Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 7:41 am on November 20, 2013 Permalink | Reply  

  எங்கே அவன் என்றே மனம் 

  சுஜாதாவின் ‘401 காதல் கவிதைகள்’ குறுந்தொகை பாடல்களுக்கு ஒரு அட்டகாசமான அறிமுகம். முன்னுரையில் சில salient features சொல்கிறார். எல்லாப் பாடல்களிலும் ஒரு uniformity  இருக்கும், ஒரு நல்ல உவமை இருக்கும். தலைவன்-தலைவி, அன்னை-செவிலி, தோழன்-தோழி என்று அகத்துறை சார்ந்த கதாபாத்திரங்களிடையே நடைபெறும் சரளமான உரையாடல்கள் அல்லது dramatic monologues இருக்கும். எல்லாப் பாடல்களுக்கும் பொதுவான subject  காதல் உணர்ச்சிகள், ரகசியமாகச் சந்தித்தல், காதலை அறிவித்தல், கூடுதல், பிரிதல், காத்திருத்தல் பதற்றமடைதல் பிரிவாற்றாமை, இன்னொருத்தியால் வருத்தம் போன்ற அகத்துறை உணர்சிகளே என்ற பட்டியலில்  ஒரு framework சொல்கிறார். இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் திரைப்பாடல்களும் குறுந்தொகையிலிருந்து  பிறந்தவை என்கிறார்.

  காலங்களில் அவள் வசந்தம் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலில் (இசை விஜயபாஸ்கர் பாடியவர் வாணி ஜெயராம்) குறுந்தொகை வாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.  

  http://www.inbaminge.com/t/k/Kalangalil%20Aval%20Vasantham/Paadum%20Vande.eng.html

  பாடும் வண்டே பார்த்ததுண்டா
  மாலை அணிந்த என் மாப்பிள்ளை
  ஏண்டி தோழி என்ன செய்தாய்
  எங்கு மறைத்தாய்
  கண்ணன் எங்கே எங்கே எங்கே

  முதல் வரியில் தலைவன் எங்கே என்று தேடும் தலைவி. தொடர்ந்து ஒரு ‘அந்த நாள் ஞாபகம்’ flashback. அதன் பின் காத்திருத்தல் பற்றி சில வரிகள்

  வாரி முடிக்க மலர்கள் கொடுத்தார்
  வண்ணச்சேலை வாங்கி கொடுத்தார்
  கோலம் திருத்தி காத்துக் கிடந்தேன்
  கோவில் வழியைப் பார்த்துக்கிடந்தேன்
  ஊர்வலம் எங்கே உறவுகள் எங்கே
  உண்மை சொல்வாயடி எந்தன்

  எந்தன் கண்ணாளன்
  வந்தார் இங்கே எங்கே எங்கே

  அடுத்த வரிகளில் பிரிவினால் வந்த ஏக்கம் சொல்கிறாள். தூங்கவேயில்லை என்று சொல்கிறாள்  ‘அவரின்றி கூவுது ஆயிரம் கோழி’ என்று  பிரிவுக்காலம் சொல்கிறாள்.

  ஏங்கிய நாட்கள் நூறடி தோழி
  தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
  ஆலயம் பாடுது ஆனந்தம் வாழி
  அவரின்றி கூவுது ஆயிரம் கோழி
  கண்ணிலும் பார்த்தேன் கனவிலும் பார்த்தேன்
  இன்று வந்தானடி

  எந்தன் கண்ணாளன்
  வந்தார் இங்கே எங்கே எங்கே

  வண்டு, தோழி என்று கூப்பிடுவது போல இருந்தாலும், இது தலைவி தனிமையில் புலம்பியதுதான். பிரிவு பற்றிய பாடல்தான். கவிஞர் ஏன் உவமை எதுவும் வைக்கவில்லை என்று தெரியவில்லை.

  மோகனகிருஷ்ணன்

  352/365

   
  • Uma Chelvan 10:26 am on November 20, 2013 Permalink | Reply

   எங்கே அவன் என்றே மனம் ………என்ற தலைப்பு .காலங்கள் மாறி காட்சிகளும் மாறி விட்டது அல்லது வேகமாக மாறி கொண்டு இருக்கிறது என்பதற்கு நல்ல சாட்சி .சமீபத்திய New Tanishq Advertisement போல்——-

   அவனை கண்டால் வரச் சொல்லடி
   அன்றைக்கு தந்ததை தரச் சொல்லடி
   தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி
   தனியே நிற்பேன் எனச் சொல்லடி

   இருவல்லவர்கள் என்ற இந்தப்படம் 1966 வெளிவந்து உள்ளது. அப்பவே ” நான் தனியே நிற்பேன் வரச் சொல்லடி “னு ரொம்ப தைரியம்மாய் பாடி இருக்காங்க.!! Just look at Manoramma’s expression for that particular lines. She is in total shock. :))

  • amas32 9:30 pm on November 20, 2013 Permalink | Reply

   இது முழுக்க முழுக்க ஏக்கப் பாட்டு. காதலனைக் காண ஏங்கி நிற்கிறாள் காதலி. உவமைகள் இல்லாமலேயே அருமையாக உணர்வுகள் வரிகளில் வெளிப்படுகின்றன. தலைவி எங்கும் பொது தோழி இல்லாமல் முடிவதில்லை 🙂

   amas32

   • Uma Chelvan 12:15 am on November 21, 2013 Permalink | Reply

    நானும் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை. I really appreciate her courage. ஒரு smiley போட்டு இருந்து இருக்கணுமோ ?

 • என். சொக்கன் 11:19 pm on August 3, 2013 Permalink | Reply  

  விருந்தினர் பதிவு : உறங்காத நொச்சி 

  ’கடல்’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ‘ பாடலில் ஒரு வரி:

  பட்சி ஒறங்கிருச்சு,

  பால் தயிரா தூங்கிருச்சு,

  நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு!

  அதென்ன ‘நொச்சி மரத்து இலை? வேறு மரங்கள் ஆகாதா?

  இதற்கான விடை ‘குறுந்தொகை’யில் உள்ளது. கொல்லன் அழிசி எழுதிய இந்தப் பாடலைப் பாருங்கள்:

  கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
  எம் இல் அயலது ஏழில் உம்பர்
  மயிலடி இலைய மா குரல் நொச்சி
  அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
  மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

  ‘ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலையில, மயிலுடைய கால்களைப்போல இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்’ என்று தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள்.

  ஆனால் இந்தத் தலைவியைப் பொறுத்தவரை, ‘அந்த நொச்சியும் தூங்கிடுச்சு’ என்கிறார் வைரமுத்து. என்னவோர் அழகு!

  சுதர்ஷன்

  https://twitter.com/SSudha_

   
  • amas32 8:12 am on August 4, 2013 Permalink | Reply

   என்னவொரு அழகு! ஆனால் இந்த விவரம் அறிந்தவர்கள் தான் இதை இரசிக்க முடியும் இல்லையா? 🙂 நல்ல பதிவு.

   amas32

  • Saba-Thambi 6:54 pm on August 4, 2013 Permalink | Reply

   அழகான பாடல், அருமையான பதிவு.

 • என். சொக்கன் 10:34 am on May 5, 2013 Permalink | Reply  

  இலக்கிய வாசம் 

  • படம்: சிவா
  • பாடல்: அடி வான்மதி
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=_NdoyW1CG1A

  கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய்,

  வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்!

  கண்கள் நாலும் பேசும் நேரம்,

  நானும் நீயும் ஊமை ஆனோம்!

  புலவர் புலமைப்பித்தனின் பாடல்களில் எப்போதும் இலக்கிய வாசனை இருக்கும், ஆனால் அது துருத்திக்கொண்டு தெரியாமல் மிக இயல்பாகச் சேர்த்திருப்பார்.

  உதாரணமாக, இந்தக் காதல் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள், மேலோட்டமாகப் பார்த்தால் மீட்டருக்கு எழுதப்பட்ட வரிகளைப்போலதான் தெரியும். ஆனால் கொஞ்சம் ஆழச் சென்று பார்த்தால், திகைப்பு தோன்றும்.

  முதல் இரு வரிகளை எடுத்துக்கொள்வோம் : கோடையின்போது என் உடலின்மீது ஜில் காற்றாக வீசிக் குளிர்ச்சி தருகிறவள் நீ, சில மாதங்கள் கழித்துக் குளிர் தொடங்கியபிறகு, நீயே எனக்குப் போர்வையாகிவிடுகிறாய், அதாவது, முன்பு குளிரைத் தந்த நீயே, இப்போது வெம்மையும் தருகிறாய்.

  இப்போது, ’மன்னுயிர் அறியா’ எனத் தொடங்கும் ஒரு குறுந்தொகைப் பாட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி:

  வேனிலானே தண்ணியள், பனியே

  … சிறு வெம்மையளே!

  மிகப் பழைய பாடல் என்றாலும், அர்த்தம் தெளிவாகப் புரியும் : என் காதலி வெயில் பொழுதில் எனக்குக் குளிர்ச்சி தருகிறாள், அதே காதலி பனியின்போது வெம்மை தருகிறாள்.

  இப்போது, புலமைப்பித்தன் பாடலின் அடுத்த இரண்டு வரிகளை எடுத்துக்கொள்வோம்: காதலர்களின் கண்கள் நான்கும் பேசிக்கொள்ளும்போது, அவர்கள் இருவரும் ஊமை ஆகிவிடுகிறார்கள், அதாவது, வாய் இருந்தும், பேச முடிந்தும், அதனால் பயன் ஏதும் இல்லை.

  இதற்கு இணையான திருக்குறள் வரிகள் எல்லாருக்கும் தெரியும்:

  கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள்

  என்ன பலனும் இல

  நாலே வரி, முற்பாதியில் குறுந்தொகை, அடுத்த பாதியில் திருக்குறள், ஆனால் பாட்டைக் கேட்கிற யாருக்கும் இது வலிய ‘நுழைக்கப்பட்டிருப்பதாக’த் தெரியாது. இது புலமைப்பித்தனின் சாதுர்யம்மட்டுமல்ல, என்றைக்கும் பொருந்தக்கூடிய உவமைகளை, சிந்தனைகளை எழுதிக் குவித்த நம் முன்னோர்களின் பெருமையும்தான்!

  ***

  என். சொக்கன் …

  05 05 2013

  155/365

   
  • rajnirams 12:16 pm on May 5, 2013 Permalink | Reply

   அருமை.இவை குறுந்தொகை வரிகளா? திருப்பம் படத்திலும் புலமைப்பித்தன் உன்னை நினைந்து பாடுவேன் பாடலில் “கோடையிலும் மார்கழி கொண்டு வரும் தேவி நீ”என்று எழுதியிருப்பார்.புதுக்கவிதையிலும் வைரமுத்து “நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி”என்று எழுதியிருப்பார். நன்றி.

  • Arun rajendran 1:29 pm on May 5, 2013 Permalink | Reply

   இந்த உவமைக்கு /உருவகம் ஒடனே நியாபகப்படுத்துற பாட்டுகள் (எல்லாம் மனப்பாட செய்யுள் போல உருப்போட்டப் பாட்டுகள் :-))

   சிகப்பு ரோஜாக்கள் -> வாலி -> நினைவோ ஒரு பறவை ->பனிகாலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

   பூவெல்லாம் கேட்டுப் பார் ->பழனிபாரதி-> சேனொரிட்டா->முன்பு வெயில் காலத்தில் நான் நிழல் தேடினேன்

   நண்றிகள் சொக்கன் சார்..

  • anonymous 5:30 pm on May 5, 2013 Permalink | Reply

   பாட்டில் வரும் கோடை/வாடை சொற்செட்டு அழகு!

   கொண்டல் = கிழக்கில் வீசும் காற்று; கோடை = மேற்கு
   தென்றல் = தெற்கு, வாடை = வடக்கு

   கொண்டல், தென்றல் = இனிமையானவை; (மென் காற்று)
   கோடை, வாடை = கடுமையானவை; (வெப்பம்/குளிர்)

   சினிமாவில் நாலுமே வந்திருக்கா?
   =”கோடைக்” காலக் காற்றே, குளிர்த் “தென்றல்” பாடும் பாட்டே
   =ஆசையைக் காத்துல தூது விட்டு, ஆடிய பூவுல “வாடை” பட்டு,
   =கொண்டல்?? அடடா, சரியாத் தெரியலையே:)

  • anonymous 6:36 pm on May 5, 2013 Permalink | Reply

   //கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய்,
   வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்//

   இதே போல், புன்னகை மன்னன் படத்திலும் வரும்…

   *புலமைப்பித்தன் பாட்டு = ஆண், பெண்ணுக்கு ஏங்கிப் பாடுவது
   பெண்ணுக்கு மட்டும் ஏக்கம் இல்லீயா என்ன?
   *புன்னகை மன்னன் பாட்டு = பெண், ஆணுக்கு ஏங்கிப் பாடுவது

   “நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
   உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்”

   (ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்; உன் கையில் என்னைக் கொடுத்தேன் -ன்னு வைரமுத்து எழுதிச், சித்ரா பாடுவாங்க)
   —–

   இப்படிக் குளிரும்/ வெப்பமும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா?

   அதுக்கு நீங்க குடுத்த குறுந்தொகை தான் Top Class பாடல்;
   வேனிலானே தண்ணியள்,
   பனியே.. சிறு வெம்மையளே!

   மோசிகீரனார் பாட்டுல அம்புட்டு உவமை அழகு!
   அதனால் முழுப் பாட்டையும் சொல்ல, அனுமதி தாருங்கள்;

   கோடைக் காலத்தில் = சில்லு-ன்னு சந்தன மரமாம்
   குளிர்க் காலத்தில் = சூடான தாமரைப் பூவாம்; தாமரை எப்படிச் சூடு???
   —–

   • anonymous 6:54 pm on May 5, 2013 Permalink | Reply

    (ரெண்டு ரென்டு வரியாத் தான் காபி உறிஞ்ச முடியும்)

    ***மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில்
    சூருடை அடுக்கத்து..

    =மக்கள் அதிகம் போகாத பொதிகை மலைக் காட்டுக்குள்ள
    சூர் (துன்பம்) தீர்க்கும் முருகன் இருக்கும் காட்டுக்குள்ள…

    ***ஆரங் கடுப்ப, வேனிலானே தண்ணியள்;

    =கோடைக் காலத்தில் (வேனில்), சந்தன மரம் போலச், “சில்ல்ல்ல்”-ன்னு இருக்குறாளே
    (சந்தனம் குளிர்ச்சி தானே)

    ***பனியே வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பியை

    =தாமரைப் பூ மெத்து-ன்னு இருக்கும், நீரில் இருப்பதால் சில்ல்ல்ல்-ன்னு தான் இருக்கும்
    ஆனா, பனிக் காலத்தில், அவ தாமரை போலச் சூடா இருக்காளாம்! எப்படிய்யா இது???
    ——-

    ***அலங்கு வெயில் பொதிந்த தாமரை
    உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே

    தாமரை, சூரியனுக்காகவே வாழுது;
    பகல் முழுக்க, அவன் இளஞ் சூட்டைத் தன்னுள் தேக்கி வச்சிக்குது; மாலையில் கூம்பி விடுகிறது;

    இப்போ இரவும் வந்துருச்சி; குளத்தில்… ஒரே குளிரு…
    ஆனா தாமரைக்குள்??? = இளஞ் சூடு (சிறு வெம்மையளே)
    Solar Charger போல, கூம்பிய தாமரை:))

    நெறைய சூடு இல்ல; இளஞ் சூடு = “சிறு” வெம்மையளே!
    இப்படிச் சந்தனமும், தாமரைச் சூடுமா = எனக்குக் குளிர்ச்சியும், வெப்பமும் குடுக்குறாளே…

    பாட்டை, மறுகா, நீங்களே நேரடியா வாசிங்க….
    *வாங்கு கதிர் தொகுப்பக் = Solar Charging
    *கூம்பி, அலங்கு வெயில் பொதிந்த தாமரை
    *தாமரை உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே
    ——-

    இதழ் ஈரம் = குளிர்ச்சி
    அதுக்கும் கீழே எறங்கினாச் = சூடு:)

    ச்ச்ச்சீ, இதுக்கு மேலச் சொல்ல வெக்கமா இருக்கு….
    (காதலி உள்ளப் பேச்சு)
    முருகா, “வெயில் பொதிந்த தாமரை”க்குள் நாம போயீறலாமா? அங்கேயே தூங்கிருவோம்… = “தாமரைக் கட்டில்”

  • என். சொக்கன் 9:08 am on May 6, 2013 Permalink | Reply

   Comment from Sushima (Sent Via Email)

   நல்ல பதிவு. அன்பு என்பது வேண்டும் பொழுது குளிர் சாதனப் பெட்டியாகவும், கம்பிளிப் போர்வையாகவும் மாறுவது வாழ்வில் நிகழும் ஒன்று. அதைப பாடலில் அழகாக வடித்து இருப்பது கவிஞரின் சிறப்பு. இந்தத் திரைப்பாடலுக்கு உதாரணமாகக் குறுந்தொகையையும் திருக்குறளையும் நீங்கள் காட்டியிருப்பது உங்கள் சிறப்பைக் காட்டுகிறது 🙂

   amas32

   • பழ. கந்தசாமி 11:28 am on May 28, 2013 Permalink | Reply

    வாவியுறை நீரும் வடநிழலும் பாவகமும்
    ஏவனைய கண்ணார் இளமுலையும் – ஓவியமே
    மென்சீத காலத்து வெம்மைதரும் வெம்மைதனில்
    இன்பாரும் சீதளமா மே! – நீதிவெண்பா

 • என். சொக்கன் 11:41 am on April 1, 2013 Permalink | Reply  

  கண்ணாலே பேசிப் பேசி… 

  • படம்: சூரியன்
  • பாடல்: பதினெட்டு வயது
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=W6Kgy-z9QHA

  கங்கை போலே, காவிரி போலே,

  ஆசைகள் ஊறாதா!

  சின்னப் பொண்ணு, செவ்வரிக் கண்ணு,

  ஜாடையில் கூறாதா!

  ’செவ்வரி’க் கண் என்றால், சம்பந்தப்பட்ட நபருடைய விழியின் வெள்ளைப் பகுதியில் சிவந்த வரிகள் ஓடுகின்றன என்று அர்த்தம். அது ஒரு தனி அழகாகச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

  உதாரணமாக மகாகவி பாரதியாரைப்பற்றி வ. ரா. வர்ணித்துக் கூறும் வரிகள், ’பாரதியாரின் கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள். இமைகளின் நடுவே, அக்கினிப் பந்துகள் ஜொலிப்பனபோலப் பிரகாசத்துடன் விளங்கும். அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் தெவிட்டாது.’

  குறுந்தொகையில் ஒரு பாடல், ‘இவள் அரி மதர் மழைக்கண்’ என்று வர்ணிக்கும். இதன் பொருள், இந்தப் பெண்ணின் செவ்வரி படர்ந்த, மதர்ப்பான, குளிர்ச்சியான கண்கள்.

  கடவுளுக்குக்கூட செவ்வரி படர்ந்த கண்கள் இருப்பது தனி அழகு. பொய்கையாழ்வார் திருமாலைப்பற்றிப் பேசும்போது, ‘திறம்பாதென் நெஞ்சமே, செங்கண்மால் கண்டாய்’ என்கிறார். இங்கே ‘செங்கண்’ என்பது, கோபத்தாலோ ராத்திரி சரியாகத் தூங்காததாலோ சிவந்த கண்கள் அல்ல, செவ்வரி ஓடியதால் இயற்கையாகச் சிவந்த கண்கள் என்று கொள்வதே சிறப்பு.

  அப்படிப்பட்ட செவ்வரிகளைக் கொண்ட இந்தப் பெண்ணின் கண் ஜாடை, தன்னுடைய ஆசைகளை மறைக்காமல் சொல்லிவிடும், டேய் ஆடவா, அதைப் புரிந்துகொண்டு இவளோடு ஆட வா என்கிறார் வாலி.

  கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு பாடலை ’கண்ணதாசன் திரைப் பாடல்கள்’ தொகுப்பில் நேற்று வாசித்தேன், ‘பெண்ணுக்கு ரகசியம் ஏது? தலைப் பின்னலும் பேசிடும்போது!’

  பொதுவாகப் பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்வார்கள், அவர்கள் வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும், தங்களுடைய தலைப் பின்னலைத் தூக்கிப் போடுகிற விதத்தில்கூட விஷயம் வெளிவந்துவிடும், எதிரில் உள்ளவருக்கு அதைப் ‘படிக்க’த் தெரிந்திருக்கவேண்டும்.

  ஆக, Body Language, Face Languageபோல், பெண்கள் மொழி Eye Language, Hair Language என்று பலவிதமாக நீளும். படித்துப் புரிந்துகொள்வது ஆண்களின் சமர்த்து!

  ***

  என். சொக்கன் …

  01 04 2013

  121/365

   
  • amas32 10:21 pm on April 1, 2013 Permalink | Reply

   பெண்ணுக்கு பேசும் மொழிகள் பல. கண்ணில் ஓடும் சிவப்பு ரேகைகளில் இருந்து தலையை அடிக்கடி கைகளால் கோதி கொள்வது வரை சங்கேத மொழிகள் பல. அப்படியிருந்தும் ஆணுக்குப் புரிவதில்லையே! எதுக்கோ கோபமாக இருக்கிறாய் என்னவென்று சொல்லிவிடு என்பான் காதலி/மனைவியிடம். என்னவேண்டுமோ நேரடியாகக் கேள், சுற்றி வளைத்துப் பேசாதே எனக்குப் புரியாது என்பான்.

   நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பதெல்லாம் காதலில் மூழ்கியிருக்கும் போது பேசப்படுவது 🙂 நாம் பேச வேண்டியதை வாயைத் திறந்து பேசுவதே போகும் ஊருக்கு வழியைக் காட்டும்.

   amas32

 • G.Ra ஜிரா 8:24 am on March 16, 2013 Permalink | Reply  

  தூக்கம் எங்கே? 

  ஊருசனம் தூங்கிருச்சு
  ஊதகாத்தும் அடிச்சிருச்சு
  பாவி மனம் தூங்கலியே
  அதுவும் ஏனோ புரியலயே

  பொதுவாக இரவு இரண்டு விதமான மனிதர்களைத் தூங்க விடாது. ஒருவர் நோயாளி. இவர் உடல் உபாதையினால் சரியாகத் தூக்கமில்லாமல் தவிப்பார். இன்னொருவர் காதலில் விழுந்தவர். இவர் காதல் நினைவுகள் கொடுக்கும் உபாதையால் தூக்கமில்லாமல் தவிப்பார்.

  ஆனால் மேலே சொன்ன பாடலைப் பாடியவள் நோயாளியல்ல. அவள் ஒரு காதலி. அவள் எண்ணமெல்லாம் காதலன். நினைக்க நினைக்க எண்ணங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் ஒவ்வொன்றும் இனிக்க இனிக்க நினைப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவளுக்கு அது புரியவில்லை. தூக்கம் வரவில்லையே என்று பாடுகிறாள்.

  பாடல் – ஊரு சனம் தூங்கிருச்சே
  படம் – மெல்லத் திறந்தது கதவு
  பாடல் வரிகள் – கங்கை அமரன்
  பாடியவர்கள் – எஸ்.ஜானகி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் – இசைஞானி இளையராஜா
  இயக்கம் – ஆர்.சுந்தர்ராஜன்

  எப்பேர்ப்பட்ட இனிமையான பாடல். எஸ்.ஜானகியின் குரலில் உணர்வுகள் பொங்கும் அருமையான பாடல்.

  இந்தத் தூக்கம் தராத காதல் ஏக்கத்தை இன்னொரு பெரிய கவிஞரும் திரைப்படம் வராத காலத்திலேயே எழுதியிருக்கிறார். அது பல ஆண்டுகள் கழித்து திரைப்படத்திலும் வந்தது.

  மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கித் துயினிலே
  நானொருவன் மட்டிலும் இங்கு பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ

  இப்போது புரிந்திருக்குமே அந்தப் பாடல். ஆம். தீர்த்தக் கரையினிலே என்று தொடங்கும் பாரதியாரின் பாடல்தான். பின்னாளில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் மெல்லிசை மன்னர் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி வெளிவந்தது. இந்தப் பாடலும் திரையிசையில் இனிமை நிறைந்த உணர்வு மிக்க பாடல்தான்.

  இந்த உணர்வுகள் இன்று நேற்றா இருக்கின்றன? இல்லை. நூற்றாண்டுகளுக்கும் மேலாய்… ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய்… காதல் என்ற உணர்ச்சி மனிதரைப் பிடித்த நாளில் இருந்து இருக்கிறது.

  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த சங்கத் தமிழில் மேலே பார்த்த இரண்டு பாடல்களின் வரிகளும் அப்படியே இருக்கின்றன. பயன்படுத்திய சொற்கள் மாறியிருக்கின்றன. ஆனால் கருத்து அதே கருத்துதான். காதல் உணர்வுகள் கொடுக்கும் தூக்கமின்மை.

  நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
  தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
  நனந்தலை யுலகமுந் துஞ்சும்
  ஓர்யான் மன்ற துஞ்சா தேனே
  நூல் – குறுந்தொகை
  எழுதியவர் – பதுமனார்
  திணை – நெய்தல் திணை
  கூற்று – (தோழிக்கு) தலைவியின் கூற்று

  நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்(து)
  இனிது அடங்கினரே மாக்கண் முனிவு இன்று
  நனந்தலை உலகமும் துஞ்சும்
  ஓர் யான் மன்ற துஞ்சாதேனே

  இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். இரவோ நள்ளிரவு (நள்ளென்றன்றே). விலங்குகள் எல்லாம் ஒலியெழுப்பாமல் அடங்கி உறங்கின. இந்த மிகப்பெரிய உலகத்து மனிதர்கள் எந்த இடைஞ்சலும் இன்றி துஞ்சுகின்றார்கள். நான் மட்டும் துயிலின்றி தவிக்கிறேனே!

  இப்போது தமிழில் கிடைத்ததில் பழைய இலக்கியங்கள் கடைச்சங்க இலக்கியங்கள். இவைகளுக்கு முன்னால் எழுதப்பட்டு காணமல் போன இலக்கியங்களிலும் காதலர்க்கள் தூக்கமில்லாமல் தவிப்பது உறுதியாக எழுதப்பட்டிருக்கும்.

  தீர்த்தக்கரையினிலே…. தெற்கு மூலையில்… செண்பகத் தோட்டத்திலே….

  ஊருசனம் தூங்கிருச்சே பாடலின் சுட்டி – http://youtu.be/GuIAzKphNY4
  தீர்த்தக்கரையினிலே பாடலின் சுட்டி – http://youtu.be/V43cycEi3Gw

  அன்புடன்,
  ஜிரா

  105/365

   
  • amas32 2:16 pm on March 16, 2013 Permalink | Reply

   பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது, பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது. இதுவும் இனிமையான ஒரு காதல் தவிப்பில் தூக்கத்தை துறந்த நிலையைச் சொல்லும் அழகிய பாடல்.

   நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இரண்டும் பாடலகளும் அற்புதம். இரண்டும் இசையமைப்பு மற்றும் பாடல் வரிகளின் சிறப்பினாலும் இங்கே பதிவில் படித்தவுடன் காதில் ஆடோமாடிக்காக ஒலிக்கிறது. ஈஸ்பெஷலி ஊரு சனம் தூங்கிருச்சு such a haunting melody. Kudos to the team!

   amas32

  • anonymous 12:13 am on March 17, 2013 Permalink | Reply

   //சொல் அவிந்(து) இனிது அடங்கினரே//

   ஒருவருக்கு நல்ல தூக்கம் எப்போ வரும்?
   = “சொல் அவிந்தா”, அப்போ தான் வரும்
   = இந்த உளவியல் காட்டிக் குடுக்குது சங்கத் தமிழ்

   “சொல் அவிந்து” = வீரியம் மிக்க வரி;
   அதென்ன “அவிந்து”? ஒரு சொல்லு எப்படி அவியும்?

   “அவியல்”, பொரியல் அப்படி-ங்கறோம்;
   அவியல் செஞ்சிப் பாத்து இருக்கீகளா? = நல்லா வேகும்; ஆனா கொதிக்க விடக் கூடாது;

   அத்தினி காயும் கொட்டி, சிறு தீயில், வெந்து வெந்து அவியும்; தண்ணி ரொம்ப விடக் கூடாது; கொதிச்சாக் கூழ் ஆயீரும்!
   அவிந்து அவிந்தே, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், தயிரு-ன்னு கொட்டிக் கிளறி எறக்கிருவாங்க;

   இப்பிடிச் சிறு தீயில், உள்ளுக்குள்ளேயே வெந்து வெந்து “அவிவது” போல் = சொல் “அவிந்து”

   மனசுக்குள்ள என்னென்னமோ இருக்கு;
   அவனுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? -ன்னு விதம் விதமா நினைச்சிப் பாக்கும்; உள்ளுக்குள்ளயே சொல்லிப் பார்க்கும் மனசு;

   ஆனா, எதை-ன்னு சொல்லுறது? = உணர்ச்சி? காதல்? வலி? அன்பு? குணம்? இன்பம்?
   ஒரு அவியல் காய்கறிக் கலவை போலத் தான்!

   இப்படிச் சொல்லலாமோ? இப்படிப் புரிய வைக்கலாமோ? -ன்னு சிறு தீயில், உள்ளுக்குள்ளேயே வெந்து வெந்து “அவியும்”;
   ஆனா இப்படியெல்லாம் மனசு நெனச்சதை, வாய் சொல்லாது; கோபத்தில் கொதிக்காது; அன்பால் அவிஞ்சி மட்டுமே போகும்!
   (அவனாப் புரிஞ்சிக்கிட்டாத் தான் உண்டு)

   அதான் “சொல் அவிந்து” -ன்னு ஒத்த வரி; ரொம்ப நுண்ணியல் சங்கத் தமிழ்!
   காதலிச்சி இருந்தாத் தான், சங்கத் தமிழ் வரிகளை, (சு)வாசிக்க முடியும்!

   • anonymous 12:38 am on March 17, 2013 Permalink | Reply

    இப்போ முழுக் கவிதையும் நேராவே படிச்சி பாருங்க; தெரியும்;

    //சொல் அவிந்(து) + இனிது அடங்கினரே//
    “உள்ளுக்குள்ளயே சொல்லு அவிதல்” = இது அடங்கினாத் தான், தூக்கம் வரும்!
    இல்லீன்னா, ஒடம்பு தான் தூங்கும், உள்ளம் தூங்காது; மறு நாளும் சோர்வு தான்!

    இப்போ நிறுத்திப் படிங்க!

    1) நள் என்றன்றே யாமம்;
    2) சொல் அவிந்(து) இனிது அடங்கினரே மாக்கள்;
    3) முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்;
    4) ஓர் யான் மன்ற துஞ்சாதேனே!

    நள் = நடு (நண்-பகல், நள்-இரவு)
    யாமம் = தொன்மையான தமிழ்ச் சொல்லு; அதை “ஜா”மம் ன்னு மாத்தி ஆக்கிப்புட்டாங்க:(
    வைகறை/காலை – பகல்/எற்பாடு – மாலை/யாமம் = தமிழ்த் திணை இலக்கணத்தில், 6 சிறுபொழுதுகள்!

    நள் என்றன்றே யாமம்
    =பேச்சுத் துணையும் இல்லாத தனிமை; அதனால் இரவே அவ கிட்ட பேசுதாம்; நள் என்றன்றே; “நடு வந்துருச்சி்; போய்த் தூங்கு”

    சொல் அவிந்(து) இனிது அடங்கினரே மாக்கள்
    =மத்தவங்களுக்கு மனசுக்குள்ள சொல்ல ஒன்னும் இல்ல;
    =சொல்லு அவிந்து + அடங்கிட்டாங்க; அதனால் “இனிது” உறங்குறாங்க!

    (நல்லாச் சாப்பிடறவனைப் பார்த்தா மகிழ்ச்சி (அ) சிரிப்பு (அ) ஏளனம் தான் வரும்;
    ஆனா நல்லாத் தூங்குறவனைப் பார்த்தா?
    சிலருக்குப் பொறாமை கூட வரும்:) ’எப்பிடி மாடு மாதிரி தூங்குறான் பாரு’:))

    உலகம் ஏனோ தூங்குபவர்களைப் பார்க்கக் கூடாது-ன்னு சொல்லி வச்சிருக்கு;
    ஆனா காதலி/ காதலன் வியர்வை அடங்கித் தூங்கும் சுகத்தைப் பாக்குறதே ஒரு இன்பம்!

   • anonymous 1:05 am on March 17, 2013 Permalink | Reply

    முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும்;
    = முனிதல் -ன்னா கோபம்; (வடமொழி ’முனி’வர் வேறு; தமிழில் அடிகள்)

    *முந்தைய வரியில், உறவுக்காரங்கள் தூங்குறதைப் பாக்குறா;
    *இந்த வரியில், மத்த உயிரினங்களையும் பாக்குறா;

    உறவு/ மக்கள் = திட்டி இருப்பாங்க போல; ஆனா வலி உணராது, திட்டுன சொல்லெல்லாம் அவிந்து+அடங்கி, “இனிது” தூங்குறாங்க!

    மான், முயல், பறவை, அட.. செடி கூடத் தூங்குது = முனிவு இன்றி (கோவம் இல்லாம) தூங்குது;
    வேட்டையை இன்னிக்கித் தவற விட்டுட்டோமே -ன்னு, அன்றைய கோப தாபம் இல்லாமத் தூங்குதுகள்;

    (இராத்திரியில், கிராமத்தில்/ வீட்டில் உள்ள மாடோ/ கோழியோ/ நாயோ தூங்குவதைப் பாத்து இருக்கீங்களா?
    அவசியம் பாருங்க; எல்லாரும் தூங்கி, நீங்க மட்டும் ஒரு நடை பாத்துக்கிட்டே வந்தாத் தெரியும்; itz a different experience)

    ***ஓர் யான் மன்ற துஞ்சாதேனே = பாவி மனம் (மட்டும்) தூங்கலியே!

    யான் -ன்னாலே ஒருமை தானே? அப்பறம் என்ன “ஓர் யான்”?

    “நான்” புத்தகம் படிச்சேன்-ன்னு சொல்லுவீங்களா?
    “ஒரு நான்” புத்தகம் படிச்சேன்-ன்னு சொல்லுவீங்களா?:)

    நானொருவன் -ன்னு சொல்லலாம்; ஆனா “ஒரு நான்” -ன்னு சொல்லும் வழக்கம் இல்ல!
    அப்பறம் எப்படி “ஓர் யான்”?:)

    நாங்க ரெண்டு பேரும் “ஓர் உயிர்” தான்!
    ஆனா, இந்த “ஓர்-உயிரி”லும், “ஓர்-யான்” மட்டும் தான் தூங்காமத் தவிக்குது;
    “இன்னொரு யான்”, பாவி, இந்நேரம் நல்லாத் தூங்கினாலும் தூங்கியிருக்கும்:)

    இதான் காதல்!
    காதலர்களுக்குப் புரியும்;

 • G.Ra ஜிரா 10:20 am on March 4, 2013 Permalink | Reply  

  ஆனந்தம், ஆரம்பம்! 

  ஆண்களுக்குக் காதல் வந்தால் என்னாகும்? அதைப் பாடலில் சொல்ல முடியுமா? நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது அக்காலம். இக்காலத்துக் கவிஞர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள ஒரு எண்ணம் வந்தது.

  நண்பர்களிடம் பிடித்த பாடல் எது என்று கேட்ட போது நிறைய பேர் கும்கியைக் கை காட்டினார்கள். அதிலும் குறிப்பாக அய்யய்யய்யோ ஆனந்தமே பாடலை. டி.இமான் இசையமைத்த அந்தப் பாடலை நானும் கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன்.

  அதை வரிவரியாகத் திரும்பவும் கேட்டேன். கவிஞர் யுகபாரதியின் எளிய வரிகள் ஒரு எளிய பாத்திரத்தின் காதலுக்கு மிகப் பொருத்தமாகவே இருந்தது.

  அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே – என்ற எளிய தொடக்கமே அழகு.

  அவன் யானை வளர்ப்பவன். காட்டில் இருக்கிறான். அதனால் சிந்தனையில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வரவில்லை. இயற்கையான காட்சிகளில் காதலைச் சொல்கிறான். அந்த வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

  நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
  காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே

  இந்த வரியிலும் இரண்டாவது வரி மிகச் சிறப்பானது. ஏன் தெரியுமா?

  காதல் உள்ளத்துக்குள்ளே ஏதோ ஒரு இடம் தெரியாத மர்மப்புள்ளியில் தொடங்குவது போலத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து ஆளையே மூழ்கடித்து விடும். அப்படி நடப்பதை என்ன செய்தாலும் தடுக்கவே முடியாது.

  சின்னச் சின்னத் தூறல்களாக எண்ண அலைகள் சிதறிச் சிதறிப் பெருவெள்ளமாகி அந்த வெள்ளத்தில் அவன் மூழ்கிப் போனான் என்று செல்கிறது கற்பனை. இது காதலில் உண்டாகும் உண்மை நிலையும் கூட.

  இதை மிக எளிமையாக ”காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே” என்று சொன்ன கவிஞர் யுகபாரதியை பாரட்டத்தான் வேண்டும்.

  இன்றைக்கு நேற்றா ஆண் இப்படியிருக்கிறான்? இல்லை. எப்போதுமே ஆண் இப்படித்தான். காதல் வந்தால் புலம்பலிலேயே மூழ்கிப் போய்விடுவான்.

  இதே சூழ்நிலை சங்ககாலத்தான் ஒருவனுக்கும் வந்தது. ஆம். அவனுக்கும் வந்தது காதல். தன்னை மறந்தான். தந்தை தாய் மறந்தான். தன் கடமை மறந்தான். தன்னைச் சுற்றியுள்ளதையெல்லாம் மறந்தான். உலகை மறந்தான். காதலுக்குள் தன்னைத் தொலைத்தான்.

  நண்பர்கள் கண்டித்தனர். ஆற்றும் கடமையே ஆண்மைக்கழகு என்று அறிவுறுத்தினர். அவன் கேட்டானா? இல்லையே. செந்தமிழில் சொல் செதுக்கி சொல்லியவர்க்குத் தன்னிலையை விளக்கமாகச் செப்பி விட்டான்.

  கையில்லாதவன் ஒருவன். அவனுக்குச் சொந்தமாய் ஒரு உருண்டையளவு வெண்ணெய். அந்தக் கட்டி வெண்ணெய் சட்டியில் இல்லை. வெட்டுப்பாறையில் இருக்கிறது. பொழுதோ உச்சிப்பகல். முதலில் இளகுகிறது வெண்ணய். பிறகு நெய்யாய் உருவிப் பரவுகிறது. அதைக் காப்பாற்ற விரும்புகிறான் அந்தக் கையில்லாதவன். அது முடியுமா?

  அந்த வெண்ணெய் நெய்யாகிப் பரவுவததைப் போல காதல் அவன் மீது பரவிக்கொண்டிருக்கிறது. கையில்லாதவன் அந்த வெண்ணையைக் கண்களாப் பார்த்தே காப்பாற்ற முடியுமா? முடியவே முடியாது. வெண்ணெய் உருகுவதைத் தடுக்கும் வழி(கை) இல்லாதவனாய் மூழ்கிப் போகிறான். காதலில் மூழ்கிப் போகிறான்.

  இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
  நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
  ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
  கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
  வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே
  நூல் – குறுந்தொகை
  திணை – குறிஞ்சி
  கூற்று – தலைவன்
  எழுதியவர் – வெள்ளிவீதியார்

  வெள்ளிவீதியாரும் யுகபாரதியும் எடுத்துச் சொன்ன எடுத்துக்காட்டுகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பொருள் ஒன்றுதான்.

  காதல் வந்தால் அதில் ஆண் மூழ்கித்தான் போவன். அப்படி மூழ்குவதுதான் சுகமானது. இன்பமானது. வாழ்க்கைக்கும் ரசமானது. அப்படி மூழ்காத ஆணுக்கு இன்பமில்லை. இல்லறமில்லை. வாழ்க்கையில் எதுவுமேயில்லை.

  அய்யய்யோ பாடலின் ஒளிச்சுட்டி – http://youtu.be/xh8PByTv9kw

  அன்புடன்,
  ஜிரா

  093/365

   
  • kamala chandramani 4:14 pm on March 4, 2013 Permalink | Reply

   சங்க இலக்கியங்களில் காதல் மிக மென்மையாக சொல்லப்பட்டுள்ளது. அற்புதமான மனதைத் தொடும் காதல். திரைப்படப் பாடல்களில் அதைத் தேடுவது …….ஒரிரு முத்துக்கள் கிடைக்கலாம்….

   • GiRa ஜிரா 8:12 am on March 5, 2013 Permalink | Reply

    உண்மைதானம்மா.. இன்றைய பாடல்களில் தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு உயிர்ப்புள்ள வரிகள் இன்றைய பாடல்களுக்குத் தேவையேயில்லை. டச் ஸ்கிரீன் பெண்ணே சார்ஜர் நானேன்னு எதையாச்சும் எழுதிக்கிட்டு போய்க்கிட்டேயிருக்கலாம்.

  • amas32 (@amas32) 4:45 pm on March 4, 2013 Permalink | Reply

   //நினைத்தேன் துடித்தேன் பலமுறை அழுதேன் தொழுதேன் மனத்தில் உழுதேன் என்றெல்லாம் எழுதுவது// விவிசி

   நீங்க சொல்ல வந்தது வேற என்றாலும் எனக்கென்னமோ வைரமுத்துவின் அந்தி மழை பொழிகிறது பாடல் தான் உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது ஞாபகத்துக்கு வருகிறது 🙂
   “தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்”

   amas32

   • GiRa ஜிரா 8:15 am on March 5, 2013 Permalink | Reply

    தண்ணீர் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய்.. நல்ல அழகான முரண். அட்டகாசமான வரியைப் பிடிச்சிங்க 🙂

  • anonymous 11:05 pm on March 4, 2013 Permalink | Reply

   யுக-பாரதி – இந்தப் பேரே ஒரு நல்ல சொல்லு;

   “ஆனந்தம் ஆரம்பம்” -ன்னு நீங்க குடுத்த தலைப்பு மெய்யாலுமே உண்மை தான்!
   யுகபாரதியின் ஆரம்பம் = ஆனந்தம் -ங்கிற படத்தில் தான்!

   பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
   புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
   -பாட்டுல, நடுவாப்புல ஒரு வரி வரும்; அது சொல்லீரும் “ஒரு ஆணின் காதல்” எப்படி-ன்னு?

   அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
   நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்

   காலம் முழுசுமே, பூவா இருக்க முடியாது; ரொம்பக் கடினம்
   மகரந்தச் சேர்க்கை, அறிஞ்சோ அறியாமலோ நடந்துக்கிட்டு தான் இருக்கும்;
   அப்படி நடக்கும் போது, பூ -> காய் ஆகும் ->கனி ஆயீரும்;
   அவரவர் வாழ்க்கை; அதுல கொஞ்சம் கொஞ்சம் அவரவர் இன்ப நலங்கள்!

   ஆனா, இந்த “ஆணின் காதல்”?
   = பூவாகவே இருப்பானாம்
   = அதுலயும், அவ காணும் இடத்தில் மட்டுமே பூத்து இருப்பானாம்
   (ஏன்னா, மகரந்தச் சேர்க்கை, அவ கிட்ட தான்; காற்றில் பரவி வருதல் கூட அவனுக்கு வேணாம்; அதுக்காக ஒடுக்கிக் கொள்கிறான்)

   இந்த ஆரம்ப வரிகள், மனசுல பண்ண மாயமோ என்னமோ..
   யுகபாரதியை ரொம்ப ரொம்பப் பிடிச்சிப் போயிருச்சி
   (i don’t hesitate to say this even to my friend, who is a big lyric writer himself, of course with smiles:)
   —-

   நீங்க குடுத்த வரிகளும் அழகோ அழகு!

   நூறுகோடி வானவில் மாறிமாறிச் சேருதே
   = இப்புடிச் சேர்ந்தா, என்ன வண்ணம்-ன்னு சொல்லுறதாம்? காதலை, “இதான்” ன்னு சொல்லீற முடியாது;

   காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கிப் போகுதே
   = தூறல்-ல நனையலாம்; லேசாத் தலையைத் துவட்டிக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்!
   ஆனா தூறல்-ல யாராச்சும் “மூழ்கிப்” போயிருவாங்களா? = அதான் “ஆணின் காதல்”

   வாழ்க்கையே இல்லீன்னாலும், கடைசி வரைக்கும் அவனே-ங்கிற உறுதி;
   இது ஆண் காதலில் அதிகம்!
   KB Sundarambal அம்மா என்னும் பெண் காதலிலும் உண்டு! அந்தப் பெண்ணுக்கு ஆண்மையின் உள்ள உறுதி!

   • anonymous 11:43 pm on March 4, 2013 Permalink | Reply

    நடுவுல, மன்மத ராசா, காதல் பிசாசு -ன்னுல்லாம் யுகபாரதி எழுதுனது வேற; அங்கிட்டு நான் போவலை:) chummaa time pass!

    மைனா, கும்கி பாடல்கள் மிக்கு அழகு!
    ——

    பொதுவா, ஆண், “ஆசை” அதிகம் வச்சிப் பாடுவதால், ஆண் காதலில், “காதலை” விடக் “விரகம்” கலந்து இருப்பதாத் தான் பலருக்கும் தோனும்!

    ஆனா, “ஆணின் காதல்” -ன்னு திரை-இலக்கியப் பாடல்கள், கொஞ்சமே கொஞ்சம்; அத்தனையும் மூழ்கி எடுக்கும் முத்துக்கள்!

    ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் -ன்னு ஒரு பாட்டு; அதுல ஒரு வரி

    வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது – உனது கிளையில் பூவாவேன்
    இலையுதிர்காலம் முழுதும் – உனக்கு மகிழ்ந்து வேராவேன்
    -ன்னு வரும்;
    இதே பூ-வேர் உவமை தானோ என்னமோ, ஒரு ஆணின் காதலுக்கு?
    ——

    பூமி தான் நிலாவுக்கு ஏங்கும்; ஆனா நிலா ஏங்குமா?

    பெண் தான் எப்பமே “ஏங்குறாப்” போலப் பல பாடல்கள்;
    சுசீலாம்மாவின் சாகாத வரம் = நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

    ஆனா, ஒரு ஆணின் ஏக்கம்; அது கண்ணதாசன் மெட்டு
    = நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

    தேய்ந்த வெண்ணிலா = தன்னையே தேய்த்துக் கொள்ளும் ஆண் காதலைத் தொட்டுக் காட்டி இருப்பாரு கண்ணதாசன்;
    But, என்ன நடுவுல, காமம் உள்ள வரிகளும் வரும் = இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா

    அதனால், ஆண் காதலில் “ஏக்கமே இல்லை” -ன்னு ஆயீறாது;
    சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா?
    வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
    -ன்னு, கொஞ்சம் உன்னிச்சிப் பாத்தாத் தான் தெரியும், “ஆணின் காதல்”!
    ——

    ஆணின் தவிப்பு அடங்கி விடும்
    பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்
    -ன்னு ஒரு பாட்டு இருக்கு;

    ஆனா பல ஆண்களின் உடல் தவிப்பு அடங்கீருமே தவிர,
    காதல் நெறைஞ்ச ஒரு ஆணின் தவிப்பு = அது அடங்குவதேயில்லை என்பது தான் உண்மை!

  • anonymous 12:18 am on March 5, 2013 Permalink | Reply

   சங்கப் பாடல் பத்தி, ஒன்னுமே சொல்லாமப் போயிறணும் -ன்னு நெனைச்சேன்; முடியலை; தோல்வி!

   வெள்ளி வீதியார் = என் உள்ள வீதியார்!
   ———

   இவரு ஒரு பொண்ணு தான்;
   ரொம்பவும் காதலில் அழிஞ்சி போன பொண்ணு;

   ஆனா, இந்தப் பாட்டை மட்டும், பொண்ணாப் பாடாம, ஒரு ஆணாப் பாடுறா; ஏன்?

   ஒரு தோழன், என்னடா, ஏன் இப்பிடி ஆயிட்ட? -ன்னு கேக்குறான்;
   அதுக்குத் தலைவன் கூற்றாகத், தன் காதலை ஏத்திச் சொல்லுறா!

   = “நாயகி பாவம்” தானே கேட்டு இருக்கீக?
   = இது “நாயகன் பாவம்” பாட்டு;
   ———

   ஏன்-ன்னா, சங்க காலத்தில் (கொஞ்சம் இந்தக் காலத்தில் கூட), காதலை இழந்த ஒரு பொண்ணைச், சமூகம் அப்படியே விட்டுறதில்லை!
   என்னென்னமோ பண்ணி, எப்படியும் “மகரந்தச் சேர்க்கை” செஞ்சீரும்!

   ஆனா, ஒரு “உண்மையான ஆணை”, அப்படிப் பண்ணுறது மெத்த கடினம்!

   ஆண் கிட்டேயும், சமூகம் தன் வித்தையைக் காட்டும்;
   ஆனா, அவன் “காதல் ததும்பும் ஆணாக” இருந்தா? = அவன் கிட்ட சமூகத்தின் பாச்சா பலிப்பதில்லை; அவன் அப்படியே “நின்னுருவான்”;

   இந்தக் “காதல் உறுதி”;
   அதான், தன் காதலும் “நின்னுற” வேண்டி, “ஆண் காதல்” ஆக்கிப் பாடுறா, இந்த வெள்ளி வீதியார் என்னும் பொண்ணு;

   இது, சங்கத் தமிழ், “உண்மையான ஆண்”களுக்குச் செய்த மிகப் பெரும் மரியாதை;
   அதுவும் ஒரு புரட்சிப் பொண்ணு மூலமாவே செய்த பெருமிதம்;

   ஆண்கள் மட்டுமே அந்தரங்க உறுப்பு/ முலை-ன்னு பாடிய காலத்தில்… என் அல்குலில் வெள்ளைப் படுதே -ன்னு கூச்சம் துணிஞ்சி பாடிய புரட்சிப் பொண்ணு இவ;
   (கன்றும் உணாது, கலத்தினும் படாது….திதலை அல்குல் என் மாமைக் கவினே)
   ———

   (இந்தச் சங்க இலக்கிய உளவியல் – ஆணாகிப் பாடும் பெண் – தாயம்மாள் அறவாணன் என்கிற பெண் தமிழறிஞரின் நூலிலே காண்க)

   • anonymous 12:49 am on March 5, 2013 Permalink | Reply

    //கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போலப்//

    இது போலவொரு உவமை, ஆனானப்பட்ட கவிச் சக்கரவர்த்தி கம்பன் கூடிய காட்டியதில்லை… இன்னிக்கி வரை இலக்கியத்தில்! என்னமா ஒரு வீச்சு!

    கண்ணின் காக்கும் = கண்ணால மட்டும் காவல் காக்குறானா(ளா)ம்
    பாத்துப் பாத்து ஏங்குறா!
    ஆனா, வெளிய சொல்லவும் முடியல!
    சொன்னா, தனக்கு இழுக்கோ? இல்லை, அவனுக்கு இழுக்கோ?

    வெண்ணைய் என்னும் காதல்-களி; உருகி, ஒன்னுமில்லாமப் போவப் போகுது;

    ஆனா, எடுத்துக் காப்பாத்த முடியல = கை இல்லை!
    மத்தவங்க கிட்ட சொல்லி ஆத்தவும் முடியல = வாய் இல்லை!

    அப்போ, என்ன தான் வழி? = கண்ணின் காக்கும்!
    ————

    //கை இல் ஊமன், கண்ணின் காக்கும்// – ஒத்த வரி!

    வெறுமனே காக்கும் -ன்னு போட்டிருக்கலாம்! காதலிற் காக்கும் -ன்னு போட்டிருக்கலாம்!
    ஆனா, “கண்ணின் காக்கும்”…

    நம்ம கண்ணு முன்னாடியே, காதல்-களி அழிஞ்சி உருகுவதைப் பாக்குற கொடுமை யாருக்கும் வரக் கூடாது;
    அதை விட, அதை ஆத்திக்க, வெளியில் கூட சொல்லி அழ முடியாத நெலமை யாருக்கும் வரக் கூடாது, முருகா!

    இப்படி வாழ்வது எளிதா? = நோன்று கொளற்கு அரிதே!
    சமூகத்துக்குப் புரியுமா? = நிறுக்கல் ஆற்றினோ!

    கையும் சிறையில், வாயும் சிறையில்
    கண்கள் மட்டும், “ஆணின் காதல்”!

    இதுவொரு சங்கத் தமிழ் வாசிப்பு – சங்கத் தமிழ் சுவாசிப்பு!

    வெள்ளி வீதி முதல், யுகபாரதி வரை… குறிஞ்சிப் பூவென பூக்கும் “உண்மையான ஆண்களின் காதல்”
    பெண்ணின் தவிப்பு தொடர்ந்து வரும்…
    ஆணின் தவிப்பும் அடங்கி விடாது!

    ஆண் காதல் வாழ்க!

  • psankar 12:38 pm on March 6, 2013 Permalink | Reply

   வெள்ளிவீதியார் ஏன் தலைவன் கூற்றாக பாடியிருக்கிறார், தலைவி கூற்றாக பெண் பாடினால் இன்னும் உசிதமாக இருக்குமே என்று கருத்து சொல்ல வந்தேன். பாடும் பெண்களே குறைவு, ஆண்டாளே ஆண் என்று ஒரு கதை உண்டு. இப்படிப்பட்ட பெண்பாற் புலவர் பஞ்சத்தில் ஒழுங்காக பெண் மனத்தை மட்டும் கூறும் விதமாக தலைவி கூற்றாகவே பெண்பாற் புலவர்கள் பாடி இருந்தால், நிறைய பெண்ணிய கருத்துகள் பரவி இருக்குமே. பெண்களின் ஒழுக்கம், கற்பு, காமம், காதல் பற்றி ஆண்களின் பார்வையில் உள்ள பாடல்களினால் பெண்களின் உண்மையான எண்ணங்கள் வெளியிலே தெரியாமலே போய் விடுமோ, என்று யோசித்தேன்.

   பார்த்தால் இங்கு ஏற்கனவே அனானி (அவனா(ரா)நீ?) எழுதி வைத்து விட்டார்.

   @அனானி: இங்கு வந்து இவ்வளவு எழுதுகிறீரே, உமக்கு ஒரு கடிதம் அனுப்பினேனே, பதில் எங்கே !? 😉

 • என். சொக்கன் 2:55 pm on February 3, 2013 Permalink | Reply  

  அதிகாலை நிலா 

  • படம்: வான்மதி
  • பாடல்: வைகறையில் வந்ததென்ன
  • எழுதியவர்: வாலி
  • இசை: தேவா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=Ejky1HZJaQE

  வைகறையில் வந்ததென்ன வான்மதி!

  கைவளையல் ஓசையிலும் தேன்மொழி!

  நித்தம் சாயங்கால நேரம், நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்,

  நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம், மழைச் சாரல் வீச வேண்டும்!

  பழந்தமிழர்கள் ஒரு நாளை ஆறு பொழுதுகளாகப் பிரித்தார்கள். தலா 4 மணி நேரம் கொண்ட ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பெயர்.

  அந்தவகையில் ’வைகறை’ என்பது, அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரையிலான நேரம். இதனை ‘விடியற்காலை’ என்று நாம் இப்போது சொல்கிறோம்.

  குறுந்தொகையில் ஒரு பாட்டு. காதலனும் காதலியும் களவொழுக்கத்தின்படி சந்திக்கிறார்கள், கூடி மகிழ்கிறார்கள்.

  சிறிது நேரத்தில், பொழுது புலர்ந்துவிடுகிறது. காதலன் புறப்படவேண்டும். இல்லாவிட்டால் காதலியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் அவனைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

  அள்ளூர் நன்முல்லை என்ற புலவர் இந்தச் சூழ்நிலையை விவரிக்கும்போது, ‘தோள்தோய்க் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்து…’ என்கிறார். அதாவது, தோளோடு தோள் சேர்ந்து இருக்கும் காதலர்களை வெட்டிப் பிரிக்கின்ற வாளைப்போலப் பொழுது விடிகிறதாம்.

  இந்தப் படத்தின் பெயர் ‘வான்மதி’, அநேகமாக அது கதாநாயகியின் பெயராக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ’வானில் தோன்றும் நிலா’ என்றும் ஒரு பொருள் உண்டு.

  ஆகவே, வாலி குறும்பாக அந்த முதல் வரியை எழுதுகிறார், பொதுவாக நிலா ராத்திரியில்தானே வரும், இப்போது என்ன அதிகாலையில் வந்திருக்கிறது?

  ***

  என். சொக்கன் …

  03 02 2013

  064/365

   
  • Rajnirams 9:44 am on February 4, 2013 Permalink | Reply

   பாடல் போலவே தங்கள் விளக்கமும் அருமை.எனக்கு தெரிந்த இரண்டு பாடல்கள் பி சுசீலா அவர்கள் பாடிய பக்திப்பாடல்-வைகறை பொழுதில்..என்ற முருகர் பாடல் மற்றும் வைகறையில் வைகை கரையில் பாடலும் தான்.வைரமுத்து வைகறை மேகங்கள் புத்தகம்
   வெளியிட்டிருக்கிறார்.வான் மதி படத்தின் போது பாடல்கள் திருத்தப்பட்ட பேப்பரை அகத்தியன் கேட்டு வாலி தர மறுத்து விட்டார்.அந்த கருத்து வேறுபாடு காரணமாக அடுத்து வந்த காதல் கோட்டை,கோகுலத்தில் சீதை படங்களுக்கு அகத்தியனே பாடல்கள் எழுதினார் என்பது கொசுறு செய்தி.நன்றி.

   • என். சொக்கன் 11:53 am on February 4, 2013 Permalink | Reply

    ’காதல் கோட்டை’யின் டைட்டில் பாடல் (காலமெல்லாம் காதல் வாழ்க) எழுதியது வாலி என்றுதான் நினைவு

  • Rajnirams 12:03 am on February 5, 2013 Permalink | Reply

   ஒ அப்படியா,ஒருவேளை அந்த பாடலோடு நின்றிருக்கலாம்.தகவலுக்கு நன்றி.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel