Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 9:17 am on May 23, 2013 Permalink | Reply  

  காலையும் மாலையும் 

  • படம்: சித்திரையில் நிலாச்சோறு
  • பாடல்: காலையிலே மாலை வந்தது
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: சப்தபர்ணா சக்ரபர்த்தி

  காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!

  இனி காலமெல்லாம், உன்னைத் தொடர்ந்துவர,

  உன் காலடிதான் இனி சரணமென,

  இந்த வானமும் பூமியும் வாழ்த்துச் சொல்ல!

  சென்ற நூற்றாண்டில் சிலேடை என்றால், கிவாஜ. அவர் எழுதிய, பேசிய, அல்லது பேசியதாகச் சொல்லப்பட்ட ஏராளமான சிலேடைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன. அந்தப் புத்தகமும் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது.

  அது சரி, நாலு வரி நோட்டுக்கும் கிவாஜவுக்கும் என்ன சம்பந்தம்?

  கிவாஜா சினிமாப் பாட்டு ஒன்று எழுதியிருக்கிறார். ஆனால் இங்கே நாம் பார்க்கவிருப்பது, அவருடைய புகழ் பெற்ற சிலேடை ஒன்று.

  வெளியூரில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்காக ரயிலேறிச் சென்றார் கிவாஜ. அதிகாலையில் ரயிலிலிருந்து இறங்கியதும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரை வரவேற்று, ஒரு பூமாலையை அணிவித்தார்கள்.

  கிவாஜ மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தார். பின்னர், ‘என்ன இது அதிசயம்! காலையிலேயே மாலை வந்துவிட்டதே!’ என்றார் சிலேடையாக.

  இந்த வார்த்தை விளையாட்டைப் பழநிபாரதி ஒரு திரைப்பாடலில் பயன்படுத்தினார், ‘சேது’ படத்தில் வரும் ‘சிக்காத சிட்டொண்ணு’ என்ற பாடலில், ‘காலையிலே மாலை வர ஏங்குதடி’ என்று எழுத, அதை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

  பல வருடங்கள் கழித்து, இப்போது ‘சித்திரையில் நிலாச்சோறு’ படத்தில் புலமைப்பித்தனும் அதே கற்பனையைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘காலையிலே மாலை வந்தது’ என்று தொடங்கி, ‘நான் காத்திருந்த வேளை வந்தது’ என்று அழகாகத் தொடர்கிறார்.

  ‘காத்திருந்த வேளை வந்தது’ என்பதில் உள்ள ‘வந்தது’ என்ற வார்த்தையை, வேளையோடு சேர்த்து வாசித்தால் ‘the day I was waiting for… இதோ வந்துவிட்டது’ என்ற பொருள் வரும். அப்படியில்லாமல், முதல் வரியோடு சேர்த்து, ‘நான் மாலைக்காகக் காத்திருந்தவேளையில், மாலை வந்து சேர்ந்தது’ என்றும் வாசிக்கலாம். அதுவும் அழகிய சிலேடைதான்!

  அதன்பிறகும் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு உண்டு, ‘உன் காலடிதான் இனி சரணமென’ என்று பாடுகிறாள் அந்தக் கதாநாயகி… உண்மையில், ‘சரண்’ என்ற வார்த்தைக்குப் பொருளே ‘காலடி’தான் 🙂 ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்றால், உன் காலடியில் பணிந்தேன் என்று பொருள்!

  ***

  என். சொக்கன் …

  23 05 2013

  173/365

   
  • amas32 9:38 am on May 23, 2013 Permalink | Reply

   “காலையிலே மாலை வர ஏங்குதடி” நீங்கள் குறிப்பிடும் வரை நான் பொருளைக் கூர்ந்து கவனித்ததில்லை. ராகத்தில் மயங்கியிருந்தேன். இப்பொழுதுப் புரிந்து ரசிப்பேன் 🙂

   “காலையிலே மாலை வந்தது, நான் காத்திருந்த வேளை வந்தது!” ரொம்ப அழகான வரி! நீங்கள் சொல்லியிருப்பதுப் போல இரண்டு பொருள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் மொத்தத்தில் காதலனின் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் சூப்பர் வரி 🙂

   சுடச் சுட போண்டா 🙂 பாடல் வந்தவுடன் நாலு வரி நோட்டு!

   amas32

  • GiRa ஜிரா 11:08 pm on May 23, 2013 Permalink | Reply

   அழகான பாடல் நாகா. இது டிபிகல் எஸ்.ஜானகி பாட்டு. 80களின் எஸ்.ஜானகி பாடியிருந்தா மாஸ்டர் பீசாகியிருக்கும் இந்தப் பாட்டு.

   சிலேடை மிக அழகு. காலையிலேயே மாலை வந்தது. ரெண்டு பொருளும் பொருத்தமாதான் இருக்கு.

  • rajinirams 1:25 am on May 25, 2013 Permalink | Reply

   காலையிலே மாலை வந்தது-புலமைப்பித்தனின் அருமையான வரிகள்.இதே போன்ற வாலியின் சிலேடை- தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை.இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை. நன்றி.

 • G.Ra ஜிரா 9:55 am on May 22, 2013 Permalink | Reply  

  தையல் 

  அக்கடான்னு நாங்க உடை போட்டா
  துக்கடான்னு நீங்க எடை போட்டா
  தடா… உமக்குத் தடா…
  பாடலின் சுட்டி – http://youtu.be/u6zywS5ptm4

  இந்தியன் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலி எழுதிய பாடல் இது. பாடல் முழுக்கவே பெண் விடுதலை வரிகளாக வரும். சுவர்ணலதாவின் குரலில் கேட்க அட்டகாசமான கைமுறுக்குப் பாடல்.

  மேடை ஏறிடும் பெண் தானே.. நாட்டின் சென்சேஷன்
  ஜாடை பேசிடும் கண் தானே… யார்க்கும் டெம்ப்ட்டேஷன்
  ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்… ஹோய் ஹோய் ஓல்டையெல்லாம் ஓரங்கட்டும்
  தய்யதக்க தய்யதக்க தோம்… ஹோய் ஹோய் தையலுக்கு கையத்தட்டுவோம்

  ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாடலில் “தையலுக்கு கையத் தட்டுவோம்” என்றும் ஒரு வரி எழுதியிருக்கிறார் வாலி.

  தையல் என்ற சொல் பெண்ணையும் குறிக்கும் என்று நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

  தையல் தளிர்க்கரங்கள்” என்று தமயந்தியின் கைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே புகழேந்திப் புலவர்.

  தையலைப் பற்றி தையல் ஒருத்தி சொன்ன கருத்து இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மையல் கொண்ட பையல் எவனாயினும் இப்படிச் சொல்லியிருந்தால் அவனைப் பிய்த்து எடுத்திருப்பார்கள். அப்படிப் பட்ட ஒரு கருத்தைச் சொன்னார் ஔவையார்.

  தையல் சொல் கேளேல்
  நூல் – ஆத்திச்சூடி
  எழுதியவர் – ஔவையார்

  இப்படி ஔவை சொன்னதை ஆண் கவி ஒருவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சற்றுப் பின்னால் வந்த கவியானாலும் தவறு என்று தனக்குப் பட்டதைத் தவறு என்றே சொன்னவர். பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் என்று நம்பியவர். அதனால் அவர் ”தையல் சொல் கேளேல்” என்பதை ஏற்காமல் மாற்றிச் சொல்கிறார்.

  தையலை உயர்வு செய்
  நூல் – புதிய ஆத்திச்சூடி
  எழுதியவர் – பாரதியார்

  பெண்களைப் பற்றிய கருத்து மாறிக் கொண்டே வருவதை இது போன்ற பலதரப்பட்ட காலகட்டங்களில் வந்த நூல்களிலிருந்து நாம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

  ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு பிரச்சனை வந்து அதற்கு தீர்வே புரியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குடும்பத்திலேயே மிகமிக மூத்த பெண்ணாகப் பார்த்து வழி கேட்க வேண்டும். அந்தப் பெண் அனுபவத்தில் சொல்லும் வழி சரியாகவே இருக்கும் என்பதும் ஒரு கருத்து.

  அந்தக் காலத்தில் போர்களின் காரணமாக ஆண்களை விட பெண்களின் வாழ்நாள் நீடித்திருந்ததால் பெண்கள் உலக நடப்புகளை அதிகமாக புரிந்து வைத்திருந்தார்கள். தெரிந்து வைத்திருந்தார்கள். நல்லதையும் கெட்டதையும் அனுபவித்துப் பக்குவமாகியிருந்தார்கள். ஆகையால் அவர்கள் சொல்லும் வழி சரியாகவே இருந்திருக்கும்.

  ஆனால் இன்று தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் கருத்து கேட்டால் என்னாகுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பெண்ணாகிய ஔவையாருக்கே பயம் வரும் அளவுக்கு அந்தக் காலத்துப் பெண்கள் என்ன பார்த்திருப்பார்கள்?!

  சரி. முடிப்பதற்கு முன் ஒரு சிறிய நகைச்சுவைத் துணுக்கு.

  ஒரு புலவருக்கு ஒருவர் வேட்டி தானம் கொடுத்தாராம். அந்த வேட்டியை வாங்கிப் பார்த்திருக்கிறார் புலவர்.

  தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் அது கிழிந்த வேட்டி. எக்கச்சக்கமாக தையல்கள் வேறு. அதைப் பார்த்ததும் அந்தப் புலவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு சிலேடையாக ஒரு வரி சொன்னாராம்.

  சோமனுக்கு இருபத்தேழு தையல்

  வேட்டிக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் வேட்டியில் அத்தனை தையல்கள் இருக்கின்றன என்று பொருள்.

  சந்திரனுக்கும் சோமன் என்றொரு பெயர் உண்டு. சோமனுக்கு இருபத்தேழு தையல் என்றால் சந்திரனுக்கு இருபத்தேழு மனைவிகள் என்று பொருள். அதுவும் புராணப்படி உண்மைதான்.

  ரோகிணி முதலான இருபத்தேழு நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டான். ஆகையால் சோமனுக்கு இருபத்தேழு தையல்.

  இப்போது புரிந்திருக்குமே புலவரின் சிலேடை.

  அன்புடன்,
  ஜிரா

  172/365

   
  • Saba 11:23 am on May 22, 2013 Permalink | Reply

   பெண்களின் உயர்வுதான் உண்மையிலேயே நாட்டை உயர்த்தும் -இதே தத்துவத்தை இந்திரா காந்தியும் பல கிராம விஜயங்களில் பாவித்துள்ளார்.

   ஆமா உண்டி சுருங்குதல் தையலுக்கு அழகு என்று சொன்னதும் அதே தையல் தானே 🙂

   எல்லாம் moderate ஆக இருந்தால் எல்லோர்க்கும் நலம்.

  • Arun Rajendran 1:00 pm on May 22, 2013 Permalink | Reply

   தமிழ் “கலாச்சாரம்”-னு என்னென்னவோ சொல்றாங்க..ஆனா தமிழ்நாட்டுல தான் தமிழன் பண்பாட தேடி கண்டுபிடிக்க வேண்டி இருக்கு…முந்நாள் தமிழ் இந்நாள் கேரள நாட்டில் கூட இன்னும் நம் பண்பாடு போற்றிப் பாதுகாக்கப்படுது…அதுல மிகவும் போற்றுதற்குரியது பெண்வழிச் சமுகம்…பெண் தான் குடும்பத்தலைவியாக இருப்பார்..சொத்தில் பங்கும் பெண்களுக்குத்தான்..வயதான மூதாட்டி தான் குடும்ப முடிவுகளை எடுப்பார்..இத்தகைய கட்டமைப்பில் மிகவும் இனறியமையாததும் சிறப்பானதும் கூட்டுக்குடும்ப முறை…ஆண் வழிச்சமுகம் விரவி இருந்த காலத்திலும் இத்தகைய பெண்வழிச்சமுகங்களும் தழைத்திருந்தன..எவ்வளவு தான் இழந்துட்டோம்..:-(

  • amas32 10:46 pm on May 22, 2013 Permalink | Reply

   புலவர்களுக்குத் தான் எவ்வளவு சாதுர்யம் வேண்டியிருக்கிறது, தங்கள் இன்னல்களை மறைக்க!
   ஒரு புலவர் அரசினடம் தங்கத் தட்டு எனக்கா உங்களுக்கா என்று தனக்குப் பரிசுக் கொடுத்தத் தட்டும் தனக்கா அல்லது தங்கத்தட்டுப்பாடு அரசனுக்கா என்ற பொருளில் கேட்டதாகவும் படித்திருக்கிறேன். அரசன் என்ன செய்வான், தங்கத் தட்டு உமக்கே என்று சொல்லிவிட்டான் :-))

   பெண்களுக்குப் பொதுவில் எதிர்கால விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் திறன் அதிகம்.

   Nice post Gira 🙂

   amas32

  • Sudhakar 12:43 pm on May 24, 2013 Permalink | Reply

   Ki-Va-Ja type “siladai”

 • என். சொக்கன் 8:32 am on December 6, 2012 Permalink | Reply  

  வட்டிச் சோறு 

  • படம்: கிழக்குச் சீமையிலே
  • பாடல்: ஆத்தங்கர மரமே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: மனோ, சுஜாதா
  • Link: http://www.youtube.com/watch?v=NdXPojNF9JM

  மாமனே, ஒன்னக் காங்காம, வட்டியில் சோறும் உங்காம

  பாவி நான் பருத்தி நாராப் போனேனே!

  காகம்தான் கத்திப் போனாலும், கதவுதான் சத்தம் போட்டாலும்

  உன் முகம் பா(ர்)க்க ஓடி வந்தேனே!

  கிராமிய மொழியில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் வரும் ‘காங்காம’, ‘உங்காம’ என்கிற வார்த்தைகளைக் ‘காணாமல்’, ‘உண்ணாமல்’ என்று வாசிக்கவேண்டும், அது எல்லாருக்கும் தெரியும்.

  ஆனால், அதென்ன ‘வட்டியில் சோறும் உங்காம’?

  ‘வட்டி’ அல்லது ‘வட்டில்’ என்பது தட்டையான வட்ட வடிவப் பாத்திரம். அதில் சோறு உண்பதைதான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.

  செட்டிநாடு பகுதியில் இதை வைத்து ஒரு வேடிக்கையான வாசகமும் உண்டு. ‘அவன் வட்டியில் சாப்பிடுகிறான்’ என்றால், வட்ட வடிவப் பாத்திரத்தில் சாப்பிடுகிறான் என்று ஓர் அர்த்தம், பணத்தை மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து, அதில் வரும் வட்டித் தொகையை வைத்துச் சாப்பிடுகிறான் என்று இன்னோர் அர்த்தம்.

  யார் கண்டது? இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ!

  ***

  என். சொக்கன் …

  06 12 2012

  005/365

   
  • GiRa ஜிரா 11:10 am on December 6, 2012 Permalink | Reply

   எதிர்பாராமல் நடந்ததடி என்று என்னைப் பாட வைத்து விட்டீர்கள்.

   வட்டியில் சோறும் உங்காம என்று நீங்க தொடங்கும் போது. இலக்கிய வட்டில்களைப் பத்திச் சொல்லப் போறீங்க… அதிலும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய என்ற பாட்டைச் சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன்.

   ஆனால் ”வட்டி”யைச் சொல்லி வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி விட்டீர்கள். அட்டகாசம். அட்டகாசம்.

  • Kannabiran Ravi Shankar (KRS) 4:46 pm on December 6, 2012 Permalink | Reply

   //யார் கண்டது? இந்தக் கதாநாயகி கிராமத்தில் வட்டிக்கடை வைத்திருந்தாளோ என்னவோ!//

   :))))
   சேச்சே; பாவம், நல்லப் பொண்ணு;
   அதான் “வட்டியில்” சோறு உண்ணாம -ன்னு சொல்லுறாளே; அப்படீன்னா “வட்டி” வாங்கலை -ன்னு தானே அர்த்தம்?:)

   Jokes apart…
   வட்டிலில் சோறு திங்கும் சுகமே சுகம்;
   எத்தனை பேரு வீட்டில் இன்னிக்கி வட்டில் இருக்கோ தெரியாது; ஆனா கிராமத்தில் வட்டில் சோறு இன்பமோ இன்பம்!

   • தட்டு = தட்டையா இருக்கும்; தேய்ச்சித் தேய்ச்சித் தான் திங்கணும்:))
   • வட்டில் = குழிவா இருப்பதால்… அள்ளலாம்! அள்ளி அள்ளித் திங்கலாம்

   அதுவும் ஆப்பம் தின்ன ரொம்ப வசதியானது = வட்டிலே!
   வட்டிலுக்குள் கை உள்ளே போகும்; தட்டு போல தடவ வேணாம்;
   பால் ஊறி இருக்கும் அப்பத்தை, குழிவான வட்டிலில் கை விட்டு எடுக்கும் சுகம்!

   அட, இறைவனே வட்டிலில் தாங்க சாப்புடறான்:)
   பொன் “வட்டில்” பிடித்து உள்ளே புகப் பெறுவேன் ஆவேனே -ன்னு ஆழ்வார் பாசுரம்!
   செந்தூர் முருகனுக்கு, புட்டமுது, வட்டிலில் போட்டுத் தான் காட்டுறாங்க! ஒரு வாரத்துக்கு முன்னாடித் தான் பார்த்தேன்;

   தட்டு = decent guys
   வட்டில் = முருகன், என்னைய போன்ற indecent ஆட்களுக்கு:))

   • Kannabiran Ravi Shankar (KRS) 5:20 pm on December 6, 2012 Permalink | Reply

    வட்டி = Interest க்கு வருவோம்!

    வட்டி (vaddi) பிறமொழிச் சொல்; தமிழில் புழங்கிடும் திசைச்சொல் -ன்னு ஒரு கருத்து நிலவுகிறது;
    தெலுங்குல யும் Vaddi தான்; வட்டிக் காசுல வாடா -ன்னு கோ’ஷ’ம் போடுவாங்க திருப்பதியில்:)

    ஆனா, சங்கத் தமிழில், இந்த வட்டிக்கு உள்ள சொல் = “கந்து”!

    (கந்து வட்டி ஞாபகம் வருதா?
    நடு சென்ட்டர் போல ரெண்டு சொல்லும் ஒன்னாக் கலந்து, கந்து வட்டி -ன்னு ஆயிருச்சி:)

    கந்து = பிடிமானம்
    யானையைக் கட்டும் பிடிமானம்; சின்ன ஆனா உறுதியான கல்தூண் போல-ன்னு வச்சிக்குங்களேன்;
    யானை, ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்குப் போகும் போதெல்லாம், இந்தக் கந்தையும், அதையே சுமக்க வைப்பாங்க!

    அதையே சுமக்க வச்சி, பின்பு அதிலேயே கட்டியும் விடுவாங்க!
    அதே போல் நம்மையே சுமக்க வச்சி, நாமே கட்டும் தொகை = கந்து / வட்டி :))
    ————–

    சங்கத் தமிழில், “கந்து” என்பதே = Interest/ பிடிமானம்
    “வட்டி”க்கு வேற பொருள் = உழவர்கள் கொண்டு செல்லும் விதைப் பெட்டி;

    வித்தொடு சென்ற “வட்டி” பற்பல.
    மீனொடு பெயரும் யாணர் ஊர

    உழவர்கள், விதைக்குற பெட்டியில் (வட்டியில்), விதைகளை எடுத்துச் சென்று விதைச்சிட்டு…
    திரும்பி வரும் போது, வயலில் உள்ள மீன்களை, அதில் அள்ளிப் போட்டுக்கிட்டு வராங்களாம்! அந்தப் பெட்டி தான் வட்டி:) இன்னிக்கு இருக்குற மீட்டர் வட்டி அல்ல!:)

    • @rmdeva 5:17 pm on December 7, 2012 Permalink

     நன்றிகள் பல உங்களுக்கு. பல அறிய தகவல்கள், கந்தனுக்கும் வட்டிக்கும் உள்ள தொடர்பு இப்பொழுதுதான் அறிகிறேன்.

  • Kannabiran Ravi Shankar (KRS) 5:31 pm on December 6, 2012 Permalink | Reply

   அட, முக்கியமானத சொல்ல மறந்துட்டேனே…

   முருகனுக்கு = “கந்தன்” என்ற பேரு வந்ததும் அதனால் தான்!
   கந்து->கந்தன்
   ஒடனே அவனை வட்டிக்காரன் -ன்னு நினைச்சிறாதீக:)) பாவம், என் செல்லம்:)

   யானையைப் போல, நமக்கு எல்லாப் பணியும் செய்யுறான்;
   அதே சமயம், நம் சுமையும், அவனே சுமக்குறான்,
   இப்படிச் சுமக்கணும் -ன்னு அவனுக்குத் தலையெழுத்து இல்ல;
   ஆனாலும்… அன்பால் சுமக்குறான் = நம்மையும், நம் ஆசைகளையும்

   • யானை, தன்னைக் கட்டிப் போடும், “கந்து” (எ) நடுகல்லையும் தானே சுமப்பது போல்…
   • முருகன், நம் ஆசைகளையும், அவனே சுமப்பதால்…

   அவன் => கந்து + அன் = கந்தன்!

   கந்து = பிடிமானம்
   கந்தன் = பிடிமானம்

   நீதி தழைக்கின்ற தனிமுதலே – கந்தா
   நாயேன் பிழைக்கின்றவாறு நீ பேசு!

   • Muthu Ganesh 2:29 pm on December 7, 2012 Permalink | Reply

    KRS,
    கலக்குங்க KRS !! Bonus post for us !
    தாங்கள் தொண்டு தொடர வேண்டும். “கந்து” விளக்கம் அருமை !!

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel