Updates from February, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:39 am on February 15, 2013 Permalink | Reply  

  சின்னவளை, முகம் சிவந்தவளை… 

  • படம்: அந்த ஒரு நிமிடம்
  • பாடல்: சிறிய பறவை சிறகை விரித்து
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: S. P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=rAfDNE3QKMk

  சொர்ணமே, அரச அன்னமே, இதழின் யுத்தமே முத்தமே!

  நெற்றியில் வியர்வை சொட்டுமே, கைகள் பற்றுமே, ஒற்றுமே!

  சோழன் குயில் பாடுகையில், சோலைக் குயில் ஓய்வெடுக்கும்,

  மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்!

  சிறு பின்னணியுடன் வாசிக்கவேண்டிய வரிகள் இவை. இந்தப் பாடலின் இந்தக் குறிப்பிட்ட பகுதி (சரணம்), கம்பர் மகன் அம்பிகாபதியும், சோழன் மகள் அமராவதியும் பாடுவதாகக் கற்பனை செய்து எழுதப்பட்டுள்ளது.

  அதனால்தான், தன் காதலியைச் ‘சோழன் குயில்’ என்று வர்ணிக்கிறான் காதலன். ‘அரச அன்னமே’ என்றும் விளிக்கிறான்.

  ‘அரச அன்னம்’ என்பது வடமொழியில் உள்ள ‘ராஜ ஹம்ஸம்’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு. இதை இந்த வடிவத்திலேயே பல இலக்கியங்கள் பயன்படுத்தியுள்ளன. உதாரணமாக, மணிமேகலையில், ‘அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப…’, குமர குருபரர் எழுதிய ‘சகலகலாவல்லி மாலை’யில், ‘அரச அன்னம் நாண நடை கற்கும்…’

  அழகான இந்த இலக்கியச் சொல்லைச் சினிமாவுக்குக் கொண்டுவந்து, மிகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து. இதற்கு என்ன அர்த்தம்?

  ‘அரசன்’ என்பது இங்கே சோழனைக் குறிக்கலாம், ‘சோழன் மகளே’ என்ற அர்த்தத்தில் ‘அரச அன்னம்’ என்று காதலன் அவளைப் பாடலாம். அல்லது, ’அன்னங்களுக்கெல்லாம் அரசியைப்போன்றவளே’ என்று வர்ணிக்கலாம்.

  இவைதவிர, ‘அரச அன்னம்’ என்றே ஒரு வகை இருக்கிறதாம்.

  பொதுவாக அன்னப் பறவைகள் முழுவதும் வெண்மையாகதான் இருக்கும் என்று சொல்வார்கள். அரச அன்னம் கொஞ்சம் ஸ்பெஷல், அதன் அலகும், கால்களும் செக்கச்செவேல் என்று காணப்படும்.

  நான்காவதாக ஒரு நகைச்சுவை விளக்கமும் உண்டு, ’அரச அன்னம்’ என்பதில் அன்னத்தைச் சாதமாகக் கொண்டு ‘ராஜ போஜனம்’ என்றும் மொழி பெயர்க்கலாம். அதாவது, அரசர்கள் உண்ணக்கூடிய, அறுசுவையும் நிறைந்த Rich, Multi Course Meal. காதலன் ஒரு சாப்பாட்டு ராமனாக இருக்கும்பட்சத்தில் காதலியை ‘அடியே, அன்லிமிட்டெட் மீல்ஸே’ என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்குமல்லவா?

  அடுத்து, நான்காவது வரியில் ‘மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்று ஓர் அழகான கற்பனை உள்ளது. ஆனால், திடீரென்று காதலன் ஏன் அப்படிப் பாடவேண்டும்?

  காரணம் இருக்கிறது, இரண்டாவது வரியைக் கவனியுங்கள், ‘நெற்றி’, ‘சொட்டுமே’, ‘பற்றுமே’, ‘ஒற்றுமே’ என்று வல்லினமாகப் பாடுகிறாள் காதலி. அந்த அழுத்தத்தை அவள் தேகம் தாங்குமா என்று காதலனுக்குக் கவலை, ’இனிமேல் வல்லினம் பாடாதே கண்ணே, உனக்கு மெல்லினம் போதும்’ என்கிறான்.

  ‘வல்லினம் பாடினாலே வாய் வலிக்குமா? என்ன கதை விடறீங்க?’ என்று சண்டைக்கு வராதீர்கள். இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரத்தில் பெண்கள் அத்துணை மெல்லியர்களாக இருந்திருக்கிறார்கள். சாட்சிக்கு, இதேபோல் ஓர் அன்னத்தை முக்கியப் பாத்திரமாகக் கொண்ட நளவெண்பாவிலிருந்து ஒரு பாடல்:

  கொய்த மலரைக் கொடுங்கையினால் அணைத்து

  மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து, தையலாள்

  பாதார விந்தத்தே சூட்டினான் பாவை இடைக்(கு)

  ஆதாரம் இன்மை அறிந்து.

  காதலன் ஒரு மலரைப் பறிக்கிறான். அதை உள்ளங்கையில் ஏந்தி வருகிறான், காதலியின் அடர்த்தியான கூந்தலில் அதைச் சூட்டப் பார்க்கிறான்.

  திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, மனத்தை மாற்றிக்கொண்டுவிடுகிறான், காதலியுடைய கால்களில் அந்த மலர்களைச் சூட்டிவிடுகிறான்.

  ஏன்?

  தலையில் பூவைச் சூட்டப்போன அந்த விநாடியில்தான், அவன் அவளது இடையைப் பார்த்திருக்கிறான், அத்தனை மெலிதான இடை, பூவின் பாரத்தைத் தாங்குமா?!

  இப்போது சொல்லுங்கள், வல்லினம் பாடினால் சோழன் குயில் என்னவாகும்!

  ***

  என். சொக்கன் …

  15 02 2013

  076/365

   
  • mokrish 7:49 pm on February 15, 2013 Permalink | Reply

   வல்லினம் மெல்லினம் தவிர இடையினம் பற்றியும் சொல்லிவிட்டீர்கள் .

   நல்லபெண்மணி என்ற படத்தில் ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது ‘ இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் (‘புலமைப்பித்தன் என்று நினைக்கிறேன் ).

   மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
   மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
   என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்

  • amas32 (@amas32) 10:07 pm on February 16, 2013 Permalink | Reply

   //காதலியை ‘அடியே, அன்லிமிட்டெட் மீல்ஸே’// LOL

   அன்பே அன்பே கொல்லாதே….பாட்டில் கவிஞர் வைரமுத்து, பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி என்று எழுதியிருப்பார். அந்த வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதைத் தொடர்ந்து வரும் அடுத்த வரியினால். சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி..விரசமில்லாமல் அதே சமயம் அழகாக அழகைச் சொல்லியியிருக்கிறார்.

   amas32

  • Saba-Thambi 10:15 am on February 19, 2013 Permalink | Reply

   …….”பொதுவாக அன்னப் பறவைகள் முழுவதும் வெண்மையாகதான் இருக்கும் என்று சொல்வார்கள். அரச அன்னம் கொஞ்சம் ஸ்பெஷல், அதன் அலகும், கால்களும் செக்கச்செவேல் என்று காணப்படும்.”……

   அவுஸ்திரேலியாவில் அந்நாட்டுக்ககுரிய (Native) ஒர் அன்னம் உண்டு. அதன் நிறம் கறுப்பு, கறுப்பென்றால் கரிக்க-று -று-ப்பு. ஆனால் அதன் அலகு மட்டும் செக்கச்செவேல் என்றிருக்கும். ( Black swan )

   இவ் நீர்ப்பறவை மேற்கு அவுஸ்திரேலியாவில் பல உண்டு. பூங்காவில் அல்லது “றிசேவில்”
   (Reserves) காணப்படும் இப்பறவையை வெண் அன்னத்துடன் ஒப்பிடும் பொழுது பார்வைக்கு அழகல்ல. பலர் அவதானமாக தான் அதற்கு தீனி போடுவார்கள் .
   காரணம் – யாரையும் திரத்துவதில் வீரன் அதனால் சிறுவைர்கள் மிக்க அவதானத்துடன் பழகுவர்.

   ஓர் யோசனை – வைரமுத்து இப் பறவையை பார்த்தால் என்னத்திற்கு ஒப்பிடுவார்?

   http://en.wikipedia.org/wiki/Black_Swan

  • gopiraji@gmail.com 8:07 pm on February 24, 2013 Permalink | Reply

   Oru Chinna correction. Padathin peyar “Andha Sila Nimidangal”

   Sent from BlackBerry® on Airtel

  • மகாலிங்கம் ஆ 11:11 pm on July 27, 2013 Permalink | Reply

   நளவெண்பா கீழ்க்கண்டவாறு வெண்பா இலக்கணத்தோடு இருக்கவேண்டும்.

   கொய்த மலரைக் கொடுங்கை யினாலணைத்து
   மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து தையலாள்
   பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
   காதார மின்மை யறிந்து.

   • என். சொக்கன் 12:16 pm on July 28, 2013 Permalink | Reply

    நன்றி ஐயா, காரணமாகதான் சொல் பிரித்துக் கொடுத்தேன், சிலருக்கு அப்படிப் பிரித்துத் தந்தால் பார்த்தவுடன் பொருள் புரியும்

 • G.Ra ஜிரா 11:15 am on December 29, 2012 Permalink | Reply
  Tags: எஸ்.ஜானகி, ஏ.ஆர்.ரஹ்மான், குமரகுருபரர், முருகன்,   

  முதல்வனின் முத்தம் 

  முதல்வனே என்னைக் கண் பாராய்
  முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
  காதல் பஞ்சம் வந்து நொந்தேனே
  முத்த நிவாரணம் எனக்கில்லையா
  படம் – முதல்வன்
  பாடல் – வைரமுத்து
  பாடியவர் – எஸ்.ஜானகி
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  ஆண்டு – 1999

  இந்தப் பாடலின் காட்சியமைப்பே சிறப்பானது. இயக்குனர் ஷங்கர் கம்ப்யூட்டர் கிராபிக்சில் புகுந்து விளையாண்டிருப்பார்.

  காதலனாக இருப்பவன் நாட்டுக்குக் காவலனாகவும் இருந்தாலே தொல்லைதான். வேளைக்கொரு ஊடலும் நாளுக்கொரு கூடலும் கிடைக்கவே கிடைக்காது. பசிக்குச் சாப்பிடாமல் கிடைத்த போது மட்டும் சாப்பிடும் காதல் பிச்சைக்காரி நிலை.

  அப்படியாக காதல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடப்பவளுக்கு ஒரு முத்த நிவாரணம் கிடைக்காதா என்றொரு ஏக்கம். அந்த ஏக்கத்தின் தாக்கத்தில் பாடுவதுதான் இந்தப் பாடல்.

  பின்னே… முதல்வன் முத்தம் எளிதாகக் கிடைத்து விடுமா?

  முதல்வனிடம் முத்தம் வேண்டுமென்று அந்தப் படத்தின் நாயகி மட்டும் கேட்கவில்லை. குமரகுருபரரும் கேட்கிறார்.

  ஆனால் அவர் கேட்கும் முதல்வன் நாட்டுக்கு முதல்வனல்ல. எத்தனை அண்டங்களுண்டோ அத்தனை அண்டங்களுக்கும் முதல்வன்.

  மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்
  வனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்
  புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்
  புதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புய
  கதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்
  கனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தல
  முதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமே
  முனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே

  என்னடா… குமரகுருபரசுவாமிகள் முருகனிடம் முத்தம் கேட்கிறார் என்று பார்க்கின்றீர்களா? ஆம். கேட்கிறார். முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் நூலில் அல்லவா கேட்கிறார்!

  முருகனைத் தவிர பிற பந்தங்களை நீங்கிய ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பிரபந்தங்களில் ஒன்றுதான் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். கந்தர் கலிவெண்பாவும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும் கூட அவர் எழுதிய பிரபந்தங்களில் அடங்கம்.

  பிரபந்தம் என்று சிறுகாப்பிய வகையில் அடங்கும். தமிழறிவும் இறையருளும் இருந்தால் நாமும் பிரபந்தம் எழுதலாம். ஆனால் அவை ஆழ்வார் அருளியது போலவோ குமரகுருபரசுவாமி அருளியது போலவோ இருக்குமா!

  உலகத்தைப் படைத்து – அதில்
  உயிர்களைப் படைத்து – அவைகட்கு
  உணர்வைப் படைத்து – அது தணிக்க
  உணவைப் படைத்து – அவற்றிலெல்லாம்
  உள்ளிருக்கும் உயர்வான பொருளைக்
  குழந்தையென்றும்
  மழலையென்றும்
  சின்னஞ் சிறுவனென்றும்
  எண்ணி எண்ணிக்
  கொஞ்சிக் கொஞ்சி உருகும் போது
  திருச்செந்தூர்க் குழந்தையாம்
  முத்துக்குமரன் முத்தமும் முக்தியன்றோ!

  அந்த வீடுபேற்றுக்காகத்தானே குமரகுருபரன் தமிழ்க்கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார். பிறப்பிலே ஊமையாய்ப் பேசாத அவரைத் திருச்செந்தூரிலே பேச வைத்ததும் அந்த முருகக்குழந்தைதானே!

  காதல் பஞ்சத்துக் கதாநாயகி முத்த நிவாரணம் கேட்டால், அருள் நிறைந்த குமரகுருபரரோ முத்த முக்தி கேட்கிறார். அது சரி. கேட்பதையும் கேட்கும் இடத்தில்தானே கேட்க வேண்டும்.

  அன்புடன்,
  ஜிரா

  028/365

   
  • Arun Rajendran 12:50 pm on December 29, 2012 Permalink | Reply

   முதல்வனின் முத்தம் இனித்தது..:-)

   • GiRa ஜிரா 9:09 pm on December 29, 2012 Permalink | Reply

    நன்றி அருண். முத்தமிழ் முதல்வன் முத்தம் இனிப்பதோடு எல்லாமுமாய் இருக்கும்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel