Updates from June, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 7:29 pm on June 20, 2013 Permalink | Reply  

  ஆறு நூறாகும் 

  • படம்: மக்களைப் பெற்ற மகராசி
  • பாடல்: மணப்பாறை மாடு கட்டி
  • எழுதியவர்: மருதகாசி
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=WQQwUqxBaFg

  ஆத்தூரு கிச்சடிச் சம்பா பாத்து வாங்கி வெத வெதச்சு

  நாத்தப் பறிச்சு நட்டுப்போடு சின்னக்கண்ணு, தண்ணிய

  ஏத்தம் பிடிச்சு எறச்சுப் போடு செல்லக்கண்ணு!

  கருத நல்லா விளையவெச்சு, மருத ஜில்லா ஆள வெச்சு அறுத்துப் போடு!

  சமீபத்தில் சீனாவில் அரிசி விளைச்சல் எப்படி நடக்கிறது என்பதுபற்றி ஒரு காமிக்ஸ் புத்தகம் பார்த்தேன். அந்த ஊர் விவசாயத்தின் ஒவ்வொரு படியையும் கதைபோல, அழகான ஓவியங்களுடன் எளிய ஆங்கிலத்தில் குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கியிருந்தார்கள்.

  அந்தப் புத்தகத்தைப் படித்த என் மகள், ‘அப்பா, நாம இப்போ சாப்பிடற அரிசியெல்லாம் சீனாவிலேர்ந்துதான் வருதா?’ என்று கேட்டாள்.

  ‘இல்லை கண்ணு, இதெல்லாம் நம்ம ஊர்ல விளையறதுதான்’ என்றேன்.

  ‘அப்போ நம்ம ஊர்ல விவசாயம் எப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணுமே, ஏதாவது புக் இருக்கா?’

  ’தேடிப் பார்க்கறேன்’ என்று அவளிடம் சொன்னேனேதவிர, அப்படி எதுவும் புத்தகம் தமிழில் எழுதப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. நாம்தான் விவசாயம், ராணுவம் போன்ற அத்தியாவசியமான பணிகளையெல்லாம் ‘taken for granted’ ஆகக் கண்டுகொள்ளாமல் விடுவதில் கைதேர்ந்தவர்களாயிற்றே!

  நேற்றைக்கு, நண்பர் வினோத் அனுப்பிய ஓர் இணைப்பில் இந்த ‘மணப்பாறை மாடு கட்டி’ பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அந்த ஆதங்கம் தீர்ந்தது. நம் ஊர் விவசாயத்தின் அத்துணை அம்சங்களையும் எளிமையாக ஒரு பாட்டுக்குள் சொல்லிவிட்டார் மருதகாசி:

  • (ஏரில்) மாட்டைக் கட்டுதல்
  • வயலை உழுதல்
  • (உரமாகப்) பசும் தழையைப் போடுதல்
  • நல்ல விதை நெல்லைத் தேர்ந்தெடுத்து வாங்குதல்
  • விதைத்தல்
  • நாற்றைப் பறித்து வேறு இடத்தில் நடுதல்
  • ஏற்றம் பிடித்துத் தண்ணீர் பாய்ச்சுதல்
  • நெற்கதிர்கள் நன்கு விளைந்தவுடன், அவற்றை அறுவடை செய்தல்
  • அறுத்த நெற்கதிர்களை களத்துமேட்டில்அடித்துத் தூற்றுதல்
  • நெல்மணிகளை அளந்து மூட்டைகளாகக் கட்டுதல்
  • மூட்டைகளை வண்டியில் ஏற்றுதல்
  • சந்தைக்குக் கொண்டுசெல்லுதல்
  • நெல் தேவைப்படும் வியாபாரிகளிடம் விற்பனை செய்தல்
  • நிறைவாக, விற்பனைப் பணத்தை எண்ணுதல்

  மருதகாசி அதோடு நிறுத்துவதில்லை, அந்தப் பணத்தை எப்படிச் செலவு செய்யவேண்டும் என்றும் சொல்லிவிடுகிறார், ‘விவசாயம் செய்யத் தெரிந்த உனக்கு, அதைச் சிக்கனமாகச் செலவழிக்கத் தெரியாது, உங்க அம்மா கையில் கொடுத்துவிடு, அவர்கள் ஆறை நூறாகப் பெருக்குவார்கள்’ என்று நிறைவு செய்கிறார்.

  கேட்பதற்கு எளிமையாகத் தோன்றும் இந்தப் பாடல், எழுதுவதற்கு மிகவும் சிரமமானது. விஷயத்தையும் நிறைவாகச் சொல்லவேண்டும், எதுகை, மோனை, இயைபுக்கும் குறைச்சல் இருக்கக்கூடாது.

  மருதகாசி இந்தப் பாடலை எழுதியபிறகு மெட்டு அமைத்தார்களா, அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்ட மெட்டு ஒன்றில் இந்த அம்சங்கள் அனைத்தையும் அவர் கச்சிதமாகப் பொருத்தினாரா என்பது தெரியவில்லை. எதுவானாலும், நிச்சயம் பெரிய சாதனைதான்!

  ***

  என். சொக்கன் …

  20 06 2013

  201/365

   
  • amas32 9:26 pm on June 20, 2013 Permalink | Reply

   கொலுவில் வைக்கப்படும் விவசாய செட்டும் குழந்தைகளுக்கு விவசாய முறைகளை வரிசைப் படுத்திக் காண்பிக்கும். குழந்தைகளுக்கு அவசியமாய் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள கொலு வைப்பது இந்த மாதிரி உதவுகிறது.

   அருமையான பாடல். நீங்கள் கேட்டிருப்பது போல் இது மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என்பது முக்கியான கேள்வி தான். மெட்டுக்கு இவ்வளவு அழகா பாடல் எழுதிக் கொடுத்திருந்தார் என்றால் he is certainly a genius!

   amas32

  • vinodh 9:39 pm on June 20, 2013 Permalink | Reply

   Hi,

   Thank you. My thoughts are in words, thrilled.

   Regards,
   G.Vinodh

  • Eswar (@w0ven) 9:24 am on June 21, 2013 Permalink | Reply

   //ஆத்தூரு கிச்சடிச் சம்பா// இது ஊர் பேர் தானா , இல்லை நெல் வகையா ?

   • என். சொக்கன் 10:45 am on June 21, 2013 Permalink | Reply

    Place

  • anuatma 10:41 am on June 21, 2013 Permalink | Reply

   *நிறைவாக விற்பனைப் பணத்தை எண்ணி வீட்டு அம்மணிகளிடம் கொடுத்தல்.

   “சேர்த்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையில் கொடுத்துப் போடு சின்ன கண்ணு, அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு”

   இப்படி டைட்டிலையே விட்டுட்டீங்களே! 🙂

   இதில் சொல்லியிருக்கும் “மணப்பாறை மாடு, மாயவரம் ஏரு,” இதெல்லாம் அந்தந்த ஊர் சிறப்பா?

   • என். சொக்கன் 10:45 am on June 21, 2013 Permalink | Reply

    It’s not part of vivasayam, so covered separately in next para

  • anuatma 10:44 am on June 21, 2013 Permalink | Reply

   ஸாரிங்க.ஒரு paraவை படிக்கும்போது jump செய்துவிட்டேன் போல. I couldn’t delete the comment also. 🙂

  • rajnirams 4:17 pm on June 21, 2013 Permalink | Reply

   இந்த பாடல் எல்லோருக்கும் தெரிந்த,நானும் ரசித்த ஹிட் பாடல் தான்.ஆனால் நீங்கள் அக்கு வேறு ஆணிவேறாக அதன் பெருமையை சொன்ன விதம் இருக்கிறதே-அடடா, பிரமாதம்.கே.வி.மகாதேவன் பெரும்பாலும் வரிகளுக்கு தான் இசையமைப்பார் என்று படித்திருக்கிறேன்,சமீபத்தில் வைரமுத்து அவர்களும் இதையே சொல்லியிருக்கிறார்.அதனால் இந்த பாடலும் எழுதப்பட்ட பிறகே இசை அமைக்கப் பட்டிருக்கும் என்பது என் அனுமானம். மருதகாசி அவர்கள் “கடவுளெனும் முதலாளி”பாட்டிலும் விவசாயியின் சிறப்புகளை பின்னி பெடல் எடுத்திருப்பார்-

 • என். சொக்கன் 11:58 am on January 28, 2013 Permalink | Reply  

  இனிப்பு! 

  • படம்: ப்ரியா
  • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
  • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

  என் ஜோடிக் கிளியே,

  கன்னல் தமிழே,

  தேனில் ஆடும் திராட்சை நீயே!

  பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

  ‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

  அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

  அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

  திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

  அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

  இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

  வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

  ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

  ***

  என். சொக்கன் …

  28 01 2013

  058/365

  (பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )

   
  • GiRa ஜிரா 12:52 pm on January 28, 2013 Permalink | Reply

   அட்டகாசம்.

   கம்பரும் கன்னல் பத்திப் பேசுறாரு.

   கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் என்று மன்மதன் கரும்பு வில் வெச்சிருக்கறதப் பத்திப் பேசுறாரு. இலக்கியத்துல கன்னல் தேடுனா எக்கச்சக்கமா அம்புடும்.

   இனிப்பைக் கொடுக்கும் தாவரங்குறதால அதுக்கு அவ்வளவு புகழ் போல.

  • amas32 (@amas32) 7:51 pm on January 28, 2013 Permalink | Reply

   The recent post by @elavasam http://elavasam.posterous.com/174635736 also refers to the same topic. Nice coincidence 🙂

   //கன்னல் தமிழே,// என்பது பி.சுசீலா அவர்கள் பாடிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

   amas32

  • elavasam 8:12 pm on January 28, 2013 Permalink | Reply

   இதெல்லாம் ஓவர். ரெண்டு நாள் முன்னாடி உம்மாலதான் நானும் கன்னல் பத்தி எழுதினேன். அதைப் படிக்காம இங்க வந்து போட்டி போஸ்ட் போடும் உம்மை என்ன செய்யலாம்?

   http://elavasam.posterous.com/174635736

  • elavasam 8:21 pm on January 28, 2013 Permalink | Reply

   @amas32 – உண்மையின் பக்கத்தில் நின்று போராடுவதற்கு நன்றி!! :))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel