Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 11:59 pm on November 27, 2013 Permalink | Reply  

  வானவில் ஆடை 

  • படம்: ரோஜா
  • பாடல்: சின்னச் சின்ன ஆசை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=YpMK2UYmgw8

  சேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,

  மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,

  வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,

  பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை!

  ’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.

  உண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.

  பழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே!

  சினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.

  முந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉

  ***

  என். சொக்கன் …

  27 11 2013

  360/365

   
  • Uma Chelvan 12:51 am on November 28, 2013 Permalink | Reply

   “காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”

  • amas32 3:33 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂

   உப்புமா கன ஜோர்!

   amas32

  • Saba-Thambi 10:17 pm on November 28, 2013 Permalink | Reply

   உடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.

   அப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் ?

  • rajinirams 3:11 am on November 29, 2013 Permalink | Reply

   ஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.

 • என். சொக்கன் 9:36 pm on November 20, 2013 Permalink | Reply  

  மலரும் அன்பு 

  • படம்: பாண்டிய நாடு
  • பாடல்: ஒத்தைக்கடை
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: டி. இமான்
  • பாடியவர்கள்: சுராஜ் சந்தோஷ், ஹரிஹரசுதன்
  • Link: http://www.youtube.com/watch?v=BaG0wq-23lQ

  ஜெயிச்சா இன்பம் வரும், தோத்தா ஞானம் வரும்,

  இதான் மச்சி லவ்வு! இது இல்லா வாழ்க்கை ஜவ்வு!

  நாரும் பூ ஆகும்டா, மச்சி

  மோரும் பீர் ஆகும்டா!

  ’பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த பழமொழி. வாசனை எதுவும் இல்லாத நாரில்கூட, அதனால் கட்டப்பட்டுள்ள பூக்களின் வாசனை சேர்ந்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம்.

  அங்கிருந்து அப்படியே ஒரு டைவ் அடித்துத் திருக்குறளுக்குச் செல்வோம். இந்தப் பாடலைப் பாருங்கள்:

  நாணாமை, நாடாமை, நார் இன்மை யாது ஒன்றும்

  பேணாமை பேதை தொழில்

  அதாகப்பட்டது, பேதைங்களோட வேலைகள் என்னென்ன தெரியுமா?

  1. கெட்டதைச் செய்யறமேன்னு வெட்கப்படமாட்டாங்க : நாணாமை

  2. நல்லதைத் தேடமாட்டாங்க : நாடாமை

  3. அவங்ககிட்ட நார் இருக்காது : நார் இன்மை

  4. நல்லபடியாப் பார்த்துக்கவேண்டிய நல்ல குணங்களைப் பராமரிக்கமாட்டாங்க : பேணாமை

  மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன ‘நார் இன்மை’? நார் இல்லாமல் எப்படி பூவைக் கட்டுவார்கள்? அது என்ன வயர்லெஸ் பூமாலையா?

  தமிழில் ‘நார்’ என்ற சொல்லுக்கு அன்பு என்றும் அர்த்தம் உண்டு. அதைதான் திருவள்ளுவர் இங்கே பயன்படுத்துகிறார். ‘நார் இன்மை’ என்றால், அன்பு இல்லாத மனம் என்று அர்த்தம்.

  இன்னொரு ரிவர்ஸ் ஜம்ப் அடித்து பழமொழிக்குத் திரும்பி வாருங்கள். இப்போது ‘பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ என்றால் என்ன அர்த்தம்?

  காதலிக்குப் பூ வாங்கிக் கொடுத்தால், அவளுக்கு உன்மேல் அன்பு பிறக்கும், அதுவும் அந்த பூவைபோலவே, அந்தப் பூவைப்போலவே மணம் வீசும்!

  அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!

  ***

  என். சொக்கன் …

  20 11 2013

  353/365

   
  • kekkepikkuni 9:47 pm on November 20, 2013 Permalink | Reply

   நாரும் பூ ஆகுமடா. அருஞ்சொற்பொருள் [எனக்குப் புரிந்த அளவில்:-] அன்பும் ஃப்ப்ப்பூன்னு போயிடும். அல்லது, அன்பூ ஆகிடும். 🙂

  • amas32 10:00 pm on November 20, 2013 Permalink | Reply

   இன்று தான் பாண்டிய நாடு பார்த்தேன் 🙂

   நார்=அன்பு இன்று புதிதாகக் கற்றுக் கொண்டேன், நன்றி 🙂

   மோர் எப்படி பீர் ஆகும், ரொம்ப நாள் சந்தேகம்.

   amas32

  • rajinirams 10:38 am on November 21, 2013 Permalink | Reply

   ஆஹா,பிரமாதம் சார். “நார்”கலந்த நன்றி:-))

  • Chandsethu 7:59 pm on November 21, 2013 Permalink | Reply

   “அப்புறமென்ன? உடனே ஓடுங்க பூக்கடைக்கு!” சொக்கன் ஸ்டைல் :))))

 • என். சொக்கன் 10:50 pm on November 18, 2013 Permalink | Reply  

  உத்தரவின்றி உள்ளே வா 

  • படம்: ஜில்லுன்னு ஒரு காதல்
  • பாடல்: முன்பே வா
  • எழுதியவர்: வாலி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
  • Link: http://www.youtube.com/watch?v=OHA_ATdgw_g

  நீ நீ மழையில் ஆட,

  நான் நான் நனைந்தே வாட,

  என் நாளத்தில் உன் ரத்தம்,

  நாடிக்குள் உன் சத்தம்!

  பள்ளியில் தமிழ் மீடியத்தில் அறிவியல் (அல்லது உயிரியல்) படித்தவர்களுக்கு இந்த வரிகளைப் படித்தவுடன் சட்டென்று அந்த ‘நாளம்’ என்ற சொல்லில் மனம் சென்று நிற்கும்.

  ’ரத்தக் குழாய்’ என்று நாம் பரவலாகச் சொல்லும் அதே வார்த்தைதான். ’ரத்த நாளம்’ என்று சொன்னால் இன்னும் அழகாக இருக்கிறது. நாளத்திற்கும் குழாய்க்கும் ஏதேனும் நுட்பமான வேறுபாடு உண்டா என்று தெரியவில்லை.

  அப்புறம் அந்த நாளமில்லாச் சுரப்பிகள்? தமனி? சிரை? தந்துகி? இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கும்போது, மறுபடி ஒன்பதாங்கிளாஸுக்குத் திரும்பிவிடமாட்டோமா என்றிருக்கிறது!

  விஷயத்துக்கு வருவோம். நம் உடம்பு நிறைய இருக்கும் ரத்த நாளங்கள் பேச்சிலோ, சினிமாப் பாடல்களிலோ அதிகம் வருவதில்லை என்று நினைத்தேன். கொஞ்சம் தேடினால் ஒரு சில நல்ல உதாரணங்கள் சிக்கின:

  உயிர் உருகிய அந்த நாள் சுகம்,

  அதை நினைக்கையில்,

  ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் (வாலி)

  ***

  நாளங்கள் ஊடே

  உனதன்பின் பெருவெள்ளம் (மதன் கார்க்கி)

  ***

  ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்

  புதுத் தாலாட்டுதான் பாடுமா? (பொன்னியின் செல்வன்)

  ***

  மேளங்கள் முழங்குதுங்க, ரத்த

  நாளங்கள் துடிக்குதுங்க (டி. ராஜேந்தர்)

  ***

  ஒரே ஒரு ஆச்சர்யம், ”அறிவியல் கவிஞர்” வைரமுத்து இந்தச் சொல்லை இதுவரை பயன்படுத்தவில்லையோ?

  ***

  என். சொக்கன் …

  18 11 2013

  351/365

   

   
  • Uma Chelvan 6:52 am on November 19, 2013 Permalink | Reply

   நாளமில்லாச் சுரப்பிகள்……..endocrine glands ….that’s what I taught my students today. What a coincident….

   அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை!!
   அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் -அது போல்
   இந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம். – அதை நினைக்கையில்
   ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் ………ஒரு நிமிஷம் கூட என்னை பிரியவில்லை

   மிக மிக அருமையான பாடல். இதை தான் முதல் பாடலாக நீங்க சொல்லி இருக்கீங்க!!! still I want to post this song again !!!

  • amas32 8:37 pm on November 19, 2013 Permalink | Reply

   எவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணியிருக்கீங்க ஒரு பதிவுக்கு! வைரமுத்து இந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்னும் அளவுக்கு research!

   //என் நாளத்தில் உன் ரத்தம்,// very romantic!

   ரொம்பப் பிடிச்சிருக்கு இந்த போஸ்ட் 🙂

   amas32

  • rajinirams 11:28 am on November 20, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு. என்ன அருமையான வாலியின் வரிகள் -உயிர் உருகிய அந்த நாள் சுகம்,அதை நினைக்கையில்,ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,நீங்கள் சொன்னது போல வைரமுத்து அந்த வார்த்தையை உபயோகிக்காதது ஆச்சர்யமே.

  • நவநீதன் 9:34 pm on January 29, 2014 Permalink | Reply

   ”வந்து தூறல் போடு… இல்லை சாரல் போடு… எந்தன் நாளம் நனையட்டுமே…”

   வைரமுத்து

   படம்: க.கொ.க.கொ
   பாடல்: ஸ்மை யாயி..

 • என். சொக்கன் 9:09 pm on November 13, 2013 Permalink | Reply  

  ஆடும் கிளி 

  • படம்: அமுதவல்லி
  • பாடல்: ஆடைகட்டி வந்த நிலவோ
  • எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்கள்: டி. ஆர். மகாலிங்கம், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=G8QcPKPYc2Y

  கிளைதான் இருந்தும், கனியே சுமந்து

  தனியே கிடந்த கொடிதானே,

  கண்ணாளனுடன் கலந்து ஆனந்தம்தான் பெறக்

  காவினில் ஆடும் கிளிதானே!

  பட்டுக்கோட்டையார் கிளை, கனி, கொடி என்று எதையெல்லாம் வர்ணிக்கிறார் என்று யோசித்தபடி அடுத்த வரிக்கு வாருங்கள், அதென்ன ‘காவினில்’ ஆடும் கிளி?

  தமிழில் ‘கா’ என்ற சொல்லுக்குச் சோலை அல்லது தோட்டம் என்று பொருள், காக்கப்படும் (வேலி போட்ட) தோட்டம் என்று விவரிக்கிறவர்களும் உண்டு.

  இந்தச் சொல் நமக்கு அதிகப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், ‘காவிரி’ என்ற நதியின் பெயருக்கே ‘கா + விரி’, அதாவது, சோலைகளை விரித்துச் செல்லும் நீர்வளம் நிறைந்த ஆறு, அல்லது சோலைகளுக்குள் விரிந்து பரவும் ஆறு என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.

  அப்போ காவேரி?

  அதுவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கவேர முனிவரின் மகள் என்பதால் அவளுக்குக் ‘காவேரி’ என்று பெயர் வந்ததாம். ஜனகன் மகள் ஜானகி, கேகயன் மகள் கைகேயி என்பதுபோல!

  பெயர் / அதற்கான காரணம் எதுவானால் என்ன? ஆற்றில் தண்ணீர் வந்தால் சரி. நீரால் அமையும் உலகு!

  ***

  என். சொக்கன் …

  13 11 2013

  346/365

   
  • amas32 7:43 pm on November 15, 2013 Permalink | Reply

   பூங்கா என்பத்தும் பூஞ்சோலை தான். ஒரே எழுத்தில் எத்தனை அழகியப் பொருளைத் தரும் ஒரு சொல்லைத் தமிழ் தருகிறது! தமிழ் வாழ்க 🙂

   amas32

 • என். சொக்கன் 8:20 pm on November 8, 2013 Permalink | Reply  

  பெரு வெள்ளம் 

  • படம்: அவதாரம்
  • பாடல்: ஒரு குண்டுமணி
  • எழுதியவர்: முத்துக்கூத்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: இளையராஜா
  • Link: http://www.youtube.com/watch?v=C45yKkdLFi4

  ஒரு குண்டுமணி குலுங்குதடி கண்ணம்மா காதுல காதுல,

  ரெண்டு சிந்தாமணி சிந்துதடி சின்னம்மா சொல்லுல சொல்லுல!

  இந்தப் பாடலில் வரும் ‘குண்டு மணி’க்கு அர்த்தம், குண்டான மணி என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அதாவது, காதில் ஒரு கனமான மணியைத் தொங்கவிட்டிருக்கும் பெண் தலையை ஆட்ட, அந்தக் குண்டான மணி குலுங்குகிறது.

  வேறோர் இடத்தில் “குண்டு மணி தங்கம் வாங்கி வெச்சிருக்கேன்” என்று வாசித்தேன். அங்கேயும் குண்டான மணி அளவு தங்கம் என்றுதான் அர்த்தம் புரிந்துகொண்டேன்.

  பிறகு ஒரு நண்பர் சொன்னார், அது ‘குன்றி மணி’யாம். சிவப்பு, கருப்பு நிறத்தில் உள்ள ‘குன்றி’ என்ற தாவரத்தின் விதைக்குதான் அந்தப் பெயர். தங்கத்தைக் குறைவாக வாங்கும்போது அதை அளவிடப் பயன்படுத்தப்படும் மிகச் சிறிய எடைக்கல் அது!

  இந்தக் ‘குன்றி மணி’ என்ற பெயர்தான் பின்னர் பேச்சு வழக்கில் ‘குந்து மணி’, ‘குண்டு மணி’ என்று பலவிதமாக மாறிவிட்டதாம். இந்தப் பாடலில் வரும் கண்ணம்மாவின் காதில் குலுங்குவதும், குன்றி மணி அளவு (குறைவான) தங்கம்தான், அல்லது, குன்றி மணி போன்ற சிவப்பான ஏதோ ஒரு கல்லால் செய்யப்பட்ட தோடு!

  ***

  என். சொக்கன் …

  08 11 2013

  341/365

   
  • amas32 7:34 pm on November 9, 2013 Permalink | Reply

   இதே குந்து மணி தானே பிள்ளையார் சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாரின் கண்களாகத் திகழும்?

   குந்து மணித் தங்க கூடப் பெண்ணுக்குச் சேர்த்து வைக்கவில்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கேன், அதாவது சிறிதளவு கூட சேர்த்து வைக்கவில்லை என்ற பொருளில்.

   நிற்க! நான் சிறுமியாக இருந்த போது ஒரு பொற்கொல்லர் எடைக்கல்லில் இதைப் பயன்படுத்தியதைப் பார்த்தது இப்பொழுது நினைவிற்கு வருகிறது :-))

   amas32

 • என். சொக்கன் 9:07 pm on November 2, 2013 Permalink | Reply  

  சின்னஞ்சிறு பெண் போலே! 

  • படம்: வண்ணக்கிளி
  • பாடல்: சித்தாடை கட்டிக்கிட்டு
  • எழுதியவர்: மருதகாசி
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்கள்: S. C. கிருஷ்ணன், P. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=zAZfkh7H6PI

  முத்தாத அரும்பெடுத்து,

  முழம்நீள சரம் தொடுத்து,

  வித்தாரக் கள்ளி கழுத்தில்

  முத்தாரம் போட்டானாம்!

  ’முத்தாரம்’ என்ற சொல் எல்லாருக்கும் தெரியும், முத்து + ஆரம், முத்துகளால் ஆன மாலை. இங்கே, முற்றாத (மல்லிகை அல்லது முல்லை) அரும்புகளைத் தொடுத்து முத்து மாலைபோல் காதலியின் கழுத்தில் போடுகிறான் காதலன்.

  அதுவும் எப்படிப்பட்ட காதலி? ’வித்தாரக் கள்ளி’யாம்!

  அதென்ன வித்தாரம்? வித்து + ஆரம்? விதைகளைத் தொகுத்த மாலையா?

  இந்தச் சொல்லை நாம் பேச்சில் அதிகம் பயன்படுத்துவதில்லை. பாடல்களில் கேட்டிருக்கிறேன், ’வித்தாரக் கவி’ என்று சிலரைச் சொல்வார்கள். ‘வித்தாரக் கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்’ என்று ஒரு பழமொழி உண்டு.

  இதே சொல்லின் வடமொழி வடிவமான ‘விஸ்தாரம்’ நமக்கு நன்றாகத் தெரியும். ஒருவர் விரிவாக எதையாவது பேசினால், ‘நன்கு விஸ்தாரமா விளக்கறார்’ என்போம்.

  இங்கேயும் அதே அர்த்தம்தான், ‘வித்தாரக் கள்ளி’ என்றால், வாயைத் திறந்தால் நிறுத்தமாட்டாள், பேசிக்கொண்டே இருப்பாள் என்று பொருள்.

  மருதகாசி ரொம்பக் குறும்பான மனிதர்தான். புகழ்வதுபோல் காதலியை ‘வாயாடி’ என்று சொல்லிவிட்டாரே!

  ஆனால், காதலில் உள்ளவர்களுக்கு அவள் பேசும் சிறு சொல்லும் இன்பமாகவே இருக்கும். ’Sweet Nothings’ என்று புகழ்வார்கள். ஆகவே, அவள் நிறைய பேசும் வித்தாரக் கள்ளி என்றால் இன்னும் சந்தோஷம்தான்!

  Jokes Apart, ’வித்தாரம்’ என்பது வளவளா என்று வாய்க்கு வந்ததைப் பேசுவதல்ல. ஒரு விஷயத்தைப்பற்றி ஆழமாகவும் விரிவாகவும் பேசுவது. அதனால்தான் ‘வித்தாரக் கவி’ என்பது பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, நாம் ‘வித்தாரக் கள்ளி’யையும் பெருமையான வர்ணனையாகவே எடுத்துக்கொள்ளலாம்!

  ***

  என். சொக்கன் …

  02 11 2013

  335/365

   
  • Uma Chelvan 3:33 am on November 3, 2013 Permalink | Reply

   I thought ’வித்தாரம்’ means clever or very smooth (local slang). Thanks for the clarification. ::))))

  • amas32 8:03 pm on November 4, 2013 Permalink | Reply

   நானும் பெண்ணானதால் அப்படியே எடுத்துக் கொள்வோம் 😉 வித்தகக் கவிஞர் என்று பா.விஜய்க்கு பட்டம் கொடுத்தார் கலைஞர். வித்தாரக் கவிஞர் என்று வேறு யாராவது ஒரு கவிஞருக்குப் பட்டம் கொடுக்கலாம் போல :-))

   amas32

 • என். சொக்கன் 11:17 pm on October 28, 2013 Permalink | Reply  

  அழகின் கதகதப்பு! 

  • படம்: உயிரே
  • பாடல்: தைய தையா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், மால்குடி சுபா
  • Link: http://www.youtube.com/watch?v=pE3ykXZS4zA

  அவள் கண்களோடு இருநூறாண்டு,

  மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

  அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!

  ஐநூறா, ஐந்நூறா, எது சரி?

  வழக்கம்போல், இரண்டுமே சரிதான், எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விடை மாறும்!

  சாலையில் நடந்து செல்கிறீர்கள். கீழே ஏதோ கிடக்கிறது, குனிந்து பார்த்தால், அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். ‘ஐ! நூறு ரூபாய் கிடைத்தது எனக்கு’ என்கிறீர்கள்.

  ஆனால், அதே இடத்தில் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள் கிடைத்தால், ‘ஐநூறு ரூபாய்’ என்று சொல்லக்கூடாது, ‘ஐந்நூறு ரூபாய்’ என்றுதான் சொல்லவேண்டும்!

  ஐந்து + நூறு ஆகியவை இணையும்போது, ’ஐந்து’ என்ற சொல்லின் நிறைவில் உள்ள ‘து’ என்ற எழுத்து நீக்கப்படும், ஆனால் ‘ந்’ என்ற எழுத்து நீக்கப்படாது, இதனைத் தொல்காப்பியம் ‘நான்கும் ஐந்து ஒற்றுமெய் திரியா’ என்று குறிப்பிடுகிறது.

  ஆக, ஐந்(து) + நூறு = ஐந்நூறு.

  ***

  என். சொக்கன் …

  28 10 2013

  330/365

   
  • rajinirams 12:33 pm on October 29, 2013 Permalink | Reply

   ஐ! “ந்”த தகவல் புதுசு.நல்ல பதிவு.

  • amas32 11:22 am on November 2, 2013 Permalink | Reply

   //அவள் கண்களோடு இருநூறாண்டு,

   மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

   அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!//

   200 +300 =500?
   கண்களின் அழகோடு 200 ஆண்டுகள்,
   மூக்கின் அழகோடு 300 ஆண்டுகள்,
   ஆக மொத்தம் 500 ஆண்டுகள்?

   அழகோ அழகு 🙂

   amas32

 • என். சொக்கன் 3:33 pm on October 19, 2013 Permalink | Reply  

  விஸ்வநாதன், நெல் வேண்டும்! 

  • படம்: காதலிக்க நேரமில்லை
  • பாடல்: விஸ்வநாதன், வேலை வேணும்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=VndSgJLoKkU

  மாடி மேல மாடி கட்டி

  கோடி கோடி சேர்த்துவிட்ட சீமானே!

  ஆளு அம்பு சேனை வெச்சு, காரு வெச்சு

  போரடிக்கும் கோமானே!

  பழந்தமிழ் நாட்டில் மாடு கட்டிப் போரடித்தால் கட்டுப்படியாகாது என்று யானை கட்டிப் போரடித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இந்தப் பாட்டில் வருகிற விஸ்வநாதன் என்ற சீமான் Car வைத்துப் போரடித்ததாக எழுதுகிறார் கண்ணதாசன்.

  மாடோ, யானையோ, காரோ, போரடித்தல்ன்னா என்ன?

  நானும் பார்த்ததில்லை. படித்துத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.

  நெல்வயலில் இருந்து கதிர்களை அறுவடை செய்தபிறகு, அவற்றிலிருந்து தானிய மணிகளைப் பிரித்து எடுத்தால்தானே அரிசி கிடைக்கும்? அதற்காக, அறுத்த கதிர்களைக் கையில் பிடித்து அடிப்பார்கள், அவற்றிலிருந்து நெல் மணிகள் மொத்தமாகக் கீழே விழும்.

  ஆனால் அப்போதும், சில நெல் மணிகள் பிடிவாதமாகக் கதிரிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து எடுக்கவா முடியும்?

  அதற்காக, அடித்து முடித்த கதிர்களையெல்லாம் ஒரு களத்தில் வட்டமாகப் பரப்பிவைப்பார்கள். அதன்மீது மாடுகளை நடந்துவரச் செய்வார்கள். அவை மிதிக்க மிதிக்க, கதிர்களில் மீதமுள்ள நெல்மணிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இதற்குதான் போரடித்தல் அல்லது சூடடித்தல் என்று பெயர்.

  விளைந்த நெற்கதிர்களின் அளவு குறைவாக இருந்தால், மாடுகளை மிதிக்கச் சொல்லலாம். நிறைய்ய்ய்ய்ய இருந்தால்? அதற்குப் பெரிய யானைகளோ கார்களோ தேவைப்படும் என்று பாடல்களில் புலவர்கள் உயர்வு நவிற்சி அணியாக மிகைப்படுத்திச் சொல்லிப் புகழ்கிறார்கள்!

  இதற்குமேல் இந்த விஷயத்தை விவரித்தால் bore அடித்துவிடும்!

  ***

  என். சொக்கன் …

  19 10 2013

  321/365

   
  • lotusmoonbell 5:09 pm on October 19, 2013 Permalink | Reply

   கிராமப்புரங்களில் பெரும்பாலும் ராகிக் கதிர்களை சாலைகளில் பரப்பி விடுவதைப் பார்த்திருக்கிரேன். கார், லாரிகள்தான் ‘போரடி’க்கின்றன.

  • Saba-Thambi 8:10 pm on October 19, 2013 Permalink | Reply

   நன்றாக சூடு மிதித்திருக்கிறீர்கள். பாரட்டுக்கள்!

  • rajinirams 11:00 pm on October 19, 2013 Permalink | Reply

   கார் வெச்சு போரடிக்கும் கோமானே வார்த்தையை வைத்து”போரடிக்காத” நல்ல சுவாரஸ்யமான பதிவை போட்டிருக்குறீர்கள். சூப்பர்

  • amas32 9:37 am on October 20, 2013 Permalink | Reply

   Like Lotusmoonbell has mentioned, roads near villages will be strewn with gains and cars and lorries will do the work of oxen. But now even that is missing. I think all agricultural land are being converted to residential plots 😦

   amas32

  • Anany 9:20 pm on October 22, 2013 Permalink | Reply

   //நானும் பார்த்ததில்லை. படித்துத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.// enna koduma sir ithu,
   ungalukke theriyavillai endral indraiya ilaiya thalaimuraiyin kadhi ? ippadithan ellavatrayum izhanthu kondirukkirom

 • என். சொக்கன் 7:16 pm on October 16, 2013 Permalink | Reply  

  உயர் 

  • படம்: புதிய மன்னர்கள்
  • பாடல்: வானில் ஏணி போட்டு
  • எழுதியவர்: பழநிபாரதி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: மனோ
  • Link: http://www.youtube.com/watch?v=HWmbi8YCEvs

  வானில் ஏணி போட்டு கொடி கட்டு!

  மின்னல் நமக்கு தங்கச் சங்கிலி,

  விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி,

  வானவில்தான் நம் வாலிப தேசக்கொடி!

  சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் அலுவலகம். ஆனாலும் எப்படியோ பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழுக்கும் சம உரிமை அளித்திருந்தார்கள்.

  என்னுடன் வந்திருந்த நண்பர் ‘மின் தூக்கி’ என்ற பெயரைப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தார். ‘அபத்தமான மொழிபெயர்ப்பு’ என்றார்.

  ‘ஏன்? Liftங்கறது ஆங்கிலப் பெயர், அதற்கு இணையான தமிழ்ச்சொல் தூக்குதல், அப்படின்னா மின்சாரத்தால இயங்கற ”தூக்கி”ங்கற பெயர் சரியாதானே இருக்கு?’ என்றேன்.

  ‘அதென்னவோ, எனக்குத் தூக்கிங்கற பெயர் இயல்பாத் தோணலை’ என்றார் அவர், ‘இதையே ஏணின்னு சொல்லிப்பாருங்க, அது ரொம்ப இயல்பா இருக்கு!’

  நண்பருக்கு விளக்க முயன்றேன். ‘நம்மைத் தூக்கிச் செல்லுதல்’ என்பது செயல், அதைச் செய்யும் கருவியைத் ‘தூக்கி’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

  சொல்லப்போனால், ‘ஏணி’ என்ற சொல்லே இப்படி வந்ததுதான்.

  தமிழில் ‘ஏண்’ என்றால் உயர்வு என்று அர்த்தம். ‘ஏணிலேன்’ என்று திருமங்கை ஆழ்வார் தன்னைச் சொல்லிக்கொள்வார். அதாவது, ஏண் இலேன், கடவுளுக்கு முன்னால் நான் எந்த உயர்வும் இல்லாத சாதாரண ஆள் என்று பொருள்.

  ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

  அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல் வரலாம்தானே?

  ***

  என். சொக்கன் …

  16 10 2013

  318/365

   
  • rajinirams 10:49 pm on October 16, 2013 Permalink | Reply

   “ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

   அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல்”

   எளிமையான விளக்கம்,அருமையான பதிவு.

  • amas32 9:41 pm on October 17, 2013 Permalink | Reply

   ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய். இவை நான்கும் இருக்கும் இடத்திலேயே இருக்கும் ஆனால் நம்மை உயரவோ அல்லது நல்ல நிலைக்கோ அழைத்துச் செல்லும். ஏணி நம்மை ஏற்றிவிடும். ஆனால் அதற்கு மற்றப்படி மதிப்பில்லை. தோணி இக்கரையில் இருந்து அக்கரைக்கு இட்டுச் செல்லும் ஆனால் அதன் வாழ்வு அந்த நதியில் தான்.அண்ணாவி என்பது ஆசிரியர். அவர் நமக்கு ஆசானாக இருந்து நமக்குச் சொல்லிக் கொடுத்து நாம் மருத்துவராகவோ கலெக்டராகவோ ஆகிவிடுவோம். அவர் அதே ஆசிரியர் நிலைமை தான். நார்த்தங்காய் வேண்டாத சோற்றைக் கூட சாப்பிட உதவும் ஆனால் ஏப்பம் வரும் போதெல்லாம் நார்த்தங்காய் சுவை இருந்துக் கொண்டே இருக்கும். 🙂

   உங்கள் ஏண் என்னை இந்த விளக்கத்தை எழுத வைத்துவிட்டது 🙂

   நல்ல பதிவு, நன்றி 🙂

   amas32

   • Uma Chelvan 3:07 am on October 18, 2013 Permalink | Reply

    amas32…..அண்ணாவி. —ஆசிரியர் …….இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை. தமிழ்தானா அல்லது வேறு எதாவது மொழியா?

  • Uma Chelvan 7:30 am on October 18, 2013 Permalink | Reply

   நார்த்தங்காய் பொதுவாக காய்சல் னின் பொது வரும் தலை சுத்தல் , வாய் கசப்பு, மயக்கம், வாந்தி வருவது போன்ற ( ஆனால் வராது, nausea ) உணர்வு போனறவகளை தடுக்கும் எனபதால் காரம் இல்லாமல் சாப்டும் (bland diet ) கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

 • என். சொக்கன் 6:57 pm on October 12, 2013 Permalink | Reply  

  எல்லாம் சிவமயம் 

  • படம்: திருவருட்செல்வர்
  • பாடல்: சித்தமெல்லாம் எனக்குச் சிவமயமே
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: கே. வி. மகாதேவன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=trsW6cL9a9o

  சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, இறைவா, உன்னைச்

  சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே!

  அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை, அந்த

  அம்மை இல்லாமல் இந்தப் பிள்ளை இல்லை!

  ’அத்தான்’ தெரியும், அது என்ன ‘அத்தன்’?

  அடுத்து வரும் ‘அம்மை’யோடு சேர்த்துப் பார்த்தால் பொருள் தெரிந்துவிடும். அத்தன் என்றால் தந்தை என்று பொருள்.

  சுந்தரர் தன்னுடைய ஒரு பாடலில் சிவனை ‘பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! அத்தா!’ என்பார். இந்தத் திரைப்படப் பாடலின் தொடக்கத்திலேயே நாம் அதைக் கேட்கலாம்.

  இன்றைக்கும் இஸ்லாமியர்களின் வீடுகளில் தந்தையை ‘அத்தா’ என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. அதேபோல் மலையாளிகள் ‘அச்சா’ (அதாவது, ‘அச்சன்’, ‘அச்சனே’) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

  கம்ப ராமாயணத்தின் ஒரு பாடலில் ராமன் தன் தம்பி லட்சுமணனிடம், ‘அத்தா! இது கேள்!’ என்று தொடங்கிப் பேசுவான். இன்னொரு பாடலில் விபீஷணன் தன் அண்ணன் ராவணனிடம் ‘அத்த! என் பிழை பொருத்தருள்’ என்பான்.

  என்ன குழப்பம் இது? ராமனுக்கு எப்படி லட்சுமணன் தந்தை ஆவான்? விபீஷணனுக்கு எப்படி ராவணன் தந்தை ஆவான்?

  அது ஒன்றும் பெரிய மர்மம் இல்லை. தம்பியிடமோ அண்ணனிடமோ உரையாடும்போது, ‘அப்படி இல்லைப்பா’ என்று பேச்சுவாக்கில் சொல்கிறோம் அல்லவா? அதுபோலதான் ராமனும் விபீஷணனும் ‘அத்தன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு பாடல்களிலும் அதன் பொருள், ‘எனக்கு தந்தையைப்போன்றவனே!’

  ***

  என். சொக்கன் …

  12 10 2013

  315/365

   
  • Uma Chelvan 8:53 pm on October 12, 2013 Permalink | Reply

   எப்படி ஆண்கள் தன்னை விட சிறு வயது பெண்களை பாசத்துடன் “அம்மா” என்று சேர்த்து அழைப்பது போல!!!!!

   பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
   பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
   உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
   உயிரை மேவிய உடல் மறந்தாலும்
   கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
   கண்கள் இன்று இமைப்பது மறந்தாலும்
   நல்ல தவத்தவர் உள்ளிருந்து ஒங்கும்
   நமஷிவாயத்தை நான் மறேவேனே

   இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் —என் சுவாமிக்கு

   பாடியவர்..பாம்பே ஜெயஸ்ரீ
   எழுதியவர் -கோபாலக்ருஷ்ண பாரதி
   ராகம்—பெஹாக்

  • s.anand 3:33 pm on October 14, 2013 Permalink | Reply

   pardon my transliteration eventualities
   அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
   அருள்நோக்கில் தீர்த்த நீராட்டி கொண்டாய்
   எத்தனைஅரியை நீ எளியனானாய்
   எனையாண்டு கொண்டிறங்கி ஏன்றுகொண்டாய்
   பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
   பிழைத்தனைகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றோ
   இத்தனையும் எம்பரமோ வையவையோ
   எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே

  • amas32 8:47 pm on October 14, 2013 Permalink | Reply

   அத்தன், புதிய சொல்லை இன்று கற்றுக் கொண்டேன் 🙂 நாம் தினம் சொல்லும் இறை துதிகளைக் கவனித்துச் சொன்னாலே நிறைய வார்த்தைகளின் பொருள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிந்து கொண்டேன், நன்றி 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel