Updates from August, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 11:36 pm on August 19, 2013 Permalink | Reply  

  விளக்கு வைத்தேன் 

  • படம்: திருமலை தென்குமரி
  • பாடல்: திருப்பதி மலை வாழும்
  • எழுதியவர்: தென்காஞ்சி பாரதிசாமி
  • இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
  • பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=MR0l_ja1qUA

  அன்பெனும் அகல் விளக்கை ஏற்றிவைத்தேன், அதில்

  ஆசையென்னும் நெய்யை ஊற்றிவைத்தேன்,

  என் மனம் உருகிடவே, பாடி வந்தேன், உன்

  ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்!

  பிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் பெயர் தென்காஞ்சி பாரதிசாமி என்று நேற்றுதான் தெரிந்துகொண்டேன். எளிய மொழியில் மிகவும் அழகான பக்திப் பாடல்!

  குறிப்பாக, இந்த நான்கு வரிகள், ஆழ்வாரின் இன்பத் தமிழ்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயலில் பூதத்தாழ்வார் எழுதிய முதல் வெண்பா. அதில், திருமாலுக்கு இப்படி ஒரு விளக்கை ஏற்றிவைக்கிறார்:

  அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,

  இன்பு உருகு சிந்தை இடுதிரியா, நன்புருகி

  ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு

  ஞானத் தமிழ் புரிந்த நான்.

  நாராயணா,

  என்னுடைய அன்புதான் விளக்கு,

  நான் உன்மேல் கொண்டடிருக்கிறஆர்வம்தான் நெய்,

  எந்நேரமும் உன்னையே நினைக்கின்ற அந்தச் சிந்தனைதான் திரி…

  இவற்றைக் கொண்டு ஞானத் தமிழின் துணையால் நான் உனக்கு ஒரு விளக்கு ஏற்றிவைத்தேன்!

  எளிமையான பாடல்தான். இல்லையா?

  இப்போது சினிமாப் பாட்டு வரிகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். அழகான பாசுரத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி எத்துணை பேர்க்குக் கொண்டு சேர்த்துவிட்டது இந்தப் பாடல்!

  ***

  என். சொக்கன் …

  19 08 2013

  261/365

   
  • rajinirams 1:03 am on August 20, 2013 Permalink | Reply

   அடடா-இந்த பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகமோ பூவை செங்குட்டுவனோ எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தேன்-பெரும்பாலும் எல்லோருமே அறிந்த இந்த அற்புதமான பாடலை எழுதியவர் தென் காஞ்சி பாரதிசாமி என்பதை “வெளிச்சத்திற்கு” கொண்டு வந்ததற்காகவே உங்களை பாராட்ட வேண்டும். நன்றி. திருமலை திருமாலை வாழ்த்தி வணங்க இது நல்ல தமிழ் வார்த்தை பூக்களை கொண்ட பக்திமாலை.

 • என். சொக்கன் 11:41 am on April 1, 2013 Permalink | Reply  

  கண்ணாலே பேசிப் பேசி… 

  • படம்: சூரியன்
  • பாடல்: பதினெட்டு வயது
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=W6Kgy-z9QHA

  கங்கை போலே, காவிரி போலே,

  ஆசைகள் ஊறாதா!

  சின்னப் பொண்ணு, செவ்வரிக் கண்ணு,

  ஜாடையில் கூறாதா!

  ’செவ்வரி’க் கண் என்றால், சம்பந்தப்பட்ட நபருடைய விழியின் வெள்ளைப் பகுதியில் சிவந்த வரிகள் ஓடுகின்றன என்று அர்த்தம். அது ஒரு தனி அழகாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

  உதாரணமாக மகாகவி பாரதியாரைப்பற்றி வ. ரா. வர்ணித்துக் கூறும் வரிகள், ’பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜொலிப்பனபோலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெவிட்டாது.’

  குறுந்தொகையில் ஒரு பாடல், ‘இவள் அரி மதர் மழைக்கண்’ என்று வர்ணிக்கும். இதன் பொருள், இந்தப் பெண்ணின் செவ்வரி படர்ந்த, மதர்ப்பான, குளிர்ச்சியான கண்கள்.

  கடவுளுக்குக்கூட செவ்வரி படர்ந்த கண்கள் இருப்பது தனி அழகு. பொய்கையாழ்வார் திருமாலைப்பற்றிப் பேசும்போது, ‘திறம்பாதென் நெஞ்சமே, செங்கண்மால் கண்டாய்’ என்கிறார். இங்கே ‘செங்கண்’ என்பது, கோபத்தாலோ ராத்திரி சரியாகத் தூங்காததாலோ சிவந்த கண்கள் அல்ல, செவ்வரி ஓடியதால் இயற்கையாகச் சிவந்த கண்கள் என்று கொள்வதே சிறப்பு.

  அப்படிப்பட்ட செவ்வரிகளைக் கொண்ட இந்தப் பெண்ணின் கண் ஜாடை, தன்னுடைய ஆசைகளை மறைக்காமல் சொல்லிவிடும், டேய் ஆடவா, அதைப் புரிந்துகொண்டு இவளோடு ஆட வா என்கிறார் வாலி.

  கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு பாடலை ’கண்ணதாசன் திரைப் பாடல்கள்’ தொகுப்பில் நேற்று வாசித்தேன், ‘பெண்ணுக்கு ரகசியம் ஏது? தலைப் பின்னலும் பேசிடும்போது!’

  பொதுவாகப் பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள், அவர்கள் வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும், தங்களுடைய தலைப் பின்னலைத் தூக்கிப் போடுகிற விதத்தில்கூட விஷயம் வெளிவந்துவிடும், எதிரில் உள்ளவருக்கு அதைப் ‘படிக்க’த் தெரிந்திருக்கவேண்டும்.

  ஆக, Body Language, Face Languageபோல், பெண்கள் மொழி Eye Language, Hair Language என்று பலவிதமாக நீளும். படித்துப் புரிந்துகொள்வது ஆண்களின் சமர்த்து!

  ***

  என். சொக்கன் …

  01 04 2013

  121/365

   
  • amas32 10:21 pm on April 1, 2013 Permalink | Reply

   பெண்ணுக்கு பேசும் மொழிகள் பல. கண்ணில் ஓடும் சிவப்பு ரேகைகளில் இருந்து தலையை அடிக்கடி கைகளால் கோதி கொள்வது வரை சங்கேத மொழிகள் பல. அப்படியிருந்தும் ஆணுக்குப் புரிவதில்லையே! எதுக்கோ கோபமாக இருக்கிறாய் என்னவென்று சொல்லிவிடு என்பான் காதலி/மனைவியிடம். என்னவேண்டுமோ நேரடியாகக் கேள், சுற்றி வளைத்துப் பேசாதே எனக்குப் புரியாது என்பான்.

   நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதெல்லாம் காதலில் மூழ்கியிருக்கும் போது பேசப்படுவது 🙂 நாம் பேச வேண்டியதை வாயைத் திறந்து பேசுவதே போகும் ஊருக்கு வழியைக் காட்டும்.

   amas32

 • என். சொக்கன் 9:26 am on February 24, 2013 Permalink | Reply  

  24 காரட் 

  • படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
  • பாடல்: கிண்ணத்தில் தேன் வடித்து
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=472O53yVXvw

  ஆணிப்பொன் கட்டில் உண்டு, கட்டில்மேல் மெத்தை உண்டு,

  மெத்தைமேல் வித்தை உண்டு, வித்தைக்கோர் தத்தை உண்டு,

  தத்தைக்கோர் முத்தம் உண்டு, முத்தங்கள் நித்தம் உண்டு!

  வாலிக்கு ‘ஆணிப்பொன்’ என்ற பதம் மிகவும் பிடித்ததாக இருக்கவேண்டும். எம்ஜிஆருக்கு ‘அழகிய தமிழ் மகள் இவள்’ என்று எழுதும்போது, தொகையறாவை ‘ஆணிப்பொன் தேர் கொண்டு மாணிக்கச் சிலையென்று வந்தாய்’ என்று தொடங்குகிறார். இங்கே கமலஹாசனுக்கு ஆணிப்பொன்னால் கட்டில் போடுகிறார், அப்புறம் ரஜினிகாந்த் குரலில் ‘ஆணிப்பொன்னு, ஐயர் ஆத்துப்பொண்ணு’ என்று நாயகியை வர்ணிக்கிறார்.

  காதல்மட்டுமல்ல, ‘பூங்காவியம் பேசும் ஓவியம்’ என்று தாய், மகள் உறவைச் சொல்ல வரும்போதும்கூட, ‘ஆணிப்பொன் தேரோ’ என்றுதான் நெகிழ்கிறார் வாலி.

  ஆரம்பத்தில் நான் இதை ‘ஆனிப்பொன்’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் ஒரு நண்பர்தான் ‘ஆணிப்பொன்’ என்று திருத்தினார்.

  அதென்ன ‘ஆணிப்பொன்’?

  எந்தக் கலப்படமும் இல்லாத, சுத்தமான 24 காரட் தங்கத்தைதான் ‘ஆணிப்பொன்’ என்று அழைக்கிறோம்.

  பொதுவாகவே தமிழில் ‘ஆணி’ என்ற வார்த்தை உயர்வைக் குறிக்கிறது. ‘ஆணிமுத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

  இன்றைக்கு நம்மிடம் ‘ஆணி’ என்று யாராவது சொன்னால், சுத்தியலால் அடித்துப் பிணைக்கும் ஓர் இரும்புத் துண்டுதான் மனத்தில் தோன்றும். ஆனால், நம்மையும் அறியாமல் இந்த ‘ஆணி’யை, உயர்வு என்ற பொருளிலும் நாம் பயன்படுத்திவருகிறோம் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்.

  ‘ஆணித்தரமாகப் பேசினான்’ என்று சொல்கிறோம் அல்லவா? எந்தப் பிழையும் இல்லாமல், குழப்பம் இல்லாமல், தடுமாற்றம் இல்லாமல், தெளிவாகவும் அழுத்தமாகவும் அடித்துப் பேசினான் என்று நீட்டி முழக்காமல் ‘ஆணி’த்தரம் என்று ஒரே வார்த்தையில் அதைச் சொல்லிவிடுகிறது தமிழ்.

  இந்தப் பாடலில் வாலி சொல்லும் ‘ஆணிப்பொன் கட்டில்’ என்பது, ஆழ்வார் பாடலின் சாயல்தான். பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்கு ஆணிப்பொன்னால் தொட்டில் போட்டார்:

  மாணிக்கம் கட்டி, வைரம் இடை கட்டி,

  ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்,

  பேணி உனக்கு பிரம்மன் விடுதந்தான்,

  மாணிக் குறளனே, தாலேலோ! வையம் அளந்தானே, தாலேலோ!

  ரொம்ப சீரியஸாகப் பேசிவிட்டோம், கொஞ்சம் ஜாலியாக ஒரு விளக்கம் பார்ப்போமா?

  இப்போதெல்லாம் அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்பதை வேடிக்கையாக ‘ஆணி பிடுங்குகிறோம்’ என்று சொல்வார்கள். அது இழிவான கேலி வார்த்தை என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

  ஆனால் அங்கே இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால், உயர்வான வேலையைச் செய்கிறோம் என்கிற அர்த்தம் வந்துவிடுகிறது 😉

  ***

  என். சொக்கன் …

  24 02 2013

  85/365

   
  • rajinirams 9:40 am on February 24, 2013 Permalink | Reply

   “ஆணி”த்தரமான விளக்கம். சூப்பர்.நன்றி.

  • amas32 (@amas32) 10:27 am on February 24, 2013 Permalink | Reply

   ஆணிப்பொன் – இன்று நான் கற்றுக் கொண்ட புதுப் பதம். சொக்கத் தங்கம் தான் ஆணிப்பொன்!

   amas32

  • penathal suresh (@penathal) 10:47 am on February 24, 2013 Permalink | Reply

   அப்ப, உயர்வான விஷயத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு, சாதா மேட்டரைச் செய்கிறோம் என்று சொல்கிறீரா?

   நோ.. நான் ஆணி பிடுங்குவதில்லை. அமைக்கிறேன்!

   • என். சொக்கன் 1:28 pm on February 24, 2013 Permalink | Reply

    கடலை பிடுங்குதல் என்றால் உங்க ஊரில் என்ன அர்த்தம்ய்யா??? :))

  • வடுவூர் குமார் 11:01 am on February 24, 2013 Permalink | Reply

   ஆணி – இப்படிப்பட்ட விளக்கம் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

  • Arun Rajendran 11:33 am on February 24, 2013 Permalink | Reply

   அருமை…மிக்க நன்றி சொக்கன் சார்…

  • Mohanakrishnan 11:41 am on February 24, 2013 Permalink | Reply

   மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு என்ற பாடலிலும் ‘ஆணிப்பொன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டாடிட ஆனியிலே முகூர்த்த நாள் என்று கண்ணதாசன் வரிகள்

  • Eswar (@w0ven) 2:55 pm on February 25, 2013 Permalink | Reply

   //இரும்பு ஆணிக்குப் பதில் இந்த 24 காரட் ஆணியைப் பொருத்தினால்// பலே

  • elavasam 5:40 pm on February 25, 2013 Permalink | Reply

   வேற ஒரு ஆணி பத்தி நான் முன்னாடி எழுதினது.

   http://elavasam.blogspot.com/2010/12/blog-post.html

  • GiRa ஜிரா 9:16 am on February 26, 2013 Permalink | Reply

   ஆணிமுத்து, ஆணிப்பொன், ஆணித்தரம்… ஆணி அட்டகாசம் 🙂

 • G.Ra ஜிரா 11:36 am on January 1, 2013 Permalink | Reply
  Tags: கண்ணாடி, சிலப்பதிகாரம், , நிரஞ்சன் பாரதி   

  கண்ணாடி 

  நம்முடைய நண்பர் கவிஞர் நிரஞ்சன் பாரதி @poetniranjan எழுதிய ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மங்காத்தா படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் வெளிவந்த பாடல் அது.

  கண்ணாடி நீ கண் ஜாடை நான்
  என் வீடு நீ உன் ஜன்னல் நான்
  என் தேடல் நீ உன் தேவை நான்
  என் பாடல் நீ உன் வார்த்தை நான்
  என் பாதி நீ உன் பாதி நான்
  என் ஜீவன் நீ உன் தேகம் நான்
  என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
  என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Rj33vbsHtKU

  அழகான பாடல். புதிதாகத் திருமணமானவர்களுக்கான பாட்டு.

  இந்தப் பாட்டைக் கேட்கும் போது “கண்ணாடி” என்ற சொல் எந்தன் சிந்தனையைத் தூண்டியது. எத்தனையெத்தனை கண்ணாடி பாடல்கள். கண்ணாடி தொடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.

  இந்தக் கண்ணாடி தமிழர்கள் பயன்பாட்டில் முன்பு இருந்ததா என்று முதல் கேள்வி.

  இருந்தது என்று திருப்பாவை படிக்கையில் புரிந்தது. “உக்கமும் தட்டொளியும் தந்து” என்று ஆண்டாள் பாடியது நினைவுக்கு வந்தது. இந்த வரியில் தட்டொளி என்பது கண்ணாடியைக் குறிக்கும்.

  தட்டொளி என்பதுதான் கண்ணாடிக்கு உரிய பழைய தமிழ்ப் பெயரா என்ற ஐயத்தோடு இலக்கியங்களைத் தேடிய போது அரிய விடைகள் கிடைத்தன.

  கண்ணாடி என்ற சொல் ஐம்பெருங்காப்பியங்களிலேயே இருந்திருக்கிறது. அப்படியிருக்க பின்னாளில் ஆண்டாள் தட்டொளி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினாள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் கண்ணாடி பற்றியும் தேடிப்பார்க்க வேண்டும்.

  சரி.. ஐம்பெருங்காப்பியங்களுக்கு வருவோம். அதிலும் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு வருவோம்.

  முகம் பார்க்கும் கண்ணாடியை ஆடி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

  கோப்பெருந்தேவிக்கு அன்றைய நாள் நல்ல நாளாகவே இல்லை. கண்ட கண்ட கனவுகள். ஒன்றாவது நன்றாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவது போல ஒரு குறுகுறுப்பு. அந்த உணர்வுகளைக் கணவனோடு பகிர்ந்து கொள்ள வருகிறாள். அப்போது அவளுடைய பணியாளர்கள் அவளுக்குத் தேவையான பொருட்களைக் கையோடு கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகையின் மேக்கப் உதவியாளர்கள் போல.

  ஆடியேந்தினர் கலனேந்தினர்
  அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
  கோடியேந்தினர் பட்டேந்தினர்
  கொழுந்திரையலின் செப்பேந்தினர்
  வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
  மான்மதத்தின் சாந்தேந்தினர்
  கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
  கவரியேந்தினர் தூபமேந்தினர்

  ஆடி ஏந்தினர் – கண்ணாடி ஏந்தி வந்தார்கள்
  கலம் ஏந்தினர் – அணிகலன்களை ஏந்தி வந்தார்கள்
  அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் – நல்ல அணிமணி அணிந்த ஊழியப் பெண்கள்
  கோடி ஏந்தினர் – புதுத்துணிகளை ஏந்தி வந்தார்கள்
  பட்டு ஏந்தினர் – பட்டுத் துணிகளை ஏந்தி வந்தார்கள்
  கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – நல்ல கொழும் வெற்றிலைப் பெட்டியை ஏந்தினர்
  வண்ணம் ஏந்தினர் – வண்ண வண்ணப் பொடிகளையும்
  சுண்ணம் ஏந்தினர் – வெண்ணிறச் சுண்ணத்தைப் பூசிக் கொள்வதற்கும் ஏந்தி வந்தார்கள்

  அடேங்கப்பா என்னவொரு பட்டியல். அரசியோடு எப்பவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்திருக்கும் போல.

  ஏந்திய பொருட்களில் முதற் பொருளாகச் சொல்லப் படுவதே ஆடிதான். அடிக்கடி முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்கிறவள் போல கோப்பெருந்தேவி.

  சரி. கண்ணாடி(Mirror) என்பது முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. Glass என்ற பொருளிலும் வருமே. ஆம். வருகிறது. சீவக சிந்தாமணி காட்டுகிறது அதையும். அந்தப் பாடலில் திருத்தக்க தேவர் சொற்சிலம்பமே ஆடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. எத்தனை கண்ணாடி வருகிறதென்று பாருங்கள்.

  கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
  கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
  கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
  கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்

  ரொம்பவும் விளக்காமல் நேரடியாகப் பொருள் கொடுக்கிறேன். படித்து ரசியுங்கள்.

  கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
  கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றிக்
  கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்கண்
  (கண்) ஆடு யானையவர் கை தொழச் சென்று புக்கான்

  கண்ணாடி போன்ற மார்புடைய சீவகன் தன்னுடைய சிவந்து நீண்ட கண்களால் ஆடி (பார்வையிட்டு) போரிட்டு வென்ற போர்க்களத்தைக் கண்ட பின்னர், போர் முடிந்த பின் செய்ய வேண்டிய நியமங்களை முடித்து விட்டு, கள் நாடி வந்து வண்டுகள் பருகும் மணமிகுந்த மாலைகள் நிறைந்த பழம் பெருமை மிக்க ஊருக்குள், வெற்றியானை கொண்டோரெல்லாம் கை தொழும் வகையில் புகுந்தான்.

  அதாவது வெற்றி பெற்ற சீவகன் தான் வென்ற ஊருக்குள் நுழைந்ததை நான்கு கண்ணாடிகளை வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார் திருத்தக்க தேவர்.

  இளங்கோவும் திருத்தக்க தேவரும் பின்னாளில் ஆண்டாளும் தொடர்ந்த பாரம்பரியத்தை பாரதியின் வாரிசான கவிஞர் நிரஞ்சன் பாரதியும் தொடர்வதுதான் சிறப்பு.

  அன்புடன்,
  ஜிரா

  031/365

   
  • Rie 12:36 pm on January 1, 2013 Permalink | Reply

   CSS நீ, HTML நான் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வாசகம் பார்த்தேன்.

   • Niranjan 1:47 pm on January 1, 2013 Permalink | Reply

    என் பாடலைப் பற்றி இந்த வலைப்பூவில் எழுதிய ஜீரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்ணாடி பற்றி எத்தனை தகவல்கள். ஆஹா !! படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டே இருந்தது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel