Recent Updates Page 2 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 11:59 pm on November 27, 2013 Permalink | Reply  

  வானவில் ஆடை 

  • படம்: ரோஜா
  • பாடல்: சின்னச் சின்ன ஆசை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

  சேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,

  மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,

  வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,

  பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை!

  ’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.

  உண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

  பழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே!

  சினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.

  முந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉

  ***

  என். சொக்கன் …

  27 11 2013

  360/365

  Advertisements
   
  • Uma Chelvan 12:51 am on November 28, 2013 Permalink | Reply

   “காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”

  • amas32 3:33 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂

   உப்புமா கன ஜோர்!

   amas32

  • Saba-Thambi 10:17 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.

   அப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் ?

  • rajinirams 3:11 am on November 29, 2013 Permalink | Reply

   ஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.

 • mokrish 11:16 pm on November 26, 2013 Permalink | Reply  

  உரிமை உன்னிடத்தில் இல்லை 

  போன வாரம் #BooksOnToast பற்றி ஒரு செய்தி படித்தவுடன் நாமும் சில புத்தகங்களை நன்கொடையாகத் தரலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த பழைய ஆங்கில fiction நாவல்களை எடுத்து அடுக்கும்போது ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய To Cut a Long Story Short  சிறுகதைத்தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் Death Speaks என்று ஒரு சிறிய சிறுகதை. 12 -13 வரிகள்தான்.  இங்கே படியுங்கள் http://am-kicking.blogspot.in/2005/11/death-speaks.html?m=1.

  அட்டகாசமான ட்விஸ்ட் இது Somerset Maugham எழுதிய Sheppey நாடகத்தில் வரும் ஒரு The Appointment in Samarra என்பதன் தழுவல் என்று ஆர்ச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை கண்ணதாசன் பாடல் வரிகளை அடுக்கி reconstruct பண்ணலாம் என்று amateur முயற்சி.

  வேலையாள்  (பாடல் யாருக்காக இது படம் வசந்த மாளிகை இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)

  http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8

  மரணம் என்னும் தூது வந்தது , அது

  மங்கை என்னும் வடிவில் வந்தது

  வணிகன் (பாடல் என்ன நினைத்து படம் நெஞ்சில் ஓர் ஆலயம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=NV9Gz3jYnlU

  மாயப்பறவை ஒன்று வானில் பறந்து வந்து

  வாவென்று அழைத்ததை கேட்டாயோ

  பறவை பறந்து செல்ல விடுவேனோ?

  அந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ?

  தேவதை (பாடல் போனால் போகட்டும் பாலும் பழமும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)

  http://www.youtube.com/watch?v=DnxZnuXlWBo

  இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை

  இல்லை என்றால் அவன் விடுவானா?

  உறவைச் சொல்லி அழுவதனாலே

  உயிரை மீண்டும் தருவானா?

  மும்பையில் 1993ல் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மதியம் 1.30 மணிக்கு வெடித்தது. அதில் உயிர் தப்பிய ஒருவர், உடனே மும்பையை விட்டு கிளம்பலாம் என்று ஏர் இந்தியா அலுவலகம் சென்று அங்கு குண்டு வெடித்தபோது பலியானார் என்று ஒரு செய்தி படித்த ஞாபகம். சுஜாதாவின் ‘விபா’ என்ற சிறுகதையில் இதேபோல் ஒரு கடைசி வரி ட்விஸ்ட்.

  நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது என்று தோன்றுகிறது.

  மோகனகிருஷ்ணன்

  359/365

   
  • Uma Chelvan 11:20 am on November 27, 2013 Permalink | Reply

   ‪#‎மெய்யில்‬ வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
   இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
   ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
   மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே#

   விளக்கம் : “அனுகூலயஸ்ய சங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியான இப்பாசுரத்தில் சாதிக்கிறார். நிலையற்ற இந்த உலகவாழ்கையை நிஜம் எனக்கொள்ளும், நம்பும் இந்த உலகத்தாரோடு நான் கூடுவதில்லை, ஐயனே-நிஷ்காரண- அரங்கனே உன்னையே அழைக்கின்றேன். என்மேல் அன்பு கொண்டுள்ள பெருமாளிடத்தில் பற்று கொண்டேன். வேண்டேன் இந்த நிலையற்ற வாழ்கையை விண்ணகர் மேயவனே என்று திருமங்கை ஆழ்வார் சாதித்தது போல.

  • amas32 6:59 pm on November 27, 2013 Permalink | Reply

   Jeffrey Archerன் அந்தக் கதை நானும் படித்திருக்கிறேன் 🙂 பாட்டினால் கதை கோத்துவிட்ட அழகு அபாரம் 🙂

   விதி வலியது என்று ஒரு கதா காலட்சேபப் பாடல் முடியும், அது தான் நினைவுக்கு வருகிறது 🙂

   amas32

  • kamala chandramani 8:56 am on November 28, 2013 Permalink | Reply

   ”நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது.” உண்மை.

 • GiRa ஜிரா 11:20 pm on November 25, 2013 Permalink | Reply  

  கதைதாங்கிகள் 

  திரைப்படங்களில் பாடல்கள் தேவையா இல்லையா என்பதே இன்றைக்கு பெரிய விவாதமாகி விட்டது. பாடல்களே இல்லாமல் படம் எடுப்பதாக பெரிதாக விளம்பரமெல்லாம் செய்கிறார்கள்.

  பாடல்கள் இருந்தால் அந்தத் திரைப்படம் இயல்பான திரைப்படமே இல்லை என்ற அளவுக்கு இயக்குனர்கள் சிலரும் இசையமைப்பாளர்கள்(?!?) சிலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

  பிறந்தால் தாலாட்டு. இறந்தால் ஒப்பாரி. வளர்ந்தால் கும்மி. ஏற்றிறைக்க பாட்டு. நெல் குற்ற பாட்டு. நாற்று நட பாட்டு. தெருவில் ஆடினாலும் பாட்டு. கோயிலில் ஆடினாலும் பாட்டு. இப்படியெல்லாம் இருந்த ஒரு பண்பாட்டு வழி வந்த சமூகத்தில் பாடல்கள் உயிரோடு கலந்தவை. பண்பாடு என்னும் சொல்லில் இருக்கும் பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் இசையோடு தொடர்புள்ளவைதானே!

  அப்படியிருக்கும் போது பாடல்கள் திரைப்படத்தில் இடம் பெறுவது எப்படி தவறானதாக இருக்கும்?! எத்தனை காதலர்களுக்கு திரைப்படப் பாடல்கள் ஏணியாக இருந்திருக்கிறது தெரியுமா? எத்தனையோ பேரை சுசீலாம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்திருக்கிறார் தெரியுமா? டி.எம்.எஸ்சும் சீர்காழியும் பக்தியை வளர்த்து இன்னும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

  சரியான இடங்களில் பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்று சொல்வது ஏற்புடைய விமர்சனம். பாடல்களைப் பயன்படுத்துவதே தவறு என்று சொல்வது மிகத் தவறான கருத்து.

  ரா ரா சரசுக்கு ரா ரா
  ரா ரா செந்தக்கு சேரா

  சந்திரமுகி திரைப்படப் பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கும் பாட்டு அது என்றால் மிகையாகாது.

  இத்தனைக்கும் அது தெலுங்குப் பாட்டு. தெலுங்குப் பாடலாசிரியர் புவன சந்திரா எழுதிய பாடல் வரிகள் சராசரி தமிழ் ரசிகனுக்குப் புரிந்திருக்கவும் புரிந்திருக்காது. ஆனாலும் மக்கள் கூட்டம் அந்த பாடலையும் படத்தையும் ரசித்து வெற்றி பெறச் செய்தது.

  சந்திரமுகி படத்தில் மற்ற எல்லாப் பாடல்களையும் யோசிக்காமல் வெட்டி நீக்கி விடலாம். படத்தின் ஓட்டமோ கதையம்சமோ சிறிதும் பாதிக்காது. ஆனால் இந்தப் பாடல்?

  ரா ரா சரசுக்கு ரா ரா” என்று எளிமையாகவும் அதே நேரத்தில் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும் படியும் தொடங்கும் இந்தப் பாடலை வெட்ட வேண்டும் என்றால் சந்திரமுகி என்ற மொத்தப் படத்தையுமே வெட்டி விடலாம்.

  இத்தனைக்கும் இந்தப் பாடல் காட்சி சிக்கலானது. இரண்டு வேறுவிதமான காலகட்டங்களை இணைக்க வேண்டும். அந்த இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் ஒரு பெண்ணின் காதலை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய கங்கா தன்னை அன்றைய சந்திரமுகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளே.

  ஆக முக்கிய பாத்திரங்கள் எல்லாம் அவளுடைய மன மேடையில் இரட்டை வேடம் போட வேண்டிய சூழ்நிலை.

  இன்றைய டான்ஸ் புரபசர் விஸ்வநாதன் சந்திரமுகியாக மாறிக் கொண்ட கங்காவின் கண்களுக்கு அந்தக் காலத்து காதலனாகத் தெரிகிறான்.

  மனோதத்துவ மருத்துவம் படித்த டாக்டர் சரவணன் அவளுக்கு வேட்டையன் என்னும் கொடியவனாகத் தெரிகிறான். சந்திரமுகியின் காதலனையும் அவளையும் கொன்ற கொடியவன் அவன். அந்த வேட்டையனை பழி வாங்க வந்திருப்பதாக கங்கா என்னும் சந்திரமுகி நினைக்கிறாள்.

  இத்தனையையும் அந்த ஒரு பாட்டில் காட்ட வேண்டும். இந்தக் காட்சிக்கு தெலுங்குப் பாடலாசிரியர் பாட்டும் எழுத வேண்டும்.

  முதலில் அவள் தான் காதலைப் பாடுகிறாள். காதலனை ரா ரா என்று அழைக்கிறாள். உயிரே உன்னுடையதுதான் எடுத்துக் கொள் என்று தாம்பாளத்தில் வைத்து காதலைக் கொடுக்கிறாள்.

  பிராணமே நீதிரா
  யேலுகோ நா தொரா
  ஸ்வாசலோ ஸ்வாசவாய் ராரா

  அவன் மீது உண்டாக காதல் எந்த ஜென்மத்தில் உண்டான பந்தம் என்று புரியாத ஒரு ஈர்ப்பு.

  ஏ பந்தமோ இதி ஏ பந்தமோ
  ஏ ஜென்ம பந்தால சுமகந்தமோ

  பெண்ணான அவளே பாடிவிட்டாள். அவன் பாடாமல் இருப்பானோ. கனவோ நினைவோ என்று ஒரு குழப்பம். ஆனாலும் அது இனிமையாகத்தான் இருக்கிறது.

  ஏ ஸ்வப்னமோ இதி ஏ ஸ்வப்னமோ
  நயனால நடயாடு தொலி ஸ்வப்னமோ

  இப்படியாக இவர்கள் பாடும் போது வந்துவிடுகிறான் வேட்டையன். தான் கொண்டு வந்த பெண்ணொருத்தி இன்னொருவனை விரும்புவதா? அவனும் பாடுகிறான்.

  லக்க லக்க லக்க லக்க

  அந்தக் காதலன் தலை உருள்கிறது. அவள் உடல் எரிகின்றது.

  சரி. இப்படி வைத்துக் கொள்வோம். இந்தப் பாடல் இல்லை. ஆனால் இந்தப் பாடலில் வந்ததையெல்லாம் வேறுவிதமாக சொல்லிக் கொள்ளலாம் என்றால் என்ன செய்யலாம்?

  இன்னொரு திரைப்படம் தான் எடுக்க வேண்டும். முதலில் சந்திரமுகி ஆந்திர விஜயநகரத்தில் இருப்பதைக் காட்ட வேண்டும். பிறகு வேட்டையன் அங்கு செல்ல வேண்டும். சந்திரமுகியைப் பார்க்க வேண்டும். காதலில் விழ வேண்டும். அவளைக் கொண்டு வரவேண்டும். அவள் இன்னொருவனைப் பார்க்க வேண்டும். இருவரும் காதலை யாருக்கும் தெரியாமல் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதை வேட்டையன் பார்க்க வேண்டும். அவன் காதலனைக் கொல்ல வேண்டும். சந்திரமுகியை எரிக்க வேண்டும்.

  அப்பப்பா… எத்தனை வேண்டும்!!! இத்தனையையும் காண்பித்தால் படம் பார்க்கின்றவன் கொட்டாவி விட்டுக் கொண்டு கொக்கோ கோலா குடிக்கப் போயிருப்பான். படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார். படத்தை எடுத்த இயக்குனர் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் தாம் த தீம்த தோம் ததோம் என்று தாளம் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.

  அதையெல்லாம் விடப் பெரிய கொடுமை… எதாவது ஒரு விடுமுறை நாளில்… எதாவது ஒரு தொலைக்காட்சியில் பொதுமக்களாகிய நாம் படத்தைப் பார்த்து கதறி அழ வேண்டும்.

  இத்தனை கொடுமைகளையும் நடக்க விடாமல் ஒரேயொரு பாடல் காட்சியைப் புகுத்தி படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி மக்களை ரசிக்க வைத்ததை பாராட்டத்தான் வேண்டும்.

  தமிழ்ப் படத்தில் தெலுங்குப் பாட்டெழுதிய கவிஞர் புவன சந்திராவுக்கு ஒரு லக்க லக்க லக்க லக்க…….

  அன்புடன்,
  ஜிரா

  358/365

   
  • rajinirams 11:44 am on November 26, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு,நீங்கள் சொன்னது போல பல காட்சிகளை ஐந்து நிமிட பாடலிலேயே விளக்க வைக்கலாம்.,அதுவும் வேற்று மொழியிலேயே என்பதற்கு நல்ல உதாரணம் கவிஞர் புவனசந்திராவின் “ரா ரா” பாடல்.
   முன்பு ஒரு முறை வண்ணக்கனவுகள்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்கள் வந்து கொண்டிருந்த
   போது ஒரு விழாவில் வைரமுத்து வாலியிடம் இது பற்றி பேச, ஆமாம்,முதல்ல பத்து பாட்டு,எட்டு பாட்டு,நாலு பாட்டுன்னு போய் “நிப்பாட்டு”ன்னு சொல்லிடுவாங்க போலருக்கே என்று நகைச்சுவையாக கூறினாராம்.
   ஒரு முறை வாலியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது என்ன சார் கதையை சொல்வது போன்ற situation பாடல் அவ்வளவா வர்றதில்லையே என்றேன்,ஒரு நொடி கூட யோசிக்காமல் என்ன பண்றது situation அப்படியிருக்கு என்றாரே பார்க்கலாம்!. அவர் கூறியது போல “சொன்னது நீ தானா”எங்கிருந்தாலும் வாழ்க”போன்ற சூழலுக்கேற்ற பாடல்களெல்லாம் இனி வர வாய்ப்பேயில்லை. இதே போன்று வறுமையின் நிறம் சிவப்பு,நண்டு போன்ற படங்களிலும் ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளும் சேர்ந்து ஒலிக்கும் ஒரே இந்திய திரைப் பாடல்-வாலியின் இந்திய நாடு என் வீடு மட்டுமே.நன்றி.

  • Uma Chelvan 3:52 pm on November 26, 2013 Permalink | Reply

   பெற்றெடுத்த உள்ளமென்றும்தெய்வம் தெய்வம் …………..இதில் முழுக்கதையும் அடங்கி உள்ளது.

  • amas32 7:08 pm on November 26, 2013 Permalink | Reply

   // படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார்.// LOL

   ஒரு பாடலிலேயே ஏழை ஹீரோ பேப்பர் போட்டு, சாப்பாட்டுக் கடை வைத்து மல்டி மில்லியனர ஆகிவிடுவார். ஒரே பாடலில் குழந்தை வளர்ந்து பெரியவளாகிவிடும். இதெல்லாம் இல்லையென்றால் தமிழ் ரசிகனால் படத்தை ரசிக்கவே முடியாது.

   விறுவிறுவென்று கதையைச் சொல்லி முடிக்க பாடல்களில் கொலாஜ் மாதிரி காட்சிகளை அமைத்து ஐந்து நிமிடத்தில் பத்து வருடக் கதையைக் கூட எளிதாக முடித்துவிடலாம்.

   நீங்கள் குறிப்பாக இந்தப் பாடலை எடுத்துக் கொண்டதற்கு ஸ்பெஷல் பாராட்டு. க்ளைமாக்சில் சீட்டின் நுணியில் உட்காரவைக்கும் இந்தப் பாடல். எனக்கும் தெலுங்கு தெரியாததால் இன்று தான் முழுப் பொருளும் தெரிந்தது. அனால் நீங்கள் கூறியபடி சுமாராக நாமே அது தான் பாடலாசிரியர் சொல்லியிருப்பார் என்று அனுமானித்து ரசிக்கலாம் 🙂

   amas32

 • என். சொக்கன் 11:19 pm on November 24, 2013 Permalink | Reply  

  கவலைப்படாதே சகோதரா! 

  • படம்: ஆனந்த ஜோதி
  • பாடல்: காலமகள் கண் திறப்பாள் சின்னையா
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்: பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=lYKYBy6Qzfs

  சின்னச் சின்ன துன்பமெல்லாம்

  எண்ண எண்ணக் கூடுமடா!

  ஆவதெல்லாம் ஆகட்டுமே,

  அமைதி கொள்ளடா!

  கண்ணதாசனின் பல பாடல்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, இவர் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் அந்த வகைதான்.

  ஒரு சின்னக் கல்லைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால் வலி ஏற்படாது, அதையே அதே நிலையில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் கஷ்டம்தான்.

  ’நாம் சந்திக்கிற துன்பங்களெல்லாம் அப்படிதான்’ என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார் கண்ணதாசன். ’சிறிய கல்லைக்கூடப் பெரிய பாறையாக்குவது நம் எண்ணங்கள்தான், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்று அமைதியாக இருப்போம்!’ என்று எளிய சொற்களில் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

  ஒரு சிறுவனைப் பார்த்து நாயகி பாடுவதாக வரும் இந்தப் பாடலில் பாதி தன்னம்பிக்கை, மீதி கடவுள் நம்பிக்கை. ‘கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்குள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா? தம்பி, நமக்கு இல்லையா?’ என்கிற வரிகளைக் கேட்டு நம்பிக்கை பெறும் அந்தச் சிறுவர், பி(இ)ன்னாள் நா(த்தி)யகர் கமலஹாசன்!

  அதனால் என்ன? கண்ணதாசனும் முன்னாள் நாத்திகர்தானே!

  ***

  என். சொக்கன் …

  24 11 2013

  357/365

   
  • uma chelvan 2:22 am on November 25, 2013 Permalink | Reply

   அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
   அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்…………அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்……………

   இந்த அன்பு மொழிக்குதான் எவ்வளவு சக்தி. ஆறாத வருத்தத்துக்கு, மாறாத கோபத்துக்கு, தீராத நோயிக்கு ” நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்/ இருப்பேன் என்ற ஒரு சொல்லே உறவுகளின் மீதும் வாழ்கையின் மீதும் மீண்டும் நம்பிக்கை துளிர்க்க செய்கிறது.
   “எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு மீன் இன்னொரு மீனை தூக்கி தரையில் போடுவதில்லை” இதை இப்பொழுதுதான் வேறு ஒரு இடத்தில் படித்தேன். Humans are the only species go out of their way to hurt others.

  • rajinirams 6:16 pm on November 25, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. கவியரசரின் “ஆறுதல் தரும்” வரிகள்.எம்ஜியாரை திரையுலகில் “சின்னவர்” என்று தான் சொல்லுவார்கள். அதனாலும் “சின்னையா”என்று கவியரசர் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • amas32 7:40 pm on November 25, 2013 Permalink | Reply

   //சின்னச் சின்ன துன்பமெல்லாம்

   எண்ண எண்ணக் கூடுமடா!//

   முற்றிலும் உண்மை. பிறர் நம்மை தவறாகவோ கொபமகாகவோ பேசியதை அந்தக் கணத்தில் நாம் feel பண்ணியதை விட நினைத்து நினைத்து மருகும் போது தான் கனக்கிறது மனம். இதைத் தவிர நாம் இப்படி பதில் சொல்லியிருக்கணும் அப்படி பதில் சொல்லியிருக்கணும் என்று லேட்டாக ஞானோதயம் வேறு ஏற்பட்டு மனத்தை கலங்கவைக்கும்.

   எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சிலர் இருப்பார். ஒன்றுமே அவர்கள் மேல் ஒட்டாது toughlan மாதிரி. கொடுத்து வைத்தவர்கள் 🙂

   கமல் நாத்திகர் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டாலும் என்னால் அவரை நாத்திகர் என்று சொல்ல முடியாது 🙂

   amas32

 • mokrish 6:36 pm on November 23, 2013 Permalink | Reply  

  எது நடந்ததோ 

  நண்பர் புது வருட டைரி கொடுத்தார். முதல் பக்கத்தில் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசன மல்டி கலர் படம் போட்டு அதன் கீழே கீதாசாரம் என்று தலைப்பிட்டு ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்கும் சில வரிகள். இதுதான் கீதையின் சாரமா? இல்லை இதை கீதையின் சாரமாக ஏற்க முடியவில்லை என்கிறார் சோ. எனக்கு இது சிவகாசியில் flex banner எழுதும் ஒரு காலண்டர் கவிஞரின் கைவண்ணம் போல் இருக்கிறது.

  வேதத்தின் பொருளை விளக்கவே பகவத் கீதை சொல்லப்பட்டது என்று படித்திருக்கிறேன் களத்தில் தேரை நிறுத்திய பார்த்தன் போர் செய்ய திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு சோர்ந்து நடுங்கினான். காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. கண்ணன் கீதை உரைத்தான்.

  கர்ணன் படத்தில் இதே காட்சி. அர்ஜுனன் தன் ஆயதங்களை கீழே போட்டு கலங்கும்போது திரையுலகின் நிரந்தர கிருஷ்ண பரமாத்மாவான என் டி ராமாராவ் சொல்லும் அறம் தழைக்கவே கர்ம வீரன் செயல்படுகிறான் என்ற உபதேசம். கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேள்வி பதில் போல் அமைந்த காட்சி

  http://www.youtube.com/watch?v=3vN8DFxTMzE

  மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்

  மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்

  மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ

  விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ..

  என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்

  கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்

  மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே

  சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ

  புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே

  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே

  கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான் கண்ணனே கொலை செய்கின்றான்

  காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!

  மூன்று மணி நேர படத்தில் கீதைக்கு மூன்று நிமிட பாடல்தான். அதில் சொல்லவேண்டியதை சொல்லி கண்ணதாசன் காட்டும் வித்தை அருமை.

  பல வருடங்கள் கழித்து கண்ணதாசன் எழுதிய இன்னொரு கவிதை. வரிகள் நினைவில்லை. ஆனால் கதை இதுதான் அதில் அபிமன்யுவை இழந்த அர்ஜுனன் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறான். அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.

  மோகனகிருஷ்ணன்

   
  • amas32 1:18 pm on November 24, 2013 Permalink | Reply

   //அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.// :-))

   அதனால் தான் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று ஆதி சங்கரரும் பாடுகிறார். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று cycle of birth and death லேயே உழன்று கொண்டிருக்கிறோம். உய்வதில்லை.

   இன்று நீங்கள் கொடுத்திருப்பது எத்தனை அற்புத வரிகள் மோகனகிரிஷ்ணன்! 18 அத்தியாயங்களில் பகவான் கண்ணன் சொன்னதை சில வரிகளுள் அடக்கிவிடுகிறாரே கண்ணனின் தாசன்! மறுமுறை சொல்கிறேன் என்ன தவம் செய்ததோ தமிழ் மண் அவரை பெற்றதற்கு!

   amas32

  • GiRa ஜிரா 11:16 am on November 25, 2013 Permalink | Reply

   உபதேசம் அர்ஜுனனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் கர்ணனுக்குத் தேவைப்படவில்லை.

   அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்ன சொன்னாரோ அதன் படி கர்ணன் கடமையைச் செய்தான். எந்தப் பக்கம் இருந்தானோ அந்தப் பக்கத்துக்காகவே போரிட்டான். பாசம் தடுத்தது. ஆனாலும் தொடர்ந்து நன்றி மறவாது போரிட்டான். உயிரையும் கொடுத்தான்.

   நீங்கள் சொல்வதிலிருந்தும் என்னுடைய எண்ணவோட்டத்திலிருந்தும் அர்ஜுனனுக்கு உபதேசித்தது விழலுக்கு இறைத்த நீர்தான் போல.

   • kamala chandramani 12:55 pm on November 25, 2013 Permalink | Reply

    எத்தனை உபதேசங்களைப் பெற்றாலும் மரணம் மனிதனை அழத்தான் வைக்கிறது! அன்பைப் பெறுவதற்கும், அன்பு செலுத்தவும் ஆதாரமாக உள்ள ஸ்தூல சரீரம் இல்லாமல் போனதற்குதான் அழுகை.
    கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கைத் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்த யோகி. அதனால்தான் மேலே கொடுத்துள்ள பாடல் பிறந்தது.
    அருமையான பதிவு.’ ‘எது நடந்ததோ” -இந்த வரிகள் உண்மையில் கீதாசாரம் அல்ல என்று நானும் கேள்விப்பட்டேன்.

   • uma chelvan 7:26 pm on November 25, 2013 Permalink | Reply

    Very Well Said !!!

  • Deva 8:18 am on November 29, 2013 Permalink | Reply

   Nice. Need to listen the songs again to know kannadasan.

 • GiRa ஜிரா 9:13 pm on November 22, 2013 Permalink | Reply  

  மாற்றங்கள் 

  சிறுவயதில் நான் சேட்டைக்காரன். பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். வாயைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்… தூத்துக்குடியில் நான் கதறினால் விளாத்திகுளத்தில் எதிரொலிக்கும்.

  ஊருக்குப் போகும் போதெல்லாம் சொந்தக்காரர்களிடம் கெட்ட பெயரை பெட்டி பெட்டியாக சம்பாதித்துக் கொண்டு வருவேன்.

  வளர வளர நடத்தையில் மாற்றம் வந்தது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபின். பலவித அனுபவங்களிலும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ன சிந்தனையிலும் மனம் கட்டுப்பட்டது. சிந்தனைகள் அமைதிப்படுத்தின. மாற்றம் தவிர்க்கவே முடியாததானது. ஒரு திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற போது என்னுடைய அத்தை ஒருவர் “பையன் எப்பிடி மாறிப் போயிட்டான்! அவரஞ்சிக் கொடியா மாறிட்டான்!” என்றார்.

  மாற்றம் என்பதுதான் மாற்றமில்லாத தத்துவம். இந்த மாற்றத்தை திரைப்படக் கவிஞர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். மடமடவென்று காதல் பாடல்கள் கண் முன்னே வந்தன. அவற்றில் நான்கு பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

  வழக்கம் போலவே கவியரசர் முன்னால் வந்து நிற்கிறார். பணமா பாசமா திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலைத்தான் பார்க்கப் போகிறோம்.

  அவளொரு கல்லூரி மாணவி. செல்வந்தரின் செல்வமகள். திமிரும் அதிகம் தான். காரிலேயே கல்லூரி சென்று திரும்புகின்றவள் தவிர்க்க முடியாமல் ரயிலில் ஒருநாள் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயிலில்தான் அவள் அவனைப் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் அவனைப் பார்த்ததாலேயே அவளுடைய திமிர் கரைந்து ஓடுகிறது. உள்ளத்தில் காதல் வந்த பிறகு அங்கு திமிருக்கு இடமில்லை. வீட்டுக்கு வந்து அவனை நினைத்துப் பாடுகிறாள்.

  மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
  காரிகையின் உள்ளம் காண வருவாரோ!

  மாறிய உள்ளம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மாற்றியவனே வரவேண்டும். கதைப்படி வந்தான். நல்வாழ்வு தந்தான்.

  மாற்றத்தின் தோற்றத்தை அடுத்ததாகச் சொல்ல வருகின்றவர் கவிஞர் வாலி. சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலிலும் ஒரு பெண் வருகிறாள். ஆம். இளம்பெண்ணே தான். அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினாள். அதை மன்மதனும் நோக்கினான். காதல் அம்பு விட்டான்.

  மன்மதன் அம்பு விட்டான் என்று நமக்குத் தெரிகிறது. அவளுக்குத் தெரியவில்லையே. அவள் நெஞ்சுக்குள் உண்டான குழைவு எப்படி வந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. அதையே பாட்டாகப் பாடுகிறாள்.

  எங்கிருந்தோ ஆசைகள்
  எண்ணத்திலே ஓசைகள்
  என்னென்று சொல்லத் தெரியாமலே
  நான் ஏன் இன்று மாறினேன்!

  பெண்மை தானாக மாறுவதும் உண்டு. வலுக்கட்டாயமாக மாற்றப்படுவதும் உண்டு. அன்பும் அடக்கமும் நிறைந்தவள் அவள். அவளை ருசிக்க விரும்பிய ஒருவன் அவளுக்குத் தெரியாமல் மதுவைக் குடிக்க வைத்தான். மது மதியை மயக்கியது. மயங்குவது புரிந்தது அவளுக்கு. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை. தானா இப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்து பாடுகிறாள் அவள்.

  நானே நானா யாரோதானா
  மெல்ல மெல்ல மாறினேனா
  தன்னைத் தானே மறந்தேனே
  என்னை நானே கேட்கிறேன்

  இதுவும் கவிஞர் வாலியின் கைவண்ணம் தான். அடுத்து கவிஞர் வைரமுத்து காட்டும் மாற்றத்தை அவரது வைரவரிகளில் பார்க்கலாம். இதுவரை பார்த்த அதே காட்சிதான். நேற்று வரைக்கும் இல்லாத காதல் இன்று அவளுக்கு வந்து விட்டது.

  நேற்று இல்லாத மாற்றம் என்னது
  காற்று என் காதில் ஏதோ சொன்னது
  இதுதான் காதல் என்பதா!
  இளமை பொங்கிவிட்டதா!
  இதயம் சிந்திவிட்டதா! சொல் மனமே!

  இப்படி பெண்களின் மனது குழந்தைத்தனத்திலிருந்து காதலுக்கு மாறுவதைச் சொல்ல எத்தனையெத்தனை பாடல்கள்.

  அதெல்லாம் சரி. வாலிபத்துக்கு வந்த பின் குழந்தைத்தனத்துக்கு நாம் ஏங்குவதேயில்லையா. வாழ்க்கையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உயர்ந்தாலும் குழந்தைப் பருவத்தின் குற்றமில்லா குதூகலங்கள் எப்போதும் நம்மோடு வருவதில்லை. ஏனென்றால் மனதோடு சேர்ந்து அறிவும் மாறிவிடுகிறதே. இந்த ஏக்கத்தை அழகாக ஒரு பாட்டில் வைத்தார் கவிஞர் சிநேகன்.

  அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
  அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
  படம் – பணமா பாசமா
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=wlSTmduxnyA

  பாடல் – எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  படம் – சந்திரோதயம்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=DM_m7xWYTHc

  பாடல் – நானே நானா யாரோதானா
  வரிகள் – கவிஞர் வாலி
  பாடியவர் – வாணி ஜெயராம்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Hh6lAvR12cA

  பாடல் – நேற்று இல்லாத மாற்றம்
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர் – சுஜாதா
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
  படம் – புதியமுகம்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=9_geeVUdWwc

  பாடல் – அவரவர் வாழ்க்கையில்
  வரிகள் – சினேகன்
  பாடியவர் – பரத்வாஜ்
  இசை – பரத்வாஜ்
  படம் – பாண்டவர் பூமி
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=yHW1mPvAM3Q

  அன்புடன்,
  ஜிரா

  355/365

   
  • amas32 9:29 pm on November 22, 2013 Permalink | Reply

   //மாறியது நெஞ்சம்! மாற்றியது யாரோ!
   காரிகையின் உள்ளம் காண வருவாரோ!//
   அருமையான ஒரு பாடலை நினைவு படுத்தியதற்கு எக்கச்சக்க நன்றி :-))

   பெண்ணின் மனம் மாறுகிறது. அவள் அறியாமலேயே அவளுள் மாற்றம் ஏற்பட்டுவிடும். இது இயற்கை நடத்தும் ஒரு அதிசயம். இதை வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் ரசிகர்கள், புத்திசாலிகள். அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் வாழும் கலையை மாற்றியமைத்தால் வெற்றி நமதே.

   எல்லா பாடல்களுமே அருமை ஜிரா 🙂

   amas32

  • rajinirams 1:02 am on November 23, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு-பொருத்தமான நல்ல “மாற்ற”பாடல்கள். சில காதலர்கள் “காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்றும் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்,ஆனாலும் அன்பு “மாறாதம்மா” என அன்புடன் இருப்பர்.பின்னாளில் “தாலாட்டு மாறி”போனதே என்று பாடாமலிருந்தால் நல்லது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ஆனால்”மாறி”விட்டான் எனக்கூறும் கவியரசர் “மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது” என்று எழுதியுள்ளார். நன்றி:-)

  • Uma Chelvan 3:26 am on November 23, 2013 Permalink | Reply

   மிக மிக நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு. அதிலும் மிகவும் அருமையான “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்” என்ற பாடல் வேறு. கேட்கவும் வேண்டுமா? ……Mr. Rajinirams கமெண்ட்ஸ் எல்லாமே படிக்க மிகவும் நன்று. இவ்வளவு பாடல்களை தெரிந்து வைத்ருகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  • rajinirams 9:02 pm on November 23, 2013 Permalink | Reply

   uma chelvan நன்றி:-)

 • mokrish 9:17 pm on November 21, 2013 Permalink | Reply  

  நீ பார்த்த பார்வைக்கொரு 

  இந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும்  உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள்  கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்)  ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு  மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்

  http://www.youtube.com/watch?v=XuOgG2QWAgQ

  அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்

  கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்

  ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

  ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

  இந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.

  ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.

  வள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும்.  நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே  ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.

  இதில் ஒரு பெண்ணின் நிலை என்ன? சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல்  (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )

  http://www.youtube.com/watch?v=Tu7Hjb8NOmo

  அப்படி பாக்குறதுன்னா வேணாம்

  கண் மேலே தாக்குறது வேணாம்
  தத்தி தாவுறதுன்னா னா னா
  தள்ளாடும் ஆசைகள் தானா
  என்ன கேட்காமல் கண்கள் செல்ல
  உன் பக்கம் பார்த்தேன்
  மிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன
  காணாமல் போனேன்

  கமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல்  போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்  (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=ABRw-iSaCJI

  இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்  தானா

  இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..

  இது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful.  (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=Lu8FNldHluA

  இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

  இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

  நான் கேட்டதை தருவாய் இன்றாவது

  கவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

  மோகனகிருஷ்ணன்

   
  • Uma Chelvan 12:47 am on November 22, 2013 Permalink | Reply

   நினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்
   மறைத்த முகத்திரை திறப்பாயோ
   திறந்து அகத்திரை இருப்பாயோ!!
   இருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….

   உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…

   ராஜா ஒரு மழை போல்!! மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.

   மாமழை போற்றுதும்!!!! ராஜாவையும் !!!!!

  • rajinirams 10:38 am on November 22, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராளம். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.
   “மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM

  • amas32 11:57 am on November 22, 2013 Permalink | Reply

   //இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

   இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது

   நான் கேட்டதை தருவாய் இன்றாவது//

   இந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி!

   amas32

  • srimathi 10:54 pm on November 22, 2013 Permalink | Reply

   I’m glad that there are so many songs where a woman’s perspective is portrayed. To be exactly in woman’s shoes is possible only when a woman writes it herself. Ondra renda aasaigal from kaakha kaakha is a popular example. Thamarai writes it this way “thoorathil nee vandhaale en manadhil mazhai adikkum, miga piditha paadal ondru udhadugalil munumunukkum”

 • என். சொக்கன் 9:36 pm on November 20, 2013 Permalink | Reply  

  மலரும் அன்பு 

  • படம்: பாண்டிய நாடு
  • பாடல்: ஒத்தைக்கடை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: டி. இமான்
  • பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ், ஹரிஹரசுதன்
  • Link: http://www.youtube.com/watch?v=BaG0wq-23lQ

  ஜெயிச்சா இன்பம் வரும், தோத்தா ஞானம் வரும்,

  இதான் மச்சி லவ்வு! இது இல்லா வாழ்க்கை ஜவ்வு!

  நாரும் பூ ஆகும்டா, மச்சி

  மோரும் பீர் ஆகும்டா!

  ’பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த பழமொழி. வாசனை எதுவும் இல்லாத நாரில்கூட, அதனால் கட்டப்பட்டுள்ள பூக்களின் வாசனை சேர்ந்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம்.

  அங்கிருந்து அப்படியே ஒரு டைவ் அடித்துத் திருக்குறளுக்குச் செல்வோம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

  நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்

  பேணாமை பேதை தொழில்

  அதாகப்பட்டது, பேதைங்களோட வேலைகள் என்னென்ன தெரியுமா?

  1. கெட்டதைச் செய்யறமேன்னு வெட்கப்படமாட்டாங்க : நாணாமை

  2. நல்லதைத் தேடமாட்டாங்க : நாடாமை

  3. அவங்ககிட்ட நார் இருக்காது : நார் இன்மை

  4. நல்லபடியாப் பார்த்துக்கவேண்டிய நல்ல குணங்களைப் பராமரிக்கமாட்டாங்க : பேணாமை

  மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘நார் இன்மை’? நார் இல்லாமல் எப்படி பூவைக் கட்டுவார்கள்? அது என்ன வயர்லெஸ் பூமாலையா?

  தமிழில் ‘நார்’ என்ற சொல்லுக்கு அன்பு என்றும் அர்த்தம் உண்டு. அதைதான் திருவள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார். ‘நார் இன்மை’ என்றால், அன்பு இல்லாத மனம் என்று அர்த்தம்.

  இன்னொரு ரிவர்ஸ் ஜம்ப் அடித்து பழமொழிக்குத் திரும்பி வாருங்கள். இப்போது ‘பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ என்றால் என்ன அர்த்தம்?

  காதலிக்குப் பூ வாங்கிக் கொடுத்தால், அவளுக்கு உன்மேல் அன்பு பிறக்கும், அதுவும் அந்த பூவைபோலவே, அந்தப் பூவைப்போலவே மணம் வீசும்!

  அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!

  ***

  என். சொக்கன் …

  20 11 2013

  353/365

   
  • kekkepikkuni 9:47 pm on November 20, 2013 Permalink | Reply

   நாரும் பூ ஆகுமடா. அருஞ்சொற்பொருள் [எனக்குப் புரிந்த அளவில்:-] அன்பும் ஃப்ப்ப்பூன்னு போயிடும். அல்லது, அன்பூ ஆகிடும். 🙂

  • amas32 10:00 pm on November 20, 2013 Permalink | Reply

   இன்று தான் பாண்டிய நாடு பார்த்தேன் 🙂

   நார்=அன்பு இன்று புதிதாகக் கற்றுக் கொண்டேன், நன்றி 🙂

   மோர் எப்படி பீர் ஆகும், ரொம்ப நாள் சந்தேகம்.

   amas32

  • rajinirams 10:38 am on November 21, 2013 Permalink | Reply

   ஆஹா,பிரமாதம் சார். “நார்”கலந்த நன்றி:-))

  • Chandsethu 7:59 pm on November 21, 2013 Permalink | Reply

   “அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!” சொக்கன் ஸ்டைல் :))))

 • mokrish 7:41 am on November 20, 2013 Permalink | Reply  

  எங்கே அவன் என்றே மனம் 

  சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity  இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject  காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில்  ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து  பிறந்தவை என்கிறார்.

  காலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  

  http://www.inbaminge.com/t/k/Kalangalil%20Aval%20Vasantham/Paadum%20Vande.eng.html

  பாடும் வண்டே பார்த்ததுண்டா
  மாலை அணிந்த என் மாப்பிள்ளை
  ஏண்டி தோழி என்ன செய்தாய்
  எங்கு மறைத்தாய்
  கண்ணன் எங்கே எங்கே எங்கே

  முதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்

  வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
  வண்ணச்சேலை வாங்கி கொடுத்தார்
  கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
  கோவில் வழியைப் பார்த்துக்கிடந்தேன்
  ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
  உண்மை சொல்வாயடி எந்தன்

  எந்தன் கண்ணாளன்
  வந்தார் இங்கே எங்கே எங்கே

  அடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள்  ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று  பிரிவுக்காலம் சொல்கிறாள்.

  ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
  தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
  ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
  அவரின்றி கூவுது ஆயிரம் கோழி
  கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
  இன்று வந்தானடி

  எந்தன் கண்ணாளன்
  வந்தார் இங்கே எங்கே எங்கே

  வண்டு, தோழி என்று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.

  மோகனகிருஷ்ணன்

  352/365

   
  • Uma Chelvan 10:26 am on November 20, 2013 Permalink | Reply

   எங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-

   அவனை கண்டால் வரச் சொல்லடி
   அன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி
   தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
   தனியே நிற்பேன் எனச் சொல்லடி

   இருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.!! Just look at Manoramma’s expression for that particular lines. She is in total shock. :))

  • amas32 9:30 pm on November 20, 2013 Permalink | Reply

   இது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂

   amas32

   • Uma Chelvan 12:15 am on November 21, 2013 Permalink | Reply

    நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ ?

 • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

  உத்தரவின்றி உள்ளே வா 

  • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
  • பாடல்: முன்பே வா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
  • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

  நீ நீ மழையில் ஆட,

  நான் நான் நனைந்தே வாட,

  என் நாளத்தில் உன் ரத்தம்,

  நாடிக்குள் உன் சத்தம்!

  பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

  ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

  அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

  விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

  உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

  அதை நினைக்கையில்,

  ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

  ***

  நாளங்கள் ஊடே

  உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

  ***

  ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

  புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

  ***

  மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

  நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

  ***

  ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

  ***

  என். சொக்கன் …

  18 11 2013

  351/365

   

   
  • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

   நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

   அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
   அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
   இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
   ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

   மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

  • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

   எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

   //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

   ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

   amas32

  • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

  • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

   ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

   வைரமுத்து

   படம்: க.கொ.க.கொ
   பாடல்: ஸ்மை யாயி..

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel