Updates from March, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 2:06 pm on March 30, 2013 Permalink | Reply  

  மார்பெழுத்து 

  • படம்: முதல்வன்
  • பாடல்: முதல்வனே, என்னைக் கண் பாராய்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=w0XW5GFiDEA

  கொஞ்ச நேரம் ஒதுக்கி, கூந்தல் ஒதுக்கி,

  குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்!

  பீலி ஒன்றை எடுத்து, தேனில் நனைத்து,

  கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்!

  முதலமைச்சரைக் காதலிக்கும் ஒரு பெண் அவனுடைய நேரத்தை வேண்டிப் பாடுவதாக அமைந்த பாடல் இது. அதற்கு ஏற்ப முதல்வர், அமைச்சர், அதிகாரி, அரசாங்க அலுவலகம் சார்ந்த administration, hierarchy, bureaucracy, red tapism வார்த்தைகளாகத் தேடித் தொகுத்து, அதேசமயம் இதனை ஒரு ரசமான காதல் பாடலாகவும் தந்திருப்பார் வைரமுத்து. உதாரணமாக: கொடியேற்றம், பஞ்சம், நிவாரணம், நேரம் ஒதுக்குதல், குறிப்பு எழுதுதல், கையொப்பம், நிதி ஒதுக்குதல், திறப்பு விழா, ஊரடங்கு, வரிகள், நகர்வலம்…

  இதற்கெல்லாம் நடுவில், நம்முடைய தினசரிப் பேச்சிலும், சினிமாப் பாடல்களிலும்கூட அதிகம் பயன்படாத ஒரு வார்த்தை, ‘பீலி’.

  இந்த வார்த்தையைக் கேட்டதும், பள்ளியில் படித்த ஒரு திருக்குறள் ஞாபகம் வரும், ‘பீலிபெய் சாகாடும் அச்சு இறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’. இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள், என்னதான் லேசான மயில் இறகு என்றாலும், அதை Overload செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் வண்டி உடைந்துவிடும்.

  ஆக, பீலி என்றால் மயில் இறகு?

  ’பீலி சிவம்’ என்று ஒரு பிரபலமான நடிகர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணன் தலையில் மயில் இறகு உண்டு, சிவனுக்கும் பீலிக்கும் என்ன சம்பந்தம்?

  எனக்குத் தெரியவில்லை, ஓர் ஊகத்தைச் சொல்கிறேன், கோவையாக வருகிறதா என்று பாருங்கள்!

  கந்த புராணத்தில் ’குரண்டாசுரன்’ என்று ஓர் அசுரன், கொக்கு வடிவத்தில் திரிந்தவன், அவனை வீழ்த்தினார் சிவன், அந்த வெற்றிக்கு அடையாளமாக, அந்தக் கொக்கின் சிறகைத் தலையில் சூடிக்கொண்டார். இதைப் போற்றிப் பாடும் மாணிக்கவாசகரின் பாடல் வரி, ‘குலம் பாடி, கொக்கு இறகும் பாடி, கோல் வளையாள் நலம் பாடி…’

  சிவனுக்குப் ‘பிஞ்ஞகன்’ என்று ஒரு பெயர் உண்டு. இதற்குப் ‘பீலி அணிந்தவன்’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இதுதான் ‘பீலி சிவம்’ என்று மாறியிருக்குமோ?

  எனக்குத் தெரிந்து சிவன் மயில் இறகை அணியவில்லை, கொக்கின் இறகைதான் அணிந்தார். அப்படியானால் ‘பீலி’ என்பது மயிலிறகா, அல்லது வெறும் இறகா?

  பெரிய புராணத்தில் ஒரு பாடலில் ‘மயில் பீலி’ என்று ஒரு வார்த்தை வருகிறது. ஒருவேளை ‘பீலி’ என்பதே மயிலிறகாக இருந்தால், ‘மயில் பீலி’ என்று தனியே குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லையே!

  மேலே நாம் பார்த்த திருக்குறளில்கூட, மயிலுக்கு வேலையே இல்லை, இறகு என்று பொருள் கொண்டாலே அதன் அர்த்தம் கச்சிதமாகப் பொருந்துகிறது.

  ஆக, ‘பீலி’ = இறகு என்பது என் கணிப்பு. உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!

  அது நிற்க. சொல் ஆராய்ச்சி நிறைய செய்தாகிவிட்டது, கொஞ்சம் ஜொள் ஆராய்ச்சியும் செய்வோம்.

  இந்தப் பாடலில் வரும் முதல்வர் பீலியை எடுத்து (அதாவது, இறகுப் பேனாவை எடுத்து) தேனில் நனைத்து, காதலியின் மார்பில் கையொப்பம் இடுகிறார். இதென்ன விநோதப் பழக்கம்?

  இன்றைக்குப் பெண்கள் கையிலும் தோளிலும் காலிலும் மருதாணி அணிவதுபோல், அன்றைக்குத் தங்களின் மார்பில்கூட சந்தனத்தால் பலவிதமான பூ அலங்காரங்களை வரைந்துகொள்வார்கள். ஒருவிதமான மேக்கப். அதன் பெயர் ‘தொய்யில்’.

  அதைதான் இந்த முதல்வர் சுட்டிக்காட்டுகிறார், ‘பெண்ணே, உன் மார்பில் சந்தனத்தால் பூ அலங்காரமெல்லாம் எதற்கு? தேனைத் தொட்டு என் கையெழுத்தைப் போடுகிறேன்.’

  ***

  என். சொக்கன் …

  30 03 2013

  119/365

   
  • David 2:21 pm on March 30, 2013 Permalink | Reply

   எங்கள் ஊரில் பனங்கிழங்குக்கு நடுவில் இருக்கும் அந்த ஒற்றை குருத்துக்கு ‘பீலி’ என்றும் சொல்வர்.

   • Saba 3:27 pm on March 30, 2013 Permalink | Reply

    நம்ம ஊரிலும் அதே தான்

  • இசக்கியப்பன் 2:26 pm on March 30, 2013 Permalink | Reply

   பனங்(கொட்டை)கிழங்கில் இருந்து வரும் முதல் இலையையும் பீலி என்று அழைப்பதுன்டு

  • Saba 3:52 pm on March 30, 2013 Permalink | Reply

   பதிவை படித்த பின் அகராதி புரட்டியபோது……

   பீலி: 1. மயில், மயில் தோகை, மயில் தோகை விசிறி,
   2. வெண் குடை (white umbrella)
   3. பொன்
   4. மகளிரின் கால் விரல் அணி ((toe-ring)
   5. சிறு ஊது கொம்பு (small trumpet)
   6. மலை
   7. கோட்டை மதில்
   8. நத்தை ஓடு
   9. பனங்குருத்து
   10. நீர்த்தொட்டி (water trough)

   Could it be #5 ??

  • PVR 4:08 pm on March 30, 2013 Permalink | Reply

   செத்தி மந்தாரம், துளசி, பிச்சக மாலை
   சார்த்தி குருவாயுரப்பா நின்னெ கணி காணேணம்

   என்று மிகவும் புகழ்பெற்ற மலையாளப்பாட்டு. அதில் அடுத்த வரி, “மயில்பீலி சூடிக்கொண்டும், மஞ்சள் துகில் சுற்றிக்கொண்டும்…” என்று வரும்.

   ஆக, பீலி=இறகு. அதிகம் பேசப்படுவது, மயிலிறகு. 🙂

   http://m.youtube.com/#/watch?v=peFYo1MZzRQ&desktop_uri=%2Fwatch%3Fv%3DpeFYo1MZzRQ

   • amas32 (@amas32) 8:42 pm on March 30, 2013 Permalink | Reply

    இந்த பாட்டுக்கான லின்குக்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙂

    amas32

  • Vijay 4:27 pm on March 30, 2013 Permalink | Reply

   அப்டியே லாபி என்ற சொல்லைக் குறித்து ஒரு சிறிய விளக்கம் தர முடியுமா?
   முதலில் இது தமிழ்ச் சொல்லா? அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மட்டும் உரிய சொல்லா?

   • என். சொக்கன் 5:15 pm on March 30, 2013 Permalink | Reply

    Lobby : very popular English word

  • amas32 (@amas32) 8:47 pm on March 30, 2013 Permalink | Reply

   கவிதைக்கு வேண்டுமானால் தேனைத் தொட்டு கையெழுத்துப் போடுவது ரொமான்டிக்காக இருக்கலாம். ஆனால் உண்மையில் சருமம் பிசு பிசுவென்று இருந்து ஈயும் எறும்பும் தான் மொய்க்கும்! 🙂

   பீலி என்றால் இறகு என்ற பொருளில் தான் சரியாக வருகிறது இல்லையா?

   amas32

  • GiRa ஜிரா 8:59 am on April 1, 2013 Permalink | Reply

   பீலியை இறகு என்று எடுத்துக் கொள்வது மிகப் பொருத்தம். பீலி சிவம்… ஒரு நல்ல நடிகர். முந்தியெல்லாம் டிவி நாடகங்கள்ள தவறாம வருவாரு. பழைய படங்கள்ளயும் வந்திருக்காரு. இப்போது நம்மோடு இல்லைன்னு நெனைக்கிறேன்.

  • Kaarthik Arul 1:06 pm on April 3, 2013 Permalink | Reply

   மயில் பீலி என்று மலையாளத்தில் அதிகமான பாடல்களில் பயன்படுத்தப் படுகிறது. அதனால் இறகு என்ற அர்த்தம்தான் சரி

 • என். சொக்கன் 11:13 am on January 7, 2013 Permalink | Reply  

  அன்னமே! 

  • படம்: பாண்டி நாட்டுத் தங்கம்
  • பாடல்: ஏலேலக்குயிலே
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன்
  • Link: http://www.youtube.com/watch?v=C3FKJg4qEo8

  ஏலேலக்குயிலே, ஏலமலை வெயிலே,

  ஆலோலம் பாடும் அன்னமே, ஒயிலே,

  வாடாத வாழைக் குருத்தே, மானே,

  வாரேனே மாமன் நானே!

  இந்தப் பாடலின் கதாநாயகியை ’ஆலோலம் பாடும் அன்னம்’ என்று பாராட்டுகிறார் கங்கை அமரன், அவருக்கு முன்னோடி, உண்மையான ‘ஆலோலம் பாடிய அன்னம்’, முருகனின் நாயகி, வள்ளி.

  வயலில் தானியங்கள் விளைந்து நிற்கும் நேரம், அவற்றைத் தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்டுவதும் தவறு, அதற்காக அவை அங்கேயே தங்கி நிறையச் சாப்பிடுவதற்கு அனுமதித்தாலும் அறுவடையில் குறைபாடு வரும். ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’ என்று அழைக்கப்படுகிறது.

  கந்த புராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலம், தினை வயலில் இருக்கும் வெவ்வேறு பறவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறார் வள்ளி. அந்தப் பாடல்:

  ’பூவைகாள், செங்கண் புறவங்காள், ஆலோலம்!

  தூவி மா மஞ்ஞைகாள், சொல் கிளிகாள், ஆலோலம்!

  கூவல் சேர்வுற்ற குயில் இனங்காள், ஆலோலம்!

  சேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்!

  அதாவது, ‘மைனாக்களே, சிவந்த கண்களைக் கொண்ட புறாக்களே, சிறந்த தோகையைக் கொண்ட மயில்களே, பேசும் கிளிகளே, கூவும் குயில்களே, சேவல்களே, உங்களுக்கெல்லாம் ஆலோலம் பாடுகிறேன், லேசாகக் கொறித்துவிட்டுப் பறந்து செல்லுங்கள்’ என்றாள் திருத்தமான ஆபரணங்களை உடுத்திய வள்ளி.

  அது சரி, ‘ஆலோலம்’ என்றால் என்ன அர்த்தம்?

  ‘அகல ஓலம்’ என்பதுதான் பின்னர் ‘ஆலோலம்’ என்று மாறிவிட்டதாகச் சொல்லிறார்கள். ‘ஓலம்’ என்றால் சத்தமாகக் கத்துதல், அகலம் என்றால்? வயல் முழுவதும் தங்கள் குரல் பரந்து விரிந்து கேட்கும்படி பாடுவதால் அப்படிச் சொல்கிறார்களா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

  ***

  என். சொக்கன் …

  07 01 2013

  037/365

   
  • Saba-Thambi 1:05 pm on January 7, 2013 Permalink | Reply

   ‘ஆலோலம்’ என்பதின் மற்றொரு அர்த்தம் – நீரோடும் ஒலி (murmuring sound of running water)
   (மூலம் – லிப்கோ தமிழ் – தமிழ் -ஆங்கிலப் பேரகராதி)

   • என். சொக்கன் 3:58 pm on January 7, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

  • amas32 (@amas32) 3:08 pm on January 13, 2013 Permalink | Reply

   Aaahh I love this post 🙂 reminds me of #365paa!

   கிராமத்து வாழ்க்கை வாழ்ந்தவருக்கே இந்த சொல் பிரயோகங்கள் அழகாகப் புகுத்த முடியும். அதற்கு கங்கை அமரனுக்கு நன்றி 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel