Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 11:43 am on June 11, 2013 Permalink | Reply  

  ஜில்லுன்னு ஒரு காதல் 

  • படம்: நளனும் நந்தினியும்
  • பாடல்: தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்
  • எழுதியவர்: நிரஞ்சன் பாரதி
  • இசை: அஷ்வத்
  • பாடியவர்கள்: பலராம், சின்மயி

  வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது!

  பிரிவுதான் சுடுதே! சொல்ல வார்த்தைகள் ஏது!

  கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராமன் காட்டுக்குச் செல்லத் தயாராகிறான். சீதையிடம், ‘நான் ஜஸ்ட் பதினாலு வருஷத்துல திரும்பி வந்துடுவேன், நீ சமர்த்தா வீட்டைப் பார்த்துகிட்டுச் சௌக்கியமா இரு’ என்கிறான்.

  சீதை மறுக்கிறாள், ‘நானும் உம்மோட வருவேன்!’ என்கிறாள்.

  ராமன் சிரிக்கிறான், ‘கண்ணும்மா, காடுன்னா என்ன பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா? ரொம்ப ஆபத்தான ஏரியா, எப்பப்பார் வெய்யில் கொளுத்தும், சிங்கம், புலி, மிருகங்கள்லாம் வரும், பூச்சிங்க கடிக்கும், திருடங்க, அரக்கர்ங்க தொல்லைவேற, நீ மென்மையா வளர்ந்தவ, அதெல்லாம் உனக்குச் சரிப்படாதும்மா!’

  அதற்கு சீதை சொல்லும் பதிலாகக் கம்பன் எழுதியுள்ள பாடலில் ஒரு பகுதி:

  ’அருக்கனும்

  எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்

  பிரிவினும் சுடுமோ பெரும் காடு?’

  ’மிஸ்டர் ராமன், என்னவோ அந்தக் காட்டுல சூரியன் சுடும்ன்னு பெருசாப் பயமுறுத்தறீங்களே, உம்மைப் பிரிஞ்சு தனியா வாழற வேதனையைவிடவா அது என்னைச் சுட்டுடும்?’

  கம்பனின் அற்புதமான இந்தக் கேள்வியை, இந்தக் காதல் பாடலில் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் நிரஞ்சன் பாரதி. இதைக் கேட்டதுமுதல், ‘நின் பிரிவினும் சுடுமோ பெரும் காடு’ என்ற வரியைமட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி ரசித்துக்கொண்டிருக்கிறேன். எத்துணை அழகு!!

  ***

  என். சொக்கன் …

  11 06 2013

  192/365

  பின்குறிப்பு:

  சில தினங்களுக்குமுன்பாக வைத்த ‘திரைப்பாடல்களில் இல்பொருள் அணி’ போட்டிக்குப் பிரமாதமான வரவேற்பு. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!

  ஒரே குறை, வந்தவற்றில் பெரும்பாலானவை இல்பொருள் அணியே அல்ல, அநேகமாக 70%க்குமேல் உயர்வு நவிற்சியும் தற்குறிப்பேற்றமும்தான் இருந்தது. அவற்றை நீக்கி, மீதமுள்ளவற்றில், என் கணிப்பில் அழகானதாக இந்த வரியைத் தேர்வு செய்கிறேன்: ’இருட்டில்கூட இருக்கும் நிழல் நான்’ (எழுதியவர் வாலி, தேர்வு செய்தவர் இன்பா)

  வாழ்த்துகள் இன்பா, nchokkan@gmail.comல் உங்கள் இந்திய முகவரியைத் தந்தால், பரிசை அனுப்பிவைக்கிறேன்!

  By the way, இந்த வரி இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂

   
  • rajinirams 12:02 pm on June 11, 2013 Permalink | Reply

   கம்பராமாயண அழகான உவமையுடன் அருமையான பதிவு. புதுக்கவிதையின் வைரமுத்து வரிகள்-நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி.பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி,..நன்றி.

  • Kannabiran Ravi Shankar (KRS) 1:23 pm on June 11, 2013 Permalink | Reply

   //ராமன் சிரிக்கிறான்; கண்ணும்மா, காடுன்னா என்ன, பிளாஸ்டிக் கூடை, ஜமுக்காளத்தோட பிக்னிக் போற எடம்ன்னு நினைச்சியா?//

   🙂
   இது கம்பராமாயணத்துக்கு, “Curry-மேல்-அழகர்” எழுதிய உரை தானே?
   = Curry சுவையா ஒறைப்பா இருக்கு:))
   ———

   //ஈண்டு நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?//

   கம்பன் சில சொற்களைச் சும்மாவே போடுவதில்லை! “நறுக்” -ன்னு வச்சி அழுத்துவான்!

   உன் பிரிவினும் சுடுமோ பெருங் காடு? -ன்னு கூட எழுதி இருக்கலாம்!
   ஆனா எதுக்கு “ஈண்டு” -ன்னு அழுத்தறான்? (ஈண்டு = இங்கே)
   ———

   கம்பன் (சீதையின் வாயால்) சொன்ன முகூர்த்தமோ என்னவோ, “சூடு” காட்டுல வரலை; “ஈண்டில்” (அயோத்தியில்) தான் வந்துச்சு;

   *தசரதன் செத்துப் போனான்
   *மங்கலம் எல்லாம் அமங்கலம் ஆயின
   *நாட்டின் தலை நகரமே மாறிப் போச்சி (அயோத்திக்குப் பதிலா, நந்திக்கிராமம் -ன்னு எல்லையில்)
   *கோலாகலமா இருக்க வேண்டிய அரண்மனை, ஆண்டி மடம் போல், துறவுக் கோலப் பரதனைச் சுமந்தது;

   ஆனா, காடு? = புதுத் தம்பியர் கிடைக்க, முனிவர்கள் ஞானம் புகட்ட, வீரம் விளைக்க, முதல் 13 வருசமும் இன்பம் தான்:)

   “ஈண்டு”
   நின் பிரிவினும் சுடுமோ?
   பெருங் காடு = அதுவே பெருமை மிக்க காடு!

  • anonymous 1:30 pm on June 11, 2013 Permalink | Reply

   அடுத்து ஒன்னும் சொல்லுறேன்; கம்ப இரசிகர்கள் கோச்சிக்காதீக:) கம்பன் இதைக் “காப்பி” அடிக்கிறான்:))
   எங்கிருந்து? = குறுந்தொகையில் இருந்து!

   //”ஈண்டு” நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?//

   பெருங்காடு
   இன்னா என்றீர் ஆயின்
   இனியவோ பெரும தமியேற்கு மனையே?

   பாலை பாடிய பெருங்கடுங்கோ; தலைவியின் சொல்லை, அப்படியே சீதையும் எதிரொலிக்கிறாள்!

   • என். சொக்கன் 2:14 pm on June 11, 2013 Permalink | Reply

    Wonderful!!

  • anonymous 1:34 pm on June 11, 2013 Permalink | Reply

   வாழ்த்துக்கள் இன்பா!

   அழகான வரிகள்; என்ன ஆளுமை = //இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்//
   ———

   //By the way, இந்த வரி, இல்பொருள் உவமை அல்ல, உருவகம் 🙂 //

   ஒரு திருத்தம் சொல்ல அனுமதி உண்டா?:))

   • anonymous 1:40 pm on June 11, 2013 Permalink | Reply

    *மதி முகம் = உவமை; (மதி போல முகம்; போல தொக்கி இருக்கு; உவமைத் தொகை)
    *முக மதி = உருவகம் (முகம் ஆகிய மதி)

    இதை அப்படியே பொருத்துங்க, இன்பா சொன்ன வரிக்கு!

    *நிழல் நான் = உவமை (நிழல் போல நான்)
    *நான் நிழல் = உருவகம் (நான் ஆகிய நிழல்)
    ————

    //இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்//

    “நான்-நிழல்” -ன்னு இல்லாம, “நிழல்-நான்” -ன்னு இருப்பதனால்,
    இது 100% இல்பொருள் உவமையே! “இல்பொருள் உருவகம்” அல்ல!:)))

  • Niranjan Bharathi 1:42 pm on June 11, 2013 Permalink | Reply

   வாலி ஐயா எழுதிய “பவளக்கொடியில் முத்துக்கள் கோ(ர்)த்தால் புன்னகை என்றே பெயராகும்” என்பது இல்பொருள் உவமை அணிக்கொரு சிறந்த உதாரணம் என்று பொதிகையில் ஒளிபரப்பான வாலிப வாலி நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா குறிப்பிட்டார்.

  • anonymous 2:20 pm on June 11, 2013 Permalink | Reply

   இல்பொருள் உவமை -ன்னு, இலக்கணத்தில் இருக்கு!
   ஆனா, இல்பொருள் உருவகம் -ன்னு இல்லையே; ஏன்? -ன்னு யோசிச்சிப் பாத்து இருக்கீகளா?

   உருவகம் -ன்னா, பொருள் முன்னாடி வரணும்; உவமை பின்னாடி போயீறணும்
   eg: வாய்ப் பவளம், முக மதி

   இல்லாத பொருளை, பின்னாடி வச்சா, நமக்கு ஒன்னுமே கிடைக்காது; At the end of any effort, we have to get something;
   அதான் “இல்”-பொருளாச்சே; ஒன்னுங் கிடைக்காது; அதனால் தான் “இல்-பொருளை” உருவகமா வைக்கலை; உவமையா மட்டும் வச்சாங்க!

   அதே போல, ஒரு புடை உருவகம் (ஏகதேசம் -ன்னு sanskrit ஆக்கீட்டோம் so sad:(((
   ஏகதேச உவமை -ன்னு ஒன்னுமில்ல;
   ஆனா ஏகதேச உருவகம் உண்டு! same logic applies!
   —————

   தமிழின் அழகே இதான்!
   = நுணக்கம்; அதுவே தமிழின் அழகு!

   உருவகமா அடுக்கி இருக்கு பாருங்க, வெண்பாவில்!
   (கண்-வண்டு, கொங்கை-முகிழ், கை-மலர்)

   அங்கை மலரும், அடித்தளிரும், கண்வண்டும்,
   கொங்கை முகிழும், குழற்காரும் – தங்கியதுஓர்
   மாதர்க் கொடிஉளதால்; நண்பா! அதற்குஎழுந்த
   காதற்கு உளதோ கரை?

   (தமிழ்க் – காதலுக்கு உளதோ கரை?:)))

  • Saba-Thambi 6:37 pm on June 11, 2013 Permalink | Reply

   தற்போதய நடைமுறைக்கேற்ற விளக்கம். பிரமாதம்!

   பாடலின் சுட்டி பிளீஸ்?

  • Niranjan 8:02 pm on June 11, 2013 Permalink | Reply

   • Saba-Thambi 11:40 am on June 12, 2013 Permalink | Reply

    சுட்டிக்கு நன்றி!
    கம்பன் வீட்டு கட்டு தறியும் கவி பாடினால், எள்ளுப் பேரன் சும்மாவா?
    வாழ்த்துக்கள் இனிவரும் காலங்களுக்கு.

  • amas32 10:38 pm on June 11, 2013 Permalink | Reply

   அருமையான பாடல், நிரஞ்சன். வாழ்த்துக்கள் 🙂

   உண்மை தான், காதலனை, கணவனைப் பிரிந்து வாழும் துன்ப நிலைக்கு முன் கணவனுடன் சேர்ந்து வாழும் சஹாரா பாலைவன வாழ்க்கையும் சுடாது, ஐஸ்லாந்து வாழ்க்கையும் குளிராது.

   amas32

   • Niranjan 11:22 pm on June 11, 2013 Permalink | Reply

    Mikka Nandri amma 🙂 🙂

   • anonymous 4:53 am on June 12, 2013 Permalink | Reply

    //சஹாரா பாலைவனம் சுடாது, ஐஸ்லாந்து வாழ்க்கையும் குளிராது//

    நீங்க எப்போம்மா, சினிமாவுக்கு பாட்டெழுத ஆரம்பிச்சீங்க?:)

  • anonymous 5:01 am on June 12, 2013 Permalink | Reply

   முன்னமே சொல்ல நினைச்சேன்; மறந்து போச்சுது;
   இந்தப் பாடலை எழுதிய நிரஞ்சன் பாரதி போலவே, பாரதியாரும் ஒரு பாட்டு எழுதியுள்ளார் – “பிரிவுச் சுடுதலை” பத்தி;

   //தூங்காம உன்னை சுத்திச் சுத்தித் திரியுறேன்…
   வெயிலும்தான் சுடுமா? அருகில் நீ உள்ளபோது//

   மேனி கொதிக்கு தடீ –
   இந்த வையம் மூழ்கித் துயிலினிலே,
   நானொருவன் மட்டும்
   “பிரிவு” என்பதோர் நரகத் துழலுவதோ?
   “மேனி கொதிக்கு” தடீ –

   • Niranjan 7:16 am on June 12, 2013 Permalink | Reply

    சாக்ஷாத் மகாகவி பாரதியின் எள்ளுப்பேரன் தான் அடியேன்.

    • anonymous 8:37 am on June 12, 2013 Permalink

     ஆ…! வணக்கம்!

     கண்ணாடி நீ, கண் ஜாடை நான் – முதலான திரைப் பாடல் கவிஞர் -ன்னு தான், இது நாள் வரை தெரியும்;
     இன்றே இதுவும் அறிந்தேன்! மகா கவிக்கு வந்தனங்கள்;

     இப்பல்லாம் பல தளங்களுக்குச் செல்வதில்லை;
     தமிழ்/ இசை = இத் தளங்களில் மட்டுமே வாழ்வு சுருக்கிய வண்டு; அதான்! pardon my ignorance:)

     பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
     ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ?
     -ன்னு குயில் பாட்டில் சொல்லுவாரு;
     அப்படியான இசையும்-தமிழும் சிறக்க வாழ்த்துக்கள்!

    • Kannabiran Ravi Shankar (KRS) 8:52 am on June 12, 2013 Permalink

     Actually
     //கண்ணாடி நீ, கண் ஜாடை நான்//
     இதைக் கேட்கும் போதே… “பாயுமொளி நீ எனக்கு; பார்க்கும் விழி நான் உனக்கு” ஞாபகம் வந்துச்சி;
     அது, இன்று, இப்படி வந்து…. முகத்தில் வியப்பறையும் -ன்னு நினைச்சிப் பாக்கலை:) முருகா!

    • Niranjan 9:55 am on June 12, 2013 Permalink

     பாரதியின் பரம்பரை என்று தெரியாமல், என் பாடலை மகாகவியின் பாடலோடு உங்கள் மனம் தொடர்பு படுத்தியதல்லவா. அந்த சந்தோஷம் போதும் எனக்கு.

     மகாகவிக்கு ஒரு கடலென்றால் நான் ஒரு குட்டை. அவர் வம்சத்தில் வந்தது பெரும் புண்ணியம்.

     ஆன போதும், அடியேனுக்கென்று ஒரு தனி அடையாளம் வேண்டுமல்லவா?

     கண்ணாடி நீ பாடல் எப்படியிருந்தது ? , தூங்காம பாடல் எப்படியிருந்தது ?

     உங்கள் கருத்துகள்…. விமர்சனங்கள்….

     பாகன் படத்தில் சிம்பா சம்பா என்ற குத்துப் பாடலையும் எழுதியுள்ளேன். அதையும் கேட்டு விட்டுச் சொல்லுங்கள்.

     –> http://www.youtube.com/watch?v=d-rvJDOvfFs

  • Uma Chelvan 5:16 am on June 16, 2013 Permalink | Reply

   பிரிவு என்னும் மூன்று எழுத்து எவ்வளவு பெரிய சோகத்தை துயரைத்தை கொடுக்கிறது! amas 32 சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்… அத்தனையும்.உண்மை !!!

 • என். சொக்கன் 7:49 am on February 4, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : இசைவழி இலக்கணம் 

  நாம் பள்ளிப்பருவத்தில் தமிழ் படிக்கும் போது தமிழாசிரியர் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்திருப்பார்.

  உரைநடைப்பகுதி, செய்யுள் பகுதி, இலக்கணப் பகுதி, துணைபாடப் பகுதி என்று நம் தமிழ் பாடத்தைப் பிரித்திருப்பார்கள்.

  இதில் பெயர்ச்சொல், வினைச்சொல், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்றெல்லாம் தொடங்கி கடைசியில் புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் வரை போகும்.

  என்ன இது, நான்கு வரி நோட்டில் இலக்கணத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா ?

  தொடர்பு இருக்கிறது.

  ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல வைரமுத்து அவர்களுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை உண்டு. அவர் , நாம் சிறு வயதில் படித்த இலக்கணத்தையெல்லாம் எந்த ஒரு இலக்கணப் பா வகையிலும் சேராத திரையிசைப் பாடல்களில் புகுத்தியிருக்கிறார்.

  ராவணன் படத்தில் வருகின்ற , அய்ஷ்வர்யா ராய் பாடுகின்ற கள்வரே கள்வரே என்ற பாடலில் (http://www.youtube.com/watch?v=XQ46R4yRGZ8)

  வலி மிகும் இடங்கள் , வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே

  வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் உங்களுக்குத் தெரிகின்றதா

  என்று எழுதுகிறார். என்ன ஒரு அழகான கற்பனை இது.

  தமிழில் வலி மிகும் இடங்கள் என்பது ஒற்று மிகும் இடங்கள். வலி மிகா இடங்கள் என்பது ஒற்று மிகா இடங்கள்.

  இதே போன்று, ஜீன்ஸ் படத்தில் வருகின்ற கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலில், என்னையும் உன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்வதற்கு அய்ஷ்வர்யா ராய் என்ன பாடுகிறாள் பாருங்கள்(http://www.youtube.com/watch?v=fZXlCdySjcg)

  சல சல சல இரட்டைக் கிளவி
  தக தக தக இரட்டைக் கிளவி
  உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

  பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
  பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
  இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

  என்னமாய் இலக்கணத்தோடு காதலைக் கலந்திருக்கிறார் கவிஞர். அத்தனையும் வைர வரிகள் 🙂 🙂

  அஜித் நடித்த வரலாறு படத்தில்

  இன்னிசை அளபெடையே, அமுதே, இளமையின் நன்கொடையே என்று எழுதுகிறார்.(http://www.youtube.com/watch?v=QNN1chrIfIs)

  அளபெடை என்றால் என்ன ?

  அண்மையில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து நான் வாங்கிய “மாணவன் தமிழ் இலக்கணம்” என்ற நூலில்
  அளபெடைக்குக் கொடுத்திருக்கும் விளக்கம் இது தான் :

  செய்யுளில் ஓசை குறையும் போது அதை நிறைவு செய்ய 2 மாத்திரை அளவுடைய நெட்டெழுத்துகள் 3 மாத்திரையாக அளவு கூடி ஒலிக்கும். அவ்வாறு அளபெடுத்ததற்கு அடையாளமாக நெட்டெழுத்திற்கு இனமான குற்றெழுத்து அடுத்து எழுதப்படும். நெடில் , 2 + குறில், 1 = 3 மாத்திரை.இப்படி 3 மாத்திரைகளாக உயிர் அளபெடுப்பதே அளபெடை எனப்படும்(அளபு + எடை = அளவு எடை கூடுதல்).

  இதில் இன்னிசை அளபெடை என்றால் என்ன ?

  செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் இனிய இசைக்காக குற்றெழுத்துகள் நெட்டெழுத்துகளாக மாறி அளபெடுக்கும். ஈரசைச் சொற்கள் மூவசைச் சொற்களாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை

  எ.கா: கெடுப்பதும் என்பது கெடுப்பதூஉம் என்று அளபெடுத்தது.

  கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
  எடுப்பதூஉம் எல்லாம் மழை

  இதென்ன பிரமாதம். குரு என்ற படத்தில் மல்லிகா ஷெராவத் துருக்கி ஆடலழகிகளோடு ஆடும் மய்யா மய்யா என்கிற ஐட்டம் பாட்டில் கூட வைரமுத்து தமிழ்ப் பாடத்தை நுழைத்திருக்கிறார். எப்படி ? இப்படி.

  திரி குறையட்டும் தெரு விளக்கு, நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு, அந்தக் கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு

  (http://www.youtube.com/watch?v=ztFcz9YToNA)

  இடம் சுட்டிப் பொருள் விளக்குக என்ற தமிழ் ஒன்றாம் தாளில் வரும். நினைவுக்கு வருகிறதா ? அப்படியென்றால் என்ன ?

  விக்கிப்பீடியா கொடுக்கும் விடையைப் பாருங்கள் :-

  “இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல் (Explaining with reference to Context) என்பது இலக்கியம் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வு வினா வகைகளுள் ஒன்றாகும். இது எழுத்துத் தேர்விலேயே பெரும்பாலும் வினவப்படும். ஒரு இலக்கிய படைப்பில் (கவிதை, உரைநடை அல்லது நாடகம்) இருந்து சில வரிகள் கொடுக்கப்படும். மாணவர்கள் அந்த வரிகளைக் கண்டு அது எந்த நூலில் இடம் பெற்ற வரிகள், யார் யாரிடம் கூறுவதாய் அமைந்தது மற்றும் அவ்வரிகளின் பொருள் ஆகியவற்றை விளக்க வேண்டும்.”

  ஆக. நம் தமிழின் பெருமையைத் துருக்கி அறியச் செய்த பெருமை வைரமுத்துவுக்கு உண்டு 🙂 🙂

  வைரமுத்து மட்டுமல்ல. பா விஜய் அவர்களும் ஒரு பாட்டில் இலக்கணத்தை நுழைத்திருக்கிறார்.

  மதுர படத்தில் இடம்பெறும் “இலந்தைப் பழம் இலந்தைப் பழம் உனக்குத் தான்” என்ற இரட்டை அய்ட்டம் பாடலில் ,(http://www.youtube.com/watch?v=Bd_j7419p14)

  தேமா உனக்குத் தான் புளிமா உனக்குத் தான், மாமா நான் உனக்கே தான் ……… என்று தேஜாஸ்ரீயும், ரக்ஷிதாவும் விஜய்யைப் படுத்தும் இடத்தில் சீர் பிரித்துப் பார்க்கிறார் கவிஞர் யார் சீரும் சிறப்பும் மிக்கவர்கள் என்று 🙂 🙂

  தமிழ்த் திரையிசையில் பல பாடலாசிரியர்கள் இலக்கணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து இவ்விருவர் தான் தமிழ்த் திரையிசையில் இலக்கணத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

  உங்களுக்குத் தெரிந்து வேறாரேனும் இலக்கணத்தை ஏற்றியிருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்….

  நிரஞ்சன் பாரதி

  மகாகவி பாரதியாரின் பரம்பரையில் வந்த நிரஞ்சன் பாரதி, கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் இயங்கிவருகிறார். இவர் எழுதிய பிரபலமான பாடல்கள், ‘மங்காத்தா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாடி நீ, கண் ஜாடை நான்’, மற்றும் ‘பாகன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சிம்பா சம்பா’.
  நிரஞ்சன் பாரதி ‘புதிய தலைமுறை’ செய்தி சானலில் பணியாற்றிவருகிறார். இவரது வலைப்பதிவு: http://puthiyathalaimurai.tv/author/niranjanbharathi
   
  • சிவா கிருஷ்ணமூர்த்தி 3:31 pm on February 7, 2013 Permalink | Reply

   இந்தப் பதிவை படித்தவுடன் சட்டென சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு படத்தின் பாடல் நினைவிற்கு வந்தது.
   விஜய், ஜோதிகா நினைவிருக்கிறது. என்ன படம் என்று தெரியவில்லை (வேண்டுமானால் மாலையில் தேடுகிறேன்!). கண்டிப்பாய் வணிக படம்தான் (அப்படியே இலக்கியவாதி மாதிரியே சொல்ல வருகிறது!)

   ஆனால் கீழ்க்கண்ட வரிகள் நினைவில் இருக்கின்றன:

   குறிலாக நானிருக்க நெடிலாக நீ வளர்க்க
   சென்னைத் தமிழ் சங்கத் தமிழ் ஆனதடி!

  • amas32 5:12 pm on February 8, 2013 Permalink | Reply

   Super Post! வைரமுத்துவின் பாடல்களில் இடம்பெற்ற இராசனைமிக்க இலக்கண வரிகளைச் சுட்டிக் காட்டி விளக்கியதற்கு நன்றி 🙂 இன்னிசை அளபெடை பற்றுய குறிப்பு அருமை! வலி மிகும் இடங்களும் வலி மிகா இடங்களும் இன்னும் எனக்குத் தெரியாது 😦

   amas32

 • G.Ra ஜிரா 11:36 am on January 1, 2013 Permalink | Reply
  Tags: கண்ணாடி, சிலப்பதிகாரம், , நிரஞ்சன் பாரதி   

  கண்ணாடி 

  நம்முடைய நண்பர் கவிஞர் நிரஞ்சன் பாரதி @poetniranjan எழுதிய ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மங்காத்தா படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் வெளிவந்த பாடல் அது.

  கண்ணாடி நீ கண் ஜாடை நான்
  என் வீடு நீ உன் ஜன்னல் நான்
  என் தேடல் நீ உன் தேவை நான்
  என் பாடல் நீ உன் வார்த்தை நான்
  என் பாதி நீ உன் பாதி நான்
  என் ஜீவன் நீ உன் தேகம் நான்
  என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
  என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Rj33vbsHtKU

  அழகான பாடல். புதிதாகத் திருமணமானவர்களுக்கான பாட்டு.

  இந்தப் பாட்டைக் கேட்கும் போது “கண்ணாடி” என்ற சொல் எந்தன் சிந்தனையைத் தூண்டியது. எத்தனையெத்தனை கண்ணாடி பாடல்கள். கண்ணாடி தொடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.

  இந்தக் கண்ணாடி தமிழர்கள் பயன்பாட்டில் முன்பு இருந்ததா என்று முதல் கேள்வி.

  இருந்தது என்று திருப்பாவை படிக்கையில் புரிந்தது. “உக்கமும் தட்டொளியும் தந்து” என்று ஆண்டாள் பாடியது நினைவுக்கு வந்தது. இந்த வரியில் தட்டொளி என்பது கண்ணாடியைக் குறிக்கும்.

  தட்டொளி என்பதுதான் கண்ணாடிக்கு உரிய பழைய தமிழ்ப் பெயரா என்ற ஐயத்தோடு இலக்கியங்களைத் தேடிய போது அரிய விடைகள் கிடைத்தன.

  கண்ணாடி என்ற சொல் ஐம்பெருங்காப்பியங்களிலேயே இருந்திருக்கிறது. அப்படியிருக்க பின்னாளில் ஆண்டாள் தட்டொளி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினாள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் கண்ணாடி பற்றியும் தேடிப்பார்க்க வேண்டும்.

  சரி.. ஐம்பெருங்காப்பியங்களுக்கு வருவோம். அதிலும் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு வருவோம்.

  முகம் பார்க்கும் கண்ணாடியை ஆடி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

  கோப்பெருந்தேவிக்கு அன்றைய நாள் நல்ல நாளாகவே இல்லை. கண்ட கண்ட கனவுகள். ஒன்றாவது நன்றாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவது போல ஒரு குறுகுறுப்பு. அந்த உணர்வுகளைக் கணவனோடு பகிர்ந்து கொள்ள வருகிறாள். அப்போது அவளுடைய பணியாளர்கள் அவளுக்குத் தேவையான பொருட்களைக் கையோடு கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகையின் மேக்கப் உதவியாளர்கள் போல.

  ஆடியேந்தினர் கலனேந்தினர்
  அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
  கோடியேந்தினர் பட்டேந்தினர்
  கொழுந்திரையலின் செப்பேந்தினர்
  வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
  மான்மதத்தின் சாந்தேந்தினர்
  கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
  கவரியேந்தினர் தூபமேந்தினர்

  ஆடி ஏந்தினர் – கண்ணாடி ஏந்தி வந்தார்கள்
  கலம் ஏந்தினர் – அணிகலன்களை ஏந்தி வந்தார்கள்
  அவிர்ந்து விளங்கும் அணியிழையினர் – நல்ல அணிமணி அணிந்த ஊழியப் பெண்கள்
  கோடி ஏந்தினர் – புதுத்துணிகளை ஏந்தி வந்தார்கள்
  பட்டு ஏந்தினர் – பட்டுத் துணிகளை ஏந்தி வந்தார்கள்
  கொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – நல்ல கொழும் வெற்றிலைப் பெட்டியை ஏந்தினர்
  வண்ணம் ஏந்தினர் – வண்ண வண்ணப் பொடிகளையும்
  சுண்ணம் ஏந்தினர் – வெண்ணிறச் சுண்ணத்தைப் பூசிக் கொள்வதற்கும் ஏந்தி வந்தார்கள்

  அடேங்கப்பா என்னவொரு பட்டியல். அரசியோடு எப்பவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்திருக்கும் போல.

  ஏந்திய பொருட்களில் முதற் பொருளாகச் சொல்லப் படுவதே ஆடிதான். அடிக்கடி முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்கிறவள் போல கோப்பெருந்தேவி.

  சரி. கண்ணாடி(Mirror) என்பது முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. Glass என்ற பொருளிலும் வருமே. ஆம். வருகிறது. சீவக சிந்தாமணி காட்டுகிறது அதையும். அந்தப் பாடலில் திருத்தக்க தேவர் சொற்சிலம்பமே ஆடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. எத்தனை கண்ணாடி வருகிறதென்று பாருங்கள்.

  கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
  கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
  கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
  கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்

  ரொம்பவும் விளக்காமல் நேரடியாகப் பொருள் கொடுக்கிறேன். படித்து ரசியுங்கள்.

  கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
  கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றிக்
  கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்கண்
  (கண்) ஆடு யானையவர் கை தொழச் சென்று புக்கான்

  கண்ணாடி போன்ற மார்புடைய சீவகன் தன்னுடைய சிவந்து நீண்ட கண்களால் ஆடி (பார்வையிட்டு) போரிட்டு வென்ற போர்க்களத்தைக் கண்ட பின்னர், போர் முடிந்த பின் செய்ய வேண்டிய நியமங்களை முடித்து விட்டு, கள் நாடி வந்து வண்டுகள் பருகும் மணமிகுந்த மாலைகள் நிறைந்த பழம் பெருமை மிக்க ஊருக்குள், வெற்றியானை கொண்டோரெல்லாம் கை தொழும் வகையில் புகுந்தான்.

  அதாவது வெற்றி பெற்ற சீவகன் தான் வென்ற ஊருக்குள் நுழைந்ததை நான்கு கண்ணாடிகளை வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார் திருத்தக்க தேவர்.

  இளங்கோவும் திருத்தக்க தேவரும் பின்னாளில் ஆண்டாளும் தொடர்ந்த பாரம்பரியத்தை பாரதியின் வாரிசான கவிஞர் நிரஞ்சன் பாரதியும் தொடர்வதுதான் சிறப்பு.

  அன்புடன்,
  ஜிரா

  031/365

   
  • Rie 12:36 pm on January 1, 2013 Permalink | Reply

   CSS நீ, HTML நான் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வாசகம் பார்த்தேன்.

   • Niranjan 1:47 pm on January 1, 2013 Permalink | Reply

    என் பாடலைப் பற்றி இந்த வலைப்பூவில் எழுதிய ஜீரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்ணாடி பற்றி எத்தனை தகவல்கள். ஆஹா !! படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டே இருந்தது.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel