Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

  யாவும் நீ 

  • படம்: கரகாட்டக்காரன்
  • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

  மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

  காத்தும், கனலும் நீயம்மா,

  வானத்தப் போல் நின்னு பாரம்மா,

  வந்தேன் தேடி நானம்மா!

  நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

  உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

  அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

  இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

  நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

  உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

  பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

  இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

  ***
  என். சொக்கன் …

  16 11 2013

  349/365

   
  • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

   எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

   மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
   குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

  • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

   ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

   நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

   இரு பாடல்களும் அருமை!

   amas32

 • G.Ra ஜிரா 1:31 pm on April 25, 2013 Permalink | Reply
  Tags: கே.பி.அறிவானந்தம், கோவை கமலா, ஸ்ரீபதி   

  நவ(ல)க் கிரகம் 

  ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷம் இருப்பதாகவும் அதனால் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று ஏதோ பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்றும் கூறினார்.

  நான் பொதுவாகவே ஜாதகங்களை பொருட்படுத்துவதில்லை. ஆண்டவன் அருள் இருந்தால் எல்லாம் நலமே என்பது என் கருத்து. அது சரி, என் கருத்தைப் பேசுவதற்கா இந்தப் பதிவு? இல்லவே இல்லை.

  அறுபடை வீடுகள், முருகன் கோயில்கள், திருமால் ஆலயங்கள் என்று எல்லாம் வரிசைப் படுத்திய திரைப்படங்கள் நவகிரகங்களைப் பற்றி ஏதேனும் பாடல் எழுதியிருக்கிறதா என்று யோசித்ததன் விளைவே இந்தப் பதிவு.

  நவக்கிரக நாயகி என்றொரு படம் கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது. நவகிரகங்களினால் உண்டாகும் பலன்களை வைத்து கதைகளை உருவாக்கி அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வெற்றிப்படமாக அமைந்த அந்தப் படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் கே.பி.அறிவானந்தம் எழுதிய பாடலொன்று நவகிரகங்களையும் அவைகளுக்குரிய அதிதேவதைகளின் கோயில்களையும் பட்டியல் இட்டது.

  கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.எஸ்.சசிரேகா, கோவை கமலா மற்றும் ஸ்ரீபதி ஆகியோர் பாடியிருந்தார்கள். வாருங்கள் பாடல் சொல்லும் தகவல்களைப் பார்க்கலாம். பாடலுக்கான ஒளிச்சுட்டி – http://youtu.be/GAE8cQ2dnoU

  பாடல் வரிகளில் புலவர் கே.பி.அறிவானந்தம் கொடுத்த தகவல்களை நவகிரகங்களையும் சோதிடம் பற்றியும் அறிந்தவர்கள் விளக்கலாம். பாடல் வரிகள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பு ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமாக இசையமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகள் மாற மாற ராகமும் தாளமும் மாறுவதைக் கேட்கலாம்.

  உதயத்தில் ஒளி தந்து
  உலகத்தை வாழ்விக்கும்
  ஒப்பற்ற செஞ்சுடரைப் போற்றுவோம்
  சிவமாகி திருமாலின் வடிவான நவகிரக தேவனை நாம் வாழ்த்துவோம்
  ஆடுதுறை தனையின்று நாடுவோம்
  அந்த சூரியனார் கோயிலிலே காணுவோம்
  சந்ததமும் புகழ் தரும் வாழ்விலே
  என்றும் செந்தாமரை மலர் கொண்டே வணங்குவோம்

  சந்திர தேவனை சிந்தையில் நினைத்தால்
  இந்த உலகினில் எந்தக் குறையுமில்லை
  திருப்பதி மலை சென்று திருமாலின் பாதத்தில்
  வெள்ளை மலர் தூவினால் துயரமில்லை
  அதில் சந்திரனின் அருள் கிடைக்கும் ஐயமில்லை

  ருத்ரமூர்த்தியின் வியர்வையில் வந்த
  யுத்தபூமியின் தலைவனாம்
  உக்ரமூர்த்தியாம் செவ்வாய் குகனுடன் பழனியில் இருப்பான் திடம் தரவே
  செண்பக மலரால் வணங்குவோம் அவனருள் பெறவே
  செவ்வாய் தோஷம் நீங்கிடும் மங்கையர் நலம் பெறவே

  ஆயகலைகள் யாவும் அருள்பவன் புதனன்றோ
  அவனருள் பெற்றார்க்கு வித்தையில் குறைவுண்டோ
  தூய சொக்கநாதருடன் மதுரையில் அமர்ந்திட்டான்
  துலங்கும் வெண்காந்தள் மலர் தந்தாள் அருள் புரிவான்

  தேவரெல்லாம் துதிக்கும் பிரஹஸ்பதி
  உன் திருவிழி பட்டாலே மாறும் தலைவிதி
  ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் நீ தரும் வரமன்றோ
  சொல்லிய ஞானமெல்லாம் நீ தரும் அறமன்றோ
  திருச்செந்தூரிலே உன்னை தரிசித்தாலே போதும்
  முல்லை மலர் கொண்டு பூஜித்தால் அருள் மேவும்

  சுக்ரதிசையது முறையாய் வந்தால் செல்வம் குவிந்திடுமே
  தக்க களத்திரம் பொன் பொருள் நவநிதி சேர்ந்து கிடைத்திடுமே
  சீரங்கத்தில் திருவருள் செய்யும் தேவனை அனுதினமே
  சீதள வெண்டாமரை மலரால் பணிந்தால் நலம் வருமே

  வினைகளின் விளைவிங்கு விதியென்று பெயர் கொண்டு
  சனிபகவான் வடிவாக வருமல்லவோ
  சிறிய காகம் ஏறி பெரிய வாழை தந்த அனுபவம் புவிவாழ்வின் கதையல்லவோ
  வருவோற்கு அருள் செய்யும் நள்ளாறிலே திருநள்ளாறிலே
  குறை தீர்த்து அருளுவான் தீர்க்காயுளே
  கருங்குவளை மலரோடு எள் தீபம் ஏற்றி
  கழல் பணியலாம் என்றும் ஈஸ்வரனையே சனீஸ்வரனையே

  ராகு கேது இரு தேவர் சென்றமரும் வீடு அவருடைய ?!?தியே
  யோக காரகனும் மோட்ச காரகனும் நாகராஜன் வடிவாகுமே
  நாகதோஷமது சூழும் போது அதை நீக்கி வைக்கும் திருகாளஹஸ்தி
  கருமந்தாரை செவ்வல்லியோடு பணிந்தால் அருள்வாள் சிவசக்தி
  பணிந்தால் அருள்வாள் சிவசக்தி பணிந்தால் அருள்வாள் சிவசக்தி

  ஒன்பது கோள்களும் பலவித நல்வினைகளையும் தீவினைகளையும் நம் வினைப்பயன்களுக்கேற்ப கொடுக்குமானால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி? எந்தக் கோள் நம்மைக் கோவிக்கிறது எந்தக் கோள் நம்மை அரவணைக்கிறது என்பதெல்லாம் எப்படித் தெரிந்து கொள்வது? எதைச் செய்தால் எந்தப் பலன் கிட்டும்? எதைச் செய்யாவிட்டால் எந்தப் பாவம் தீண்டும்? இப்படிக் குழப்பும் கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை?

  திருஞானசம்பந்தர் அதற்கும் நல்ல விடை சொல்லியிருக்கிறார். இதற்காக கோளறுபதிகம் என்றே ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

  வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
  மிகநல்ல வீணை தடவி
  மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
  உளமே புகுந்த அதனால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
  சனிபாம் பிரண்டும் உடனே
  ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
  அடியாரவர்க்கு மிகவே

  இதற்கு என்ன பொருள்?
  மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளை உடையனை
  நீலகண்டத்து ஈசனை வீணைக் கலைஞனை
  திங்களையும் கங்கையும் முடியில் சூடியவனை
  நெஞ்சத்தில் அன்போடு வைத்த காரணத்தால்
  ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது
  ஆகிய கோள்கள் நல்ல பயன்களையே தரும்

  இதே கருத்தை அருணகிரிநாதரும் கந்தர் அலங்காரத்தில் எடுத்துச் சொல்கிறார். முருகன் திருவடியைப் பணிந்தாரை “நாள் என் செயும்? வினைதான் என் செயும்? கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?” என்று கேட்கிறார்.

  உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் இன்பமயம் என்பது அருளாளர்கள் கருத்து.

  அன்புடன்,
  ஜிரா

  145/365

   
  • n_shekar 2:03 pm on April 25, 2013 Permalink | Reply

   சரணாகதி தத்துவம் – உள்ளத்தில் அன்பும் அருளும் நிறைந்தால் எல்லாம் நல்ல பயன்களையே தரும் – அருமையான பதிப்பு 🙂

  • amas32 9:37 pm on April 25, 2013 Permalink | Reply

   என்ன ஒரு அருமையான பாடல்! இசைக் கடலில் மூழ்கி நல் முத்தை எடுத்து எங்களுக்குக் கொடுக்கிறீர்கள்.

   பாடலாசிரியர் கே.பி.அறிவானந்தம் ஒவ்வொரு கிரகத்தின் குணாதிசயங்களையும், பரிகார தலங்களையும், எந்த மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் என்பதையும் கோவையாகக் கொடுத்துள்ளார்.

   ஆனால் கிரகங்களூக்கும் அதிபதியான ஒருவன் காலைப் பற்றினால் பின் நமக்கு வேறு என்ன கவலை!

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel