Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:05 am on November 13, 2013 Permalink | Reply  

  வண்ண வண்ண சேலைங்க 

  விசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.

  திரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின்  மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில்  மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.

  பாரதியார் என்ன சொல்கிறார்? துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது.  அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார்.

  பொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல

           புண்ணியவாளர்தம் புகழினைப்போல்

  தையலர் கருணையைப் போல் – கடல்

           சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்

  பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்தப்

           பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்

  வண்ணப் பொற் சேலைகளாம் – அவை

           வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே !

  வாலியும்  பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா! என்று சீதரனை விளித்தாள். உடனே

  இருளினால் செய்த

  எழில்மேனியன் -எங்கிருந்தோ

  அருளினான்

  ஆடைமேல் ஆடைமேல்

  ஆடைமேல் ஆடைமேல்

  ஆடையாய் இடைவிடாது

  சங்கம்; சக்கரம்

  தங்கும் தனது

  கைத்தறியில் – உடை நெய்து

  கையறு பெண்ணுக் கனுப்பிட

  என்ற வரிகளில் அவன் பல புடைவைகள்  அனுப்பினான் என்றே சொல்கிறார்.

  வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே  என்று ஒரு cinematic ஜோடனை.

  http://www.youtube.com/watch?v=LkPxCJ5ux-c

  பெண்கள் உடை  எடுத்தவனே

  தங்கைக்கு உடை கொடுத்தவனே

  சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

  ஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.

  http://www.youtube.com/watch?v=ayX_wJ8otVM

  கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம்  பாடியவர் பி சுசீலா)

  http://www.inbaminge.com/t/p/Poovum%20Pottum/Ennam%20Pola%20Kannan%20Vanthan.eng.html 

  எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

  பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

  என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.

  மோகனகிருஷ்ணன்

   
  • rajinirams 5:43 pm on November 13, 2013 Permalink | Reply

   பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் என்ற கவியரசர் “பெண்மை வாழ தன்னை தந்தான்” என்ற ஒரு வரியிலேயே அசத்தி விட்டாரே…அருமையான பதிவு.

  • Uma Chelvan 8:10 pm on November 13, 2013 Permalink | Reply

   very nice reply rajinirams.

   • rajinirams 10:14 pm on November 13, 2013 Permalink | Reply

    Uma Chelvan நன்றி

  • Uma Chelvan 8:27 pm on November 13, 2013 Permalink | Reply

   பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. So does ” Kanna…..Dasan”. When I look around and look back எல்லோருக்குமே கண்ணன் மீது ஒரு காதல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….ஆயினும் பாரதியின் காதல் உன்னதமானது , உயர்வானது !

   கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
   எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
   செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
   கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
   தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
   ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!….

   .மிக தெளிவான , அழகான பாரதியின் கவிதை கண்ணனை பற்றி .

   • mokrish 8:17 am on November 14, 2013 Permalink | Reply

    பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….

   • mokrish 8:23 am on November 14, 2013 Permalink | Reply

    பாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது – அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

  • amas32 7:47 pm on November 15, 2013 Permalink | Reply

   சூர்தாசரும் கண்ணதாசரும் உட்பொருள் ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே உண்மை நிலை. மீட்டர் மீட்டரா துணி நீண்டு வருவது ஒரு figure of speech தான்.

   amas32

 • G.Ra ஜிரா 7:30 pm on November 11, 2013 Permalink | Reply  

  தமிழ் லாலி, தெலுங்கு லாலி 

  ஒரு மொழிப் பாடலை இன்னொரு மொழியில் எழுதுவது அவ்வளவு எளிமையானதா? இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்.

  தெர தீயக ராதா… நாலோனி
  திருப்பதி வேங்கடரமணா.. மத்சரமுனு
  தெர தீயக ராதா

  மேலே குறிப்பிட்ட தியாகராஜ கீர்த்தனையை மொழிபெயர்க்கும் முயற்சியில் கீழே உள்ளவாறு எழுதினேன்.

  திரை விலகலா…காதா… எந்தன்
  திருப்பதி வெங்கடரமணா இட..ரென்னும்
  திரை விலகலா…காதா (விலகலா…காதா = விலகல் ஆகாதா)

  இந்த மொழிபெயர்ப்பு முழுவதும் சரியானதா என்றால் இல்லை என்பதே பொருள். மத்சரம் என்ற சொல்லுக்கு இடர் என்று எழுதியிருக்கிறேன். ஆனால் மத்சரமெனும் என்று எழுதினால் தமிழ்ப் பாட்டைப் போல இருக்காது. அதே நேரத்தில் மெட்டுக்குள்ளும் சொற்கள் உட்கார வேண்டும். நேரடியாக ஒரு மொழியில் பாட்டெழுதுவதை விட மொழிமாற்றுப் பாட்டெழுதுவதில் சிரமம் சற்று அதிகம்.

  பல நேரங்கள் பாடலில் தமிழ் மொழிக்கு ஏற்ற வகையில் வரிகளையோ சொற்களையோ தேவைப்பட்டால் பொருளையோ கவிஞர்கள் மாற்றிவிடுவார்கள். தப்பில்லை. கதையோட்டத்துக்கு பொருத்தமாக இருக்கும் வரையில் சரிதான்.

  ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற வரம் தந்த சாமிக்கு என்ற பாடல் தமிழகத்தில் மிகப்பிரபலம். ஆனால் அந்தப் பாட்டு நேரடித் தமிழ்ப் பாட்டல்ல. அது சுவாதி முக்தயம் என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்று வடிவம்.

  தெலுங்குக் கவிஞரான டாக்டர்.சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்கு வரிகளும் மிக அற்புதமானவை. கிட்டத்தட்ட ஆழ்வார்த்தனமான வரிகள். கிருஷ்ணனுக்கு நீராட்டுவதாக எண்ணிக் கொண்டு பாடுவது போன்ற வரிகள்.

  வடபத்ரசாயிக்கு வரஹால லாலி
  ராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி
  முரிப்பால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி
  ஜகமேல தேவுனுக்கி பகடால லாலி

  இது மட்டுமல்ல பாடல் முழுக்க கல்யாணராமுனிக்கி, யதுவம்ச விபுனிக்கி, கரிராஜமுகனிக்கி, பரமான்ஷ பாவுனிக்கி, அலமேலு பதிக்கி, கோதண்ட ராமுனிக்கி, ஷ்யாமளாங்குனிக்கி, ஆகமருதுனிக்கி என்று அடுக்கிக் கொண்டே போவார் கவிஞர் நாராயண ரெட்டி.

  இதை அப்படியே தமிழ்ப்படுத்தினால் என்னாகும்? தமிழில் இல்லாத கிருஷ்ணபக்தியா? ஆனால் இங்கு அதுவல்ல பிரச்சனை. பாட்டு வரிகள் மெட்டுக்குள்ளும் உட்கார வேண்டும். அதே நேரத்தில் தாலாட்டவும் வேண்டும்.

  வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
  இராஜாதி இராஜனுக்கு இதமான லாலி
  குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
  ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

  தெலுங்கு வரிகளுக்கும் தமிழ் வரிகளுக்கும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. ஆனால் மெட்டுக்கு ஒத்துப் போகும் சொற்கள். அத்தோடு சாதாரண ரசிகனுக்கும் புரிகின்ற வரிகள்.

  தெலுங்கில் முழுக்க முழுக்க கிருஷ்ணலாலியாக இருந்த பாடல் தமிழ்நாட்டுக்கு வரும் போது தமிழ் பூசிக் கொள்கிறது.

  கருயானை முகனுக்கு மலையன்னை நானே
  பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே

  ”என்னதிது… இப்படியெல்லாம் செய்யலாமா? நியாயமா? முறையா? தகுமா? சரியா?” என்று என்னைக் கேட்டால் “தவறேயில்லை” என்றுதான் சொல்வேன்.

  ஏனென்றால் ஒரு பாடல் எழுதுகின்றவர்களாக இல்லை. பாடலைக் கேட்பவர்களுக்கானது. அந்த வகையில் இது போன்ற தமிழ்ப் படுத்துதல்கள் ஏற்புடையதே என்பதென் கருத்து.

  ஒருவேளை பொருளைச் சிறிதும் மாற்றாமல் மொழிமாற்றியிருந்தால் அந்த வரிகள் கேட்கும் தமிழ் மக்களுக்கு அன்னியமாகப் போகவும் வாய்ப்புள்ளது.

  பாட்டை விடுங்கள். தெலுங்கில் படத்தின் பெயர் சுவாதி முக்தயம். அதாவது சுவாதி நட்சத்திரத்தில் உருவான முத்து என்று பொருள். ஆனால் தமிழில் அதுவா படத்தின் பெயர்? இல்லை. சிப்பிக்குள் முத்து என்ற அழகானதொரு பெயரைப் பெற்றது.

  அதனால்தான் என்னுடைய மனது மொழிமாற்றுப் பாடல்களை எழுதும் போது கவிஞர்கள் எடுத்துக் கொள்ளும் இந்த மாதிரியான சுதந்திரங்களை அங்கீகரிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

  பாடல் – வரம் தந்த சாமிக்கு
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – சிப்பிக்குள் முத்து
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=eyKKmps9Z9Y

  அன்புடன்,
  ஜிரா

  344/365

   
  • bganesh55 8:13 pm on November 11, 2013 Permalink | Reply

   உங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறது என் கருத்து! வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்ப்பதை விட, இப்படி அந்தந்த மொழிக்குரிய தனித்தன்மையுடன் எளிமையாக, கேட்பவரின் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் வகையிலான பாடல்களே மனதில் என்றும் நிற்கும் ஸார்!

  • rajinirams 10:03 am on November 12, 2013 Permalink | Reply

   வரம் தந்த சாமிக்கு பதமான லாலி-நீங்கள் கூறியது போல டப்பிங் படங்களுக்கு பாடலின் சூழலுக்கு மட்டுமல்ல-அவர்கள் ஏற்கனவே செய்த உதட்டசைவுக்கு ஏற்றார் போல் எழுதுவது மிக கடினமான ஒன்றே-என்றாலும் நம் கவிஞர்கள் அந்த திறமையையும் பல படங்களில் காட்டிவிட்டார்கள்.”உதயம்,இதயத்தை திருடாதே.சலங்கை ஒலி ,உயிரே -இப்படி. அருமையான பதிவு.

  • Uma Chelvan 10:32 am on November 12, 2013 Permalink | Reply

   நீங்கள் சொல்வது போல், பாடல் கேட்பவர்களுக்கு ஆனது. பாடல் வரிகளை மாறாமல் கொடுத்தால் என்னை போல தமிழ் தவிர வேறு மொழி தெரியாதவர்களுக்கு மிகவும் கஷ்டம். வார்த்தைகள் இல்லாத போது வேண்டுமானால் அதை அப்படியே கொடுக்கலாம். Instrumental music அல்லது உயிரை உருக்கும் Pakistani folk music alap லில் எதுவும் மாற்ற தேவை இல்லை. அனால் வார்த்தைகளுடன் வரும் பொழுது அந்தந்த மொழிகளில் இருப்பதுதான் சிறப்பு.

  • amas32 8:03 pm on November 15, 2013 Permalink | Reply

   சூப்பர் பாட்டு. பாமர வர்க்கத்தைச் சேர்ந்த நான் அனுபவித்துக் கேட்கும் பாடல் இது. எனக்கு அதன் தெலுங்கு nuances எல்லாம் தெரியாது 🙂 தமிழ் வரிகள் அவ்வளவுப் பிடிக்கும், ராகமும் பாடலும் தேவகானம் 🙂

   அது தானே ரசிகனுக்குத் தேவை 🙂

   amas32

 • என். சொக்கன் 9:27 pm on November 10, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: போதை மயக்கம் 

  இன்றைய இளையதலைமுறையினரை மிகவும் பாதித்திருக்கும் கொடிய பழக்கம் போதைப்பழக்கம்.நாட்டில் பல சமூகவிரோத செயல்கள்,விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் மது மற்றும் இன்ன பிற போதைப் பழக்கங்களே.பலரின் உடல்நலம் கெடுவது மட்டுமல்லாமல் பலரின் திறமைகள் மங்கிப் போவதற்கு காரணமும் இதுவே.சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து அவர்கள் “இளம் இயக்குனர்களே “மது”என்பது மதுரை என்ற வார்த்தையில் இருக்கட்டும்-உங்கள் வாழ்க்கையில் வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்

  “உட்கப்படா அற் ஒளியிழப்பர்-எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார்” என்று வள்ளுவரும் கள்ளுண்ணாமை குறித்து குறள்  எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் இதை பற்றிய மூன்று முக்கியமான பாடல்கள்-

  கவிஞர் வாலி எழுதிய வரிகள்- “மானைப்போல் மானம் என்றாய்,நடையில் மதயானை நீயே என்றாய்,வேங்கை போல் வீரம் என்றாய் அறிவில் உயர்வாகச் சொல்லிக்கொண்டாய்-மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்” -தைரியமாக சொல் நீ மனிதன் தானா-இல்லை நீ தான் ஒரு மிருகம்-இந்த மதுவில் விழும் நேரம்…என மது அருந்திய ஒருவனை பார்த்து பாடப்படுவதாக அருமையாக எழுதியிருப்பார்.

  இரண்டாவதாக வாலியின் இன்னொரு பாடல்-

  “நல்ல மனுஷன் சாராயத்தை தொட்டதுமில்லை-அது தொட்டவனை லேசில தான் விட்டதுமில்லை-மனுஷனோட ரத்தத்தை தான் அட்டை குடிக்கும் ஆனா மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்-“குடிக்காதே தம்பி குடிக்காதே-நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே,உன் வீட்டை ஒரு கழுதை கூட மிதிக்காதே” என மிக எளிமையாக குடியின் தீமைகளை எடுத்து கூறியிருப்பார்.

  மூன்றாவது பாடல்-கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்-” ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் உயிரை சுவைக்கும்-பொய்யில்லை என போதைப் பழக்கத்தின் கேட்டைக் கூறி

  “மயக்கம் என்பது மாத்திரையா-மரணம் போகும் யாத்திரையா

  விளக்கு இருந்தும் இருட்டறையா -விடிந்த பின்னும் நித்திரையா

  வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வயதை தொலைத்து வாழுவதா?

  இந்த உலகம் உன்னை அழைக்கிறது-அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

  ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை-நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை” என போதை பழக்கதிலிருந்து இளைஞர்கள் மீள்வதற்காக அற்புதமாக எழுதியிருப்பார்.

   

  பதிவில் இடம்பெற்ற பாடல்கள்-

  பாடல்:          தைரியமாக சொல் நீ மனிதன் தானா

  படம்:             ஒளிவிளக்கு

  எழுதியவர்:  கவிஞர் வாலி

  இசை :           M.S.விஸ்வநாதன்

  பாடியவர்:    T.M. சௌந்தர்ராஜன்.

  சுட்டி:            http://youtu.be/zwOSls9qlqY

   

  பாடல்:            குடிக்காதே தம்பி குடிக்காதே

  படம்:                நான் குடித்துக்கொண்டே இருப்பேன்

  எழுதியவர்:    கவிஞர்  வாலி.

  இசை:              M.S.விஸ்வநாதன்

  பாடியவர்:     T .M.சௌந்தரராஜன்

  சுட்டி:               கிடைக்கவில்லை.

   

  பாடல்:             ஒரு பண்பாடு இல்லையென்றால்

  படம்:                ராஜா சின்ன ரோஜா

  எழுதியவர்:    கவிஞர் வைரமுத்து

  இசை:               சந்திரபோஸ்

  பாடியவர்:       கே.ஜே.யேசுதாஸ்.

  சுட்டி:                http://youtu.be/2rcTcGv08NM

  நா. ராமச்சந்திரன்

  பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams

   
  • Uma Chelvan 3:19 am on November 11, 2013 Permalink | Reply

   மிகவும் அருமையான போஸ்ட் !!!

   புகழிலும் போதை இல்லையோ.-பிள்ளை
   மழலையில் போதை இல்லையோ
   காதலில் போதை இல்லையோ- நெஞ்சில்
   கருணையில் போதை இல்லையோ.

   நீ நினைக்கும் போதை வரும் நன்மை செய்து பார் ,
   நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லி பாரு !!

   இவ்வ்வளவு விசயங்களில் போதை இருக்கும் பொழுது தனியாக வேறு போதை எதற்கு ??

  • amas32 6:27 pm on November 11, 2013 Permalink | Reply

   போதை பொருட்களை விற்பவர்கள் அதை உட்கொள்ள மாட்டார்கள். அதன் தீமை அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை விற்பதில் வியாபரத் தன்மையே ஓங்கி நிற்கும். மனசாட்சி இடிக்காது. இது உலக நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். கஞ்சா பயிரிட்டு விற்பவன் அதை பயன்படுத்த மாட்டான்.

   ஆனால் நாடு இன்று போதை மயக்கத்தில் பாழாகிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் MGR போன்ற நடிகர்களின் ரசிகர்கள் அவரை தெய்வமாகக் கொண்டாடியதால் அவர் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அவர்அறிவுரையை ஏற்பர். இன்றும் நடிகர்கள் மீது அதே கிரேஸ் உள்ளது. ஆனால் நடிகர்கள் போதிப்பதில்லை.தங்கள் பாட்டைப் பார்த்துக் கொண்டு செல்கின்றனர்.

   அரசாங்கமே குடியை தேசிய பாஸ் டைமாக மாற்றிக் கொண்டிருக்கும்போது சாமான்ய மனிதன் என்ன செய்ய முடியும்.

   கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

   அருமையானப் பதிவு, வாழ்த்துகள் 🙂

  • Raja ram 7:22 pm on November 11, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு.

  • rajinirams 9:56 am on November 12, 2013 Permalink | Reply

   Uma Chelvan amas32 Raja ram தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

  • swaminathan 4:13 pm on March 1, 2015 Permalink | Reply

   nice

 • என். சொக்கன் 9:23 pm on November 10, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள் 

  தாமரை இலை-நீர் நீதானா?
  தனியொரு அன்றில் நீதானா?|
  புயல் தரும் தென்றல் நீதானா?
  புதையல் நீதானா?
   
  பாடல்: கருகரு விழிகளால்
  படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
  பாடலாசிரியர்: தாமரை
  பாடியவர்: கார்த்திக்
   
  தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

  தனியொரு அன்றில் என்றால்?

  இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

  அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்  (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

  கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
  “அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
  ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
  பிரியாதே..விட்டுப்பிரியாதே”
  என்று எழுதியிருக்கிறார்.
  சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
  தமிழ்

  நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.

  பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.

  பார்க்க:

  thamizhg.wordpress.com

  isaipaa.wordpress.com

   
  • rajinirams 10:14 am on November 11, 2013 Permalink | Reply

   சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.

  • amas32 7:18 pm on November 11, 2013 Permalink | Reply

   “அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂

   சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

   நன்றி

   amas32

 • என். சொக்கன் 6:54 pm on November 6, 2013 Permalink | Reply  

  வல் ஆடை, மெல் ஆடை 

  • படம்: ஜீன்ஸ்
  • பாடல்: கொலம்பஸ் கொலம்பஸ்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=LNl44GG7gts

  ரெட்டைக் கால் பூக்கள் கொஞ்சம் பாரு,

  இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு!

  அலை நுரையை அள்ளி அவள் ஆடை செய்யலாகாதா!

  விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா!

  ’ஜீன்ஸ்’ என்கிற ‘வன்’ ஆடையின் பெயரில் ஒரு படம், அதற்குள் அலை நுரையை அள்ளிச் செய்த ‘மென்’ ஆடையைப்பற்றிய ஒரு கற்பனை!

  அலை நுரையை அள்ளி ஆடை செய்தால் எப்படி இருக்கும்? மிக மெல்லியதாக, உடல் வண்ணம் வெளியே தெரியும்படி Transparentடாக இருக்கும்.

  ‘ச்சீ, இந்த ஆடையெல்லாம் நம் ஊருக்குப் பொருந்தாதே’ என்று யோசிக்கிறீர்களா?

  நுரை போன்ற ஆடைகளெல்லாம் நம் ஊரில் எப்போதோ இருந்திருக்கின்றன. பெண்களுக்குமட்டுமல்ல, ஆண்களுக்கும்!

  நம்பமாட்டீர்களா? சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. ஹீரோ சீவகன் தன்னை அலங்கரித்துக்கொள்வதை வர்ணிக்கும் திருத்தக்க தேவர், ‘இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்’ என்கிறார்.

  அதாவது, இனிய நுரை போன்ற ஆடையைத் தன் இடுப்பில் எழுதிவைத்தானாம்… உடுத்தினான் இல்லை, எழுதினான்… அவன் உடம்பில் ஆடையை வரைந்தாற்போல அப்படிச் சிக்கென்று பிடித்துக்கொண்டிருந்ததாம் அந்த ஆடை.

  இப்போது சொல்லுங்கள், லெக்கின்ஸ் எந்த ஊர்க் கலாசாரம்?

  ***

  என். சொக்கன் …

  06 11 2013

  339/365

   
  • amas32 7:29 pm on November 6, 2013 Permalink | Reply

   நான் இந்தப் பாடலை கேட்டபோது கற்பனை செய்தது foam மாதிரி லேசான எடை உடைய ஆடையை. பெண்களுக்குத் தான் தெரியும் கனமான புடைவைகளை அணியும் சிரமம் 🙂 அலை நுரை அவ்வளவாக transparent ஆக இருக்காதே. நுரை கலையும் போது தான் அடி மணல் தெரியும். ஆனாலும் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும் 🙂

   amas32

  • rajinirams 11:22 pm on November 6, 2013 Permalink | Reply

   சூப்பர்.கவிஞர் வைரமுத்து அவர்களின் அழகான கற்பனையை -அலை நுரையை அள்ளி அவள் ஆடல் செய்யலாகாதா- சீவக சிந்தாமணி பாடலுடன் ஒப்பிட்டு அருமையான “ஜீன்ஸ்-லெக்கின்ஸ்” பதிவை தந்திருக்கிறீர்கள்.

 • என். சொக்கன் 10:02 pm on November 4, 2013 Permalink | Reply  

  ”ஓ” போடு 

  • படம்: பார்த்தேன் ரசித்தேன்
  • பாடல்: எனக்கென ஏற்கெனவே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: பரத்வாஜ்
  • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=Y2_9E4M4zWo

  எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ!

  இதயத்தைக் கயிறு கட்டி இழுத்தவள் இவளோ!

  தமிழில் ’ஓ’ என்ற எழுத்து ஒரு பெயர்ச் சொல்லோடு ஒட்டி வந்தால், அது சந்தேகத்தைக் குறிப்பிடும்.

  ‘நான்’ என்றால் உறுதிப்பொருள், ‘நானோ’ என்றால் சந்தேகம்! (”டாடா நானோ” அல்ல!)

  ‘அவன்’ என்றால் உறுதிப்பொருள், ‘அவனோ’ என்றால் சந்தேகம்!

  ஆகவே, இந்தப் பாடலில் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ என்றால், காதலனுக்கு இன்னும் அவள்தான் தன்னுடைய காதலி, பின்னர் தன் மனைவியாகப்போகிறவள் எனும் நம்பிக்கை வரவில்லையோ? அதனால்தான் கொஞ்சம் சந்தேகமாகவே பாடுகிறானோ?

  காதலனுக்குச் சந்தேகம் வரலாம், கவிஞருக்கு வரலாமா? அவள்தான் என்று உறுதியாக அடித்துச் சொல்லவேண்டாமோ?

  வைரமுத்து அதைதான் செய்திருக்கிறார், தண்டியலங்காரத்தில் ‘அதிசய அணி’ என்று குறிப்பிடப்படும் அணியின்கீழ் வருகிற ‘ஐய அதிசயம்’ என்ற வகையில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

  ’ஐய அதிசயம்’ என்றால் ஐயப்படுவதன்மூலம் (சந்தேகப்படுவதன்மூலம்) ஒரு பொருளை உயர்த்திச் சொல்வது. ‘இவளோ’ என்றால், இங்கே ‘இவள்தான்’ என்று அர்த்தம்!

  உதாரணமாக, காதலியைப் பார்த்து ஒருவன், ‘அடியே நீ வெண்ணிலவோ, பூங்கொத்தோ, தேவதையோ, அப்ஸரஸோ, ஹன்ஸிகாவோ, நஸ்ரியாவோ’ என்றெல்லாம் வரிசையாக “ஓ” போட்டால், அதெல்லாம் சந்தேகம் அல்ல, நீதான் வெண்ணிலவு, நீதான் பூங்கொத்து, நீதான் தேவதை என்று உறுதியாகச் சொல்லி அவளை உயர்த்திப் பேசுவதாக அர்த்தம்!

  ஆஹா, இதுவல்லவோ கவிதை!

  ***

  என். சொக்கன் …

  04 11 2013

  337/365

   
  • Kannan 10:45 pm on November 4, 2013 Permalink | Reply

   Super. O Podu

  • rajinirams 11:45 pm on November 4, 2013 Permalink | Reply

   “ஐய அதிசயம்’ பற்றி எடுத்துரைத்த அருமையான பதிவு.-நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற “அழகோ”…குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் “பூங்குழலோ”-மதுரையில் பிறந்த -பாடல் இப்படி ….. நன்றி.

  • amas32 9:18 pm on November 5, 2013 Permalink | Reply

   நீ தான் என் நஸ்ரியாவோ, நயந்தாராவோ என்றால் காதலியிடம் இருந்து அடி தான் கிடைக்கும். காதலி has to be exclusive/special 🙂 நிலவோடு, காப்பியத் தலைவிகளோடு தைரியமாக ஒப்பிடலாம் ஏனென்றால் நிலவு ஒரு அற்புத அழகின் சின்னம், காவியத் தலைவிகளோ இன்று உயிருடன் இல்லை 🙂

   amas32

  • lotusmoonbell 9:20 pm on November 6, 2013 Permalink | Reply

   ஓ ஓ போட்டுவிட்டேன். நாலு வரிக்கு ஜே போடு!

 • mokrish 10:58 pm on November 3, 2013 Permalink | Reply  

  நிலவின் நிறம் 

  • படம்: ஸ்ரீராகவேந்திரா

  • பாடல்: ஆடல் கலையே

  • எழுதியவர்: வாலி

  • இசை: இளையராஜா

  • பாடியவர்: கே ஜே யேசுதாஸ்

  • Link: http://www.youtube.com/watch?v=Tjs3heWyCiU

  சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்

  சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?

  விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா

  பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா

  நிலவின் நிறம்  என்ன என்ற கேட்டால் நம்மில் பலர் வெண்மை என்றே சொல்வோம். வெறும் கண்களால் பார்க்கும்போது நமக்கு நிலவு வெள்ளையாகவே தெரியும். வெண்ணிலா, வெண்மதி என்று நிறம் சேர்த்தே சொல்வது வழக்கம். நவக்கிரக வழிபாட்டிலும் சந்திரனுக்கு வெள்ளைதான் உகந்த நிறம். பால் போலவே வான் மீதிலே என்று நிலவுக்கு கவிஞர்களும் வெள்ளையடிப்பது உண்டு.

  By the light of the silvery moon என்ற பாடல் ஒன்று நிலவு வெள்ளியின் நிறம் என்று சொல்லும். ஆங்கிலத்தில் Blue moon என்றொரு சொற்றொடர் உண்டு. இது நிலவின் நிறம் இல்லை. அபூர்வமாக நடக்கும் நிகழ்வு என்ற பொருளில் சொல்லப்படுவது.

  ஆனால்  நிஜத்தில் நிலவின் நிறம் என்ன? பொதுவாக வானில், உயரத்தில் நிலவு வெள்ளையாகவே தெரியும்.  கூர்ந்து கவனித்தால் சில சாம்பல் நிற கறைகள்  தெரியும். விண்வெளியிலிருந்து எடுத்த படங்களில் நிலவு மங்கிய வெண்மை / சாம்பல் நிறத்தில் இருக்கும். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இதற்கு பார்க்கும் கோணம், atmosphere, ஒளிச்சிதறல் என்று பல காரணங்கள்.  கடற்கரையில் நின்று சந்திரன் உதயமாகும்போது பார்த்தால் நிலவின் நிறம் மஞ்சள். சில நாட்களில் அது ஆரஞ்சு சிவப்பு நிறத்திலும் தெரிவதுண்டு.

  நிறங்கள் பற்றி வைரமுத்து எழுதிய சகியே என்ற பாடலில் நிலவுக்கு என்ன நிறம் சொல்கிறார்? நேரடியாக எதுவுமில்லை. ஆனால்

  அந்தி வானம் அரைக்கும் மஞ்சள்

  அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்

  என்ற வரி சூரியனின் ஒளியில் பூத்த நிலவை குறிக்கிறதோ? வெறும் சாம்பல் நிறம் கவிதைக்கு உதவாது. அதனால் வெள்ளி நிலா, மஞ்சள் நிலா சிவப்பு நிலா என்று கவிஞர்கள் அழகு சேர்ப்பார்கள்

  மோகனகிருஷ்ணன்

  336/365

   
  • rajinirams 12:44 am on November 4, 2013 Permalink | Reply

   வித்தியாசமான நல்ல பதிவு.நீங்கள் சொல்வது போல கவிஞர்களும் தங்கள் கற்பனைக்கேற்ப நிலவின் நிறத்தை எழுதியிருக்குறார்கள்- மஞ்சள் நிலாவிற்கு,கருப்பு நிலா,வெள்ளி நிலவே,வண்ண நிலவே ,நன்றி.

  • Uma Chelvan 2:25 am on November 4, 2013 Permalink | Reply

   நிஜமாகவே “கருப்பு நிலா ” என்று ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?

   மாலை ஒன்று மலரடி விழுந்திட …..
   .பகலில்லே ஒரு நிலவினை கண்டேன்
   அது கருப்பு நிலா

  • amas32 7:53 pm on November 4, 2013 Permalink | Reply

   நிலா வெள்ளையாக தெரிவதற்கு வானம் இரவில் கருமையாக இருப்பதும் ஒரு காரணமே.கருத்த வானத்தில் நிலா ஒரு வட்ட வெள்ளித் தட்டுப் போல நம் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் சொல்வது கூர்ந்து கவனித்தால் சிறிது மஞ்சளாகவும் சாம்பல் பூத்தது போலவும் புலப்படுகிறது.

   என்ன நிறமானாலும் நிலாவின் வண்ணம் மனதை மயக்கும் ஒரு வண்ணம் தான் :-))

   amas32

  • Saba-Thambi 7:39 pm on November 5, 2013 Permalink | Reply

   இன்னொரு பிரபல்யமான பாடல்…
   என் இனிய பொன் நிலாவே

 • என். சொக்கன் 11:17 pm on October 28, 2013 Permalink | Reply  

  அழகின் கதகதப்பு! 

  • படம்: உயிரே
  • பாடல்: தைய தையா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், மால்குடி சுபா
  • Link: http://www.youtube.com/watch?v=pE3ykXZS4zA

  அவள் கண்களோடு இருநூறாண்டு,

  மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

  அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!

  ஐநூறா, ஐந்நூறா, எது சரி?

  வழக்கம்போல், இரண்டுமே சரிதான், எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விடை மாறும்!

  சாலையில் நடந்து செல்கிறீர்கள். கீழே ஏதோ கிடக்கிறது, குனிந்து பார்த்தால், அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். ‘ஐ! நூறு ரூபாய் கிடைத்தது எனக்கு’ என்கிறீர்கள்.

  ஆனால், அதே இடத்தில் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள் கிடைத்தால், ‘ஐநூறு ரூபாய்’ என்று சொல்லக்கூடாது, ‘ஐந்நூறு ரூபாய்’ என்றுதான் சொல்லவேண்டும்!

  ஐந்து + நூறு ஆகியவை இணையும்போது, ’ஐந்து’ என்ற சொல்லின் நிறைவில் உள்ள ‘து’ என்ற எழுத்து நீக்கப்படும், ஆனால் ‘ந்’ என்ற எழுத்து நீக்கப்படாது, இதனைத் தொல்காப்பியம் ‘நான்கும் ஐந்து ஒற்றுமெய் திரியா’ என்று குறிப்பிடுகிறது.

  ஆக, ஐந்(து) + நூறு = ஐந்நூறு.

  ***

  என். சொக்கன் …

  28 10 2013

  330/365

   
  • rajinirams 12:33 pm on October 29, 2013 Permalink | Reply

   ஐ! “ந்”த தகவல் புதுசு.நல்ல பதிவு.

  • amas32 11:22 am on November 2, 2013 Permalink | Reply

   //அவள் கண்களோடு இருநூறாண்டு,

   மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

   அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!//

   200 +300 =500?
   கண்களின் அழகோடு 200 ஆண்டுகள்,
   மூக்கின் அழகோடு 300 ஆண்டுகள்,
   ஆக மொத்தம் 500 ஆண்டுகள்?

   அழகோ அழகு 🙂

   amas32

 • G.Ra ஜிரா 9:47 pm on October 27, 2013 Permalink | Reply  

  உரசிவிட்டேன் சந்தனத்தை! 

  மேகத்த தூது விட்டா
  தெச மாறிப் போகுமோன்னு
  தண்ணிய நான் தூது விட்டேன்
  தண்ணிக்கு இந்தக் கன்னி
  சொல்லி விட்ட சேதியெல்லாம்
  எப்ப வந்து தரப்போற
  எப்ப வந்து தரப்போற

  இசையரசி பி.சுசீலாவின் குரல் தேனாறாய் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாருக்கும் தெரிந்த பாட்டுதான். அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வைரமுத்துவின் வைரவரிகள்.

  மேகம் வானத்தில் மிதந்து போகும். காற்றடித்து திசை மாறிப் போய் விட்டால் அத்தானுக்கு அனுப்பிய சேதியும் திசை மாறிப் போய்விடுமல்லவா! அதுதான் அவளது கவலை. அதனால்தான் மேகத்துக்கு பதிலாக பழகிய வழியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரை தூதாக அனுப்பினாள் அந்தப் பெண்.

  ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் ஒரு யட்சனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. மோகங்களைத் தூதனுப்ப அவன் நம்பியது தாகங்கள் கொண்டு நீர் குடித்த மேகங்களைத்தான்.

  யார் இந்த யட்சன்?

  செல்வத்துக்கெல்லாம் அதிபதி குபேரன். அந்தக் குபேரன் இருப்பது இமயமலையில் உள்ள அளகாபுரி. அந்த அளகாபுரியில் ஒரு ஏரி. அதற்கு மானச ஏரி (மானசரோவர்) என்று பெயர். செல்வத் திருநாட்டின் ஏரி என்பதாலோ என்னவோ… அந்த ஏரியில் பூக்கும் தாமரை மலர்கள் கூட தங்கத் தாமரைகளா இருக்கின்றன. பறவைகளும் பொற்பறவைகளே!

  அந்த ஏரியைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவன் தான் நாம் பார்க்கும் யட்சன். அன்றொரு நாள் அவன் காவல் காத்துக்கொண்டுதான் இருந்தான். இரவு வந்தது. மனதில் உறவின் நினைவு வந்தது. முதலில் உடம்பை விட்டுவிட்டு மனம் மட்டும் மனைவியிடம் சென்றது. பின்னர் மனம் போன வழியிலேயே உடம்பும் போனது.

  அவன் போன நேரம் பார்த்து அந்தப் பக்கம் வந்தன சில யானைகள். ஏரிக்குள் இறங்கி விளையாடின. அந்த விளையாட்டில் தங்கத் தாமரைகள் சிதைந்து போயின. பொற்பறவைகள் பறந்து போயின. அத்தோடு ஏரி சிதைந்த சேதியும் குபேரனுக்குப் பறந்தது.

  அந்த யட்சனை அழைத்தான்.

  “கடமை தவறிய யட்சனே! உன்னால் அல்லவோ ஏரி கலங்கியது. தாமரைகள் அழிந்தன. எதை நினைத்து நீ கடமையை மறந்தாயோ அதைப் பிரிந்து ஓராண்டுகாலம் ராமகிரி காட்டுக்குள் வசிப்பாயாக. இதுவே உனக்குத் தண்டனை”

  அந்த சாபத்தினால் காட்டுக்கு வந்தவனே நாம் முன்னம் சொன்ன யட்சன். அது ஆடி மாதம் வேறு.

  காட்டுக்கு வந்தாலும் வீட்டு நினைப்புதான் அவனுக்கு. மெல்லியலாள் இன்சொல்லாள் தேனிதழாள் நினைப்பு அவனை வாட்டி வதைத்தது. அந்த வேதனையில் அவன் உள்ளத்தில் பிறந்த ஏக்கங்களையெல்லாம் மனைவிக்குச் சொல்ல விரும்பினான்.

  யாரிடம் சொல்லி அனுப்புவது. அந்தரங்கமான ஏக்கங்கள் அல்லவா? ஜிமெயிலோ மொபைல் போனோ இல்லாத காலம் அது. மனிதர்களிடம் சொல்லியனுப்ப முடியாது. அப்போது அவன் கண்ணில் பட்டவைதான் மேகங்கள்.

  அவன் இருந்த அதே மனநிலையில்தான் அவன் மனைவியும் இருந்தாள். அந்தப் பெண்ணின் மனநிலையை நினைக்கும் போது எனக்கு கவிஞர் தாமரை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

  தூது வருமா தூது வருமா
  காற்றில் வருமா கரைந்து விடுமா
  கனவில் வருமா கலைந்து விடுமா
  …………….
  கருப்பிலே உடைகள் அணிந்தேன்
  இருட்டிலே காத்துக்கிடந்தேன்
  யட்சன் போலே நீயும் வந்தாய்
  ………………
  மறுபடி வருவாய் என்று துடித்தேன்
  நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
  பிரிய மனமில்லை
  இன்னும் ஒரு முறை வா…..

  தன்னுடைய மனைவியின் ஏக்கங்களைப் புரிந்த கணவனால்தான் தன்னுடைய ஏக்கங்களை வெளிக்காட்ட முடியும். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யட்சனும் அந்த வகைதான். காட்டில் இருந்த போது அந்த வழியாக வந்த மேகங்களை அழைத்து தன் ஏக்கங்களை தூது விடுகிறான். ஒருவேளை அந்த மேகங்கள் வழி மாறிப் போய்விட்டால்?

  அதற்காகத்தான் அவன் போகும் வழியையும்… போவது சரியான வழிதானா என்பதை உறுதி செய்யும் அடையாளங்களையும் சொல்லியே மேகங்களை தூதனுப்புகிறான்.

  இதுதான் காளிதாசர் எழுதிய மேகதூதத்தின் கதை.

  ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் மிக அழகானவை. ஒரு சிறு பகுதியை உங்களுக்காக ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியோடு தமிழாக்கம் செய்து தருகிறேன்.

  “மேகங்களே, கடம்ப மலர்கள் பூத்த நிச்ச மலையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வடக்கே செல்க. அங்கே நாகநதி வரும். ஓட்டத்தில் அது வேகநதி. அங்கிருக்கும் வெயிலுக்கு அது தாகநதி.

  அந்த நதிக்கரையிலே, அல்லி மலர்களைக் கிள்ளி மெல்லிய செவித்துளையில் தள்ளி கம்மலாக அணிந்து கொண்டு துளித்துளியாய் வியர்வை வழிய துள்ளித் துள்ளி ஓடுகிறாள் பூ விற்கும் இளம்பெண். நீ போகும் வழியில் அவளுக்கும் சற்று நிழல் தந்து களைப்பை நீக்குவாயாக!”

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, மலேசியா வாசுதேவன்
  இசை – வி.எஸ்.நரசிம்மன்
  படம் – அச்சமில்லை அச்சமில்லை
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=w_obVXcywTo

  பாடல் – தூது வருமா தூது வருமா
  வரிகள் – கவிஞர் தாமரை
  பாடியவர் – சுனிதா சாரதி
  இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
  படம் – காக்க காக்க
  பாடலின் சுட்டி – http://youtu.be/BFv9wo4s4jw

  அன்புடன்,
  ஜிரா

  329/365

   
  • Uma Chelvan 10:28 pm on October 27, 2013 Permalink | Reply

   நீரும் மாறும் நிலமும் மாறும்
   அறிவோம் கண்ணா !!!!
   மாறும் உலகில் மாறா இளமை
   அடைவோம் கண்ணா !!!!

   மேகத்தையும் நீரையும் போல எண்ணங்களையும் தூது விடலாம். In fact, thoughts travel faster then clouds and water !!!!!

   ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே ……ஓடோடி சென்று காதல் பெண்ணின் உறவை சொல்லுங்களே !

  • rajinirams 4:41 pm on October 28, 2013 Permalink | Reply

   யட்சனின் கதையை விளக்கி காளிதாசனின் மேகதூதத்தோடு கூடிய அருமையான “தூது”பதிவு. கிழக்கே போகும் ரயிலின் தூது போ ரயிலே பாடலும் உயிருள்ள வரை உஷாவின் வைகை கரை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனை தேடுதென்று காற்றே பூங்காற்றே அவள் காதோரம் போய் சொல்லு வரிகளும் தூது சொல்ல ஒரு தோழி பாடலும் நினைவிற்கு வருகின்றன.நன்றி.

  • Saba-Thambi 12:56 pm on October 29, 2013 Permalink | Reply

   உங்கள் பதிவு வைரமுத் து எழுதிய ஓர் பாடலையும் நினைவுக்கு தருகிறது.
   இங்கு முகவரியை தொலைத்து விட்ட மேகமாக……

   முகிலினங்கள் அலைகிறதே
   முகவரிகள் தொலைந்தனவோ
   முகவரிகள் தவறியதால்
   அழுதிடுமோ அது மழையோ

   @2.5 நிமிடம்

   சுட்டி:

 • G.Ra ஜிரா 1:36 pm on October 24, 2013 Permalink | Reply  

  செங்காத்தில் ஒரு தத்தை 

  நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது கருத்தம்மா படத்திலிருந்து “காடு பொட்டக் காடு செங்காத்து வீசும் காடு” என்ற பாட்டு ஓடியது.

  கவிஞர் வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குனர் பாரதிராஜாவும் பாடகர் மலேசியா வாசுதேவனும் டி.கே.கலாவும் இணைந்து பாடிய அற்புதமான பாடல் அது.

  மழை கண்டு அறியாத கரிசல் காட்டின் நிலையைச் சொல்லும் பாடல் அது. அதில் கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது சிந்தனை ஓடியது.

  மாடு தத்த மாடு
  அது ஓடும் ரொம்ப தூரம்
  வாழ்க்க தத்த வாழ்க்க
  இது போகும் ரொம்ப காலம்

  ஏழ்மையைச் சொல்லும் சோக வரிகளானாலும் வளமையும் அழகும் நிறைந்த கருத்துள்ள வரிகள்.

  மாடு என்றாலே விறுவிறுப்பும் ஓட்டமும் தான். ஆனால் இங்கு மாட்டையே தத்த மாடு என்கிறார் கவிஞர்.

  வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள். அந்த மாடுதான் தத்தித் தத்தி கரிசல் மக்களின் உழவுக்குப் பயன்படுகிறது. அப்படியான மாட்டைப் பயன்படுத்துகிறவர்கள் வாழ்க்கையும் தத்தித் தத்தித்தான் போகிறது. அதுதான் “வாழ்க்க தத்த வாழ்க்க”.

  தத்தை என்ற சொல் கிளியைக் குறிப்பது. தத்தித் தத்தி நடப்பதால் அதற்குத் தத்தை என்று பெயர்.

  செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
  நூல் – தொல்காப்பியம்
  அதிகாரம் – பொருளதிகாரம்
  இயல் – மரபியல்
  எழுதியவர் – தொல்காப்பியர்

  ஆகா கிளி என்ற சொல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அதை இன்றும் சிதையாமல் பயன்படுத்தி வருகிறோம். என்ன… பலர் வாயில் கிளி என்பது கிலியாக வருகிறது.

  செக்கச் சிவந்த வாயினை உடைய கிளிக்கு தத்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.

  கிளியைச் சொன்னால் அடுத்து தொல்காப்பியர் எதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும்? ஆம். பூனையைத்தான். அதனால்தானோ என்னவோ நாமும் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதாக பழமொழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

  செவ்வாய்க் கிளியைத் தத்தை என்றலும்
  வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்

  வெருகு என்பதும் பூனையையே குறிக்கும். பூசை என்றும் அதற்குப் பெயர் உண்டு. மலையாளத்தின் இன்றும் தத்தம்மே என்பது கிளியையும் பூச்சா என்பது பூனையையும் குறிக்கும்.

  தத்தம்மே பூச்சா பூச்சா” என்று மலையாளத் திரைப்படப் பாடலே உண்டு.

  ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியின் கதாநாயகன் சீவகன். அவனுக்கு பல மனைவியர். அவர்களில் ஒருத்திக்கு தத்தை என்றே பெயராம். அவளுக்குத் தத்தை என்று பெயர் இருப்பதால் தான் அவள் முதல் மனைவியாக பட்டத்தரசியாக இருந்தாள் என்று திருத்தக்கதேவர் சொல்கிறார்.

  இன்னொரு கிளி தகவல். எல்லாக் கடவுள்களுக்கும் வாகனம் உண்டல்லவா. அதுபோல கிளியும் ஒரு கடவுளுக்கு வாகனம். எந்தக் கடவுளுக்கு என்றா கேட்கின்றீர்கள்? அன்றாடம் மக்களையெல்லாம் பாடாப் படுத்தும் மன்மதக் கடவுளின் வாகனம் தான் கிளி.

  பாடல் – காடு பொட்டக் காடு
  வரிகள் – கவிஞர் வைரமுத்து
  பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன், டி.கே.கலா, பாரதிராஜா
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  படம் – கருத்தம்மா
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=4T0aPXIl3tM

  அன்புடன்,
  ஜிரா

  326/365

   
  • Uma Chelvan 6:23 pm on October 24, 2013 Permalink | Reply

   தத்தை என்பது இங்கே இந்த பெண்ணா அல்லது கிளியா ??

  • Madhav 7:36 pm on October 24, 2013 Permalink | Reply

   //வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள்//
   Any proof for this ? entha oorla ippadi solranga?

  • Madhav 3:43 pm on October 25, 2013 Permalink | Reply

   //வேகம் குறைந்த மாட்டைத்தான் தத்த மாடு என்பார்கள் //
   Please , I need answer for this , I haven’t heard such word like “thaththa” , so that i am asking in which part of tamilnadu people using that word. Please just clear my doubt , its ok if u don’t publish this comment.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel