Updates from May, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • G.Ra ஜிரா 10:52 am on May 7, 2013 Permalink | Reply
  Tags: கலைமகள்   

  காளமேகமும் காளிதாசனும் கண்ணதாசனும் 

  ஒரு கதை சொல்லப் போகிறேன். நடந்த கதையோ. கற்பனைக் கதையோ. ஆனால் கருத்துள்ள கதை.

  புலவர்களைப் போற்றும் புரவலர்களும் இருந்த காலம் உண்டு. திருமலைராயன் அவையிலும் அறுபத்துநான்கு புலவர்கள் இருந்தனர். தண்டிகைப் புலவர்கள் என்று அவர்களுக்குப் பெயர். அவர்களின் புலமைக் கிணற்றில்தான் திருமலைராயன் தமிழ்த் தாகத்தை தீர்த்துக் கொண்டிருந்தான்.

  அந்தக் கிணறுகளுக்கும் ஆணவம் வந்துவிட்டது. சுற்றிலும் தாளமேள ஆட்கள். பல்லக்குத் தூக்கிகள். கட்டியக்காரர்கள். போகையிலும் வருகையிலும் வாழ்த்தொலிகள்.

  அந்த நிலையில் அந்த ஊருக்கு வந்தார் காளமேகப்புலவர். தண்டிகைப் புலவர்கள் நகர்வலம் வந்த வேளை அது. அவர்களைப் புகழ்ந்து காளமேகத்தையும் கூவச் சொன்னார்கள். “வருங்கால ஜனாதிபதி அதிமதுரக்கவிராயர் வாழ்க” என்று கூவியிருக்கலாம் காளமேகம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அவர்களின் செய்கை தவறு என்று பாடினார்.

  அந்தச் செய்தி அரசனுக்கு வேறுவிதமாகப் போனது. காளமேகப்புலவரின் மேல் ஒரு வெறுப்பு உண்டானது. அதனால் அரசவைக்கு வந்த காளமேகத்தை ஒழுங்காக வரவேற்கவில்லை. இருக்கை கொடுக்கவில்லை.

  அப்போது காளமேகம் கலைமகளை மனதில் நினைத்து வணங்கினார். திருமலைராயனின் இருக்கை வளர்ந்து காளமேகத்துக்கும் இடம் கொடுத்தது.

  வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
  வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
  அரியாசனத்தில் அரசரோடென்னைச்
  சரியாசனம் வைத்த தாய்

  கலைமகளின் அருளால் அரியாசனத்தில் அரசரோடு அரசனாகச் சரியாசனம் பெற்றார் காளமேகம்.. அது அவருடைய பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னது.

  இந்தப் பாடலைக் கவியரசர் கண்ணதாசன் ரசித்துப் படித்திருக்க வேண்டும். அதனால்தான் அதைச் சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

  மகாகவி காளிதாஸ் என்றொரு படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காளிதாசராக நடித்து வெளிவந்த படம். அந்தப் படத்தில் ஒரு காட்சி. மடையனாக இருந்த இடையன் ஒருவனுக்குக் காளியின் அருளால் கல்லாத கல்வியும் சித்திக்கிறது.

  ஞானம் சித்தித்த காளிதாசனின் எண்ணத்தில் பெருமை உண்டாகிறது. அது காளியின் அருளின் அருமை என்று உணர்கிறார். அந்த அருளினால்தான் புவியரசருக்குச் சமமாகக் கவியரசராய் ஆக முடிந்தது என்று புரிந்து கொள்கிறார். உடனே பாடல் வருகிறது.

  யார் தருவார் இந்த அரியாசனம்
  புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
  அம்மா.. யார் தருவார் இந்த அரியாசனம்

  புவியரசருக்கு இணை கற்றறிந்த கவியரசர் என்று கண்ணதாசன் சொல்வது மிகப் பொருத்தம்.

  பாடல் – யார் தருவார் இந்த அரியாசனம்
  பாடியவர் – டி.எம்.சௌந்தரராஜன்
  வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்
  படம் – மகாகவி காளிதாஸ்
  பாடலின் சுட்டி – http://youtu.be/Hoi4gwSbFas

  அன்புடன்,
  ஜிரா

  157/365

   
  • rajinirams 12:47 pm on May 7, 2013 Permalink | Reply

   பாடலும் விளக்கமும் அருமை. சிவாஜிக்கு இந்திராகாந்தி எம்பி பதவி கொடுத்த அன்று மாலை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் முதல் பாடல் இதுதான்:-))

   • anonymous 7:52 am on May 8, 2013 Permalink | Reply

    இந்திரா காந்தி வாழ்க:)
    மாமேதை சிவாஜியை மதிச்சி, இந்த ஒன்னே ஒன்னாச்சும் செஞ்சாங்களே!
    —–

    சொல்லப் போனா, இதைக் கண்ணதாசன் எழுதுனதே, எம்.ஜி.ஆரை மனசில் வச்சித் தான்;
    அவரே பழைய விகடன் பேட்டிகளில் சொல்லியும் இருக்காரு; (ஆ.வி பொக்கிஷம் – விகடன் பிரசுரம்)

    1960 -இல் திமுக-வில் இருந்து கவிஞர் விலகிட்டாரு; ஈ.வெ.கி சம்பத் அவர்களுடன்

    ஆனா, சில மாதங்கள்/ஆண்டுகளில், சம்பத், தன்னோட கட்சியைக் கலைச்சிட்டு, காங்கிரசில் ஐக்கியம் ஆகி விடவே…
    கண்ணதாசன் “தனி மரமா” நின்னாரு;

    அப்போ வந்தது தான், “அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேர்க்கும் நாள் பார்க்கச் சொல்லடி”
    = “சிவகாமி மகனான காமராசரை” உள்ளுறையா வச்சி:))
    —–

    1963 -இல் காங்கிரசில் சேர்ந்தாரு கவிஞர்;
    ஆனா அவர் “Open” குணத்துக்கு, அதெல்லாம் சரிப்பட்டு வரலை;

    பேர் வாங்கணும்/ சான்ஸ் கிடைக்கணும் -ன்னு தமிழ்க் கொள்கையை மாத்திப் பேசுதல்/ நயந்து போதல்
    = இதெல்லாம் கண்ணதாசனால் பண்ண முடியுமா????:)))

   • anonymous 7:58 am on May 8, 2013 Permalink | Reply

    அப்போ எம்.ஜி.ஆர், காங்கிரசுக்கு மாற்றுக் கட்சியில் இருந்தாலும்…

    தொடர்ந்து, கண்ணதாசன் தான், தன் படங்களில், எழுத வேணும் -ன்னு கேட்டுக்கிட்டாராம்;
    Super Hit – “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும், வாய்ப்பு கவிஞருக்கு!

    அதுக்கு அப்பறம் வந்த படம் – மகாகவி காளிதாஸ்;
    கட்சி பேதம் பார்க்காமல் செய்த நன்றிக்கு – “யார் தருவார் இந்த அரியாசனம்” -ன்னு பாட்டு எழுதி, மனசில் உள்ளதைக் கொட்டிய கவிஞர்:)

    (குறிப்பு:
    ஆனா, அதுக்காக, மறுபடியும் அங்கேயே போய் கட்சி மாறிடலை நம்ம கவிஞர்;
    கொள்கை உறுதி;
    ஆனா, கருத்து வேறு, மனிதம் வேறு)

   • GiRa ஜிரா 8:11 am on May 9, 2013 Permalink | Reply

    அருமையான தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🙂

  • kamala chandramani 1:45 pm on May 7, 2013 Permalink | Reply

   அற்புதமான பாடல்! கவிஞர் கலைமகள் அருள் பெற்றவர் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

   • GiRa ஜிரா 8:11 am on May 9, 2013 Permalink | Reply

    உண்மைதான். அவருடைய கவிதைகளைக் கேட்டவருக்கும் படித்தவருக்கும் அந்தச் சந்தேகம் சிறிதும் இருக்காது என்பதே உண்மை.

  • amas32 9:01 pm on May 7, 2013 Permalink | Reply

   சுவாரசியமாக ஒரு கட்டுரையை எழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமே போட்டுவிடலாம் நீங்க! கதையைச் சொல்லி அதனை பாட்டோடு இணைக்கும் லாவகம் அருமை.

   இந்த மாதிரி பாடல்கள் நம் மனத்தில் நிற்பதற்கு முக்கிய காரணம் இசை/குரல்.
   யார் தருவார் இந்த அரியாசனம் என்ற முதல் வரியைப் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே காதில் பாடல் ஒழிக்க ஆரம்பித்து விடுகிறது. இப்பொழுது வரும் பாடல்ல்களில் நல்ல கருத்துள்ள வரிகள் இருப்பினும் இசையால் மூழ்கடிக்கப் படுவது சோகமே.

   அகந்தை கூடாது. எதையும் இறைவன் பரிசாக எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

   amas32

   • GiRa ஜிரா 8:14 am on May 9, 2013 Permalink | Reply

    வரிகளுக்குத் தோதான இசை என்பதெல்லாம் இப்பல்லாம் கனவுதான்.

    எப்பவும் அகந்தை கூடாது. இந்தக் கதையிலே கூட திருமலைராயன் அதற்குப் பிறகும் திருந்தவேயில்லை. கடும் போட்டியெல்லாம் வைக்கிறார். காளமேகம் வெற்றியும் பெறுகிறார். முத்து மூட்டை ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறான். வாங்கி வரும் வழியில் திறந்து பார்த்தால் அத்தனையும் ஆமணக்கு முத்துகள். ஆத்திரத்தில் சபித்து விடுகிறார் காளமேகம். மண் மாரி பொழிந்து ஊர் இன்றும் மணல் மேடாகக் கிடக்கிறது

  • anonymous 8:06 am on May 8, 2013 Permalink | Reply

   “யார் தருவார் இந்த அரியாசனம்?”

   அரி ஆசனத்துக்காக, தமிழ் ஆசனத்தைத் துறக்காத “வீறு” உள்ளம் = 1) கம்பன் 2) கண்ணதாசன்;

   உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? -ன்னு, மன்னனையே கேட்டவன் கம்பன்!
   அகந்தையால் அல்ல! ஆராத தமிழ் உணர்வால்!

   (ஆனா, பாவம், அரசியல் காரணங்களுக்காக, “ஆரிய அடிவருடி” -ன்னு கம்பனைத் தவறாகப் பார்த்து விட்டனர் சில தலைவர்கள்;
   கம்பனை “உண்மையா”ப் படிச்சாத் தெரியும் – தேவனோ/ அசுரனோ – அவன் எதையும் ஒளிக்காது/ மறைக்காது சொல்வதை)
   —-

   அதே போல் தான் கண்ணதாசனும்;
   இல்லீன்னா, திருமுருக. வாரியார் கூடவே, துணிஞ்சி சண்டை போடுவாரா நம்ம கவிஞரு?:))

   = “யார் தருவார் இந்த அரியாசனம்?”

   • anonymous 8:31 am on May 8, 2013 Permalink | Reply

    திருப்பரங் குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா
    திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

    =கந்தன் கருணை படத்துக்கு, பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகள்!
    =ஆனா, வாரியாருக்கு, ஏனோ இதில் ஒப்புதல் இல்லை!:)
    —–

    எங்கோ ஒரு மலையில் சிரிச்சி,
    அது இன்னொரு மலையில், ஹா ஹா ஹா -ன்னு எதிரொலிக்கும் -ன்னா…

    அந்தச் சிரிப்பு = பேய்ச் சிரிப்பு / அசுரச் சிரிப்பு
    அது முருகன் சிரிப்பு இல்லை -ன்னு வாரியார் சொல்லீற,
    பாவம்…. இளங் கவிஞர். பூவை செங்குட்டுவன்;
    —–

    அதே படத்தில், Experienced கவிஞரான, கண்ணதாசனும் உண்டு;

    “மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு” -ன்னு முருகன் முதலிரவுக்குப் பாட்டு எழுதினாரு நம்ம கண்ணதாசன்:) Happy 1st Night da Muruga:))

    நேரா, வாரியார் கிட்ட சண்டைக்கே போயிட்டாராம் கண்ணதாசன்;

    “ஒரு வளரும் கவிஞரை, நீங்களே இப்படிப் பண்ணலாமா?
    அசுரன் சிரிப்புக்கே அம்புட்டுச் சக்தி-ன்னா….
    ஒரு அழகிய தெய்வத்தின் சிரிப்பு, அதை விட அதிகமா/ அதே சமயம் அழகாவும் எதிரொலிக்காதா?” -ன்னு பிலுபிலு-ன்னு பிடிச்சிக்கிட்டாரு;

    வாரியார் was stunned; didnt know what to tell:)
    அவரை, மடேர்-ன்னு, பொதுவில் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க அல்லவா?
    —–

    வாரியாரின் முகத்தைக் கண்ட கண்ணதாசனுக்கே என்னமோ போல ஆயீருச்சி;
    தன் “துணிவை”ச் சற்றே குறைத்துக் கொண்டு…

    “சுவாமிகளே, நாங்க Music Director கே.வி. மகாதேவன் கிட்ட குடுக்குற பாட்டு, உம்ம வரைக்கும் எதிரொலிக்குதே…
    கே.வி. எம் = தென் மாவட்டம் (கன்னியாகுமரி);
    நீங்களோ = வட மாவட்டம் (வேலூர்)
    அதே போலத் தான், தெக்கத்தி திருப்பரங் குன்றத்தில் சிரிச்சா = வடக்கத்தி திருத்தணியிலும் எதிரொலிக்கும்”

    -ன்னு கலாய்க்க, வாரியாரே ஹா ஹா ஹா-ன்னு சிரிச்சிட்டு, பாட்டுக்கு Okay சொல்லீட்டாராம்:)
    —–

    இதான் கண்ணதாசன்!
    “ஆணவம்” அல்ல! அத்தனை தமிழ் வீறு!

    யார் “பெறுவார்” இந்த அரியாசனம்? = கண்ணதாசனின் எழுத்து நேர்மை! வாழி!

   • anonymous 9:00 am on May 8, 2013 Permalink | Reply

    Vaariyar with Kannadasan – Rare pic = http://goo.gl/vbBh7

    தன்னை, இப்படிப் பொதுவில் கேள்வி கேட்டு மடக்கிட்டாரே-ன்னு வாரியார் தப்பாவே எடுத்துக்கலையாம்;
    *வாரியாருக்கும் = குழந்தைச் சிரிப்பு
    *கண்ணதாசனுக்கும் = குழந்தை உள்ளம்

    ஒரு தமிழ் உள்ளத்தை, இன்னொரு தமிழ் உள்ளம் அறியாதா என்ன? வாழி இந்த உள்ள நலம்!

 • G.Ra ஜிரா 10:02 pm on April 22, 2013 Permalink | Reply
  Tags: எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா   

  யாழிசை உந்தன் மொழி 

  துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
  இன்பம் சேர்க்க மாட்டாயா
  எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
  அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
  அல்லல் நீக்க மாட்டாயா
  பாடல் – பாவேந்தர் பாரதிதாசன்
  இசை – ஆர்.சுதர்சனம்
  பாடியவர்கள் – எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே.சர்மா
  படம் – ஓர் இரவு
  நடிகர்கள் – லலிதா, அக்கினேனி நாகேஸ்வரராவ்
  பாடலின் சுட்டி – http://youtu.be/MW4Rm1YkVuo

  திரைப்படப் பாடல்கள் இலக்கியம் ஆகுமா என்று விவாதிக்கும் நேரத்தில் இலக்கியங்களும் திரைப்படப் பாடல்கள் ஆனதுக்கு இந்தப் பாடல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

  பாவேந்தரின் கவிதையில் நிறைந்து ததும்பும் தீந்தமிழானது யாழிசையாய் நெஞ்சில் கலந்து அல்லல் நீக்கி இன்பம் சேர்ப்பது உண்மைதான்.

  ஆனால் யாழ் பாரம்பரிய இசை மேடைகளில் இன்று இல்லை. ஆனாலும் சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் வழியாகவும் யாழ் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

  அதையும் விட இன்னொரு எளிய வழி இருக்கிறது. அதுதான் விபுலானந்த அடிகளார் எழுதிய யாழ்நூல் என்ற நூலைப் படிப்பது. இலங்கை யாழ்பாணத்து மட்டக்களப்பில் பிறந்த மயில்வாகனன் என்னும் விபுலானந்த அடிகள் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து உருவாக்கிய செறிவான நூல்தான் “யாழ்நூல்

  யாழ்நூல் 1947ம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி இலங்கையின் திருக்கொள்ளம் புதூர் கோயிலில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சுவாமி விபுலானந்தரின் குறிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனவாம். அந்த யாழ்களை இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம் அடிகளார் மீட்டி இன்னிசை பொழிந்தாராம். அந்த யாழ்களுக்கும் பின்னாளில் என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

  சரி. யாழின் வகைகளைப் பார்க்கலாம். பொதுவாக யாழ் மூன்று விதங்களில் வகைப்படுத்தபடும்.
  1. யாழின் வடிவம்
  2. யாழ் பயன்படுத்தப்பட நிலம்
  3. வாசிக்கப்படும் பண்கள் மற்றும் இசைமுறைகள்

  வடிவத்தை வைத்து வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்
  வில்யாழ் – வில்லின் வடிவில் இருப்பது
  சீறியாழ் – சிறிய யாழ்
  பேரியாழ் – பெரிய யாழ். இதில் 21 நரம்புகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

  ஐவகை நிலங்கள் நாம் அறிந்ததே. அந்த நிலங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட யாழ்களும் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அந்தந்த நிலப்பகுதிகள் இந்த யாழ்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
  குறிஞ்சியாழ்
  முல்லையாழ்
  மருதயாழ்
  நெய்தல்யாழ்
  பாலையாழ்

  இசை வளர்ச்சியின் அடிப்படையிலும் வாசிக்கப்படும் பண்களின் அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்ட சில யாழ்களைப் பார்க்கலாம்.
  மகர யாழ்
  செங்கோட்டு யாழ்
  பேரியாழ்
  சகோடயாழ்
  மருத்துவயாழ்

  யாழ் வாசிக்கின்றவருக்குப் பண்ணறிவும் பாட்டறிவும் யாழிலக்கண அறிவும் நிறைந்திருக்க வேண்டும். யாழ் வாசிக்கின்றவரை யாழாசிரியர் என்றே அழைத்தார்கள்.

  யாழ் வாசிப்பதில் மிகச்சிறந்த திறம் பெற்றவர்களில் திரூநிலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். இவர் பக்தி இலக்கிய காலத்தவர். பாணர் குலத்தில் பிறந்திருந்ததால் திறமை இருந்தும் கோயிலின் வாயிலில் நின்றே யாழ் வாசிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானவர். இவரால் வாசிக்க முடியாதவாறு ஒரு பண்ணை திருஞானசம்பந்தர் பாடியதாகவும் சொல்வார்கள். அந்தப் பண் யாழ்முறிப்பண் என்றே அழைக்கப்பட்டது.

  தாம் பெற்ற மக்களின் மழகைக் குரலுக்கு அடுத்த படியாக குழலும் யாழும் இனிமை என்று திருவள்ளுவரும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருக்கின்றார்.

  குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
  மழலை சொல் கேளாதவர்

  அன்புடன்,
  ஜிரா
  142/365

   
  • amas32 2:52 am on April 23, 2013 Permalink | Reply

   I think Yaazh is very close to what we call Lute in English.
   துன்பம் நேர்கையில் மனத்துக்கு இதம் அளிப்பது நமக்கு நெருக்கமானவர்களின் ஆறுதல் வார்த்தைகளும் இனிமையான இசையும் தான். நமக்கு நெருக்கமானவர்களே இசைத்தார்கள் என்றால் துன்பம் நொடியில் விலகிவிடும் இல்லையா?

   /அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
   அல்லல் நீக்க மாட்டாயா/
   இந்த வரிகளும் அருமையாக உள்ளன!

   யாழைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன் ஜிரா, நன்றி.

   amas32

  • GiRa ஜிரா 9:20 am on April 25, 2013 Permalink | Reply

   Lute, Harp and guitars are different types of யாழ்கள்.

   உண்மைதான். நெருக்கமானவர்களின் பேச்சு கூட பாடலாகுமென்று சொல்வார்களே.

 • G.Ra ஜிரா 10:39 am on March 22, 2013 Permalink | Reply  

  தேசிங்கு ராஜா! 

  வரலாற்றுப் பின்னணியில் இப்போதெல்லாம் படங்கள் வருவதேயில்லை. ஆனாலும் காதற் பாடல்களில் நாயகனை வீரமுள்ளவனாகக் காட்ட வரலாற்று நாயகர்களாகக் குறிப்பிடுவதும் உண்டு. அதிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டது கட்டபொம்மனாகத்தான் இருக்கும். பாரி வள்ளலும் ராஜராஜசோழனும் திருமலை மன்னனும் கூட பாட்டில் வந்திருக்கிறார்கள்.

  இப்படி இவர்கள் வந்த பிறகு புதிதாக யாரையாவது குறிப்பிட வேண்டும் என்று நா.முத்துக்குமாருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் தேசிங்குராஜாவை அழைத்து வந்து விட்டார்.

  தேசிங்குராஜா தேசிங்குராஜா
  திருதிருதிருன்னு முழிப்பது ஏன்
  தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
  குறுகுறுன்னு பார்ப்பதென்ன
  படம் – டும் டும் டும்
  பாடல் – நா.முத்துக்குமார்
  பாடியவர்கள் – ஹரிஷ் ராகவேந்திரா, சுஜாதா
  இசை – கார்த்திக் ராஜா
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=JHTZ43dRtLc

  சரி. யார் இந்த தேசிங்கு ராஜா? எந்த ஊர் ராஜா? அதை விளக்கமாகச் சொல்ல சிறிய வரலாற்றுப் பாடம் எடுக்க வேண்டும்.

  18ம் நூற்றாண்டிலே செஞ்சியை ஆண்ட சிற்றரசன் தேசிங்கு ராஜா. இன்றைய செஞ்சியில் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டிய கோட்டைகளும் இடிபாடுகளும் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஆனால் நாயக்கர்கள் ஆட்சி மறைந்த பிறகும் செஞ்சியில் சுவாரசியமான வரலாற்று நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

  தென்னாட்டையும் பிடிக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்குக் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் ஆட்சிகள் வீழ்ந்தன. மராட்டிய சிவாஜியின் மகன் ராஜாராம் ஔரங்கசீப்பிடம் இருந்து தப்பித்து செஞ்சிக் கோட்டைக்கு வந்து பதுங்கியிருந்தார்.

  இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சொரூப்சிங் தலைமையில் ஔரங்கசீப்பின் படை செஞ்சிக்கோட்டையைத் தாக்குகிறது. கிட்டத்தட்ட பதினோறு மாத முற்றுகைக்குப் பின்னர் செஞ்சிக்கோட்டை வீழ்ந்தது. அந்த வெற்றியைப் பாராட்டி செஞ்சி ஆட்சியை சொரூப்சிங்குக்கே கொடுத்து விடுகிறார் ஔரங்கசீப்.

  அந்த சொரூப்சிங்குக்கும் ராதாபாய்க்கும் பிறந்த மகன் தான் தேஜ்சிங். அதாவது தமிழர்கள் உச்சரிப்பில் தேசிங்கு.

  வடக்கில் அதற்குள் ஔரங்கசீப் ஆட்சி முடிந்து ஷாஆலம் ஆட்சி தொடங்கியிருந்தது. அவரிடம் ஒரு குதிரை வந்தது. பரிகாரி என்று பெயரிடப்பட்ட குதிரை அழகும் கம்பீரமும் சேர்ந்த உயர்ந்த வகை. ஆனால் அதை யாரும் அடக்கி ஓட்ட முடியவில்லை.

  குதிரைப் பயிற்சியில் சிறந்திருந்த சொரூப்சிங் அழைக்கப்பட்டார். சொருப்சிங்காலும் அந்தக் குதிரையை பழக்க முடியவில்லை. ஆனால் அதை முடித்துக் காட்டினான் பதினெட்டு வயது தேஜ்சிங். அந்த வெற்றிக்குப் பரிசாக தேஜ்சிங்குக்கு பரிகாரியே கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேஜ்சிங்கின் ராஜபுத்ர இனத்திலிருந்தே பெண்ணெடுத்து திருமணமும் செய்து வைத்தார் ஷாஆலம்.

  அந்த பெண்ணின் பெயர் ராணிபாய். இவருடைய பெயரில் உருவானதுதான் இன்றைய ராணிப்பேட்டை என்று சொல்கிறார்கள். தலையைச் சுற்றுகிறதா? வரலாற்றுச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொன்னால் கொஞ்சம் சுற்றத்தான் செய்யும். 🙂

  மிகச் சிறுவயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது தேஜ்சிங்குக்கு. அவனுடைய நண்பன் முகமதுகான் தேஜ்சிங்குக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்தான். அவனிடமும் ஒரு குதிரை இருந்தது. அதன் பெயர் நீலவேணி. அதன் மேல் முகமதுகானுக்கு உயிர்.

  எல்லாம் நன்றாகப் போவது போலத்தான் இருந்தது ஆர்க்காட்டு நவாப் பிரச்சனையைத் தொடங்கும் வரை. ஆர்க்காட்டு நவாய் யார் வரி கேட்பதற்கு என்று போர் தொடங்கியது.

  எத்தனையோ திரைப்படங்களிலும் கதைகளிலும் வருவது போன்ற காட்சிதான். முகமதுகானுக்குத் திருமணம் வைத்த நாளில் போர் முரசு கொட்டியதாம். ஆகையால் திருமணத்தை நிறுத்தி விட்டு போருக்குப் புறப்பட்டானாம் முகமதுகான்.

  கொடும் போர் நடந்தது. போரில் வீர மரணம் அடைந்தான் தேஜ்சிங். அவனது மனைவி ராணிபாய் தீப்பாய்ந்து உயிர் விட்டார். முகமதுகானும் போரில் உயிரிழந்தான். அவனுடைய குதிரை நீலவேணியும் கொல்லப்பட்டது.

  நீலாம்பூண்டி என்னும் சிற்றூரில் தேஜ்சிங்கின் சமாதி உள்ளது. அருகிலேயே முகமதுகானுக்கும் அவனுடைய குதிரை நீலவேணிக்கும்.

  அன்புடன்,
  ஜிரா

  111/365

   
  • Arun Rajendran 4:08 pm on March 22, 2013 Permalink | Reply

   தமிழ் வகுப்புல வரலாறு பாடத்த நடாத்திக் காட்டி இருக்கீங்க…ஒரு நல்லப் பாட்ட எடுத்து ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி…தேசிங்கு கதை அரசல் புரசலாத்தான் கேள்விப்பட்டு இருக்கேன்..சுருக்கமா நிகழ்வுகள கோர்த்து கொடுத்து இருக்கீங்க..நன்றிகள் ஜிரா..

   • GiRa ஜிரா 11:04 pm on March 23, 2013 Permalink | Reply

    தேசிங்குராஜனைப் பற்றிய விவரங்களைத் தேடுனா அதீத புனிதப்படுத்துதலோட பக்தி ஜாலம் கலந்துதான் விவரங்கள் கிடைச்சது. பிறகு வேறு இடங்களில் தேடித்தான் பெயர் முதற்கொண்டு சரியான தகவல்களைக் கொடுக்க முடிந்தது 🙂

  • Saba-Thambi 5:32 pm on March 22, 2013 Permalink | Reply

   சிறு வயதில் படித்த ராஜா தேசிங்குவையும் அவனது குதிரையயும் நினவு படுத்தியதற்கு நன்றி. ஆனால் அதன் பின்னால் இருந்த சோகம் இன்று தான் அறிந்தேன். வரலாறு வகுப்பிற்கு நன்றி.

   • GiRa ஜிரா 11:06 pm on March 23, 2013 Permalink | Reply

    ஒவ்வொரு வரலாற்று நாயகனுக்கும் பின்னாடி ஒவ்வொரு சோகம் இருக்கத்தான் செய்யுது. அதுதானே வரலாறு. படாதபாடு பட்டு ஆட்சியைக் காப்பாற்றி ஒப்படைத்த மங்கம்மாளையே சந்தேகப்பட்டு சோறு போடாமல் கொடுமைப் படுத்திய பேரனையும் கண்டதுதான் தமிழகம்

  • amas32 (@amas32) 7:14 pm on March 22, 2013 Permalink | Reply

   கார்த்திக் ராஜாவுக்குத் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்பது என் எண்ணம். அவர் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அருமை. இந்தப் பாடலில் நடன அமைப்பும் நன்றாக இருக்கும். பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி தேசிங்கு ராஜா (Tej Singh Raja) பற்றி சரித்திரக் குறிப்பை அழகாகக் கொடுத்து சூப்பரா ஸ்கோர் செய்து விட வேண்டும்!:-)))) வாழ்க ஜிர!

   amas32

   • GiRa ஜிரா 11:08 pm on March 23, 2013 Permalink | Reply

    கார்த்திக் ராஜா திறமையுள்ள இசையமைப்பாளர். மாணிக்கம் என்ற முதற்படத்தில் பி.சுசீலாவைப் பயன்படுத்தி முற்றிலும் புதுமையாக ஒலிக்கச் செய்த இசையமைப்பாளர் அவர்.

    // பூவா தலையா, காயா பழமா என்று வரிகள் வரும் பாடல்களை #4VariNoteல் எடுக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்? சைலண்டா யாரும் கவனிக்காத போது எஸ்கேப் ஆகி //

    என்னம்மா செய்யச் சொல்றிங்க? பாட்டுல எதாச்சும் நல்லது இருந்தா எடுத்துச் சொல்லாம போறதில்லையே. இல்லாதப்போ இந்த மாதிரி விவரங்களைச் சொல்ல பாடல்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் 🙂

 • என். சொக்கன் 8:57 am on December 10, 2012 Permalink | Reply  

  பொலிக! பொலிக! 

  • படம்: பாசமலர்
  • பாடல்: மலர்ந்தும் மலராத
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M

  நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி

  ….நடந்த இளம் தென்றலே, வளர்

  பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு

  ….பொலிந்த தமிழ் மன்றமே!

  தமிழ்த் திரை இசை வரலாற்றிலேயே மிகப் பிரபலமான வரிகள் இவை. தென்றல் காற்று நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்து செல்கிற அற்புதமான கற்பனை ஒருபுறம், குழந்தையைத் தென்றலுக்கும் தமிழுக்கும் உவமையாகச் சொல்லும் அழகு இன்னொருபுறம்.

  ஆனால், நாம் இப்போது பேசப்போவது, கண்ணதாசன் நடுவே மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்தியிருக்கும் ‘பொலிந்த’ என்ற வார்த்தையைப்பற்றி.

  ’பொலிதல்’ என்ற இந்த வினைச்சொல் (Verb) இப்போது அதிகம் புழக்கத்தில் இல்லை. நல்லவேளையாக, விளம்பர உலகம் அதன் பெயர்ச்சொல் (Noun) வடிவத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை, ‘என் மேனிப் பொலிவுக்குக் காரணம் லக்ஸ்’ என்று சொல்லாத நடிகைகள் உண்டா!

  சோப்பு விளம்பரத்தில், ‘பொலிவு’ என்ற வார்த்தை தோற்றப் பொலிவு, அழகு, சிறப்பு என்பதுபோல் சற்றே சுற்றி வளைத்த பொருள்களில் வருகிறது. ஆனால் இங்கே கண்ணதாசன் எழுதியிருப்பது, அதே வார்த்தையின் நேரடிப் பொருளில், அதாவது வளர்தல், பெருத்தல், கொழித்தல் என்ற அர்த்தத்தில்.

  உதாரணமாக, கம்ப ராமாயணத்தில் ஓர் இடத்தில் ராமன் தசரதனைப்பற்றிப் பேசும்போது ‘புதல்வரால் பொலிந்தான்’ என்கிறான். அதாவது, தசரதன் ஏற்கெனவே சிறப்பான அரசன், பெரிய வீரன்தான், ஆனால் இப்போது, நல்ல மகன்களால் அவன் மேலும் பெருமை பெற்றான்.

  ‘பொலிகாளை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதே பொலிவுதான் அங்கேயும், நன்கு பெருத்த, வளமான, சினைக்குப் பயன்படக்கூடிய காளை.

  இந்தப் பாடல் வரியில் கண்ணதாசன் மூன்று விஷயங்களைச் சொல்கிறார்:

  1. தமிழ் பொதிகை மலையில் தோன்றியது
  2. பின்னர், மதுரை நகருக்கு வந்தது
  3. அங்கே சங்கம் (மன்றம்) வைத்து வளர்க்கப்பட்டது

  இவை மூன்றுமே, சும்மா மெட்டுக்குப் பொருத்தமாகச் சொல்லப்பட்டவை அல்ல. தமிழ் மொழியின் தொடக்கம் பொதிகை மலையில்தான் எனவும், அது மதுரையில் வளர்ந்ததாகவும்தான் நம்மிடம் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக, மதுரை தமிழ்ச் சங்கம்தான் தமிழின் இன்றைய வளத்துக்குக் காரணம். அந்தத் தகவல்களையெல்லாம் சர்வசாதாரணமாக, எந்தத் திணித்த உணர்வும் இல்லாமல் பாடலினுள் இணைத்துவிடுகிறார் கண்ணதாசன்.

  இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘பொலிந்த’ என்ற வார்த்தை எத்துணைப் பொருத்தம்!

  இன்னொரு விஷயம், இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அதிகம் புழக்கத்தில் உள்ள ‘தமிழ்ச் சங்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கண்ணதாசன் ஏன் ‘தமிழ் மன்றமே’ என்று எழுதியிருக்கிறார் என நினைப்பேன்.

  ஆனால், அந்த இடத்தில் ‘தமிழ்ச் சங்கமே’ என்று பாடினால், வல்லின ‘ச்’ மெட்டில் உட்காராமல் உறுத்துகிறது, ‘தமிழ் மன்றமே’தான் சுகமாக இருக்கிறது.

  சொல்லப்போனால், இந்த வரிகள் முழுவதுமே வல்லின ஒற்றுகள் இல்லை. அதனால்தான் சும்மா சத்தமாகப் படித்தாலே கீதம் சுகமாக உருண்டோடுகிறது.

  அதனால்தான் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை மன்றம் என எழுதினாரா? அல்லது மதுரையின் சரித்திரத்தில் ‘தமிழ் மன்றம்’ என்று வேறொரு சமாசாரம் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

  ***

  என். சொக்கன் …

  10 12 2012

  009/365

   
  • ரசனைக்காரன் 9:01 am on December 10, 2012 Permalink | Reply

   வாவ்..இத்தனை நாள் பொழிந்த என பாடுவேன் 🙂

  • Arun Rajendran 9:16 am on December 10, 2012 Permalink | Reply

   மன்றம் -> தமிழ் வார்த்தை…சங்கம் –> வடமொழிச் சொல்…மன்றம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி தமிழ்..சங்கம் பின்னர் வந்தேரிற்று..

   • என். சொக்கன் 10:23 am on December 10, 2012 Permalink | Reply

    நன்றி அருண். இன்றைக்கும் ‘சங்கத் தமிழ்’ என்றுதான் சொல்கிறார்கள், மறைக்கப்பட்ட மன்றத்தை வெளிக்கொண்டுவந்த கண்ணதாசனைப் போற்றதான் வேண்டும்!

  • Kannabiran Ravi Shankar (KRS) 10:37 am on December 10, 2012 Permalink | Reply

   என்னவொரு “பொலிவு உள்ள” கண்ணதாசன் வரிகள்!
   பொலிவு-க்கு என்ன நேரடியான ஆங்கிலச் சொல்லு சொல்ல முடியும்?

   பொலிக பொலிக பொலிக -ன்னு சொல்லுவான் மாறன் என்னும் பையன் (நம்மாழ்வார்)
   திருவில் பொலி, மருவில் பொலி,
   உருவில் பொலி, உடலில் களி -ன்னு வந்தானாம் மன்மதன்:)

   திரு (எ) செல்வம் பொலிந்து, மரு (வாசனை) மிக்க வில் பொலிந்து,
   உருவம் இல்லாமலேயே பொலிந்து, உடலில் களிக்க வரும் மன்மதன்!

   மயிலின் மிசை அழகு பொலி வர வேணும் – ன்னு , திருப்புகழ்!
   அழகன் முருகன்பொலியப் பொலிய வர வேணும்-ன்னு:)

   நீங்க சொன்னது போல், பொலிதல் = கொழித்தல் என்பதே சரியான சொல்லும்-பொருளும்!
   ————–

   இன்னோன்னு கவனிச்சீங்களா?

   வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு,
   ….பொலிந்த தமிழ் மன்றமே!

   வெறும் பொதிகை இல்லை! “வளர்” பொதிகை;
   ஒரு மலையை வளர விடாமல் தடுத்த அகத்தியர், இன்னொரு மலையை வளர வைக்கிறார்:)

   வட மலை = விந்திய மலை = வளர விடாமல் தடுத்தவரு
   தமிழ் மலை = பொதிகை மலை = “வளர்” பொதிகை ஆக்கி, “வளர்” தமிழ் ஆக்குறாரு:)

   சும்மா புராணம் தான்:)
   ஒரு மொழியை, ஒருத்தரே உருவாக்கி விட முடியாது; அது சமூகப் பரிணாமத்தில் தான் உருவாகி வளரும்; ஆனாலும் இது கற்பனைக்கு இனிது!:)

   • Kannabiran Ravi Shankar (KRS) 10:48 am on December 10, 2012 Permalink | Reply

    நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி
    ….நடந்த இளம் தென்றலே!

    இது ரொம்ப இனிப்பான வரி;

    நதியில் விளையாடினாத், தலை கலையும்…
    தலை கலைஞ்சி இருப்பது = நதியில் வேணும்-ன்னா அழகா இருக்கும்! ஆனா சாலையில் அப்படி வர முடியாது;

    அதனால், குளிச்சிட்டு, பக்கத்துல, கொடியில் தலை சீவிக்கிட்டு வந்துச்சாம்! = நடந்த இளந் தென்றல் = என்னைப் பார், என் அழகைப் பார் -ன்னு நடந்து வருது;

    காற்று, தண்ணியில் வேகமாத் தான் அடிக்கும்! அலைக்கும் = அதான் “விளையாடி”
    ஆனா, சாலையில், ஆளை அடிக்காம, மெல்ல வீசும் = அதான் “நடந்த” இளந்தென்றல்

    இந்தக் குட்டிப் பையன் அது போலச் சமத்து;
    வூட்டுக்குள்ள விளையாடும் போது, பாவம் அம்மா; ஒரே கலாட்டா & Violence:)
    ஆனா மத்தவங்க முன்னாடி? = “நடந்த” இளந் தென்றல் = gentle:))
    ————

    பொலிக -ன்னு சொன்னதும் வேற ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சி;
    பொலி = Flourish/ கொழித்தல் தான்;
    ஆனா, நாம இன்னிக்கி பேச்சு வழக்கில், “மவனே, உன்னைய பொலி போட்டுருவேன்” -ன்னு சொல்றோம்-ல்ல?:))

  • Kannabiran Ravi Shankar (KRS) 11:04 am on December 10, 2012 Permalink | Reply

   அன்புள்ள அருண் ராஜேந்திரன் & @nchokkan

   சங்கத் தமிழில் உள்ள “சங்கம்” = வடமொழியோ? -ன்னு ஒரு கருத்து நிலவினாலும்…
   அந்தச் “சங்கம்” = தமிழே!

   சங்கம் வேற; ஸங்கம் வேற
   கந்தன், ஸ்கந்தன் போலத் தான்!

   ஸங்கம் = கூட்டம்/ஸங்கமம்;
   புத்தர்களின் ஸங்கம்;
   சமணர்களும்/ பெளத்தர்களும் தென்னகம் வந்து, தமிழ் வளர்த்த போது…
   அவர்கள் சொல்லாய், “ஸங்கத்” தமிழ் ஆகி விட்டது என்பது கற்பனையே!

   சமணர்கள்/ பெளத்தர்கள்… கூடுமானவரை, தமிழ் இலக்கியங்களில், பாலி மொழி கலவாமலேயே, தங்கள் சமயக் கருத்தை எழுதினார்கள்; அவர்கள் தமிழின் தனித் தன்மையை மதித்தார்கள்;
   வேதநெறியின் சமஸ்கிருதம் கலப்பு செய்தது போல், தமிழில் பாலி மொழி கலக்கவில்லை பாருங்கள்; அதுவே அத்தாட்சி;

   எப்படி விளக்கு = விளக்கம் ஆனதோ,
   அப்படி சங்கு = சங்கம்!

   விளக்கு ஒளியால் பெறும் தெளிவு = விளக்கம்;
   சங்கு ஒலித்து ஒழுங்கு உறும் அவை = சங்கம்!

   தலைச் “சங்க” நாண் மதியம் -ன்னே ஒரு ஊரு உண்டு;
   சங்கம் = கழகம்/ மன்றம் ; இவையெல்லாம் இணையான சொற்களே;

   மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் கூட, முதலில் ஸங்கம் என்று கருதினாலும், பின்னர் ஆய்ந்து, தன்னையே மாற்றிக் கொண்டு, விளக்கினார்;
   ————-

   இந்தப் பாட்டில்,
   “தோன்றி, கண்டு, மன்றம்” -ன்னு வல்லினம் ஒலிக்க அமைச்சி இருக்காரு கவிஞரு; அதான் சங்கம் என்றோ, கழகம் என்றோ சொல்லாமல், மன்றம் என்ற சொல்லைச், சந்தமாப் போடுறாரு:)

   • Kannabiran Ravi Shankar (KRS) 11:33 am on December 10, 2012 Permalink | Reply

    இதே போல்…
    தமிழ் மறையான திருக்குறளில் = “ஆதி-பகவன்” வடமொழியோ?
    சிலப்பதிகாரத்தில் = “அதிகாரம்” வடமொழியோ?
    -ன்னு எல்லாம் எழுப்பப்பட்டதுண்டு; ஆனால், பாவாணர், தக்க விடையிறுத்துள்ளார்;

    ஆவதால் = ஆதி (தோற்றம்)
    பகுப்பதால் = பகல் / பகவன்; Not Sri Valmiki Bhagawan:))
    தமிழ் வேர்ச் சொற்கள் – அதன் ஆராய்ச்சி – பாவாணர்/ தெ.பொ.மீ நூல்களிற் காணலாம்;

    மன்னர்களிடம் வேலை பார்த்த பண்டிதர்களால், கல்வெட்டு/அரசு அலுவலில், கிரந்தம் புகுந்துவிட்ட பின்னாலும் கூட. (6th-7th CE)
    இலக்கியத்தில் மட்டும் புக விடாமல் பார்த்துக் கொண்டார்கள்… தமிழ்க் கவிஞர்கள்… ஆழ்வார்கள், நாயன்மார்கள்… கம்பன் உட்பட (10-11th CE),

    கம்பனுக்குப் பின் வந்த காலத்திலும் கூட, இந்தத் தொல்காப்பிய நெறி கடைப்பிடிக்கப்பட்டது;
    நாயக்கர்கள் ஆட்சி/ தஞ்சை சரபோஜி – மராத்தியர் ஆட்சிக் கட்டத்தில் தான், துதி பாடும் தன்னலக் கொள்கையால், கவிஞர்கள் -> புலவர்களாக மாறி விடத், தளரத் துவங்கியது

    அப்படியொரு உறுதி 15ஆம் நூற்றாண்டு வரைக்கும்!
    அப்படி இருக்க, ஆதித் தமிழிலே, “ஸங்கம்” என்று விட்டு விடுவார்களா என்ன, தமிழ்ச் சமூகப் பெருங்குடிச் சான்றோர்கள்? – இதை ஓர்ந்து பார்த்தால், விடை கிடைக்கும்!

    தமிழ்ச் சங்கம் வேறு; வடசொல் ஸங்கம் வேறு!
    தமிழ்க் கந்தன் வேறு; வடசொல் ஸ்கந்தன் வேறு!

  • Arun Rajendran 12:33 pm on December 10, 2012 Permalink | Reply

   KRS Sir,

   மிக அருமையான விளக்கம்… இதுகாறும் நான் கொண்டிருந்தத் தவறானப் புரிதலை /பிழையைத் திருத்தியமைக்கு நன்றி..கற்றுக்கொண்டேன்

   உங்கள் (சொக்கன், KRS -> Dosa) முயற்சிக்கு என் பாரட்டுக்கள் மற்றும் வணக்கங்கள்..

   அன்புடன்,
   அருண்

   • Kannabiran Ravi Shankar (KRS) 5:38 pm on December 10, 2012 Permalink | Reply

    புரிதலுக்கு நன்றி அருண்;
    எங்கேனும் தகவற் பிழை இருப்பின், நீங்களும் தவறாது சொல்லுங்கள்;
    அறியாதன அறிதலும், அறிந்தன பகிர்தலும் makes Tamizh fun for learning:)

    இப்போ தான் தோனிச்சி;
    கம்பன் காலத்தில், கிரந்தம் எப்பவோ, உள்ளாற வந்துருச்சி; ஆனாலும் திட்டிவிடம் -ன்னு எழுதுவான் கம்பன்:) = திருஷ்டி விஷம்:)

    பார்வையிலேயே நஞ்சுள்ள பாம்பு; திட்டிவிடம்; எதுக்குக் கம்பன் திட்டி விடுறான், யாரை?-ன்னு சிரிப்பு வந்துருச்சி:))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel