Tagged: சீவக சிந்தாமணி Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:07 am on May 29, 2013 Permalink | Reply
  Tags: சீவக சிந்தாமணி, விவேக சிந்தாமணி   

  மஞ்சள் நிறத் தவளை 

  சிந்தனை எப்படித் தொடங்கி எந்தப் பக்கம் தவ்வும் என்று யாரால் சொல்ல முடியும்? அப்படி ஒரு சிந்தனை இந்தப் பாடலைக் கேட்ட போது தவ்வியது.

  தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
  ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு
  பாட்டு – வாலி
  பாடியவர் – மலேசியா வாசுதேவன்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
  பாடலின் சுட்டி – http://youtu.be/h97Ox17gL4g

  தத்தித் தவ்விய சிந்தனை தவளையைப் பற்றியதுதான். தவளைக்கு ஏன் தவளை என்று பேர் வந்ததென்று ஒரு யோசனை.

  பழைய தமிழ்ப் பெயர்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது போல தவளையின் பெயருக்கும் பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். நல்லதொரு விடையும் கிடைத்தது.

  மக்கள் படுவதனால் அதற்கு பாடு என்று பெயர். அப்படியே மக்கள் கெடுவதனால் அதற்கு கேடு என்று பெயர். அதுபோல தவ்வுவது தவளை. தவ்விக் குதித்துச் செல்லும் உயிரிக்குத் தவளை என்று பெயர். “தத்து நீர்த் தவளை” என்று சீவகசிந்தாமணியும் கூறுகிறது.

  சிறுவர்கள் சிறிய தட்டையான கல்லை எடுத்து நீர்நிலையின் மேற்புறமாக எறிவார்கள். அது தவளையைப் போல் சிலமுறை தத்திச் செல்லும். அப்படி எறியப்படும் அந்தத் தட்டையான பொருளுக்கு தவளைக்காய் என்று பெயர். அது பின்னாளில் மருவி தவக்களை என்றாகி விட்டது.

  தவளை நீரில் பிறக்கும். நீரிலேயே வளரும். முழுதாய் வளர்ந்த பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும். அதனால்தான் “தவளைக்கும் பொம்பளைக்கு ரெண்டு எடந்தானே” என்று கத்தாழங்காட்டு வழி என்ற பாட்டில் எழுதினார் கவிஞர் வைரமுத்து.

  தவளையை அறிவுரை சொல்வதற்காகத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றி சிறிது பார்க்கலாம்.

  தவளைக்கு நுணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. ”நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியும் பிரபலமானது. தவளை கத்துகின்ற ஒலியை வைத்தே பாம்பு கண்டுபிடித்துக் கவ்விவிடும். அதுபோல மடையர்கள் பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு விழிப்பார்கள்.

  மண்டூகம் என்ற பெயரும் பின்னாளில் தவளைக்கு வழங்கப்பட்டது. இது வடமொழியிலிருந்து வந்த பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்” என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.

  அதாவது தாமரை குளத்தில் பிறக்கிறது. அதே குளத்தில்தால் தவளை முட்டைகளும் குஞ்சு பொரித்து தலைப்பிரட்டையாகின்றன. ஒரே இடத்தில் பிறந்ததால் தாமரையும் தவளையும் உடன் பிறந்தது என்கிறது விவேக சிந்தாமணி.

  ஆனாலும்… தவளைக்குத் தாமரையின் அருமையும் மென்மையும் புரிவதில்லை. அது போல நல்லவர்களுக்கு நடுவிலேயே இருந்தாலும் கெட்டவர்கள் நல்லவர்களைப் புரிந்து கொண்டு உறவாடுவதில்லை.

  ஆனால் எங்கிருந்தோ வந்த வண்டு தாமரையை உறவாடுவது போல அறிவுடையவர்களும் கற்றவர்களும் எங்கிருந்தோ வந்து கற்றவர்களோடு உறவாடுவார்களாம்.

  பெயர் தெரியாத புலவர் எழுதிய விவேக சிந்தாமணியின் பாட்டை முழுமையாகத் தருகிறேன். படித்து ரசியுங்கள்.

  தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
  வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
  பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
  கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே

  குளிர்ந்த தாமரை பிறந்த அதே குளத்தில் பிறந்த தவளை தாமரையை மதிப்பதில்லை
  வண்டோ காட்டின் இடையிலிருந்து வந்து தாமரையின் இனிய தேனை உண்ணும் (அதுபோல)
  முன்பே பழகியிருந்தாலும் புல்லர்கள் நல்லவர்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்
  ஆனால் கற்றவர்கள் எங்கிருந்தோ வந்து கண்டு களித்து நல்லவர்களோடு உறவாடிக் கலப்பர்

  வெறும் தவளை என்று எடுத்துக் கொண்டு இறங்கினால் கூட சிந்தனை இத்தனை தகவல்களோடு தவளையைப் போலவே தத்தித் தாவுகின்றதே. இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!

  அன்புடன்,
  ஜிரா

  179/365

   
  • rajinirams 4:53 pm on May 29, 2013 Permalink | Reply

   பிரமாதம்.”தவளை” குறித்து பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.முன்பெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை காட்டி ஆல் இந்தியா ரேடியோவில் சில பாடல்களை தடை செய்வார்கள்.அதில் இந்த பாடலும் ஒன்று,சிலோனில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். சூப்பர் ஹிட் பாடல்.

  • Saba-Thambi 7:35 pm on May 29, 2013 Permalink | Reply

   Title நல்ல சிலேடை

   “தவளைப்பாய்த்து” என்று ஓர் இலக்கணம் இருப்பதாக கேள்வி. யாராவது விளக்கினால் உதவியாக இருக்கும்

  • amas32 9:52 pm on May 30, 2013 Permalink | Reply

   /தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
   ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு/

   இந்த மாதிரி பாடல் வரிகளில் ஆரம்பித்து விவேக சிந்தாமணியில் உள்ள ஒரு பாடலுக்கு எங்களை அழைத்துச் செல்ல உங்களால் தன முடியும் ஜிரா, அருமை 🙂

   /தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
   வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
   பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
   கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே/

   மிகவும் நல்ல கருத்தைச் சொல்லும் அழகிய பாடல்!

   / இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!/
   தத்தித் தாவுது மனமே என்று மின்சாரக்கனவு படத்தில் அரவிந்த் சாமி பாடிய பாடலுக்குத் தான் மனம் செல்லும் 🙂

   amas32

 • G.Ra ஜிரா 11:36 am on January 1, 2013 Permalink | Reply
  Tags: கண்ணாடி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நிரஞ்சன் பாரதி   

  கண்ணாடி 

  நம்முடைய நண்பர் கவிஞர் நிரஞ்சன் பாரதி @poetniranjan எழுதிய ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மங்காத்தா படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் வெளிவந்த பாடல் அது.

  கண்ணாடி நீ கண் ஜாடை நான்
  என் வீடு நீ உன் ஜன்னல் நான்
  என் தேடல் நீ உன் தேவை நான்
  என் பாடல் நீ உன் வார்த்தை நான்
  என் பாதி நீ உன் பாதி நான்
  என் ஜீவன் நீ உன் தேகம் நான்
  என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
  என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Rj33vbsHtKU

  அழகான பாடல். புதிதாகத் திருமணமானவர்களுக்கான பாட்டு.

  இந்தப் பாட்டைக் கேட்கும் போது “கண்ணாடி” என்ற சொல் எந்தன் சிந்தனையைத் தூண்டியது. எத்தனையெத்தனை கண்ணாடி பாடல்கள். கண்ணாடி தொடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.

  இந்தக் கண்ணாடி தமிழர்கள் பயன்பாட்டில் முன்பு இருந்ததா என்று முதல் கேள்வி.

  இருந்தது என்று திருப்பாவை படிக்கையில் புரிந்தது. “உக்கமும் தட்டொளியும் தந்து” என்று ஆண்டாள் பாடியது நினைவுக்கு வந்தது. இந்த வரியில் தட்டொளி என்பது கண்ணாடியைக் குறிக்கும்.

  தட்டொளி என்பதுதான் கண்ணாடிக்கு உரிய பழைய தமிழ்ப் பெயரா என்ற ஐயத்தோடு இலக்கியங்களைத் தேடிய போது அரிய விடைகள் கிடைத்தன.

  கண்ணாடி என்ற சொல் ஐம்பெருங்காப்பியங்களிலேயே இருந்திருக்கிறது. அப்படியிருக்க பின்னாளில் ஆண்டாள் தட்டொளி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினாள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் கண்ணாடி பற்றியும் தேடிப்பார்க்க வேண்டும்.

  சரி.. ஐம்பெருங்காப்பியங்களுக்கு வருவோம். அதிலும் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு வருவோம்.

  முகம் பார்க்கும் கண்ணாடியை ஆடி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

  கோப்பெருந்தேவிக்கு அன்றைய நாள் நல்ல நாளாகவே இல்லை. கண்ட கண்ட கனவுகள். ஒன்றாவது நன்றாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவது போல ஒரு குறுகுறுப்பு. அந்த உணர்வுகளைக் கணவனோடு பகிர்ந்து கொள்ள வருகிறாள். அப்போது அவளுடைய பணியாளர்கள் அவளுக்குத் தேவையான பொருட்களைக் கையோடு கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகையின் மேக்கப் உதவியாளர்கள் போல.

  ஆடியேந்தினர் கலனேந்தினர்
  அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
  கோடியேந்தினர் பட்டேந்தினர்
  கொழுந்திரையலின் செப்பேந்தினர்
  வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
  மான்மதத்தின் சாந்தேந்தினர்
  கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
  கவரியேந்தினர் தூபமேந்தினர்

  ஆடி ஏந்தினர் – கண்ணாடி ஏந்தி வந்தார்கள்
  கலம் ஏந்தினர் – அணிகலன்களை ஏந்தி வந்தார்கள்
  அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் – நல்ல அணிமணி அணிந்த ஊழியப் பெண்கள்
  கோடி ஏந்தினர் – புதுத்துணிகளை ஏந்தி வந்தார்கள்
  பட்டு ஏந்தினர் – பட்டுத் துணிகளை ஏந்தி வந்தார்கள்
  கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – நல்ல கொழும் வெற்றிலைப் பெட்டியை ஏந்தினர்
  வண்ணம் ஏந்தினர் – வண்ண வண்ணப் பொடிகளையும்
  சுண்ணம் ஏந்தினர் – வெண்ணிறச் சுண்ணத்தைப் பூசிக் கொள்வதற்கும் ஏந்தி வந்தார்கள்

  அடேங்கப்பா என்னவொரு பட்டியல். அரசியோடு எப்பவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்திருக்கும் போல.

  ஏந்திய பொருட்களில் முதற் பொருளாகச் சொல்லப் படுவதே ஆடிதான். அடிக்கடி முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்கிறவள் போல கோப்பெருந்தேவி.

  சரி. கண்ணாடி(Mirror) என்பது முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. Glass என்ற பொருளிலும் வருமே. ஆம். வருகிறது. சீவக சிந்தாமணி காட்டுகிறது அதையும். அந்தப் பாடலில் திருத்தக்க தேவர் சொற்சிலம்பமே ஆடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. எத்தனை கண்ணாடி வருகிறதென்று பாருங்கள்.

  கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
  கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
  கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
  கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்

  ரொம்பவும் விளக்காமல் நேரடியாகப் பொருள் கொடுக்கிறேன். படித்து ரசியுங்கள்.

  கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
  கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றிக்
  கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்கண்
  (கண்) ஆடு யானையவர் கை தொழச் சென்று புக்கான்

  கண்ணாடி போன்ற மார்புடைய சீவகன் தன்னுடைய சிவந்து நீண்ட கண்களால் ஆடி (பார்வையிட்டு) போரிட்டு வென்ற போர்க்களத்தைக் கண்ட பின்னர், போர் முடிந்த பின் செய்ய வேண்டிய நியமங்களை முடித்து விட்டு, கள் நாடி வந்து வண்டுகள் பருகும் மணமிகுந்த மாலைகள் நிறைந்த பழம் பெருமை மிக்க ஊருக்குள், வெற்றியானை கொண்டோரெல்லாம் கை தொழும் வகையில் புகுந்தான்.

  அதாவது வெற்றி பெற்ற சீவகன் தான் வென்ற ஊருக்குள் நுழைந்ததை நான்கு கண்ணாடிகளை வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார் திருத்தக்க தேவர்.

  இளங்கோவும் திருத்தக்க தேவரும் பின்னாளில் ஆண்டாளும் தொடர்ந்த பாரம்பரியத்தை பாரதியின் வாரிசான கவிஞர் நிரஞ்சன் பாரதியும் தொடர்வதுதான் சிறப்பு.

  அன்புடன்,
  ஜிரா

  031/365

   
  • Rie 12:36 pm on January 1, 2013 Permalink | Reply

   CSS நீ, HTML நான் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வாசகம் பார்த்தேன்.

   • Niranjan 1:47 pm on January 1, 2013 Permalink | Reply

    என் பாடலைப் பற்றி இந்த வலைப்பூவில் எழுதிய ஜீரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்ணாடி பற்றி எத்தனை தகவல்கள். ஆஹா !! படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டே இருந்தது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel