Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 11:13 am on May 12, 2013 Permalink | Reply  

  குடியிருந்த கோயில் 

  எழுபது எண்பதுகளில் என் பள்ளி, கல்லூரி நாள்களில் அன்னையர்தினம் என்று ஒன்று தனியாக தெரிந்ததில்லை ஆசிரியர் தினமும் குழந்தைகள் தினமும் மட்டுமே எங்களுக்கு தெரியும். இதை இந்தியா முழுவதும் கொண்டாடும் வழக்கம் எப்போது துவங்கியிருக்கும்?

  தமிழ் இலக்கியத்தில் இது பற்றி ஏதாவது உண்டா ? தெரியவில்லை.  இது மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா ? படிப்புக்காகவும் வேலை தேடியும் கடல் கடந்த இந்தியர்கள் துவங்கியிருக்கலாம். அல்லது ஆர்ச்சீஸ் ஹால்மார்க் வாழ்த்து அட்டைகள் வந்தவுடன் துவங்கியிருக்கலாம்.

  அன்னையர் தினம் என்று  கொண்டாடும் வழக்கம் இல்லைதான் . ஆனால் தாய்க்கும் தாய்மைக்கும் இந்தியா கலாசாரத்தில் ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு, இங்கு மரியாதைக்குரிய எல்லாமே தாய்தான். அம்மாதான் (அரசியல் பேசவில்லை!)

  இங்கு கதைகளிலும் திரைப்படங்களிலும் தாய் – தியாக உருவான ஒரு உன்னத கதாபாத்திரம். தாயின் பெருமை சொல்ல நிறைய பாடல்கள் உண்டு. தாய் பற்றி எழுதாத கவிஞரே இல்லை என்று நினைக்கிறேன் அம்மா  பற்றி கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் டீச்சரம்மா படத்தில்

  http://www.youtube.com/watch?v=MP3XOTn1ju8

  அம்மா என்பது தமிழ் வார்த்தை

  அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

  அம்மா இல்லாத குழந்தைகட்கும்

  ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

  கவலையில் வருவதும் அம்மா அம்மா

  கருணையில் வருவதும் அம்மா அம்மா

  தவறு செய்தாலும் மன்னிப்புக்காக

  தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா

  பூமியின் பெயரும் அம்மா அம்மா

  புண்ணிய நதியும் அம்மா அம்மா

  தாயகம் என்றும் தாய்மொழி என்றும்

  தாரணி அழைப்பதும் அம்மா அம்மா

  வழக்கம் போல் எளிமையான வார்த்தைகளில் ஒரு statement of fact. (ஒரு நெருடல் – அம்மா என்பது தமிழ் வார்த்தை என்று சொல்கிறார். ஆனால் கூகிளில் தேடினால் –  Amma means mother in many languages. It is originally derived from the East Syriac word Emma which means mother என்கிறது . இது சரியா?)

  ராம் திரைப்படத்தில் சிநேகன் எழுதிய ஓர் அழகான பாடல். தாயின் பாதமே சொர்கம் என்று சொல்கிறார் தாய்க்கு  ஒரு தொட்டில் கட்டி மகன் பாடும் தாலாட்டு போல் வரிகள் http://www.youtube.com/watch?v=4KwKnk3_-Jw

  ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோகத் துடித்தாயே

  உலகத்தின் பந்தங்களெல்லாம் நீ சொல்லி தந்தாயே

  பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வழி நடத்தி சென்றாயே

  தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கும் மருந்தல்லவா

  சுழல்கின்ற பூமியின் மீது சுழலாத பூமி நீ

  என்று சொல்லி அன்னை தான் எல்லாம் என்று முடிக்கிறார். அந்த கடைசி வரியின் தித்திப்பு … அருமை.

  இந்தக்காலக் கவிஞர்கள் பலர் காதலியின் வளையோசை கவிதைகளில் மூழ்கி அவள் கால் கொலுசில் தொலைந்து என்று கற்பனையில் இருக்கும்போது பாரதிதாசன் வேறு விதமாக சிந்திக்கிறார் . எம் பி ஸ்ரீனிவாசன் இசையில் சேர்ந்திசையாக கேட்ட நினைவு. நிஜங்கள் என்ற படத்தில் வாணி ஜெயராம் குரலில் திரையிலும் வந்தது

  . http://groups.yahoo.com/group/mytamilsongs/attachments/folder/2089257867/item/list

   அம்மா உந்தன் கைவளையாய் ஆகமாட்டேனா?

  அலுங்கி குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா?

  அம்மா உந்தன் காதணியாக ஆகமாட்டேனா?

  அசைந்து அசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா?

  அம்மா உந்தன் நெற்றிப்பொட்டாய் ஆகமாட்டேனா?

  அழகொளியாய் நெற்றி வானில் மின்னமாட்டேனா?

  எவ்வளவு இனிமையான வரிகள்

  இமைபோல  இரவும் பகலும் காக்கும் அன்னையின் அன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவும் சிறியது  என்கிறார் வாலி. உண்மைதானே?

  மோகனகிருஷ்ணன்

  162/365

   
  • amas32 11:30 am on May 12, 2013 Permalink | Reply

   அம்மா வரும் முன்னே அவளுக்கே பிரத்யேகமான கைவளை ஓசையோ மெட்டியயொலியோ அம்மா வருகிறாள் என்பதைத் தெரியப்படுத்திவிடும். அவளுக்குத் தெரியக் கூடாத செயல் ஏதாவது செய்து கொண்டிருந்தால் அதை விரைவில் ஒளித்து வைக்க அந்த ஒலி உதவும். அதே போல அம்மா மடியின் மேல் படுத்துக் கொள்ளும் போது சமையல் வேலை செய்து சிறிது புடவையில் எஞ்சியிருக்கும் ஈரம் அந்தத் தாயின் குழந்தைகளுக்கு மட்டுமே புரியும் ஒரு தனித் தன்மை 🙂 தாய் என்பவள் தோழியாகவும் இருந்து விட்டால் அதைவிட சொர்க்கம் வேறு எதுவும் இல்லை.

   amas32

  • GiRa ஜிரா 11:30 am on May 12, 2013 Permalink | Reply

   அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
   தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
   அம்மா… நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
   தாயே என் தாயே எனை ஏன் மறந்தாயே
   தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
   தாயின் முகம் இங்கு நிழலாடுது
   அம்மா ஓர் அம்பிகை போல் அப்பா ஓர் ஆண்டவன் போல்
   என் தாயெனும் கோயிலைக் காக்க மறந்திட்ட

   எத்தனையெத்தனை பாட்டுகள் தமிழ்த் திரைப்படங்களில்.

   அம்மா என்பது தமிழ் வார்த்தைதானே. எல்லா மொழியிலும் இருக்கும் ஒரு வார்த்தை இது. குறிப்பிட்ட எந்த மொழியிலிருந்தும் போயிருக்க முடியாது.

   கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
   கருணை தேடி அலையும் உலகம் உருகும் வார்த்தை அம்மா அம்மா
   எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா
   (நானும் அரசியல் பேசவில்லை) 🙂

   இதையும் கண்ணதாசன் தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டார்.

  • rajnirams 12:31 pm on May 12, 2013 Permalink | Reply

   அன்னையர் தினத்துக்கேற்ற அருமையான பதிவு. தாய் பாச பாடல்களுக்கு குறைவே இல்லை.அம்மா என்பது தமிழ் வார்த்தை பாடல் அருமையான பாடல்.என்னை பொறுத்த வரை “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” தான் சூப்பர். நன்றி.

  • Uma Chelvan 7:47 pm on May 12, 2013 Permalink | Reply

   excellent post as usual. but,ஆனல், குழந்தை தமிழில் பேசும் முதல் வார்த்தை ” அத்தை அல்லது தாத்தா”. உதடுள்கள் ஒட்டாத வார்த்தைகள் தான் முதலில் பேசுவார்கள்.

 • என். சொக்கன் 1:51 pm on December 31, 2012 Permalink | Reply  

  தும்பு துலக்குதல் 

  • படம்: சத்தம் போடாதே
  • பாடல்: அழகுக் குட்டிச் செல்லம்
  • எழுதியவர்: நா. முத்துக்குமார்
  • இசை: யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
  • Link: http://www.youtube.com/watch?v=GOc05aY_OWs

  நீ சிணுங்கும் மொழி கேட்டால், சங்கீதம் கற்றிடலாம்!

  தண்டவாளம் இல்லாத ரயிலை,

  தவழ்ந்தபடி நீ ஓட்டிப் போவாய்!

  வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்!

  ’என்கிட்ட வம்பு, தும்பு வெச்சுக்காதே’ என்று அடிக்கடி சொல்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்?

  ‘வம்பு’ என்றால் வீண் சண்டை என்று பொருள், அது நமக்குத் தெரியும். அதென்ன தும்பு? ’காசு, கீசு’, ‘காப்பி, கீப்பி’ என்று சும்மா இணைத்துச் சொல்வதுபோல் பொருளற்ற ஒரு சொல்லா அது?

  தமிழில் சும்மா ஓசை நயத்துக்காகச் சேர்க்கப்படும் இதுபோன்ற பொருளற்ற சொற்கள் ‘கிகர’ வரிசையில் அமைவதுதான் வழக்கம். குழந்தை, கிழந்தை, கல்யாணம், கில்யாணம், கம்ப்யூட்டர், கிம்ப்யூட்டர், பாட்டு, கீட்டு…

  அந்த வழக்கத்தின்படி, வம்புக்குத் துணையாகக் கிம்புதானே வரணும்? ஏன் தும்பு? அப்படியானால் ‘தும்பு’வுக்கு வேறு அர்த்தம் இருக்கிறதோ?

  என்னிடம் உள்ள தமிழ் அகராதியில் தும்புக்கு இரண்டு பொருள்கள் தந்துள்ளார்கள்: கயிறு / நார்.

  உதாரணமாக, ‘தும்பை விட்டு வாலைப் பிடி’ என்று நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதன் அர்த்தம், மாட்டைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அதன் கழுத்தில் உள்ள கயிறை(தும்பு)தான் பிடிக்கவேண்டும், அதை விட்டுவிட்டு வாலைப் பிடித்தால் பலன் இருக்காது.

  வீட்டைச் சுத்தப்படுத்தும்போது, ‘ஒரு தூசு தும்பு இல்லாம க்ளீன் பண்ணிட்டேன்’ என்கிறோம். இங்கே ’தும்பு’வின் பொருள் நார், அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு சின்னஞ்சிறிய குப்பை.

  ஒரே பிரச்னை, கயிறு, நார் என்ற இந்த இரண்டு விளக்கங்களும் ’வம்பு தும்பு’வுக்குப் பொருந்தாது. மூன்றாவதாக இன்னோர் அர்த்தம் இருக்கிறதா? கொஞ்சம் துப்(ம்)பு துலக்க முயற்சி செய்தேன்.

  ’தும்பு’ என்று நேரடியாக இல்லாவிட்டாலும், ‘தும்பு பிடுங்குதல்’ என்று ஒரு பயன்பாடு இருக்கிறதாம். அதன் பொருள் ஒருவர்மீது குற்றம் சொல்லுதல், Accusing, போட்டுக்கொடுத்தல்.

  இந்தத் தும்பு அந்த வம்புவுடன் அழகாகப் பொருந்துகிறது. ‘அவன்கிட்ட வம்பு தும்பு வெச்சுக்காதே’ என்றால், அவனை வீண் சண்டைக்கு அழைக்காதே, அவனாக ஏதாவது தப்புச் செய்தாலும் இன்னொருவரிடம் சென்று போட்டுக்கொடுக்காதே’ என்று அர்த்தம் என ஊகிக்கிறேன்.

  சரிதானா? உங்களுடைய விளக்கங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

  ***

  என். சொக்கன் …

  31 12 2012

  030/365

   
  • Rie 2:40 pm on December 31, 2012 Permalink | Reply

   சீவக சிந்தாமணியில் இருக்குதாம் இந்த வார்த்தை. “தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்ன”. தும்பு அற இது சொல், அதாவது குழப்பாமல் தெளிவாகச் சொல்.

  • elavasam 11:40 am on January 1, 2013 Permalink | Reply

   ஐயா

   என்னிடம் உள்ள அகராதியில் தும்பு என்ற சொல்லுக்குப் பொருளாக இப்படி இருக்கிறது.

   தும்பு (p. 536) [ tumpu ] , s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.

   தூசு தும்பில்லாது எனச் சொல்லும் பொழுது 4. dust என்பது பொருத்தமாக இருக்கிறது. வம்பு தும்பு எனும் பொழுது கடைசி பொருளான குற்றம் என்பது சரியாக வருகிறது.

 • என். சொக்கன் 10:05 am on December 14, 2012 Permalink | Reply  

  என் காந்தா! 

  • படம்: கண்ட நாள் முதல்
  • பாடல்: கண்ட நாள் முதலாய்
  • எழுதியவர்: என். எஸ். சிதம்பரம்
  • இசை: என். எஸ். சிதம்பரம் / யுவன் ஷங்கர் ராஜா
  • பாடியவர்: பூஜா, சுபிக்‌ஷா
  • Link: http://www.youtube.com/watch?v=MD9j8xxvYe8

  கண்ட நாள் முதலாய், காதல் பெருகுதடி,

  கையினில் வேல் பிடித்த, கருணை சிவ பாலனை!

  வண்டிசை பாடும் எழில் வசந்தப் பூங்காவில்,

  வந்து சுகம் தந்த கந்தனை, என் காந்தனை!

  என். எஸ். சிதம்பரம் எழுதி இசையமைத்த பழைய பாடல் இது. பின்னர் அதனை ரீமிக்ஸ் செய்து ஒரு படத்தில் பயன்படுத்திக்கொண்டார் யுவன் ஷங்கர் ராஜா. பாடல் வரிகளை மாற்றவில்லை.

  இந்தப் பாடலில் நாம் கவனிக்கவிருக்கும் வார்த்தை ‘காந்தன்’.

  முருகனைப் பாட வந்த என். எஸ். சிதம்பரம், கந்தன், காந்தன் என்று இயைபுத் தொடைக்காகமட்டும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ’காந்தன்’ என்றால் கணவன் என்று அர்த்தம். அந்தக் கந்தனையே தன்னுடைய கணவனாக நினைத்துப் பாடும் ஒரு பெண்ணின் மொழியாக இந்தப் பாடல் உள்ளது.

  கண்ணனைப் பலவிதமாகக் கற்பனை செய்து எழுதிய பாரதி, ‘கண்ணன்: என் காதலன்’க்கும் ‘கண்ணன்: என் தந்தை’க்கும் இடையே, ‘கண்ணன்: என் காந்தன்’ என்று ஒரு பாட்டு எழுதியுள்ளார்.

  ’லஷ்மி காந்தன்’ என்று பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள், அதன் அர்த்தம், திருமகளின் கணவன்.

  இதே ‘காந்தன்’ என்ற பெயர், ’சிறந்த ஆண்’ என்பதுபோன்ற பொருளிலும் வருகிறது என்று நினைக்கிறேன், எழுத்தாளர்‘ஜெய காந்தன்’ பெயருக்கு அர்த்தம், வெற்றியின் கணவன்? அல்லது, தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்கும் ஆண் மகன்?

  இந்தத் திசையில் இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சியை நீட்டினால், விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்ற பெயர்களும் விஜயகாந்தன், ரஜினிகாந்தன் என்பதன் சுருக்கம்தானா? ஈர்க்கும் காந்தத்துக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு?

  போகட்டும், ‘காந்தன்’ என்றால் கணவன், அதற்குப் பெண்பால், அதாவது ‘மனைவி’க்கு இணையான சொல் என்ன?

  ’காந்தி’ அல்ல, காந்தை!

  இதற்குச் சான்றாக, நீதி நூல் பாடல் ஒன்றில் ‘புரவிகள்போல் காந்தனும் காந்தையும்’ என்கிறது. அதாவது, கணவனும் மனைவியும் ஒரு வண்டியில் பூட்டிய இரண்டு குதிரைகளைப்போல் ஒருமித்த சிந்தனையோடு இருக்கவேண்டுமாம்!

  ***

  என். சொக்கன் …

  14 12 2012

  13/365

   
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel