Updates from December, 2012 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 12:12 pm on December 27, 2012 Permalink | Reply  

  இறைவன் இருக்கின்றானா? 

  இறைவன் இருக்கின்றானா என்பது மிகவும் பழைய கேள்வி.  ஆத்திக நாத்திக நண்பர்கள் காலம் காலமாக செய்யும் முடிவில்லா விவாதம். சமீபத்தில் கமலஹாசன் தசாவதாரம் படத்தில் சொன்ன ‘நான் எங்கே இல்லன்னு சொன்னேன், இருந்தா  நல்ல இருக்கும்னுதானே சொன்னேன்’ என்ற வசனம் சுவாரஸ்யமானது. ‘Thank God, I am an  Atheist’ போன்ற இந்த  unresolved conflict விவாதத்திற்கு அழகு சேர்க்கிறது.

  தமிழகத்தில் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்ற வரிகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு கடவுள் மறுப்பு அரசியல் கட்சி வளர்வதற்கு அடித்தளமாய் அமைந்த பிரபல வாசகம். தமிழ் திரைப்பாடல்களில் இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா? இறைவனும் கடவுளும் ஆண்டவனும் தெய்வமும் சாமியும் எத்தனையோ பாடல்களின் கருப்பொருளாய் வந்திருக்கும்போது நிச்சயம் விடை கிடைக்கும்.

  முதலில் கண்ணதாசன்

  இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் – அவன்

   இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான்?
  நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
  நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை (அவன் பித்தனா)

  என்று விவாதத்தை ஆரம்பிக்கிறார். மற்றொரு பாடலில் முதல் கட்ட விடை கண்டு கொள்கிறார்

  கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா

    காற்றில் தவழுகின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா (ஆனந்த ஜோதி)

  இது இறைவன் கண்ணுக்கு தெரிய வேண்டியதில்லை என்று உணர்ந்தது போல் வரிகள். இப்போது இறைவன் இருக்கின்றானா என்பது கேள்வியில்லை. எங்கே என்ற கேள்வி மட்டும் இன்னும் இருக்கிறது. தொடர்ந்த தேடலில் எங்கே என்றும் அறிந்து சொல்கிறார்.

  தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

     தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே
     எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு

  இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு (சரஸ்வதி சபதம்)

  வாலியும் இந்த தேடலில் சளைக்கவில்லை. இதயத்தை திற இறைவன் வரட்டும் என்று சொல்கிறார்

  மனம் என்னும் கோவில் திறக்கின்ற நேரம்

  அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் (சந்திரோதயம்)

  தினசரி வாழ்க்கையில் நாம் வாழும் முறையில் இறைவனை காண்பதே இனிது என்பது வாலியின் வாதம். கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கிறார். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று சட்டென்று அடையாளம் கண்ட அவர் கோணத்தில் பாசமுள்ள பார்வையும் கருணையுள்ள  நெஞ்சும் இறைவன் வாழும் இடம். இயற்கையின்  பூவிரியும் சோலை, பூங்குயிலின் தேன்குரல், குளிர் மேகம், கொடி விளையும் கனிகள் எல்லாமே   தெய்வம் வாழும் வீடுதான்.

  முடிவாக

  பல நூல் படித்து நீ அறியும் கல்வி

  பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்

  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் (பாபு)

  எவ்வளவு தெளிவான பார்வை. நயமான வரிகள். கல்வி கற்று நல்ல நிலைக்கு வந்து, பொது நலத்திற்கு செல்வம் வழங்கி, அடுத்தவர் உயர்வில் இன்பம் காண்பவர் வாழ்க்கைதான் சொர்க்கம் போன்றது. அந்த நிலைதான் தெய்வம் என்றால் யார் மறுப்பு சொல்வார்?

  மோகன கிருஷ்ணன்

  026/365

   
  • Niranjan 2:49 pm on December 27, 2012 Permalink | Reply

   Very well explained 🙂 🙂

  • padma 6:21 pm on December 27, 2012 Permalink | Reply

   தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான், உண்டென்றால் அவன் உண்டு இல்லை என்றால் அவன் இல்லை என்றும் தொடரும் விவாதம்.

   பாபு திரைப்படபாடல், இதோ எந்தன் தெய்வம் பாடல் எழுதியது கண்ணதாசநன்தானே.

 • G.Ra ஜிரா 10:12 am on December 13, 2012 Permalink | Reply
  Tags: , , , காளமேகம்,   

  குடத்தில் கங்கை 

  நமக்குத் தெரிஞ்ச ரெண்டு பேரு..
  அதுவும் நமக்குப் பிடிச்ச ரெண்டு பேரு..
  ரொம்ப மதிக்கும் ரெண்டு பேரு…
  அந்த ரெண்டு பேருக்குள்ள ஒரு கருத்து வேறுபாடுன்னா நாம யாரப் போய் கேக்குறது?

  அதான் இந்தப் பஞ்சாயத்த ஒங்க கிட்ட கொண்டு வந்துட்டேன். எவ்வளவு செலவானாலும் நீங்கதான் பைசல் பண்ணனும்.

  என்னது? ரெண்டு பேரும் நேர்ல வரனுமா? அது முடியாது. ரெண்டு பேரும் இப்ப இல்ல. அதுலயும் ஒருத்தரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்தவரு.

  விவரத்தைச் சொல்றேன். நீங்களே படிச்சு சிந்திச்சு நிதானமா ஒங்க கருத்தைச் சொல்லுங்க.

  காளமேகம்னு ஒரு புலவர்தான் வாதி. இவரு ஆகும்னு சொல்றாரு. கண்ணதாசன்னு ஒரு கவிஞர் பிரதிவாதி. இவரு ஆகாதுன்னு சொல்றாரு. எனக்கென்னவோ ரெண்டு பேரும் சொல்றது சரிதான்னு தோணுது. நீங்கதான் விளக்கனும்.

  இந்தப் புலவர் கிட்ட குடத்தில் கங்கை அடங்கும்னு ஈற்றடி வெச்சி செய்யுள் எழுதச் சொல்லியிருக்காங்க. குடத்துல கங்கை அடங்குமா?

  காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கங்கை வெள்ளை சங்குக்குள்ளே அடங்கி விடாதுன்னு கவியரசர் கண்ணதாசன் பாடியிருக்காரே!

  படம் – அவர்கள்
  ஆண்டு – 1977
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  பாடல் – கவியரசர் கண்ணதாசன்
  பாடியவர் – எஸ்.ஜானகி
  காற்றுக்கென்ன வேலி
  கடலுக்கென்ன மூடி
  கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
  மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது

  இந்தப் பாட்டுல கவியரசர் என்ன சொல்றாரு? கங்கை வெள்ளத்தை அடக்க முடியாதுன்னு கண்ணதாசன் சொல்றாரு. அதுலயும் சங்குக்குள்ள முடியுமான்னு கேக்குறாரு.

  அப்படியிருக்குறப்போ காளமேகத்தை குடத்தில் கங்கை அடங்கும்னு பாடச்சொன்னா எப்படி?

  அவரும் அடங்கும்னு பாடியிருக்காரு. சடாம”குடத்தில் கங்கை அடங்கும்”ன்னு பாடியிருக்காரு. அந்தப் பாட்டைக் கீழ குடுக்குறேன். நீங்களே படிங்க.

  விண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல்
  மண்ணுக்கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
  இடத்திலே வைத்த இறைவர் சடாம
  குடத்திலே கங்கை அடங்கும்

  எனக்கு என்னவோ காளமேகம் ஆடுனது போங்காட்டம் போலத்தான் தெரியுது. ஆனாலும் அசை சீர் எல்லாம் சரியா இருக்குற மாதிரியும் தெரியுது. செய்யுளின் யாப்பிலக்கணமெல்லாம் சரியா இருக்கே. பொருளும் பொருந்தி வருது.

  இப்பப் புரியுதா நான் எப்படி சிக்கியிருக்கேன்னு. ஆகையால அரிய பெரிய மக்களாகிய நீங்கதான் காளமேகம் சரியா கண்ணதாசன் சரியான்னு ஆராய்ஞ்சு சொல்லனும்னு வேண்டி வணங்கிக் கேட்டுக்கிறேன்.

  அன்புடன்,
  ஜிரா

  012/365

   
  • penathal suresh (@penathal) 10:43 am on December 13, 2012 Permalink | Reply

   மரத்தில் மறைந்தது மாமத யானை ரேஞ்சுதான். குடத்துக்குள் கங்கை வரும். ஆனால் முழு கங்கையையும் சங்குக்குள் அடங்கிவிடாது.

  • என். சொக்கன் 10:47 am on December 13, 2012 Permalink | Reply

   வைரமுத்துவும் இந்த வழக்கில் உண்டு, “யமுனையைச் சிறை கொண்டு குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க”ன்னு “வானமே எல்லை”ல எழுதினாரே 🙂

  • BaalHanuman 11:49 am on December 13, 2012 Permalink | Reply

   “குடத்திலே கங்கை அடங்குமா?”

   ஆனால், தன் பாடலால் அடங்க வைக்கிறார் காளமேக புலவர்.

   “விண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல்
   மண்ணுக்கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
   இடத்திலே வைத்த இறைவர் சடாம
   குடத்திலே கங்கை அடங்கும்.”

   அதாவது சடா மகுடம் என்பதை சடாம குடம் என்று பிரித்து நகைச்சுவைபட பாடுகிறார்.

  • BaalHanuman 11:54 am on December 13, 2012 Permalink | Reply

   பரமசிவன் பார்வதியிடம்…

   “தேவி! நீ என் இடப்பக்கம் முழுவதையும் எடுத்துக் கொண்டது உண்மையானால் என் தலையில் இடப்பக்கமும் உன்னுடையதுதானே? அப்படிப்பார்த்தால் நீயும் சேர்ந்தல்லவா கங்கையைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறாய்?

   விண்ணுக்கடங்காமல் வெற்புக்கடங்காமல் சீற்றத்தோடு இறங்கினாள் அவள். பகீரதன் வேண்டியபடி அவளை என் ஜடாமகுடம் என்ற குடத்தில் அடைத்தேன். பின் மண்ணுலகோர் பயன்பெற வேண்டி அவள் ஆரவாரத்தை அடக்கி மண்ணில் பாய வைத்தேன். கங்கையை என் தலைக்கு வெளியே அணிந்திருக்கிறேன். அவ்வளவே! தலைக்கு உள்ளே எப்போதும் உன்மேல் கொண்ட அன்புதான் நிறைந்திருக்கிறது தேவி!’

   பார்வதிதேவி பரமசிவனிடம்…

   அதை நான் அறிய மாட்டேனா என்ன? இல்லாவிட்டால் சொல்லும் பொருளும்போல் நாம் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதாக காளிதாசனைப் போன்ற நம் பக்தர்கள் நம்மைப் போற்றுவார்களா?

  • kamala chandramani 12:06 pm on December 13, 2012 Permalink | Reply

   சங்குக்குள் அடங்காத கங்கை சங்கரனின் சடாமுடியில் அடங்கும். கண்ணதாச கங்கையும், காளமேக கங்கையும் பாட்டெழுதுவதில் ஒரே வேகம்தான். எஸ். ஜானகி சங்குக்குள்ளே அடங்காத கங்கையை நம் உள்ளத்திலே பொங்கிப் பாயச் செய்துவிட்டார் என்பதுதான் உண்மை.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel