Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 7:41 am on November 20, 2013 Permalink | Reply  

  எங்கே அவன் என்றே மனம் 

  சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity  இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject  காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில்  ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து  பிறந்தவை என்கிறார்.

  காலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  

  http://www.inbaminge.com/t/k/Kalangalil%20Aval%20Vasantham/Paadum%20Vande.eng.html

  பாடும் வண்டே பார்த்ததுண்டா
  மாலை அணிந்த என் மாப்பிள்ளை
  ஏண்டி தோழி என்ன செய்தாய்
  எங்கு மறைத்தாய்
  கண்ணன் எங்கே எங்கே எங்கே

  முதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்

  வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
  வண்ணச்சேலை வாங்கி கொடுத்தார்
  கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
  கோவில் வழியைப் பார்த்துக்கிடந்தேன்
  ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
  உண்மை சொல்வாயடி எந்தன்

  எந்தன் கண்ணாளன்
  வந்தார் இங்கே எங்கே எங்கே

  அடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள்  ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று  பிரிவுக்காலம் சொல்கிறாள்.

  ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
  தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
  ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
  அவரின்றி கூவுது ஆயிரம் கோழி
  கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
  இன்று வந்தானடி

  எந்தன் கண்ணாளன்
  வந்தார் இங்கே எங்கே எங்கே

  வண்டு, தோழி என்று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.

  மோகனகிருஷ்ணன்

  352/365

   
  • Uma Chelvan 10:26 am on November 20, 2013 Permalink | Reply

   எங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-

   அவனை கண்டால் வரச் சொல்லடி
   அன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி
   தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
   தனியே நிற்பேன் எனச் சொல்லடி

   இருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.!! Just look at Manoramma’s expression for that particular lines. She is in total shock. :))

  • amas32 9:30 pm on November 20, 2013 Permalink | Reply

   இது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂

   amas32

   • Uma Chelvan 12:15 am on November 21, 2013 Permalink | Reply

    நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ ?

 • என். சொக்கன் 9:23 pm on November 10, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு: இரட்டைப் பிறவிகள் 

  தாமரை இலை-நீர் நீதானா?
  தனியொரு அன்றில் நீதானா?|
  புயல் தரும் தென்றல் நீதானா?
  புதையல் நீதானா?
   
  பாடல்: கருகரு விழிகளால்
  படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
  பாடலாசிரியர்: தாமரை
  பாடியவர்: கார்த்திக்
   
  தலைவன் தலைவியை மையப்படுத்தி எண்ணற்ற சங்ககாலப் பாடல்கள் வந்திருக்கும். சில திரைப்பாடல்களிலும் உவமையாக அவ்வப்போது தலை காட்டுவது வழக்கம். தாமரை இலை-நீர் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த உவமை. (ஒட்டியும்-ஒட்டாமலும்)

  தனியொரு அன்றில் என்றால்?

  இதற்கும் சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. அன்றில் என்பது ஓருடல்-இருதலையாக வாழும் பறவை என்று பஞ்சதந்திரக்கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சங்ககாலப் பாடல்களில், இணைபிரியாதிருக்கக் கூடிய பறவைகள் என்கிற அர்த்தத்தில் (இரண்டில் ஒன்று இறந்தால், மற்றொன்று(ம்) இறக்கும். அல்லது சோகத்தோடு வாழும் ) பாடல்கள் உள்ளன.

  அன்றில் போல் ‘புன்கண் வாழ்க்கை’ வாழேன்  (நற்றிணை-124 | மோசிகண்ணத்தனார்)

  கவிஞர் வைரமுத்து கூட, ஒரு பாடலில் (கண்ணோடு காண்பதெல்லாம்/ஜீன்ஸ்/ ஏ.ஆர்.ரஹ்மான்)
  “அன்றில் பறவை ரெட்டைப்பிறவி
  ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
  பிரியாதே..விட்டுப்பிரியாதே”
  என்று எழுதியிருக்கிறார்.
  சாத்தியமோ, இல்லையோ ஆனால் (இணை) பிரியாத வரம் வேண்டும்தானே?
  தமிழ்

  நான் தமிழ். @iamthamizh என்கிற பெயரில் ட்விட்டரில் எழுதுகிறேன்.

  பயணப்படுதலும் அதன் சுவாரசியங்களும் மிகப் பிடிக்கும். பயணப்படுதலின் பொருட்டு பாடல்கள் கேட்கத் துவங்கிய இப்போது அவை குறித்து எழுதியும் வருகிறேன்.

  பார்க்க:

  thamizhg.wordpress.com

  isaipaa.wordpress.com

   
  • rajinirams 10:14 am on November 11, 2013 Permalink | Reply

   சங்கப்பாடல்,திரைப்பாடல் கொண்டு “அன்றில் பறவை”யின் சிறப்பை விளக்கிய அருமையான பதிவு-வாழ்த்துக்கள் “தமிழ்”.

  • amas32 7:18 pm on November 11, 2013 Permalink | Reply

   “அன்றில் பறவை” பாட்டில் கேட்டிருந்தும் கவனித்து அர்த்தம் யோசித்ததில்லை. நல்ல ர்டுத்துக்காட்டுக்களுடன் விளக்கி உள்ளீர்கள் 🙂

   சங்க இலக்கியங்களில் தான் எவ்வளவு இருக்கின்றன! படித்துப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.

   நன்றி

   amas32

 • G.Ra ஜிரா 4:28 pm on August 27, 2013 Permalink | Reply  

  தீக்கனவும் நற்கனவும் 

  ஆணை விட பெண்ணுக்கு உள்ளுணர்வு அதிகம் என்று பெண்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். ஆம்.

  “ஒங்க நண்பரோட முழியே சரியில்ல. அவரோட பழகாதிங்க” என்று சொல்லி சண்டையைக் கிளப்பும் மனைவியரும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் சொல்வது உண்மையாக இருந்துவிடும். அதற்குப் பிறகு “அன்னைக்கே சொன்னேன்ல” என்று இன்னொரு சண்டை கிளம்பும்.

  உப்பை சிந்தி விட்டாலோ கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து விட்டாலோ தயிர் உறையாவிட்டாலோ பதறிப் போவதென்னவோ பெண்கள்தான். அதீத பயம் என்று எளிதாக அந்தப் பதட்டத்தைப் புறந்தள்ள முடியாது. ஏனென்றால் அந்தப் பதட்டங்களுக்குப் பின்னால் இருப்பது குடும்ப அக்கறை.

  இதையெல்லாம் விட கனவுகள் அவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும். கனவு நல்லவிதமாக இல்லாவிட்டால் அடுத்து ஒரு செயலைச் செய்யவே அச்சப்படுவார்கள்.

  இந்த அச்சத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு பாடலாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் கொடுத்திருந்தார்.

  கட்டபொம்மனை அழிக்க வேண்டுமென்று வெள்ளைக்காரன் படையெடுத்து வருகிறான். போர் முரசு கொட்டி விட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எல்லாம் போருக்குப் புறப்படுகிறார்கள். வெள்ளையத்தேவனும் புறப்படுகிறான். அவனுடைய மனைவி வெள்ளையம்மான் அவனைப் போகவிடாமல் தடுக்கிறாள். ஏனென்றால் அவள் கண்டது பொல்லாத சொப்பனம்.

  போகாதே போகாதே என் கணவா
  பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
  கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன் – அய்யோ
  கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
  கொண்டையில் பூவும் கருகிடக் கண்டேன்
  ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
  யானையும் மண்ணிலே சாயக் கண்டேன் – பட்டத்து
  யானையும் மண்ணிலே சாயக்கண்டேன்

  இப்படி வரிசையாகச் சொல்கிறாள் வெள்ளையம்மாள். கண்ணீர் விட்டுத் தடுக்கிறாள். ஆனாலும் கேட்காமல் போகிறான் வெள்ளையத்தேவன். போரின் முடிவு தமிழ் மண்ணுக்கு எதிராகவே அமைந்து விடுகிறது. வெள்ளையத்தேவன் வீரசுவர்க்கம் போகிறான். அவன் வழியே வெள்ளையம்மாளும் போய்விடுகிறாள்.

  தமிழ் பெண்கள் இன்று நேற்றல்ல… ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அதையும் ஒரு சங்கப் பாடல் சொல்லும். சங்க காலத்தில் அமங்கலங்களாகக் கருதப்பட்ட கனவுகள் எவையெவை என்று பார்க்கலாமா?

  திசையிரு நான்கு முற்க முற்கவும்
  பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
  வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
  அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
  எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
  களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
  வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
  திணை – வஞ்சி; துறை – கொற்றவள்ளை.
  பாடல் – காலனுங் காலம் பார்க்கும்
  நூல் – புறனானூறு
  பாடியவர் – கோவூர்கிழார் பாடியது

  பாட்டின் ஆழமான பொருளுக்குப் போகாமல் பாட்டில் தீய கனவுகளாக சொல்லப்படுகின்றவைகளை இங்கு விவரிக்கிறேன்.

  திசை இரு நான்கு முற்க முற்கவும் – இரு நான்கு என்பது எட்டு. எட்டுத் திசைகளிலும் கொள்ளி விழுந்து பற்றியதாம்
  பெருமரத்திலையின் நெடுங்கோடு வற்றல் பற்றவும் – ஓங்கி வளர்ந்து இலைகளை உதிர்த்து விட்டு வற்றலாய் நிற்கும் மரம் தீப்பற்றி எரிந்தது
  வெங்கதிர்க் கனலி துற்றவும் – பகலவன் சுடர் விட்டு நெருப்பாய்க் கொளுத்தியது
  பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரலியம்பவும் – மற்றும் அஞ்சுகின்ற பறவைகள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தி ஓலியெழுப்பின
  எயிறு நிலத்து வீழவும் – பல் உடைந்து நிலத்தில் வீழ்ந்தது
  எண்ணெய் ஆடவும் – கனவில் தலையை விரித்து எண்ணெய் தேய்த்து தலை முழுகுவது போலவும்
  களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவும்
  காழக நீப்பவும் – ஆடைகள் அவிழ்த்து அம்மணமாய் இருப்பதும்
  வெள்ளி நோன்படை கட்டிலொரு கவிழவும் – சிறந்த படைக்கலன்கள் அவைகள் அடுக்கப்பட்டிருந்த கட்டிலோடு (அலமாரி) கவிழ்ந்து விழுந்தது.

  மேலே உள்ளவை அந்தக் காலத்தில் தீய கனவுகளாகக் கருதப்பட்டன. இப்படி பழந்தமிழரின் நம்பிக்கைகளை தெரிந்து கொள்வதும் சுவையாகத்தான் இருக்கிறது.

  பதிவில் இடம் பெற்ற பாடல்
  பாடல் – போகாதே போகாதே என் கணவா
  வரிகள் – கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
  பாடியவர் – ரத்னமாலா
  இசை – ஜி.இராமநாதன்
  படம் – வீரபாண்டிய கட்டபொம்மன்
  பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=a861UAQfX0w

  அன்புடன்,
  ஜிரா

  269/365

   
  • amas32 4:42 pm on August 27, 2013 Permalink | Reply

   பெண்களுக்கே intuition அதிகம். உள்ளுணர்வு சொல்லும் எதோ தீங்கு நடக்கப் போகிறது என்று. அதே போல் ஒரு பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் நல்லதை எதிர்பார்த்தும். எனக்கே நடந்திருக்கு. அமெரிக்காவில் ஒரு பெரிய விபத்து ஆன போது அந்த விவரம் ஒன்றுமே தெரியாமல் இங்கே இந்தியாவில் அன்று நிலைகொள்ளாமல் இருந்தேன். விரதமும் இருந்தேன். அதனால் இந்த மாதிரி சிச்சுவேஷன்களை படங்களிலும் கதைகளிலும் சித்தரிப்பது உண்மை தான். பெண்ணின் இந்த அரிய குணத்தையும் கவிஞர்கள் போற்றுகின்றனர்!

   amas32

  • MumbaiRamki 9:57 pm on August 27, 2013 Permalink | Reply

   Nothing about women . In general , people who observe the environment & others can make sub conscious intuitions which works – because the mind can make so many combinations, calculations beneath the conscious 🙂

   “களிறுமேல் கொள்ளவும் – பன்றி சிங்கத்தைப் புணரவு” – wow !! What an imagination .

  • rajinirams 3:16 pm on August 29, 2013 Permalink | Reply

   கு.மா.பா.அவர்களின் வரிகளையும் சங்க கால பாடலையும் விளக்கிய “கனவு பதிவு”மிக மிக வித்தியாசமான பதிவு.அப்பப்பா-எப்படியெல்லாம் யோசித்திருக்கிறீர்கள்-சூப்பர் சார்.சிவகங்கை சீமையில்-கனவு கண்டேன் என்று சந்தோஷமான சோகமான இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கும். நன்றி.

 • G.Ra ஜிரா 11:48 pm on August 6, 2013 Permalink | Reply  

  பட்டை(யை)க் கிளப்புதல் 

  பெண்ணின் சருமத்து மென்மையை பாட்டில் எழுதச் சொன்னால் பெரும்பாலான கவிஞர்கள் பட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

  பட்டுக் கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (முத்துலிங்கம், காக்கிச் சட்டை, இளையராஜா)
  சீனத்துப் பட்டுமேனி இளம் சிட்டு மேனி (வாலி, தாய்மூகாம்பிகை, இளையராஜா)
  பட்டுப் பூவே மெட்டுப் பாடு (முத்துலிங்கம், செம்பருத்தி, இளையராஜா)
  பட்டு வண்ண ரோசாவாம் (புலமைப்பித்தன், கன்னிப் பருவத்திலே, சங்கர்-கணேஷ்)
  பட்டினும் மெல்லிய பூவிது (கண்ணதாசன், ஞாயிறும் திங்களும், எம்.எஸ்.விசுவநாதன்)

  இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள்.

  பட்டுத் துணியின் மென்மையும் பளபளப்பும் பெண்ணின் சருமத்தோடு ஒப்பிடச் சிறந்ததுதான்.

  அதனால் தானோ என்னவோ பட்டு என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கிறது. ஊருக்கு ஊர் எத்தனை பட்டுச்சேலைக் கடைகள். சென்னையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். தியாகராய நகர் உஸ்மான் சாலை ஒன்று போதுமே தமிழ்ப் பெண்களின் பட்டு மோகத்தை எடுத்துக் எடுத்துக்காட்ட.

  அதை விடுங்கள். பட்டு என்று பெண்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறதே. பருத்தி கம்பளி என்றெல்லாம் பெண்களுக்கோ ஆண்களுக்கோ பெயர் வைக்கும் வழக்கமே இல்லையே! ஆங்கிலத்தில் சில்க் என்றால் தமிழர்களுக்கு நினைவுக்கு வருவது நடிகை சில்க் சுமிதா தானே! அதுதான் பட்டின் வெற்றி.

  கந்தன் கருணை திரைப்படத்தில் சிவனிடம் பார்வதி சொல்வதாக “பெண்ணாகப் பிறந்து விட்டால் பட்டாடைகளும் பொன்னாபரங்களும் போதும் என்று சொல்வாளா சுவாமி” என்று ஒரு வசனம் உண்டு.

  பார்வதி தேவியையே பட்டுத்துணி பற்றிப் பேச வைத்த பெருமை தமிழர்களையே சாரும். சகோதரி வழியில் சகோதரனாகிய பாற்கடல் சீனிவாசன் கட்டியிருப்பதும் பட்டுப் பீதாம்பரம் தானாம்.

  பட்டுத்துணி சீனாவிலிருந்து வந்தது என்று படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். பாசமலர்களான பார்வதியும் பரந்தாமனும் சீனாக்காரர்களா என்று சோதிக்க வேண்டும். பார்வதி இமவான் மகள். இமயத்தின் உச்சி இன்று சீனாவில்தான் இருக்கிறது. அதே போல பாற்கடலும் அங்குதான் இருக்க வேண்டும்.

  அப்படியானால் தமிழர்களுக்கு பட்டு பற்றியெல்லாம் சமீபத்தில்தான் தெரியுமா? தமிழ் மக்கள் எவ்வளவு காலமாக பட்டுத்துணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? பட்டு என்ற சொல் சங்க இலக்கியங்களில் உள்ளதா? இந்த மூன்று கேள்விகள்தானே அடுத்து நமக்குத் தோன்றுகின்றன.

  பட்டு பழந்தமிழர் அறிந்த துணிவகையே. சங்க இலக்கியங்களில் இதற்குக் குறிப்புகள் உள்ளன. ஆனால் பெயர்தான் வேறு.

  பட்டுத்துணிக்குப் பழந்தமிழர் கொடுத்த பெயர் நூலாக் கலிங்கம். அதாவது நூற்காத துணி.

  ஏன் அந்தப் பெயர்? பருத்தியிலிருந்து நூல் உண்டாக்கும் முறையும் பட்டுநூலை உண்டாக்கும் முறையும் வெவ்வேறு.

  மென்மையான பஞ்சுப் பொதியைத் திரித்து மெலிதாக்கி ராட்டையின் உதவியால் நூலாக்குவார்கள். ஆனால் பட்டுநூலை அப்படித் திரிப்பதில்லை. கொதிக்கின்ற நீரில் பட்டுப்புழுக்களின் கூடுகளைப் போட்டு பட்டு இழையை அப்படியே உருவி விடுவார்கள். இணையத்தில் பட்டுநூல் உருவும் முறைக்கு நிறைய காணொளிக் காட்சிகள் உள்ளன. தேடிப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

  பருத்தி நூலோ கம்பளி நூலோ இந்த வகையில் செய்யப்படுவதில்லையே. ஆகையாதால் பட்டுத் துணிக்கு நூலாக் கலிங்கம் என்று பெயர்.

  அன்புடன்,
  ஜிரா

  248/365

   
  • amas32 8:28 am on August 7, 2013 Permalink | Reply

   அதனால் தான் பட்டை உடுத்த வேண்டாம் என்று பரமாச்சாரியார் அறிவுறுத்தினார். அனால் கேட்பவர்கள் யார்? அவரை தரிசிக்க வந்தவர்கள் காஞ்சிபுரத்தில் கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை வாங்க வந்தோம் அப்படியே உங்களையும் வணங்கி விட்டுச் செல்ல வந்திருக்கிறோம் என்று அவரிடமே கூறுவார்களாம்!

   ஆனால் பட்டுக்கு இருக்கும் மென்மையும் பளபளப்பும் பணக்காரத் தன்மையும் வேறு எந்த துணிக்கும் இல்லை என்பது உண்மை. அதனால் தான் பட்டு பெண்களின் அங்கங்களுக்கு உவமையகிறது.

   amas32

  • rajinirams 10:22 am on August 7, 2013 Permalink | Reply

   வித்தியாசமான பதிவு.வழக்கம் போலவே கலக்கியிருக்கிறீர்கள்.பட்டுச்சேலை காத்தாட.காஞ்சி பட்டுடுத்தி என்று பட்டு சேலை பற்றியும்.பட்டு வண்ண சேலைக்காரி என்று காதலியையும் நீங்கள் சொன்னது போல நிறைய வர்ணித்து இருக்கிறார்கள். நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-)) நன்றி.

   • amas32 4:26 pm on August 7, 2013 Permalink | Reply

    ‘பட்டுப்புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் என்பது வைரமுத்துவின் உட்சபட்ச வர்ணனை:-))” அழகாக சொல்லியுள்ளார்!
    amas32

  • Saba-Thambi 10:34 am on August 7, 2013 Permalink | Reply

   நன்றாக பட்டை(யை)க் கிளப்பியிருக்கிறீர்கள். 🙂

   உங்கள் பதிவு – பட்டு நெசவாளர்களின் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. Pirakash Raj நடித்த படம். பெயர் நினைவில் இல்லை.

  • kamala chandramani 4:30 pm on August 7, 2013 Permalink | Reply

   பட்டுப் புடவை, தங்க நகை இரண்டையும் பெண்களால் விட முடிவதில்லை. ஒரு முறை பட்டுப் புழு வளர்க்கும் கூட்டுறவு நிலையம் போய்ப் பார்த்தால் வெறுத்து விடுவார்கள். ஆனாலும் -பிரிக்க முடியாதவை பெண்களும் பட்டும்தான்!

 • என். சொக்கன் 11:19 pm on August 3, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : உறங்காத நொச்சி 

  ’கடல்’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ‘ பாடலில் ஒரு வரி:

  பட்சி ஒறங்கிருச்சு,

  பால் தயிரா தூங்கிருச்சு,

  நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு!

  அதென்ன ‘நொச்சி மரத்து இலை? வேறு மரங்கள் ஆகாதா?

  இதற்கான விடை ‘குறுந்தொகை’யில் உள்ளது. கொல்லன் அழிசி எழுதிய இந்தப் பாடலைப் பாருங்கள்:

  கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
  எம் இல் அயலது ஏழில் உம்பர்
  மயிலடி இலைய மா குரல் நொச்சி
  அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
  மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

  ‘ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலையில, மயிலுடைய கால்களைப்போல இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்’ என்று தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள்.

  ஆனால் இந்தத் தலைவியைப் பொறுத்தவரை, ‘அந்த நொச்சியும் தூங்கிடுச்சு’ என்கிறார் வைரமுத்து. என்னவோர் அழகு!

  சுதர்ஷன்

  https://twitter.com/SSudha_

   
  • amas32 8:12 am on August 4, 2013 Permalink | Reply

   என்னவொரு அழகு! ஆனால் இந்த விவரம் அறிந்தவர்கள் தான் இதை இரசிக்க முடியும் இல்லையா? 🙂 நல்ல பதிவு.

   amas32

  • Saba-Thambi 6:54 pm on August 4, 2013 Permalink | Reply

   அழகான பாடல், அருமையான பதிவு.

 • G.Ra ஜிரா 3:53 pm on July 24, 2013 Permalink | Reply  

  பகலில் வா! 

  சிந்தனைக் குரங்கை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது மரத்துக்கு மரம் தாவிக்கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படியே! ஏ.ஆர்.ரகுமான் இசையில் மரியான் திரைப்படத்துக்காக யுவன்ஷங்கர் ராஜா பாடிய ”கடல் ராசா நான்” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

  கொம்பன் சுறா வேட்டையாடும்
  கடல் ராசா நான்… கடல் ராசா நான்..

  இந்தப் பாட்டை தனுஷ் எழுதினார் என்று கேள்விப்பட்டு நான் சற்று ஆச்சரியப்பட்டுதான் போனேன்.

  பாட்டில் பெரிய கவித்துவம் எதுவுமில்லை என்றாலும் ஏன் ஆச்சரியப்பட்டேன் என்று நினைக்கிறீர்களா?

  அதற்குக் காரணம் “கொம்பன் சுறா” என்ற பேரைப் பயன்படுத்தியிருப்பதுதான்.

  சுறா மீன் எல்லாருக்கும் தெரியும். அதைக் கொம்பன் சுறா என்று இப்போது பொதுவாகச் சொல்வதில்லை. ஆனால் சங்க காலத்தில் சுறாமீனுக்கு பேர் கொடுத்ததே அதன் கொம்புதான் (திமில்).

  சுறாமீனுக்கு சங்ககாலத்தில் கோட்டுமீன் என்று பெயர்.

  கோடு என்றால் கொம்பு. யானைத்தந்தத்தைக் கூட கோடு என்றுதான் சொல்வார்கள்.

  கோடு என்பது கொம்பானால் சுறாவை கொம்பன் சுறா என்று சொல்வது பொருத்தம் தானே! அதனால்தான் ஆச்சரியப்பட்டேன்.

  சுறா மீன் வரும் ஒரு சிறிய சங்ககாலத்துக் காதலைப் பற்றிச் சொல்லப் போகிறேன். எல்லாரும் ஒரே நொடியில் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி தாவிக்குதித்து விடுங்கள்.

  கடலும் கடல் சார்ந்ததுமான நெய்தல் நிலம்.

  வெண்ணிற மணற்பரப்பில் பொன்னிறத்தில் மீன்கள் உலர்ந்திருக்கும் ஊரில் இருக்கிறாள் தலைவி.

  அவள் பருவமோ பார்வைக்குப் பதம். உருவமோ கண்களுக்கு இதம்.

  மூடி வைத்த பாலுக்கும் பூனை தேடி வரும். பூட்டி வைத்த பெண்மைக்கும் எங்கிருந்தோ ஒரு திருடன் தேடி வருவான். இவளோ கடலின் அலையோடு அலையாக விளையாடியவள். முத்தோடு முத்தாக உறவாடியவள். அவளுக்காகவே சங்குகள் சங்கீதம் பாடும். கடற்பறவைகளின் இறகுகள் சாமரம் வீசும்.

  வலையில் மீன் பிடிப்பது பரதவர் வழக்கம். ஆனால் அவள் கண்ணென்னும் மீனுக்கு ஒருவன் வலை வீசினான்.

  அவனுக்கு அவளைப் பிடித்தது. அவனுக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்தது.

  பிடித்தவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டார்கள். படித்தால் அறிவு வரும். பிடித்தால் உறவு வரும். அவர்களுக்குள் உறவு வந்தது.

  முதலில் இரவு வரும். அடுத்து அவன் வருவான். காதலுக்குத் துணை இருட்டுதானே. பக்கத்துத் தீவிலிருந்து வர வேண்டுமல்லவா. நீந்தி வருவான். வளைந்த கால்களை உடைய முதலையும் சுறாவும் நிறைந்த கடல் என்பதைக் கூட நினைக்காமல் அச்சமின்றி வருவான்.

  காமாதுரானாம் நா பயம் நா லஜ்ஜா” என்று வடமொழியில் சொல்வார்கள். காமத்தில் விழுந்தவர்களுக்கு அச்சமும் நாணமும் ஏது!

  அப்படி அச்சமின்றி வந்தவனிடம் உள்ளத்தில் இருந்ததை மிச்சமின்றி சொன்னாள்!

  இரவில் வருகின்ற தலைவனே! பகலில் வா! தேர் பூட்டி வா! அதிலும் ஒரே இனமாகிய குதிரைகளைப் பூட்டி இசையெழுப்பும் மணிகளைக் கட்டிய தேரை ஓட்டிவா!

  நீ வரும் வழியெங்கும் பூக்காடுகள். வரிசையான புன்னை மரங்களில் தொங்கும் கொடிகள் உன்னுடைய தேரில் சிக்கிக் கொண்டு பூக்களை உன் மீதும் உன் தேர் மீதும் உதிர்க்கும். அந்த மலர்களில் உள்ள மகரந்தத்தாதுகள் சிந்திச் சிதறி உன்னுடைய மரத்தேர் பொற்றேராக மின்னும்.

  இத்தனை திறமாக பட்டப் பகலில் என் தந்தை உன்னை அறிந்து கொள்ளும் வண்ணம் எங்கள் ஊருக்கு வா! முறைப்படி என்னை உரிமையாக்கிக் கொள். அதுதான் காதலுக்கு மரியாதை.”

  அவள் சொன்னாள். அவன் செய்தான். அவர்கள் இனிது வாழ்ந்தார்கள்.

  இப்படி ஒரு அழகான கதையை அகனானூற்றுப் பாடலாகச் சொன்னவர் மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார். நெய்தல் திணையில் அமைந்த இந்தப் பாடலில் சுறா மீன் வரும் வரிகளை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்.

  கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
  இருங்கழி யிட்டுச்சரம் நீந்தி யிரவின் வந்தோய்
  (வளைந்த கால் முதலையோடு கொம்புடைய சுறாவும் வழங்கும்
  உப்பங்கழிகள் வழியாக நீந்தி இரவில் வந்தவனே)

  ஒன்று மட்டும் புரிகிறது. காதல் வந்துவிட்டால் உலகில் எல்லாமே துச்சமாகப் போய்விடுகிறது. உயிர் உட்பட. அதனால்தான் முதலையும் சுறாவும் கடிக்கும் என்று தெரிந்தும் உயிரை மதிக்காமல் அவளைத் தேடி வந்திருக்கிறான்.

  அன்புடன்,
  ஜிரா

  235/365

   
  • amas32 6:16 pm on July 24, 2013 Permalink | Reply

   தணுஷ் எழுதிய பாடலையும் நாலு வரி நோட்டில் இடம் பெற வைத்துவிட்ட கொம்பன் சுறா நீங்கள் தான்! 🙂

   உங்கள் பதிவில் எப்போழ்தும் பாடலையும் பாடலை சார்ந்த நிறைய விஷயங்களயும் பகிர்ந்துக் கொள்வது உங்கள் ஸ்பெஷாலிடி! மேலும் லேட்டஸ்ட் பாடலுக்குச் சங்கப் பாடலை ஒப்பிடும் உங்கள் திறமையை என்னவென்பது!

   இந்தப் படத்திலும் நாயகன் படாதபாடுப் பட்டுத் தான் தன் காதலியை மீண்டும் காண்கிறான்!

   amas32

   • GiRa ஜிரா 9:11 am on July 26, 2013 Permalink | Reply

    ஆகா… என்ன சுறான்னு சொல்லிட்டிங்க. சுறா வேட்டைக்கு யாராச்சும் கெளம்பிறப் போறாங்க 🙂

    சங்கப் பாடல்களை நெறையவே தொடுற மாதிரி இருக்குல்ல. இனிமே குறைச்சுக்குவோம். ஒரே மாதிரி டெம்பிளேட் ஆயிரக்கூடாதுல்ல 🙂

  • Uma Chelvan 9:49 am on July 25, 2013 Permalink | Reply

   Nice comparison of contemporary with sanga ilakiyam. I wish I knew “Sanga Ilakiyam” like you!!.

  • Arun Rajendran 1:22 pm on July 25, 2013 Permalink | Reply

   அருமைங்க ஜிரா சார்.. 🙂

   //வலையில் மீன் பிடிப்பது பரதவர் வழக்கம். ஆனால் அவள் கண்ணென்னும் மீனுக்கு ஒருவன் வலை வீசினான்.

   அவனுக்கு அவளைப் பிடித்தது. அவனுக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்தது.

   பிடித்தவர்கள் ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டார்கள். படித்தால் அறிவு வரும். பிடித்தால் உறவு வரும். அவர்களுக்குள் உறவு வந்தது.

   முதலில் இரவு வரும். அடுத்து அவன் வருவான். காதலுக்குத் துணை இருட்டுதானே//

   இந்தத் தொடர்களே மீண்டும் மீண்டும் படிக்க வைக்குது…:-)

   இவண்,
   அருண்

   • GiRa ஜிரா 9:14 am on July 26, 2013 Permalink | Reply

    நன்றி அருண்.

    அவனுக்குப் பிடித்தது அவளுக்கும் பிடித்ததுங்குறது ரெண்டு பொருள் வருவது போல எழுதினேன்.

    முதற்பொருள் – அவனுக்கு (அவளைப்) பிடித்தது அவளுக்குப் பிடித்தது
    இரண்டாம் பொருள் – அவனுக்குப் பிடித்தது (காதல்/காமம்) அவளுக்கும் பிடித்தது

    நீங்கள் படித்துப் பாராட்டியது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

 • G.Ra ஜிரா 1:19 pm on July 22, 2013 Permalink | Reply  

  மணக்கோலம் 

  பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும்? பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.

  சமீபத்தில் அபியும் நானும் என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படம் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டியது. அந்தப் படத்திற்காக வித்யாசாகர் இசையில் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு மதுபாலகிருஷ்ணன் பாடிய ஒரு பாடலின் வரிகளைக் கீழே தந்திருக்கிறேன்.

  மூங்கில் விட்டு சென்ற பின்னே
  அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
  பெற்ற மகள் பிரிகின்றாள்
  அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன

  மூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்துவிடுவதில்லை. அப்படிப் பிறந்து மூங்கிலைப் பிரிந்த இசைக்கும் மூங்கிலுக்கும் என்ன தொடர்பு? ஏன் மூங்கிலுக்கு இப்படியொரு நிலை? ஆண்டவனே அறிவான். கடவுள் தகப்பனாகப் பிறக்க வேண்டும். பெண்குழந்தைக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்.

  இன்னொரு தந்தை. இவனும் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். தாயில்லாத மகளை தாய்க்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் வளர்த்தவன். அவளுக்குப் பூச்சூட்டிச் சீராட்டி வளர்த்ததால் அவன் சோகத்தை வேறுவிதமாகச் சொல்கிறான்.

  காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
  மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
  திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
  வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
  கட்டித்தங்கம் இனிமேல் அங்கெ என்ன பூவை அணிவாளோ
  கட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாங்கித் தந்த தகப்பனுக்கு மகள் கணவன் வீடு போனால்.. கணவன் சொன்ன பூவைத்தான் சூடிக் கொள்வாள் என்பதே பெருஞ்சோகமாகத் தாக்குகிறது. மருமகன் மேல் ஒரு பொறாமை கலந்த கோவம் உண்டாவதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. இப்படியான அருமையான வரியை சங்கர்-கணேஷ் இசையில் வைரமுத்து அவர்கள் எழுத ஏசுதாஸ் உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.

  மேலே பாடியவர்கள் எந்தக் குறையுமில்லாத மகளைப் பெற்ற தகப்பன்கள். ஆனால் அடுத்து பார்க்கப் போகும் தகப்பன் நிலை வேறு மாதிரி. இவன் மகள் அழகுச் சிலைதான். திருமகள் அழகும் கலைமகள் அறிவும் மலைமகள் திறமையும் கொண்டவளே. ஆனால் பேச்சு வராத பதுமையாள். இப்படிப் பட்ட பெண் போகுமிடத்தில் எப்படியிருப்பாளோ என்று தகப்பனும் தாயுமாக கலங்குகிறார்கள். நீதிபதி படத்துக்காக கங்கையமரன் இசையில் வாலி எழுதிய டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடிய உயர்ந்த பாடல்.

  தந்தை: அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்
  தாய்: கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்
  உன் வசத்தில் இந்த ஊமைக்குயில்
  இவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்
  காவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே

  மருமகனே, உன் மேல் உள்ள அன்பைச் சொல்லக் கூட வாயில்லாத அழகுச் சிலையப்பா என் மகள்” என்று தகப்பன் கதறுகிறான். அடுத்தது தாயின் முறை. தாயல்லவா. குழந்தையின் பசியை உலகில் முதலில் தீர்க்கும் தெய்வமல்லவா! அதனால்தான் “தனக்குப் பசிக்கிறது என்று கூட கூறிடாத குழந்தை போன்றவள் என் மகள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கத் தெரியாது. ஐயா, மருமகனே. நீயே நாங்கள் வணங்கும் கடவுள். அவளுக்கு வேண்டியதையெல்லாம் செய்ய வேண்டியது உன் கடமை.

  பெற்றால்தான் பிள்ளை. வளர்த்தாலும் பிள்ளைதான். அப்படி வளர்த்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் ஒரு செல்வந்தன். அவன் புலம்பும் வரிகளைப் பாருங்களேன்.

  நான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி
  செல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி
  நிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி
  அந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி

  மேலே வாலி எழுதிய வரிகள்தான் நிதர்சனம். மோகனப் புன்னகை திரைப்படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடினார்.

  எத்தனை காலங்களாக மகளைக் கட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் இப்படியிருக்கிறார்கள்? சங்ககாலத்துக்கும் முன்னாடியிருந்தே இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அகனானூற்றில் ஒரு அழகான பாடல் நமக்கு விளக்கமாக கிடைத்திருக்காது.

  தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
  நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
  ————————————–
  நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
  வைகுறு மீனின் தோன்றும்
  மை படு மா மலை விலங்கிய சுரனே?
  பாடல் – கயமனார்
  திணை – பாலை
  கூற்று – செவிலித்தாயின் கூற்று
  நூல் – அகனானூறு

  மேலே கொடுத்துள்ள வரிகள் புரியவில்லையா? விளக்கமாகச் சொல்கிறேன். மகள் ஒருவனை விரும்பி களவு மணம் செய்து அவனோடு சென்றுவிட்டாள். அந்தச் சோகத்தை தந்தையின் சார்பாகவும் ஒரு தாய் புலம்புகிறாள்.

  ”என்னையும் சுற்றத்தாரையும் கொஞ்சம் கூட உள்ளத்தில் எண்ணிப் பார்க்காமல், ஊரில் புகழ் மிகுந்த தந்தையின் காவலையும் தாண்டிக் கிளம்பிச் சென்றாளே! இவள் இங்கு இருந்த வரைக்கும் தோழியரோடு பந்தாடுவதால் உண்டாகும் களைப்பைக் கூடத் தாங்க மாட்டாளே! இன்று கொதிக்கும் மலைக்காட்டில் அவனோடு கிளம்பிப் போனாளே!”

  கோதை நாச்சியாரை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்த பெரியாழ்வாரும் பெண்ணைப் பெற்ற பாசத்தில் “ஒரு மகள் தன்னை உடையேன் (நான்). உலகம் நிறைந்த புகழால்
  திருமகள் போல் வளர்த்தேன். செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று புலம்புகிறார். ஆண்டவனுக்கே பெண் கொடுத்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு புலம்பல்தான் மிச்சம் போலும்.

  பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று சொல்வதும் இதனால்தான் போலும். ஆண்டாண்டு காலமானாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இதுதான் நிலை. தான் ஒருத்தியை இன்னொரு வீட்டிலிருந்து கொண்டு வந்ததை நினைக்காத ஆண்கள் தன் மகள் இன்னொரு வீடு போகும் போது கலங்குவது வியப்பிலும் வியப்புதான்!

  இப்படிப் புலம்பிய பெரியாழ்வார் பாத்திரம் திரைப்படமாக வந்த போது அதிலும் தந்தையாக நடித்துச் சிறப்பித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதுமட்டுமல்லாமல் இந்தப் பதிவில் பார்த்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் நடிகர் திலகம் தந்தையாக நடித்த சிறப்பு பெற்றவை.

  மூங்கில் விட்டுச் சென்ற (அபியும் நானும்) – http://youtu.be/Jv2ZUsGQpWw
  மரகதவல்லிக்கு மணக்கோலம்(அன்புள்ள அப்பா) – http://youtu.be/MNx6Oz7KDxc
  பாசமலரே அன்பில் விளைந்த (நீதிபதி) – http://youtu.be/YKo4y7B1iWI
  கல்யாணமாம் கச்சேரியாம் (மோகனப் புன்னகை) – http://youtu.be/v5MyR7lX30E

  அன்புடன்,
  ஜிரா

  233/365

   
  • rajinirams 11:13 pm on July 23, 2013 Permalink | Reply

   பதிவு அருமை.தந்தை மகள் பாசத்தை விளக்கும் உன்னத பாடல்கள். கல்யாணமாம் கச்சேரியாம் வாலி எழுதிய பாடல்.

   • GiRa ஜிரா 2:58 pm on July 24, 2013 Permalink | Reply

    உண்மைதான். கல்யாணமாம் கச்சேரியாம் பாடல் வாலி எழுதியதுதான். தவறுக்கு மன்னிக்க 🙂

  • amas32 6:28 pm on July 24, 2013 Permalink | Reply

   மகளுக்கும் தந்தைக்கும் உள்ள உறவு அலாதியானது. கமலஹாசன் வாய்க்கு வாய் எனக்கு கடவுள் பக்தி இல்லை என்பார் ஆனால் தாய் பக்தி அதிகம். பெற்ற மகளுக்கு வைத்தப் பெயர் ராஜலக்ஷ்மி. தாயிடம் காட்டிய பாசத்தை மகளிடம் இருந்துப் பெறுகின்றனர் ஆண்கள். இதில் பெரியாழ்வாரும் விலக்கல்ல!

   பாடல்கள் அனைத்தும் அருமை!

   amas32

 • G.Ra ஜிரா 11:42 am on July 1, 2013 Permalink | Reply  

  குழலன் 

  அன்றொருநாள் நண்பர்களுக்கு இடையே ஒரு பேச்சு வந்தது. அதாவது மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த பாடல்கள் எவை? இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் எவை?

  பொதுவாகவே மெல்லிசை மன்னர் மெட்டுகளை அமைத்தார் என்பதும் இசைஞானி இசைக்கோர்ப்பு செய்தார் என்பதும் கருத்து. ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா என்று மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  மிக அருமையான பாடல் அது. வாலி எழுதிய சித்ரா பாடிய அட்டகாசமான பாடல்.

  குழலூதும் கண்ணனுக்கு
  குயில் பாடும் பாட்டு கேக்குதா குக்கூ குக்கூ

  கண்ணனைச் சொல்லும் போதெல்லாம் குழலைச் சொல்வது வழக்கமாக திரைப்பாடல்களில் இருக்கிறது. வாலி எழுதிய இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது.

  காற்றினிலே வரும் கீதம்
  கண்ணனவன் குழல் நாதம்
  நேற்றிரவு கேட்டேனே
  பால் நிலவாய் ஆனேனே

  ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ரவீந்திரன் இசையில் வாணி ஜெயராம் பாடிய கர்நாடக பாணி மேடைப் பாடல்.

  குழல் என்றால் கண்ணன். கண்ணன் என்றால் குழல் என்று இன்று அமைந்து விட்டது. இரண்டையும் எளிதில் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

  ஆனால் தமிழ் இலக்கியங்களின் படிப் பார்த்தால் நம் கருத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

  கண்ணன் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தோன்றிய அவதாரம் என்றும் முருகன் யுகங்களுக்கு முன்னால் இருந்த கடவுள் என்றும் சொல்லும் புராணங்களை நம்பினாலும் தமிழ் இலக்கியம் படித்தால் குழல் எந்தக் கடவுளுக்குரியது என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

  சரி. எது எப்படியும் இருக்கட்டும். தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்து என்ன என்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் குழலையும் தாண்டி சில வியப்பான தகவல்களைப் பார்க்கப் போகிறோம்.

  சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் முதலாவதாக வைக்கப்பட்ட நூல் திருமுருகாற்றுப்படை. தமிழில் இன்றிருக்கும் சமய இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தியது. மூத்தது. முத்தமிழ் முதல்வனான முருகனைப் பாடுவது.

  முருகக் கடவுள் குன்றுதோறும் ஆடும் இயல்பைப் பாடும் பொழுது முருகனுக்கும் குழலுக்கும் உள்ள தொடர்பை நக்கீரர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

  குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,
  தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்
  கொடியன், நெடியன், தொடி அணி தோளன்
  நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,
  குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்
  மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,
  முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி,
  மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,
  குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று

  மேலே குறிப்பிட்ட வரிகளை பக்தி நெறியோடும் புரிந்து கொள்ளலாம். தகவல் அறியும் ஆர்வத்தோடும் அணுகலாம். நாம் பக்தியை சற்று ஒதுக்கி வைத்து விட்டு வியத்தகு தகவல்களில் ஆழலாம்.

  அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக நக்கீரர் குறிப்பிட்டிருப்பது குன்றுதோறாடல். இன்றைக்கு திருத்தணி ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடப் பட்டாலும் உலகில் இருக்கும் குன்றுகளையெல்லாம் ஐந்தாம்படை வீடாகக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

  அப்படி குன்று தோறும் இருக்கும் முருகனின் இயல்புகளை விளக்கும் வரிகளில் ஒளிந்திருக்கிறது தமிழர்களின் இசையறிவு.

  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய வரி “குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்”.

  குழலன் – குழல் வைத்துக் கொண்டிருப்பவன் என்று பொருள் அல்ல. குழல் ஊதுவதில் மிகச் சிறந்தவன் என்று பொருள். அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.

  கோட்டன் – இதற்கு இரண்டு பொருள் விளக்கங்களைக் கண்டேன். கோடு என்பது கொம்பினைக் குறிக்கும். ஊதுகொம்பினை எக்காளம் என்றும் அழைப்பார்கள். அந்த இசைக்கருவியில் சிறந்தவன் முருகன். இன்னொரு பொருளாக கோட்டு வாத்தியம் என்னும் நரம்பிசைக் கருவியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பெயர் சங்ககாலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

  குறும் பல்லியத்தன் – இதுதான் மிகமிகக் கவனமாக புரிந்து கொள்ள வேண்டிய சொல்.

  பல்லியம் = பல் + இயம். பலவிதமான இசைக்கருவிகளைக் கொண்டு இசை அமைப்பவன்.
  அதாவது Orchestration என்று சொல்லப்படும் இசைக்கோர்ப்பு.

  அதாவது முருகன் ஒரு இசையமைப்பாளன். மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்பதையெல்லாம் தாண்டி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் இசைக்கடவுள். இசை தொடங்குவதும் வளர்வதும் அடங்குவதும் முருகனிடத்தில். அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்.

  Orchestra என்ற சொல்லோ கருத்தோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்குலக நாடுகளில் இருந்திருக்குமா என்பதே ஐயம். அந்த நிலையில் பல்லியம் என்ற சொல் சங்கத்தமிழில் இடம் பெற்றிருப்பது தமிழிசை அந்தக் காலத்தில் செழித்திருந்ததையே காட்டுகிறது.

  பல்லியத்திலும் இரண்டு வகை உண்டு. குறும் பல்லியம். நெடும் பல்லியம். இவை பல்லியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படுகின்றவை.

  சரி. இசைக்கருவிகளை வைத்து இசையமைத்து விட்டார் முருகன். அவரே பாடியும் விடுவார். ஆனால் Chorus வேண்டாமா? பின்னணியில் பலகுரல்கள் கூடியெழுந்து முன்னணியில் பாடுவதைச் செறிவாக்க வேண்டாமா?

  அதற்குதான் இருக்கிறார்கள் ”நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு”. யாழ் முதலான இனிய நரம்பிசைக் கருவிகளைப் போன்ற இன்னொலி கொண்ட பாடகர்கள் முருகனோடு இருக்கிறார்கள். முருகன் இசையமைக்கும் போது அவர்களும் கூடிப் பாடுகின்றவர்கள்.

  ஆக உலகின் முதல் குழலன் மட்டுமல்ல… முதல் இசையமைப்பாளரும் முருகனே!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – காற்றினிலே வரும் கீதம்
  பாடியவர் – வாணி ஜெயராம்
  வரிகள் – வாலி
  இசை – ரவீந்திரன்
  படம் – ஒரு ரசிகன் ஒரு ரசிகை
  பாடலின் சுட்டி – http://youtu.be/_RQY4hgiYd0

  பாடல் – குழலூதும் கண்ணனுக்கு
  பாடியவர் – கே.எஸ்.சித்ரா
  வரிகள் – வாலி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
  படம் – மெல்லத் திறந்தது கதவு
  பாடலின் சுட்டி – http://youtu.be/dfOuTx66bJU

  அன்புடன்,
  ஜிரா

  212/365

   
  • Sudharsan (@vSudhar) 12:53 pm on July 1, 2013 Permalink | Reply

   //ஆனால் ”குழலூதும் கண்ணனுக்கு” என்ற பாடலுக்கு மெட்டமைத்தது இளையராஜா // Otherway to know this is, Cheeni Cum, this song is used by IR, obviously his tune.

   எங்க ஆரம்பிச்சாலும் முருகன்ட்ட வந்து முடிசிடுறீங்க 🙂

  • rajnirams 10:22 pm on July 1, 2013 Permalink | Reply

   அருமை.குழல் என்றாலே கண்ணன் என்று தான் எல்லோருமே நினைப்பார்கள்.நக்கீரரின் பாடல் மூலம் குழலன்-முருகனின் பெருமையை உணர்த்தியிருக்கிறீர்கள்.

  • amas32 8:06 pm on July 4, 2013 Permalink | Reply

   //அழகு நிறைந்தவனை அழகன் என்பது போல குழல் ஊதுகின்றதில் சிறந்தவனைக் குழலன் என்பது வழக்கம்.// சூப்பர்!

   //அதனால்தான் முருகனை இசைத்தெய்வமாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்// தமிழ் தெய்வமான முருகன் இசை தெய்வமாகவும் இருப்பது நாம் பெற்ற பேரு! முருகன் இசைக்கும் பல்லியத்துக்கு மயில்கள் ஆடும். அவர் இசைக்கும் இசைக்கு ஆடாத மனமும் உண்டோ?

   amas32

 • mokrish 12:19 pm on June 9, 2013 Permalink | Reply  

  காற்றில் வரும் கீதமே 

  அந்தி மஞ்சள் மாலை அல்லது இரவு நேரம். தனிமையில் ஒரு பெண். தூரத்திலிருந்து கேட்கும் புல்லாங்குழல் இசை. இதுதான் காட்சி. ஒரு பெண்ணின் மனதில் காற்றில் மிதந்து வரும் இந்த இசை என்னென்ன  பாதிப்புகளை ஏற்படுத்தும்?

  முதலில் பிரிவின் சோகத்தில் இருக்கும் ஒரு பெண். அவள் எதையும் ரசிக்கும் மன நிலையில் இல்லை. அவளுக்கு இந்த இசை இன்பத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற அவளை  அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது.

  சிறு குழல் ஓசை, செறிதோடி! வேல் கொண்டு

  எறிவது போலும் எனக்கு

  அந்த இசை இனிமையானதுதான். ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கின்ற என்னை அந்தக் குழல் ஓசை மிகவும் துன்புறுத்துகிறது. யாரோ வேலால் என்னைத் தாக்குவதுபோல் துயரம் தருகிறது என்று அவள் வருந்துகிறாள். (நூல்: ஐந்திணை ஐம்பது பாடியவர்: மாறன் பொறையனார் http://365paa.wordpress.com/2012/02/08/217/)

  இன்னொரு பெண் காதலனை நினைத்து அந்த குழலிசையில் மயங்கிய நிலையில் இருக்கிறாள். ஸ்ரீ கிருஷ்ணகானம் ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் எழுதிய அலைபாயுதே கண்ணா என்ற பாடலில்  http://www.youtube.com/watch?v=2OTM3yXVvk8 அவள் அலைபாயும்  நிலை சொல்லுகிறார்

  அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே

  உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் அலைபாயுதே

  இவளும் மாலை என்னை வாட்டுது என்பதை தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே என்று பாடுகிறாள். அவன் இல்லாவிட்டாலும் இந்த இசை அவளுக்கு ஒருவித மயக்கம் கொடுக்கிறது. இது நியாயமா என்று உரிமையுடன் கேட்கிறாள்

  கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே

  கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே

  அடுத்து பெண். மிகுந்த சோகத்தில் இருக்கிறாள். பிரிவின் கொடுமை தாளாமல் அவள் இருக்கும்போது கேட்கும் குழலிசைப்பற்றி அவள் என்ன சொல்கிறாள்? இந்த இசைதான் என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். அலைபாயுதே படத்தில் வைரமுத்து எழுதிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடலில் (இசை ஏ ஆர் ரஹ்மான் பாடியவர் ஸ்வர்ணலதா). https://www.youtube.com/watch?v=yzIenDQdtVc

  எவனோ ஒருவன் வாசிக்கிறான்…

  இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

  தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

  அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

  ஸ்ரீ வெங்கடக கவி  கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே என்றால் வைரமுத்து கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன் என்கிறார். அவர் நிலவு சுடுகிறது என்றால் இவர் இரக்கம் இல்லாத இரவு  உறக்கம் இல்லாத இரவைப்பற்றி சொல்கிறார்.

  உறக்கம் இல்லா முன்னிரவில்

  என் உள் மனதில் ஒரு மாறுதலா

  இரக்கம் இல்லா இரவுகளில்

  இது எவனோ அனுப்பும் ஆறுதலா

  குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன? அவர்கள் படத்தில் இப்படியோர் தாலாட்டு பாடவா (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் எஸ் ஜானகி ) என்ற பாடலில்https://www.youtube.com/watch?v=-5vHqIKMCpg  அவர் சொல்வதைப்பாருங்கள். அவள் கண்ணனை நினைத்தாள் ஏதோ தலையெழுத்து மன்னனை மணந்தாள். ஆனால் கண்ணன் நினைவு அந்த குழலோசையாக அவளை தொடர்கிறது. கடைசி வரியில் சட்டென்று அவளின் யதார்த்த நிலை – அந்த குழலோசையை தன குழந்தைக்கு தாலாட்டாக்குகிறாள்

  கண்ணனவன் கையினிலே குழலிருந்தது அந்தக்

  கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது

  இன்றுவரை அந்த குழல் பாடுகின்றது அந்த

  இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது

   ஸ்ரீ வெங்கடக கவி இன்னொரு பாடலில் குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி சகியே என்றும் சொல்கிறார் http://mp3take.com/download/24266acbf25b7e07/06-kuzhaloothi-manamellam-www-punchapaadam-com-mp3/

  அதே குழல் இசை. பெண்ணின் context ஐ பொருத்து என்னென்ன பாதிப்புகள் ? ஒரு பெண் வேலால் தாக்குவது போல் இருக்கிறது என்கிறாள். இன்னொரு பெண் கண்கள் சொருகி மயங்குகிறாள். வேறொரு பெண் இதுவே எனக்கு / என் சோகத்துக்கு மருந்து என்கிறாள். ஒரு பெண் தன்  குழந்தையை தாலாட்டுகிறாள். இன்னொரு பெண் இந்த இசை இருந்தால் போதும் எனக்கு குறை ஒன்றும் இல்லை என்கிறாள். வெவ்வேறு பார்வைகள்.

  மோகனகிருஷ்ணன்

  190/365

   
  • Jeyakumar 12:40 pm on June 9, 2013 Permalink | Reply

   நல்ல தொகுப்பு.. காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ.. பாடல் எப்பொதைக்குமான எனது ஃபேவரிட்..

  • Kannabiran Ravi Shankar (KRS) 2:19 pm on June 9, 2013 Permalink | Reply

   //குழல் என்றாலே கண்ணன்தான். கண்ணதாசன் கற்பனை என்ன?//

   கண்ணன் என்றாலே ஆண்டாள் தான்? ஆண்டாள் கற்பனை என்ன?:))
   ——–

   குழலை எத்தனையோ பேரு பாடி இருக்காங்க!
   -புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே
   -அலை பாயுதே…. வேணு கானமதில்… அலை பாயுதே
   -குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்…

   -குழல் இனிது யாழ் இனிது என்ப (திருக்குறள்)
   -அவன் வாயில், தீங்குழல் கேளோமோ தோழி? (சிலம்பு)
   ——–

   கண்ணனுக்கு மட்டும் தான் குழலா?
   அட, முருகனே குழல் வாசிச்சானாம்…

   நக்கீரர் பாடுவாரு; குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
   ஆனா குழல் மட்டுமே வாசிக்கலை; முழவு, பல்லியம், Drums, Trumpet – இதெல்லாம் கூட முருகன் வாசிச்சானாம்:)

   முல்லை நிலத்து ஆயர்களின் இசைக்கருவி! அதனால் கண்ணனுக்கு மட்டும் சிறப்பாய் ஆகி வந்தது;
   *குழல் = இயற்கை
   *யாழ் = செயற்கை

   காட்டு மூங்கிலில், வண்டு துளையிட, காற்று அடிச்சி, இயற்கையாய் எழுந்த இசை;
   அதான் குழல் இனிது -ன்னு குழலை முதலில் சொன்னாரு வள்ளுவர்!
   ——–

   //வெவ்வேறு பார்வைகள்//

   Yes! குழல் இசையால் = ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பார்வை:)
   ஆண்டாளின் பார்வை என்னவோ???

   Too shocking, இம்புட்டு பாடின ஆண்டாள், குழல்-“இசையை” மட்டும் ஏனோ பாடவே இல்ல:)

   • Kannabiran Ravi Shankar (KRS) 2:27 pm on June 9, 2013 Permalink | Reply

    “குழல்” -ன்னா, கூந்தல் -ன்னும் இன்னோரு பொருள் இருக்கு!

    *வாச நறுங் “குழல்” ஆய்ச்சியர் மத்தினால்
    *கொத்தலர் பூங் “குழல்” நப்பின்னை கொங்கை மேல்

    -ன்னு, குழல்-கூந்தலைப் பாடுற ஆண்டாள், குழல்-இசையைப் பற்றி மட்டும் வாயைத் தொறக்கவே மாட்டேங்குறா; ஏனாம்?:)

    போடீ, நீ பாடலீன்னா என்ன?
    ஒனக்குப் பின்னால் வந்த மீரா பாடிட்டுப் போறா; என்ன, அது இந்திக் கவிதை!
    அப்போ தமிழில்??

   • anonymous 2:56 pm on June 9, 2013 Permalink | Reply

    குழல் “இசையை”த் தான் பாடலையே தவிர…
    குழல் “Romance” ஐ பாடுறா, இந்தப் பொண்ணு – That too openly – Dirty Girl:)))

    இவளுக்கு, அவனையே நினைச்சி நினைச்சி, dehydration வந்துருச்சாம்!
    என்ன சொல்லுறா தெரியுமா?

    அவன் ஊதின “குழலில் உள்ள எச்சிலை”, இவ முகம்/ உடம்பில் எல்லாம் பூசச் சொல்லுறா;
    வறண்ட போன தேகம், வளர்ச்சி அடைஞ்சீருமாம்… ச்ச்சீய்ய்ய்:)

    ***நெடு மால் ஊதி வருகின்ற
    குழலின் தொளை வாய் நீர் கொண்டு
    குளிர முகத்துத் தடவீரே***

    அமுத வாயில் ஊறிய,
    குழல் நீர் கொணர்ந்து புலராமே
    பருக்கி இளைப்பை நீக்கீரே
    —–

    அது மட்டுமா?
    அவன் உள்ளாடை கொண்டாந்து, இவளுக்கு வீசினா, அவன் மணமே இவளுக்குத் துளசீ மணமாம்:)

    காரேறு உழக்க உழக்குண்டு (Search for yourself, the meaning of this; me too vekkam:))
    —–

    இந்தக் குழல் பாசுரமே = அவளோட last romance song
    அதுக்கு அப்பறம், அவனைப் பிரியாம வாழுறது எப்படி? -ன்னு, அடுத்த பத்தியில் சொல்லிட்டு…. She stops abruptly!

    ****மருந்தாம் என்று தம் மனத்தே
    வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
    அவனைப் – பிரியாது என்றும் இருப்பார்களே!
    அவனைப் – பிரியாது என்றும் இருப்பார்களே!****

    After this…
    செத்துப் போனாளா? “அரங்கனோடு” கலந்தாளா?
    “அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்தே வீழ்ந்தாளா??? dunno! end of kothai – kuzhal;

    • Maharajan 8:46 pm on January 6, 2020 Permalink

     செத்துப் போனாளா? “அரங்கனோடு” கலந்தாளா?
     “அவனே” -ன்னு கற்பனையா வாழ்ந்தே வீழ்ந்தாளா??? dunno! end of kothai – kuzhal;
     Both are the same
     wow what an Excellent explanation
     Unbelievable tamil taste and knowledge.
     Long live with Tamil

 • G.Ra ஜிரா 10:23 am on May 25, 2013 Permalink | Reply
  Tags: நற்றிணை   

  ’வேலன்’டைன்ஸ்’ ஸ்பெஷல் 

  வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
  புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
  சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு – தினமும்
  சொல்லித் தந்த சிந்து பாடினான்
  வள்ளி இன்ப வல்லி என்று முல்லைச்சரம் கொண்டு சூடினான்
  பாடியவர்கள் – இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி
  பாடல் – கவிஞர் வாலி
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – தெய்வவாக்கு
  பாடலின் சுட்டி – http://youtu.be/10PSPLEH1D0

  முதலில் நான் கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் தெரியுமா? இலக்கியத்திலும் வாழ்வியலிலும் மறைந்து போன ஒரு பழந்தமிழ் வழக்கத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்தமைக்கு.

  திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கண்ணனை உயர்வு செய்து எழுதி பலபாடல்கள் நிறைய உள்ளன. அவை கால மாற்றத்தையும் மக்களின் நம்பிக்கையில் உண்டான மாற்றங்களையும் காட்டுகின்றன. மாற்றங்கள் என்றால் அவை குறைகள் என்று பொருள் அல்ல. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறின என்று செய்தியாகச் சொல்வது போலத்தான்.

  சரி. எதிலிருந்து மாறியது? சங்க நூல்களை எடுத்துப் பார்த்தால் காதல் என்று வந்தாலே முருகனும் வள்ளியும் தான். அகத்திணை நூல்கள் அத்தனையையும் எடுத்துப் புரட்டிப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.

  குறுந்தொகை, நற்றிணை என்று பெரிதாகப் பட்டியல் போடலாம். அதனால்தான் சங்க இலக்கியங்கள் என்று பொதுவாகவே குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்கள் என்ன…. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரத்திலும் அப்படித்தான்.

  கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. அதற்காக கோவலனை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். அப்போது புகார் நகரத்துக் கன்னிப் பெண்களெல்லாம் கோவலனைப் பார்க்கிறார்கள். அவன் அழகை ரசிக்கிறார்கள். “அட… பாத்தியா.. என்ன அழகா இருக்கான். அப்படியே முருகன் போல முறுக்கிக்கிட்டு இருக்கானே… காதலிச்சா இப்பிடி ஒருத்தனைக் காதலிக்கணும்.” என்று புகழ்கிறார்கள்.

  கண்டு ஏத்தும் செவ்வேள்” என்று இசை போக்கி காதலால்
  கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ
  நூல் – சிலப்பதிகாரம்
  காண்டம் – புகார்க்காண்டம் (மங்கல வாழ்த்துப் பாடல்)
  இயற்றியவர் – இளங்கோவடிகள்

  பொண்ணு பாத்தா மகாலட்சுமி மாதிரி இருக்கா” என்று சொல்வது போல பையனைச் சொல்லும் போது முருகனை ஒப்பிட்டுச் சொல்லும் வழக்கம் தமிழரின் பழைய வழக்கம். அதுதான் சங்கத்தமிழ் முழுக்க விரவிக்கிடக்கிறது. எல்லா எடுத்துக் காட்டுகளையும் நான் குறித்து வைத்திருந்தாலும் ஒன்றேயொன்றை மட்டும் இங்கு பார்க்கலாம். கிட்டத்தட்ட இன்றைய திரைப்படங்களில் வருகின்ற காட்சியைப் போலத்தான் அந்த நற்றிணைக்காட்சி.

  காதலில் தவிக்கிறாள் காதலி. காதலனோ சிறுகுடியன். அவனும் காதலில் குதித்துவிட்டு தப்பிக்க முடியாமல் தவிப்பவன். நேரம் பார்த்து இடம் பார்த்து கூடிக் கழிக்கும் இன்பம் அவர்களுக்கு வாய்த்தது. அப்போது அவன் அவளிடம் கேட்கிறான். “பெண்ணே.. மூங்கில் போன்ற தோள் அழகே… கொடியழகி வள்ளியம்மை முருகப் பெருமானோடு கிளம்பிச் சென்றது போல என்னோடு வந்து என்னுடைய சிறுகுடியில் வாழ்வாயா?

  என்ன திரைப்பட வசனம் போலத்தானே இருக்கிறது? சரி.. அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.

  வேய்வனப்பு உற்ற தோளை நீயே
  என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி
  முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல
  செய்யுள் – நோயும் நெகிழ்ச்சியும் என்று தொடங்கும் பாடல்
  பாடல் எண் – 82
  பாடியவர் – அம்மூவனார்
  திணை – குறிஞ்சி

  இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் கவிஞர் வாலிக்கு நன்றி சொன்னேன் என்று. இந்த ஒரு பாட்டில் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களிலும் வாலி முருகன் – வள்ளி காதலை எழுதியிருக்கிறார்.

  செல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
  வள்ளியை இன்ப வல்லியை குன்றம் ஏறிக் கொண்டவன்
  படம் – பெண் ஜென்மம்
  இசை – இளையராஜா
  பாடியவர்கள் – பி.சுசீலா, ஏசுதாஸ்
  பாடலின் சுட்டி – http://youtu.be/BGevMUI6t0A

  அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
  அவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்
  ………….
  பன்னிரண்டு கண்ணழகை பார்த்து நின்ற பெண்ணழகை
  ஐயன் தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
  படம் – பஞ்சவர்ணக்கிளி
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடலின் சுட்டி – http://youtu.be/9a0rNJBS594

  சரி. இது போல முருகனை முன்னிறுத்திய காதல் பாடல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.

  அன்புடன்,
  ஜிரா

  175/365

   
  • ajayb17 10:44 am on May 25, 2013 Permalink | Reply

   ’வேலன்’டைன்ஸ்’ … தலைப்பு செம 🙂

   • GiRa ஜிரா 12:40 pm on May 26, 2013 Permalink | Reply

    தலைப்புகள் எல்லாம் நாகாவின் கைவண்ணம். 🙂

  • Uma Chelvan 6:59 pm on May 25, 2013 Permalink | Reply

   மானோடும் பாதை இலே ( கவி குயில் ) GIRA இந்த பாட்டு உங்ககிட்ட இருந்தால் u-tube li upload பண்ணுங்களேன் . Please !!

   • GiRa ஜிரா 12:44 pm on May 26, 2013 Permalink | Reply

    மானோடும் பாதையிலே பாட்டு யூடியூபில் இருக்கே. இதோ கேளுங்க http://youtu.be/Xp20Hs1c2HQ

  • Uma Chelvan 7:37 pm on May 26, 2013 Permalink | Reply

   Thanks, I didn’t know that.

  • amas32 9:53 pm on May 26, 2013 Permalink | Reply

   என் முருகனைப் பற்றிய பதிவு அனைத்துக்கும் உங்களுக்கு நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்கள் உண்டு 🙂 அருமையான பதிவு, நன்றி 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel