Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

  யாவும் நீ 

  • படம்: கரகாட்டக்காரன்
  • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

  மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

  காத்தும், கனலும் நீயம்மா,

  வானத்தப் போல் நின்னு பாரம்மா,

  வந்தேன் தேடி நானம்மா!

  நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

  உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

  அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

  இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

  நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

  உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

  பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

  இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

  ***
  என். சொக்கன் …

  16 11 2013

  349/365

   
  • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

   எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

   மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
   குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

  • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

   ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

   நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

   இரு பாடல்களும் அருமை!

   amas32

 • என். சொக்கன் 6:57 pm on October 12, 2013 Permalink | Reply  

  எல்லாம் சிவமயம் 

  • படம்: திருவருட்செல்வர்
  • பாடல்: சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=trsW6cL9a9o

  சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, இறைவா, உன்னைச்

  சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

  அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை, அந்த

  அம்மை இல்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!

  ’அத்தான்’ தெரியும், அது என்ன ‘அத்தன்’?

  அடுத்து வரும் ‘அம்மை’யோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் தெரிந்துவிடும். அத்தன் என்றால் தந்தை என்று பொருள்.

  சுந்தரர் தன்னுடைய ஒரு பாடலில் சிவனை ‘பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! அத்தா!’ என்பார். இந்தத் திரைப்படப் பாடலின் தொடக்கத்திலேயே நாம் அதைக் கேட்கலாம்.

  இன்றைக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளில் தந்தையை ‘அத்தா’ என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல் மலையாளிகள் ‘அச்சா’ (அதாவது, ‘அச்சன்’, ‘அச்சனே’) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

  கம்ப ராமாயணத்தின் ஒரு பாடலில் ராமன் தன் தம்பி லட்சுமணனிடம், ‘அத்தா! இது கேள்!’ என்று தொடங்கிப் பேசுவான். இன்னொரு பாடலில் விபீஷணன் தன் அண்ணன் ராவணனிடம் ‘அத்த! என் பிழை பொருத்தருள்’ என்பான்.

  என்ன குழப்பம் இது? ராமனுக்கு எப்படி லட்சுமணன் தந்தை ஆவான்? விபீஷணனுக்கு எப்படி ராவணன் தந்தை ஆவான்?

  அது ஒன்றும் பெரிய மர்மம் இல்லை. தம்பியிடமோ அண்ணனிடமோ உரையாடும்போது, ‘அப்படி இல்லைப்பா’ என்று பேச்சுவாக்கில் சொல்கிறோம் அல்லவா? அதுபோலதான் ராமனும் விபீஷணனும் ‘அத்தன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு பாடல்களிலும் அதன் பொருள், ‘எனக்கு தந்தையைப்போன்றவனே!’

  ***

  என். சொக்கன் …

  12 10 2013

  315/365

   
  • Uma Chelvan 8:53 pm on October 12, 2013 Permalink | Reply

   எப்படி ஆண்கள் தன்னை விட சிறு வயது பெண்களை பாசத்துடன் “அம்மா” என்று சேர்த்து அழைப்பது போல!!!!!

   பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
   பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
   உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
   உயிரை மேவிய உடல் மறந்தாலும்
   கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
   கண்கள் இன்று இமைப்பது மறந்தாலும்
   நல்ல தவத்தவர் உள்ளிருந்து ஒங்கும்
   நமஷிவாயத்தை நான் மறேவேனே

   இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் —என் சுவாமிக்கு

   பாடியவர்..பாம்பே ஜெயஸ்ரீ
   எழுதியவர் -கோபாலக்ருஷ்ண பாரதி
   ராகம்—பெஹாக்

  • s.anand 3:33 pm on October 14, 2013 Permalink | Reply

   pardon my transliteration eventualities
   அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
   அருள்நோக்கில் தீர்த்த நீராட்டி கொண்டாய்
   எத்தனைஅரியை நீ எளியனானாய்
   எனையாண்டு கொண்டிறங்கி ஏன்றுகொண்டாய்
   பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
   பிழைத்தனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றோ
   இத்தனையும் எம்பரமோ வையவையோ
   எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

  • amas32 8:47 pm on October 14, 2013 Permalink | Reply

   அத்தன், புதிய சொல்லை இன்று கற்றுக் கொண்டேன் 🙂 நாம் தினம் சொல்லும் இறை துதிகளைக் கவனித்துச் சொன்னாலே நிறைய வார்த்தைகளின் பொருள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிந்து கொண்டேன், நன்றி 🙂

   amas32

 • என். சொக்கன் 7:02 pm on September 9, 2013 Permalink | Reply  

  தெய்வம் உள்ள வீடு 

  • படம்: சரஸ்வதி சபதம்
  • பாடல்: தெய்வம் இருப்பது
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=-aJ5cuerkpg

  தெய்வம் இருப்பது எங்கே?

  தெளிந்த நினைவும், திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே!

  எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு!

  இசையில், கலையில், கவியில், மழலை மொழியில் இறைவன் உண்டு,

  இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு!

  மேற்கண்ட வரிகளை இன்னொருமுறை படித்துப் பாருங்கள், இது ஆத்திகப் பாட்டா, அல்லது நாத்திகப் பாட்டா?

  எழுதியவர் கண்ணதாசன் எனும்போது, இந்தச் சந்தேகம் இன்னும் வேறுவிதமாக எழும். இது அவர் நாத்திகராக இருந்தபோது எழுதியதா, அல்லது ஆத்திகராக மாறியபின் எழுதியதா?

  உண்மையில், தெய்வம் கோயிலில் இருக்கிறதா, அல்லது வேறு எங்குமா? ஆத்திகர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

  ’தெய்வம் கோயிலில் இல்லை’ என்று கண்ணதாசன் சொல்லவில்லை. ஆனால் வேறு எங்கெல்லாம் இருக்கிறது என்று தெளிவாகச் சொல்கிறார்: தெளிந்த நினைவு, திறந்த நெஞ்சு (Open Mind), நிறைந்த நெஞ்சு, எண், எழுத்து, இசை, கலைகள், கவிதை, ஏன் மழலை மொழியில்கூட இறைவன் இருக்கிறான்!

  கடவுளை வெளியே தேடலாகாது என்பது நிச்சயம் நாத்திகக் கருத்தல்ல. அநேகமாகத் தமிழின் பக்தி இலக்கியங்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப இதைப் பலவிதமாக வலியுறுத்தியுள்ளன.

  உதாரணமாக, சிவனின் அடி, முடி தேடி பிரம்மனும் விஷ்ணுவும் திணறிய கதை நமக்குத் தெரியும். அதைக் குறிப்பிட்டுத் திருநாவுக்கரசர் தரும் ட்விஸ்டைப் பாருங்கள்:

  ’நாடி நாரணன், நான்முகன் என்று இவர்

  தேடியும் திரிந்தும் காண வல்லரோ?

  மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து

  ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே!’

  பிரம்மனே, விஷ்ணுவே, நீங்கள் அங்கேயும் இங்கேயும் தேடித் திரிந்து என்ன பலன்? தில்லை அம்பலத்தில் ஆடுகிற சிவன் என்னைப்போன்ற பக்தர்களின் நெஞ்சுக்குள் அல்லவா இருக்கிறான்?!

  இறைவனின் வீடு, பக்தர்கள் நெஞ்சம் என்றார் திருநாவுக்கரசர். அதைக் கொஞ்சம் நீட்டி, தெளிவான சிந்தனை உள்ளவர்கள், திறந்த மனம் கொண்டவர்கள், கல்வியில் வல்லவர்கள், கலையில் சிறந்தவர்கள், குழந்தைகள் நெஞ்சிலெல்லாம் அவன் இருப்பான் என்கிறார் கண்ணதாசன்.

  சரிதானே? கொஞ்சம் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!

  ***

  என். சொக்கன் …

  09 09 2013

  282/365

   
  • uma chelvan 9:31 pm on September 9, 2013 Permalink | Reply

   இதே பாடலில் வரும் இன்னும் ஒரு வரியும் மிக மிக நன்றாக இருக்கும்.” அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை” !!!

  • rajinirams 9:19 am on September 10, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு.இறைவன் வேறெங்கெல்லாம் இருப்பான் என்று சொல்லும் வாலியின் வரிகளை பாருங்கள்-” அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்,இசை பூங்குயிலின் தேன்குரலில் இருப்பான்,குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்,தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்-பல நூல் படித்து நீ அறியும் கல்வி,பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்,பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்,இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்-பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்-இதோ எந்தன் தெய்வம் முன்னாலே,நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே-படம்-பாபு.
   பாபா படத்தில் ரஜினி நாத்திகராக இருக்கும்போது பாடப்படும் பாடல்-டிப்பு டிப்பு குமரி-அந்த பாடலில் ஒவ்வொரு பருவத்தை பற்றியும் பாடும்போது “குழந்தை குழந்தை மனது-அது கடவுள் வாழும் மனது”என்ற வரி வரும்.படத்தின் கதாபாத்திரம் நாத்திகர்-எப்படி கடவுள்? சரி கவிஞர் வைரமுத்து அவர்களிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி தொலைபேசியில் கேட்டேன்-அவர் கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்த நொடியே “அதில் ஒன்றும் தவறில்லை-நாத்திகரான அறிஞர் அண்ணாவே சொல்லியிருக்கிறார்-ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று.அது போல தான் இதுவும் என்று சொல்லி தன் திறமையை வெளிப்படுத்தி தெளிவுபடுத்தினார். நன்றி.

  • amas32 1:50 pm on September 10, 2013 Permalink | Reply

   ஜேம்ஸ் ஹண்ட் என்ற ஆங்கில கவிஞர் எழுதிய Abou Ben Adam என்ற அற்புதக் கவிதை நினைவுக்கு வருகிறது. (சுட்டி இங்கே http://www.poemhunter.com/poem/abou-ben-adhem/ ) இறைவனை விரும்புவோர் பட்டியலை எழுதும் தேவதையிடம் தன் பெயர் உள்ளதா என்று கேட்கிறார் அபு பென் ஆடம். இல்லை என்று சொல்லும் தேவதையிடம் பரவாயில்லை, என் பெயரை சக மனிதனை நேசிக்கும் பட்டியலில் சேர்த்துவிடு என்பார். அடுத்த நாள் இரவு பெரு ஒளியுடன் வந்த தேவதை அவரிடம் இறைவன் ஆசிர்வதித்த பெயர் லிஸ்டைக் காண்பிகிறது. அதில் அவன் பெயர் தான் முதலிடம் வகித்தது.

   கிருஷ்ண பரமாத்மாக்கு ஒரு முறை உடல் நலமில்லாமல் போகிறது. எந்த வைத்தியத்துக்கும் சரியாகாமல் இருக்கும் பொழுது கிருஷ்ணன் கோகுலத்தில் இருக்கும் கோபியர் கால் தூசியை வாங்கி வருமாறு சொல்கிறார். அதைத் தஹ்டவிக் கொண்டாள் தனக்கு உடல் நிலை சரியாகிவிடும் என்கிறார். இதைக் கேட்ட உத்தவர் அரண்டுப் போகிறார். ஆனாலும் கண்ணன் ஆணைப்படி கொகுலத்துக்குப் போகிறார். அவர் வரப் போகிறார் என்று சூக்ஷமாமக்த் தெரிந்து ஏழு வண்டி நிறைய கோபியர்கள் கால் தூசியை சேகரித்து வைத்திருக்கிண்டனர், உத்தவரிடம் கொடுக்க!

   இறைவனின் ஊடுருவல் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தி இறைவன் வாழும் ஆலயம் ஆக்குகிறது 🙂 அந்த பக்தனின் பாத துளி இறைவனுக்கே மருந்தாகிறது 🙂

   amas32

 • G.Ra ஜிரா 9:11 pm on August 15, 2013 Permalink | Reply  

  அவன் பேர் கேட்டேன்! 

  அழகி ஒருத்தி தெருவில் நடந்தது சென்றாள். பெண்களிலெல்லாம் அழகான பெண் அவள். பெண்மைக்கு இலக்கணம் சொல்ல வேண்டும் என்றால் அவளைச் சொல்லி விடலாம்.

  அவள் பருவம் வந்த உருவம் கொண்டவள். ஆனால் பருவம் தேடும் மஞ்சத்தின் ஆசை இன்னும் வராத நெஞ்சம் கொண்டவள்.

  தெருக்களில் நடக்கையில் அவளை ஆயிரம் பேர் பார்த்தார்கள். ஆனால் அவள் யாரையும் பார்க்கவில்லை.

  ஆண்குரல் எதுவும் அவள் காதில் ஏறவில்லை. பெண்களின் பேச்சு மட்டுமே அவள் காதில் விழுந்தது. எல்லாப் பெண்களின் குரலிலும் கேட்டது ஒரே பெயர்தான். அது ஒரு ஆணின் பெயர்.

  அத்தனை பெண்களும் ஒரே பெயரையா உச்சரிப்பார்கள்! அவள் வியந்தாள். அந்தப் பெயரை நயந்தாள்.

  பெண்கள் அவனுடைய பெயரை மட்டும் சொல்லவில்லை. அவன் அழகையும் சொன்னார்கள். விரிந்த தோளையும் பரந்த மார்பையும் எடுப்பு மூக்கையும் விடுப்பின்றி சொன்னார்கள். கண்ணைக் கண்டு காதல் கொண்ட நிலையைச் சொன்னார்கள். சிவந்த செவிகளைப் பற்றி செப்பினார்கள். அரையின் உடை எழிலின் நடை என்று வாய் வலிக்காமல் பேசினார்கள்.

  அவனுடைய விவரங்களைக் கேட்கக் கேட்க அவள் உள்ளத்தின் அவன் மேல் ஆர்வம் எழுந்தது. இப்படிப்பட்ட ஆண்மையின் இலக்கணம் எந்த ஊரோ என்று உள்ளத்தில் எண்ணி ஏங்கினாள். உடனே தெரிந்தது.

  அவனுடைய ஊர் திருவாரூர். பேரையும் ஊரையும் கேட்டு அவன் மேல் அவளுக்கு காதல் பிறந்தது. காதல் பெருகப் பெருக அவள் பிச்சியானாள்.

  தாயை மறந்தாள். தந்தையை மறந்தாள். குடும்பத்தை மறத்தாள். வாழ்க்கை முறையை மறந்தாள். உணவை மறந்தாள். உயிரை மறந்தாள். தன்னை மறந்தாள். தன்னிலை மறந்தாள்.

  ஆரூருக்கு அவள் கால்கள் நடந்தன. கால்களை முந்தி அவள் மனம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் உயிரோ எப்போதோ ஆரூருக்குப் போய் காத்திருந்தது. அவனோடு எப்படியாவது சேர்ந்து வாழ தலைப்பட்டாள் நங்கை.

  இந்தக் காட்சியை திருநாவுக்கரசர் பார்க்கிறார். அவளுடைய நிலையை அழகிய தேவாரப் பாடலாக எழுதுகிறார்.

  முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
  மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
  பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
  பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள்
  அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
  அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
  தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
  தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே

  இந்தத் தேவாரப் பாடலை கவியரசர் கண்ணதாசன் படித்து உள்ளத்துக்குள் பொதித்து வைத்திருந்திருக்கிறார். அந்தப் பொதியலை திரைப்படத்தில் எடுத்து விட ஒரு வாய்ப்பு வந்தது.

  குடும்பத்தலைவன் படத்தில் காதலனை நினைத்து காதலி பாடுவது போல காட்சி. அந்தக் காட்சிக்குப் பொருத்தமாக அப்பரின் தேவாரத்தை எளிய தமிழில் எழுதினார்.

  அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
  அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
  இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் – அவன்
  என்னைத் தேடி வரும்வரைக்கும் விடவும் மாட்டேன்

  கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடிய இந்த இனிய பாடல் மிகவும் பிரபலமானது. இப்படி தேவாரத்திலிருந்து மலரெடுத்து காதல் மாலை தொடுக்கவும் முடியும் என்பதை ஆயிரத்தோராவது முறையாக கண்ணதாசன் நிரூபித்திருக்கிறார்.

  பாடலின் சுட்டி – http://youtu.be/OW7AKCDphaU

  அன்புடன்,
  ஜிரா

  257/365

   
  • Uma Chelvan 11:00 pm on August 15, 2013 Permalink | Reply

   தியாகராஜனின் வடிவழகை எழுத்தில் அவ்வளவு easya சொல்ல முடியாது. போனவாரம் அவன் சன்னதியில் நான். ராஜா அலங்காரத்ளில் ராஜா கம்பீரமாய் !!!

  • Arun Rajendran 6:43 am on August 16, 2013 Permalink | Reply

   ஜிரா சார்,

   அதே பெண் தான்.. அவள் எதிர்ப்பார்த்திருந்த ஆடவனும் வந்துச் சேர்ந்தான்.. மையல் கொண்ட தையலை அள்ளி அணைத்தான் அன்பை வாரி வழங்கி பிரிந்துச் சென்றான்..அவள் பெற்ற இன்பத்தை எண்ணித் திளைத்தாள் தோழியரோடு சொல்லி மகிழ்ந்தாள் அவள் காதல் கதையை… எப்படி?

   இப்படி http://youtu.be/G2B97RTcB3E

   a synopsis of their love story 🙂

 • என். சொக்கன் 11:04 pm on August 13, 2013 Permalink | Reply  

  சிறு துரும்பும்… 

  • படம்: மிஸ்டர் ரோமியோ
  • பாடல்: ரோமியோ ஆட்டம் போட்டால்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஹரிஹரன், உதித் நாராயண்
  • Link: http://www.youtube.com/watch?v=q_Be1aOMeYc

  யாரையும் தூசைப்போலத்

  துச்சம் என்று எண்ணாதே,

  திருகாணி இல்லை என்றால்

  ரயிலே இல்லை மறவாதே!

  ஒரு சின்னத் திருகாணி காணாமல் போய்விட்டால், ஒரு பெரிய ரயிலே பழுதடைந்து நின்றுவிடக்கூடும். அதுபோல, நாம் யாரையும் சிறியவர்கள் என்று அலட்சியமாக நினைக்கக்கூடாது என்கிறார் வைரமுத்து.

  சுருக்கமாக, தெளிவாக, கிட்டத்தட்ட திருக்குறள்மாதிரி இருக்கிறது, இல்லையா?

  மாதிரி என்ன? திருக்குறளேதான். எப்போதோ ’அச்சாணி’யை உவமையாக வைத்துத் திருவள்ளுவர் சொன்ன கருத்தை அழகாக நவீனப்படுத்திப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து:

  உருவுகண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேர்க்கு

  அச்சாணி அன்னார் உடைத்து

  உருளுகின்ற பெரிய தேர், ஒரு சிறிய அச்சாணி இல்லை என்றால் ஓடாது. அதுபோல, யாரையும் உருவத்தை வைத்துக் குறைவாக எடை போட்டுவிடாதீர்கள்!

  அது நிற்க. அச்சாணி, திருகாணி இரண்டுமே மிக அழகான தமிழ்ச் சொற்கள்.

  அச்சு + ஆணி = அச்சாணி. வண்டியின் சக்கரங்களில் உள்ள அச்சு (axle) என்ற பாகத்தை விலகாமல் பொருத்திவைப்பதால் அதன் பெயர் அச்சாணி.

  திருகு + ஆணி = திருகாணி. மற்ற ஆணிகளை அடிக்கவேண்டும், ஆனால் இந்த ஆணியைத் திருகவேண்டும். அதனால் அப்படிப் பெயர்.

  கிட்டத்தட்ட அந்தத் திருகாணியில் உள்ள மரைகளைப்போலவே சுருண்டு சுருண்டு செல்லும் கூந்தல் கொண்ட பெண்கள் உண்டு. சிலருக்கு இயற்கையாகவே சுருட்டை முடி, சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தலைச் சுழற்றிக்கொள்கிறார்கள்.

  பார்வதி தேவிக்கு அப்படிப்பட்ட Curly Hairதான்போல. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இப்படி அழகாக வர்ணிக்கிறார்: ‘திருகு குழல் உமை!

  ***

  என். சொக்கன் …

  13 08 2013

  255/365

   

   
  • rajinirams 12:12 pm on August 14, 2013 Permalink | Reply

   யாரையும் துச்சம் என்று எண்ணாதே என்ற வைரமுத்துவின் வரிகளையும் உருவு கண்டு எள்ளாமை குறளையும் விளக்கி.பின் திருகாணி -திருகு குழல் உமை என அழகாக சொல்லியுருக்கிறீர்கள்.குரங்கு என்று துச்சமாக நினைத்து அதன் வாலில் தீ வைத்தானே-அது எரித்தது ராவணன் ஆண்ட தீவைத்தானே என்ற வாலியின் வரிகளும் நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ என்ற வாலியின் வரிகளும் நினைவிற்கு வந்தது.நன்றி.

   • amas32 5:12 pm on August 14, 2013 Permalink | Reply

    நீங்க ரொம்ப அழகா விளக்கம் தருகிறீர்கள் 🙂

    amas32

  • Uma Chelvan 5:14 pm on August 14, 2013 Permalink | Reply

   திருகு குழல் உமை! மிக அழகான வர்ணனை !

  • amas32 5:26 pm on August 14, 2013 Permalink | Reply

   எனக்குத் திருகாணி என்றவுடன் காது தோட்டின் திருகாணி தான் நினைவுக்கு வந்தது. காதிலோ மூக்கிலோ நகையை மாட்டிக்கொண்டு திருகாணியைத் திருகுவதும் ஒரு கலை! அதுவும் பல சமயம் திருகாணியைத் தொலைத்துவிட்டு தேடுவதே தான் வேலை -)
   திருகாணியில் thread போய்விட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும்.

   நச்சென்று இருக்கிறது இந்த நாலு வரி 🙂

   amas32

 • என். சொக்கன் 11:20 pm on July 26, 2013 Permalink | Reply  

  பூவான சல்லி 

  • படம்: காக்கிச் சட்டை
  • பாடல்: சிங்காரி சரக்கு
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=nHL-VDUyPy4

  சிங்காரி சரக்கு, நல்ல சரக்கு, சும்மா

  கும்முன்னு ஏறுது, கிக்கு எனக்கு,

  நான் விட்டெறிஞ்சேன் சல்லிய, அட ஊத்திக்கிட்டேன் மில்லிய,

  குதிரமேல ஏறிப்போயி வாங்கப்போறேன் டில்லிய!

  பின்னால் வரப்போகும் மில்லி, டில்லிக்கு எதுகையாக சல்லியை எழுதிவிட்டார் வாலி. நாம் சாதாரணப் பேச்சில் அதிகம் பயன்படுத்தாத அந்தச் சொல்லைப்பற்றிக் கொஞ்சம் பேசுவோம்.

  ’சல்லி’யை நாம் சினிமாவில் நிறைய கேட்டிருப்போம். குறிப்பாக, ’நீ அவளைக் கல்யாணம் செஞ்சுகிட்டா, என் சொத்துல சல்லிக் காசு கிடைக்காது’ என்று பணக்கார அப்பாக்கள் வசனம் பேசுவர். ‘சல்லிப் பயல்’ என்று சிலரைக் கோபிக்கார்கள். ‘சல்லிக் காசு பெறாத வீடு’ என்று அலட்சியமாகப் பேசுவார்கள்.

  தமிழில் ‘சல்லி’க்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, அதிக மதிப்பு இல்லாத சில்லறைக் காசு. மேற்சொன்ன வசனத்தில் ஹீரோவின் தந்தை மகனுக்குக் கொடுக்க மறுப்பதும் அதைதான், வாலியின் பாட்டில் வரும் நாயகன் பாட்டில் வாங்க விட்டெறிவதும் அதே சல்லியைதான்.

  நாயன்மார்களில் ஒருவர்கூட, சல்லியை விட்டெறிந்தார். ஆனால் அவருக்குப் பாட்டில் கிடைக்கவில்லை. அந்தப் பரமசிவனே காட்சி கொடுத்து ஆட்கொண்டான்.

  அவர் பெயர் சாக்கிய நாயனார். புத்த மதத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் சிவன்மீது பற்று.

  ஒரே பிரச்னை, சிவனை எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியவில்லை. பக்கத்தில் கிடந்த ஒரு சல்லியை, அதாவது, சிறிய உடைந்த ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கத்தின்மீது விட்டெறிந்தார்.

  சிவன் கோபிக்கவில்லை. இப்படி ஒவ்வொரு நாளும் அவர் எறிந்த சல்லிகளை மலர்களாக எண்ணி ஏற்றுக்கொண்டான். ‘புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்களாக்கினான் காண்’ என்று இந்த நிகழ்ச்சியைப் பாடுவார் திருநாவுக்கரசர்!

  ***

  என். சொக்கன் …

  26 07 2013

  237/365

   
  • amas32 9:16 pm on July 30, 2013 Permalink | Reply

   நம் புராணங்களில் தான் இறையன்புக்கு எவ்வளவு அழகான உதாரணகள்! இங்கே இப்போ சல்லியை (கற்கள்) ஒருவன் மேல் அடித்தால் அவன் பாராங்ககல்லையே நம் மேல் தூக்கி எறிந்துவிடுவான். ஆனால் சல்லியை (காசை)அடித்து வேண்டியதை வாங்கிக் கொள்ளும் வித்தையும் இங்குண்டு!

   amas32

 • என். சொக்கன் 10:52 pm on July 15, 2013 Permalink | Reply  

  என்றும் இளமை 

  • படம்: ஆட்டோ ராஜா
  • பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4

  மூவாத உயர் தமிழ்ச்

  சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் தந்தது?

  சந்தத்தில் மாறாத நடையொடு, என்முன்னே யார் வந்தது?

  பிரபலமான பாடல்தான். ஆனால் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்காவிட்டால், சரணத்துக்கும் பல்லவிக்கும் நடுவே வரும் அந்த வார்த்தையைக் கவனிக்கக்கூடமாட்டோம், ‘மூவாத’!

  அதென்ன மூவாத?

  ’மூவாத் தமிழ்’ என்று கேட்டிருக்கலாம், மூப்பு அடையாத, என்றைக்கும் வயது ஆகாமல் இளமையோடிருக்கிற தமிழ் என்று பொருள்!

  ’ஏவா மக்கள் மூவா மருந்து’ என்று ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம், அப்பா, அம்மா ஒரு செயலைச் செய் என்று ஏவாத முன்பே அதைச் செய்து முடிக்கிற குழந்தைகள் இருந்துவிட்டால், அந்தப் பெற்றோர் அமிர்தம் சாப்பிட்டதுபோல் தலை நரைக்காமல், உடம்பு தளராமல் வாழ்ந்துவிடுவார்களாம்!

  மூவா மருந்து என்றால், நம்மை மூப்பு அடையாதபடி இளமையாகவே வைத்திருக்கும் மருந்து!

  திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பாடும்போது, ‘மூவா மேனியான்’ என்பார். நம்மாழ்வாரும் திருமாலை ‘மூவா, முதல்வா!’ என்று அழைத்து நெகிழ்வார்.

  புலமைப்பித்தனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் இதையெல்லாம் படித்திருக்கிறார், ‘மூவாத உயர் தமிழ்’ என்று அதே சொற்களால் அவருக்குப் பிடித்த கடவுளைப் பாடிவிடுகிறார்!

  ‘மூவா’ எப்படி ‘மூவாத’ ஆனது?

  ம்ஹூம், ‘மூவாத’தான், ‘மூவா’ ஆனது, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்!

  டென்டிஸ்ட் சமாசாரம் இல்லை, ‘மூவாத’ என்ற வார்த்தைக்குப்பின்னே ஒரு பெயர்ச் சொல் வந்தாகவேண்டும் (மூவாத மேனியான், மூவாத முதல்வன், மூவாத மக்கள், மூவாத தமிழ்… இப்படி), ஆகவே, அது ‘பெயரெச்சம்’ எனப்படும்.

  இந்தப் பெயரெச்சம் எதிர்மறையாக வரும்போது, அதாவது ‘பாடும் கவிதை’ என்று இல்லாமல், ‘பாடாத கவிதை’ என்று Negative பொருளில் எதிர்மறைப் பெயரெச்சமாக வரும்போது, அதன் நிறைவில் (அதாவது ஈறாக) உள்ள எழுத்து, ‘த’, அது கெடும், அதாவது நீங்கும், ‘மூவாத தமிழ்’ என்பது, ‘மூவாத் தமிழ்’ என்று மாறிவிடும், அதைதான் ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்பார்கள்!

  இதேபோல், ‘எழுதாத கவிதை’ என்பது ‘எழுதாக் கவிதை’ எனவும், ’பேசாத பேச்சு’ என்பது ‘பேசாப் பேச்சு’ எனவும் மாறும். எல்லாம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்!

  தமிழுக்கு ஈறு ஏது? அந்த விதத்திலும் அது மூவாத் தமிழ்தான்!

  ***

  என். சொக்கன் …

  15 07 2013

  226/365

   
  • app_engine 2:10 am on July 16, 2013 Permalink | Reply

   மிக அருமையான கட்டுரை!

   தொடரட்டும் உம் தமிழ்த்தொண்டு!

   வாழ்த்துகள்!

  • rajinirams 10:04 am on July 16, 2013 Permalink | Reply

   அடடா,அருமை.எவ்வளவு எளிமையாக ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சத்தை விளக்கி விட்டீர்கள்.
   புலமைப்பித்தன் பல்லாண்டு வாழ்க படத்தில் என்ன சுகம் பாடலில் “எழுதா”கவிதை இவள் தான் அடடா என்றும் ஊருக்கு உழைப்பவனில் அழகெனும் ஓவியம் இங்கே பாடலில் கவி கம்பன் “எழுதா”பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில் என்றும் அழகாக எழுதியிருப்பார்,அம்பிகாபதியில் கே.டி.சந்தானம் எழுதிய “வாடா”மலரே தமிழ் தேனே பாடலையும் சொல்லலாம்.நன்றி.

  • amas32 8:17 pm on July 17, 2013 Permalink | Reply

   அப்போ இந்தப் பாடலில் மூவா உயிர் தமிழ் என்று வராமல் மூவாத உயிர் தமிழ் என்று வந்துள்ளதே அதுவும் ஒகே தானா?

   amas32

   • என். சொக்கன் 11:30 pm on July 17, 2013 Permalink | Reply

    மூவாத என்பதுதான் அடிப்படை, அதன் ஈறு கெடுவது இன்னொரு வடிவம், ரெண்டும் சரிதான்

 • G.Ra ஜிரா 9:35 am on June 13, 2013 Permalink | Reply  

  அல்லும் மல்லும் 

  காதலில் விழுவது எளிது. ஆனால் காதலைக் கையாள்வது? அது மிகமிகக் கடினம். அப்படிக் காதல் கொண்ட இதயம் ஒன்று காதலனை ஒரு நாள் காணாவிட்டாலும் தவிக்கும். விழிக்கும். என்ன செய்வதென்று துடிக்கும். உயிரை உலுக்கும் அந்தத் துன்பத்தை அந்திமந்தாரை திரைப்படத்துக்காக வைர வரிகளில் கொண்டு வந்துள்ளார் வைரமுத்து.

  ஒரு நாள் ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரே அல்லாடுதே
  மறுநாள் வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே

  உசுரு அல்லாடுதாம். அப்படியென்றால்?

  அல்லாடுகிறான் என்று தெற்கத்திப் பக்கம் சொல்லும் வழக்கம் உண்டு. அதாவது ஒரு நிலையில் இல்லாமல் அங்குமிங்கும் ஓடித் திண்டாடுவதைத்தான் அல்லாடுவது என்பார்கள்.

  இதை வேராக வைத்து வந்ததுதான் அலை. கடலின் மேற்பரப்பில் ஒரு நிலையாக இல்லாமல் நீர் முன்னும் பின்னும் திண்டாடுவதால்தான் அதற்கு அலை என்று பெயர்.

  அதே போல ஒரே இடத்தில் இல்லாமல் பல இடங்களைச் சுற்றினால் அதற்கும் அலைவது என்றுதான் பெயர். இப்படி ஓயாமல் அலைந்தால் என்னவாகும்? ”அலு”ப்பாகும்.

  அல்-அலை-அலு-அலைக்கழி…

  என்ன சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கினால் தலை சுற்றுகிறதா? வாழ்வியலோடு கலந்து வந்த சொற்கள் அல்லவா. இந்த அல்-லை வைத்தே இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

  சரி. அல்லாடுதலை விட்டு விடுவோம். அடுத்த வரியில் இருக்கும் மல்லாடு என்ற சொல்லையும் சற்று பார்க்கலாம்.

  மல் என்றால் சட்டென்று புரியாது. மல்லுக்கட்டு என்று சொன்னால் உடனே புரிந்து விடும்.

  மல்+கட்டுதல் = மற்கட்டுதல்
  மல்+போர் = மற்போர்

  இப்போது விளக்காமலேயே மல் என்றால் என்னவென்று புரிந்திருக்கும். மல்லாடுதல் என்றால் இன்றைய எளிய தமிழில் சண்டை போடுதல் என்று பொருள்.

  இந்த மல்லாடு என்ற சொல்லை பழைய இலக்கியத்திலும் பார்க்கலாம். அதுவும் திருநாவுக்கரசரே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

  ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்ட திருக்காளத்தி திருத்தாண்டகத்தில் ஒரு பாடலில் மல்லாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் அப்பரடிகள்.

  இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்
  இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான்காண்
  வில்லாடி வேடனா யோடி னான்காண்
  வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண்
  மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
  மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
  கல்லாலின் கீழிருந்த காபா லிகாண்
  காளத்தி யானவனென் கண்ணு ளானே

  காளத்தியப்பரை உள்ளத்தில் நினைக்கிறார் நாவுக்கரசர் பெருமான். மனதில் ஈசன் உயர்வான காட்சி தருகிறான். அப்போது திருநாவுக்கரசர் தான் கண்டதையெல்லாம் சொல்கிறார்.

  வீடு வீடாகச் சென்று மக்கள் கொடுக்கின்ற சிறு உணவை ஏற்கின்றவனைப் பார்
  இமைக்காத அமரர்கள் தொழுது இறைஞ்சி வணங்கும் இறைவனைப் பார்
  வில்லை ஏந்திச் சென்று காட்டில் பன்றியை வேட்டையாடினானைப் பார்
  வெண்ணூல் குறுக்காக ஓடும் அகலமான மார்பினை உடையானைப் பார்
  மல்லாடுவதற்கு ஏற்ற திரண்ட தோள்களின் மேல் மழுவைப் பார்
  மலைகளின் அன்பு மணாளனாக என்றும் மகிழ்ந்திருந்து – முன்பொருமுறை
  ஆலமரத்தின் கீழ் அமர்ந்து அறிவுருத்திய தெற்கத்திக் கடவுளைப் பார்
  காபாலம் ஏந்தி கூத்தாடுகின்றவனாய் திருக்காளத்தி(காளஹஸ்தி) எழுந்தருளியிருக்கும் ஈசனைப் பார்

  இப்போது அல்லாடு மல்லாடு என்ற சொற்களுக்குப் பொருள் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். மறுபடியும் வைரமுத்து எழுதிய வரிகளைப் படியுங்கள். இப்போது அந்த வரியில் அந்தப் பெயர் தெரியாத காதலி புலம்பும் வலி தெளிவாகப் புரியும்.

  ஒரு நாள் ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரே அல்லாடுதே
  மறுநாள் வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசே மல்லாடுதே

  படம் – அந்திமந்தாரை
  வரிகள் – வைரமுத்து
  பாடியவர் – சுவர்ணலதா
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/DlN92ODfcAM

  அன்புடன்,
  ஜிரா

  194/365

   
 • G.Ra ஜிரா 1:31 pm on April 25, 2013 Permalink | Reply
  Tags: கே.பி.அறிவானந்தம், கோவை கமலா, ஸ்ரீபதி   

  நவ(ல)க் கிரகம் 

  ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதாகவும் அதனால் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று ஏதோ பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

  நான் பொதுவாகவே ஜாதகங்களை பொருட்படுத்துவதில்லை. ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாம் நலமே என்பது என் கருத்து. அது சரி, என் கருத்தைப் பேசுவதற்கா இந்தப் பதிவு? இல்லவே இல்லை.

  அறுபடை வீடுகள், முருகன் கோயில்கள், திருமால் ஆலயங்கள் என்று எல்லாம் வரிசைப் படுத்திய திரைப்படங்கள் நவகிரகங்களைப் பற்றி ஏதேனும் பாடல் எழுதியிருக்கிறதா என்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு.

  நவக்கிரக நாயகி என்றொரு படம் கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது. நவகிரகங்களினால் உண்டாகும் பலன்களை வைத்து கதைகளை உருவாக்கி அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வெற்றிப்படமாக அமைந்த அந்தப் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் கே.பி.அறிவானந்தம் எழுதிய பாடலொன்று நவகிரகங்களையும் அவைகளுக்குரிய அதிதேவதைகளின் கோயில்களையும் பட்டியல் இட்டது.

  கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.எஸ்.சசிரேகா, கோவை கமலா மற்றும் ஸ்ரீபதி ஆகியோர் பாடியிருந்தார்கள். வாருங்கள் பாடல் சொல்லும் தகவல்களைப் பார்க்கலாம். பாடலுக்கான ஒளிச்சுட்டி – http://youtu.be/GAE8cQ2dnoU

  பாடல் வரிகளில் புலவர் கே.பி.அறிவானந்தம் கொடுத்த தகவல்களை நவகிரகங்களையும் சோதிடம் பற்றியும் அறிந்தவர்கள் விளக்கலாம். பாடல் வரிகள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகள் மாற மாற ராகமும் தாளமும் மாறுவதைக் கேட்கலாம்.

  உதயத்தில் ஒளி தந்து
  உலகத்தை வாழ்விக்கும்
  ஒப்பற்ற செஞ்சுடரைப் போற்றுவோம்
  சிவமாகி திருமாலின் வடிவான நவகிரக தேவனை நாம் வாழ்த்துவோம்
  ஆடுதுறை தனையின்று நாடுவோம்
  அந்த சூரியனார் கோயிலிலே காணுவோம்
  சந்ததமும் புகழ் தரும் வாழ்விலே
  என்றும் செந்தாமரை மலர் கொண்டே வணங்குவோம்

  சந்திர தேவனை சிந்தையில் நினைத்தால்
  இந்த உலகினில் எந்தக் குறையுமில்லை
  திருப்பதி மலை சென்று திருமாலின் பாதத்தில்
  வெள்ளை மலர் தூவினால் துயரமில்லை
  அதில் சந்திரனின் அருள் கிடைக்கும் ஐயமில்லை

  ருத்ரமூர்த்தியின் வியர்வையில் வந்த
  யுத்தபூமியின் தலைவனாம்
  உக்ரமூர்த்தியாம் செவ்வாய் குகனுடன் பழனியில் இருப்பான் திடம் தரவே
  செண்பக மலரால் வணங்குவோம் அவனருள் பெறவே
  செவ்வாய் தோஷம் நீங்கிடும் மங்கையர் நலம் பெறவே

  ஆயகலைகள் யாவும் அருள்பவன் புதனன்றோ
  அவனருள் பெற்றார்க்கு வித்தையில் குறைவுண்டோ
  தூய சொக்கநாதருடன் மதுரையில் அமர்ந்திட்டான்
  துலங்கும் வெண்காந்தள் மலர் தந்தாள் அருள் புரிவான்

  தேவரெல்லாம் துதிக்கும் பிரஹஸ்பதி
  உன் திருவிழி பட்டாலே மாறும் தலைவிதி
  ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் நீ தரும் வரமன்றோ
  சொல்லிய ஞானமெல்லாம் நீ தரும் அறமன்றோ
  திருச்செந்தூரிலே உன்னை தரிசித்தாலே போதும்
  முல்லை மலர் கொண்டு பூஜித்தால் அருள் மேவும்

  சுக்ரதிசையது முறையாய் வந்தால் செல்வம் குவிந்திடுமே
  தக்க களத்திரம் பொன் பொருள் நவநிதி சேர்ந்து கிடைத்திடுமே
  சீரங்கத்தில் திருவருள் செய்யும் தேவனை அனுதினமே
  சீதள வெண்டாமரை மலரால் பணிந்தால் நலம் வருமே

  வினைகளின் விளைவிங்கு விதியென்று பெயர் கொண்டு
  சனிபகவான் வடிவாக வருமல்லவோ
  சிறிய காகம் ஏறி பெரிய வாழை தந்த அனுபவம் புவிவாழ்வின் கதையல்லவோ
  வருவோற்கு அருள் செய்யும் நள்ளாறிலே திருநள்ளாறிலே
  குறை தீர்த்து அருளுவான் தீர்க்காயுளே
  கருங்குவளை மலரோடு எள் தீபம் ஏற்றி
  கழல் பணியலாம் என்றும் ஈஸ்வரனையே சனீஸ்வரனையே

  ராகு கேது இரு தேவர் சென்றமரும் வீடு அவருடைய ?!?தியே
  யோக காரகனும் மோட்ச காரகனும் நாகராஜன் வடிவாகுமே
  நாகதோஷமது சூழும் போது அதை நீக்கி வைக்கும் திருகாளஹஸ்தி
  கருமந்தாரை செவ்வல்லியோடு பணிந்தால் அருள்வாள் சிவசக்தி
  பணிந்தால் அருள்வாள் சிவசக்தி பணிந்தால் அருள்வாள் சிவசக்தி

  ஒன்பது கோள்களும் பலவித நல்வினைகளையும் தீவினைகளையும் நம் வினைப்பயன்களுக்கேற்ப கொடுக்குமானால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? எந்தக் கோள் நம்மைக் கோவிக்கிறது எந்தக் கோள் நம்மை அரவணைக்கிறது என்பதெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? எதைச் செய்தால் எந்தப் பலன் கிட்டும்? எதைச் செய்யாவிட்டால் எந்தப் பாவம் தீண்டும்? இப்படிக் குழப்பும் கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை?

  திருஞானசம்பந்தர் அதற்கும் நல்ல விடை சொல்லியிருக்கிறார். இதற்காக கோளறுபதிகம் என்றே ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

  வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
  மிகநல்ல வீணை தடவி
  மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
  உளமே புகுந்த அதனால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
  சனிபாம் பிரண்டும் உடனே
  ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
  அடியாரவர்க்கு மிகவே

  இதற்கு என்ன பொருள்?
  மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளை உடையனை
  நீலகண்டத்து ஈசனை வீணைக் கலைஞனை
  திங்களையும் கங்கையும் முடியில் சூடியவனை
  நெஞ்சத்தில் அன்போடு வைத்த காரணத்தால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது
  ஆகிய கோள்கள் நல்ல பயன்களையே தரும்

  இதே கருத்தை அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரத்தில் எடுத்துச் சொல்கிறார். முருகன் திருவடியைப் பணிந்தாரை “நாள் என் செயும்? வினைதான் என் செயும்? கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?” என்று கேட்கிறார்.

  உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் இன்பமயம் என்பது அருளாளர்கள் கருத்து.

  அன்புடன்,
  ஜிரா

  145/365

   
  • n_shekar 2:03 pm on April 25, 2013 Permalink | Reply

   சரணாகதி தத்துவம் – உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் நல்ல பயன்களையே தரும் – அருமையான பதிப்பு 🙂

  • amas32 9:37 pm on April 25, 2013 Permalink | Reply

   என்ன ஒரு அருமையான பாடல்! இசைக் கடலில் மூழ்கி நல் முத்தை எடுத்து எங்களுக்குக் கொடுக்கிறீர்கள்.

   பாடலாசிரியர் கே.பி.அறிவானந்தம் ஒவ்வொரு கிரகத்தின் குணாதிசயங்களையும், பரிகார தலங்களையும், எந்த மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் என்பதையும் கோவையாகக் கொடுத்துள்ளார்.

   ஆனால் கிரகங்களூக்கும் அதிபதியான ஒருவன் காலைப் பற்றினால் பின் நமக்கு வேறு என்ன கவலை!

   amas32

 • என். சொக்கன் 5:46 pm on April 23, 2013 Permalink | Reply  

  மொட்டுக்கள் எத்தனை? 

  • படம் : அலைகள் ஓய்வதில்லை
  • பாடல் : ஆயிரம் தாமரை மொட்டுக்களே
  • எழுதியவர் : வைரமுத்து
  • இசை : இளையராஜா
  • பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link : http://www.youtube.com/watch?v=BjDNaKe5Yoc

  ஆயிரம் தாமரை மொட்டுக்களே, வந்து
  ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!

  அதென்ன ஆயிரம் தாமரை மொட்டுக்கள்? இரண்டாயிரமாக இருக்கக்கூடாதா? பத்தாயிரம் என்று சொல்லக்கூடாதா? லட்சம், கோடி என்று எண்கள் இல்லையா? இங்கே ஏன் குறிப்பாக ஆயிரத்தைச் சொல்கிறார் கவிஞர்?

  ’ஆயிரம்’ என்பது மெட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஆனால் அதைக்காட்டிலும் முக்கியமான ஒரு காரணம் உண்டு.

  பொதுவாக நம்முடைய தினசரிப் பயன்பாட்டில் வரும் ‘ஆயிரம்’ என்பது, 999க்குப்பிறகு வரும் ஓர் எண். அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

  ஆனால், அதே ஆயிரம் தமிழ்க் கவிதைகளில் வரும்போது, ‘பல’ என்கிற அர்த்தத்தைப் பெறுகிறது. அதாவது, இருபதும் ஆயிரம்தான், இருநூறும் ஆயிரம்தான், இரண்டாயிரம் கோடியும் ஆயிரம்தான்.

  சாட்சி வேண்டுமா? அப்பர் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா? இதே ‘ஆயிரம் தாமரை’ என்ற வரிகளோடு தொடங்கும் அவரது பாடல் ஒன்று இங்கே:

  ஆயிரம் தாமரை போலும்
  ஆயிரம் சேவடியானும்!
  ஆயிரம் பொன்வரை போலும்
  ஆயிரம் தோள் உடையானும்!
  ஆயிரம் ஞாயிறு போலும்
  ஆயிரம் நீள்முடியானும்!
  ஆயிரம் பேர் உகந்தானும்
  ஆரூர் அமர்ந்த அம்மானே!

  திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே,

  உனக்கு ஏகப்பட்ட திருவடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான தாமரைகளைப்போலச் சிவந்துள்ளன.

  அதேபோல், உனக்கு ஏராளமான தோள்கள் உண்டு, அவை ஆயிரக்கணக்கான பொன் மலைகளைப்போல் வலுவோடு மின்னுகின்றன.

  உனக்கு ஏராளமான திருமுடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான சூரியன்களைப்போல் பிரகாசிக்கின்றன.

  திருவடிகள், தோள்கள், திருமுடிகளைப்போலவே, உனக்குப் பல பெயர்களும் உண்டு, அவற்றை நாங்கள் பாடித் துதிக்கிறோம்.

  ’சிவனுக்கு ஒரு தலை, இரண்டு தோள்கள், இரண்டு கால்கள்தானே உண்டு, அப்புறம் எப்படி ஆயிரம் வந்தது?’ என்று கால்குலேட்டரும் கையுமாகக் கேள்வி கேட்காதீர்கள், இங்கே ஆயிரம் என்பது 999க்குப்பின் வரும் எண் அல்ல.

  சந்தேகமிருந்தால் ‘ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணம் செய்’ என்று சொல்கிறவர்களிடம் கேளுங்கள், ‘உங்க கல்யாணத்துக்கு எத்தனை பொய் சொன்னீங்க?’

  நிச்சயம் ஆயிரமாக இருக்காது. நூற்று இருபத்தைந்துக்குள்தான் இருக்கும்!

  ***

  என். சொக்கன் …
  23 04 2013

  143/365

   
  • amas32 9:57 pm on April 23, 2013 Permalink | Reply

   also வாரணம் ஆயிரம் 🙂

   amas32

  • Rajan 6:27 am on April 24, 2013 Permalink | Reply

   ஆயிரம் மலர்களே மலருங்கள்…

   ஆயிரத்தில் நான் ஒருவன்…

  • GiRa ஜிரா 9:26 am on April 25, 2013 Permalink | Reply

   இத ஒத்துக்க முடியாது. எழுது நெனச்சிருந்தத நீங்களே எழுதிட்டிங்க. 🙂

   நல்லா அழகா எழுதியிருக்கிங்க.

   ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி – கண்ணதாசன் – கர்ணன்
   ஆயிரம் மலர்களே மலருங்கள் – கண்ணதாசன் – நிறம் மாறாத பூக்கள்
   ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – வாலி – கற்பகம்

   சுலோகத்தில் கூட கோடி சூர்ய சமப்பிரப என்று வரும். அப்போ கோடி+1 அளவுக்கு பிள்ளையாருக்கு பிரபை இல்லையான்னு கேக்கக்கூடாது. நீங்க சொன்ன அதே விளக்கம் இங்கும் பொருந்துமல்லவா.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel