Updates from July, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:42 am on July 1, 2013 Permalink | Reply  

  குழலன் 

  அன்றொருநாள் நண்பர்களுக்கு இடையே ஒரு பேச்சு வந்தது. அதாவது மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த பாடல்கள் எவை? இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் எவை?

  பொதுவாகவே மெல்லிசை மன்னர் மெட்டுகளை அமைத்தார் என்பதும் இசைஞானி இசைக்கோர்ப்பு செய்தார் என்பதும் கருத்து. ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா என்று மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  மிக அருமையான பாடல் அது. வாலி எழுதிய சித்ரா பாடிய அட்டகாசமான பாடல்.

  குழலூதும் கண்ணனுக்கு
  குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ

  கண்ணனைச் சொல்லும் போதெல்லாம் குழலைச் சொல்வது வழக்கமாக திரைப்பாடல்களில் இருக்கிறது. வாலி எழுதிய இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது.

  காற்றினிலே வரும் கீதம்
  கண்ணனவன் குழல் நாதம்
  நேற்றிரவு கேட்டேனே
  பால் நிலவாய் ஆனேனே

  ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ரவீந்திரன் இசையில் வாணி ஜெயராம் பாடிய கர்நாடக பாணி மேடைப் பாடல்.

  குழல் என்றால் கண்ணன். கண்ணன் என்றால் குழல் என்று இன்று அமைந்து விட்டது. இரண்டையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

  ஆனால் தமிழ் இலக்கியங்களின் படிப் பார்த்தால் நம் கருத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

  கண்ணன் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தோன்றிய அவதாரம் என்றும் முருகன் யுகங்களுக்கு முன்னால் இருந்த கடவுள் என்றும் சொல்லும் புராணங்களை நம்பினாலும் தமிழ் இலக்கியம் படித்தால் குழல் எந்தக் கடவுளுக்குரியது என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

  சரி. எது எப்படியும் இருக்கட்டும். தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்து என்ன என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் குழலையும் தாண்டி சில வியப்பான தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.

  சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக வைக்கப்பட்ட நூல் திருமுருகாற்றுப்படை. தமிழில் இன்றிருக்கும் சமய இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தியது. மூத்தது. முத்தமிழ் முதல்வனான முருகனைப் பாடுவது.

  முருகக் கடவுள் குன்றுதோறும் ஆடும் இயல்பைப் பாடும் பொழுது முருகனுக்கும் குழலுக்கும் உள்ள தொடர்பை நக்கீரர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

  குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
  தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்
  கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
  நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
  குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
  மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
  முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,
  மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
  குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று

  மேலே குறிப்பிட்ட வரிகளை பக்தி நெறியோடும் புரிந்து கொள்ளலாம். தகவல் அறியும் ஆர்வத்தோடும் அணுகலாம். நாம் பக்தியை சற்று ஒதுக்கி வைத்து விட்டு வியத்தகு தகவல்களில் ஆழலாம்.

  அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக நக்கீரர் குறிப்பிட்டிருப்பது குன்றுதோறாடல். இன்றைக்கு திருத்தணி ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடப் பட்டாலும் உலகில் இருக்கும் குன்றுகளையெல்லாம் ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

  அப்படி குன்று தோறும் இருக்கும் முருகனின் இயல்புகளை விளக்கும் வரிகளில் ஒளிந்திருக்கிறது தமிழர்களின் இசையறிவு.

  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வரி “குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்”.

  குழலன் – குழல் வைத்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் அல்ல. குழல் ஊதுவதில் மிகச் சிறந்தவன் என்று பொருள். அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.

  கோட்டன் – இதற்கு இரண்டு பொருள் விளக்கங்களைக் கண்டேன். கோடு என்பது கொம்பினைக் குறிக்கும். ஊதுகொம்பினை எக்காளம் என்றும் அழைப்பார்கள். அந்த இசைக்கருவியில் சிறந்தவன் முருகன். இன்னொரு பொருளாக கோட்டு வாத்தியம் என்னும் நரம்பிசைக் கருவியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பெயர் சங்ககாலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

  குறும் பல்லியத்தன் – இதுதான் மிகமிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய சொல்.

  பல்லியம் = பல் + இயம். பலவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைப்பவன்.
  அதாவது Orchestration என்று சொல்லப்படும் இசைக்கோர்ப்பு.

  அதாவது முருகன் ஒரு இசையமைப்பாளன். மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்பதையெல்லாம் தாண்டி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் இசைக்கடவுள். இசை தொடங்குவதும் வளர்வதும் அடங்குவதும் முருகனிடத்தில். அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்.

  Orchestra என்ற சொல்லோ கருத்தோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக நாடுகளில் இருந்திருக்குமா என்பதே ஐயம். அந்த நிலையில் பல்லியம் என்ற சொல் சங்கத்தமிழில் இடம் பெற்றிருப்பது தமிழிசை அந்தக் காலத்தில் செழித்திருந்ததையே காட்டுகிறது.

  பல்லியத்திலும் இரண்டு வகை உண்டு. குறும் பல்லியம். நெடும் பல்லியம். இவை பல்லியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படுகின்றவை.

  சரி. இசைக்கருவிகளை வைத்து இசையமைத்து விட்டார் முருகன். அவரே பாடியும் விடுவார். ஆனால் Chorus வேண்டாமா? பின்னணியில் பலகுரல்கள் கூடியெழுந்து முன்னணியில் பாடுவதைச் செறிவாக்க வேண்டாமா?

  அதற்குதான் இருக்கிறார்கள் ”நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு”. யாழ் முதலான இனிய நரம்பிசைக் கருவிகளைப் போன்ற இன்னொலி கொண்ட பாடகர்கள் முருகனோடு இருக்கிறார்கள். முருகன் இசையமைக்கும் போது அவர்களும் கூடிப் பாடுகின்றவர்கள்.

  ஆக உலகின் முதல் குழலன் மட்டுமல்ல… முதல் இசையமைப்பாளரும் முருகனே!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – காற்றினிலே வரும் கீதம்
  பாடியவர் – வாணி ஜெயராம்
  வரிகள் – வாலி
  இசை – ரவீந்திரன்
  படம் – ஒரு ரசிகன் ஒரு ரசிகை
  பாடலின் சுட்டி – http://youtu.be/_RQY4hgiYd0

  பாடல் – குழலூதும் கண்ணனுக்கு
  பாடியவர் – கே.எஸ்.சித்ரா
  வரிகள் – வாலி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
  படம் – மெல்லத் திறந்தது கதவு
  பாடலின் சுட்டி – http://youtu.be/dfOuTx66bJU

  அன்புடன்,
  ஜிரா

  212/365

   
  • Sudharsan (@vSudhar) 12:53 pm on July 1, 2013 Permalink | Reply

   //ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா // Otherway to know this is, Cheeni Cum, this song is used by IR, obviously his tune.

   எங்க ஆரம்பிச்சாலும் முருகன்ட்ட வந்து முடிசிடுறீங்க 🙂

  • rajnirams 10:22 pm on July 1, 2013 Permalink | Reply

   அருமை.குழல் என்றாலே கண்ணன் என்று தான் எல்லோருமே நினைப்பார்கள்.நக்கீரரின் பாடல் மூலம் குழலன்-முருகனின் பெருமையை உணர்த்தியிருக்கிறீர்கள்.

  • amas32 8:06 pm on July 4, 2013 Permalink | Reply

   //அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.// சூப்பர்!

   //அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்// தமிழ் தெய்வமான முருகன் இசை தெய்வமாகவும் இருப்பது நாம் பெற்ற பேரு! முருகன் இசைக்கும் பல்லியத்துக்கு மயில்கள் ஆடும். அவர் இசைக்கும் இசைக்கு ஆடாத மனமும் உண்டோ?

   amas32

 • G.Ra ஜிரா 10:23 am on May 25, 2013 Permalink | Reply
  Tags: நற்றிணை   

  ’வேலன்’டைன்ஸ்’ ஸ்பெஷல் 

  வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
  புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
  சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு – தினமும்
  சொல்லித் தந்த சிந்து பாடினான்
  வள்ளி இன்ப வல்லி என்று முல்லைச்சரம் கொண்டு சூடினான்
  பாடியவர்கள் – இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி
  பாடல் – கவிஞர் வாலி
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – தெய்வவாக்கு
  பாடலின் சுட்டி – http://youtu.be/10PSPLEH1D0

  முதலில் நான் கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் தெரியுமா? இலக்கியத்திலும் வாழ்வியலிலும் மறைந்து போன ஒரு பழந்தமிழ் வழக்கத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்தமைக்கு.

  திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கண்ணனை உயர்வு செய்து எழுதி பலபாடல்கள் நிறைய உள்ளன. அவை கால மாற்றத்தையும் மக்களின் நம்பிக்கையில் உண்டான மாற்றங்களையும் காட்டுகின்றன. மாற்றங்கள் என்றால் அவை குறைகள் என்று பொருள் அல்ல. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறின என்று செய்தியாகச் சொல்வது போலத்தான்.

  சரி. எதிலிருந்து மாறியது? சங்க நூல்களை எடுத்துப் பார்த்தால் காதல் என்று வந்தாலே முருகனும் வள்ளியும் தான். அகத்திணை நூல்கள் அத்தனையையும் எடுத்துப் புரட்டிப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.

  குறுந்தொகை, நற்றிணை என்று பெரிதாகப் பட்டியல் போடலாம். அதனால்தான் சங்க இலக்கியங்கள் என்று பொதுவாகவே குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்கள் என்ன…. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரத்திலும் அப்படித்தான்.

  கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. அதற்காக கோவலனை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். அப்போது புகார் நகரத்துக் கன்னிப் பெண்களெல்லாம் கோவலனைப் பார்க்கிறார்கள். அவன் அழகை ரசிக்கிறார்கள். “அட… பாத்தியா.. என்ன அழகா இருக்கான். அப்படியே முருகன் போல முறுக்கிக்கிட்டு இருக்கானே… காதலிச்சா இப்பிடி ஒருத்தனைக் காதலிக்கணும்.” என்று புகழ்கிறார்கள்.

  கண்டு ஏத்தும் செவ்வேள்” என்று இசை போக்கி காதலால்
  கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ
  நூல் – சிலப்பதிகாரம்
  காண்டம் – புகார்க்காண்டம் (மங்கல வாழ்த்துப் பாடல்)
  இயற்றியவர் – இளங்கோவடிகள்

  பொண்ணு பாத்தா மகாலட்சுமி மாதிரி இருக்கா” என்று சொல்வது போல பையனைச் சொல்லும் போது முருகனை ஒப்பிட்டுச் சொல்லும் வழக்கம் தமிழரின் பழைய வழக்கம். அதுதான் சங்கத்தமிழ் முழுக்க விரவிக்கிடக்கிறது. எல்லா எடுத்துக் காட்டுகளையும் நான் குறித்து வைத்திருந்தாலும் ஒன்றேயொன்றை மட்டும் இங்கு பார்க்கலாம். கிட்டத்தட்ட இன்றைய திரைப்படங்களில் வருகின்ற காட்சியைப் போலத்தான் அந்த நற்றிணைக்காட்சி.

  காதலில் தவிக்கிறாள் காதலி. காதலனோ சிறுகுடியன். அவனும் காதலில் குதித்துவிட்டு தப்பிக்க முடியாமல் தவிப்பவன். நேரம் பார்த்து இடம் பார்த்து கூடிக் கழிக்கும் இன்பம் அவர்களுக்கு வாய்த்தது. அப்போது அவன் அவளிடம் கேட்கிறான். “பெண்ணே.. மூங்கில் போன்ற தோள் அழகே… கொடியழகி வள்ளியம்மை முருகப் பெருமானோடு கிளம்பிச் சென்றது போல என்னோடு வந்து என்னுடைய சிறுகுடியில் வாழ்வாயா?

  என்ன திரைப்பட வசனம் போலத்தானே இருக்கிறது? சரி.. அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

  வேய்வனப்பு உற்ற தோளை நீயே
  என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி
  முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல
  செய்யுள் – நோயும் நெகிழ்ச்சியும் என்று தொடங்கும் பாடல்
  பாடல் எண் – 82
  பாடியவர் – அம்மூவனார்
  திணை – குறிஞ்சி

  இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் கவிஞர் வாலிக்கு நன்றி சொன்னேன் என்று. இந்த ஒரு பாட்டில் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களிலும் வாலி முருகன் – வள்ளி காதலை எழுதியிருக்கிறார்.

  செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
  வள்ளியை இன்ப வல்லியை குன்றம் ஏறிக் கொண்டவன்
  படம் – பெண் ஜென்மம்
  இசை – இளையராஜா
  பாடியவர்கள் – பி.சுசீலா, ஏசுதாஸ்
  பாடலின் சுட்டி – http://youtu.be/BGevMUI6t0A

  அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
  அவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்
  ………….
  பன்னிரண்டு கண்ணழகை பார்த்து நின்ற பெண்ணழகை
  ஐயன் தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
  படம் – பஞ்சவர்ணக்கிளி
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடலின் சுட்டி – http://youtu.be/9a0rNJBS594

  சரி. இது போல முருகனை முன்னிறுத்திய காதல் பாடல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.

  அன்புடன்,
  ஜிரா

  175/365

   
  • ajayb17 10:44 am on May 25, 2013 Permalink | Reply

   ’வேலன்’டைன்ஸ்’ … தலைப்பு செம 🙂

   • GiRa ஜிரா 12:40 pm on May 26, 2013 Permalink | Reply

    தலைப்புகள் எல்லாம் நாகாவின் கைவண்ணம். 🙂

  • Uma Chelvan 6:59 pm on May 25, 2013 Permalink | Reply

   மானோடும் பாதை இலே ( கவி குயில் ) GIRA இந்த பாட்டு உங்ககிட்ட இருந்தால் u-tube li upload பண்ணுங்களேன் . Please !!

   • GiRa ஜிரா 12:44 pm on May 26, 2013 Permalink | Reply

    மானோடும் பாதையிலே பாட்டு யூடியூபில் இருக்கே. இதோ கேளுங்க http://youtu.be/Xp20Hs1c2HQ

  • Uma Chelvan 7:37 pm on May 26, 2013 Permalink | Reply

   Thanks, I didn’t know that.

  • amas32 9:53 pm on May 26, 2013 Permalink | Reply

   என் முருகனைப் பற்றிய பதிவு அனைத்துக்கும் உங்களுக்கு நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்கள் உண்டு 🙂 அருமையான பதிவு, நன்றி 🙂

   amas32

 • G.Ra ஜிரா 11:13 am on April 13, 2013 Permalink | Reply
  Tags: கதீஜா, , தொல்காப்பியர், மு.கருணாநிதி   

  ஆசை நூறு வகை, அறிவோ ஏழு வகை 

  தொலைக்காட்சியில் செம்மொழிப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பி.சுசீலா சிலவரிகளைப் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகளைக் கேட்கும் போது ஒரு சிந்தனை தோன்றியது. முதலில் அந்த வரிகளைத் தருகிறேன். பிறகு எனது சிந்தனையைச் சொல்கிறேன்.

  ஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்
  உணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்
  பாடல் – கலைஞர் கருணாநிதி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/OSP0dxLymcM

  ஆறறிவுள்ள மனிதன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வோம். ஆனால் அந்த ஆறறிவு என்னென்ன என்று யாருக்காவது தெரியுமா? தொல்காப்பியத்தில் அதற்காக விளக்கம் இருக்கிறது. அந்த விளக்கத்தைப் பார்க்கும் முன் அறிவு என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.

  பழந்தமிழில் பெயர்கள் பொருளோடுதான் வைக்கப்பட்டன. அறிவதனால் அது அறிவு எனப்பட்டது. எண்ணி இடுவது ஈடு. சுடுவது சூடு என்பது போல அறிவது அறிவு.

  ஒரு உயிர் எப்படியெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவைகளை அறிகின்றதோ அதை வைத்துதான் அந்த உயிர் எத்தனை அறிவுகள் கொண்டது என்று கருதப்படுகிறது. சரி. தொல்காப்பிய வரிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

  ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
  இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
  மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
  நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
  ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
  ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
  நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
  நூல் – தொல்காப்பியம்
  அதிகாரம் – பொருளதிகாரம்
  திணை – மரபியல்

  ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
  ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.

  இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
  ஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.

  மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
  உடம்போடும் நாவோடும் அறிவதோடு மூக்கினாலும் அறிகின்ற உயிர்களை மூன்றறிவுள்ளவை என்பார்கள். மூக்கினால் நாற்றங்களையும் அந்த உயிரினங்கள் அறிந்துகொள்ள முடியும்.

  நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
  உடம்பு, நாக்கு. மூக்கு ஆகியவைகளோடு கண்களாலும் உணர்வது நான்கறிவு எனப்படும். இந்த நான்காவது அறிவினால் மூன்று அறிவுகளை அறிவதோடு கூடுதலாகக் கண்களால் நிறங்களையும் உருவங்களையும் அறிய முடியும்.

  ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
  ஐந்து விதமான அறிவுகளை உணர்வதற்கு உடம்பு, வாய், மூக்கு, கண்களோடு செவியும் உதவுகின்றது. நான்கு அறிவுகளோடு கூடுதலாக செவியினால் ஓசைகளை ஐந்தறிவு உயிர்கள் அறியும்.

  ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
  ஐந்து அறிவுகள் மாக்களோடு நிற்க, ஆறறிவினால் மனிதன் மேலும் உணர்ந்தான். அதற்குக் காரணம் அவனுடைய மனம். அந்த மனதினால் உண்டாகும் சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவாகும்.

  இப்போது ஆறு அறிவுகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஏழாவது அறிவு என்று ஒன்றையும் பட்டியலிட்டிருக்கிறார் வைரமுத்து. ஆம். எந்திரன் திரைப்படத்துக்காக எழுதிய பாடலில்தான் ஏழாம் அறிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்.

  புதிய மனிதா பூமிக்கு வா
  எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து
  வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி
  அழியாத உடலோடு வடியாத உயிரோடு
  ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
  ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
  பாடல் – வைரமுத்து
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான், கதிஜா
  படம் – எந்திரன்
  பாடலின் சுட்டி – http://youtu.be/ZkZ6eNBxZ8E

  ஆறு அறிவுகளால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கி அந்த எந்திரனுக்கு ஏழாவது அறிவைத் தட்டி எழுப்பும் முயற்சியை “ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” என்று எழுதியிருக்கிறார்.

  உயிருள்ளவைகளுக்கு உள்ளது அதிகபட்சமாக ஆறு அறிவுகள்தான். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரத்துக்கு உண்டாவது ஏழாவது அறிவு என்பது ஒரு அறிவார்ந்த கற்பனைதான்.

  அன்புடன்,
  ஜிரா

  133/365

   
  • amas32 (@amas32) 10:28 pm on April 13, 2013 Permalink | Reply

   மூன்று பாடலையும் நன்றாக சம்பந்தப் படுத்தி எழுதியிருக்கீங்க. கலைஞர் பாடலின் முதல் வரியை கவனித்து, ஆறு அறிவை விளக்க தொல்காப்பியப் பாடலைத் துணைக்கழைத்து, வைரமுத்து எழுதிய ரோபோ பாட்டில் குறிப்பிட்ட ஏழாம் அறிவைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியது அருமை.

   amas32

   • GiRa ஜிரா 11:19 am on April 14, 2013 Permalink | Reply

    நன்றி அம்மா 🙂

  • Saba-Thambi 6:19 am on April 14, 2013 Permalink | Reply

   அருமையிலும் அருமை! மிக்க நன்றி.
   “ஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்….” அழகான பாடல்

   உண்பது நாழி? உடுப்பது ….. ? இன்னும் இந்த வரிகள் எனது அறிவுக்கு எட்டவில்லை.
   விளக்குவீர்களா?

   • GiRa ஜிரா 11:43 am on April 14, 2013 Permalink | Reply

    உண்பது நாழி. உடுப்பது முழம்.

    முழம் என்பது நீள அளவை. மானம் காக்க ஒரு முழம் துணி போதும். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை முழம் துணியும் நாழிச் சோறும் என்பது கருத்து.

  • nizamhm1944 5:32 pm on November 23, 2013 Permalink | Reply

   றோபோ Robot, தனக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பட்ட, வரையறுக்கப்பட்ட தகவல்களை நடைமுறைப்படுத்துவது. சொன்னதைச் சொல்லும் கிளியிலிருந்து சற்று மேம்பட்டு, சொன்னதைச் செய்வது. அதன் அறிவு மனித முளையுள் அடங்கியதே!

   அது தன்னிடமுள்ள தகவல்களை ஏதோ காரணத்தால் பிழையாக விளங்கிக் கொண்டால்கூட எதையெதை எல்லாமோ செய்துவிடும் . “கையில் கட்டி அதை வெட்டு“ என்பதை “கையைக் கட்டி அதை ‌வெட்டு“ என விளங்கிக் கொண்டால் அதற்குரிய கயிறும், ஆயுதமும் அதன் கையில் வழங்கப்பட்டு இருந்தால், கையைக் கட்டி கையையே வெட்டிவிடும். ஆறாவதறிவு அனைத்தையும் பகுத்து அறிவது.

   றோபோவைப் புகழ நினைத்து இறையறிவைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆறாவதறிவின் வெளிப்பாடுதான் றோபோவும்.

   ஆறாவதறிவு இவ்வுலகையும் வென்று மறுவுலகிலும் வாழவைக்கும். புலவர்கள் இன்றும் சந்திரனைப் பெண்ணின முகத்திற்கு ஒப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 • G.Ra ஜிரா 11:17 am on April 10, 2013 Permalink | Reply
  Tags: சிவன், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருமுறைகள்   

  தேவாரம் 

  தமிழின் பெருமை சொல்லி முடிவதுமல்ல. சொல்லில் முடிவதுமல்ல. ஆனாலும் கோயில்புறா திரைப்படத்துக்காக புலவர் புலமைப்பித்தன் சொல்லெடுத்து பாடலொன்று எழுத வேண்டி வந்தது. மிகமிக அரிய இனிய பாடலாகவும் காலத்தால் நிலைக்கின்றதாகவும் அந்தப் பாடல் உருவெடுத்தது.

  அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
  ………………
  தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்
  தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
  ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதிலுலகம் மறந்து போகும்
  படம் – கோயில்புறா
  பாடல் – புலவர் புலமைப்பித்தன்
  பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, உமா ரமணன்
  நாதசுரம் – கே.பி.என்.சேதுராமன், கே.பி.என்.பொன்னுச்சாமி
  இசை – இசைஞானி இளையராஜா
  பாடலின் சுட்டி – http://youtu.be/errR7iLYuuU

  இந்தப் பாட்டில் தேவாரத்தின் பெருமையை உறைக்கு விடும் மோர்த்துளி போல் புலமைப்பித்தன் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அந்த மோர்த்துளி விட்டு உறைந்த பெரும்பானைத் தயிராக தேவாரத்தின் பெருமைகளை நாம் இந்தப் பதிவில் காணலாம்.

  பெரும்பாலும் தேவாரம் என்பது சிவனார் மீது பாடப்பட்ட பாடல்கள் என்று தெரிந்திருப்போம். ஆனால் அந்தப் பெயருக்குப் பொருள் என்ன? அதைப் பாடியது யார்? அவை பற்றிய தகவல்கள் என்னென்ன?

  தே + ஆரம் = தேவாரம். தே என்றால் இனிய என்று பொருள் உண்டு. தேநீர் என்று சொல்கிறோமல்லவா. அதே போல தே என்றால் அருள் என்றும் ஒரு பொருள் உண்டு. ஆரம் என்றால் மாலை. ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தரும் பாமாலை என்று பெயர்க்காரணம் இருக்கிறது. இனிய (பா)மாலை என்று எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே.

  இன்றைக்கு தேவாரம் என்பது சைவர்கள் மூவர் பாடியவைகளாகக் கருதப்படுகிறது. மூவர் என்றால் யார் யார்? அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர். இவர்கள் பாடியவை தேவாரம் என்று தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்முதலில் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பரடிகள் பாடியதே தேவாரம். சம்பந்தர் பாடியது திருக்கடைக்காப்பு. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.

  அப்பர் பாடிய தேவாரப் பதிகங்கள் மக்களிடம் மிகப்பிரபலமாகி சம்பந்தரும் சுந்தரரும் பாடிய பதிகங்களுக்கும் கூட தேவாரம் என்று பெயர் வந்துவிட்டது.

  இந்தப் பாடல்களைப் பின்னாளில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுத்தார். சைவ மூவர்களின் பாடல்கள் மொத்தம் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவை அத்தனைக்கும் பொதுப்பெயராக தேவாரம் நின்று நிலைத்துவிட்டது. இது அப்பரடிகளுக்கே பெருமை.

  முதலாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1469 பாடல்கள்
  இரண்டாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1331 பாடல்கள்
  மூன்றாம் திருமுறை = திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1346 பாடல்கள்
  நான்காம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 1060 பாடல்கள்
  ஐந்தாம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 1015 பாடல்கள்
  ஆறாம் திருமுறை = திருநாவுக்கரசரின் தேவாரம் = 980 பாடல்கள்
  ஏழாம் திருமுறை = சுந்தரரின் திருப்பாட்டு = 1026 பாடல்கள்

  சரி. பதிகம் என்கிறோமே, அப்படியென்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பத்து பாடல்களின் தொகுப்பு ஒரு பதிகம். ஆனால் திருஞானசம்பந்தரின் பதிகத்தில் மட்டும் பதினோரு பாடல்கள் இருக்கும். ஏன்? பத்து பாடல்களைக் கொண்ட பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலனைப் பதினோராம் பாட்டில் வைத்தார் திருஞானசம்பந்தர்.

  இன்னொரு தகவல். இந்தப் பதிகங்கள் தொகுக்கப்பட்டவை என்பது தெரியும். இவைகளைப் பண்முறையாகவும் தலமுறையாகவும் தொகுக்கப்பட்டன? அதென்ன?

  மூவர் பாடிய பதிகங்கள் பலப்பல திருத்தலங்களில் பாடப்பட்டவை. பண் என்பது தமிழிசையைக் குறிப்பது. வடமொழியில் இராகம் என்கிறார்களே, அதுதான் பைந்தமிழில் அதுதான் பண்.

  ஒரே பண்ணில் பாடப்பட்ட பாடல்களாகத் தொகுத்தால் அது பண்முறைத் தொகுப்பு. பாடப்பட்ட தலங்களை வைத்துத் தொகுத்தால் அது தலமுறைத் தொகுப்பு.

  மூவரின் தேவாரங்களில் இருந்து ஒவ்வொரு பாடலைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் பாடல்களை வாயால் பாடி மனதினால் சிந்தித்து அருளின்பம் பெருகட்டும்.

  திருநாவுக்கரசர்
  மாசில் வீணையும் மாலை மதியமும்
  வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
  மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
  ஈசன் எந்தை இணையடி நீழலே

  திருஞானசம்பந்தர்
  தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
  காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
  ஏடுடைய மலரான் உனை நான் பணிந்தேத்த அருள் செய்த
  பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

  சுந்தரர்
  பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
  எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
  வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
  அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே

  இப்படியான சிறப்புடைய பதிகங்களை உள்ளத்தில் நிறுத்தி உதட்டில் உச்சரித்து உயிரோடு சேர்த்து உருக்கிவிட்டால் ஈசனருள் உறுதி. தெய்வத் தமிழ் தேவாரம் போற்றி! போற்றி!

  திருச்சிற்றம்பலம்

  அன்புடன்,
  ஜிரா

  130/365

   
  • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:12 pm on April 10, 2013 Permalink | Reply

   ஜீராவில் ஊறினால் எதுதான் இனிக்காது? தேவாரமோ ஏற்கனவே குலோஜாமூன்…கேட்கவேண்டுமா?!
   பிரமாதம்…தொடருங்கள்!

   • GiRa ஜிரா 9:16 pm on April 11, 2013 Permalink | Reply

    தீந்தமிழ் மறையாகிய தேவாரப் பண்களைப் பத்திச் சொல்லாம இருக்கத்தான் முடியுமா? இன்னும் நெறையவே சொல்லலாம். இது நாலுவரி நோட்டு. அதுனால அளவான அறிமுகம் 🙂

  • amas32 10:12 pm on April 10, 2013 Permalink | Reply

   /அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே/ அனைத்தையும் ஒரு வரியில் சொல்லிவிடுகிறாரே கவிஞர்!

   /அந்த மோர்த்துளி விட்டு உறைந்த பெரும்பானைத் தயிராக தேவாரத்தின் பெருமைகளை நாம் இந்தப் பதிவில் காணலாம்./ சூப்பர் ஜிரா!

   உங்களை என் நண்பராக அடைந்ததற்கு மிகவும் பெருமைப் படுகிறேன். எவ்வளவு அழகாவும், விவரமாகவும், சுங்கச் சொல்லியும் விளக்குகிறீர்கள். கடவுள் அருளால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று பதிகங்களும் நான் அறிந்தவை. அதில் ரொம்ப மகிழ்ச்சி 🙂

   எல்லா வளமும் பெற்று நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ என் வாழ்த்துகள்.

   amas32

   • GiRa ஜிரா 9:18 pm on April 11, 2013 Permalink | Reply

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்மா. 🙂 இது போன்ற வாழ்த்துகள் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கின்றன.

  • Saba-Thambi 10:55 am on April 14, 2013 Permalink | Reply

   அருமையான கட்டித் தயிர்! வளர்க உங்கள் எழுத்து.

 • G.Ra ஜிரா 10:33 am on April 4, 2013 Permalink | Reply  

  எப்பொழுதும் உன் கற்பனைகள் 

  சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், ஒரு இசையமைப்பாளராக உருமாறிய திரைப்படம் அது. பாடலும் மிக இனிய பாடல். கவிஞர் தாமரை எழுதி பெள்ளி ராஜும் தீபா மரியமும் இனிமையாகப் பாடிய பாடல்.

  பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது நடுவில் வந்த ஒருவரி என் சிந்தனையைத் தூண்டியது.

  இரவும் அல்லாத பகலும் அல்லாத
  பொழுதுகள் உன்னோடு கழியுமா

  மேலே சொன்ன வரிகள்தான் என்னுடைய சிந்தனையைத் தூண்டியவை. இன்னும் சொல்லப் போனால் இந்த வரிகளுக்குள் தனக்கும் கவிதை இலக்கணம் தெரியும் என்று நிருபித்திருக்கிறார் தாமரை.

  ஆம். காதல் பாடல்களை எழுதுவதற்கும் இலக்கணம் உண்டு. அதற்கு அகத்திணையியல் என்று பெயர். எல்லா தமிழ் இலக்கண நூல்களிலும் பொதுவாக விளக்கப்படும். இருப்பதில் பழையதான தொல்காப்பியத்திலும் அகத்திணையியல் உண்டு. அகத்தியம் என்னும் அழிந்த நூலிலும் அகத்திணையியல் இருந்தாலும் தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் புதுமைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

  சரி. இலக்கணத்துக்கு வருவோம். அகத்திணைப் பாடல்கள் என்று சொல்லிவிட்டாலும், அவைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரிக்கின்றார்கள்.

  இந்தத் திணைகளைக் குறிக்கும் பொருட்கள் பாடலில் இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முருகக் கடவுளைப் பற்றி வந்தால் அந்தப் பாடல் குறிஞ்சித்திணையைச் சேர்ந்தது. வயல்வெளிகளையும் அங்குள்ள விளைபொருட்களையும் சொன்னால் அந்தப் பாடல் மருதத்திணையைச் சேரும்.

  இப்படியாகத் திணைகளைக் குறிக்கும் பொருட்களையும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அவை முதற்பொருள், உரிப்பொருள் மற்றும் கருப்பொருள் எனப்படும்.

  இந்த முதற்பொருளில் வரும் ஒரு பொருள்தான் பொழுது. பொதுவில் முதற்பொருள் என்பது நிலத்தையும் பொழுதையும் குறிக்கும்.

  முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
  இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

  ஒரு பாடலின் முதற்பொருளாவது அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலம் மற்றும் நடக்கின்ற பொழுது.

  குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்
  முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்
  மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்
  நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்
  பாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும் அல்லது தம் இயல்பில் திரிந்த ஏனைய நிலங்கள்

  இந்த ஐவகை நிலங்களுக்குப் பொழுதுகள் உண்டு. அவைகளும் இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் வகைப்படும்.

  ஒவ்வொரு நிலத்துக்குரிய பொழுதுகளைப் பார்க்கும் முன்னர் பெரும்பொழுதுக்கும் சிறுபொழுதுக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.

  ஒரு ஆண்டைப் பிரித்தால் வருகின்றவை பெரும்பொழுதுகள். ஒரு நாளைப் பிரித்தால் வருகின்றவை சிறுபொழுதுகள்.

  பெரும் பொழுதுகள் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில்
  சிறு பொழுதுகள் – மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல்

  ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறுபொழுதுகளையும் புரிந்து கொண்டோம். இனி எந்தெந்தத் திணைக்கு எந்தெந்தப் பொழுதுகள் என்று பார்க்கலாம்.

  முல்லைத் திணை – கார்காலமும் மாலைப் பொழுதும்
  குறிஞ்சித் திணை – கூதிர் காலமும் யாமப் பொழுதும்
  மருதத் திணை – வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்
  நெய்தல் திணை – பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்
  பாலைத் திணை – நண்பகலும் வேனிற் காலமும்

  கங்கை அமரன் எழுதிய ”அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அந்தி வந்திருக்கிறது. அந்தி சாய்வது மாலை நேரம். அப்படியானால் இந்தப் பாடல் வரி முல்லைத்திணை என்று சொல்லலாம்.

  வைரமுத்துவின் ஒரு பாடலைச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.
  பகலும் இரவும் உரசிக் கொள்ளும்
  அந்திப் பொழுதில் வந்துவிடு
  அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
  உயிரைத் திருப்பித் தந்து விடு

  என்ன, கண்டுபிடித்து விட்டீர்களா? கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்தப் பாடலில் அந்திப் பொழுது வருவதால் முல்லைத்திணையிலும் சேர்க்கலாம். அலைகளும் கடற்கரையும் பாடலில் வருகின்றன. அதனால் நெய்தற் திணையிலும் சேர்க்கலாம். ஆனால் இலக்கணப்படி ஒரு பாடல் ஒரு திணையில்தான் இருக்க வேண்டும். ஆனால் திணை மயக்கமாக ஒன்றிரண்டு பொருட்கள் கலந்து வரலாம். ஆனாலும் பெரும்பாலான பொருட்களின் படிதான் திணையை முடிவு செய்ய வேண்டும்.

  சரி. தொடங்கிய இடத்துக்கு வருவோம். இரவும் அல்லாத பகலும் அல்லாத வரிகளை வைத்து கண்கள் இரண்டால் பாடல் எந்தத் திணை என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்!

  கண்கள் இரண்டால் பாடலின் சுட்டி – http://youtu.be/XgA6NgC-vN0

  அன்புடன்,
  ஜிரா

  124/365

   
  • Saba 11:06 am on April 4, 2013 Permalink | Reply

   Hi Gira
   Hope you wont mind me typing in English. To write in Tamil I have to use my whole lunch hour without my meal. 😦
   I have learnt ஐவகை நிலங்கள் at school, but never learnt to apply it properly. I was confused when you have mentioned ” thinai” on most of your previous posts and I have referred a dictionary too, but was unsuccessful. Today after reading your post it had dawn to me. Thanks for the விளக்கம்.

   அய்யாம் பிலானிங் டு டேக் எ பிரிண்டு 🙂

   சபா

   • GiRa ஜிரா 1:10 pm on April 6, 2013 Permalink | Reply

    உங்களுக்கு எதுல எழுதுறதுக்கு வசதியோ அதுல எழுதுங்க. 🙂

    உங்களுக்கு இந்த பதிவு உதவியா இருந்ததுன்னு தெரிஞ்சு மிக்க மகிழ்ச்சி.

  • amas32 10:00 pm on April 4, 2013 Permalink | Reply

   /இரவும் அல்லாத பகலும் அல்லாத/ முல்லைத் திணை, மருதத் திணை இரண்டும் வருகிறதே!
   அந்தி மாலை, வைகறை இரண்டுமே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் தாமே 🙂

   amas32

   • GiRa ஜிரா 1:11 pm on April 6, 2013 Permalink | Reply

    சரியாச் சொன்னிங்க. இரண்டில் எதையும் சொல்லலாம். ஆனா பாட்டுல எந்தத் திணைக்குரிய பொருட்கள் நிறைய இருக்கோ அதை வெச்சு முடிவுக்கு வரனும் 🙂

 • G.Ra ஜிரா 10:48 am on April 2, 2013 Permalink | Reply
  Tags: கஸ்தூரி, ஷாகுல் ஹமீது   

  குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்! 

  தண்ணீர் தண்ணீர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தில் கண்ணதாசனும் வைரமுத்துவும் பாடல்களை எழுதியிருக்க, ஒரு நாட்டுப்புற பாட்டையும் மெட்டமைத்துப் பயன்படுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர்.

  மானத்திலே மீனிருக்க
  மதுரையிலே நீயிருக்க
  சேலத்திலே நானிருக்க
  சேருவது எக்காலம்?
  பாடியவர் – கஸ்தூரி
  பாடல் – நாட்டுப்புறப் பாட்டு
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Xqf6s_bFU8A#t=3m9s

  சுமை தூக்கிச் செல்லும் பெண் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே நடக்கின்றாள். அப்படி அவள் பாடும் அடுத்த வரியைக் கேட்கும் போது வேறொரு பாடல் நினைவுக்கு வந்தது.

  கார வீட்டுத் திண்ணையிலே கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
  என்ன பொடி போட்டானோ இழுத்தரைக்க முடியலையே

  இப்போது புரிந்திருக்கும் எனக்கு நினைவுக்கு வந்த பாட்டு எது என்று. திருடா திருடா படத்தில் வந்த “ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல” பாடல்தான் அது.

  கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில
  மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரைச்சவளே
  பாடியவர் – சாகுல் அமீது
  பாடல் – வைரமுத்து
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/F-gNjRvJcuY

  ஒரு நாட்டுப்புறப் பாடலின் வரியை அப்படியே எடுத்து காட்சிக்குப் பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் கவிப்பேரசு வைரமுத்து.

  மஞ்சள் தமிழ்ப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு ஊரின் வளமையைக் காட்ட இஞ்சியும் மஞ்சளும் விளையும் மண் என்று புலவர்கள் தாங்கள் எழுதும் பாடல்களில் குறிப்பிடுவார்கள்.

  மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது. அதுவும் கொத்துக் கிழங்குகளாக இருக்கும். மஞ்சளில் பலவகைகள் இருந்தாலும் கிழங்கு மஞ்சளும் கஸ்தூரி மஞ்சளும் விரலிமஞ்சளும் தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

  கிழங்கு மஞ்சள் உருண்டையாக இருக்கும். முன்பெல்லாம் குளியலறைகளில் உளியால் கொத்தப்பட்ட வட்டவடிவமான சிறு கல் இருக்கும். அதில் காய்ந்த கிழங்கு மஞ்சளை உரசி பெண்கள் பூசிக் குளிப்பார்கள். இப்போதெல்லாம் மஞ்சள் பொடியாகவே வந்து விடுவதால் யாரும் மஞ்சளை உரசிப் பூசுவதில்லை. கஸ்தூரி மஞ்சளும் இதற்குத்தான் பயன்படுகிறது. கிழங்கு மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சள் நறுமணம் நிறைந்தது.

  சரி. நாம் உணவில் கலக்கும் மஞ்சள் எது? அது விரலிமஞ்சள். விரல் விரலாக நீளமாக இருக்கும். இந்த மஞ்சள் கொத்தைத்தான் பொங்கலன்று வழிபாட்டில் வைப்பார்கள். இந்த மஞ்சளைத் துண்டு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த பின் இடித்து வைத்துக் கொண்டால் அந்தப் பொடி உணவு வகைகளில் சேர்க்கப் பயன்படும்.

  மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி. வயிற்றுக்குள் சென்று கிருமிகளைக் கொல்வது மட்டுமல்லாமல் உணவுப் பொருள் கெட்டுப் போகாமலும் இருக்கப் பயன்படுகிறது. அசைவச் சமையலில் மஞ்சளைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். பட்டிக்காடுகளில் சமைக்கும் முன்னர் கோழியையும் மீனையும் மஞ்சள் தேய்த்துக் கழுவுவார்கள். அதே போல ஆட்டுக்கறியில் உப்புக்கண்டம் செய்யும் போது மஞ்சள் சேர்க்கப்படும்.

  மஞ்சள் புகை நுரையீரலுக்கும் சளிக்கும் நல்லதென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். காய்ந்த விரலிமஞ்சளை லேசாக விளக்கின் சுடரில் காட்டி முகர்ந்தால் சளித்தொல்லை அண்டாது.

  ஆரத்தி எடுக்கின்றார்கள் அல்லவா, அது ஏன் சிகப்பாக இருக்கிறது? சுண்ணாம்புக் கரைசலில் சிறிது மஞ்சளைக் கரைத்து ஆரத்தி எடுப்பார்கள். இந்த ஆரத்திக் கரைசலை வருகின்றவர்கள் நெற்றியில் பொட்டாக வைத்து தட்டில் மிச்சமிருக்கும் கரைசலை வாசலின் இரண்டு பக்கத்திலும் கொட்டி விடுவார்கள். இந்தக் கரைசல் சிறந்த கிருமிநாசனி. இதையெல்லாம் மருத்துவத்தில் தனிப்படிப்பாக படிக்காமல் வாழ்க்கை முறையிலேயே செய்திருக்கிறோம். இன்றைக்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து விடுகிறார்கள். காரணத்தை விட்டுவிட்டு காரியத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

  குங்குமம் செய்யும் மூலப்பொருளும் மஞ்சள் பொடியே. அதைப் பெண்கள் நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்வதாலும் ஆண்கள் பூசிக் கொள்வதாலும் என்ன பயன் உண்டாகும் என்று இனியும் விளக்க வேண்டியதில்லை.

  இன்றைக்கு மஞ்சள் குங்குமங்கள் குறைந்து வேதியியல் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் குங்குமத்தை நெற்றியில் சூட்டிக் கொள்வதால் பலருக்கு நெற்றியில் அந்த இடம் கருத்துப் போகிறது. நல்ல மஞ்சள் குங்குமத்தை கையில் தேய்த்தால் கையில் மஞ்சள் நிறம் பரவும். மஞ்சளின் நறுமணமும் கிளம்பும்.

  இப்போது சொல்லுங்கள். மஞ்சள் மங்கலப் பொருள்தானே?!

  அன்புடன்,
  ஜிரா

  122/365

   
  • kamala chandramani 1:20 pm on April 2, 2013 Permalink | Reply

   அருணகிரிநாதர் பல திருப்புகழ்ப் பாடல்களிலும் ‘மஞ்சள் மினுக்கிகள்’ என்பார்.அந்தக்காலத்து அழகு சாதனம் மஞ்சள். இப்போது கண்ட க்ரீம்களையும் தடவி முகத்தைப் பாழடித்துக்கொள்கிறார்கள்.அருமையான பதிவு

  • Saba 3:11 pm on April 2, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

   மஞ்சளில் உள்ள alkaloid கேர்கியூமின் (curcumin) என அழைக்கப்படும். வைத்திய துறையில் Alzheimer நோய்க்கு தற்போது முன்னோடி மருந்து.
   Research shows that the Alzheimer disease is very low in Subcontinent and is due to curcumin in curries. American president late Ronald Reagan would have been in right mind if he and if he would have changed the diet to curries. Many curcumin tablets are available nowadays which are extracted from our humble மஞ்சள்.

   சில சுட்டிகள்:
   (http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1702408/)

   (http://curcumin-turmeric.net/)

  • amas32 7:22 pm on April 2, 2013 Permalink | Reply

   மஞ்சளுக்கான காப்பீட்டு உரிமையை அமெரிக்கா பெற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டு வருவதைப் பற்றி நான் கொஞ்ச நாட்கள் முன்னாடி இணையத்தில் படித்தேன். இந்தியா முழித்துக் கொண்டு ஆவன செய்திருக்கும் என்று நம்புவோமாக!

   மஞ்சளுக்கு இன்னொரு மகிமையும் உண்டு. வேண்டாத ரோமங்களை உதிர்க்க இதை பயன்படுத்திப் பலன் பெறலாம். அதனால் தான் அந்த காலத்தில் பெண்கள் முகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்தனர், to get rid of unwanted facial hair!

   Very nice post 🙂

   amas32

   • Niranjan 8:09 pm on April 2, 2013 Permalink | Reply

    அருமையான பதிவு. Super Gira 🙂 🙂

 • G.Ra ஜிரா 12:14 pm on February 1, 2013 Permalink | Reply  

  ஆறுபடை வீடு 

  ஏதாவது பண்டிகை வந்தால் கந்தன் கருணை திரைப்படம் ஏதாவது ஒரு டிவியில் ஒளிபரப்பப்படும். அவ்வளவு பிரபலமான திரைப்படம். அந்தப் படத்துக்கு இசையமைத்ததற்கான கே.வி.மகாதேவனுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த அளவுக்கு அருமையான பாடல்கள். அதிலும் படம் முடியும் போது வரும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற பாடல் மிகமிக அருமையாக இருக்கும்.

  பாடலை இந்தச் சுட்டியில் காணலாம் – http://youtu.be/ZMPyfZDubSE

  தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் ஒரு வரிசையில் சொல்வார் அந்தப் பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசன். அந்தப் பாடலில் வரும் வரிசையில் ஆறுபடை வீடுகளை முதலில் பார்ப்போம்.

  பழனி – ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு
  சுவாமிமலை – தந்தைக்கு உபதேசம் செய்த மலை
  திருச்செந்தூர் – சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு
  திருப்பரங்குன்றம் – குறுநகை தெய்வானை மலரோடு திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு
  திருத்தணி – வள்ளி தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து காவல் புரிய என்று அமர்ந்த மலை
  பழமுதிர்ச்சோலை – கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை

  இந்த வரிசையைப் பார்த்தால் முருகன் குழந்தையாக இருந்து வள்ளி தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டு அருள் புரிவதை வாழ்க்கை வரலாறு போலச் சொல்வதைப் புரிந்து கொள்ளலாம்.

  ஆனால் அறுபடை வீடுகளுக்கு இது சரியான வரிசையா? ஏ.பி.நாகராஜன் விளக்கிய காட்சியமைப்புக்கு கண்ணதாசன் எழுதிய வரிகள் குற்றமா?

  அந்த விவரத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டியது படை வீடு என்றால் என்ன என்பது.

  ஒரு அரசன் தன்னுடைய படைகளோடு இன்னொரு நாட்டின் மீது போருக்குச் செல்லும் போது வழியில் எங்கெல்லாம் தங்குகிறார்களோ, அந்த இடம் படைவீடு எனப்படும். அதாவது படை தங்கும் இடம்.

  அப்படியானால் அறுபடை வீடு என்பது முருகன் சூரனை அழிப்பதற்காக படையோடு இமயத்திலிருந்து வரும் வழியில் தங்கிய இடங்கள் அறுபடை வீடுகளா?

  இல்லை. இமையத்திலிருந்து தமிழகம் வரும் வரை எங்கும் தங்காமல் தமிழகத்தில் மட்டும் ஆறு இடத்தில் முருகனின் படை தங்கியது என்பது ஏற்புடைய கருத்து அல்ல.

  அப்படியானால் அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

  புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.

  ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

  பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

  செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

  ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

  அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.

  சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?

  முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்
  இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
  மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)
  நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)
  ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல்
  ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை

  மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

  காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

  குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.

  அன்புடன்,
  ஜிரா

   
  • kamala chandramani 1:06 pm on February 1, 2013 Permalink | Reply

   ஆறுபடை வீட்டின் பெயர்க்காரண விளக்கம் அருமை.”காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப்பெருமான் தமிழர்களுக்கு சொந்தப் பெருமான்”

   • GiRa ஜிரா 8:57 pm on February 1, 2013 Permalink | Reply

    உண்மைதானம்மா. அதனால்தானோ என்னவோ முருகனுக்கு மட்டும் தமிழ்க்கடவுள் என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.

  • amas32 (@amas32) 1:53 pm on February 1, 2013 Permalink | Reply

   ரொம்ப அருமையான பதிவு. முருகனைப் பற்றி எவ்வளவு முறை படித்தாலும் கேட்டாலும் இன்பமே. ஆற்றுப் படை ஆறு படையாக மருவியது பற்றிய விளக்கம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

   நீங்கள் கூறியிருக்கும் படி ஆறுபடை வீடுகளும் தமிழ் நாட்டில் அமைந்திருப்பது தற்செயலான விஷயம் மட்டும் அல்ல நமது பாக்கியமும் கூட!

   நடிகை கே.ஆர்.விஜயா அவர்கள் ஒரே நாளில் ஆறு படை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்து வந்தது அந்நாளில் பெருமையாகப் பேசப்பட்டது. அவர் அப்போது சொந்த விமானம் வைத்திருந்தார்.

   amas32

   • GiRa ஜிரா 9:00 pm on February 1, 2013 Permalink | Reply

    என்னது? ஒரே நாளில் ஆறுபடைவீடுகளுக்கும் போனாரா. எப்படிப் போனார் என்றே தெரியவில்லையே. அந்தக்காலத்தில் சாலை வழியாகப் போனாலும் நேரம் பிடிக்குமே. ஏரோப்பிளேன் இருந்தாலும் சென்னையிலிருந்து மதுரைக்கும் திருச்சிக்கும்தானே போயிருக்க முடியும். தூத்துக்குடி விமானநிலையம் பின்னாளில் வந்ததுதானே. எப்படியோ.. போயிருக்கிறார் என்றால் அது வியப்புதான்.

  • Mohanakrishnan 11:03 pm on February 1, 2013 Permalink | Reply

   அருமை ஜிரா. கண்ணதாசன் சொல்லும் வரிசை கதை சொல்வது போல் அழகு.

   சமீபத்தில் அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் இருக்கும் படவேடு சென்றிருந்தேன். நிறைய இடங்களில் ஊரின் பெயர் படை வீடு என்றே இருந்தது. படை வீடு என்றால் முருகன் தலமாக இருக்க வேண்டுமே என்று கேட்டேன். இல்லை உமாதேவி அம்சமான ரேணுகை இங்கு படையுடன் தங்கியதால் ‘படை வீடு’ என்று பெயர் பெற்றதாக சொன்னார்கள். உங்கள் பதிவை படித்தவுடன் முருகன் இருப்பது படை வீடு இல்லை என்று நன்றாக புரிகிறது.

  • Mohanakrishnan 11:06 pm on February 1, 2013 Permalink | Reply

   படையப்பா என்பது முருகன் பெயர் இல்லையா? (ரொம்ப முக்கியம்!)

 • G.Ra ஜிரா 10:35 am on January 8, 2013 Permalink | Reply
  Tags:   

  கலக்கல் 

  ஒரு இனிய காதற் சுவை நிறைந்த பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதியது. பி.எஸ்.சசிரேகாவும் இளையராஜாவும் இணைந்து பாடியது.

  விழியில் விழுந்து
  இதயம் நுழைந்து
  உயிரில் கலந்த உறவே

  இதில் வரும் கலந்த என்ற சொல் வேறொரு பாடலை நினைவுபடுத்தியது. அதுவும் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்தான். எஸ்.ஜானகியும் கமலகாசனும் சேர்ந்து பாடிய சிவப்பு ரோஜாக்கள் படப் பாடல். அட! இரண்டு பாடல்களுமே பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த படங்களில் உள்ளவை.

  நினைவோ ஒரு பறவை
  விரிக்கும் அதன் சிறகை
  பறக்கும் அது கலக்கும் தன்னுறவை

  இரண்டு பாடல்களில் இருக்கும் ஒற்றுமை என்ன?

  அது உறவைக் கலப்பது. இந்த கலக்கல் தமிழில் எவ்வளவு பழையது என்று யோசித்துப் பார்த்தேன். தொல்காப்பியரின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. ஆம். தொல்காப்பியத்துப் பாடல்தான். பொருளதிகாரத்தின் மரபியலில் வரும் பாடல்.

  நிலம்தீ நீர்வளி விசும்பொ டைந்துங்
  கலந்த மயக்கம் உலகம்

  இந்தப் பாடலின் பொருள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதற்குள் ஒரு செய்தி ஒளிந்திருக்கிறது. அந்தப் பாடலைச் சீர் பிரித்து எளிமையாகத் தருகிறேன். எளிதில் புரியும்.

  நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
  கலந்த மயக்கம் உலகம்

  நிலம், தீ, நீர், வளி(காற்று), விசும்பு(வானம்) ஆகிய ஐந்தும் கலந்த மயக்கமே உலகம் எனப்படும்.

  ஆக.. இந்த ஐந்தும் கலந்ததுதான் உலகம். இல்லை. இல்லை. கலந்த மயக்கமே உலகம்.

  அதென்ன கலந்த மயக்கம்?

  கலப்பதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைச் சேர்ப்பதுதான். மயக்கம் என்பதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றைச் சேர்ப்பதுதான். ஆனால் ஒரு வேறுபாடு உண்டு. அதென்ன?

  கலந்தவைகளை பிரித்து எடுத்து விடலாம். மயங்கியவைகளை பிரித்து எடுக்க முடியாது.

  ஒரு கூடை முத்துகளும் ஒரு கூடை வைரங்களும் கலந்து விட்டால் பிரித்து எடுத்து விடலாம். ஆனால் குழம்பில் இட்ட உப்பைப் பிரிக்க முடியுமா? குழம்பில் உப்பு கலப்பது மயக்கம் எனப்படும். இன்னொரு எளிய எடுத்துக்காட்டு சொல்கிறேன். சரக்கோடு சோடாவைக் கலப்பதும் மயக்கமே.

  பிரிக்க முடியாதவாறு கலப்பதுதான் மயக்கம்.

  ஆனால் இந்த இரண்டு பாடல்களிலும் காதல் மிகுந்து உறவு இணையப் பாடுகின்றவர்கள் உறவு கலந்ததைப் பற்றித்தான் பாடுகிறார்கள். மயங்கியதைப் பற்றிப் பாடவில்லை. ஒருவேளை பிரிவு வரும் என்று நினைத்து உறவு கலந்தது என்று பாடுகின்றார்களோ!

  ஆனாலும் மயங்கிய உறவுகளும் உண்டு.

  மயங்கினேன்
  சொல்லத் தயங்கினேன்
  உன்னை விரும்பினேன் உயிரே
  (நானே ராஜா நானே மந்திரி படத்தில் பி.சுசீலாவும் ஜெயச்சந்திரனும் இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்)

  இந்த மயக்கம் என்பது மயக்கம் போட்டு விழுவதல்ல. அவளுடைய மனம் அவன் மீதானா காதலோடு கலந்து மயங்கி விட்டது. இனிமேல் அவளுடைய அந்த மயக்கத்தைப் பிரிக்கவே முடியாது என்று பொருள்.

  காதல் மயக்கம்
  அழகிய கண்கள் சிரிக்கும்
  ஆலிங்கனங்கள் பரவசம்
  இன்று அனுமதி இலவசம்
  என்று வைரமுத்து புதுமைப்பெண் படத்துக்காக எழுதிய பாடலைப் பாருங்கள். பாடியவர்கள் ஜெயச்சந்திரனும் சுனந்தாவும்.

  இதில் கவிஞர் காதல் கலக்கல் என்று எழுதவில்லை. காதல் மயக்கம் என்று சரியாக எழுதியிருக்கிறார்.

  மயங்காத மனம் யாவும் மயங்கும்
  அலை மோதும் ஆசைப் பார்வையாலே
  என்று ஆலங்குடி சோமு எழுதியது எவ்வளவு உண்மை(காஞ்சித் தலைவன் படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையில் பாடியவர் பி.பானுமதி).

  காதலில் எத்தனை மயக்கங்களோ! எத்தனை கலக்கல்களோ!

  அன்புடன்,
  ஜிரா

  038/365

   
  • @anuatma 12:36 pm on January 8, 2013 Permalink | Reply

   நல்ல விளக்கம். chemistry பாடம் மாதிரி இருக்கு. 🙂

  • @RRSLM 9:52 am on January 9, 2013 Permalink | Reply

   கலக்கல் GiRa….:-)

  • amas32 (@amas32) 3:04 pm on January 13, 2013 Permalink | Reply

   மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? இது கண்ணதாசன் பாடல் தானே? மயக்கம் வேறு கலக்கம் வேறு என்று பாகுபடுத்திச் சொல்லிவிட்டாரே 🙂

   //ஆனால் இந்த இரண்டு பாடல்களிலும் காதல் மிகுந்து உறவு இணையப் பாடுகின்றவர்கள் உறவு கலந்ததைப் பற்றித்தான் பாடுகிறார்கள். மயங்கியதைப் பற்றிப் பாடவில்லை. ஒருவேளை பிரிவு வரும் என்று நினைத்து உறவு கலந்தது என்று பாடுகின்றார்களோ!// Super!

   amas32

 • என். சொக்கன் 8:10 am on December 4, 2012 Permalink | Reply  

  தண்ணீர் ஆடை 

  • படம்: மகாநதி
  • பாடல்: தை பொங்கலும் வந்தது
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: K. S. சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=wwzL-BhmVMw

  தைப் பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது, பார்த்துச் சொல்லடியோ,

  வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியைப் போற்றிச் சொல்லடியோ,

  இந்தப் பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி,

  இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி!

  கவிஞர் வாலியின் திரைப்பாடல் வரிகளில் நிறைய பழந்தமிழ் இலக்கியத் தொடர்ச்சியைப் பார்க்கலாம். அதாவது, அன்றைய புலவர்கள் பயன்படுத்திய பல உத்திகளை இவரும் மிக நுட்பமாகவும் அழகோடும் போகிற போக்கில் சொல்லிவிடுவார்.

  உதாரணமாக, இந்தப் பாடலில் காவிரி ஆற்றை அவர் இப்படி வர்ணிக்கிறார்: ‘தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கை’!

  பூமியில் பெரும்பகுதி தண்ணீர் என்பதாலேயோ என்னவோ, நில மகளைத் ‘தண்ணீர்ச் சேலை கட்டிய பெண்’ என விவரிப்பது ஒரு பழைய மரபு, இதைச் சொல்லும் ஒரு பிரபலமான பாடலை நீங்கள் நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள்: ‘நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை’!

  ’மனோன்மணீயம்’ காவியத்தில் இடம்பெறும் இந்தப் பாடல், நம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தாக மாறியுள்ளது. அதன் முதல் வரிக்கு அர்த்தம், ‘நீர் நிறைந்த கடலை உடுத்திய நில மகளே!’

  இன்னும் கொஞ்சம் பழைய உதாரணம் வேண்டுமா? கம்பன் வரி: மூரி நீர் ஆடை இரு நில மடந்தை.

  ’மூரி நீர்’ என்றால் வலிமை மிகுந்த (கடல்) நீர், அதனால் செய்த ஆடையை உடுத்திய ‘இரு நில மடந்தை’, பெரிய பூமிக்குத் தலைவியாகிய நிலமகள்!

  ***

  என். சொக்கன் …

  03 12 2012

  003/365

   
  • prasannaa 8:41 am on December 4, 2012 Permalink | Reply

   superb. vaali, vaali than. simply amazing.

  • GiRa ஜிரா 2:22 pm on December 4, 2012 Permalink | Reply

   நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை… அழகு. அழகு.

   நாமநீர்வேலி என்று இளங்கோ சொல்வதும் கிட்டத்தட்ட இதுதான். உலகுக்கு வேலி. உடலுக்கு ஆடை.

   கலக்கல் நாகா.

  • Muthu Ganesh 3:30 pm on December 4, 2012 Permalink | Reply

   “மூரி நீர் ஆடை இரு நில மடந்தை.”

   இதில் “இரு நில” மென்றால் என்ன ? எதை குறிபிடுகிறார் ?

   thanks.

   • என். சொக்கன் 3:34 pm on December 4, 2012 Permalink | Reply

    இங்கே இரு = பெரிய, இரு நிலம் என்றால் பெரிய நிலம், இரண்டு என்ற அர்த்தம் இல்லை

    • Vijay 2:31 pm on December 5, 2012 Permalink

     எனக்கும் அதே சந்தேகம். விளக்கத்திற்கு நன்றி ஐயா.

  • Kannabiran Ravi Shankar (KRS) 6:43 pm on December 5, 2012 Permalink | Reply

   “கடல் உடுத்த”
   இந்தச் சொல்லைக் கேட்கும் போதே, அப்படியொரு அழகு!

   நீர் ஆரும் கடல் உடுத்த = தமிழ்த் தாய் வாழ்த்து
   ஆனா, 2000 வருசத்துக்கு முன்னாடியே, இன்னொருத்தரும் “கடல் உடுத்த” -ன்னு எழுதறாரு:)

   இருங் கடல் உடுத்த, இப் பெருங் கண் மா நிலம்
   = புறநானூறு

   அதே மோகம், அதே தாகம் – வாலிக்கும் இருக்கு;
   அதான் – தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி – ன்னு தானா வந்து விழுகுது கவிஞருக்கு; வாலி வாழ்க!
   ——-

   கடலை எதுக்கு ஆடையாச் சொல்லணும்?

   நீங்க சொன்னது போல், கடல் பெருசு;
   நம்ம உடம்பை விட, அதில் சுத்துற புடைவை பெருசு
   அதே போல் நிலத்தை விட, அதைச் சுத்தி இருக்கும் கடல் பெருசு!

   ஆனா, இதிலே இன்னொரு நுட்பமும் வைக்குது புறநானூறு;
   கொஞ்சம் A+ meaning:)
   பெண் புடைவை சுற்றிக் கொள்வது பிறர் முன்பு; ஆனா கொண்டவன் முன்பு?:)

   அதே போல், வெளிநாட்டவர் கடல் தாண்டி, இந்தியாவுக்குள் வரும் போது…
   தமிழ்நாடு (இன்று இந்தியா) என்னும் நில மடந்தை
   நாட்டின் இரு பக்கமும் புடைவை சுற்றிக் கொண்டு தெரிகிறாள்;
   அந்தக் கடற்கரை மணலே = மாராப்பாம் (புடைவை Border:)

   ஆனால், தமிழ் நாட்டை ஆளும் பாண்டிய மன்னவனுக்கோ, கொண்டவன் என்பதால், புடைவை இன்றித், தன்னை அப்படியே கொடுக்கிறாள்:)
   – இப்படியொரு கற்பனை சங்கக் கவிஞனுக்கு:))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel