Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 12:30 pm on October 6, 2013 Permalink | Reply  

  இயந்திரப் படைப்பா அவள்? 

  • படம்: இந்தியன்
  • பாடல்: டெலிஃபோன் மணிபோல்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=SfHbknfOOuA

  சோனா, சோனா, இவள் அங்கம் தங்கம்தானா,

  சோனா, சோனா, இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோனா

  கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?

  கடைக்குச் செல்கிறோம். அழகிய சிலை ஒன்றை வாங்குகிறோம். விலை ஐயாயிரம் ரூபாய்.

  பக்கத்திலேயே, கிட்டத்தட்ட அதேமாதிரி இன்னொரு சிலை இருக்கிறது. அதன் விலை ஐம்பதாயிரம் என்கிறார்கள்.

  ஏன் இந்த விலை வித்தியாசம்? இரண்டும் ஒரே சிலைதானே?

  கடைக்காரர் சிரிக்கிறார். ‘சார், இது மெஷின்ல தயாரிச்சது, ஸ்விட்சைத் தட்டினா இந்தமாதிரி நூறு சிலை வந்து விழும், ஆனா அது கையால செஞ்சது, handmadeங்கறதால இந்தமாதிரி இன்னொண்ணை நீங்க பார்க்கவே முடியாது, அதுக்குதான் மதிப்பு அதிகம், காசும் அதிகம்!’

  அப்படியானால் இந்தப் பாடலில் கதாநாயகியை ‘கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?’ என்று வைரமுத்து எழுதுவது புகழ்ச்சியா? அல்லது, நீயும் template அழகிதான் என்று மட்டம் தட்டுகிறாரா? 🙂

  சுவையான குழப்பம், அந்தக் காதலிக்குச் சொல்லிவிடாதீர்கள், பாடிய காதலன் பாடு பேஜாராகிவிடும்!

  கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு புகழ்ச்சியை சீதைக்குக் கம்பரும் செய்கிறார். ஆனால் அவர் காலத்தில் கம்ப்யூட்டர் இல்லை. ஆகவே, ’ஆதரித்து, அமுதத்தில் கோல் தோய்த்து, அவயவம் அமைக்கும் தன்மை யாது என்று திகைக்கும்’ என்கிறார்.

  அதாவது, சீதையைப் படமாக வரைய விரும்பிய மன்மதன் அமுதத்தில் தூரிகையைத் தோய்த்து வரையத் தொடங்கினானாம். ‘இந்த அழகை எப்படி வரையமுடியும்?’ என்று திகைத்து நின்றானாம். அப்படி ஓர் அழகு சீதை!

  ஒருவேளை இந்தப் பாட்டு சீதைக்கும் ராமனுக்கும் டூயட் என்றால், ரஹ்மான் தந்த இதே மெட்டில் கம்பரின் சிந்தனையை  ’அமுதத்தில் கோல்தோய்த்து அந்த மாரன் திகைத்தானா?’ என்று பொருத்திவிடலாம்!

  ***

  என். சொக்கன் …

  06 10 2013

  309/365

   
  • lotusmoonbell 12:45 pm on October 6, 2013 Permalink | Reply

   பிரம்மாவுக்குக் கூட கம்ப்யூட்டர் படைப்புத் தொழில் செய்யத் தேவைப்படுகிறது. கம்பனோ கற்பனைத் தேனில் ஊறித் திளைத்து, திகைக்க வைக்கும் கவிதை படைத்துள்ளார். உண்மையான படைப்பாளி கம்பர்தான்!

  • mokrish 8:01 am on October 8, 2013 Permalink | Reply

   // கம்ப்யூட்டர் கொண்டிவளை // – இது Computer Aided Design தானே? இதில் கம்ப்யூட்டர் வெறும் எழுது கருவிதானே? கவிஞர் அதை Assembly line production என்ற தொனியில் சொல்லவில்லையே. அதனால் No problem

  • amas32 10:10 pm on October 8, 2013 Permalink | Reply

   பிரம்மன் படைப்புக்களும் விஸ்வகர்மாவின் கட்டிடங்களும் மனத்தில் தோன்றி நொடிப் பொழுதில் வெளியில் வியாபிக்கும் தன்மையுடையவை என்று நினைக்கிறேன்.

   //கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா?// என்பதை புதிய டெக்னிக் பயன்படுத்தி இதுவரை பூலோகத்தில் இல்லாதப் படைப்பை பிரம்மன் செய்துள்ளான் என்றே பொருள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் காதலி must be happy only :-))

   amas32

 • என். சொக்கன் 11:22 am on February 27, 2013 Permalink | Reply  

  24 நிமிடங்கள் 

  • படம்: மே மாதம்
  • பாடல்: மின்னலே, நீ வந்ததேனடி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=e4cgBHU26DQ

  சில நாழிகை, நீ வந்து போனது,

  என் மாளிகை, அது வெந்து போனது,

  மின்னலே, என் வானம் உன்னைத் தேடுதே!

  ’நாழிகை’ என்பது பழந்தமிழர் பயன்படுத்திய நேர அளவுகளில் ஒன்று. இன்றைய கணக்குப்படி 24 நிமிடங்களுக்குச் சமம்.

  ஆக, ஒரு நாளில் 24 மணி நேரங்கள், 24 * 60 நிமிடங்கள், 24 * 60 / 24 = 60 நாழிகைகள். இதைப் பகலுக்கு 30, இரவுக்கு 30 என்று பிரித்துள்ளார்கள்.

  நம்முடைய மணிக்கணக்கின்படி, அதிகாலை 6 AMக்கு, முதல் நாழிகை தொடங்குகிறது, 6:25க்கு இரண்டாம் நாழிகை, 6:49க்கு மூன்றாம் நாழிகை, and so on.

  இதனைக் கணக்கிடுவதற்காக, ‘நாழிகை வட்டில்’ என்ற ஒரு கருவியையும் தமிழர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். Hour Glass போன்ற அமைப்பு, அதில் நீர் அல்லது மணலை நிரப்பியிருப்பார்கள், அது முழுவதும் வடிந்து கீழே வந்து சேர்வதற்கு ஆகும் நேரம், ஒரு நாழிகை, 24 நிமிடங்கள்.

  கம்ப ராமாயணத்தில் பிரதான வில்லனாகிய ராவணனைவிட அதிகம் பேசப்பட்ட ஓர் எதிர்மறைப் பாத்திரம் உண்டு: அந்த ராவணனின் மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன்.

  இந்திரஜித்தின் வில்வன்மையைச் சொல்ல வரும் கம்பர், ‘நாழிகை ஒன்று, வளையும் மண்டலப் பிறை என நின்றது அவ்வரிவில்’ என்கிறார். இந்த அட்டகாசமான வர்ணனையைப் புரிந்துகொள்வதற்கு, நாம் கம்பரின் கண்களில் நின்று கற்பனை செய்யவேண்டும்.

  வில்லை எடுக்கிறான் இந்திரஜித், அதில் அம்பு தொடுக்கிறான், அதனால் வில் வளைகிறது, அந்த அம்பை எய்கிறான்.

  இப்போது, அவனுடைய கை தோளுக்குப் பின்னே செல்கிறது, இன்னோர் அம்பை எடுக்கிறான், அதே வில்லில் தொடுக்கிறான், எய்கிறான்.

  ஆனால், இந்திரஜித் அடுத்த அம்பை எடுத்துத் தொடுப்பதற்குள் வளைந்த வில் நிமிர்ந்து நேராகிவிடுமல்லவா?

  அதுதான் இல்லை, முதல் அம்பு வில்லில் இருந்து விடுபட்டுச் சென்ற அதே வேகத்தில் அடுத்த அம்பை எடுத்துத் தொடுத்துவிடுகிறான், ஆகவே, வளைந்த வில் அப்படியே வளைந்தே நிற்கிறது. அதிலேயே தொடர்ந்து மூன்றாவது, நான்காவது அம்புகளைச் செலுத்திக்கொண்டே இருக்கிறான்.

  இடைவெளியில்லாமல் இப்படி அம்புகளைத் தொடர்ந்து எய்த காரணத்தால், இந்திரஜித்தின் வில் ஒரு நாழிகைப் பொழுதுக்கு, அதாவது 24 நிமிடங்களுக்கு நிமிராமல் வளைந்தே காணப்பட்டதாம், அதைப் பார்ப்பதற்குப் பிறைச் சந்திரன்போல் தோன்றியதாம்.

  சர்வதேச அளவில் 60 நிமிட ‘மணி’யை நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால், 24 நிமிட ‘நாழிகை’ நம்முடைய தினசரிப் பேச்சில் அதிகம் இடம்பெறுவதில்லை. ஆனால், தமிழர்கள் நாளை 24 நிமிடக் கூறுகளாகப் பிரித்ததில் ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

  Time Managementபற்றிப் பேசும் நிபுணர்கள் நமது நேரத்தைச் சரியானபடி பயன்படுத்திக்கொண்டு வேலைகளைச் செய்வதற்குப் பல உத்திகளை முன்வைக்கிறார்கள். அதில் பிரபலமான ஒன்று, Pomodoro Technique.

  இந்த உத்தியைப்பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு, இங்கே அது அவசியமில்லை என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்: ஒரே வேலையைத் தொடர்ந்து நெடுநேரம் செய்தால் சோர்வாகும், அதற்காக அடிக்கடி வேலைகளை மாற்றிக்கொண்டிருந்தால் எதையும் உருப்படியாகச் செய்யமாட்டோம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில், எந்த இடையூறும் இல்லாமல் ஒரே வேலையைச் செய்வது, அதன்பிறகு சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு, மீண்டும் அதே நேர இடைவெளியில் அதே வேலையைத் தொடர்வது, அல்லது அடுத்த வேலையைச் செய்வது…

  இப்படி ஒவ்வொரு நாளையும் அந்தக் குறிப்பிட்ட நேர இடைவெளிகளாகப் பிரித்துக்கொண்டு வேலை செய்தால், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்துமுடித்துவிடலாம் என்பதே இந்த உத்தியின் அடிப்படை. பல பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் இந்த முறை பயன்படுத்தப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பல லட்சம் பேர் இதனால் பயன் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள்.

  Pomodoro Technique சொல்லும் அந்த ”Perfect” நேர இடைவெளி, 25 நிமிடம். கிட்டத்தட்ட ஒரு நாழிகை 🙂

  ***

  என். சொக்கன் …

  27 02 2013

  088/365

   
  • Ananth 12:55 pm on February 27, 2013 Permalink | Reply

   I knew about நாழிகை as well as Pomodoro Technique, but never connected them 🙂 Good one

  • amas32 (@amas32) 2:13 pm on March 1, 2013 Permalink | Reply

   நம்முடைய பழைய பெருமைகளை பாதுகாத்து நடைமுறை வழக்கத்தில் கொண்டு வந்தாலே நாம் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். நடுவில் வந்த ஆங்கிலேயர ஆதிக்கம் நம் பண்பாட்டினையும் தொன்று தொட்டு வந்த பழக்க வழக்கங்களையும் சீர் குலைத்து விட்டன.

   காதல் தாபத்தை நாழிகை வந்து சென்ற காதலியின் தாக்கத்தைப் பாடலில் அழகாகச் சொல்கிறார் வைரமுத்து. நாழிகையின் நுணுக்கத்தை அறிந்தவர் தானே இந்தப் பாடலை இரசிக்க முடியும்?

   amas32

 • G.Ra ஜிரா 10:16 am on January 11, 2013 Permalink | Reply  

  கன்னத்தில் முத்தமிட்டால் 

  கொஞ்ச வேண்டும் என்ற சூழல் வந்தால் கன்னத்தைத் தொடாத கவிஞன் இல்லை.

  கண்ணம்மா என் குழந்தை என்று எழுதிய பாரதியும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது கள்வெறி கொடுக்கும் மயக்கத்தைக் கொடுப்பதைக் குறிப்பிடுகிறான்.

  சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

  கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
  படம் – நீதிக்கு தண்டனை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பாரதி இப்படிச் சொல்லியிருக்க, கண்ணாதாசனா கன்னதாசனா என்று ஐயத்தை உண்டாக்கும் வகையில் பாடல்களை எழுதியிருக்கிறார். கன்னம் என்பதே தித்திப்பது என்பது அவர் கருத்து.

  முத்துக்களோ கண்கள்
  தித்திப்பதோ கன்னம்
  படம் – நெஞ்சிருக்கும் வரை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பார்க்கப் பார்க்க மின்னும் கன்னம் பருவப் பெண்ணின் கன்னம் என்பதை ரசித்தவர்தானே கண்ணதாசன். அதுதான் இந்தப் பாடலில் இப்படி வெளிப்படுகிறது.

  பால் வண்ணம் பருவம் கண்டு
  வேல் வண்ணம் விழிகள் கண்டு

  கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
  படம் – பாசம்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தித்திக்கும் கண்ணம் என்று சொல்லியாகி விட்டது. ஆனால் கன்னம் ஒரு கிண்ணம் என்றும் அந்தக் கிண்ணத்திலே கறந்த பாலின் சுவையிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

  விழியே விழியே உனக்கென்ன வேலை
  விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

  கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
  கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
  படம் – புதிய பூமி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தங்கமானது கன்னம் என்றால் காதல் விளையாட்டில் அதில் சேதாரம் இருக்கும் என்பது தெரிந்தவரும் அவர்தான். அதனால்தான் கன்னத்தில் என்னடி காயம் என்று குறும்போடு கேட்கிறார்.

  கன்னத்தில் என்னடி காயம்
  இது வண்ணக்கிளி செய்த மாயம்
  படம் – தனிப்பிறவி
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

  நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
  நடிக்கும் நாடகம் என்ன
  படம் – சிஐடி சங்கர்
  இசை – வேதா

  நாணத்தில் மின்னும் கன்னம் காதல் சோகத்திலும் கண்ணீர் சேர்ந்து மின்னும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

  நினைவாலே சிலை செய்து
  உனக்கான வைத்தேன்.. திருக்கோயிலே ஓடி வா
  ..
  கண்ணீரிலே நான் தீட்டினேன்
  கன்னத்தில் கோலங்கள்
  படம் – அந்தமான் காதலி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  கவியரசர் மட்டுந்தானா இப்படி? அடுத்து வந்த வாலியின் கை வண்ணத்து கன்னத்து அட்டகாசங்களைப் பார்ப்போம்.

  கன்னத்தை அத்திப்பழம் என்று உவமிக்கும் வாலி.. அந்தப் பழத்தைக் கிள்ளி விடவா என்று கேட்கிறார். மெல்லிய நண்டின் கால் பட்டாலே சிதைந்து போகும் மென்மையான பழம் அத்தி என்று அகநானூறு சொல்கிறது. கன்னத்தை அப்படியொரு பழத்துக்கு ஒப்பிடுவதும் அழகுதான்.

  வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
  வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ

  அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
  படம் – தெய்வத்தாய்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  அத்திப் பழம் என்று உவமித்த அதே வாலி கன்னத்தை மாம்பழம் என்றும் சொல்லத் தவறவில்லை. மரத்தில் பழுக்கும் அந்த மாம்பழங்களை விட காதலியின் கன்ன மாம்பழங்களைத்தான் காதலன் விரும்புவானாம்.

  நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
  அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
  அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை
  இந்தக் கன்னம் வேண்டும் என்றான்
  படம் – எங்க வீட்டுப் பிள்ளை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பழம் என்று சொன்னால் அணில் கடித்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ… தாமரைப் பூவைப் போன்ற கன்னங்கள் என்றும் வர்ணித்து விட்டார். அந்தத் தாமரைக் கன்னம் என்னும் கிண்ணத்தில்தானே தேன் இருக்கிறது.

  தாமரைக் கன்னங்கள்
  தேன்மலர்க் கிண்ணங்கள்
  படம் – எதிர் நீச்சல்
  இசை – வி.குமார்

  கண்ணதாசன் கன்னத்தில் என்னடி காயம் என்று கேட்டால்… வாலியோ கன்னத்து முத்தங்களால் கன்னிப் போகும் கன்னங்களே அத்தானின் அன்புக்கு அடையாளச் சின்னங்கள் என்று அடித்துச் சொல்கிறார்.

  அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
  அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்
  படம் – உயர்ந்த மனிதன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  நறுந்தேனை கிண்ணத்தில் வடித்து எடுத்து வருகிறாள் ஒருத்தி. அதெல்லாம் எதற்கு? உன் கன்னத்தில் தேன் குடித்தால் ஆயிரம் கற்பனை ஓடி வராதா என்று ஏங்குகிறது கவிஞனின் உள்ளம்.

  கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
  எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
  கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை ஓடி வரும்
  படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
  இசை – இசைஞானி இளையராஜா

  கண்ணன் ஒரு கைக்குழந்தை
  கண்கள் சொல்லும் பூங்கவிதை
  கன்னம் சிந்தும் தேனமுதை
  படம் – பத்ரகாளி
  இசை – இசைஞானி இளையராஜா

  கன்னத்தை பழமென்றும் பூவென்றும் வர்ணிக்க கண்ணதாசனாலும் வாலியாலும் மட்டுந்தான் முடியுமா? இதோ இருக்கிறார் வைரமுத்து.

  தொட்டுரச தொட்டுரச மணக்கும் சந்தனம். அப்படியான சந்தனக் கிண்ணமடி உன் கன்னம். அதைத் தொட்டுரசி தொட்டுரசி மணக்குதடி என் கைகள் என்று கவிதையை அடுக்குகிறார்.

  ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
  தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
  படம் – சிவப்புமல்லி
  இசை – சங்கர் கணேஷ்

  தொட்டுப் பார்த்தால் பளபளப்போடு வழவழக்கும் பட்டை கன்னத்திற்கு ஒப்பிடாமல் போவாரோ கவிஞர்.

  பட்டுக் கன்னம்
  தொட்டுக் கொள்ள
  ஒட்டிக் கொள்ளும்
  படம் – காக்கிச்சட்டை
  இசை – இசைஞானி இளையராஜா

  கண்ணுக்கு மையழகு.. என்று சொல்லும் போது கன்னத்தில் குழியழகு என்று எழுதிய வைரமுத்து ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் போது கன்னத்தில் கன்னம் வைத்த காதலனைப் பற்றியும் சொல்கிறார்.

  காக்கிச்சட்ட போட்ட மச்சான்
  கன்னத்திலே கன்னம் வெச்சான்
  படம் – சங்கர் குரு
  இசை – சந்திரபோஸ்

  தன்னுடைய குழந்தை கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில்ஜில்ஜில்ஜில் என்று எழுதியதும் இதே வைரமுத்துதான். ஆனாலும் காதல் குறும்பில் கன்னத்தில் முத்தமிட வரும் காதலனின் கன்னத்தில் தேளைப் போலக் கொட்டுவேன் என்றா எழுதுவது! உயிர் போக்கும் வலி அல்லவா அது!

  நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்
  நெய்விளக்க ஏந்திக்கிட்டேன்
  உன்னோட கன்னத்திலே முத்தம் குடுக்க
  ..
  கன்னத்திலே தேளப் போலே கொட்டி விடுவேன்
  படம் – ஸ்டார்
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

  அன்புடன்,
  ஜிரா

  041/365

   
  • niranjanbharathi 10:24 am on January 11, 2013 Permalink | Reply

   தேன் கன்னம், மதுக் கன்னம் , சந்தனக் கன்னம் ஆகியவற்றோடு சேர்ந்து இது தான் “ஜீரா” கன்னம் போலும். ஜாமூனைச் சூழந்து நிற்கும் ஜீரா 🙂 🙂

  • amas32 (@amas32) 2:43 pm on January 13, 2013 Permalink | Reply

   What a myriad of songs with cheeks alone! ;-)) You are one genius only 🙂

   amas32

  • தேவா.. 3:41 pm on January 13, 2013 Permalink | Reply

   கன்னங்களுக்கு பல உவமைகள்…..கண் பட்டிருச்சு ஜீரா…. 🙂

 • mokrish 10:32 am on January 9, 2013 Permalink | Reply  

  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

  Disclaimer கம்பன் பற்றியோ இராமாயணம் பற்றியோ விரிவாக பேசும் அருகதை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவேயில்லை. இது திரைப்பாடல் வரிகள் எனும் டம்ளருக்குள் நீச்சல் அடிக்கும் முயற்சி.

  ஒரு பாடலில் இரண்டு கேள்விகள்.

  கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ?
  வைதேஹி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ?

  கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ?

  இது சுலபம். இராமயணத்தை பள்ளியில் பாடமாக மட்டும் படித்தவர்க்கும் தெரியும் அந்த ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ தருணம். (அது அந்த காலம். இப்போது நோக்கியா என்று சொன்னால் அவள் uncle என்று சொல்லிவிட்டு போகும் அபாயம் உண்டு) கண்ணோடு கண்ணை கவ்வி, மெல்லுடா என்னை தின்னுடா என்று பார்த்தாலே பரவசமான தருணம். இருவரும் பார்வையாலே தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே என்று கம்பன் சொல்லும் பொன் தருணம்

  வைதேஹி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ?

  இதுவும் தெரியும். வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் ஸ்ரீராமன் தந்த பொன் வண்ண மாலையை பொங்கும் மகிழ்வோடு வைதேஹி ஏற்றுக்கொண்ட நேரமும் தெரியும்

  யோசித்து பார்த்தால் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று தோன்றுகிறது. ராமன் வில் ஒடிக்கும் முன் வந்துவிட்ட காதல். அவள் சுயம்வரம் கொள்ள வேறு சில மன்னவர்களும் மிதிலைக்கு வந்திருந்த வேளை. சட்டென்று ஜானகி மனதில் கலவரம் ‘இவன் வில்லை முறிக்கவில்லை என்றால் என்ன ஆகும்’ என்று கவலை. காணாமல் போன பக்கங்களில் சீதையின் நிலை என்ன? கண்ணதாசன் அழகாக ஜனகனின் மகளின் நிலையை விவரிக்கிறார்

  மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
  இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனை தேடி நின்றாள்

  என்று ஆரம்பித்து நாணம் ஒரு புறம் ஆசை ஒரு புறம் கவலை மறுபுறம் என்று அவள் நிலை சொல்கிறார்.

  கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
  அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

  மணியும் மலரும் கூட உருகும் என்ற வரிகள் எவ்வளவு அழகு. நேரே பார்த்து வர்ணனை சொல்வது போல் தொடர்ந்து

  நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
  அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை

  என்று வாடும் ஒரு பெண்ணின் கோலத்தை கண்ணெதிரே காட்சியாக விரிக்கிறார். முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம் நடக்க அவள் சிந்தையெல்லாம் அவனிடம் இருந்ததை சொல்லி பிரமிக்க வைக்கிறார்.

  மன்னவரெல்லாம் சுயம்வரம் காண மண்டபம் வந்துவிட்டார்
  ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்

  அப்புறம் என்ன ? எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர். வசந்தத்தில் ஓர் நாள் கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் மணமுடித்து – இனியெல்லாம் சுகமே

  மோகனகிருஷ்ணன்

  039/365

   
  • arvenky 10:53 am on January 9, 2013 Permalink | Reply

   I remembered this song late in the night but didnt had time to tweet it 😦

  • azad 2:26 pm on January 9, 2013 Permalink | Reply

   தேவர் எடுத்த மாணவன் திரைப்படத்திற்கு வாலி ஒரு பாடல் எழுதியிருக்கிறார் , அந்தப் பாடலை தேவர் வாங்கிப் பார்த்துவிட்டு , ” என்னப்பா நான் என்ன எம்.ஜி.ஆர் பாட்டா கேட்டேன் ஒம்பாட்டுக்கு ராமன் ஜானகின்னு எழுதியிருக்க.. நம்ம முருகனை பத்தி எழுதக் கூடாதா ? ” எனக் கேட்டிருகிறார்.

   உடனே வாலி

   மின்னுகி்ன்ற கண்ணிரெண்டும் வேலாயுதம்
   மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்

   என்று எழுதி கொடுத்தாராம்….

   நன்றி: பணபுடன் கூகுள் குழுமத்தில் நண்பர் மரவண்டு கணேஷின் இடுகைக்கு.

  • amas32 (@amas32) 2:59 pm on January 13, 2013 Permalink | Reply

   இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அப்படியே மனதைப் பிழியும். அருமையாக விளக்கியுள்ளீர்கள் 🙂 கண்ணதாசன் அப்படியே ஜானகியாக மாறி பாட்டை வடித்துள்ளார். Hats off to him! Wished he had lived longer.

   amas32

 • என். சொக்கன் 9:32 am on December 23, 2012 Permalink | Reply  

  கண்ணனின் நிறம் 

  கண்ணனின் நிறம்.

  காதலின் நிறம் பார்த்தோம். கண்ணனின் நிறம் என்ன? பாசுரம் முதல் திரைப்பாடல் வரை கண்ணன் வண்ணம் சொல்லும் வரிகள் ஏராளம். அவன் நீல மேக சியாமள வண்ணன். கருநீலம். கருமை நிறக்கண்ணன். இருட்டின் நிறம். நிலவின்  தேய்கின்ற பருவம் கிருஷ்ண  பட்சம் எனப்படுகிறது.

  தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரத்தில்

  காரொளி வண்ணனே

  கண்ணனே கதறுகின்றேன்

  என்று பாடுகிறார். கரிய மேகத்தை போல் வண்ணமா?  கார் முகில் வண்ணன். பாரதியார்  காக்கையின் கரிய நிறம் பார்த்து கண்ணன் நினைவு வந்ததாக பாடுகிறார்.  கண்ணதாசனும் இந்த கரிய நிறத்தையே வழிமொழிகிறார். கோபியர் கொஞ்சும் ரமணனை

  மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா

  மாதவா கார்மேக வண்ணா – மதுசூதனா

  வேறு ஒரு பாடலிலும் கரிய நிறத்தையே தொடர்கிறார்

  கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை

  காணாத கண்ணில்லையே
  ஒரு பழைய அழகான தாலாட்டு பாடலில் மருதகாசி நீலத்தை கண்ணன் வண்ணமாக கொள்கிறார். கருப்பு வண்ணம் குழந்தையை மிரளவைக்கும் என்று நினைத்து அவர்  நீலத்தை மட்டும் வைத்துக்கொண்டு மேகத்தை தள்ளிவைக்கிறார்.
  நீல வண்ண கண்ணா வாடா !
  நீ ஒரு முத்தம் தாடா
  வாலி இந்த கருப்பா  நீலமா கருநீலமா என்ற கேள்விக்கு  பட்டிமன்ற நடுவரை போல் ஒரு தீர்ப்பு சொல்கிறார்
  கங்கை கரை மன்னனடி கண்ணன் மலர் கண்ணனடி
  வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர் கள்வனடி
  வங்கக்கடல் போல் கண்ணன் நிறம் என்றால் வாலி எல்லா தரப்பையும் ஏற்றுக்கொள்கிறார் என்று நினைக்கிறேன்.
  வைரமுத்து கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர். . ஆனாலும் கண்ணன் வண்ணம் பாடாமல் இருக்க முடியுமா? வகையாக கிடைத்தார் ரஜினிகாந்த் – கரு வண்ணம் பற்றி பாடல் எழுத. தில்லானா தில்லானா பாடலில் எழுதிய வரிகள் கண்ணன் நிறம் கூறும்.

  கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே

  கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே

  இன்னொரு பாடலில் அவர் வரிகள்

  வான் போலே வண்ணம் கொண்டு

  வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே

  கடல் வண்ணம், கார்மேக வண்ணம் நீல வண்ணம் என்ற பலரும் சொன்னாலும் வைரமுத்துவின் இன்னொரு கற்பனை அபாரம். கண்ணாமூச்சி ஏனடா என்ற பாடலில்

  பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

  என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா

  என்ற கற்பனை அற்புதம். இதை ராதையும் ஆண்டாளும் மீராவும் பாடிய வரிகளாகவே பார்க்கிறேன்!
  ***
  மோகன கிருஷ்ணன்
  022/365
   
  • தேவா.. 1:40 pm on December 23, 2012 Permalink | Reply

   வண்ணமயாமான ஆராய்ச்சி.

  • niranjanbharathi 3:25 pm on December 23, 2012 Permalink | Reply

   அருமையான பதிவு இது. நம் கவிஞர்களும் எண்ண மயமானவர்கள் மட்டுமல்லர். வண்ணமயமானவர்களும் கூட. ஏனோ இதையெல்லாம் படிக்கும் போது எனக்கு தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ , மனசுல என்ற வாலி அய்யா பாடல் நினைவுக்கு வருகிறது.

  • amas32 (@amas32) 4:53 pm on December 23, 2012 Permalink | Reply

   மோகன கிருஷ்ணன் 🙂 நீங்கள் உங்கள் பெயருக்கு ஏற்ப பாடல் வரிகள் தேர்ந்தெடுத்து அலசி உள்ளீர்கள் 🙂

   கருத்த மேகமே நாடு செழிக்க மழை பொழியும். கார்முகில் வண்ணனே நாம் செழிக்கக் கருணை மழை பொழிவான். கருப்புக்கு நகை போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பார்கள். அவர்களுக்கு தான் நகை எடுப்பாகத் தெரியும். கருப்பே அழகு காந்தலே ருசி என்ற வசனமும் உண்டு.

   பூணித் தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன்-மேனி என்று பெரியாழ்வார் (நிராட்டல் ) பாடியுள்ளார். மண்ணில் விழுந்து விளையாடி புழுதி படிந்து கண்ணனின் கரிய மேனி தக தகவென மின்னுவது போல தோற்றத்தைத் தருகிறது. அதனால் கருப்புக்கும் ஒரு அழகு உண்டு, நாம் கரிய நிறத்தவரை அன்போடு நோக்கும்பொழுது 🙂

   amas32

  • ஸ்ரீதர் நாராயணன் 8:48 pm on December 27, 2012 Permalink | Reply

   சினிமாப் பாட்டுககளை விடுங்கள். கண்ணன் நிறம் என்று நேரடியாகவே பார்த்துவிடலாம்.

   கருநன் (கருமை நிறத்தவன்) – என்பதே கண்ணனாக மாறியதாக ஒரு வழக்கு உண்டு.

   கிருஷ்ண, ஷ்யாமள, நீளா – எல்லாமே வடமொழியில் கருப்பையே குறிக்கும். குறிப்பாக ‘நீள’ம் என்பது வெளிச்சம் இல்லாமையை, சூண்யத்தைக் கூட உருவகமாக சொல்லலாம்.

   தமிழில் ‘நீளத்தில்’ ள-விற்கு பதிலாக ‘ல’ போலியாக வந்து ‘நீல’மாக மாறி நாம் அதை தனி நிறமாக வழக்கில் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீலம் என்பது கருமையின் ஒரு கவசம்தான். இன்றும் கூட திரைப்படங்களில் ‘நைட் எஃபெக்ட்’ எடுக்க வேண்டும் என்றால் நீல வடிகட்டிகளைத்தான் (Filters) பயன்படுத்துகிறோம்.

   கதிரவனை வழிபடுவது போலவே நாம் இருளையும் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். கண்ணனும் கருப்பு. இராமனும் கருப்பு. ஏன் நம் தமிழர் பாரம்பரியமான திரௌபதி வழிபாட்டில் கூட திரௌபதி கருப்புதான். மகாபாரதத்தில் அவள் பெயரும் கிருஷ்ணா தான்.

  • Sethuraman 9:16 pm on December 27, 2012 Permalink | Reply

   beautiful 🙂 🙂

  • Kumar tp 9:23 pm on December 27, 2012 Permalink | Reply

   Well written mate. Recent book read abt Kannan is Krishna Key .

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel