Updates from January, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 12:12 pm on January 19, 2013 Permalink | Reply  

  மானே! தேனே! 

  • படம்: மாப்பிள்ளை
  • பாடல்: மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=kVRgKqAKydI

  மொய்குழலில் பூ முடித்து,

  மங்களமாய்ப் பொட்டு வைத்து,

  மெய் அணைத்து, கை அணைக்க

  மன்னவனின் நல்வரவைப் பார்த்திருக்க!

  கல்யாணத்தில் மொய் எழுதுவார்கள், தெரியும், குழல் என்றால் தலைமுடி / கூந்தல், அதுவும் தெரியும். இரண்டையும் சேர்த்து ‘மொய்குழல்’ என்றால் என்ன அர்த்தம்?

  ‘மொய்’ என்ற வினைச்சொல்லின் அர்த்தம், கூடி மொய்த்தல், இந்தப் பெண் தன்னுடைய கூந்தலில் மலர்கள் சூடியிருப்பதால், அல்லது இயற்கையாகவே அவள் கூந்தலுக்கு நறுமணம் இருப்பதால் வண்டுகள் அவளுடைய தலைமுடியைச் சூழ்ந்து மொய்க்கின்றன என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமா?

  கவிதையை நம் இஷ்டப்படி கற்பனை செய்யலாம். ஆனால் ’வண்டு மொய்குழல்’ என்று இங்கே வெளிப்படையாகக் குறிப்பிடப்படாததால், இதற்கு வேறோர் அர்த்தமும் இருக்குமோ? கொஞ்சம் தேடுவோம்.

  மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து ஒரு வரி: மொய்குழல் வண்டு இனம் ஆட ஆட…

  இங்கே வண்டுகள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் மொய்குழல் அதற்கு முன்பாகவே வந்துவிடுகிறது. ஆக ‘மொய்’க்கு வண்டு சம்பந்தப்படாத இன்னோர் அர்த்தம் இருந்தாகவேண்டும்.

  அகராதியைக் கேட்டேன், ‘மொய்’க்கு ‘நெருங்கிய’ என்று ஒரு பொருள் இருப்பதாகச் சொல்கிறது. வண்டுகள் ‘மொய்’ப்பதுகூட, ஒன்றாக நெருங்கிதானே?

  இந்த விளக்கம் இங்கே கச்சிதமாகப் பொருந்துகிறது. அவளுடைய கூந்தல் அடர்த்தியானது, அதில் உள்ள தலைமுடிகள் மிகவும் நெருங்கிக் காணப்படுகின்றன, அத்தகைய மொய்குழலில் அவள் பூ முடித்தாள், அதனால் வண்டுகள் மொய்த்தன, அது வண்டுமொய் மொய்குழலாகிவிட்டது!

  ***

  என். சொக்கன் …

  19 01 2013

  049/365

   
  • amas32 (@amas32) 2:18 pm on January 19, 2013 Permalink | Reply

   “நெருங்கிய” சொந்தங்களும் நண்பர்களும் அதனால் தான் விழாவுக்கு வந்து “மொய்” வைக்கின்றார்கள் போலிருக்கிறது.

   amas32

  • psankar 11:38 pm on January 20, 2013 Permalink | Reply

   தலைவியாரும் தலைவரும் நடித்த பாடல்.

   இதனை நான் மைகுழல் என்று நினைத்திருந்தேன். கருமையான குழல் என்ற பொருளில். விளக்கத்துக்கு நன்றி.

  • Mohanakrishnan 8:44 pm on January 22, 2013 Permalink | Reply

   கண்ணதாசன் பாசமலரில் சொல்லும் ‘முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ’ என்ன பொருளில் வருகிறது? இங்கும் அடர்த்தியான என்பது பொருந்துகிறது. அந்த அடர்த்தி தரும் கருமைக்காக Reference மேகம்.

   • என். சொக்கன் 9:06 pm on January 22, 2013 Permalink | Reply

    அதே அர்த்தம்தான் 🙂 அடர்த்தியான கூந்தல் மேகத்தை நினைவுபடுத்தும் ஓவியமோ!

 • என். சொக்கன் 11:27 am on January 13, 2013 Permalink | Reply  

  சிப்பிக்குள் முத்து 

  • படம்: ராஜபார்வை
  • பாடல்: அந்திமழை பொழிகிறது
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, டி. வி. கோபாலகிருஷ்ணன்
  • Link: http://www.youtube.com/watch?v=J7ThzbP32QI

  சிப்பியில் தப்பிய நித்திலமே,

  ரகசிய ராத்திரிப் புத்தகமே!

  இன்றைக்கு நாம் அதிகம் பயன்படுத்தாத ஒரு சொல், ’நித்திலம்’. இந்தப் பாடலில் சிப்பியுடன் சேர்ந்து வந்திருப்பதால், அதன் அர்த்தத்தை ஊகிப்பது எளிது.

  ‘நித்திலம்’ என்றால் முத்து. திரைப்பாடல்களிலும் நமது பேச்சுவழக்கிலும் அவ்வளவாக உபயோகத்தில் இல்லாவிட்டாலும், பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய நித்திலங்கள் உண்டு. சில உதாரணங்கள் இங்கே:

  • ’ஒள் நித்தில நகையாய்’ : ஒளி நிறைந்த முத்துகளைப்போல் சிரிப்பவளே : திருவெம்பாவை (மாணிக்கவாசகர்)
  • ’நித்தில முறுவல்’ : (சீதைக்கு) முத்துப்போன்ற புன்முறுவல் : கம்ப ராமாயணம்
  • ’நித்தில அரி சிலம்பு’ : முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு : பரிபாடல் (பாடியவர் பெயர் தெரியவில்லை)
  • ’நித்திலம் நிரைத்து இலங்கினவேபோலும் முறுவல்’ : (சிவனுக்கு) முத்துகளை வரிசையாக அடுக்கிவைத்ததுபோன்ற புன்முறுவல் : திருவிசைப்பா (கருவூர்த் தேவர்)
  • ’ஆழ்பொருளுள்ளே மூழ்கி எடுத்து நிரல் படக் கோத்து நித்தில மாலைபோல்’… : திருக்குறளைப்பற்றிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியது

  நித்திலம் என்ற சொல் எப்படி வந்திருக்கும் என்பது தெரியவில்லை, ஆனால் ‘நிதி’ என்ற சொல் இதிலிருந்து வந்ததுதான் என எழுதுகிறார் முனைவர் இராம.கி. ஆரம்பத்தில் முத்துக் குவியலைக் குறித்த ‘நிதி’, பின்னர் பொதுவான செல்வத்தைக் குறிக்கும்படி மாறிவிட்டதாம்.

  முத்துக்குமட்டுமல்ல, சிப்பிக்கும் ஓர் அழகான பழந்தமிழ்ச் சொல் உண்டு. ‘இப்பி’. இதற்கு உதாரணமாக, திருஞானசம்பந்தர் பாடிய ஒரு வரி: ‘ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்…’

  ***

  என். சொக்கன் …

  12 01 2013

  043/365

   
  • N.Ramachandran 11:51 am on January 13, 2013 Permalink | Reply

   அருமை. இந்த பாடலும்,வரிகளும் பட்டையை கிளப்பியவை.”கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது – தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது”
   இந்திரன் தொட்டது முந்திரியே,மன்மதநாட்டுக்கு மந்திரியே போன்ற வரிகளும் சூப்பர். இருந்த போதிலும் அதை விட
   எனக்கு பிடித்தது ,கவியரசரின் “அழகே அழகு தேவதை,ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் என்ற ஜேசுதாஸ் குரலில் வரும் பாடலும்,காட்சியும்.நன்றி.

  • niranjanbharathi 2:24 pm on January 13, 2013 Permalink | Reply

   இப்பி என்ற புதிய சொல்லைத் இன்று தெரிந்து கொண்டேன். நன்றி :):)

  • என். சொக்கன் 8:39 pm on January 13, 2013 Permalink | Reply

   Note: This is a Comment We received on the blog, Not sure who wrote this

   சென்ற வாரம்தான் நித்திலமே வார்த்தை உபயோகத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தேன்…இணைய தேடலில், கிடைத்த விஷயம் “வைரமுத்துவிடம், கமல் அவர்கள் நித்திலமே வார்த்தை எல்லோருக்கும் புரியாது, அதை மாற்றி தருமாறு, வை. மு. வை கேட்க்க, வை.மு கண்ணதாசன் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார் என்று அந்த பாடலை உதாரணம் காட்டிய பிறகு, கமல் ஒத்துக்கொண்டாராம்.”

   • என். சொக்கன் 8:40 pm on January 13, 2013 Permalink | Reply

    //கண்ணதாசன் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்// எந்தப் பாடலில்?

  • Saba-Thambi 8:46 pm on January 13, 2013 Permalink | Reply

   MGR திரைப் படம்: நாளை நமதே

   பாடல்: காதல் என்பது காவியமானால்…

   “நீலக்கடல் கொண்ட நித்திலமே, இந்த நாடகம் உனக்காக”..

   பாடலாசிரியர் :புலமைபித்தன் ??

   சபா

   • என். சொக்கன் 8:48 pm on January 13, 2013 Permalink | Reply

    நல்ல உதாரணம் 🙂 ‘நாளை நமதே’யில் அனைத்துப் பாடல்களும் வாலி எழுதியவை

    • Saba-Thambi 8:50 pm on January 13, 2013 Permalink

     திருத்தலுக்கு நன்றி

    • என். சொக்கன் 8:52 pm on January 13, 2013 Permalink

     திருத்தல் அல்ல சபா, நீங்களும் கேள்வியாகதானே கேட்டீர்கள்? 🙂

  • amas32 8:46 pm on January 14, 2013 Permalink | Reply

   நித்திலம் என்பது மிகவும் அழகான ஒரு சொல். பிள்ளைக்குப் பெயர் கூட வைக்கலாம் போலிருக்கிறது. (நித்திலா, நித்திலன், பொருள் மாறிவிடுமா?)

   amas32

   • Saba-Thambi 5:39 pm on January 23, 2013 Permalink | Reply

    எனக்கு தெரிந்த பெண்ணுக்கு நித்தில நங்கை என்று பெயர் காலப் போக்கில் அது “நித்தி” என்று மாறிவிட்டது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel