Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 8:19 pm on October 14, 2013 Permalink | Reply  

  உருவங்கள் மாறலாம் 

  விஜயதசமி நன்னாளில் மகிழ்ச்சியான ஒரு புதிய ஆரம்பம் காண அனைவருக்கும் #4varinote ன் நல்வாழ்த்துகள்.

  நவராத்திரி பூஜைகளில் கொலு பொம்மைகளில் பார்த்த கடவுள் திருவுருவங்கள் ரொம்ப சுவாரசியம். பல வடிவங்களில் விநாயகர். மயிலோடு முருகன்.  மயிலிறகோடு மாதவன்.  கையில் கொட்டும் காசு லட்சுமி, சிவன் என்ற உருவத்தில் இருக்கும் detailing, நின்ற, நடந்த, அமர்ந்த, கிடந்த என்று பல நிலைகளில் நாராயணன். இன்னும் இன்னும்…

  இவையெல்லாம் வெறும் கற்பனைகளா? கண்டவர் சொன்னதா ? அடியவர்கள் பக்தியில் உணர்ந்ததா?  பாலில் நெய் போல மறைந்து நிற்கும் இறைவனை முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள், அகத்தில் கண்கொண்டு  காண்பதே ஆனந்தம் என்கிறார் திருமூலர். அப்பர் சுவாமிகள் இறைவனின் தோற்றத்தைப் எப்படி எழுதிக் காட்டுவேன் என்கிறார்.

  அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

     அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

  இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்

     இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே

  ஆனால் ஒரு உருவம் கொடுத்தபின் அதை வைத்து பல நல்ல கற்பனைகள். அப்பரின் கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற என்ற பாடலில் சிவபிரான் திருமுடியிற் பாம்பும், பிறையும் உள்ளன.  உமை ஒரு பாகத்தில் இருக்கிறாள். பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க, அப்பாம்பு அவளை நீலமயிலோ என்று ஐயப்பட, பிறையோ, அம்மையின் நுதலைக் கண்டு இவ்வழகு தனக்கில்லையே என்று எண்ணி ஏங்க… அட அட

  வாலி தாய் மூகாம்பிகை படத்தில் ஜனனி ஜனனி என்ற பாடலில்

  ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

  சடை வார்குழலும் விடை வாகனமும்

  கொண்ட நாயகனின் இடப்பாகத்தில் நின்றவளை பாட எல்லாம் சொல்லி கங்கையை பற்றி சொல்லவில்லை. குளிர் தேகத்திலே என்று குறிப்பால் சொல்கிறார். அப்பர் சொன்ன பனித்த சடையும்  போல.

  ரவிவர்மா வரைந்த சரஸ்வதி உருவப்படத்தை close-up ல் பார்த்தேன். வெள்ளை உடை அணிந்து வெண் தாமரையில் அமர்த்திருக்கும் அழகிய தோற்றம். நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏடும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள்.  மகாகவி பாரதியார் சொல்லும் சரஸ்வதி வர்ணனை அற்புதம்.

   (திரையில் கௌரி கல்யாணம் படத்தில் இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி)

  http://www.youtube.com/watch?v=0oL9BklwdX8

  வெள்ளைக் கமலத்திலே — அவள்

  வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,

  கொள்ளைக் கனியிசை தான் — நன்கு

  கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்,

  முதலில் படம் பார்த்து விளக்கம் சொல்கிறார். அதன் பின் வரும் வரிகளில் கலைமகளின் விழிகள், கண் மை, நுதல், தோடு, நாசி, வாய் என்று அவர் சொல்லும் கற்பனை அட்டகாசமான character sketch

  வேதத் திருவிழி யாள், — அதில்

  மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,

  சீதக் கதிர்மதி யே — நுதல்

  சிந்தனையே குழ லென்றுடை யாள்,

  வாதத் தருக்கமெனுஞ் — செவி

  வாய்ந்தநற் றுணிவெனுந் தோடணிந் தாள்,

  போதமென் நாசியி னாள், — நலம்

  பொங்குபல் சாத்திர வாயுடை யாள்.

  குழந்தைக்கு அலங்காரம் செய்து மகிழ்வது போல இறைவன் உருவங்களையும் கற்பனையில் மெருகேற்றி வழிபடுவதும் ஒரு ஆனந்தம்தான்

  மோகனகிருஷ்ணன்

  316/365

   
  • amas32 8:42 pm on October 14, 2013 Permalink | Reply

   மற்ற நாட்களில் அவ்வளவாகக் கவனிக்கப் படாத தெய்வம் விஜயதசமி அன்று படு கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறாள். அவள் ஆதற்காகக் கவலைப் பட்டதாகாவும் தெரியவில்லை. அறிவுக்கு அதிபதி, உயர் மறை எல்லாம் போற்றும் அவளை நாம் போற்ற வேண்டியது நம் கடமை.

   மெய் ஞானத்தை அருளும் அவள் கிருபை இல்லாமல் இறைவனடியை அடைவதும் கடினமே.

   அதேபோல அறிவை வைத்து தான் பொருளீட்டவும் முடியும். அதற்கும் அவள் அருளே தேவை.

   சிலருக்கு சில அடையாளங்கள் நம் மனத்தில் ஆழப் பதிந்து விடுகின்றன. அது பல பிறவிகளாக வரும் வாசனையின் காரணமாகவும் இருக்கலாம். அது போல கலைமகள் என்றால் நீங்கள் கூறியிருக்கும் ரவி வர்மாவின் ஓவியம் போல கையில் வீணையுடன் வெள்ளைத் தாமரையில் இருக்கும் சரஸ்வதி நாம் நம் மனக் கண் முன் வருவாள். 🙂

   amas32

 • என். சொக்கன் 11:10 am on January 16, 2013 Permalink | Reply  

  சார்! கிளி சார்! 

  • படம்: உழவன்
  • பாடல்: பெண்ணல்ல பெண்ணல்ல, ஊதாப்பூ
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=z334mCVWnYo

  தென்றலைப்போல நடப்பவள், என்னைத் தழுவக் காத்துக் கிடப்பவள்,

  செந்தமிழ் நாட்டுத் திருமகள், எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்,

  சிந்தையில் தாவும் பூங்கிளி, அவள் சொல்லிடும் வார்த்தை தேன் துளி,

  அஞ்சுகம்போல இருப்பவள், கொட்டும் அருவிபோலச் சிரிப்பவள்!

  ’அஞ்சுகம்’ என்ற சொல்லைப் பல பாடல்களில் கேட்கிறோம். காதலியை ‘அஞ்சுகமே’ என்று நேரடியாக அழைப்பதும், இந்தப் பாட்டில் வருவதுபோல் ‘அஞ்சுகம் போன்றவளே’ என்று வர்ணிப்பதும் உண்டு, பெண் குழந்தைக்கு ‘அஞ்சுகம்’ என்று பெயர் சூட்டும் பழக்கமும் இருந்திருக்கிறது.

  இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?

  ’அஞ்சுகம்’ என்பதை அம் + சுகம் என்று பிரித்துப் படிக்கவேண்டும். ’அம்’ என்றால் அழகிய, ‘சுகம்’ என்றால் கிளி, சுக முனிவர் என்று கிளி முகம் கொண்ட ஒருவரைப்பற்றிக் கேட்டிருக்கிறோம், அதே சொல்தான்.

  ‘சுகம்’க்கு நாம் நன்கு அறிந்த இன்னொரு பொருளும் இருக்கிறது, இன்பம்.

  ஆக, ‘அஞ்சுகம்’ என்று ஒரு பெண்ணை அழைத்தால், அழகிய கிளி போன்றவளே, அல்லது, அழகிய இன்பத்தைத் தருபவளே என்று அர்த்தம்.

  ரொமான்ஸ் மழை ஆச்சா, கொஞ்சம் பக்தி மழையும் பொழிவோம். திருமந்திரத்தில் ஓர் இடத்தில் ‘அஞ்சுக அஞ்செழுத்து’ என்று வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்?

  • அழகிய கிளி போன்ற அஞ்செழுத்து மந்திரம்?
  • அழகிய சுகம் தரும் அஞ்செழுத்து மந்திரம்?

  ம்ஹூம், இரண்டுமே சரிப்படவில்லை. ‘நமசிவாய’ என்ற திருமந்திரத்துக்கும் மேற்சொன்ன அஞ்சுக வர்ணனைகளுக்கும் சம்பந்தம் இருக்குமா என்ன?

  இங்கே ‘அஞ்சுக’ என்பதை ‘அஞ்சு உக’ என்று பிரிக்கவேண்டுமாம். ‘அஞ்சு’ என்றால் நம்மைச் சோதனை செய்யக்கூடிய ஐந்து மலங்கள் / தீமைகள், ‘உக’ என்றால் அழிய, ’நம்மைத் துன்புறுத்தும் ஐந்து பிரச்னைகளையும் அழிக்கக்கூடிய அஞ்செழுத்து மந்திரம்’  என்கிறார் திருமூலர்.

  அட, காதலுக்கும் கடவுளுக்கும் ஒரே சொல், ஆனால் வெவ்வேறு பொருள், பலே!

  ***

  என். சொக்கன் …

  16 01 2013

  046/365

   
  • N.Ramachandran 11:20 am on January 16, 2013 Permalink | Reply

   அஞ்சுகம் என்ற வார்த்தைக்கான விளக்கம் பரி (கிளி)பூரணமாக தெரிந்து கொண்டேன்.நன்றி.
   அரசகட்டளையில் வரும் புத்தம்புதிய புத்தகமே-வாலியின் பாடலில் வரும் “அஞ்சு விரல் பட்டாலென்ன
   அஞ்சுகத்தை தொட்டாலென்ன”,அடுத்து,சகலகலா வல்லவன்-வாலியின் நேத்து ராத்திரி அம்மா பாடலில்
   “அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன்”வா ரே வா ,அடுத்து இந்த உழவன் பாடல்.
   மொத்தத்தில் வாலி அவர்களுக்கு அஞ்சு விரலும் அஞ்சுகமும் ரொம்ப பிடித்திருக்கிறது.நல்ல வேளை-
   கிலி பிடிக்காமல் கிளி பிடித்திருக்கிறதே-காப்பாள் “மீனாட்சி”.தங்களுக்கும் நன்றி.

  • kadalamittai 6:23 pm on January 16, 2013 Permalink | Reply

   அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது !!!

  • kadalamittai 6:24 pm on January 16, 2013 Permalink | Reply

   அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது

  • amas32 (@amas32) 7:40 pm on January 16, 2013 Permalink | Reply

   கலைஞரின் தாயாரின் பெயரின் பொருளைத் தெரிந்து கொண்டேன் 🙂 ஒரு சொல்லைப் பிரித்து எழுதும் யுக்தியில் பொருள் இந்த அளவு மாறுபடுகிறதே! தமிழ் அழகு.

   நன்றி 🙂

   amas32

   • niranjanbharathi 10:43 pm on January 16, 2013 Permalink | Reply

    ரொம்ப அழகான பாடல். அஞ்சுகம் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி 🙂 🙂

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel