Updates from April, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 11:48 am on April 19, 2013 Permalink | Reply
  Tags: சேக்கிழார்   

  காற்றின் வகைகள் 

  நடிகை குஷ்புவை இந்தப் பாடல் மிகமிக உயரத்துக்கு கொண்டு சென்றது என்றால் மிகையில்லை. ஆம். குஷ்புவின் திரைவாழ்வில் இந்தப் பாடலின் பங்கும் பெரிதுதான்.

  பூப்பூக்கும் மாசம் தைமாசம்
  ஊரெங்கும் வீசும் பூவாசம்
  ………………………….
  குழந்தைகள் கூட குமரியும் ஆட
  மந்தமாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
  பாடல் – வாலிபக் கவிஞர் வாலி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – வருஷம் பதினாறு
  பாடலின் சுட்டி – http://youtu.be/AfAZQd7bHbk

  இந்த இனிய பாடலில் இரண்டு சொற்கள் நாம் கவனிக்கத்தக்கவை. பொதுவாகப் நாம் பயன்படுத்தாதவை.

  மந்தமாருதம்
  மலையமாருதம்

  இவற்றின் பொருள் புரிய வேண்டுமென்றால் மாருதம் என்பதற்குப் பொருள் முதலில் புரிய வேண்டும்.

  வடமொழியில் மாருதம் என்றால் காற்று. வாயுவாகிய காற்றின் மைந்தனான அனுமனுக்கு அதனால் மாருதி என்றே பெயர்.

  சரி. மாருதம் புரிந்து விட்டது. அதென்ன மந்தமாருதமும் மலையமாருதமும்?

  மந்தமாக வீசும் காற்று மந்தமாருதம். அதாவது மெல்ல வீசும் தென்றல்காற்றுக்கு வடமொழியில் மந்தமாருதம் என்று பெயர்.

  அப்பூதியடிகள் நமக்குத் தெரிந்தவர். திருநாவுக்கரசர் பெயரில் பல நற்பணிகளைச் செய்தவர். அவர் நடத்திய தண்ணீர்ப் பந்தலில் மந்தமாருதம் வீசியதாக திருத்தொண்டர் புராணம் சொல்கிறது.

  வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
  பந்தர்
  உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளிச்
  சிந்தை வியப்பு உற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
  சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்

  திருநாவுக்கரசர் வருகிறார். அங்கே ஒரு தண்ணீர்ப்பந்தல். மந்தமாருதம்(தென்றல்) வீசும் சீதப்(குளிர்ந்த) பந்தல். அங்கு தண்ணீர் அமுதமாய் இருக்கிறது. யார் இதைச் செய்தது என்று பார்க்கிறார். திருநாவுக்கரசர் என்று அவருடைய பெயர் இருப்பதைப் பார்த்து வியந்து போகிறார். இதுதான் மேலுள்ள பாட்டின் எளிமையான பொருள்.

  சரி. மந்தமாருதம் புரிந்து விட்டது. மலைய மாருதம்? இதுவும் எளிமைதான். மலையிலிருந்து வரும் காற்று மலைய மாருதம்.

  கலை உவா மதியே கறி ஆக, வன்
  சிலையின் மாதனைத் தின்னும் நினைப் பினாள்,
  மலையமாருத மா நெடுங் கால வேல்
  உலைய மார்பிடை ஊன்றிட ஓயு மால்

  மேலேயுள்ளது கம்பராமாயணப் பாடல். இது மலையமாருதத்தை காலனின் வேல் என்று குறிப்பிடுகிறது? ஏன்? அது சூர்ப்பனகையை அந்த அளவுக்குத் துன்புறுத்துகிறது. காதல் உள்ளத்தில் கொதிக்கும் போது காதலன் அருகில் இல்லாத போது மலைக்காற்று குளுமையாக வீசினால் அது கொடுமையாகத்தானே இருக்கும். அதனால்தான் இனிய மலைக்காற்றை சூர்ப்பனகையைக் கொல்லும் காலனின் வேல் என்று சொல்கிறார் கம்பர்.

  இந்த மந்தமாருதமும் மலையமாருதமும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. பக்தி இலக்கியங்கள் எழுந்த காலத்துக்குப் பிறகுதான் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. வடமொழியும் தென்மொழியும் கலந்து பயிலத் தொடங்கிய காலத்தில் இந்தச் சொற்கள் உண்டாகியிருக்க வேண்டும்.

  சரி. இன்னொரு மாருதமும் இருக்கிறது. அதுதான் சண்டமாருதம். சண்டித்தனம் செய்யும் காற்றுக்குச் சண்டமாருதம் என்று பெயர். அதாவது சூறாவளி. வீசுகின்ற இடமெல்லாம் அழிவைச் செய்யும் சூறாவளியைச் சண்டமாருதம் என்று வடமொழி அழைப்பதில் தவறில்லையே.

  அன்புடன்,
  ஜிரா

  139/365

   
  • n_shekar 12:09 pm on April 19, 2013 Permalink | Reply

   சூப்பர் – தினம் ஒரு புதிய வேள்வி – நானும் கற்று கொள்கிறேன் – மிக்க நன்றி :))

   • GiRa ஜிரா 2:10 pm on April 19, 2013 Permalink | Reply

    ஆகா. சேகர் சார். உங்க பின்னூட்டத்தைப் பாத்து ரொம்ப சந்தோஷம்.

  • Kaarthik Arul 2:30 pm on April 19, 2013 Permalink | Reply

   மாருதம் மட்டுமே இதுவரை கேள்விப் பட்டிருந்தேன். மந்த. மலைய, சண்ட மாருதங்களை இப்போதுதான் அறிகிறேன். நன்றி. ஆனால் இங்கே ‘மலையமாருதம் பாடுது’ என்று வருவதால் மலையமாருதம் ராகத்தை அல்லவா குறிக்கிறது?. ஆனால் இப்பாடல் அமைந்துள்ள ராகம் மலையமாருதம் இல்லை தர்மவதி 🙂

   மலையமாருதம் ராகத்தில் அமைந்துள்ள சில பாடல்கள் – கண்மணி நீ வரக் காத்திருந்தேன், தென்றல் என்னை முத்தமிட்டது கோணாத செங்கரும்பு, ரகசியமாய்..

   • GiRa ஜிரா 2:54 pm on April 19, 2013 Permalink | Reply

    நீங்க கேட்ட கேள்வி ரொம்பவே அழகான கேள்வி.

    மலையமாருதம்னு ஒரு ராகம் இருக்கே. அதுவாக்கூட இருக்கலாமேன்னு. அந்த ராகத்துக்குப் பெயரே மலையமாருதத்தின் பண்பிலிருந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும். இந்தப் பெயரும் ஹிந்துஸ்தானியில் இருக்க வாய்ப்புகள் குறைவு.

    சரி. உங்க கேள்விக்கு வருவோம். நீங்கள் சொல்வது பொருள் கொள்ளலாமா? கொள்ளலாம். ஆனால் அது இலக்கியத்தரமான பொருளாகக் கருதப்படாது. காரணம்?

    மந்தமாருதம் வீசுது – இது செய்வினை
    மலையமாருதம் பாடுது – மலைக்காற்றே பாடுகிறது என்று எடுத்துக் கொண்டால் செய்வினை. மலையமாருதம் என்னும் ராகம் பாடப்படுகிறது என்றால் செயப்பாட்டு வினை.

    ஒரே வரியில் அடுத்தடுத்து செய்வினைகள் வருவது இலக்கியத்தில் பொருத்தமாகக் கருதப்படும். வினைகளைத் தாண்டிக் குதிப்பது திரைப்படப்பாடல்களில் நடப்பதுதான் என்றாலும் வாலி தமிழ் இலக்கணம் நன்கறிந்தவர்.

  • sankaranarayanan 7:50 pm on April 19, 2013 Permalink | Reply

   wonderful.

  • amas32 9:22 pm on April 19, 2013 Permalink | Reply

   Loved the Q by Karthik Arul and your reply to it. மந்தமாருதம், மலையமாருதம் சொல்லவே ரொம்ப இனிமையாக உள்ளது. மாருதம் எந்றறால் காற்று, மாருதி என்று அனுமனுக்கு இதனால் பெயர் வந்ததை இன்று தான் தெரிந்துகொணடேன்!

   அருமையான பாடல்! நடிப்பு, நடனம், இசை, குரல், பாடல் வரிகள், அனைத்தும் ஒரு சேர நன்றாக அமைவது அபூர்வம் தான்!

   amas32

  • Saba-Thambi 6:06 pm on April 20, 2013 Permalink | Reply

   First time I have heard சண்டமாருதம் -I learn something new whenever I visit this link. Please keep writing. You are doing a wonderful service to the Tamil Language. (Its a pity that I am posting in English – – (time factor 😦 )

 • என். சொக்கன் 2:06 pm on March 30, 2013 Permalink | Reply  

  மார்பெழுத்து 

  • படம்: முதல்வன்
  • பாடல்: முதல்வனே, என்னைக் கண் பாராய்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=w0XW5GFiDEA

  கொஞ்ச நேரம் ஒதுக்கி, கூந்தல் ஒதுக்கி,

  குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்!

  பீலி ஒன்றை எடுத்து, தேனில் நனைத்து,

  கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்!

  முதலமைச்சரைக் காதலிக்கும் ஒரு பெண் அவனுடைய நேரத்தை வேண்டிப் பாடுவதாக அமைந்த பாடல் இது. அதற்கு ஏற்ப முதல்வர், அமைச்சர், அதிகாரி, அரசாங்க அலுவலகம் சார்ந்த administration, hierarchy, bureaucracy, red tapism வார்த்தைகளாகத் தேடித் தொகுத்து, அதேசமயம் இதனை ஒரு ரசமான காதல் பாடலாகவும் தந்திருப்பார் வைரமுத்து. உதாரணமாக: கொடியேற்றம், பஞ்சம், நிவாரணம், நேரம் ஒதுக்குதல், குறிப்பு எழுதுதல், கையொப்பம், நிதி ஒதுக்குதல், திறப்பு விழா, ஊரடங்கு, வரிகள், நகர்வலம்…

  இதற்கெல்லாம் நடுவில், நம்முடைய தினசரிப் பேச்சிலும், சினிமாப் பாடல்களிலும்கூட அதிகம் பயன்படாத ஒரு வார்த்தை, ‘பீலி’.

  இந்த வார்த்தையைக் கேட்டதும், பள்ளியில் படித்த ஒரு திருக்குறள் ஞாபகம் வரும், ‘பீலிபெய் சாகாடும் அச்சு இறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’. இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள், என்னதான் லேசான மயில் இறகு என்றாலும், அதை Overload செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் வண்டி உடைந்துவிடும்.

  ஆக, பீலி என்றால் மயில் இறகு?

  ’பீலி சிவம்’ என்று ஒரு பிரபலமான நடிகர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணன் தலையில் மயில் இறகு உண்டு, சிவனுக்கும் பீலிக்கும் என்ன சம்பந்தம்?

  எனக்குத் தெரியவில்லை, ஓர் ஊகத்தைச் சொல்கிறேன், கோவையாக வருகிறதா என்று பாருங்கள்!

  கந்த புராணத்தில் ’குரண்டாசுரன்’ என்று ஓர் அசுரன், கொக்கு வடிவத்தில் திரிந்தவன், அவனை வீழ்த்தினார் சிவன், அந்த வெற்றிக்கு அடையாளமாக, அந்தக் கொக்கின் சிறகைத் தலையில் சூடிக்கொண்டார். இதைப் போற்றிப் பாடும் மாணிக்கவாசகரின் பாடல் வரி, ‘குலம் பாடி, கொக்கு இறகும் பாடி, கோல் வளையாள் நலம் பாடி…’

  சிவனுக்குப் ‘பிஞ்ஞகன்’ என்று ஒரு பெயர் உண்டு. இதற்குப் ‘பீலி அணிந்தவன்’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இதுதான் ‘பீலி சிவம்’ என்று மாறியிருக்குமோ?

  எனக்குத் தெரிந்து சிவன் மயில் இறகை அணியவில்லை, கொக்கின் இறகைதான் அணிந்தார். அப்படியானால் ‘பீலி’ என்பது மயிலிறகா, அல்லது வெறும் இறகா?

  பெரிய புராணத்தில் ஒரு பாடலில் ‘மயில் பீலி’ என்று ஒரு வார்த்தை வருகிறது. ஒருவேளை ‘பீலி’ என்பதே மயிலிறகாக இருந்தால், ‘மயில் பீலி’ என்று தனியே குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லையே!

  மேலே நாம் பார்த்த திருக்குறளில்கூட, மயிலுக்கு வேலையே இல்லை, இறகு என்று பொருள் கொண்டாலே அதன் அர்த்தம் கச்சிதமாகப் பொருந்துகிறது.

  ஆக, ‘பீலி’ = இறகு என்பது என் கணிப்பு. உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!

  அது நிற்க. சொல் ஆராய்ச்சி நிறைய செய்தாகிவிட்டது, கொஞ்சம் ஜொள் ஆராய்ச்சியும் செய்வோம்.

  இந்தப் பாடலில் வரும் முதல்வர் பீலியை எடுத்து (அதாவது, இறகுப் பேனாவை எடுத்து) தேனில் நனைத்து, காதலியின் மார்பில் கையொப்பம் இடுகிறார். இதென்ன விநோதப் பழக்கம்?

  இன்றைக்குப் பெண்கள் கையிலும் தோளிலும் காலிலும் மருதாணி அணிவதுபோல், அன்றைக்குத் தங்களின் மார்பில்கூட சந்தனத்தால் பலவிதமான பூ அலங்காரங்களை வரைந்துகொள்வார்கள். ஒருவிதமான மேக்கப். அதன் பெயர் ‘தொய்யில்’.

  அதைதான் இந்த முதல்வர் சுட்டிக்காட்டுகிறார், ‘பெண்ணே, உன் மார்பில் சந்தனத்தால் பூ அலங்காரமெல்லாம் எதற்கு? தேனைத் தொட்டு என் கையெழுத்தைப் போடுகிறேன்.’

  ***

  என். சொக்கன் …

  30 03 2013

  119/365

   
  • David 2:21 pm on March 30, 2013 Permalink | Reply

   எங்கள் ஊரில் பனங்கிழங்குக்கு நடுவில் இருக்கும் அந்த ஒற்றை குருத்துக்கு ‘பீலி’ என்றும் சொல்வர்.

   • Saba 3:27 pm on March 30, 2013 Permalink | Reply

    நம்ம ஊரிலும் அதே தான்

  • இசக்கியப்பன் 2:26 pm on March 30, 2013 Permalink | Reply

   பனங்(கொட்டை)கிழங்கில் இருந்து வரும் முதல் இலையையும் பீலி என்று அழைப்பதுன்டு

  • Saba 3:52 pm on March 30, 2013 Permalink | Reply

   பதிவை படித்த பின் அகராதி புரட்டியபோது……

   பீலி: 1. மயில், மயில் தோகை, மயில் தோகை விசிறி,
   2. வெண் குடை (white umbrella)
   3. பொன்
   4. மகளிரின் கால் விரல் அணி ((toe-ring)
   5. சிறு ஊது கொம்பு (small trumpet)
   6. மலை
   7. கோட்டை மதில்
   8. நத்தை ஓடு
   9. பனங்குருத்து
   10. நீர்த்தொட்டி (water trough)

   Could it be #5 ??

  • PVR 4:08 pm on March 30, 2013 Permalink | Reply

   செத்தி மந்தாரம், துளசி, பிச்சக மாலை
   சார்த்தி குருவாயுரப்பா நின்னெ கணி காணேணம்

   என்று மிகவும் புகழ்பெற்ற மலையாளப்பாட்டு. அதில் அடுத்த வரி, “மயில்பீலி சூடிக்கொண்டும், மஞ்சள் துகில் சுற்றிக்கொண்டும்…” என்று வரும்.

   ஆக, பீலி=இறகு. அதிகம் பேசப்படுவது, மயிலிறகு. 🙂

   http://m.youtube.com/#/watch?v=peFYo1MZzRQ&desktop_uri=%2Fwatch%3Fv%3DpeFYo1MZzRQ

   • amas32 (@amas32) 8:42 pm on March 30, 2013 Permalink | Reply

    இந்த பாட்டுக்கான லின்குக்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙂

    amas32

  • Vijay 4:27 pm on March 30, 2013 Permalink | Reply

   அப்டியே லாபி என்ற சொல்லைக் குறித்து ஒரு சிறிய விளக்கம் தர முடியுமா?
   முதலில் இது தமிழ்ச் சொல்லா? அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டும் உரிய சொல்லா?

   • என். சொக்கன் 5:15 pm on March 30, 2013 Permalink | Reply

    Lobby : very popular English word

  • amas32 (@amas32) 8:47 pm on March 30, 2013 Permalink | Reply

   கவிதைக்கு வேண்டுமானால் தேனைத் தொட்டு கையெழுத்துப் போடுவது ரொமான்டிக்காக இருக்கலாம். ஆனால் உண்மையில் சருமம் பிசு பிசுவென்று இருந்து ஈயும் எறும்பும் தான் மொய்க்கும்! 🙂

   பீலி என்றால் இறகு என்ற பொருளில் தான் சரியாக வருகிறது இல்லையா?

   amas32

  • GiRa ஜிரா 8:59 am on April 1, 2013 Permalink | Reply

   பீலியை இறகு என்று எடுத்துக் கொள்வது மிகப் பொருத்தம். பீலி சிவம்… ஒரு நல்ல நடிகர். முந்தியெல்லாம் டிவி நாடகங்கள்ள தவறாம வருவாரு. பழைய படங்கள்ளயும் வந்திருக்காரு. இப்போது நம்மோடு இல்லைன்னு நெனைக்கிறேன்.

  • Kaarthik Arul 1:06 pm on April 3, 2013 Permalink | Reply

   மயில் பீலி என்று மலையாளத்தில் அதிகமான பாடல்களில் பயன்படுத்தப் படுகிறது. அதனால் இறகு என்ற அர்த்தம்தான் சரி

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel