Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 6:54 pm on November 6, 2013 Permalink | Reply  

  வல் ஆடை, மெல் ஆடை 

  • படம்: ஜீன்ஸ்
  • பாடல்: கொலம்பஸ் கொலம்பஸ்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஏ. ஆர். ரஹ்மான்
  • Link: http://www.youtube.com/watch?v=LNl44GG7gts

  ரெட்டைக் கால் பூக்கள் கொஞ்சம் பாரு,

  இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு!

  அலை நுரையை அள்ளி அவள் ஆடை செய்யலாகாதா!

  விண்மீன்களைக் கிள்ளி அதில் கொக்கி வைக்கலாகாதா!

  ’ஜீன்ஸ்’ என்கிற ‘வன்’ ஆடையின் பெயரில் ஒரு படம், அதற்குள் அலை நுரையை அள்ளிச் செய்த ‘மென்’ ஆடையைப்பற்றிய ஒரு கற்பனை!

  அலை நுரையை அள்ளி ஆடை செய்தால் எப்படி இருக்கும்? மிக மெல்லியதாக, உடல் வண்ணம் வெளியே தெரியும்படி Transparentடாக இருக்கும்.

  ‘ச்சீ, இந்த ஆடையெல்லாம் நம் ஊருக்குப் பொருந்தாதே’ என்று யோசிக்கிறீர்களா?

  நுரை போன்ற ஆடைகளெல்லாம் நம் ஊரில் எப்போதோ இருந்திருக்கின்றன. பெண்களுக்குமட்டுமல்ல, ஆண்களுக்கும்!

  நம்பமாட்டீர்களா? சீவக சிந்தாமணியில் ஒரு காட்சி. ஹீரோ சீவகன் தன்னை அலங்கரித்துக்கொள்வதை வர்ணிக்கும் திருத்தக்க தேவர், ‘இன் நுரைக் கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்’ என்கிறார்.

  அதாவது, இனிய நுரை போன்ற ஆடையைத் தன் இடுப்பில் எழுதிவைத்தானாம்… உடுத்தினான் இல்லை, எழுதினான்… அவன் உடம்பில் ஆடையை வரைந்தாற்போல அப்படிச் சிக்கென்று பிடித்துக்கொண்டிருந்ததாம் அந்த ஆடை.

  இப்போது சொல்லுங்கள், லெக்கின்ஸ் எந்த ஊர்க் கலாசாரம்?

  ***

  என். சொக்கன் …

  06 11 2013

  339/365

   
  • amas32 7:29 pm on November 6, 2013 Permalink | Reply

   நான் இந்தப் பாடலை கேட்டபோது கற்பனை செய்தது foam மாதிரி லேசான எடை உடைய ஆடையை. பெண்களுக்குத் தான் தெரியும் கனமான புடைவைகளை அணியும் சிரமம் 🙂 அலை நுரை அவ்வளவாக transparent ஆக இருக்காதே. நுரை கலையும் போது தான் அடி மணல் தெரியும். ஆனாலும் நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும் 🙂

   amas32

  • rajinirams 11:22 pm on November 6, 2013 Permalink | Reply

   சூப்பர்.கவிஞர் வைரமுத்து அவர்களின் அழகான கற்பனையை -அலை நுரையை அள்ளி அவள் ஆடல் செய்யலாகாதா- சீவக சிந்தாமணி பாடலுடன் ஒப்பிட்டு அருமையான “ஜீன்ஸ்-லெக்கின்ஸ்” பதிவை தந்திருக்கிறீர்கள்.

 • G.Ra ஜிரா 11:58 am on August 9, 2013 Permalink | Reply  

  வெத்தல போட்ட ஷோக்குல! 

  ஒவ்வொரு நடிகர்களுக்கும் தான் எழுதியதில் பிடித்த பாடலைச் சொல்லும் போது வைரமுத்து அவர்கள் சரத்குமாருக்கு எழுதியதில் “கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்” பாட்டைக் குறிப்பிட்டாராம்.

  வெற்றிலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் அடுத்த பாடல் கண்ணதாசன் எழுதியது. “வெத்தலையப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி” என்று பில்லா படத்துக்காக எழுதினார்.

  கங்கை அமரனும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்துக்காக “வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ” என்று எழுதினார்.

  வெத்தலை போடுவது” என்பது நாள் கிழமை திருவிழா திருமணம் என்று கூடினால் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.

  முன்பெல்லாம் “வெத்தலை போடுவது” தினப்படி பழக்கமாகவே பலருக்கு இருந்தது. ஊர்ப்பக்கத்து பெரியவர்கள் பல்லெல்லாம் விழுந்த பிறகும் வெற்றிலையை பாக்கோடும் சுண்ணாம்போடும் உரலில் இடித்து மென்று தின்பதைக் காணலாம்.

  வெற்றிலை மடிப்பது என்பதே ஒரு கலை. அப்படி மடிப்பதற்குச் சரியான வெற்றிலையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு கலை. தென்னாட்டில் கருவெத்தலை நிறைய கிடைக்கும். கொங்கு நாட்டிலும் சோழமண்டலத்திலும் வெள்ளவெத்தலை நிறைய விளையும்.

  கருவெத்தலையில் காரம் அதிகம். புதிதாக வெத்திலை போடுகின்றவர்களுக்கு வெள்ளவெத்திலைதான் சரி. சொகுசு வெத்திலை என்பார்கள்… செல்லப்பெட்டியில் (வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்துக் கொள்ளும் பெட்டி) வெள்ளவெத்திலையும் சீவலும் வாசனைச் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு மென்று கொண்டேயிருக்கும் சொகுசாளிகளையும் உலகம் நிறையவே கண்டிருக்கிறது. தில்லானா மோகனாம்பாள் கதையில் வரும் சவடால் வைத்தியும் அந்த வகைதான்.

  ஆனால் சொகுசு வெத்திலை உழைக்கும் மக்களுக்கு போதாது. காரமாக இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் விரும்புவது காரவெத்திலையைத்தான்.

  பாக்கிலும் பலவகை உண்டு. கொட்டைப்பாக்கு, களிப்பாக்கு, வெட்டுப்பாக்கு, பாக்குத்தூள், வாசனைப் பாக்குத்தூள், சீவல் என்று அடுக்கலாம். கொட்டைப் பாக்கு உருண்டையாகவும் கடிப்பதற்கு கடுக்கென்றும் இருக்கும். களிப்பாக்கு மெல்வதற்கு எளிதானது. வெட்டுப்பாக்கு என்பது கொட்டைப் பாக்கை அரைவட்டமாக ஆரஞ்சுச் சுளை வடிவில் வெட்டி வைத்திருப்பது. பாக்குத்தூளைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அதுதான் கடைகளில் கிடைக்கிறது. பாக்கை மெல்லிசாக சீவியெடுத்தால் சீவல் கிடைக்கும்.

  வெற்றிலையின் காம்பைக் கிள்ளி.. நடுநரம்பை உரித்து… வெற்றிலையின் பின்பக்கத்தில் சுண்ணாம்பை ஆட்காட்டி விரலில் தொட்டு குழந்தைக்கு திருநீறு பூசுவது போல அளவாகப் பூச வேண்டும். பாக்குத்தூளை தேவைக்கு வைத்து மடித்துக் கொடுப்பது எல்லாருக்கும் எளிதில் கைவந்து விடாது.

  வெற்றிலை மடிக்கும் போது ஏதாவது ஒன்றின் அளவு கூடினாலோ குறைந்தாலோ வெற்றிலை போட்ட வாய் சிவக்காது. சுண்ணாம்பின் அளவு கூடினால் வாய் வெந்து போகும். பாசத்தோடு மடிக்கும் போதுதான் எல்லா அளவுகளும் சரியாக இருக்கும்.

  வெற்றிலை போடுவது பற்றி ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் இரண்டு பாடல்கள் உள்ளன.

  கைசெய்து கமழு நூறுங் காழ்க்கும்வெள் ளிலையுங்
  காம மெய்தநன் குணர்ந்த நீரா ரின்முக வாச மூட்டிப்
  பெய்தபொற் செப்பு மாலைப் பெருமணிச் செப்புஞ் சுண்ணந்
  தொய்யறப் பெய்த தூநீர்த் தொடுகடற் பவளச் செப்பும்

  மேலே சொன்ன பாடலின் முதல் வரியில் வெற்றிலையும் சுண்ணாம்பும் வருகிறது.

  கை செய்து கமுழும் நூறும் – இங்கே நூறு என்பது சுண்ணாம்பைக் குறிக்கும். நூறுதல் என்றால் அரைத்தல். சுண்ணாம்புக்கட்டிகளை அரைத்து மென்மையாக்கி வெற்றிலைக்கு ஏற்க செய்வதால் அதற்கு நூறு என்றே பெயர். (அந்தக்காலத்தில் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் சுண்ணாம்பு அரைப்பார்கள்)

  காழ்க்கும் வெள்ளிலையும் – வெள்ளிலை என்பது வெற்றிலையைக் குறிக்கும் பழைய பெயர். காழ்ப்புச் சுவையுடையது என்பதால் காழ்க்கும் வெள்ளிலை எனப்படுகிறது.

  இன்னொரு பாட்டைப் பார்க்கலாம்.

  கூந்த லேந்திய கமுகங் காய்க்குலை
  யாய்ந்த மெல்லிலை பளித மாதியா
  மாந்தர் கொள்ளைகொண் டுண்ண மாநில
  மேந்த லாம்படித் தன்றி யீட்டுவார்

  கூந்தலேந்திய கமுகங்காய்குலை” என்பது பாக்குமரத்தில் தொங்கும் பாக்குக்குலைகளைக் குறிக்கும். அந்த பாக்கோடு “ஆய்ந்த மெல்லிலை”… அதாவது வெற்றிலையையும் வாசனைப் பொருட்களையும் கலந்து மாந்தர்கள் உண்டார்களாம். அப்போதே சுண்ணாம்புக்கும் பாக்குக்கும் வாசனையேற்றும் வேலை நடந்திருக்கிறது.

  அந்த அளவுக்குப் பிரபலமாக இருந்த வெற்றிலைப் பழக்கம் இன்று கல்யாண வீடுகளிலும் ஓட்டல் வாசல் பான்பீடா கடைகளிலும் குறுகி விட்டது என்பது உண்மைதான். எது எப்படியோ.. கண்டதையும் வெற்றிலையில் கலந்து குதப்பி எல்லா இடங்களிலும் துப்பாமல் இருந்தாலே போதும்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை, சிற்பி, எஸ்.ஜானகி, மனோ)
  வெத்தலைய போட்டேண்டி (பில்லா, எம்.எஸ்.விசுவநாதன், மலேசியா வாசுதேவன்)
  வெத்தல வெத்தல (ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இளையராஜா, மலேசியா வாசுதேவன்)

  அன்புடன்,
  ஜிரா

  251/365

   
  • kamala chandramani 2:20 pm on August 9, 2013 Permalink | Reply

   வெற்றிலை பாக்கை தாம்பூலம் என்பர். தாம்பூலம் மாத்தாம கல்யாணமா? எல்லா பூஜைகளிலும் முதலிடம் அதற்குத்தானே?”கர்ப்பூரவீடிகாமோத -ஸமாகர்ஷி – திகந்தராயை” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். (ஏலம்,வவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேசரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த தாம்பூலம் கர்ப்பூர வீடிகா)
   ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை விசேஷம்! வாழ்க்கை பசுமையாக இருக்கவேண்டும் என்று வெற்றிலப் பழக்கம் ஏற்பட்டது போலும்! வெற்றிலை போடுவது ஒரு கலை! பிடித்தால் விடாது!

  • rajinirams 12:22 pm on August 14, 2013 Permalink | Reply

   சினிமா பாடல்களால் மட்டுமல்ல சீவக சீவகசிந்தாமணி பாடல்களை வைத்தும் வெத்தலை சீவல் பாக்கை வைத்து கலக்கியிருக்கிறீர்கள்-வழக்கம் போலவே.சூப்பர் பதிவு.

  • amas32 5:57 pm on August 14, 2013 Permalink | Reply

   எங்கள் வீட்டில் என் பாட்டியின் பாக்கு வெட்டி ஒன்று உண்டு. உங்கள் பதிவைப் படித்ததும் அதைத் தேடி கண்டுபிடிக்கும் ஆர்வம் வந்துள்ளது 🙂 திருமணம் ஆகாத இளைஞர்கள் வெற்றிலைப் பாக்குப் போடக் கூடாது என்று ஒரு ஐதீகம் உண்டு. திருமணத்தன்று தான் முதன் முதலில் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுப்பாள்!

   நல்ல விருந்துக்குப் பின் வெற்றிலைப் போட்டால் தான் நிறைந்த திருப்தி ஏற்படுவது என்னவோ உண்மை தான் 🙂

   amas32

 • G.Ra ஜிரா 11:07 am on May 29, 2013 Permalink | Reply
  Tags: , விவேக சிந்தாமணி   

  மஞ்சள் நிறத் தவளை 

  சிந்தனை எப்படித் தொடங்கி எந்தப் பக்கம் தவ்வும் என்று யாரால் சொல்ல முடியும்? அப்படி ஒரு சிந்தனை இந்தப் பாடலைக் கேட்ட போது தவ்வியது.

  தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
  ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு
  பாட்டு – வாலி
  பாடியவர் – மலேசியா வாசுதேவன்
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
  பாடலின் சுட்டி – http://youtu.be/h97Ox17gL4g

  தத்தித் தவ்விய சிந்தனை தவளையைப் பற்றியதுதான். தவளைக்கு ஏன் தவளை என்று பேர் வந்ததென்று ஒரு யோசனை.

  பழைய தமிழ்ப் பெயர்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது போல தவளையின் பெயருக்கும் பின்னால் ஏதேனும் இருக்குமோ என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். நல்லதொரு விடையும் கிடைத்தது.

  மக்கள் படுவதனால் அதற்கு பாடு என்று பெயர். அப்படியே மக்கள் கெடுவதனால் அதற்கு கேடு என்று பெயர். அதுபோல தவ்வுவது தவளை. தவ்விக் குதித்துச் செல்லும் உயிரிக்குத் தவளை என்று பெயர். “தத்து நீர்த் தவளை” என்று சீவகசிந்தாமணியும் கூறுகிறது.

  சிறுவர்கள் சிறிய தட்டையான கல்லை எடுத்து நீர்நிலையின் மேற்புறமாக எறிவார்கள். அது தவளையைப் போல் சிலமுறை தத்திச் செல்லும். அப்படி எறியப்படும் அந்தத் தட்டையான பொருளுக்கு தவளைக்காய் என்று பெயர். அது பின்னாளில் மருவி தவக்களை என்றாகி விட்டது.

  தவளை நீரில் பிறக்கும். நீரிலேயே வளரும். முழுதாய் வளர்ந்த பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும். அதனால்தான் “தவளைக்கும் பொம்பளைக்கு ரெண்டு எடந்தானே” என்று கத்தாழங்காட்டு வழி என்ற பாட்டில் எழுதினார் கவிஞர் வைரமுத்து.

  தவளையை அறிவுரை சொல்வதற்காகத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது பற்றி சிறிது பார்க்கலாம்.

  தவளைக்கு நுணல் என்றும் மற்றொரு பெயர் உண்டு. ”நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியும் பிரபலமானது. தவளை கத்துகின்ற ஒலியை வைத்தே பாம்பு கண்டுபிடித்துக் கவ்விவிடும். அதுபோல மடையர்கள் பேசத் தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டு விழிப்பார்கள்.

  மண்டூகம் என்ற பெயரும் பின்னாளில் தவளைக்கு வழங்கப்பட்டது. இது வடமொழியிலிருந்து வந்த பெயராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்” என்று விவேக சிந்தாமணி கூறுகிறது.

  அதாவது தாமரை குளத்தில் பிறக்கிறது. அதே குளத்தில்தால் தவளை முட்டைகளும் குஞ்சு பொரித்து தலைப்பிரட்டையாகின்றன. ஒரே இடத்தில் பிறந்ததால் தாமரையும் தவளையும் உடன் பிறந்தது என்கிறது விவேக சிந்தாமணி.

  ஆனாலும்… தவளைக்குத் தாமரையின் அருமையும் மென்மையும் புரிவதில்லை. அது போல நல்லவர்களுக்கு நடுவிலேயே இருந்தாலும் கெட்டவர்கள் நல்லவர்களைப் புரிந்து கொண்டு உறவாடுவதில்லை.

  ஆனால் எங்கிருந்தோ வந்த வண்டு தாமரையை உறவாடுவது போல அறிவுடையவர்களும் கற்றவர்களும் எங்கிருந்தோ வந்து கற்றவர்களோடு உறவாடுவார்களாம்.

  பெயர் தெரியாத புலவர் எழுதிய விவேக சிந்தாமணியின் பாட்டை முழுமையாகத் தருகிறேன். படித்து ரசியுங்கள்.

  தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
  வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
  பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
  கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே

  குளிர்ந்த தாமரை பிறந்த அதே குளத்தில் பிறந்த தவளை தாமரையை மதிப்பதில்லை
  வண்டோ காட்டின் இடையிலிருந்து வந்து தாமரையின் இனிய தேனை உண்ணும் (அதுபோல)
  முன்பே பழகியிருந்தாலும் புல்லர்கள் நல்லவர்களை அறிந்து கொள்ள மாட்டார்கள்
  ஆனால் கற்றவர்கள் எங்கிருந்தோ வந்து கண்டு களித்து நல்லவர்களோடு உறவாடிக் கலப்பர்

  வெறும் தவளை என்று எடுத்துக் கொண்டு இறங்கினால் கூட சிந்தனை இத்தனை தகவல்களோடு தவளையைப் போலவே தத்தித் தாவுகின்றதே. இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!

  அன்புடன்,
  ஜிரா

  179/365

   
  • rajinirams 4:53 pm on May 29, 2013 Permalink | Reply

   பிரமாதம்.”தவளை” குறித்து பல தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.முன்பெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை காட்டி ஆல் இந்தியா ரேடியோவில் சில பாடல்களை தடை செய்வார்கள்.அதில் இந்த பாடலும் ஒன்று,சிலோனில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். சூப்பர் ஹிட் பாடல்.

  • Saba-Thambi 7:35 pm on May 29, 2013 Permalink | Reply

   Title நல்ல சிலேடை

   “தவளைப்பாய்த்து” என்று ஓர் இலக்கணம் இருப்பதாக கேள்வி. யாராவது விளக்கினால் உதவியாக இருக்கும்

  • amas32 9:52 pm on May 30, 2013 Permalink | Reply

   /தண்ணி கருத்திருச்சு கண்ணு தவளச் சத்தம் கேட்டுருச்சு
   ஊரும் ஒறங்கிருச்சு நம்ம ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு/

   இந்த மாதிரி பாடல் வரிகளில் ஆரம்பித்து விவேக சிந்தாமணியில் உள்ள ஒரு பாடலுக்கு எங்களை அழைத்துச் செல்ல உங்களால் தன முடியும் ஜிரா, அருமை 🙂

   /தண் தாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
   வண்டோ கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்
   பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரை
   கண்டே களித்து இங்கு உறவாடி தம்மில் கலப்பார் கற்றோரே/

   மிகவும் நல்ல கருத்தைச் சொல்லும் அழகிய பாடல்!

   / இப்படியே இன்னும் சிந்தித்தால் இன்னும் எத்தனையெத்தனை கருத்துகள் தத்திக் குதிக்குமோ!/
   தத்தித் தாவுது மனமே என்று மின்சாரக்கனவு படத்தில் அரவிந்த் சாமி பாடிய பாடலுக்குத் தான் மனம் செல்லும் 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel