Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:21 pm on November 5, 2013 Permalink | Reply  

  மீன்கொடி தேரில் 

  நிலவின் நிறம் பதிவுக்காக வாலி 1000 புத்தகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது பாடல் வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ‘சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ?’ என்ற வரிகளில் இடையை மீன்கொடி என்கிறாரே என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இவர்தானே மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே’ என்றார்?

  நண்பர் @nchokkan னிடம் கேட்டேன். அவர் அது மீன் இல்லை மின்கொடி தான்., மின்கொடி மருங்குல் சுருங்கமேல் என்று ஆழ்வாரும் துதிக்கின்ற மின்கொடி என்று அபிராமி பட்டரும் சொன்ன மின்னல் கொடி தான் என்று விளக்கம் தந்தார். கே ஜே யேசுதாஸ் மின்கொடி என்றுதான் பாடுகிறார்.

  ஆனால் மன்மதனுக்கு மீன்கொடி தானே அப்படி ஒரு கோணம் இருக்குமோ பார்க்கலாம் என்று தேடினேன் மன்மதன் எப்படி வருகிறான்? வெண்நிலவைக் குடைபிடித்து வீசுதென்றல் தேர் ஏறி மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய வரும் மன்மதனுக்கு யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை எனும் படைகள் இல்லை என்று தண்டியலங்காரம்

  யானை இரதம் பரியாள் இவையில்லை

  தானும் அனங்கன் தனுக்கரும்பு –

  என்ற பாடலில்.சொல்கிறது. திரிகூட ராசப்பக் கவிராயர் கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள் என்ற வரியில் பெண்களே மன்மத சேனை என்கிறார்.

  மன்மதன் சேனை? என்னை போல் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய வேலாலே விழிகள் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=iPDQDMh1yAE

  வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

  சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

  வேல் போன்ற விழிகள் நூல் போன்ற இடை. ஆனால் இடையில் மன்மதன் சேனைகள் என்கிறார். தொடர்ந்து

  கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும்

  சிட்டு கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்

  என்று மின்னலை கண்களில் வைக்கிறார். மீன் போல் கண்கள். மின்னல் போல இடை.என்பதை தலைகீழாக மாற்றி கண்களில் மின்னல் இடையில் மீன்கொடியோடு வரும் மன்மதன் சேனை என்கிறார்

  சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ – இது அச்சுப்பிழைதான் ஆனால் அர்த்தமுள்ள அச்சுப்பிழையோ? கண்களில் இருப்பது பாண்டியனின் மீன்கொடி. இடையில் மன்மதனின் மீன்கொடி. சரிதானே?

  மோகனகிருஷ்ணன்

  338/365

   
  • rajinirams 11:10 pm on November 6, 2013 Permalink | Reply

   அருமை.தெய்வத்திருமணங்கள்-வானமும் பூமியும் ஆலிங்கனம்-கண்ணதாசன் பாடலில் “மன்னவன் தன்னையே மறக்கவொன்னாததால் பொன்னுடல் கொதித்தது-பூவெல்லாம் துடித்தது-“மின்னிடை”மெலிந்தது-மேகலை சுழன்றது என்ற வரிகள் வரும்.ஒரு பெண்ணை பார்த்து பாடலில் “கொடி மின்னல்”போல் ஒரு பார்வை என்ற வரிகளும் நினைவு வந்தது. நன்றி.

 • mokrish 7:54 pm on October 23, 2013 Permalink | Reply  

  இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

  அன்றொரு நாள் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான வெண்பா விளையாட்டு. நண்பர் @nchokkan கண்ணன் பற்றி வெண்பா எழுத நண்பர் @elavasam அதில் ஒரு கேள்வி கேட்க — இவர் பதில் சொல்ல என்று பரபரப்பான one day மாட்ச்  போல சுவாரசியமாக இருந்தது.

  எனக்கு வெண்பாவும் தெரியாது விருத்தமும் தெரியாது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயம் கண்ணனும் ராமனும். கண்ணன் பற்றிய பாட்டில் ஏன் ராமர் பற்றிய Reference என்று முதல் கேள்வி.. இருவரும் ஒன்றுதானே என்று ஒரு பதில். தப்பு செய்தவன் ஒருவன் மாட்டிக்கொண்டவன் வேறொருவன் என்று ஒரு மறுமொழி.  ஒரே பாட்டில் பல அவதாரங்கள் என்று ஒரு தனி track. அட அட

  அதே கேள்விகளுக்கு நாமும் பதில் தேடலாம் என்று ஒரு (விபரீத) ஆசை. ஆண்டாள் திருப்பாவையில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும்

  புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்

  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

  என்று ஒரே பாசுரத்தில் பாடியுள்ளதாகப் படித்தேன். மணாளன் எப்படி இருக்க வேண்டும் ஆண்டாள் கலங்குகிறாள். கண்ணனா ராமனா ? கண்ணுக்கு இனிய கண்ணனுக்கு ஒரு வரி மனத்துக்கு இனிய ராமனுக்கு ஒரு வரி என்று மாறி மாறி உருகுகிறாள்.  கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்தில் ஒரு matrimonial விளம்பரம் போல எழுதுகிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

  http://www.youtube.com/watch?v=lsY6sJPpAF0

  ராதைக்கேற்ற கண்ணனோ

  சீதைக்கேற்ற ராமனோ

  கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு

  கோதைக்கேற்ற காவலன் யாரோ

  அன்னை இல்லம் படத்தில் நடையா இது நடையா என்ற பாடலிலும் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) பொருத்தம் பார்க்கிறார்.

  தேரோட்டும் கண்ணனுக்கு ராதா

  சிங்கார ராமனுக்கு சீதா

  காரோட்டும் எனக்கொரு கீதா

  கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தோதா

  நம்மாழ்வார்  ராமன் கூனி மேல் மண் உருண்டை எறிந்த பழியை

  மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

  கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

  என்ற பாடலில் கண்ணன் மேல் போடுகிறார். .

  ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை என்பது ஆண்டாள் கட்சியா? நம்மாழ்வார் அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றே என்கிறாரா? இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

  கண்ணதாசன் அந்த Bride / Bridegroom தேவை என்பதையெல்லாம் தள்ளிவைத்து இருவேடம் போட்டாலும் திருமால் ஒன்றே என்று உயர்ந்தவர்கள் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் எம் பாலமுரளிகிருஷ்ணா)

  http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=2697&songid=13160

  ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

  ராதையின் வடிவம் சீதையும் தாயே

  நால் வேதம் அவனாக உருவானதோ

  நாலாகும் குணம் பெண்மை வடிவானதோ

  என்று சொல்கிறார்.

  தசாவதார வரிசை ஒரு evolution செய்தி சொல்லும் என்று படித்தேன் . முதலில் நீர் வாழ் உயிரினம் அடுத்து ஒரு amphibian அப்புறம் ஒரு நிலத்தில் வாழும் வராகம் அடுத்து கொஞ்சம் மிருகம் கொஞ்சம் மனிதன் என்று அது ஒரு அழகான வரிசை. இதில் ராமனுக்கு அடுத்து கண்ணன். இதில் இருக்கும் evolution செய்தி என்ன?

  மோகனகிருஷ்ணன்

  325/365

   
  • amas32 8:12 pm on October 23, 2013 Permalink | Reply

   மோகனக்ரிஷ்ணனனான உங்களுக்கு அது விளங்காதா? 😉 இராமன் ரூல்ஸ் ராமனுஜன். கிருஷ்ணன் சகலகலா வல்லவன். அடுத்த பரிணாம வளர்ச்சி அதுவாகத் தானே இருக்க வேண்டும். ஆறு அறிவுள்ள மனிதன் இன்னும் இன்னும் சாமர்த்தியத்தையும் செயல் திறனையும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையை இன்று நாம் கண் கூடாகப் பார்க்கவில்லையா? அதைத் தான் கிருஷ்ணனின் அவதாரம் நமக்குக் கட்டியுள்ளது. இன்றைய காலக் கட்டத்திற்குத் தேவையான நெளிவு சுளுவோடு வாழ கிருஷ்ணன் கற்றுத் தருகிறார் என்பது என் தாழ்மையானக் கருத்து.

   இராமனின் வாழ்க்கை ஒரு பாடம். கிருஷ்ணன் உபதேசம் செய்யவே அவதாரம் எடுத்தார். சிலது கேட்டுத் தான் கற்றறிய முடியும். அதை நமக்கு அருளியவர் கண்ணன்.

   அருமையானப் பாடல்கள் :-)) நன்றி!

   amas32

  • rajinirams 7:35 pm on October 24, 2013 Permalink | Reply

   ராமன்,கிருஷ்ணன் என்ற அவதாரங்களை வைத்து அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.
   “டபுள்ஸ்”படத்தில் நாயகனை-ராமனாக சித்தரித்து மனைவியும் கிருஷ்ணனாக காதலியும் நினைத்து பாடும் வைரமுத்துவின் பாடல் நன்றாக இருக்கும். “ராமா ராமா ராமா சீதைக்கேத்த ராமா உன் வில்லாய் நானும் வந்தேன் அம்பு பூட்டடா… கிருஷ்ணா கிருஷ்ணா உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா என்று வரும். தசாவதாரம் படத்தில் வாலியின் வரிகள் “ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,கண்ணனாக நீயே வந்து காதலையும் தந்தாய்”.இன்னொரு பாடல் வரிகள்: ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவமே ஸ்ரீ ராமன்,காதல் உணர்வுக்கு பேதமில்லை என்றவனே பரந்தாமன், ஸ்ரீ ராமனாக நாயகியோடு வாழ்வது ஓரின்பம்,ஸ்ரீ கிருஷ்ணனாக கோபியரோடு வாழ்வது பேரின்பம்-வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன். http://youtu.be/XkM4zfgSBDg

 • என். சொக்கன் 9:30 pm on September 18, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: பூச்சரமே 

  சாதி மல்லிப் பூச்சரமே ..சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி ”

  சிறு வயதில் பாரதிதாசன் பற்றி பாட நூலில் படித்த பொழுது ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று “இருண்ட வீடு” கதையிலும் எப்படி இருக்க வேண்டும் என்று “குடும்ப விளக்கு ” கதையிலும் ொல்லி இருப்பார் என்று தேர்வு நிமித்தம் படித்ததோடு சரி . அதன் பிறகு அதனை மறந்தே போனேன்.

  கணவருக்கு ஊட்டி விடுவது பற்றி @amas32 ஒரு ட்வீட் போட நான் பதிலுக்கு அப்படி ஒரு கற்பனை செய்து பார்த்தேன் என்று கிண்டலடிக்கவும் @nchokkan நீங்கள் பாரதிதாசனின் குடும்ப விளக்கு படியுங்கள் என்று காரணம் சொல்லாமல் ிங்க் கொடுத்துவிட்டுப் போய்விட்டார் .சரி என்று படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “குடும்ப விளக்கு” க்குத் தக்கவாறு இந்தப் பாடல் வெகுவாகப் பொருந்திப் போவதை உணர்ந்தேன். ஒருவேளை அவர் இப்பொழுது எழுதி இருந்தால் பெண்ணீய வாதிகள் எவரேனும் சண்டைக்கு வந்தாலும் வரலாம் 🙂 ஆனால் இப்பொழுது படித்தாலும் இனிக்கவே செய்கிறது 🙂

  ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .

  “குடும்ப விளக்கில்”பகல் முழுக்க அவள் செய்யும் வேலைகள் அவள் குடும்பம் நடத்தும் பாங்கு என்று விவரித்து விட்டு சின்னச் சின்ன அன்புப் பரிமாற்றங்களையும் சொல்லி விட்டு இரவு நேரத்தில் ஓர் அறைக்குள் நாயகனும் நாயகியும் இணைந்து நிற்கும் தருணம் , சற்றே ஆர்வக்கோளாறில் நாற்காலியை இழுத்துப் போட்டு சீட்டின் நுனியில் அமர்கிறேன் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று 🙂

  ஆனால் நாயகி கவலையுடன் நாட்டுக்கு என்ன செய்தோம் என்ற பேச்சை ஆரம்பிக்கிறாள் இந்தக் காட்சியின் அடிப்படையில் சற்றே உல்டாவாக , தலைவன் தலைவிக்கு சொல்லும் விதமாக கவிஞர் புலமைப் பித்தன் வெகு அழகாகஎழுதியுள்ள பாடலே இது .

  ​எனக்கு இது மறக்க முடியாத பாடலாகிப் போனதற்கு காரணம் ஒன்று உண்டு ​.கல்லூரியில் பாட்டுப் போட்டியில் தோழிக்கு இந்தப் பாடலைப் பரிந்துரை செய்திருந்தேன். அவளும் சரி என்று சொல்லி விட்டு அங்கே பாடறியேன் படிப்பறியேன் பாடி விட்டாள் .மைக் முன்பு அவள் நிற்கும் வரை பாடலை மாற்றுவதைப் பற்றி அவள் சொல்லவே இல்லை. அதிலே ஒரு வருத்தம் அவள் மீது. அதனால் பாடலைக் கேட்கும் பொழுது அந்த நினைவுகளும் கோர்வையாக வந்து விழும் .

  “சாதி மல்லிப் பூச்சரமே ” முத்ல் வரியே தகராறாக ஒரு முறை விவாதித்தோம் ட்விட்டரில் 🙂 சாதி மல்லி என்பது பிச்சி என்று @anu_twits சொல்ல இல்லை இல்ல மல்லிகையில் உயர் தரம் வாய்ந்த மல்லிகை என்று நான் சொல்ல ஒரே பூ வாசனை டைம் லைனில் ஒரு மணி நேரத்திற்கும் மேல். இன்றுவரை பிச்சியை சாதி மல்லியாக நான் ஒத்துக் கொள்ளவே இல்லை போலவே அவரும் 🙂

  புதுப் புது அர்த்தங்களில் விளைந்த கருத்து வேறுபாடுக்குப் பிறகு ராஜாவும் பாலசந்தரும் கை கோர்க்கவே இல்லை .ராஜா ஜாம்பாவானாக வலம் வந்து கொண்டிருந்ததருணத்தில் துணிந்து வேறு ஒருவரை இசையமைப்பாளராகப் போட்டு பால சந்தர் எடுத்த ரிஸ்க்குக்கு தான் தகுதியானவன் என்று நிரூபித்து இருக்கிறார் மரகத மணி . பாடல்களெல்லாம் முத்துகள் . MSV யோ இளையராஜாவோ ,மரகதமணியோ ,AR ரகுமானோ தனக்குத் தேவையான பாடல்களைக் கறந்து விடுவதில் இயக்குநர் KB வல்லவர் என்றே அவரின் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பறை சாற்றுகின்றன .

  இந்தப் பாடலுக்கான பின்னணி வெகு சுவ்ராசியம்.அதிலே பாரதிதாசனின் பாடலைப் புகுத்த வேண்டும் என்ற யோசனைக்காக இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. ஒருவர் ட்வீட் கூட RT ஆகி வந்தது இது போன்று சினிமாவில் புகுத்தப் பட்ட பாரதியார் பாரதிதாசன் பாடல்களை மட்டுமே பெரும்பாலோனோர் இதுவரை அறிந்திருக்கிறோம் என்று . .நிதர்சனமான உண்மை. ஆக சினிமா என்ற மாபெரும் ஊடகம் மூலமாக எடுத்துச் செ(சொ)ல்லப் படும் சேதிகள் தக்க வீரியத்தோடு மக்களைச் சென்றடையும்.அதனால் படத்திற்குத் தகுந்தாற்போல் மிகப் பொருத்தமாக உறுத்தாமல் KB உட்புகுத்தியதைப் போல வரும் தலைமுறை இயக்குனர்களும் செய்தால் நலம் .

  வெள்ளை &வெள்ளை கருப்புக் கண்ணாடியில் மம்முட்டி இன்னும் அழகுடன் மிளிர பாடலின் வீணை இடையிசைக்கெல்லாம் துள்ளலுடன் பானுவின் இடையும் அசைகிறது.தான் விரும்பிய் காதலன் தன் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று கண்மணி என்று மாற்றி எழுதுவதும் அதை வேறு ஒருவருக்குச் சமர்ப்பிப்பதில் அதிர்ந்தும் போவதுமாக கீதாவின் நடிப்பு கனகச்சிதம் .

  “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
  இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ”
  “யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
  பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி”

  யாதும் ஒரே யாவரும் கேளிர் எனச் சொன்னது கணியன் பூங்குன்றனார் ..பாரதிதாசனோடு அவரையும் உள்ளிழுத்து விட்டார் புலமைப் பித்தன்

  பாடல் ஆரம்பிப்பதுக்கு முன்பு அழகான உச்சரிப்போடு ஏற்ற இறக்கத்துடன் மம்முட்டி சொல்வதும் அழகு.உதாரணம் கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று “பின்பு ” என்பதை நிறுத்திச் சொல்லி கட்டிலில் தாலாட்டு என்பார்.

  தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் கொதிப்பினை நினைவூட்டும் விதமாக “உலகம் யாவும் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம் ” என்ற வரிகள் இருக்கின்றது .காதல் மொழி பேச வேண்டிய தருணத்தில் நாட்டைப் பற்றிக் கவலைப் பற்றி அக்கறைப் படுவது நமக்கு இந்த காலத்தில் மிகை தான் . குறைந்த பட்சம் இப்படி கற்பனையிலாவது நடக்க்கிறதே என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான் 🙂

  ஒரு இசைக்கு பானு சரிவான பகுதியில் சடசடவென ஆடிக்கொண்டே இறங்குவார் ..அந்த இசைக்கு அக்காட்சியமைப்பு அவ்வளவு பொருத்தம் . பொதுவாக ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் என் செல்லம் இல்ல கண்மணி,ராசாத்திஎன்ற அழைப்புகள் சொல்லிக் காரியம் சாதிப்பதுண்டு தலைவனும் தலைவியை அவ்வாறே கொஞ்சி காரியம் சாதிக்கப் பார்க்கிறார் 🙂 “கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ”

  வெறும் பாடலோடு நிறுத்தாம பாரதிதாசனின் அந்தக் கவிதையோடும் ,பின்னணிக் காட்சியோடு சேர்த்தே ரசிக்க ​
  http://www.youtube.com/watch?v=9G8e0uaWzLw

  உமா கிருஷ்ணமூர்த்தி

  தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.

  ”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”

   
  • GiRa ஜிரா 9:41 pm on September 18, 2013 Permalink | Reply

   அட்டகாசம். உங்களை நாலு வரி நோட்டு எழுத வைத்த பாரதிதாசனுக்கும் புலமைப் பித்தனுக்கும் கனியன் பூங்குன்றனுக்கும் நன்றி. எழுதத் தூண்டிய நாகாவுக்கும் தான். 🙂

  • amas32 9:45 pm on September 18, 2013 Permalink | Reply

   உங்கள் குரலிலேயே முழுவதும் கேட்டு முடித்தேன். அப்படியே பேசுவதுபோல் உள்ளது உங்கள் எழுத்து 🙂

   அருமையாக எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?

   ஒரு பாடல் வெற்றிபெற வேண்டும் என்றால் பாடல் வரிகள், இசை, பாடகர்களின் தெளிவான உச்சரிப்பு, காட்சியமைப்பு, நடிகர்களின் பங்களிப்பு அனைத்தும் A 1 ஆக இருக்க வேண்டும். இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று! எவ்வளவு தடவை பார்த்தாலும் அலுக்காது.

   சூப்பர் பதிவு உமா 🙂

   amas32

  • Uma Chelvan 3:00 am on September 19, 2013 Permalink | Reply

   Very Beautifully written Uma!

   ஏட்டிக்கு போட்டியாக பேசுவதும், ஆண்களை பொது வெளியில் அவமான படுத்துவதும் தான் “பெண்ணியம்” என்று இன்று பல பேர் நினைக்கிறாங்க! அதிகம் படித்தவர்களே இந்த தப்பை ரொம்ப பண்ணறாங்க !”தேவதாசி முறை இருக்கட்டும் ” என்று சொன்ன திரு.சத்திய மூர்த்தியிடம் ” அப்படி என்றால் உன் வீட்டு பெண்களை அனுப்பு இவர்களை விட்டு விடு” என்று சொன்ன Dr. .முத்து லக்ஷ்மி ரெட்டி அவங்க பேசுனது பெண்ணியம். து .இன்று மத்தவங்க பேசுறது எல்லாம் என்ன வென்று பேசுறவங்கதான் சொல்லணும் !!!!

   “ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது …………………………அதுதான் அமைதிக்கும் நிம்மதிக்கும் வழி!!!

   காலடியில் விழுந்தது மட்டும் அல்லாமல் எழவும் முடியாமல் இருப்பதுவும் சிறப்புதான்!!

  • Uma Chelvan 3:19 am on September 19, 2013 Permalink | Reply

   Just 3 minutes video, watch and enjoy!!!!

  • umakrishh 7:59 am on September 19, 2013 Permalink | Reply

   மிக்க நன்றி ஜிரா 🙂 மிக்க நன்றி அம்மா 🙂 மிக்க நன்றி உமா 🙂
   உமா நீங்க சொன்ன மாதிரி சொன்னா அப்போ என் வீட்டுப் பெண்ணும் தேவதாசியும் ஒன்றா எப்படி ஒப்பிடப் போச்சு என்று டைம் லைனில் கட்டி உருளுவார்கள் ..அப்படி பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன 🙂
   ட்விட்டரில் என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பது இது போன்றவைகள் தாம்..பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் விசயம் நாம் நிறைய அறியலாம் இங்கே..ஊக்கம் கொடுக்கும் உங்களைப் போன்ற நண்பர்களே என்னை இந்த அளவுக்கு எழுத வைப்பது ..இச்சிறு விளக்கை கோபுரத்தில் வைத்து அழகு பார்க்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி ..:)

  • Chari Iqbal Emendis (@Rasanai) 9:15 am on September 19, 2013 Permalink | Reply

   அட்டகாசம் உமா..இந்த பாட்டுன்னோன நேராவே அர்த்தம் புரிஞ்சுடுதே, என்ன புதுசா இருக்கப்போகுதுன்னு தோனிச்சு..எல்லாம் கலந்து செம ரைட்டப்.

   குறிப்பா இந்த வரிகள் கிளாஸ். எனக்கு அவ்வளவு ஒத்துப்போகுது 😉

   ”ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது .”

   வெல்டன் உமா..

  • rajinirams 10:54 am on September 19, 2013 Permalink | Reply

   amas32 அவர்கள் கூறியது போல பேசுவது போலவே இருந்த யதார்த்தமான பதிவு.பாரதிதாசனையும் கணியன் பூங்குன்றனாரையும் தன் எழுத்துக்களில் கொண்டுவந்த புலவர் புலமைப்பித்தனின் திறமைக்கு இந்த பாடல் நல்ல சான்று. பூச்சரம்,பாச்சரம் என தூய தமிழில் பாடல்கள் இப்போது வராததும் கவலையளிக்கிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

   • kamala chandramani 11:57 am on September 19, 2013 Permalink | Reply

    அருமையான பதிவு உமா அவர்களே. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.பாரதிதாசனையும், கணியன் பூங்குன்றனாரையும் தன் எழுத்துக்களில் இணைத்த புலமைப் பித்தன், அருமையான நடிப்பு. எடுத்துச் சொல்லியிருக்கும் பாணி அருமை.

  • Prabhu 9:27 pm on September 19, 2013 Permalink | Reply

   Somebody just confused ‘Pulamai pithan’ with ‘Pudhumai pithan’. I imagine chokkan’s reaction. Ha.. Ha…

   • என். சொக்கன் 9:40 pm on September 19, 2013 Permalink | Reply

    Corrected 😉

  • jroldmonk 11:31 pm on September 19, 2013 Permalink | Reply

   ஆனாலும் பாத்துட்டு தான் இருக்கோம் முன்பு “மாலையில் யாரோ மனதோடு பேச ..” பதிவு இப்போ இந்த பதிவு, பானுப்ரியாவை கொஞ்சம் ஓவரா தான் ரசிக்கிறீங்க 😛

   • umakrishh 4:02 pm on September 23, 2013 Permalink | Reply

    நன்றி மாங்கு…பானு ஒரு வித அழகு ..அவங்க நடனம் பிடிக்கும் :))

  • Deva 7:18 am on September 20, 2013 Permalink | Reply

   I was under impression that’s this song was written by vairamuthu. My respect towards pulamaipithan increasing day by day.

  • Thiyagarajan 7:38 am on September 20, 2013 Permalink | Reply

   எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் உங்கள் பார்வையை பதிவு செய்திருக்கிரிர் . குறிப்பாக நீங்கள் பயன்படுத்திய இரண்டு வரி மிகவும் அருமை ” ஆணோ , பெண்ணோ இருவரும் அன்புக்குக் கட்டுப்பட்டு அடிமைத் தனத்தை விரும்பி ஏற்கும் பொழுது ஆணாதிக்கம் பெண்ணீயம் அனைத்தும் ஒரு புள்ளியில் மறைந்தே போகின்றது”. இந்த வரிக்காவே அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும் ” வாழ்த்துகள் உமாகிருஷ்”.

   • umakrishh 4:02 pm on September 23, 2013 Permalink | Reply

    நன்றி தியாகராஜன் :))

  • umakrishh 4:01 pm on September 23, 2013 Permalink | Reply

   நன்றி 🙂 ரசனைக்காரரே :))நன்றி ரஜினிராம்ஸ் நன்றி கமலா மேடம் 🙂

 • mokrish 9:04 pm on September 16, 2013 Permalink | Reply  

  இல்லற ஜோதி 

  சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு சுவாரசியமான உரையாடல். நான் வழக்கம் போல் பெவிலியன் சீட்டில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தேன். விவாதத்தின் இடையில் நண்பர் @nchokkan பாரதிதாசனின் குடும்ப விளக்கு படிக்க link கொடுத்தார். வாழ்வியல் பற்றிய அருமையான வரிகள். படிக்கும்போதே மனதில் காட்சிகள் விரியும் ஒரு விஷுவல் எழுத்து.

  ஒருநாள் நிகழ்ச்சி என்ற முதற் பகுதியின் தலைப்பை படித்தவுடன் எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் பாலும் பழமும் என்ற படத்தில் எழுதிய ஆலய மணியின் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) மனைவி காலை மாலை இரவு என்ற மூன்று காலம் பற்றி பாடுகிறாள்.

  https://www.youtube.com/watch?v=GN2a7WO3wkI

  ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

  அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

  என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

  உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

  இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

  ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

  காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

  யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

  காலை நேரத்து ஒலிகள், கணவனே கண் கண்ட தெய்வம், மாலையில் அவன் வருகை, யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் என்ற வரிகளில் ஒரு சிறுகதை.

  தொடர்ந்து படித்தால் காலை மலர்ந்தது, அவள் எழுந்தாள், கோலமிட்டாள் என்ற தலைப்புகள். அடடா இது போல கண்ணதாசன் பாடல் உண்டே என்றே தோன்றியது. நீ படத்தில் ஒரு பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)

  https://www.youtube.com/watch?v=2tDB6NWrXdg

  வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்

  வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

  மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்

  குங்குமம் விளங்கட்டுமே –

  கைவளையாடலும் காலடி ஓசையும்

  வருகையை முழங்கட்டுமே -பாவை

  வருகையை முழங்கட்டுமே

  இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, விடியும் வேளைதான். ’தெருக்கதவு சார்ந்ததாழ் திறந்து, அரிசிமாக் கோலம் அமைத்தனள்’ என்ற வரிதான்  ‘வாசலில் கோலமிட்டேன்’ என்று வருகிறதோ?அடுத்த சரணத்தில் மனைவி கணவனை எழுப்பும் ஒரு காட்சி சொல்கிறார்

  மார்கழி திங்களை மூடிய பனித்திரை

  காற்றினில் விலகட்டுமே -காலை

  காற்றினில் விலகட்டுமே

  வாடையில் வாடிய மேனியை மூடிய

  மன்னவன் விழிக்கட்டுமே – காதல்

  மன்னவன் விழிக்கட்டுமே

  வாடையில் வாடிய  மேனியை மூடிய மன்னவன் … அருமை!  கண்ணதாசன் பாடல்களை அடுக்கினால்  ஒரு புது குடும்ப விளக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  மோகனகிருஷ்ணன்

  289/365

   
  • amas32 10:00 pm on September 16, 2013 Permalink | Reply

   பாரதி தாசனின் குடும்ப விளக்கில் பொதுவாக ஒரு சராசரி குடும்பத்தில் நடப்பவைகளை அப்படியே பிட்டு பிட்டு வைத்துள்ளார் அவர். ரொம்ப modern household ல் நடப்பவை அல்ல. ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் இருக்கும் இல்லத்தரசி பாங்காக குடும்பம் நடத்தும் அழகை கண் முன்னே எழுத்தொவியமாக்கிக் காட்சிப் படுத்துகிறார். பெண்ணியம் பேசுபவர்கள் அவர் சொல்வதை criticise செய்வார்கள். ஆனால் உண்மையான இன்ப வாழ்வு மனைவி வீட்டில் இருந்து குழந்தைகளைப் பேணிக் காப்பதில் தான் தொடங்குகிறது. அவரின் குடும்ப விளக்கைப் படித்த பின் இன்றைய பாடலாசிரியர்கள் பலருக்கும் குடும்ப விளக்கின் தாக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது 🙂

   //யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே//
   தாம்பத்தியம் என்பது கணவன் மனைவிக்குள்ளே ஏற்படும் ஒரு அன்னியோன்னிய தொடர்பு. எப்படி வீட்டை நிர்வகிப்பதில் அவள் திறமை தேவைப்படுகிறதோ அதே திறமை அவள் கணவனை ஆட்சி செய்வதிலும் தேவைப்படுகிறது. அந்த ஆட்சி தழைந்து போவதில் ஆரம்பிக்கிறது. This is one place a woman rules by giving in to a man!

   தாய்/ மனைவி என்பதற்கான இலக்கணம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் பத்து மாதம் சுமந்து குழந்தையை இன்றும் சுமந்து பெறுவது பெண் தான். அதனால் அவளுக்குத் தான் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் பங்கு உள்ளது. வேலைக்குச் செல்லும் பொழுது மற்றவர் தயவும் தேவையாகிறது, குழந்தை வளர்ப்பில் அவர்கள் பங்கும் சேர்ந்துக் கொள்கிறது. அப்போ வளர்ப்பில் கலப்படம் வருகிறது.

   நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் அருமை 🙂

   amas32

  • rajinirams 10:50 am on September 17, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு,பாரதி தாசன் அவர்களின் குடும்பவிளக்கு கவிதைக்கேற்ற அருமையான பாடல்கள்.இளகும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

   ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

   காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

   யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே-கவியரசரின் அற்புத வரிகள்.

  • Uma Chelvan 2:33 pm on September 17, 2013 Permalink | Reply

   அமாஸ் 32 அவர்களின் கருத்து மிக மிக அருமை . பெண் என்பவள் வீட்டில் இருந்து கணவனையும் குழந்தை , குடும்பம் ,பார்த்து கொள்வதுதுதான் நல்லது . நன்றாக படித்து வேலைக்கு சென்று இங்கும் நிம்மதி இல்லாமல் அங்கும் நிம்மதி இல்லாமல் உழல் பவர்கள் பல பேர். அப்படி மனைவி வீட்டில் இருந்து எல்லாம் பார்த்து கொள்ள வேண்டும் என்றால் கணவனின் அனுசரணை மிகவும் முக்கியம்., அன்பு, அழகு படிப்பு பண்பு பணம் வசதி அனைத்தும் இருந்தும் நல்ல கணவன் அமையாமல் கஷ்டப்படும் பல பேரை நான் அறிவேன்

   பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே,
   சொந்தமும் காதலும் இன்பமும் (????) கொண்ட உள்ளத்திலே ……..

   பேசு மனமே பேசு
   பேதை மனமே பேசு
   நாலு வகை குணமும்
   நிறைந்தே நடை போடு

 • mokrish 8:54 pm on August 26, 2013 Permalink | Reply  

  கங்கை தலையினில் மங்கை இடையினில் 

  நண்பர் @nchokkan னுடன் பேசிக்கொண்டிருந்தபோது  ‘ஜனனி ஜனனி ஜகம் நீ’ பாடல் வரிகள் பற்றி அவருடைய நண்பர் கேட்டதாக ஒரு கேள்வி எழுப்பினார். சிவன் அக்னி வடிவம். அடிமுடி காணாத ஜோதிஸ்வரூபம்.  ஆனால் கவிஞர் வாலி பாடலின் முதல் சரணத்தில் http://www.youtube.com/watch?v=PFPX9OgqEG4

  கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..

  நின்ற நாயகியே இட பாகத்திலே..

  என்ற வரிகளில் ஏன் குளிர் தேகத்திலே என்று சொல்கிறார்?

  சிவபெருமான் உஷ்ணமான திருமேனியை உடையவர். அந்த நெருப்பின் கடுமை குறையவே குளிர்ச்சியான திருக்கயிலையை இருப்பிடமாகக் கொண்டிருக்கிறார். மேலும் தேவலோகத்திலிருந்து கங்கை பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்தி தன் சடாமுடியில் தாங்கி  பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இருப்பது கயிலையில், கங்கையின் பிரவாகம் தலையில் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?

  விஷ்ணு அலங்காரப் பிரியர். அனுமன் ஸ்தோத்திரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். தன்னைத் துதித்துச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளால் மனம் மகிழ்ந்து  வேண்டியதை தருபவன். சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை அண்ணாமலைச் சதகம் என்ற நூல் சொல்கிறது. பேரொளி மயமான அவன் திருமேனி குளிர்ந்தால், அண்ட சராசரங்களும் குளிர்ந்து, காலம் தவறாமல் மழை பொழிந்து, பயிர்கள் நல்ல முறையில் விளைந்து உலகை வாழ்விக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து அபிஷேகங்கள் என்னும்போது குளிர் தேகம் என்பது சரிதானே?

  நீரும் நெருப்பும் மட்டுமல்லாமல் ‘இருநிலனாய்த் தீயாகி நீருமாகி’ என்ற தேவாரப் பாடல் பரமசிவனின் எட்டு வடிவங்கள் சொல்லும். பஞ்சபூதங்களுக்கும் உரிய தலங்களில் அமைந்துள்ள சிவாலயங்களில், மூலவர் பஞ்ச பூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார். இதில் திருவானைக்கா  நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

   Phosphorus என்ற பொருள் பற்றி நாம் படித்திருக்கிறோம். இது நீரில் கரைவதில்லை. காற்றில் தானாக எரியும் தன்மை உடையது. எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள். சிவனும் எப்போதும் ஒரு அபிஷேக mode ல் இருப்பதால் குளிர் தேகம் என்பது சரிதானே?

  இருக்கும் இடத்தையும் தன் மேனியையும் குளிர்விக்க எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகே உமையவளுக்கு இட பாகத்தை அளிக்கிறான். அட!

  மோகனகிருஷ்ணன்

  268/365

   
  • amas32 4:59 pm on August 27, 2013 Permalink | Reply

   கர்நாடகாவில் பல கோவில்களில் மேலிருந்து சொட்டு சொட்டாக நீர் லிங்கத்தின் மேல் படும்படியாக ஒரு சொம்பில் துளையிட்டு மேலே கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். சிவபெருமானை சதா குளிர்விக்க நல்ல ஒரு வழி. திருமாலோ பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பவன். சிவன் சுடும் மயானத்தில் மகிழ்ச்சியாக இருப்பவன். அதனால் வெளி உபகரணங்களால் தான் அவனை குளிர்விக்க வேண்டும்.

   amas32

  • rajinirams 2:52 pm on August 29, 2013 Permalink | Reply

   குளிர் தேகத்திலே என்ற வார்த்தைக்கான தங்களின் விரிவாக்கம் அருமை. amas32 அவர்கள் கூறியதை போல இங்கு எல்லா கோவில்களிலுமே இறைவனை குளிர்விக்கிரார்கள்.கவிஞர் வாலியின் இந்த பாடலை ராஜா ஸ்பஷ்டமாக உச்சரித்து பாடும்போது மெய் சிலிர்க்கும் என்பது உண்மை.நன்றி.

 • mokrish 1:00 pm on July 18, 2013 Permalink | Reply  

  நரை எழுதும் சுயசரிதம் 

  நண்பர் @nchokkan ட்விட்டரில் ‘35க்கப்புறம் 95கூட முக்கால் கிழம்தான்’ என்று எனக்கு சமாதானம் சொன்னார். விவாதம் முடிந்தாலும் அந்த முக்கால் கிழம் என்ற நிலை பற்றி அமைதியாக யோசித்தபோது கொஞ்சம் கவலை வந்தது. தொடர்ந்து சில தினங்கள் அதே யோசனை.

  முதுமை என்பது ஒரு பயம். உடலும் மனமும் தளர்ந்து, கை நடுங்கிக் கண் மறைந்து,  காதோரம் எட்டிப்பார்க்கும் நரை என்று முதுமை தரும் மாற்றங்கள் பல. நினைவு மங்கி எல்லாவற்றையும் மறக்க நேரிடலாம். இந்த நிலை சாபமா என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக வரம் இல்லை.

  ஆராதனை படத்தில் வைரமுத்து எழுதிய ஒரு குங்குமச் செங்கமலம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியன் எஸ் ஜானகி)

  http://www.youtube.com/watch?v=Nx3opO-h8gg

  முதுமை ஒருநாள் நம்மை வந்து தீண்டும்

  மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்

  முடியை பார்த்தால் முழு வெள்ளை

  என்று முதுமையின் அடையாளங்கள் சொல்கிறார்.

  ஒரு மெகா சைஸ் Hour glass ல் மேலிருந்து கீழே சரியும் மணலாக கண்ணுக்குத்தெரியாமல் நகரும் வருடங்கள் நம்மை மெதுவாக முதுமை நோக்கி செலுத்தும்.  கண்ணதாசன் போலீஸ்காரன் மகள் படத்தில் வரும் பாடலில்  (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் P B ஸ்ரீநிவாஸ் எஸ் ஜானகி) சொல்வது இதுதான்

  http://www.youtube.com/watch?v=H-V8ZciCTR4

  ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

  அதற்கு முன்னாலே வா..வா..வா…

  அழகுடன் இளமை தொடர்ந்து வராது

  இருக்கின்ற போதே வா..வா..வா..

  இளமை இருக்கும்போது செய்ய வேண்டியவை என்று ஒரு Bucket List போடுகிறார்.

  நரை, தள்ளாட்டம் என்ற உடல் சார்ந்த அடையாளங்களைத் தாண்டி முதுமைக்கு வேறு ஒரு முக்கிய அடையாளம் உண்டு. அது தனிமை. கூட்டத்திலும் தனிமையாக உணரும் ஒரு மனோநிலை. வெள்ளிவிழா என்ற படத்தில் வாலி எழுதிய ஒரு பாடல் (இசை வி குமார் பாடியவர் எம் எஸ் விஸ்வநாதன்) வரிகள் இதோ

  https://www.youtube.com/watch?v=vvfLzYCmfug

  உனக்கென்ன குறைச்சல் – நீயொரு ராஜா..

  வந்தால் வரட்டும் முதுமை!

  தனக்குத்தானே துணையென நினைத்தால்

  உலகத்தில் ஏது தனிமை?

  கடந்த காலமோ திரும்புவதில்லை..

  நிகழ்காலமோ விரும்புவதில்லை..

  எதிர்காலமோ அரும்புவதில்லை..

  இதுதானே அறுபதின் நிலை..

  அந்த நாளில் அறுபதின் நிலை என்று பாடிவிட்டார். இப்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து 60ளில் தொடங்கி எண்பதுகளை கடந்து வாழும் பலர் மனதளவில் தனியாகவே உணர்கிறார்கள்.

  முதுமையை  எதிர்கொள்ள நாம் தயாராவதில்லை என்பதே உண்மை. காலத்தை நில் என்று சொல்ல முடிந்தால் , வயதாவதை நிறுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?

  மோகனகிருஷ்ணன்

  229/365

   
  • rajinirams 3:27 pm on July 18, 2013 Permalink | Reply

   பதிவு அருமை. மனம் இளமையாக இருந்தால் உடலும் இளமையாக இருப்பது போல் உணரலாம்.ஆசைக்கு வயதில்லை என்பதை ஐம்பதிலும் ஆசை வரும் என்று கவியரசர் எழுதினார். வயதானாலும். காதில நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது.சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது என்று வைரமுத்து எழுதியது போலவும் மற்றவர்களை மகிழ்விக்க முடியும்:-)), நன்றி.

  • GiRa ஜிரா 6:50 pm on July 19, 2013 Permalink | Reply

   வயதாவது… எல்லாரையும் அச்சுறுத்தும். இளமை குறையக் குறைய.. இரத்தத்தின் சூடு குறையக் குறைய.. உடலின் வேகம் குறையக் குறைய… முன்பு செய்த வேலைகளைக் கூட முழுமையாக செய்யமுடியாத நிலை வரவர ஒரு தொய்வு கூடும்.

   அதை விட முக்கியமாக தோற்றப் பொலிவின் குறைவு. அழகு குறையும். உடலின் கூடும் சதை. வெளுக்கும் முடி. குறையும் கண்பார்வை.

   ஆனால் இத்தனை இருந்தும்… கண்ணதாசன் சொன்னது போல…
   ஐம்பதிலும் ஆசை வரும்
   ஆசையுடம் பாசம் வரும்
   இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
   நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா

  • பொன்.முத்துக்குமார் 9:05 pm on July 19, 2013 Permalink | Reply

   “வயதாவதை நிறுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?”

   நல்ல கேள்வி. இதற்கு விடை தேடுகிறது “Tuck Everlasting” என்ற ஆங்கில திரைப்படம். பெரிய தத்துவ விசாரமெல்லாம் இல்லை. சாதாரண படம்தான். ஆனால் உங்கள் கேள்விக்கு அதில் பதில் கிடைக்கலாம். காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி இதில் வில்லனாக. சுவாரஸ்யமான படம்.

   அன்புடன்
   பொன்.முத்துக்குமார்.

  • amas32 10:14 pm on July 19, 2013 Permalink | Reply

   பகவத் கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில் இறப்பு என்பது வேறொன்றும் இல்லை, ஓர் உடலை விட்டு இன்னொரு உடலுக்குச் செல்வது தான், அதற்கு ஏன் வருந்த வேண்டும் என்று கிருஷ்ணா பரமாத்மா கேட்பார். அந்த ஸ்லோகத்திலியே குழந்தை பருவத்தைக் கடந்து இளமை பருவத்தை அடைகிறோம், அடுத்து அதை முடித்து முதுமை பிராயாத்தை அடைகிறோம். ஒவ்வொன்றும் ஒரு வித இறப்பே, அதற்கெல்லாம் வருந்தி அழாத நாம் ஒரு உடல் மடியும் போது மட்டும் அழுவது ஏனோ என்று வினவுகிறார். கிழிந்த சட்டையை தூக்கி எறிந்து விட்டு புது உடையை நாம் நாடுவது போல தான் பழைய உடலை விடுத்துப் புதிய உடலுக்குள் புகுவதும்.

   ஆதலால் மூப்பு தவிர்க்க முடியாதது 😦 :-))

   amas32

 • mokrish 10:48 am on March 8, 2013 Permalink | Reply
  Tags: மகளிர் தினம்   

  என் அரிய கண்மணியே! 

  திரைப்பாடல் எழுதும் கவிஞர்களில் பெரும்பான்மை ஆண்கள். ஆண்டாள், ஔவையார் என்று ஆரம்பித்து கணக்கெடுத்தாலும் ரோஷனாரா பேகம், தாமரை, தேன்மொழி, ரோகிணி என்று பாடல் எழுதும் பெண் கவிகள் மிகச்சிலரே .விரல் விட்டு எண்ணிவிடலாம். அதனால் பாடல்கள் பொதுவாக ஆண் பார்வையிலே இருக்கிறதா? பெண்ணை அலங்காரம் செய்து வர்ணித்து புகழ்ந்து என்று பாடல்கள் வருவது இதனால்தானா?

  அவள் ஆடையும் கொலுசும் இதழும் சிரிப்பும் சிணுங்கலும் மட்டுமே பாட்டில் வந்ததா? அவளை தெய்வமாக்கி வேப்பிலையும் சூலமும் தீச்சட்டியும் கையில் கொடுத்து வழிபட்டதா? இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் பெண்ணைப்பற்றி அவள் பார்வையில் அவள் நினைப்பை  சொன்ன பாடல்கள் உண்டா? இன்று உலக மகளிர் தினம். இதற்கு விடை தேடலாமா?

  நிறைய பாடல்கள் இருந்தாலும் எனக்கென்னவோ இந்த ஒரு பாடல் பெண்ணின் பெருமையை அழகாகச் சொல்வது போல் இருக்கிறது சித்தி படத்தில் சுசீலா குரலில் காலமிது காலமிது என்ற  கண்ணதாசன் பாடல். MSV இசையில்.  https://www.youtube.com/watch?v=Kc1VUudalsA

  http://www.inbaminge.com/t/c/Chithi/Kaalamithu%20Kalamithu.eng.html

  தாலாட்டுப் பாடல்களில் பொதுவாக  குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. ஆனால் கண்ணதாசன் பெண்ணின் வெவ்வேறு நிலைப்பற்றி சொல்லும் ஒரு பாடலை தாலாட்டாக அமைக்கிறார்.

  பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை
  பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் ஒரு தூக்கம்
  இப்போது விட்டு விட்டால்  எப்போதும் தூக்கம் இல்லை
  என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு

  பெண்களின் பருவக் காலங்களை ஏழு நிலைகளாக வகுத்ததை சாலை கடந்த குமரிகள் பதிவில் நண்பர் @nchokkan விளக்கியிருந்தார். ஆனால் இந்தப்பாடலில் கண்ணதாசன் பெண் வாழ்வின் நிலைகளை புதிதாக வகுக்கிறார். ஒரு பெண் தன் வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் என்னென்ன  காரணங்களால் தூக்கத்தை இழக்கிறாள் என்று அழகாக விளக்கும் பாடல்.

  காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
  காலமிதைத் தவற விட்டால்
  தூக்கமில்லை மகளே

  முதல் நிலையாக குழந்தை. பேதை பருவத்திற்கு முந்தைய நிலை

  நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
  நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல்

  பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பெண் குழந்தைக்கு பிரசித்தி பெற்ற Playschool. அட்மிஷன். அதன்பின் அந்தப்பெண் குழந்தை நாள் முழுவதும்  பள்ளியில். அப்புறம் Twinkle Twinkle, Baba Blacksheep என்று அள்ளும்  ஆங்கிலத்தில் பாடி , crayons ஹோம் வொர்க் Assignment என்று தூக்கம் தொலைக்கும் என்கிறார்

  அடுத்து பதின்ம வயது பருவம். பெதும்பை மங்கை மடந்தை என்ற பழைய நிர்ணயங்களின் கலவை

  எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
  ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி

  நாலு முதல் பதினாறு வயது வரை – படிக்கும் பருவம். இன்றைய மதிப்பெண்கள் துரத்தும் பாடத்திட்டமும் Facebook,  மொபைல் போன் , வீடியோ கேம்ஸ் என்ற மற்ற பல கவனச்சிதறல்களும் எப்படி தூங்கவிடும் ?

  தொடர்ந்து பாடலை கேளுங்கள்

  மூன்றாவது Stage  காதல் வயப்பட்ட பெண் தொலைக்கும் தூக்கம் சொல்லும் 4 வரி

  மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்
  ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது
  தான் நினைத்த காதலனை சேர வரும்போது
  தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது

  அடுத்து நான்காவது நிலை  கல்யாண மாலை கொண்டாடும் பருவம்

  மாலையிட்ட தலைவன் வந்து
  சேலை தொடும்போது
  மங்கையரின் தேன் நிலவில்
  கண்ணுறக்கம் ஏது

  அஞ்சாவது நிலை தாய்மை நிலை

  ஐயிரண்டு திங்களிலும்
  பிள்ளை பெறும்போதும்
  அன்னை என்று வந்தபின்னும்
  கண்ணுறக்கம் போகும்

  முதுமை என்னும் ஆறாவது நிலை

  கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும்
  காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்

  இப்போதே தூங்கி விடு நீ வளரும்போது உன்னை தூங்க விட மாட்டார்கள் என்று சொல்லி அந்த காரணங்களை அடுக்கி பெண்ணின் பெருமையெல்லாம் சொல்லி – ஒரு தாலாட்டில் இவ்வளவு சொல்லமுடியுமா?

  கவிஞர் இன்று நம்முடன் இருந்து இந்த பாடலை எழுதியிருந்தால் இன்னொரு நிலையும்  சொல்லி இருப்பார். படித்து அதற்கேற்ற வேலையில் சேர்ந்து எல்லா துறைகளிலும் சாதனைகள் புரியும் பெண்கள் பற்றியும் சொல்லியிருப்பார் .

  பெண்களுக்கு வாழ்த்துகள்

  மோகனகிருஷ்ணன்

  097/365

   
  • PVR 12:36 pm on March 8, 2013 Permalink | Reply

   Excellent. Happy to see one of my most fav songs written bt the one and only kannadasan.!

  • amas32 (@amas32) 2:31 pm on March 8, 2013 Permalink | Reply

   அது எப்படித் தான் இந்த மாதிரி அருமையான பாடல்களை தேர்ந்டுக்கிறீர்களோ தெரியவில்லை. பெண்ணுக்கு எத்தனையோ கவலைகள், எத்தனையோ பிரச்சினைகள் காலம் முழுவதும். ஆணுக்கும் இல்லையா என்று கேட்கலாம். பெண் தாயாக, மனைவியாக, மருமகளாக, அலுவலக ஊழியராக ஒரே நேரத்தில் பொறுப்பு வகிக்கும் போது நல்ல உறக்கம் எங்கிருந்து வரும்?

   வார்த்தைகள் அருமையாக இருப்பினும் மெலன்கலி டியூன். இதை கேட்கும் பொழுது எனக்கு எப்பவும் சோகம் மனத்தை கவ்வும். படத்தின் தேவை அப்படியோ என்னமோ. Wish it had a buoyant note because ultimately மண்ணில் மாதராய் பிறந்திட மாதவம் செய்திருக்க வேண்டுமில்லையா? 🙂

   amas32

  • rajinirams 3:56 pm on March 8, 2013 Permalink | Reply

   மகளிர் தினத்திற்கேற்ற அருமையான தேர்வு.அருமையான விளக்கம்.

  • padma 6:38 pm on March 8, 2013 Permalink | Reply

   இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இந்த பருவநிலைகள் விளக்கம் குறித்து சிந்தித்தது
   உண்டு. ஒரு முறை கல்லூரி ஆண்டு மலரில் கண்ணதாசனின் திரைப்படப்பாடல்கள் குறித்து எழுதியபோது இதையும் அவருடைய விசாலாட்ச்சி பிள்ளைத்தமிழையும் ஒப்பிட்டு எழுதியதாக நினைவு. நன்றி மோகனகிருஷ்ணன்.

  • GiRa ஜிரா 10:09 am on March 10, 2013 Permalink | Reply

   பெண்களின் தினத்தன்று மிகப் பொருத்தமான பாடல். இதை விட பெண்களின் நிலையை மிக அழகாக யாரும் திரைப்படத்தில் சொன்ன நினைவில்லை.

   ஒரு விதை காயில் உண்டாகிறது. பழத்தில் வளர்கிறது. பழம் காயக் காய விதை முற்றுகின்றது. ஆனால் அது வேறொரு நிலத்தில் சென்று விழுந்து அங்குதான் வளர்கிறது. அதிலிருந்துதான் புதுப்புது விதைகள் தோன்றுகின்றன. புதுப்புது மரங்கள் வளர்கின்றன.

   பெண்ணில் நிலையும் அதுதான். அதனால்தானோ என்னவோ பண்பாடு மதம் என்ற பெயர்களில் பெண்கள் அழுத்தப்படுகின்றார்கள். அப்படி அழுத்தப்பட்டு அதுதான் வாழ்க்கைமுறை என்று நம்பும் ஒரு பெண்ணின் வாயிலிருந்து வரிகள் வர வேண்டும். கண்ணதாசனைத் தவிர யார் இப்படி இயல்பாக எழுதியிருக்க முடியும்!

 • என். சொக்கன் 10:55 am on March 2, 2013 Permalink | Reply  

  சாலை கடந்த குமரிகள் 

  • படம்: இதயம்
  • பாடல்: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர்
  • Link: http://www.youtube.com/watch?v=0ZwRNKNk8TI

  காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தியேட்டர் போகிறார்,

  டாக்ஸி ட்ரைவரும் பார்த்துப் பார்த்துதான் மீட்டர் போடுவார்,

  காலை, மாலைதான் வேலை பார்க்கவர் மகிழ்ச்சி கொள்கிறார்,

  வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயைப் பிளக்கிறார்!

  என்னதான் 75% ஆங்கிலம் கலந்து பாட்டு எழுதினாலும்கூட, தன்னையும் அறியாமல் சில மரபுச் சொற்களை ஆங்காங்கே நுழைத்துவிடுவார் வாலி. அந்தவிதத்தில், இந்தப் பாடலில், ‘வாலை’க் குமரி.

  இதே சொல்லை பாரதியாரும் பயன்படுத்தியிருக்கிறார், ‘வாலைக் குமரியடி, கண்ணம்மா, மருவக் காதல் கொண்டேன்!’

  குறும்பான பெண்ணை ‘வால் குமரி’ என்று சொல்லலாம், அதென்ன ‘வாலைக் குமரி’?

  பெண்களின் வயதைப் பொறுத்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழுவிதமாகப் பிரிப்பார்கள், கேள்விப்பட்டிருக்கிறோம்.

  இதேபோல், இன்னொரு வகைபாடும் இருக்கிறது: வாலை, தருணி, பிரவுடை, விருத்தை.

  • வாலை = 15 வயதுவரை உள்ள பெண்கள்
  • தருணி = 16 முதல் 30 வயதுக்குள் உள்ள பெண்கள்
  • பிரவுடை = 31 முதல் 55 வயதுக்குள் உள்ள பெண்கள்
  • விருத்தை = 55 வயதுக்குமேல் உள்ள பெண்கள்

  ஆக, ‘வாலைக் குமரி’ என்றால் பதினைந்து வயதுப் பெண் (அல்லது அதைவிடச் சிறியவள்) என்று அர்த்தம். Underage காதல் ரொம்பத் தப்பாச்சே, யு டூ வாலி? அதைவிட, யு டூ பாரதி?

  கவலை வேண்டாம், இதே வார்த்தையில் இரு கவிஞர்களுக்கும் ஒரு Loop Hole இருக்கிறது, அதன்மூலம் பிரச்னையில் சிக்காமல் வெளிவந்துவிடுவார்கள்.

  ’வால்’, ‘வாலை’ என்ற சொற்களுக்குத் தமிழில் ‘சுத்தமான’ என்ற பொருளும் உண்டு. ஹமாம் போட்டுக் குளித்துவிட்டு வந்த சுத்தமான பெண்கள் (அல்லது, தூய்மையான எண்ணங்களைக் கொண்ட / களங்கமில்லாத பெண்கள்) சாலை கடந்தனர், அதைப் பார்த்த மற்றையோர் வாயைப் பிளந்தனர், அம்மட்டே!

  போகட்டும், ‘மருவ’க் காதல் என்கிறாரே பாரதியார், அதென்ன மருமம்?

  தமிழில் ‘மருவுதல்’ என்றால் இது, அது என்று வித்தியாசமே பார்க்காதபடி இரண்டறக் கலத்தல் என்று அர்த்தம். காதலுக்கு மிகப் பொருத்தமான அடைமொழி, பாரதின்னா சும்மாவா? 🙂

  ***

  என். சொக்கன் …

  02 03 2013

  091/365

   
 • mokrish 1:03 pm on February 20, 2013 Permalink | Reply  

  வைரமுத்துவுடன் ஒரு நாள் 

  காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும் என்ற திருக்குறள் பற்றி நண்பர் @nchokkan நொடியில் பாயும் செந்நாரைகள் என்ற பதிவில் சொல்லியிருந்தார். பாடல் வரிகளில் இந்த காலை மாலை நேரம் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன்.

  தமிழ் திரைப்பாடல்களில் கடவுளையும் காதலையும் தவிர கவிஞர்கள் அதிகம் பாடியது இயற்கைதான் என்று நினைக்கிறேன். நிலா வானம் காற்று மழை மலை கடல் சூரியன் என்று பல வர்ணனை பாடல்கள் உண்டு. ஒரு நாளின் பல நேரங்களையும் நிறங்களையும் பதிவு செய்யும் பாடல்கள் உண்டா ? . இதோ வைரமுத்துவுடன் ஒரு நாள்

  மூன்றாம் பிறை என்ற படத்தில் விடியல் பற்றி ஒரு பாடல் http://www.youtube.com/watch?v=wy2eKsH1oPo தமிழில் ஒரே வாக்கியத்தில் அமைந்த மிக நீண்ட பல்லவி என்று கவிஞர் குறிப்பிடும் இந்தப் பாடலின் ஆரம்பம்

        வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட

        சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்

  எவ்வளவு ரசனையான கற்பனை . சூரியன் கடலில் குளித்து வெளியே வரும் நேரம், கவிஞர் என்ன காட்சியை பார்க்கிறார்?

          வானில் ஒரு தீபாவளி, நாம் பாடலாம் கீதாஞ்சலி,

          கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்,

          கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்!

  அந்த வண்ண கலவையை வானில் நடக்கும் அட்டகாசமான மத்தாப்பு சிதறலாக ,. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு தரும் சித்திரமாக பார்க்கிறார்.

  விடிந்துவிட்டது. அதிகாலை சொல்லும் அழகுச்  செய்தியை கேட்க எல்லோரையும் போர்வை சிறையை விட்டு வெளியே வரச்சொல்கிறார்.காலை தென்றல் பாடி வரும்  http://www.youtube.com/watch?v=2R7KfyTP1s4 என்ற பாடலில்  (உயர்ந்த உள்ளம்) .உறங்கும் மானுடனே உடனே  வெளியே வா அதிகாலை உன்னை வணங்கும் என்று சொல்லி எப்படி இருக்கிறது காலை என்று ஒரு நேர்முக வர்ணனையை அளிக்கிறார்

         குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்

          மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்

         தினந்தோறும்  புது கோலம் எழுதும் வானம்

         இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே

        பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே

  அடடா இந்த கற்பனையில் லயித்து நேரம் போனது தெரியாமல்… மற்ற வேலைகள் உண்டே  .சரி எல்லோரும் கிளம்பி அவரவர் வேலையை கவனியுங்கள். பள்ளி கல்லூரி அலுவலகம் எல்லாம் முடிந்து மறுபடியும் மாலையில் சந்திப்போம்.

  சூரிய உதயத்தைப் பாடிய கவிஞர் நிழல்கள் படத்தில் ஒரு அற்புதமான பாடலில் http://www.youtube.com/watch?v=hymujdC0mlw மயக்கும் மாலை பொழுதின் அழகையும்  சொல்கிறார்.

          இ்து ஒரு பொன்மாலைப் பொழுது

          வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

         ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்

         வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்

          பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

  வீடு திரும்பி இரவில் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தை பார்க்கும் கவிஞரின் கற்பனை தொடருகிறது பயணங்கள் முடிவதில்லை http://www.youtube.com/watch?v=AsN_9uXAoNE படத்தில்

        இளைய நிலா பொழிகிறதே  இதயம் வரை நனைகிறதே

         உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

         வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்

        முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்

        நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள்

       விண்  வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்

  ஒரு நாளின் வெவ்வேறு நேரங்கள் வானில் தூவும் பல நிறங்களை அழகாக பதிவு செய்யும் கவிதைகள்.

  மோகன கிருஷ்ணன்

  081/365

   
 • mokrish 10:56 am on February 17, 2013 Permalink | Reply
  Tags: சொக்கன்   

  ரிப்பீ(பா)ட்டு 

  நண்பர் @nchokkan எழுதிய பொய்க்கும் மெய்க்கும் இடையே பதிவில் குறிப்பிட்டிருந்த மூடித்திறந்த விழி இரண்டும் பார் பார் என்ற பாடல்.இதில் .  சரணத்தின்  வரிகளில்  ஒரு வார்த்தை இரு முறை வருவது சுவாரஸ்யமாக இருக்கவே பாடலை முழுவதும் கேட்டேன். கவிஞர் இந்த விளையாட்டை  பல்லவியில் ஆரம்பித்து முதல் சரணம் வரை தொடர்கிறார். ஆனால் ஏனோ அடுத்த சரணத்தில் இந்த உத்தியை கைவிட்டுவிடுகிறார்.

  இது போல வேறு பாடல் உண்டா? கொஞ்சம் முத்துக்குளித்ததில் கிடைத்த  இரண்டு அருமையான பாடல்களை கவிஞர் கண்ணதாசன் இதே போல் எழுதியிருக்கிறார்.

  தேன் நிலவு படத்தில், ஏ. எம். ராஜா இசையில், அவரே பி. சுசீலாவுடன் இணைந்து பாடிய ’நிலவும் மலரும் பாடுது’ http://www.inbaminge.com/t/t/Then%20Nilavu/Nilavum%20Malarum.eng.html (கேட்டுக்கொண்டேயிருக்கலாம் என்று தோன்றுகிறது ) என்ற பாடலின் சரணத்தில்

        சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
  மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
  சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
  தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா

  எல்லா வரிகளிலும் ஒரு வார்த்தையை இரண்டு முறை வைத்து ஒரு அந்தரங்க உரையாடலை பதிவு செய்யும் மாயம். அடுத்த சரணத்திலும் அதை தொடர்கிறார்

        முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
  இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
  முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
  கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

  பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி ஆழமான கவிதை சொல்வது கண்ணதாசனுக்கு கை வந்த வித்தை.

  அடுத்த பாடல் இன்னும் விசேஷமானது. ஒரு பாடல் முழுவதும் இது போல் எழுத முடியும் என்று நிரூபிக்கும் கவிதை. வெண்ணிற ஆடை படத்தில் வரும் கண்ணன் என்னும் மன்னன் என்ற http://www.inbaminge.com/t/v/Vennira%20Aadai/Kannan%20Ennum%20Mannan.eng.html
  பாடலின் வரிகள் இதோ. எல்லா வரிகளிலும் ஒரு வார்த்தை இருமுறை வரும்

  கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
  கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
  எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
  வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

  தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
  சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
  கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன
  என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

  அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
  அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
  ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
  அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

  அற்புதமான அமைப்பு. சுசீலா அவர்களின் தேன் குரலில் எல்லா வரிகளும் உயிர்பெற்று – அருமையான பாடல்.

  கண்ணதாசன் : அவர் கண்ணனுக்கு தாசன். நான் அவருக்கு தாசன்

  மோகன கிருஷ்ணன்

  078/365

   
  • amas32 (@amas32) 12:14 pm on February 17, 2013 Permalink | Reply

   நீங்கள் இங்கே பதிவெழுத தேர்வு செய்யும் பாடல்கள் அனைத்தும் நானும் சின்ன வயதில் கேட்டப் பாடல்கள் தான். ஆனால் அப்போழுது அனுபவித்ததில்லை. இப்பொழுது உங்கள் பதிவுகளினால் அனுபவித்து இரசிக்கிறேன்.

   கண்ணதாசனின் பாடல்களில் கீதையின் கருத்துக்கள் தான் இழையோடி நிற்கும். அது காதல் பாட்டாக இருந்தாலும் சரி தத்துவப் பாடலாக இருந்தாலும் சரி. கொடுத்து வைத்தவர்கள் நாம். மிகவும் எளிய முறையில் குழந்தைக்கு ஊட்டி விடுவது போல (bite size) கீதையின் கருத்துக்களை நமக்கு புகட்டி இருக்கார்.

   amas32

  • rajinirams 4:41 pm on February 17, 2013 Permalink | Reply

   அருமை. கவியரசரின் இன்னொரு பாடல் தொட்டுவிட தொட்டுவிட தொடரும்-குடும்ப தலைவன். விட்ட இடத்திலிருந்து தொடர்வது-மூன்று முடிச்சின் ஆடிவெள்ளி. நன்றி கலந்த பாராட்டுக்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel