   கவிதைக்குப் “பொய்” அழகு… ஆண்கள் தான் “பொய்” சொல்வார்கள்
   பெண்களுக்குப் “பொய்” சொல்லத் தெரியாது; அப்படித் தானே?:)) #ஓடீறேன்
   ——-

   • anonymous 10:56 am on May 6, 2013 Permalink | Reply

    //இளம் சிரிப்பு ருசியானது – அது கனிந்து இசையானது
    குயில் மகளின் குரலானது – இருதயத்தில் மழை தூவுது
    இரு புருவம் இரவானது – இருந்தும் என்ன வெயில் காயுது//

    இரவு எப்போ வரும்?
    =கொஞ்சம் கொஞ்சமா, வானம் மூட மூட வரும்
    அதே போல், வெட்கத்தால், அவ கண்ணு மூட மூட, வருவது புருவம் தானே?
    =அதான் “இரு புருவம் இரவானது”…

    அவள் வெட்கப்பட்டு கண்ணை மூடிக்கிட்டா;
    இவன் வெட்கப்பட்டா ஆகுமா? பணியில் தளராதவன்:)
    கொஞ்சம் கொஞ்சமா வேர்க்குது இவனுக்கு
    = அதான் “இருந்தும் என்ன வெயில் காயுது?”:)
    ——-

    இது அகநானூற்றில், இளங் கீரனார் காட்டும் காட்சியும் கூட;
    =அவ கிட்ட புருவ வில், இவன் கிட்ட அம்பு
    =அவள் இமை மூடியதால், அவளுக்கு இரவு தோன்றுகிறது = உடல் வெண்ணிலா நிறம் கொள்கிறது;
    =இவன் மனம் மூடாததால், இவனுக்குப் பகல் காய்கின்றது = உடல் வியர்த்து, ஈரம் கொள்கிறது;

    சங்கத் தமிழில், கற்பனை இருக்கும்; ஆனா “பொய்” இருக்காது;
    அந்தக் கற்பனையும் “Realism” ஒட்டியே அமையும் – அவன் வியர்வை/ அவள் உடலில் வெள்ளைப் படுதல் போல..

    ஆனால் பின்னாளில் தான், அரசவைப் புலவர்கள், ஒருவரையொருவர் மிஞ்ச, அதீத கற்பனைகளின் போக்கை உருவாக்கி விட்டனர்;
    உலா வரும் அரசனைக் கண்டு, பேரிளம் பெண்களும் மறுபடியும் பூப்படைந்தனர்-ன்னு எல்லாம் “உலா” பாடினர்:))

   • Saba-Thambi 9:49 pm on May 7, 2013 Permalink | Reply

    அவற்றில் எல்லாம், ஒரு பெண், ஏன் ஆணின் அழகைப் பாடுவதாக அமையவில்லை?:)

    பாடலாசிரியர்கள் அநேகமாக ஆண்கள் அதனால் தானோ? 🙂

  • anonymous 11:15 am on May 6, 2013 Permalink | Reply

   நீங்க குறிப்பிட்ட அந்த “ராஜபார்வை”க் காட்சி, என் மனசுக்கு ரொம்ப பிடித்தமானது:)

   கண் தெரியாத கமல், மாதவியை, அங்கம் அங்கமாக உணரும் காட்சி;
   இது வரைக்கும் இலக்கியத்தில், பெண்ணின் பாகங்களுக்கு, என்னென்ன உவமை சொல்லி இருக்காங்களோ,
   எல்லாத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே இடத்தில் குடுப்பாரு கண்ணதாசன்…

   கடேசீல, கற்பனை போன போக்குல, அடுப்புல சாப்பாடு கருகீரும்:)
   —–

   கூந்தல் வண்ணம் மேகம் போல – குளிர்ந்து நின்றது
   கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் – கேள்வி ஆனது
   =இதெல்லாம் சாதாரண உவமை தான்…

   பூ உலாவும் கொடியைப் போல – இடையைக் காண்கிறேன்
   //போகப் போக வாழை போல – அழகைக் காண்கிறேன்//
   =இதான் கண்ணதாசன் மென்-குறும்பு:) தொடை-ன்னு சொல்லாமச் சொல்லும் மென்-காமம் (softcore)

   மாவிலை பாதமோ
   மங்கை நீ வேதமோ
   //ஒரு அங்கம் கைகள் அறியாதது// -ன்னு கண்ணில்லா அவன் ஏக்கத்தில் அழகா முடிச்சிருவாரு..

   எத்தனை திறமை மிக்க வாலிகள், வைரமுத்துகள், பா.விஜய்கள் வந்தாலும்…
   கண்ணதாசனின் “நேர்மை” மட்டும் பளீர்-ன்னு அடிச்சி நிக்கும்!

  • rajnirams 11:40 am on May 6, 2013 Permalink | Reply

   அருமை.நம் கவிஞர்களின் வர்ணனைகளுக்கு அளவும் இல்லை,அதை சொல்ல ஆரம்பித்தால் இடமும் இல்லை.வர்ணனையின் உச்சம் என்பது என்னை பொறுத்த வரை தன் காதலியை தமிழகத்தோடு ஒப்பிட்ட வாலியின் “மதுரையில் பறந்த மீன் கொடியை” தான் சொல்வேன்.அதே போல பஞ்சவர்ணக்கிளியில் தமிழோடு ஒப்பிட்ட அவளுக்கும் தமிழ் என்று பேர் பாடலும்.உ.சு.வாலிபனில் வரும் நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ வும் சூப்பர்.அவள் ஒரு நவரச நாடகம் பாடலில் கண்ணதாசனும் அவளும் தமிழும் ஓரினம் என்று அசத்தியிருப்பார். காதலர் தினத்தில் வாலியின் வரிகள்-பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் பெண்ணென வந்தது இன்று சிலையே,உன் புகழ் வையகம் சொல்ல சிற்றன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல”வரிகள் ஈடு இணையற்றவை.”உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி,உன்னை கண்டாலும் அவன் கூட தொலைந்தானடி,இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது,அது கோடானும் கோடியை ஏய்க்கின்றது என்ற புலமைப்பித்தன் வரிகளும்,தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ,நீ மாலை நேர பொன்மஞ்சள் நிலவோ என்ற முத்துலிங்கத்தின் வரிகளும் சூப்பர். நன்றி. வாழ்த்துக்கள்.

  • rajnirams 4:19 pm on May 6, 2013 Permalink | Reply

   மேலே குறிப்பிட்ட படைத்தானே பிரம்ம தேவன் பாடலை எழுதியவர் கண்ணதாசன்,புலமைப்பித்தனின் பாடல் “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ,ராஜ சுகம் தேடி வர தூதுவிடும் பெண்ணோ,சேலை சோலையே” என்ற வர்ணனை பாடல்.நன்றி.

 • mokrish 11:48 am on April 24, 2013 Permalink | Reply
  Tags: , காந்தர்வ மணம், வாலி   

  காந்தர்வ மணம் 

  விட்டலாச்சார்யா படங்கள் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு அவர்களே தீர்மானித்து செய்துகொள்வது காந்தர்வ மணம். இதில் பெரியவர்கள் சம்மதமோ துணையோ இருக்காது. நிலம் காற்று வானம் என்று இயற்கை மட்டும் சாட்சியாக நிற்கும் நிகழ்வு.

  காந்தர்வ மணம் என்று கேட்டவுடன் துஷ்யந்தன் (ஷார்ட் நேம் துஷ்டன்) சகுந்தலையை மணந்து பின் மறந்த காளிதாசன் காவியம் ராஜா ரவி வர்மா ஓவியங்களோடு காட்சியாக விரிகிறது. அலைபாயுதே மாதவனும் ஷாலினியும் நினைவுக்கு வருகிறார்கள். இன்றைய ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா’ எல்லாம் இந்த வகைதானோ என்று ஒரு சந்தேகம்.

  திருமணம் பற்றி நிறைய திரைப்பாடல்கள் உண்டு. காந்தர்வ மணம் சொல்லும் பாடல்கள் தேடியதில் கிடைத்த இரண்டு பாடல்கள்.

  குடியிருந்த கோயில் படத்தில் வரும் வாலி எழுதிய நீயேதான் எனக்கு மணவாட்டி பாடலில் ஆண் பாடும் வரிகள் http://www.youtube.com/watch?v=dSs1Q_MAN40

  கண்கள் இருக்க தோரணம் ஏனோ

  கைகள் இருக்க மாலைகள் ஏனோ

  உள்ளம் இருக்க மணவறை ஏனோ

  ஒரு மனதானால் திருமணம் ஏனோ

  தோரணம் இல்லை மாலைகள் இல்லை மணவறை இல்லை. ஆனால் ஒரு மனதாகியதால் திருமணம் என்ற சடங்கே தேவையில்லை என்ற தொனி. அவளுக்கும் சம்மதம்தான். பல பிறவியில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்தானே, இறைவன் எழுதி வைத்ததுதானே என்று சரணடைகிறாள். இதற்கு சாட்சி ? அடுத்த சரணத்தில் கவிஞர் சொல்லும் அல்லி, சந்திரன், தாமரை, சூரியன் என்று பட்டியல். ஒரு இரவில் தொடங்கி விடியல் வரை… நிச்சயமாக இது காந்தர்வ விவாகம்தான்.

  பாட்டும் பரதமும் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய மாந்தோரண வீதியில் என்ற பாடல் http://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM

  மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்

  மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்

  மாப்பிள்ளை பெண் இருவரையும் அடையாளம் காட்டி தோரணம் கட்டி ஒரு காட்சியை விவரிக்கிறார். முதல் சரணத்தில் ஒரு பொடி வைத்தது போல் இருக்கிறது

  பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்

  பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்

  அட நிச்சயம் செய்தபின் நடக்கும் கல்யாணம் சொல்லவேயில்லையே? கதையில் வரும் காட்சிக்கு ஏற்ற கற்பனை.

  ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட

  ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட

  வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக

  வந்து விட்டேன் கண்ணா மணமகளாக

  என்று சரணத்தில் சூரியன், மேகங்கள் பூந்தென்றல் சாட்சியாக மணமகளாகிறாள். நிச்சயம் இதுவும் காந்தர்வ விவாகம்தான். சந்தேகம் இருந்தால் தொடர்ந்து கேளுங்கள்

  ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க,

  ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க

  நாங்கள் இருவரும் மனதால் இணைந்தபின் யார் அனுமதி தேவை என்ற கேள்வி. இன்றும் நம் எதிர்கொள்ளும் கேள்வி.

  இதுபோல வேறு பாடல்கள் உண்டா? நீங்களும் சொல்லுங்கள்


  மோகனகிருஷ்ணன்

  144/365

   
  • GiRa ஜிரா 9:30 am on April 25, 2013 Permalink | Reply

   பாட்டும் பரதமும் படத்தைப் பார்த்திருக்கிறேன். கதைப்படி அது காந்தர்வ மனம். அதாவது களவு மணம். அதற்குப் பின்னால் ஒரு பிரிவு. அந்த பிரிவுக்குப் பின் துயரம். அந்தத் துயரத்துக்குப் பின் சந்திப்பு. சந்திப்புக்குப் பின் சுபம் என்று திரைப்படம் முடியும்.

  • amas32 9:15 pm on April 25, 2013 Permalink | Reply

   You select exceptionally unique songs and excellent melodies too :-))

   அன்றும் இன்றும் என்றும் காந்தர்வ மணம் மட்டும் வழக்கொழிந்து போகாது என்பது என் எண்ணம் 🙂

   amas32

 • mokrish 11:24 am on April 18, 2013 Permalink | Reply
  Tags: அறிவுமதி, , ரா பி சேதுப்பிள்ளை, வாலி, , PB ஸ்ரீநிவாஸ்   

  எந்த ஊர் என்றவனே 

  ஒருவர் நமக்கு அறிமுகமான சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்விகளில்  ஒன்று – ‘நீங்க எந்த ஊர்? என்பது. ஒரே ஊர் என்றோ ஒரே மாவட்டம் என்றோ தெரிந்தால் ‘ அட நீங்களும் வேலூர் தானா என்று உடனே ஒரு புன்முறுவல். நட்பு சுலபமாகும். நாம் பிறந்து வளர்ந்த ஊரை நினைத்தாலே சந்தோஷம் பொங்கும். வெளிநாட்டில் வாழும்போது சொந்த ஊரில் / மாவட்டத்தில் இருந்து வருபவர்களுடன் பேசும்போது ஒரு extra connect இருப்பதை உணர்ந்திருக்கிறேன்

  ஊர்ப்பெயர்களை அதன் வேர்ச்சொல் அறிந்து ஆராய்வது ஒரு பெரிய சவால்.இடப்பெயராய்வு. கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பல ஆய்வுகள் உண்டு. ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற ஆய்வை இணையத்தில் படித்தேன். சுவாரஸ்யமான ஆய்வு.

  http://www.tamilvu.org/library/lA475/html/lA475con.htm

  ஒரு கவிஞனை எந்த ஊர் என்றால் என்ன சொல்வான்? திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா? என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch?v=eyIWD8FOh4g

  உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்

  கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்!

  என்று பிறப்பையும் பின் வரும் வரிகளில்

  வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்

  காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்

  கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!

  பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு

  மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்!

  காதலில் விழுந்ததையும் பின் பள்ளத்தில் விழுந்ததையும் சொல்கிறார்

  வாலி தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை வைத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறார். மதுரையில் பறந்த  மீன் கொடியை அவள் கண்ணில் பார்த்து  சேரன் வில்லை புருவத்தில் பார்த்து புலிக்கொடியை அவள்  பெண்மையில் பார்த்து என்று அலங்காரமான பாடல் ஒன்று

  http://www.youtube.com/watch?v=GN5JGwKojgk அதில் தொடர்ந்து

  காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

  குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ

  சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?

  தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

  பாடல் முழுவதும் வரிகளின் முதலில் ஒரு ஊர்ப்பெயரை வைத்து அழகான கவிதை.

  வைரமுத்துவும் பெண்ணை வர்ணிக்கவே ஊர்பெயரை வரிகளில் வைக்கிறார். ஒவ்வொரு ஊரிலிருந்தும் விசெஷமான பொருள் எடுத்து அந்த பெண்ண சிலை செய்ததாக கற்பனை தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலில் வரும் வரிகள் http://www.youtube.com/watch?v=NzRHBQRpqkI

  கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு

  ஒதடு செஞ்ச மண்ணு  மட்டும் தேனூரு

  நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க

  நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க

  வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு – அட

  கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு

  கண்ணதாசனின் காதல் தோல்வி வரிகள் ஒரு extreme என்றால் வாலியும் வைரமுத்துவும் சொல்லும் வர்ணனைகளும் மிகையானவை. எனக்கு அறிவுமதி எழுதிய அழகூரில் பூத்தவளே பாடல வரிகள் இயல்பாக இருப்பதாய் தோன்றுகிறது http://www.youtube.com/watch?v=83Zq_Bh3mCg

  அழகூரில் பூத்தவளே

  எனை அடியோடு சாய்த்தவளே

  மழையூரின் சாரலிலே

  எனை மார்போடு சேர்த்தவளே

  உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்

  உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

  அவள் பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் அதுவே அழகான ஊர் என்பதில் ஒரு உணர்வுபூர்வமான நியாயம். அவள் சுருட்டி போட்ட முடியை மோதிரமாகியது அவள் சோம்பலில் இவன் முறிந்து போனது – மிகை தான் என்றாலும் சுவாரஸ்யம்தான். ,’என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்’ என்று சொன்னவுடன் நெகிழ்ந்து ‘அன்பூரில் பூத்தவனே என்கிறாள்.  அழகு.

   மோகனகிருஷ்ணன்

  138/365

   
  • amas32 11:51 am on April 18, 2013 Permalink | Reply

   எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் “தஞ்சாவுரு மண்ணெடுத்து” பாடல் 🙂 http://www.youtube.com/watch?v=Ebw2V22-mZI

   அதெ மாதிரி இந்த வரிகலும் அருமை!
   /காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ

   குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ/

   நமக்கு எப்படி தாய் மொழி முக்கியமோ அதே மாதிரி பிறந்த மண்ணும் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயம். அந்த ஊரை விட்டு வந்து வெகு காலம் ஆகியிருந்தும் மண்ணின் மணம் மனத்தை விட்டு அகலுவதில்லை. அதனால் காதலிக்கும் பெண்ணின் வடிவிலும் அதைக் காண்கிறோம்!

   amas32

  • n_shekar 4:26 pm on April 18, 2013 Permalink | Reply

   எனக்கும் “அழகூரில் பூத்தவளே” பாட்டுதான் மிகவும் பிடிக்கும் – பாடிய விதமும் மிக இனிமை 🙂

  • GiRa ஜிரா 2:17 pm on April 19, 2013 Permalink | Reply

   நீங்க சொல்லியிருக்கும் அத்தனை பாட்டுகளும் நல்ல பாட்டுகள்.

   பெண்ணை நிலமென்றும் நீரென்றும் கவிஞர்கள் பாடிப் பாடி பாட்டுகள் நூறு வந்தாலும் இன்னும் அலுக்கவில்லை போலும்.

   ஊரு விட்டு ஊரு வந்து வம்பு செய்யக்கூடாதுங்குறது மறை பொருள் இதுதானா? 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel