Tagged: பாரதியார் Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 12:23 pm on April 15, 2013 Permalink | Reply
  Tags: , கே ஜே ஜேசுதாஸ், பாரதியார், வள்ளலார்   

  பசி தீரப் பாடினோர் 

  • படம்: உனக்காக  நான்

  • பாடல்: இறைவன் உலகத்தை படைத்தானாம்

  • எழுதியவர்: கண்ணதாசன்

  • இசை: எம் எஸ் விஸ்வநாதன்

  • பாடியவர்: கே ஜே ஜேசுதாஸ்

  • Link: http://www.inbaminge.com/t/u/Unakkaga%20Naan/Iraivan%20Ulagathai.eng.html

  இறைவன் உலகத்தை படைத்தானாம்

  ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

  ஏழையை படைத்தவன் அவனென்றால்

  இறைவன் என்பவன் எதற்காக

  இறைவன் இங்கே வரவில்லை

  எனவே நான் அங்கு போகின்றேன்

  வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே

  மறுபடி ஒரு நாள் நான் வருவேன்

  இந்த வரிகளைக் கேட்டவுடன் நமக்கு பாரதியின் இனியொரு விதி செய்வோம் பாடல் நினைவுக்கு வரும். வறுமை பார்த்து பொங்கி ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று கோபமாக பாடிய வரிகள்.  பாரதி இதை ஏன் எப்போது பாடினான்?

  நீலகண்ட பிரம்மச்சாரி ஏழரை ஆண்டுகள் சிறைவாசம் விடுதலை பெற்றவுடன் சென்னைக்கு வந்தார். தங்க இடம் இல்லை. உணவு கொடுக்க யாருமில்லை. பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அவருடைய மனதில் “இது என்ன கேவலமான பிழைப்பு?” என்ற எண்ணம் தோன்றி பிச்சைக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டார். ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று நினைத்து பாரதியைத் தேடிவந்தார். இவரின் கோலம் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பாரதி முதலில் சாப்பிட வைக்கிறார்.

  அப்போது பாரதியின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்ச்சி மிக்க பாடல் இது. எனக்காக பாரதி ஒரு பாடலை பாடிவிட்டானே” என்று மனம் நெகிழ்ந்தார் நீலகண்டன். பாரதியின் மரணத்தில் கலந்துகொண்ட வெகு சிலரில் நீலகண்டனும் ஒருவர்.

  கண்ணதாசன் பாடல் ஒரு தொழிற்சங்கவாதி பாடுவதாக அமைந்தது. பாரதி சொன்ன இரு வேறுலகம் பற்றி இவரும் சொல்கிறார். ஆனால் கோபம் மிகுந்து அடங்கி ஒரு விரக்தி நிலையில் இந்த பாடல் வருவதால் ஜகத்தினை அழிப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்து ‘ என்னை விடுங்கள் நான் போகிறேன் இந்த கொடுமை இல்லாத நிலை இருந்தால் மீண்டும் வருகிறேன் என்று சொல்கிறார்.

  பாரதியின் கோபம் மனிதர்களின் மேல்தான் மனிதர் நோக மனிதர் பார்க்கும்  வாழ்க்கை மேல் கோபம். ஆனால் கண்ணதாசனின் விரக்தி கலந்த கோபம் இறைவன் மேல் ‘ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக’ என்கிறார்.

  ஏதேன் தோட்டத்தில் ஏவாள் இல்லாமல் கூட ஆதாம் வாழ்ந்திருக்க முடியும் ஆனால் ஆப்பிள் இல்லாமல் ஒரு நாள்கூட உயிரோடிருந்திருக்க முடியாது.என்று இணையத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக்கூடியது.

  இதில் கோபம் தாண்டி ஒரு பார்வை வள்ளலார் சொல்வது – வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் இராமலிங்க அடிகளார். தண்ணீர் இன்றி வாடியிருக்கும் பயிர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னுடைய மனம் வாடுகிறது. பசியினால் இளைத்தவர்கள், ஒவ்வொரு வீடாகக் கெஞ்சிக்கேட்டும் பசி தீராமல் களைத்துப்போன ஏழைகளைப் பார்த்து என் உள்ளம் பதைபதைக்கிறது. நீங்காத நோயினால் அவதிப்படுகிறவர்களை நேருக்கு நேர் பார்க்கும்போது என் நெஞ்சம் துடிக்கிறது.இவர்களெல்லாம்கூடப் பரவாயில்லை. பசியால் வயிறு காய்ந்தாலும் இணையில்லாத மானம்தான் பெரியது என்று நினைக்கிறவர்கள், அதனால் யாரிடமும் பிச்சை கேட்காமல் சுயமரியாதையோடு பட்டினி கிடக்கிறவர்கள், அவர்களைப் பார்க்கும்போது, நானும் இளைத்துப்போகிறேன் என்கிறார்.

  (http://365paa.wordpress.com/2011/09/30/087/)

  மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது.   வள்ளுவன் அற்றார் அழிபசி தீர்த்தல் என்று சொன்னதும் இதுவே பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதைவிட பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்தது இல்லையா?

  மோகனகிருஷ்ணன்

  135/365

   
  • amas32 (@amas32) 6:36 pm on April 15, 2013 Permalink | Reply

   “கொடிது கொடிது வறுமை கொடிது;
   அதனினும் கொடிது இளமையில் வறுமை”

   பசியின் கொடுமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் புரிந்து கொள்வது போல நடிக்கலாம். ஏழ்மை என்பது பசியின் வாட்டுதல் மட்டும் இன்றி படிப்பு, சுகாதாரமான வாழ்விடம் போன்ற அனைத்து அத்தியாவசியங்களுக்கும் ஏங்க வைக்கும் ஒரு அவல நிலை.

   அனால் இந்த நிலையில் இருந்து முன்னுக்கு வந்தவர்கள் பல்லாயிரம் பேர்கள். அவர்களை உந்தி முன்னேற தூண்டியதும் இந்த ஏழ்மை தான். ஏழ்மையை அழிக்க உழைப்பும் மனத்தில் உறுதியும் வேண்டும்.

   amas32

  • GiRa ஜிரா 8:35 am on April 16, 2013 Permalink | Reply

   உண்பது நாழி உடுப்பது முழம். ஆனா அதுவும் கிடைக்காதவர்கள் நிலை பெருங்கொடுமை.

   செவ்வியான் கேடும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும்-னு வள்ளுவரும் விட்டுட்டாரு. நமக்கும் ஒன்னும் புரியலையே.

   ஆனா இந்த உலகம் அனைவரும் சுகமாகவும் விட்டுக்கொடுத்தும் வாழும் சொர்க்கபூமியாக வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் உலகத்தை வைத்து எந்த நூலையும் தொடங்குவார்கள். உலகம் உவப்ப-திருமுருகாற்றுப்படை. வாழிய வையகம்-தேவாரம். உலகெலாம் உணர்ந்து – பெரிய புராணம். உலகம் யாவையும் – கம்பராமாயணம்.

 • mokrish 10:29 am on April 6, 2013 Permalink | Reply
  Tags: சினேகன், பாரதியார், மாலன்,   

  அன்பாலே அழகாகும் வீடு 

  எண்பதுகளின் துவக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் நாவலில் வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதை வந்தபோது ரசித்து நண்பர்களுடன் House Vs Home என்று விவாதித்தது உண்டு. இன்றும் முதல் வரியைச் சொன்னதும் சட்டென்று உடனே நினைவுக்கு வரும் கவிதை.

  வீடென்று எதனைச் சொல்வீர்?

  அது இல்லை எனது வீடு.

  ஜன்னல் போல் வாசல் உண்டு.

  எட்டடிக்கு சதுரம் உள்ளே

  பொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்

  நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்

  தலை மேலே கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும்

  கவி எழுதி விட்டுச் செல்ல கால்சட்டை மடித்து வைக்க

  வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……

  இப்போது யோசித்தால் இந்த கவிதை பாதியில் நின்றது போலிருக்கிறது. வெறும் சோகம் சொல்லும் Status Update. தொடர்ந்து காணி நிலமும் பத்துப் பனிரெண்டு தென்னைமரமும் கேட்ட பாரதியார் போல ஒரு கனவையோ இலட்சியத்தையோ சொல்லி முடித்திருக்கலாம்.

  திரைப்பாடல்களில் வீடு பற்றி சில அழகான பாடல்கள். பாண்டவர் பூமி படத்தில் வரும் விரும்புதே மனசு விரும்புதே என்ற சினேகன் எழுதிய பாடல் பாரதியின் காணி நிலம் கனவைப்போலவே அமைந்த வரிகள்.

  http://www.inbaminge.com/t/p/Paandavar%20Bhoomi/Virumbudhae%20Manasu%20Virumbudhae.eng.html

  கவிஞன் வழியில் நானும் கேட்டேன்

  கவிதை வாழும் சிறு வீடு

  விரும்புதே மனசு விரும்புதே

  ஒரு பக்கம் நதியின் ஓசை

  ஒரு பக்கம் குயிலின் பாஷை

  ஒரு பக்கம் தென்னையின் கீற்று

  ஜன்னலை உரசும்

  என்று தொடங்கி தென்றல் வாசல் தெளிக்கும், கொட்டும் பூக்கள் கோலம் போடும் , நிலா வந்து கதைகள் பேசும், பறவைகள் தங்க மரகத மாடம், தங்க மணித்தூண்கள் என்று – சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்.

  பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வைரமுத்துவின் பாடல் ஒன்றில் சில சுவாரஸ்யங்கள்.

  http://www.inbaminge.com/t/p/Poovellam%20Un%20Vaasam/Chella%20Namm%20Veetuku.eng.html வானவில்லை கரைச்சு வண்ணம் அடிக்கலாம், தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் செடி என்று அதீத கற்பனைகளோடு தொடங்கும் பல்லவியில் ஒரு ட்விஸ்ட் வைத்து

  அட கோயில் கொஞ்சம் போரடித்தால்

  தெய்வம் வந்து வாழும் வீடு

  காற்று வர ஜன்னலும் செல்வம் வர கதவும் என்று வசீகரமான வாஸ்து சொல்கிறார். மறு ஜென்மம் இருந்தால் இதே வீட்டில் அட்லீஸ்ட் நாய்க்குட்டியாக பிறக்க வரம் வேண்டுகிறார். காரணம்?

  எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா

  நீ சுவரில் காது வைத்தால் மனத் துடிப்பு கேட்குமம்மா

  பசங்க படத்தில் யுகபாரதியின் பாடல் சொல்வதுதான் மிகவும் சரியானதென்று தோன்றுகிறது

  http://www.inbaminge.com/t/p/Pasanga/Anbaale%20Azhagagum%20Veedu.eng.html

  அன்பாலே அழகாகும் வீடு

  ஆனந்தம் அதற்குள்ளே தேடு

  சொந்தங்கள் கை சேரும்போது

  வேறொன்றும் அதற்கில்லை ஈடு

  வாடகை வீடே என்று

  வாடினால் ஏது இன்பம்

  பூமியே நமக்கானது

  என்று எளிமையான பாசிடிவ் பார்வை. அன்பும் சொந்தங்களும் இருந்தாலே வீடு இனிமையாகும் – தென்னைமரம், தென்றல், நிலா வெளிச்சம், நட்சத்திரம் பூக்கும் செடி, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஜிம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

  மோகன கிருஷ்ணன்

  126/365

   
  • rajnirams 10:39 am on April 6, 2013 Permalink | Reply

   அருமை. வைரமுத்துவின் “அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு”வரிகளை சுட்டி காட்டியிருந்தது அருமை.சந்திப்பு படத்தில் வாலியின் “ஆனந்தம் விளையாடும் வீடு,நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு”பாடலும் அருமையாக இருக்கும் .

  • amas32 (@amas32) 10:02 pm on April 6, 2013 Permalink | Reply

   /சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்./ LOL

   /எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா/ Home is where the heart is!

   /அன்பாலே அழகாகும் வீடு

   ஆனந்தம் அதற்குள்ளே தேடு/

   அற்புதமான வரிகள். என் எண்ணத்தை நூறு சதவிதம் பிரதிபலிக்கும் வரிகள்.

   “Mid pleasures and palaces
   Though we may roam.
   Be it ever so humble,
   There is no place like home”
   அன்னையின் அன்பினால் குழந்தைகளின் பாசத்தினால் தகப்பனின் பாதுகாப்பினால் நம் வீடு சின்னக் குடிலாக இருந்தாலும் அது தங்கமும் வைரமும் பதித்த அழகிய அரண்மனை தான் 🙂

   amas32

  • GiRa ஜிரா 11:09 pm on April 6, 2013 Permalink | Reply

   மிக அருமையான பதிவு. அழகான வரிகள்.

   ‘’அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு’ – அற்புதமான வரிகள். அன்புள்ள பெரியவர்களும் அடக்கமுள்ள இளவயதினரும் குறும்புள்ள குழந்தைகளும் இருக்கும் வீடு கோயிலே ஆகும்.

   இல்லம் சங்கீதம்
   அதில் ராகம் சம்சாரம்
   அவள் நாயகன் பாவம்
   பிள்ளை சிருங்கார ராகம் – என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

   பாசமில்லாத வீடு நீரில்லாத காடு. அதனால்தான் வீட்டை செங்கலையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டுவதை விட அன்பாலும் அருளாலும் கட்ட வேண்டும்.

   ஆனந்தம் விளையாடும் வீடு
   நான்கு அன்பில்கள் விளையாடும் கூடு

   மேலே உள்ள பாடலை சிறுவயதில் எங்கேயோ கேட்டுவிட்டு… மதுரை டி.ஆர்.வோ காலனி பக்கமுள்ள மாரியம்மன் கோயில் அருகிலுள்ள போலீஸ் கிரண்டைப் பார்த்து

   போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
   இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
   நான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்டு – என்று பாடியது நினைவுக்கு வருகிறது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel