Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 8:28 pm on October 22, 2013 Permalink | Reply  

  மெல்ல ஊர்ந்து ஊர்ந்து… 

  இன்றைக்கு எதைப்பற்றி நாலு வரி நோட் எழுதலாம் என்று நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்மீது ஓர் எறும்பு ஊர்ந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன?

  சட்டென்று ‘ருக்குமணி ருக்குமணி’ பாடல்தான் மனத்தில் ஓடியது. ‘சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு, சீனிக்குள்ள எறும்பு மாட்டிகிட்ட கணக்கு’ என்று அழகாக முதலிரவுக் காட்சியைப் பதிவு செய்திருப்பார் வைரமுத்து.

  வாலிக்கும் எறும்பு பிடிக்கும், அதைவிட, வார்த்தை விளையாட்டு பிடிக்கும், வைரமுத்துவைப்போலவே அவரும் சர்க்கரையாகக் காதலையும், எறும்பாகக் காதலர்களையும் வர்ணித்து ‘சக்கர இனிக்குற சக்கர, அதில் எறும்புக்கு என்ன அக்கறை?’ என்று கேட்பார் குறும்புடன்.

  வைரமுத்துவுக்குமட்டும் குறும்புத்தனம் இல்லையா என்ன? ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு?’ என்று காதலியைக் கேட்கவைத்து, ‘கண்ணே, நீ வெல்லமுன்னு கட்டெறும்பு தெரிஞ்சுகிச்சு’ என்று காதலனைப் பதில் சொல்லச்செய்வார்.

  வாலி இன்னொரு படி மேலே போய், கட்டெறும்பு காதலியைமட்டுமா? அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா!’

  காதலி சம்மதம் சொல்லிவிட்டால்தான் வெல்லம், இல்லாவிட்டால், கண்ணாடி ஜாடிக்குள் இருந்து கைக்கு எட்டாத குலாப் ஜாமூன். ‘இமய மலை என்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை’ என்று வைரமுத்துவின் வரி.

  எறும்பு காதலுக்குமட்டுமல்ல, மற்ற விஷயங்களுக்கும் உவமையாகும், ‘ஈ, எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ என்று கடவுளிடம் வேண்டும் சின்னப் பிள்ளைக்கு வாலி எழுத, ‘நம்பிக்கையே நல்லது, எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்பார் வைரமுத்து.

  என்ன திரும்பத் திரும்ப வாலி, வைரமுத்து? மற்ற கவிஞர்கள் யாரும் எறும்பை எழுதவில்லையா?

  ஏன் இல்லாமல்? ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்று அதிரவைத்து, ‘என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று தத்துவம் சொன்னாரே கண்ணதாசன்!

  இழிவாக நினைக்காதீர்கள், சிறு எறும்பும் கவி எழுத உதவும்!

  ***

  என். சொக்கன் …

  22 10 2013

  324/365

   
  • amas32 9:49 pm on October 22, 2013 Permalink | Reply

   a very different 4varinote from you! எறும்பூர கல்லும் தேயும், அது போல கொஞ்சம் கொஞ்சமாக காதலனும் காதலியின் மனதை விடா முயற்சியால் மாற்றிவிடலாம். அதற்கும் அந்த எறும்பு பழமொழி உதவுகிறது 🙂

   சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது, உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவும் 🙂 http://www.youtube.com/watch?v=0V7ezrT_d94

   amas32

  • rajinirams 4:51 pm on October 23, 2013 Permalink | Reply

   அடடா.கலக்கிட்டீங்க. எறும்பு பற்றிய பாடல்களை-நினைவு வைத்து தொகுத்தது-சான்ஸே இல்லை.நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது-அகரம் இப்போ சிகரம் ஆச்சு-என்னைக்கவர்ந்த வைர வரிகள்.கஜேந்திரா படத்தில் பா.விஜய்யின் பாடல் ஒன்று-எறும்பு ஒண்ணு என்னை வந்து என்னென்னமோ பண்ணுது…நன்றி.

 • mokrish 9:30 pm on October 7, 2013 Permalink | Reply  

  அனல் மேலே 

  ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்த அவர்கள் அறிந்த வேறு ஒரு விஷயத்தை ஒப்பிட்டு சொல்லும் உவமை மொழிக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது. இதன் மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களுக்கு விரைவில் சென்று சேரும். உவமைகளை சரியாகப்  பயன்படுத்துவதில் சங்ககாலப் புலவர்கள் சிறந்து விளங்கினர். குறுந்தொகை ஒரு  உவமை களஞ்சியம் என்றே சொல்லலாம்.

  தமிழ் இலக்கியம் முன் வைத்த இரண்டு முக்கியமான விஷயங்கள் பக்தியும் காதலும். இந்த இரண்டுக்கும் பொருந்தும் சில உவமைகள் உண்டு மாணிக்கவாசகர் தழலது கண்ட மெழுகது போல என்கிறார். திருவருட்பாவில்  அலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் என்றும் பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்  துரும்பே எனஅலை கின்றேன் என்றும் வரிகள் உண்டு. நெருப்பில் விழுந்த மெழுகு போல என்றும் கடலில் தத்தளிக்கும் துரும்பு போல என்று விளக்கும்போது  சட்டென்று இதுதான் விஷயம் என்று புலப்படுகிறது.

  பக்தி காதல் இந்த இரண்டும் கவிஞர் வாலிக்கு  Home Ground ல் ஆடுவது போல. மேலே சொன்ன இரண்டு உவமைகளையும் ஒன்றாக கோத்து அதை பக்தி காதல் இரண்டு நிலைகளிலும் சொல்கிறார். பஞ்சவர்ணக்கிளி படத்தில் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=9a0rNJBS594

  மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

  மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

  அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்

  ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்

  என்று பக்தி ரசம் சொல்கிறார். முருகன் மேல் உள்ள பக்தியில் அனல் மேல் விழுந்த மெழுகு போல உருகி கடல் மேல் விழுந்த துரும்பு போல அலைந்த ஒரு பெண்ணின் நிலை

  அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற படத்தில் குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி வாணி ஜெயராம்) இதே உவமைகளை வைத்து காதலில் தவிக்கும் ஆணின் நிலை சொல்கிறார்

  http://www.youtube.com/watch?v=AAQfccjYAlQ

  மேளதாளம் முழங்கும் முதல்நாள் இரவு

  மேனிமீது எழுதும் மடல்தான்  உறவு

  தலையிலிருந்து பாதம் வரையில்

  தழுவி கொள்ளலாம்

  என்று பெண் சொல்ல அதற்கு ஆண் சொல்லும் பதில்

  அதுவரையில் நான்…அனலில் மெழுகோ

  அலைகடலில்தான் அலையும் படகோ

  இரண்டு உவமைகளை இணைத்து பக்திக்கு ஒரு பாடல் காதலுக்கு ஒரு பாடல். அதுதான் வாலி!

  மோகனகிருஷ்ணன்

  310/365

   
  • amas32 9:52 pm on October 7, 2013 Permalink | Reply

   //மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

   மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

   அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்

   ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்//

   என்ன அற்புதமானப் பாடல் இது மோகன்! my most favourite song! பாடலைக் கேட்கும் பொழுதே கண்கள் குளமாகிவிடும் எனக்கு. simple lines, tells everything. காதலாகிக் கசிந்து உருகி… நம்முடைய ஹிந்து மதத்தில் தான் இறைவனையும் நாம் காதலிக்கத் தடை ஏதும் இல்லை.

   நீங்கள் கம்பேர் பண்ணியிருக்கும் அடுத்தப் பாடல் சூப்பரோ சூப்பர் 🙂

   //அதுவரையில் நான்…அனலில் மெழுகோ

   அலைகடலில்தான் அலையும் படகோ//

   நல்ல பதிவு!

   அனல் மேலே பனித்துளி
   அலைபாயும் ஒரு கிளி
   மரம் தேடும் மழைத்துளி
   இவை தானே இவள் இனி
   பாடலும் சிறிது இந்த எண்ணங்களைத் தான் வெளிப்படுத்துகிறதோ?(வாரணம் ஆயிரம்)

   amas32

  • rajinirams 10:54 am on October 9, 2013 Permalink | Reply

   அனல் மேல் மெழுகானேன்-பக்தி,காதல் இரண்டு நிலைகளிலும் கலக்கிய கவிஞர் வாலியின் திறமையை அழகாக எடுத்துக்காட்டிய அருமையான பதிவு.

 • என். சொக்கன் 11:51 pm on August 28, 2013 Permalink | Reply  

  கொடிமேல் காதல் 

  • படம்: கிழக்கே போகும் ரயில்
  • பாடல்: மாஞ்சோலைக் கிளிதானோ
  • எழுதியவர்: முத்துலிங்கம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: ஜெயச்சந்திரன்
  • Link: http://www.youtube.com/watch?v=6CPH_pnHqB8

  மஞ்சம் அதில், வஞ்சிக்கொடி வருவாள்,

  சுகமே தருவாள், மகிழ்வேன்,

  கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம்,

  செந்தாமரையே!

  வஞ்சிக்கொடி என்பது பல பாடல்களில் பெண்களுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் உவமை.

  மற்ற பல கொடிகளைப்போலவே, வஞ்சியும் மெலிதானது, எளிதாகத் துவள்வது. ஆகவே, இடை சிறுத்த கதாநாயகிகளை வர்ணிக்கும் தேவை ஏற்படும்போதெல்லாம் கவிஞர்கள் வஞ்சிக்கொடியை அழைத்துவிடுவார்கள்.

  உதாரணமாக, பாரதிதாசனின் அருமையான காதல் பாடல் ஒன்று, ‘வஞ்சிக் கொடி போல இடை அஞ்சத்தகுமாறு உளது!’ என்று தொடங்கும்.

  பொதுவாக எல்லாருக்கும் காதலி இடையைப் பார்த்தால் ஆசை வரும். ஆனால், பாரதிதாசனுக்கு அச்சம் வருகிறது, ‘உன் இடுப்பைப் பார்த்து நான் பயந்தேபோய்ட்டேன் தெரியுமா?’ என்கிறார்.

  ஏன் அப்படி? பொண்ணு செம குண்டோ? காதல் பரிசாக ஒட்டியாணம் செய்து தரச் சொல்லிவிடுவாளோ என்று நினைத்துக் கவிஞர் பயந்துவிட்டாரோ?

  அந்தச் சந்தேகமே வரக்கூடாது என்பதற்காகதான், ‘வஞ்சிக்கொடி போல இடை’ என்கிறார் பாரதிதாசன். ‘இத்தனை மெல்லிய இடையா’ என்றுதான் அவருக்கு அச்சம்!

  அதோடு நிறுத்தவில்லை, தொடர்ந்து கண்களுக்கு உவமையாக என்னவெல்லாம் வருமோ அத்தனையையும் அடுக்குகிறார், பின்னர், ‘ம்ஹூம், உனக்கு இணையாக எதையும் சொல்லமுடியாது’ என்று கை தூக்கிவிடுகிறார். சந்தம் கொஞ்சும் அந்த அழகான பத்தி முழுமையாக இங்கே:

  வஞ்சிக்கொடி போல இடை

  அஞ்சத் தகுமாறு உளது!

  நஞ்சுக்கு இணையோ, அலது

  அம்புக்கு இணையோ, உலவு

  கெண்டைக்கு இணையோ, கரிய

  வண்டுக்கு இணையோ விழிகள்!

  மங்கைக்கு இணை ஏது உலகில்,

  அம் கைக்கு இணையோ மலரும்?

  ஆனால், கிட்டத்தட்ட இதேமாதிரிதானே கொடி இடை, நூலிடை, துடி இடை என்றெல்லாம் இடுப்பை வர்ணிப்பார்கள்?

  உண்மைதான். ஆனால் அவற்றுக்கு இல்லாத ஒரு சிறப்பு ‘வஞ்சி’க்கு உண்டு. இடுப்பைமட்டுமல்ல, ஒரு பெண்ணையே ‘வஞ்சி’ என்று அழைப்பதும் உண்டு.

  இதற்கு உதாரணமாக, ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலே இருக்கிறது. அதன் பொருள், குற்றாலம் என்கிற பகுதியில் வாழ்கிற, குறவர் இனத்தைச் சேர்ந்த, வஞ்சி போன்ற ஒருத்தி.

  சினிமாப் பாட்டு உதாரணம்தான் வேண்டுமா? அதுவும் நிறைய உண்டு. ‘வண்ணக்கிளி சொன்ன மொழி, என்ன மொழியோ? வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ!’

  ஆக, ஒரு பெண், அவளுடைய மெலிதான இடுப்பு, அதற்கு உவமை வஞ்சி, அதுவே அந்தப் பெண்ணையே அழைக்கும் பெயராகிவிடுகிறது. ஆகவே, இலக்கண அறிஞர்காள், இது சினையாகுபெயரா, உவமையாகுபெயரா, அல்லது சினையுவமையாகுபெயர் என்று ஒன்றை உருவாக்கவேண்டுமா? 🙂

  ***

  என். சொக்கன் …

  28 08 2013

  270/365

   
  • Murugesan 7:05 am on August 29, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு நன்றி திரு.சொக்கன். வஞ்சி கொடிக்கு அருமையான விளக்கம் இப்பாடலை வைத்து.

  • rajinirams 12:12 pm on August 30, 2013 Permalink | Reply

   வஞ்சி கொடி யை விளக்கிய நல்ல பதிவு.இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ என்ற வாலியின் பாடலும் வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்னும் என்ற டி.ஆரின் வரிகளும் நினைவிற்கு வருகிறது. “வஞ்சி”என்ற வார்த்தைக்கு ஏமாற்றுவது என்ற பொருளும் உண்டு.அப்படி ஏமாற்றும் கட்சி கொடியை “வஞ்சி கொடி”என்று சொல்லலாமோ:-)))

  • amas32 6:14 pm on September 2, 2013 Permalink | Reply

   அப்போ நான் “வஞ்சி” இல்லை :-)) துடி இடையாளும் இல்லை வஞ்சிப்பவலும் அல்லள் 🙂

   ஆனால் என் பழைய புகைப்படங்கள் வஞ்சியாக் இருந்திருக்கிறேன் என்று பறைசாற்றும் 🙂

   amas32

 • என். சொக்கன் 11:04 pm on August 13, 2013 Permalink | Reply  

  சிறு துரும்பும்… 

  • படம்: மிஸ்டர் ரோமியோ
  • பாடல்: ரோமியோ ஆட்டம் போட்டால்
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஹரிஹரன், உதித் நாராயண்
  • Link: http://www.youtube.com/watch?v=q_Be1aOMeYc

  யாரையும் தூசைப்போலத்

  துச்சம் என்று எண்ணாதே,

  திருகாணி இல்லை என்றால்

  ரயிலே இல்லை மறவாதே!

  ஒரு சின்னத் திருகாணி காணாமல் போய்விட்டால், ஒரு பெரிய ரயிலே பழுதடைந்து நின்றுவிடக்கூடும். அதுபோல, நாம் யாரையும் சிறியவர்கள் என்று அலட்சியமாக நினைக்கக்கூடாது என்கிறார் வைரமுத்து.

  சுருக்கமாக, தெளிவாக, கிட்டத்தட்ட திருக்குறள்மாதிரி இருக்கிறது, இல்லையா?

  மாதிரி என்ன? திருக்குறளேதான். எப்போதோ ’அச்சாணி’யை உவமையாக வைத்துத் திருவள்ளுவர் சொன்ன கருத்தை அழகாக நவீனப்படுத்திப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வைரமுத்து:

  உருவுகண்டு எள்ளாமை வேண்டும், உருள் பெரும் தேர்க்கு

  அச்சாணி அன்னார் உடைத்து

  உருளுகின்ற பெரிய தேர், ஒரு சிறிய அச்சாணி இல்லை என்றால் ஓடாது. அதுபோல, யாரையும் உருவத்தை வைத்துக் குறைவாக எடை போட்டுவிடாதீர்கள்!

  அது நிற்க. அச்சாணி, திருகாணி இரண்டுமே மிக அழகான தமிழ்ச் சொற்கள்.

  அச்சு + ஆணி = அச்சாணி. வண்டியின் சக்கரங்களில் உள்ள அச்சு (axle) என்ற பாகத்தை விலகாமல் பொருத்திவைப்பதால் அதன் பெயர் அச்சாணி.

  திருகு + ஆணி = திருகாணி. மற்ற ஆணிகளை அடிக்கவேண்டும், ஆனால் இந்த ஆணியைத் திருகவேண்டும். அதனால் அப்படிப் பெயர்.

  கிட்டத்தட்ட அந்தத் திருகாணியில் உள்ள மரைகளைப்போலவே சுருண்டு சுருண்டு செல்லும் கூந்தல் கொண்ட பெண்கள் உண்டு. சிலருக்கு இயற்கையாகவே சுருட்டை முடி, சிலர் அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தலைச் சுழற்றிக்கொள்கிறார்கள்.

  பார்வதி தேவிக்கு அப்படிப்பட்ட Curly Hairதான்போல. திருநாவுக்கரசர் தேவாரத்தில் இப்படி அழகாக வர்ணிக்கிறார்: ‘திருகு குழல் உமை!

  ***

  என். சொக்கன் …

  13 08 2013

  255/365

   

   
  • rajinirams 12:12 pm on August 14, 2013 Permalink | Reply

   யாரையும் துச்சம் என்று எண்ணாதே என்ற வைரமுத்துவின் வரிகளையும் உருவு கண்டு எள்ளாமை குறளையும் விளக்கி.பின் திருகாணி -திருகு குழல் உமை என அழகாக சொல்லியுருக்கிறீர்கள்.குரங்கு என்று துச்சமாக நினைத்து அதன் வாலில் தீ வைத்தானே-அது எரித்தது ராவணன் ஆண்ட தீவைத்தானே என்ற வாலியின் வரிகளும் நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ என்ற வாலியின் வரிகளும் நினைவிற்கு வந்தது.நன்றி.

   • amas32 5:12 pm on August 14, 2013 Permalink | Reply

    நீங்க ரொம்ப அழகா விளக்கம் தருகிறீர்கள் 🙂

    amas32

  • Uma Chelvan 5:14 pm on August 14, 2013 Permalink | Reply

   திருகு குழல் உமை! மிக அழகான வர்ணனை !

  • amas32 5:26 pm on August 14, 2013 Permalink | Reply

   எனக்குத் திருகாணி என்றவுடன் காது தோட்டின் திருகாணி தான் நினைவுக்கு வந்தது. காதிலோ மூக்கிலோ நகையை மாட்டிக்கொண்டு திருகாணியைத் திருகுவதும் ஒரு கலை! அதுவும் பல சமயம் திருகாணியைத் தொலைத்துவிட்டு தேடுவதே தான் வேலை -)
   திருகாணியில் thread போய்விட்டால் சுற்றிக் கொண்டே இருக்கும்.

   நச்சென்று இருக்கிறது இந்த நாலு வரி 🙂

   amas32

 • G.Ra ஜிரா 12:11 pm on July 16, 2013 Permalink | Reply  

  சிங்Gun 

  விழிகளை வேலோடும் வாளோடும் எத்தனையெத்தனையோ கவிஞர்கள் எத்தனையெத்தனையோ பாடல்களில் எழுதிவிட்டார்கள்.

  அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்வதனால்தானோ” என்று கண்ணதாசன் கண்களை ஆயுதங்களாகச் சொன்னதுக்கான காரணத்தை விளக்குகிறார்.

  காதல் கொண்ட விழியின் பார்வையைத் தாங்கும் வல்லமை யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

  கண்களால் உண்டான காயங்கள் எக்கச்சக்கம். அந்தக் காயங்களுக்கு மருந்தே கிடையாது என்பதுதான் மிகமிக விசித்திரம்.

  காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆயுதங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வேலும் வாளும் அம்பும் கோயிலில் கடவுள் கையில்தான் இன்று காணக்கிடைக்கும்.

  கையடக்கமாக ஒரு துப்பாக்கி இருந்தால் குறிதவறாமல் சுட்டு விடலாம். அதனால் உண்டாகும் இழப்பும் வில்லையும் வாளையும் விட நிறையவே இருக்கும்.

  அப்படிப் பட்ட கண்ணை Gunனோடு ஒப்பிடாமல் இருப்பார்களா கவிஞர்கள்?!?

  உன் கண்ணுக்குள்ள Gunன வெச்சு என்னச் சுடாத
  உன் காக்கிச் சட்ட காலரத்தான் தூக்கி விடாத

  இது சிங்கம்-2 படத்துக்காக விவேகா எழுதிய வரிகள்.

  நாயகன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது காதலி பாடும் போது அவன் காவல் தொழிலோடு தொடர்புடைய கருப்பொருட்களைப் பாட்டில் வைத்துப் பாடுவது பொருத்தம் தானே? அதனால்தான் பாட்டில் துப்பாக்கியும் காக்கிச் சட்டையும் வருகின்றன.

  கண் Gunனானால் பார்வை தோட்டாவாகும். பார்வை தோட்டாவானால் பாவை இதயம் பாட்டாகும் என்பது எவ்வளவு உண்மை.

  சரி. கண்ணை Gunனோடு ஒப்பிட்டு வந்த முதல் பாட்டு இதுதானா?

  இல்லை. இல்லை. இல்லை.

  கோடைமழை படத்தில் நா.காமராசன் ஏற்கனவே எழுதிவிட்டார்.

  ஆனாலும் ஒரு வித்யாசம். கவிஞர் விவேகா ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணை Gun என்றால் நா.காமராசன் ஒரு பெண்ணின் கண்ணை Gun என்கிறார். அதுவும் கொக்கு சுடப் போன ஒரு குறவன் வாயால்.

  துப்பாக்கி கையிலெடுத்து
  ரெண்டு தோட்டாவும் பையிலெடுத்து
  கொக்கு சுடப் போகும் வழியில்
  என்ன சுட்டதென்ன Gunன்னு
  இந்த கன்னிப் பொண்ணு கண்ணு கண்ணு

  அடுத்து என்னென்ன ஆயுதங்கள் புதிது புதிதாக வரப் போகின்றனவோ.. கவிஞர்கள் அவைகளையெல்லாம் பாட்டில் வைக்கப் போகிறார்களோ!

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் – உன் கண்ணுக்குள்ள
  வரிகள் – விவேகா
  பாடியவர்கள் – ப்ரியா ஹிமேஷ், ஜாவித் அலி
  இசை – தேவிஸ்ரீ பிரசாத்
  படம் – சிங்கம்-2
  பாடலில் சுட்டி – http://youtu.be/lRPjWUndJ6w

  பாடல் – துப்பாக்கி கையிலெடுத்து
  வரிகள் – நா.காமராசன்
  பாடியவர் – இசைஞானி இளையராஜா
  இசை – இசைஞானி இளையராஜா
  படம் – கோடைமழை
  பாடலின் சுட்டி – http://youtu.be/5duNvDDXJxc

  அன்புடன்,
  ஜிரா

  227/365

   
  • amas32 9:56 pm on July 16, 2013 Permalink | Reply

   why do we always fall in love? Is it because of the hurt that follows… என்று நான் கல்லூரி பருவத்தில் கட்டுரை ஒன்றில் எழுதினேன், அது தான் நினைவிற்கு வருகிறது. அம்பு விழி என்று ஏன் சொன்னான்…. அது பாய்வதினால் தானோ ….

   அதே பொருளில் தான் இந்தக் காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் உள்ளது விவேகா எழுதிய சிங்கம் 2 படப் பாடலும்.

   காதல் வலியை வரவழைத்தாலும், காதலி நெஞ்சை துளைத்தாலும் இன்றும் காதலில் விழுவதில் பேரானந்தம் உள்ளதால் தானே காதல் வாழ்க என்று காதலர்கள் தொடர்ந்து பாடுகிறார்கள்!

   amas32

   • GiRa ஜிரா 8:04 am on July 18, 2013 Permalink | Reply

    well said அம்மா. அப்போ கல்லூரி காலத்திலிருந்தே நீங்க எழுத்துப்பழக்கம் கொண்டவரா இருந்திருக்கிங்க 🙂

 • என். சொக்கன் 9:26 am on June 8, 2013 Permalink | Reply  

  உவமைகள் பலவிதம் 

  • படம்: தங்க மகன்
  • பாடல்: ராத்திரியில் பூத்திருக்கும்
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=8U2HVjtb9n4

  ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!

  ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ!

  சேலைச் சோலையே! பருவ சுகம் தேடும் மாலையே!

  பகலும் உறங்கிடும் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!

  பெண்ணைத் தாமரைக்கு ஒப்பிடுவது பரவாயில்லை, அதென்ன ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை?

  இயற்கையாக, தாமரை பகலில்தான் மலரும். இரவில் கூம்பிவிடும். இதைதான் எல்லா இலக்கியங்களிலும் திரும்பத் திரும்பப் பலமுறை படித்திருக்கிறோம்.

  ஆனால் இங்கே, ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை’ என்று குறிப்பிட்டுச் சொல்லி அதைப் பெண்ணுக்கு உவமையாக்குகிறார் புலமைப்பித்தன். உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு பொருளை உவமையாகச் சொல்வதால், தமிழ் இலக்கணப்படி இதற்கு ‘இல் பொருள் உவமை (அல்லது உருவக) அணி’ என்று பெயர்.

  கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு விஷயம், ‘உயர்வு நவிற்சி அணி’. பல நேரங்களில் இதையும் ‘இல்பொருள் உவமை அணி’யையும் சேர்த்துக் குழப்பிக்கொள்வோம்.

  ‘நவில்தல்’ என்றால் சொல்லுதல், ‘உயர்வு நவிற்சி அணி’ என்றால், இயல்பான ஒரு விஷயத்தை உயர்வாக, மிகைப்படுத்திச் சொல்லுதல்.

  இதேபோல், ‘இயல்பு நவிற்சி அணி’யும் உண்டு. இயல்பான ஒரு விஷயத்தை அப்படியே இயல்பாகச் சொல்லுதல்.

  உதாரணமாக, ஒரு பெண்ணைப் பார்த்து, ’உன்னுடைய குரல் ரொம்ப இனிமை’ என்றால் அது இயல்பு நவிற்சி அணி, ஆனால், ‘உன்னுடைய குரலைக் கேட்டுக் குயில்கள்கூடத் தோற்றுவிட்டன’ என்று சொன்னால், அது உயர்வு நவிற்சி அணி. அவளுடைய குரல் இனிமையானதுதான், ஆனால் ’குயில்களோடு போட்டி போட்டு ஜெயித்த குரல்’ என்று அதை மிகைப்படுத்துகிறார் கவிஞர்.

  கொஞ்சம் லோக்கலாக ஓர் உதாரணம் வேண்டுமென்றால், வீட்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சோஃபா வாங்குகிறோம், வருகிற விருந்தினர் அதைப் பார்த்து வியக்க, ‘ஆமாங்க, பத்தாயிரம் ரூபாய் விலை’ என்று நான் சொன்னால் இயல்பு நவிற்சி, ‘சும்மாவா? முப்பதாயிரத்துக்கு வாங்கியிருக்கோம்ல’ என்றால், அது உயர்வு நவிற்சி. ‘இதென்ன பெரிய விஷயம்? எங்க சொந்த ஊர்ல இதைவிட மெத்மெத்துன்னு ஒரு சோஃபா இருக்கு’ என்று கதையளந்தால், அது இல்பொருள் 🙂

  மழை பெய்கிறது, அதைப்பற்றி நண்பருக்கு ஃபோனில் சொல்லும்போது, ‘தெருவெல்லாம் வெள்ளம்’ என்றால் இயல்பு நவிற்சி, ’வெள்ளத்துல நாலஞ்சு திமிங்கிலமே தட்டுப்பட்டதுன்னா பார்த்துக்கோயேன்’ என்றால், அது உயர்வு நவிற்சி அணி, ‘வெள்ளத் தண்ணியில ரெண்டு அன்னம் நீந்தி வருதுய்யா’ என்றால், இல்பொருள்.

  இந்த விஷயத்தில் இதுவா அதுவா என்று மயக்கம் ஏற்படுவது இயல்பு. உதாரணமாக, ஒரு கம்பன் பாட்டு. ஜாம்பவான் அனுமனைப் புகழ்ந்து சொல்வது: ‘மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்.’

  மாரி என்றால் மழை, அந்த மழையினால் துளிகள் ஏற்பட்டு, அவை தாரையாகத் தரையை நோக்கிப் பொழிகின்றன, அனுமார் விரும்பினால், மிகச் சிறிய உருவம் எடுத்து, அந்த மழைத் தாரைகளுக்கு நடுவே புகுந்து வந்துவிடுவார்!

  இப்போது சொல்லுங்கள், இது இயல்பு நவிற்சியா? உயர்வு நவிற்சியா? இல்பொருளா? 🙂

  சினிமாப் பாடல்களில் உங்களுக்குத் தெரிந்த ‘இல்பொருள் உவமை அணி’களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள், சிறந்த ஒன்றுக்குப் புத்தகப் பரிசு (அவர்கள் விரும்பும் இந்திய முகவரிக்கு) அனுப்பிவைக்கப்படும்!

  ***

  என். சொக்கன் …

  08 06 2013

  189/365

   
  • umakrishh 9:40 am on June 8, 2013 Permalink | Reply

   கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் (கருப்பு நிலா என்ற ஒன்றே இல்ல ஆனாலும் கருப்பு நிலா என சொல்வது இல் பொருள் உவமை அணி தானே ?வேற சில பாடல்கள் யோசிச்சு சொல்றேன்.சட்டுன்னு இதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு

  • மழை!! 9:56 am on June 8, 2013 Permalink | Reply

   சொக்கன் சார்,
   ஜோதா அக்பர் படத்தின், முழுமதி அவளது முகமாகும் பாடலில் பின்வரும் வரிகளில் உயர்வு நவிற்சியும், இல் பொருள் உவமையணியும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது. :))
   “கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
   அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
   கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
   அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
   ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
   இடையில் தனிமை தளும்புதே நதியாய்
   கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
   நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே”

   thanks,
   renuga

   • Vallab 10:14 am on June 8, 2013 Permalink | Reply

    அதில் உயர்வு நவிற்சி உள்ளது… இல்பொருள் இல்லை என்றே நினைக்கிறேன்!

    • மழை!! 2:44 pm on June 8, 2013 Permalink

     okay.. 🙂

    • மழை!! 2:55 pm on June 8, 2013 Permalink

     From Aahaa.,

     “ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
     தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில்”

  • ஆசாத் 10:09 am on June 8, 2013 Permalink | Reply

   1. மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் (இருமலர்கள்)

   2. சக்கரைப் பந்தலில் தேன்மழை பொழியுது (பட்டாம்பூச்சி)

   3. ஆயிரம் நிலவே வா! (அடிமைப்பெண்)

  • umakrishh 10:29 am on June 8, 2013 Permalink | Reply

   பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ வானவில் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை அப்போ அது இல்பொருள் உவமை அணிதானே ?

   • anonymous 7:16 pm on June 8, 2013 Permalink | Reply

    அல்ல!:)

    இது, கட்டுரை ஆசிரியரான திரு.சொக்கனுக்கு, நீங்கள் ஏற்படுத்திக் குடுக்கும் நல்ல வாய்ப்பு:)

    தற்குறிப்பேற்ற அணி vs இல் பொருள் உவமை அணி
    = இந்த வேறுபாட்டை விளக்க இதுவே நல்ல வாய்ப்பு:)

  • umakrishh 10:31 am on June 8, 2013 Permalink | Reply

   பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ வானவில் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை அப்போ அது இல்பொருள் உவமை அணிதானே ? தேவதை வம்சம் நீயோ பாடல் சிநேகிதியே படத்தில் இருந்து

  • amas32 10:34 am on June 8, 2013 Permalink | Reply

   நாலு வரிப் பாடலில் உங்கள் பதிவு வரும் நாளில் நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் வரிகளைப் படித்தப் பின் ஆனால் உங்கள் பதிவைப் படிக்கும் முன் எந்த சொல்லை பற்றி விளக்கப் போகிறீர்கள் என்று நான் ஒரு நொடி யோசித்து உகிப்பேன் 🙂 இன்று சூப்பர்!

   amas32

  • Saba-Thambi 11:22 am on June 8, 2013 Permalink | Reply

   பாடல்:
   என் இனிய பொன்னிலாவே, பொன்னிலவில் என் கனாவே
   (http://www.youtube.com/watch?v=677hSrjHSH8)

   சாதரணமாக வெள்ளை நிலா அல்லது வெள்ளி நிலா என்று தானே வர்ணணை.

   கங்கை அமரன் பாவித்த “பொன் நிலா”, “பொன்னிலவில்” இல் பொருள் உவமை அணி?

  • Bala Venkatraman 2:33 pm on June 8, 2013 Permalink | Reply

   சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம் எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா எல்லாம் எல்லாம் … என்கிற பாட்டில் வரும் ‘சுடும் நிலவு’ – இல் பொருள் உவமையணியில் வரும் என்று நினைக்கிறன்.

  • மழை!! 2:42 pm on June 8, 2013 Permalink | Reply

   From boys:
   எகிறி குதித்தேன் வானம் இடித்தது
   பாதங்கள் இரண்டும் பறவையானது
   விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது – உயர்வு நவிற்சி

   காதல் சொன்ன கணமே
   அது கடவுளைக் கண்ட கணமே – இல்பொருள்

  • மழை!! 2:44 pm on June 8, 2013 Permalink | Reply

   வானவில் உரசியே பறந்ததும்
   இந்த காக்கையும் மயில் என மாறியதே

  • மழை!! 2:56 pm on June 8, 2013 Permalink | Reply

   From movie Ahaa:

   “ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில்”

  • மழை!! 2:59 pm on June 8, 2013 Permalink | Reply

   From Jodi:
   ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்.. > பூக்களில் உன்னால் ரத்தம்< அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்

  • R.Ganesh 3:01 pm on June 8, 2013 Permalink | Reply

   படம்:செல்வம் வாலி // KVM / TMS

   “நம்பமுடியவில்லை ..இல்லை..இல்லை..
   அவளா சொன்னாள்?இருக்காது.”.
   என்பது பல்லவி..

   அதில வரும் இல்பொருள் உவமை அணி..

   உப்புக்கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
   முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
   சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
   நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?

   அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
   என்னைப்பெற்ற தாய் என்னைக்கொல்லலாம்
   உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
   நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?

  • padma 4:49 pm on June 8, 2013 Permalink | Reply

   தடக்கை நால் ஐந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
   அடக்கி ஐம்புலங்கள் வென்று தவப்பயன் அறுதலோடும்
   கெடக் குறியாக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
   வடக்கு எழுந்து இலங்கைசெல்லும் பரிதி வானவனும் ஒத்தான். வடக்கே உதிக்கும் ஆதவன்

   இன்னொரு எடுத்துக்காட்டு: பாலவனத்தில துளிர்த்த பட்டமரம்: அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை – வன்பால் கண்
   வற்றல் மரம் தளிர்த்து அற்று

   இன்னொரு எடுத்துக்காட்டு : என்பிலதனை வெயில் போல காயுமே அன்பிலதனை அறம். ( கொஞ்சம் சந்தேகம், அறிவியல் பூர்வமா எல்லா எலும்பில்லாத உயிர்கலையும் வெயில் வாட்டுமான்னு கொஞ்சம் சந்தேகம்)

  • Muthalib 5:17 pm on June 8, 2013 Permalink | Reply

   சங்கமம் – சௌக்கியமா

   அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன். உயர்வு நவிற்சி.

   அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன். உயர்நவிற்சி(க்கும் மேல்).

  • சுரேந்தர் 5:20 pm on June 8, 2013 Permalink | Reply

   பாஸ்… இங்க எல்லாமே நீங்க உட்பட உருவக அணியதான் சொல்லியிருக்கீங்க!

   இல்பொருள் உவமை அணிகள்

   1. ஊர்வசி ஊர்வசி / காதலன்
   ஊசி போல உடம்பிருந்தா தேவயில்ல பார்மசி

   2. உன் மேல ஆசதான் / ஆயிரத்தில் ஒருவன்
   நேசம் நாணம் தேகம் பேய் குளித்து
   தூசி போலே தொலைவீர்கள்

   3. அன்டங்காக்கா கொண்டக்காரீ/அந்நியன்
   சுட்டபால் போல தேகம்தான்டீ உனக்கு..

   4. டோலு பாஜி டோலு பாஜி/தீபாவளி
   உவமை உருபு தொகையா சொலறாரு கவிஞர்.
   கொடுவா மீனு ஒன்னு இடிச்சு கடலில் கப்பல் கவுந்து போச்சு (அதுபோல) (இந்த சின்ன பொண்ணப்பாத்து)
   அட்டா ராயபுரத்து பையன் பேச்சுமூச்சு நின்னு போச்சு

   இப்ப சொல்லபோவதெல்லாம் இல்பொருள் நவிற்சி தான் ஆனா உருவக அணிகள்.
   1. இரங்கு இரங்கம்மா / பீமா
   இரங்கு இரங்கம்மா இரத்தம் ஊரும் தங்க(ம்)மா

   2. பிளாக் கருப்பனுக்கும் / தசாவதாரம்
   முத்ததங்களின் மின்சாரத்தால் நியூயார்க்கெல்லாம் பகலாக்குவோம்

   3. சோதி நிறைஞ்சவ / 12பி
   பட்டுச் சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
   எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
   கண்ணம் பூசிதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
   இவள் மார்பைத் தொட்டவுடன் வைரம் வின்மீன் ஆகியதோ

   இதுமாதிரி உருவகம் இலட்சக்கணக்கா சொல்லாம்

   • என். சொக்கன் 5:26 pm on June 8, 2013 Permalink | Reply

    //உருவக அணியதான் சொல்லியிருக்கீங்க!//

    கரெக்ட், என் பிழைதான், Main Textல் உரியவிதத்தில் திருத்திவிட்டேன்

   • anonymous 8:01 pm on June 8, 2013 Permalink | Reply

    அருமை சுரேந்தர்; கலக்கி இருக்கீக… எடுத்துக் காட்டு ஒவ்வொன்றும் நுண்ணிய பொருத்தம்!
    ஒரேயொரு பாட்டில் மட்டும் சூடு பரத்தீறலாம்:) அத்தனை அணிகள் கொட்டிக் கிடக்கு:)

    கொடுவா மீனு ஒன்னு இடிச்சு
    கடலில் கப்பல் கவுந்து போச்சு
    (அதுபோல)
    சின்ன பொண்ணப் பாத்து அடடா
    பையன் பேச்சுமூச்சு நின்னு போச்சு

    இது இல்பொருள் உவமையா? தற்குறிப்பேற்ற உவமையா?:))
    ——–

    ஐயோ கண்ணகீ-கோவலா, மதுரைக்கு வராதீங்க -என்று கை ஆட்டுவது போல் கொடி அசைந்தது
    = இது தற்குறிப்பேற்றம் -ன்னு நமக்கெல்லாம் பாடம்!

    போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி
    வாரல் என்பன “போல்” மறித்துக் கைகாட்ட

    கொடிகளுக்குக் கை இல்லை; அதனால் இது இல்லாத பொருள் உவமை -ன்னு சொல்வோமா?
    சொல்லலாம்; ஆனா சொல்வதில்லை! ஏன்?
    ஏன்னா, அதை விட, கவிஞனின் தற் குறிப்புத் திறம் முந்தி விடுகிறது; அதனால் இது = தற்குறிப்பேற்ற (உவமை)

    கொடுவா மீனு சிறுசு; திமிங்கிலம் அல்ல; அது இடிச்சிக் கப்பல் கவுறாது; இல்லாத பொருளைத் தான் உவமையாச் சொல்லுறாரு
    பொண்ணு இடிச்சிப் பையன் கவுந்தான் -ன்னு; அதனால் இது = இல் பொருள் உவமையே!
    ——-

    umakrishh சொன்ன
    பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ?

    வானவில், பூமிக்கு வர வாய்ப்பே இல்லை -ன்னு சொல்லலாம்; ஆனா பூமி-ன்னாலே மண்ணு மட்டுமல்ல; மண்ணுக்கு மேலுள்ள கொஞ்சம் atmosphere-உம் தான்:))
    So, இது இல் பொருள் உவமை ஆகாது;

    வானவில் தோன்றுவது இயற்கை நிகழ்வு; ஆனா அதன் மேல், “ஊர்வலம்” வருது-ன்னு தன் குறிப்பை ஏத்திச் சொல்லுறாரோ?
    அப்படி எடுத்துக்கிட்டா, அது தற்குறிப்பேற்றம் ஆகலாம்!

    ஆனா, இங்கே “ஊர்வலம்” என்பது Focus அல்ல! அவ அழகே Focus:)
    அந்த அழகு, வானவில் (போல) = உவமை
    அந்த அழகு, வானவில்லே நீ தான் = உருவகம்

    கொடிகள், மதுரைக்குள் வராதே -ன்னு படபடக்கும் போது, அழகு Focus அல்ல! சோகம் Focus!
    அதனால், அது தற்குறிப்பேற்றம்!

    • anonymous 8:21 pm on June 8, 2013 Permalink

     உலகில் இல்லாத / நடக்க முடியாத பொருளை, உவமை ஆக்கினா = இல் பொருள் உவமை

     இயற்கையா நடக்கும் ஒன்னுத்து மேல, தன் குறிப்பே ஏத்தினா (தன் குறிப்பு நடக்க முடியாத நிகழ்வாக இருப்பினும்) = தற்குறிப்பேற்றம்

     ———–

     “எட்டு வண்ண” வானவில் போலே = இல் பொருள் உவமை (only 7 colors)

     நம் காதலுக்கு, வரவேற்பு “வளைவு” கட்டுது பார் வானவில் = தற் குறிப்பேற்றம்

     பூமிக்கு வந்த “வானவில் போல” இருக்கடீ = உவமை

     பூமிக்கு வந்த “வானவில்லே” (காதலியே) = உருவகம்

     வானவில் நிறத்தைக் குழைச்சி, பிரம்மன் ஒன்னைய செஞ்சான்டீ = உயர்வு நவிற்சி :))))

    • Kannabiran Ravi Shankar (KRS) 12:02 am on June 9, 2013 Permalink

     சினிமாப் பாட்டில், ஒரு நல்ல “இல்-பொருள்-உவமை” (உருவகம்) சொல்லணும்-ன்னா, அது…
     (முன்பெல்லாம் திறமை மிக்க) டி.ராஜேந்தர் கிட்ட இருந்து சொல்லலாம்…

     இது குழந்தை பாடும் தாலாட்டு
     இது இரவு நேர பூபாளம்
     இது மேற்கில் தோன்றும் உதயம்
     இது நதியில்லாத ஓடம்
     ………………..(அது போல) நம் காதல்
     ———-

     *குழந்தை என்னிக்குமே தாலாட்டு பாடாது; (நாம தான் அதுக்குப் பாடணும்)
     *மேற்கில், சூரியன் என்னிக்குமே உதிக்காது
     *இரவில், பூபாளம் பாடவே மாட்டாங்க (FM Radio பாடுது-ன்னா அது தனிக்கதை:)

     *last one, நதி இல்லாத இடத்துல-யும், இப்பல்லாம் ஓடம் வச்சிருக்காங்க; Boat on wheels; They take it when travel; so discounting it:)

     இப்படி, ஒரே பத்தியில்,
     3-4 “இல்-பொருள்” வரும் பாட்டு! Hats off to TR

  • mokrish 9:01 am on June 9, 2013 Permalink | Reply

   எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
   நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா.

  • சிவா கிருஷ்ணமூர்த்தி 2:03 pm on June 9, 2013 Permalink | Reply

   “சந்திரனை தொட்டது யார்? ஆம்ஸ்ட் ராங்கா?
   நான் தானே, நான் தானே…”
   உமா சந்திரன் என்ற பெண்ணை ஆம்ஸ்ட் ராங்கோ நானோ தொட்டிருந்தால் அல்லது சந்திரன் என்று தாளில் எழுதி தொட்டிருந்தால் இயல்பு நவிற்சி அணி
   உண்மையான சந்திரன் என்றால் “நான்” என்பது நாஸா இல்லாத பட்சத்தில் உயர்வு நவிற்சி அணி

  • rajnirams 9:54 pm on June 9, 2013 Permalink | Reply

   1) நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே-நல்ல நேரம்.
   2) வைகறையில் வந்ததென்ன வான்மதி -வான்மதி.

  • viswanathan 4:32 pm on June 10, 2013 Permalink | Reply

   1. இது இயல்பு நவிற்சியே. பின்னொரு முறை இலங்கை செல்லும் போது ஒரு அரக்கியின் வாய் வழி சென்று காது வழியே அனுமன் வெளிவருவது பற்றி கம்பர் குறிப்பிடுவார். அதாவது அனுமன் வேண்டிய உருவம் எடுக்கும் இயல்பினன் என்பதே கருத்து.

   இந்திரன் தோட்டத்து முந்திரியே, – இல்பொருள் உவமையணி. வீர்யத்தில் சிறந்தவன் இந்திரன், வீர்யம் அளிக்க வல்லது முந்திரி. இந்திரன் தோட்டதில் இருக்கும் முந்திரி எவ்வளவு வீர்யம் அளிக்கவல்லது என்று இல்லாத ஒரு பொருளைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

  • @r_inba 7:50 pm on June 10, 2013 Permalink | Reply

   “இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்” (வாலி – நீ பாதி நான் பாதி கண்ணே, கேளடி கண்மணி, யேசுதாஸ் / உமா ரமணன்)

   இதையும், ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையையும் முன்பு ஒரு முறை ஹப்பில் சிலாகித்திருந்தேன்…சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தேன் 🙂

   • Kannabiran Ravi Shankar (KRS) 2:29 pm on June 11, 2013 Permalink | Reply

    இனிய வாழ்த்துக்கள் இன்பா!
    என்னவொரு அழகின் வீச்சு, வரியில்; //இருட்டில் கூட…… இருக்கும் நிழல் நான்//

    பரிசேலோ ரெம்பாவாய்; பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
    இதே போல், தமிழ் நுணுக்கங்களை, அடிக்கடி பண்ணுங்க:))

  • பாரதிபிரியை 3:37 pm on June 11, 2013 Permalink | Reply

   late ah parthutten..chokka parisai enakke thara maattiya?(aiyo unga perum chokkanaache)sari en athirshtam avlo than…padikkavathu mudinchathe.

 • என். சொக்கன் 11:02 am on April 5, 2013 Permalink | Reply  

  வாய்யா, மின்னல்! 

  • படம்: வெள்ளை ரோஜா
  • பாடல்: சோலைப் பூவில் மாலைத் தென்றல்
  • எழுதியவர்: முத்துலிங்கம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=khUohdHlgAM

  மேகத்துக்குள் மின்னல்போலே நின்றாயே,

  மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே!

  தாகம் தீர்க்கும் தண்ணீர்போலே நீயும் வந்தாயே,

  தாவிப் பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே!

  இங்கே தரப்பட்டிருக்கும் நான்கு வரிகளில், முதல் இரண்டு பெண் பாடுவது, அடுத்த இரண்டு ஆண் பாடுவது.

  வழக்கம்போல், ஆண் பேசுவதைப் புரிந்துகொள்வது சுலபம்: தண்ணீராக அவள் வந்தாள், மீனாக இவன் நின்றான், தண்ணீர் இன்றி மீன் வாழாது, அதுபோல அவள் இன்றி இவன் வாழமுடியாது!

  ஆனால், அந்தப் பெண்ணின் குரலில் ஒரு சின்னக் குழப்பம், மின்னலாக அவன் வந்தான் என்கிறாள் இவள், கூடவே, ‘தாழம்பூவாக நான் ஆனேன்’ என்கிறாள். இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?

  இந்தப் புதிருக்கு விடை, கச்சியப்ப முனிவர் எழுதிய ‘தணிகைப் புராணம்’ என்ற நூலில் இருக்கிறது. ’தடித்து எழுந்தொறும் தாழை பூப்பன.’

  ’தடித்து’ என்றால் மின்னல், வானில் மின்னல் தோன்றும்போது, மொட்டாக இருக்கும் தாழை பூக்கும்!

  அதாவது, சூரியனைப் பார்த்தவுடன் தாமரை மலரும், சந்திரனைப் பார்த்தவுடன் அல்லி மலரும் என்பதுபோல, மின்னலைப் பார்த்தவுடன் தாழம்பூ மலரும். அந்தச் செய்தியை இந்தப் பாடலில் முத்துலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். ‘காதலா, மலர்வதற்காக மின்னலைத் தேடுகிற தாழம்பூவைப்போல நான் காத்திருந்தேன், ஆனால் நீயோ, மேகத்துக்குள் ஒளிந்து நின்றாய், இப்போது இங்கே என்முன்னே தோன்றினாய், உன்னைப் பார்த்ததும் நான் மலர்ந்துவிட்டேன், நீதான் என் மின்னல்!’ என்கிறாள் அவள்!

  ***

  என். சொக்கன் …

  05 04 2013

  125/365

   
  • amas32 (@amas32) 11:14 pm on April 5, 2013 Permalink | Reply

   எவ்வளவு அழகாக கவிஞர் இந்தக் கருத்தை இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்!. மின்னலைப் பார்த்துத் தாழை பூக்கும் என்ற விவரம் அறிந்தவர்களே பாடலை நன்கு இரசித்திருக்க முடியும்.

   நல்ல பாடல்களாக எடுத்து விளக்கம் சொல்கிறீர்கள் 🙂

   amas32

  • Niranjan 12:37 am on April 6, 2013 Permalink | Reply

   இந்தப் பாட்டை எழுதியது வாலி அல்லவோ ?

   • என். சொக்கன் 12:39 am on April 6, 2013 Permalink | Reply

    இல்லை நிரஞ்சன், ‘வெள்ளை ரோஜா’வில் வாலி எழுதியது ஒரே ஒரு பாடல், ‘தேவனின் கோயிலிலே யாவரும் தீபங்களே’

    இதைப் பாருங்கள்: http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers/1218/3/1/1

  • GiRa ஜிரா 1:06 pm on April 6, 2013 Permalink | Reply

   தாழம்பூவைப் பொருத்த வரையில் இரண்டு கருத்துகள் உண்டு. ஒன்று பாம்புக்கு தாழம்பூ வாசனை பிடிக்கும். மற்றொன்று மின்னொளியில் மலரும் தாழம்பூக்கள்.

   முன்னதை விட பின்னதில் அறிவியல் விளக்கம் இருப்பது போலத் தோன்றுகின்றது.

   பாம்புகள் பெரும்பாலும் புதர்களில் இருக்கும். தாழம்பூவும் புதர்களாக இருக்கும். அதனால் அங்கு பாம்புகள் அடைவதில் வியப்பில்லை. பொடிப்பாம்புகள் விரித்த தாழம்பூக்களில் சமயத்தில் ஏறிக்கொள்ளும். அதைத்தான் பூநாகம் என்று சொல்வார்கள்.

   மின்னொளியில் தாழம்பூ மலருமா என்று தெரியவில்லை. ஒருவேளை தாழம்பூவுக்கு மின் கடத்தும் திறன் நிறைய இருக்கலாம். அதனால் மின்னல் தாழம்புதர்களின் விழலாம். அதைப் பார்த்தவர்கள் மின்னலினால் தாழம்பூ மலரும் என்று சொல்லியிருக்கலாம்.

  • Vanitha 4:26 pm on May 11, 2019 Permalink | Reply

   சுரதா அவர்கள் நாடோடி மன்னனில் எழுதிய ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ பாடலிலும் இந்த உவமை வந்துள்ளது……. !

 • என். சொக்கன் 12:40 pm on March 9, 2013 Permalink | Reply  

  குற்றால நிலவு 

  • படம்: உலகம் சுற்றும் வாலிபன்
  • பாடல்: நிலவு ஒரு பெண்ணாகி
  • எழுதியவர்: வாலி
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=drcBFuf2y8U

  புருவம் ஒரு வில்லாக, பார்வை ஒரு கணையாக,

  பருவம் ஒரு தளமாக, போர் தொடுக்கப் பிறந்தவளோ!

  குறுநகையின் வண்ணத்தில், குழி விழுந்த கன்னத்தில்,

  தேன் சுவையைத்தான் குழைத்து, கொடுத்ததெல்லாம் இவள்தானோ!

  பெண்களின் வளைந்த புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவது பழைய மரபு. அந்த வில்லில் எய்யப்படுகிற அம்பாக அவர்களுடைய விழிகளை வர்ணித்து, அதன்மூலம் ஆண்கள்மீது பெண்கள் போர் தொடுப்பதாகக் கற்பனை செய்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. செய்தவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.

  உலகம் சுற்றும் வாலிபன், குற்றாலத்துக்கு வரமாட்டானா என்ன? திரிகூட ராசப்பக் கவிராயரின் அந்தக் கற்பனையை மிக அழகான இந்த வர்ணனைப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் வாலி.

  பால் ஏறும் விடையில் வரும் திரிகூடப்பெருமானார் பவனி காணக்

  கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள்

  சேல் ஏறும் கலக விழிக் கணை தீட்டிப், புருவ நெடும் சிலைகள் கோட்டி,

  மால் ஏறப் பொருதும் என்று மணிச் சிலம்பு முரசு அறைய வருகின்றாரே!

  ’பால் ஏறும் விடை’ என்றால், பால் போன்ற வெள்ளை வண்ணத்தைக் கொண்ட எருது, அதன்மீது ஏறிப் பவனி வருகிறார் திரிகூடப் பெருமான், அதாவது, சிவன்.

  அவருடைய பவனியை வேடிக்கை பார்க்கப் பல பெண்கள் வருகிறார்கள். அவர்களெல்லாம் யார் தெரியுமா?

  ’கால் ஏறும் காமன்’, அதாவது காற்றில் பறந்து வரும் மன்மதன், அவனுடைய படையில் உள்ள வீராங்கனைகள்தான் இந்தப் பெண்கள்.

  வெறும் வீராங்கனைகள்மட்டும் போதுமா? சண்டை போட ஆயுதம் வேண்டாமா?

  ஆயுதம் இல்லாமலா? மீன் போன்ற அவர்களுடைய விழிகள்தான் அம்புகள், அவற்றால் ஒரு பார்வை பார்த்தால் போதும், உலகம் கலகமாகிவிடும்!

  அப்படிப்பட்ட அம்பை நன்கு தீட்டி, புருவம் என்கிற நீண்ட வில்களில் பொருத்தி எய்யத் தயாராகிறார்கள் அந்தப் பெண்கள். அந்த அம்பால் தாக்கப்பட்ட ஆண்கள், உடனே மயங்கி விழவேண்டியதுதான்.

  வீராங்கனைகள் ரெடி, ஆயுதமும் ரெடி, போர் அறிவிக்க முரசு வேண்டாமா?

  அதுவும் உண்டு. அவர்களுடைய கால்களில் உள்ள மணிச் சிலம்புகளின் சத்தம்தான், மன்மத யுத்தம் தொடங்கப்போவதற்கான அறிவிப்பு.

  இனி, ஆண்கள் கதி என்னாகும்?

  ***

  என். சொக்கன் …

  09 03 2013

  098/365

   
  • GiRa ஜிரா 9:51 am on March 10, 2013 Permalink | Reply

   இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ….

   கண்ணையும் புருவத்தையும் வெச்சே கவிஞர்கள் ஆயிரம் பாட்டு எழுதுவாங்க போல. அப்பப்பா.. கண்ணாலே வலை விரிச்சான்.. கண்களும் கவிபாடுதே.. கண்விழி என்பது கட்டளையிட்டது.. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே…

   பாரதியார் கூட வேலை ஒதுக்கிவிட்டு வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா ஆங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா என்று எழுதியிருக்கிறார்.

   குற்றாலக் குறவஞ்சி பாடல் மிகமிக அழகு.

   இதே போல அருணகிரியும் ஒரு பாட்டு எழுதியிருக்காரு
   சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
   மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
   வேல்பட்டழிந்து வேலையும் சூரனும் வெற்பும் அவன்
   கால் பட்டழிந்தது இங்கென் தலைமேல் அயன் கையெழுத்தே

   அது சரி… பால் ஏறும் கால் ஏறும் சேல் ஏறும்னு எல்லாத்துக்கும் விளக்கம் சொன்ன நீங்க… மால் ஏறப் பொருதுங்குறதுக்கு விளக்கம் சொன்னா இன்னும் கொஞ்சம் ரசிச்சுக்குவேன் 🙂

   • என். சொக்கன் 10:02 am on March 10, 2013 Permalink | Reply

    மால் ஏறப் பொருத, மயக்கம் ஏற்படும்படி போர் செய்த 🙂

  • N Rajaram 3:46 pm on March 11, 2013 Permalink | Reply

   “புருவம் என்கிற நீண்ட அம்புகளில் பொருத்தி” – புருவம் என்னும் நீண்ட விற்களில்’ என்றல்லவா இருக்க வேண்டும்?

   • என். சொக்கன் 4:41 pm on March 11, 2013 Permalink | Reply

    Sorry, my mistake. Corrected now

    • N Rajaram 12:56 pm on March 12, 2013 Permalink

     விற்கள் – வில்கள்

     thanks for correcting my mistake too 😉

     இலவச கொத்தனாரின் புத்தகத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை 😉

    • என். சொக்கன் 12:57 pm on March 12, 2013 Permalink

     நீங்கள் எழுதியதில் Mistake எதுவும் இல்லைங்க, வில்கள், விற்கள் ரெண்டு கட்சியும் உண்டு, நான் முதல் கட்சி, அவ்ளோதான்!

 • G.Ra ஜிரா 10:16 am on January 11, 2013 Permalink | Reply  

  கன்னத்தில் முத்தமிட்டால் 

  கொஞ்ச வேண்டும் என்ற சூழல் வந்தால் கன்னத்தைத் தொடாத கவிஞன் இல்லை.

  கண்ணம்மா என் குழந்தை என்று எழுதிய பாரதியும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிடுவது கள்வெறி கொடுக்கும் மயக்கத்தைக் கொடுப்பதைக் குறிப்பிடுகிறான்.

  சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

  கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
  படம் – நீதிக்கு தண்டனை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பாரதி இப்படிச் சொல்லியிருக்க, கண்ணாதாசனா கன்னதாசனா என்று ஐயத்தை உண்டாக்கும் வகையில் பாடல்களை எழுதியிருக்கிறார். கன்னம் என்பதே தித்திப்பது என்பது அவர் கருத்து.

  முத்துக்களோ கண்கள்
  தித்திப்பதோ கன்னம்
  படம் – நெஞ்சிருக்கும் வரை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பார்க்கப் பார்க்க மின்னும் கன்னம் பருவப் பெண்ணின் கன்னம் என்பதை ரசித்தவர்தானே கண்ணதாசன். அதுதான் இந்தப் பாடலில் இப்படி வெளிப்படுகிறது.

  பால் வண்ணம் பருவம் கண்டு
  வேல் வண்ணம் விழிகள் கண்டு

  கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
  படம் – பாசம்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தித்திக்கும் கண்ணம் என்று சொல்லியாகி விட்டது. ஆனால் கன்னம் ஒரு கிண்ணம் என்றும் அந்தக் கிண்ணத்திலே கறந்த பாலின் சுவையிருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார் கவியரசர்.

  விழியே விழியே உனக்கென்ன வேலை
  விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

  கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
  கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
  படம் – புதிய பூமி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  தங்கமானது கன்னம் என்றால் காதல் விளையாட்டில் அதில் சேதாரம் இருக்கும் என்பது தெரிந்தவரும் அவர்தான். அதனால்தான் கன்னத்தில் என்னடி காயம் என்று குறும்போடு கேட்கிறார்.

  கன்னத்தில் என்னடி காயம்
  இது வண்ணக்கிளி செய்த மாயம்
  படம் – தனிப்பிறவி
  இசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்

  நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
  நடிக்கும் நாடகம் என்ன
  படம் – சிஐடி சங்கர்
  இசை – வேதா

  நாணத்தில் மின்னும் கன்னம் காதல் சோகத்திலும் கண்ணீர் சேர்ந்து மின்னும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.

  நினைவாலே சிலை செய்து
  உனக்கான வைத்தேன்.. திருக்கோயிலே ஓடி வா
  ..
  கண்ணீரிலே நான் தீட்டினேன்
  கன்னத்தில் கோலங்கள்
  படம் – அந்தமான் காதலி
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  கவியரசர் மட்டுந்தானா இப்படி? அடுத்து வந்த வாலியின் கை வண்ணத்து கன்னத்து அட்டகாசங்களைப் பார்ப்போம்.

  கன்னத்தை அத்திப்பழம் என்று உவமிக்கும் வாலி.. அந்தப் பழத்தைக் கிள்ளி விடவா என்று கேட்கிறார். மெல்லிய நண்டின் கால் பட்டாலே சிதைந்து போகும் மென்மையான பழம் அத்தி என்று அகநானூறு சொல்கிறது. கன்னத்தை அப்படியொரு பழத்துக்கு ஒப்பிடுவதும் அழகுதான்.

  வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
  வஞ்சிமகள் வாய்திறந்து சொன்ன மொழியோ

  அத்திப்பழக் கன்னத்திலே கிள்ளி விடவா
  படம் – தெய்வத்தாய்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  அத்திப் பழம் என்று உவமித்த அதே வாலி கன்னத்தை மாம்பழம் என்றும் சொல்லத் தவறவில்லை. மரத்தில் பழுக்கும் அந்த மாம்பழங்களை விட காதலியின் கன்ன மாம்பழங்களைத்தான் காதலன் விரும்புவானாம்.

  நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
  அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
  அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை
  இந்தக் கன்னம் வேண்டும் என்றான்
  படம் – எங்க வீட்டுப் பிள்ளை
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  பழம் என்று சொன்னால் அணில் கடித்து விடுமோ என்று நினைத்தாரோ என்னவோ… தாமரைப் பூவைப் போன்ற கன்னங்கள் என்றும் வர்ணித்து விட்டார். அந்தத் தாமரைக் கன்னம் என்னும் கிண்ணத்தில்தானே தேன் இருக்கிறது.

  தாமரைக் கன்னங்கள்
  தேன்மலர்க் கிண்ணங்கள்
  படம் – எதிர் நீச்சல்
  இசை – வி.குமார்

  கண்ணதாசன் கன்னத்தில் என்னடி காயம் என்று கேட்டால்… வாலியோ கன்னத்து முத்தங்களால் கன்னிப் போகும் கன்னங்களே அத்தானின் அன்புக்கு அடையாளச் சின்னங்கள் என்று அடித்துச் சொல்கிறார்.

  அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்
  அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்
  படம் – உயர்ந்த மனிதன்
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்

  நறுந்தேனை கிண்ணத்தில் வடித்து எடுத்து வருகிறாள் ஒருத்தி. அதெல்லாம் எதற்கு? உன் கன்னத்தில் தேன் குடித்தால் ஆயிரம் கற்பனை ஓடி வராதா என்று ஏங்குகிறது கவிஞனின் உள்ளம்.

  கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
  எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
  கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை ஓடி வரும்
  படம் – இளமை ஊஞ்சலாடுகிறது
  இசை – இசைஞானி இளையராஜா

  கண்ணன் ஒரு கைக்குழந்தை
  கண்கள் சொல்லும் பூங்கவிதை
  கன்னம் சிந்தும் தேனமுதை
  படம் – பத்ரகாளி
  இசை – இசைஞானி இளையராஜா

  கன்னத்தை பழமென்றும் பூவென்றும் வர்ணிக்க கண்ணதாசனாலும் வாலியாலும் மட்டுந்தான் முடியுமா? இதோ இருக்கிறார் வைரமுத்து.

  தொட்டுரச தொட்டுரச மணக்கும் சந்தனம். அப்படியான சந்தனக் கிண்ணமடி உன் கன்னம். அதைத் தொட்டுரசி தொட்டுரசி மணக்குதடி என் கைகள் என்று கவிதையை அடுக்குகிறார்.

  ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
  தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
  படம் – சிவப்புமல்லி
  இசை – சங்கர் கணேஷ்

  தொட்டுப் பார்த்தால் பளபளப்போடு வழவழக்கும் பட்டை கன்னத்திற்கு ஒப்பிடாமல் போவாரோ கவிஞர்.

  பட்டுக் கன்னம்
  தொட்டுக் கொள்ள
  ஒட்டிக் கொள்ளும்
  படம் – காக்கிச்சட்டை
  இசை – இசைஞானி இளையராஜா

  கண்ணுக்கு மையழகு.. என்று சொல்லும் போது கன்னத்தில் குழியழகு என்று எழுதிய வைரமுத்து ஒரு கிராமத்துக் காதலைச் சொல்லும் போது கன்னத்தில் கன்னம் வைத்த காதலனைப் பற்றியும் சொல்கிறார்.

  காக்கிச்சட்ட போட்ட மச்சான்
  கன்னத்திலே கன்னம் வெச்சான்
  படம் – சங்கர் குரு
  இசை – சந்திரபோஸ்

  தன்னுடைய குழந்தை கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில்ஜில்ஜில்ஜில் என்று எழுதியதும் இதே வைரமுத்துதான். ஆனாலும் காதல் குறும்பில் கன்னத்தில் முத்தமிட வரும் காதலனின் கன்னத்தில் தேளைப் போலக் கொட்டுவேன் என்றா எழுதுவது! உயிர் போக்கும் வலி அல்லவா அது!

  நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்
  நெய்விளக்க ஏந்திக்கிட்டேன்
  உன்னோட கன்னத்திலே முத்தம் குடுக்க
  ..
  கன்னத்திலே தேளப் போலே கொட்டி விடுவேன்
  படம் – ஸ்டார்
  இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

  அன்புடன்,
  ஜிரா

  041/365

   
  • niranjanbharathi 10:24 am on January 11, 2013 Permalink | Reply

   தேன் கன்னம், மதுக் கன்னம் , சந்தனக் கன்னம் ஆகியவற்றோடு சேர்ந்து இது தான் “ஜீரா” கன்னம் போலும். ஜாமூனைச் சூழந்து நிற்கும் ஜீரா 🙂 🙂

  • amas32 (@amas32) 2:43 pm on January 13, 2013 Permalink | Reply

   What a myriad of songs with cheeks alone! ;-)) You are one genius only 🙂

   amas32

  • தேவா.. 3:41 pm on January 13, 2013 Permalink | Reply

   கன்னங்களுக்கு பல உவமைகள்…..கண் பட்டிருச்சு ஜீரா…. 🙂

 • என். சொக்கன் 8:57 am on December 10, 2012 Permalink | Reply  

  பொலிக! பொலிக! 

  • படம்: பாசமலர்
  • பாடல்: மலர்ந்தும் மலராத
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்கள்: டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா
  • Link: http://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M

  நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி

  ….நடந்த இளம் தென்றலே, வளர்

  பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு

  ….பொலிந்த தமிழ் மன்றமே!

  தமிழ்த் திரை இசை வரலாற்றிலேயே மிகப் பிரபலமான வரிகள் இவை. தென்றல் காற்று நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி நடந்து செல்கிற அற்புதமான கற்பனை ஒருபுறம், குழந்தையைத் தென்றலுக்கும் தமிழுக்கும் உவமையாகச் சொல்லும் அழகு இன்னொருபுறம்.

  ஆனால், நாம் இப்போது பேசப்போவது, கண்ணதாசன் நடுவே மிகச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் பயன்படுத்தியிருக்கும் ‘பொலிந்த’ என்ற வார்த்தையைப்பற்றி.

  ’பொலிதல்’ என்ற இந்த வினைச்சொல் (Verb) இப்போது அதிகம் புழக்கத்தில் இல்லை. நல்லவேளையாக, விளம்பர உலகம் அதன் பெயர்ச்சொல் (Noun) வடிவத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துவைத்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை, ‘என் மேனிப் பொலிவுக்குக் காரணம் லக்ஸ்’ என்று சொல்லாத நடிகைகள் உண்டா!

  சோப்பு விளம்பரத்தில், ‘பொலிவு’ என்ற வார்த்தை தோற்றப் பொலிவு, அழகு, சிறப்பு என்பதுபோல் சற்றே சுற்றி வளைத்த பொருள்களில் வருகிறது. ஆனால் இங்கே கண்ணதாசன் எழுதியிருப்பது, அதே வார்த்தையின் நேரடிப் பொருளில், அதாவது வளர்தல், பெருத்தல், கொழித்தல் என்ற அர்த்தத்தில்.

  உதாரணமாக, கம்ப ராமாயணத்தில் ஓர் இடத்தில் ராமன் தசரதனைப்பற்றிப் பேசும்போது ‘புதல்வரால் பொலிந்தான்’ என்கிறான். அதாவது, தசரதன் ஏற்கெனவே சிறப்பான அரசன், பெரிய வீரன்தான், ஆனால் இப்போது, நல்ல மகன்களால் அவன் மேலும் பெருமை பெற்றான்.

  ‘பொலிகாளை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இதே பொலிவுதான் அங்கேயும், நன்கு பெருத்த, வளமான, சினைக்குப் பயன்படக்கூடிய காளை.

  இந்தப் பாடல் வரியில் கண்ணதாசன் மூன்று விஷயங்களைச் சொல்கிறார்:

  1. தமிழ் பொதிகை மலையில் தோன்றியது
  2. பின்னர், மதுரை நகருக்கு வந்தது
  3. அங்கே சங்கம் (மன்றம்) வைத்து வளர்க்கப்பட்டது

  இவை மூன்றுமே, சும்மா மெட்டுக்குப் பொருத்தமாகச் சொல்லப்பட்டவை அல்ல. தமிழ் மொழியின் தொடக்கம் பொதிகை மலையில்தான் எனவும், அது மதுரையில் வளர்ந்ததாகவும்தான் நம்மிடம் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக, மதுரை தமிழ்ச் சங்கம்தான் தமிழின் இன்றைய வளத்துக்குக் காரணம். அந்தத் தகவல்களையெல்லாம் சர்வசாதாரணமாக, எந்தத் திணித்த உணர்வும் இல்லாமல் பாடலினுள் இணைத்துவிடுகிறார் கண்ணதாசன்.

  இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ‘பொலிந்த’ என்ற வார்த்தை எத்துணைப் பொருத்தம்!

  இன்னொரு விஷயம், இந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அதிகம் புழக்கத்தில் உள்ள ‘தமிழ்ச் சங்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் கண்ணதாசன் ஏன் ‘தமிழ் மன்றமே’ என்று எழுதியிருக்கிறார் என நினைப்பேன்.

  ஆனால், அந்த இடத்தில் ‘தமிழ்ச் சங்கமே’ என்று பாடினால், வல்லின ‘ச்’ மெட்டில் உட்காராமல் உறுத்துகிறது, ‘தமிழ் மன்றமே’தான் சுகமாக இருக்கிறது.

  சொல்லப்போனால், இந்த வரிகள் முழுவதுமே வல்லின ஒற்றுகள் இல்லை. அதனால்தான் சும்மா சத்தமாகப் படித்தாலே கீதம் சுகமாக உருண்டோடுகிறது.

  அதனால்தான் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தை மன்றம் என எழுதினாரா? அல்லது மதுரையின் சரித்திரத்தில் ‘தமிழ் மன்றம்’ என்று வேறொரு சமாசாரம் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

  ***

  என். சொக்கன் …

  10 12 2012

  009/365

   
  • ரசனைக்காரன் 9:01 am on December 10, 2012 Permalink | Reply

   வாவ்..இத்தனை நாள் பொழிந்த என பாடுவேன் 🙂

  • Arun Rajendran 9:16 am on December 10, 2012 Permalink | Reply

   மன்றம் -> தமிழ் வார்த்தை…சங்கம் –> வடமொழிச் சொல்…மன்றம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி தமிழ்..சங்கம் பின்னர் வந்தேரிற்று..

   • என். சொக்கன் 10:23 am on December 10, 2012 Permalink | Reply

    நன்றி அருண். இன்றைக்கும் ‘சங்கத் தமிழ்’ என்றுதான் சொல்கிறார்கள், மறைக்கப்பட்ட மன்றத்தை வெளிக்கொண்டுவந்த கண்ணதாசனைப் போற்றதான் வேண்டும்!

  • Kannabiran Ravi Shankar (KRS) 10:37 am on December 10, 2012 Permalink | Reply

   என்னவொரு “பொலிவு உள்ள” கண்ணதாசன் வரிகள்!
   பொலிவு-க்கு என்ன நேரடியான ஆங்கிலச் சொல்லு சொல்ல முடியும்?

   பொலிக பொலிக பொலிக -ன்னு சொல்லுவான் மாறன் என்னும் பையன் (நம்மாழ்வார்)
   திருவில் பொலி, மருவில் பொலி,
   உருவில் பொலி, உடலில் களி -ன்னு வந்தானாம் மன்மதன்:)

   திரு (எ) செல்வம் பொலிந்து, மரு (வாசனை) மிக்க வில் பொலிந்து,
   உருவம் இல்லாமலேயே பொலிந்து, உடலில் களிக்க வரும் மன்மதன்!

   மயிலின் மிசை அழகு பொலி வர வேணும் – ன்னு , திருப்புகழ்!
   அழகன் முருகன்பொலியப் பொலிய வர வேணும்-ன்னு:)

   நீங்க சொன்னது போல், பொலிதல் = கொழித்தல் என்பதே சரியான சொல்லும்-பொருளும்!
   ————–

   இன்னோன்னு கவனிச்சீங்களா?

   வளர் பொதிகை மலை தோன்றி, மதுரை நகர் கண்டு,
   ….பொலிந்த தமிழ் மன்றமே!

   வெறும் பொதிகை இல்லை! “வளர்” பொதிகை;
   ஒரு மலையை வளர விடாமல் தடுத்த அகத்தியர், இன்னொரு மலையை வளர வைக்கிறார்:)

   வட மலை = விந்திய மலை = வளர விடாமல் தடுத்தவரு
   தமிழ் மலை = பொதிகை மலை = “வளர்” பொதிகை ஆக்கி, “வளர்” தமிழ் ஆக்குறாரு:)

   சும்மா புராணம் தான்:)
   ஒரு மொழியை, ஒருத்தரே உருவாக்கி விட முடியாது; அது சமூகப் பரிணாமத்தில் தான் உருவாகி வளரும்; ஆனாலும் இது கற்பனைக்கு இனிது!:)

   • Kannabiran Ravi Shankar (KRS) 10:48 am on December 10, 2012 Permalink | Reply

    நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி
    ….நடந்த இளம் தென்றலே!

    இது ரொம்ப இனிப்பான வரி;

    நதியில் விளையாடினாத், தலை கலையும்…
    தலை கலைஞ்சி இருப்பது = நதியில் வேணும்-ன்னா அழகா இருக்கும்! ஆனா சாலையில் அப்படி வர முடியாது;

    அதனால், குளிச்சிட்டு, பக்கத்துல, கொடியில் தலை சீவிக்கிட்டு வந்துச்சாம்! = நடந்த இளந் தென்றல் = என்னைப் பார், என் அழகைப் பார் -ன்னு நடந்து வருது;

    காற்று, தண்ணியில் வேகமாத் தான் அடிக்கும்! அலைக்கும் = அதான் “விளையாடி”
    ஆனா, சாலையில், ஆளை அடிக்காம, மெல்ல வீசும் = அதான் “நடந்த” இளந்தென்றல்

    இந்தக் குட்டிப் பையன் அது போலச் சமத்து;
    வூட்டுக்குள்ள விளையாடும் போது, பாவம் அம்மா; ஒரே கலாட்டா & Violence:)
    ஆனா மத்தவங்க முன்னாடி? = “நடந்த” இளந் தென்றல் = gentle:))
    ————

    பொலிக -ன்னு சொன்னதும் வேற ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சி;
    பொலி = Flourish/ கொழித்தல் தான்;
    ஆனா, நாம இன்னிக்கி பேச்சு வழக்கில், “மவனே, உன்னைய பொலி போட்டுருவேன்” -ன்னு சொல்றோம்-ல்ல?:))

  • Kannabiran Ravi Shankar (KRS) 11:04 am on December 10, 2012 Permalink | Reply

   அன்புள்ள அருண் ராஜேந்திரன் & @nchokkan

   சங்கத் தமிழில் உள்ள “சங்கம்” = வடமொழியோ? -ன்னு ஒரு கருத்து நிலவினாலும்…
   அந்தச் “சங்கம்” = தமிழே!

   சங்கம் வேற; ஸங்கம் வேற
   கந்தன், ஸ்கந்தன் போலத் தான்!

   ஸங்கம் = கூட்டம்/ஸங்கமம்;
   புத்தர்களின் ஸங்கம்;
   சமணர்களும்/ பெளத்தர்களும் தென்னகம் வந்து, தமிழ் வளர்த்த போது…
   அவர்கள் சொல்லாய், “ஸங்கத்” தமிழ் ஆகி விட்டது என்பது கற்பனையே!

   சமணர்கள்/ பெளத்தர்கள்… கூடுமானவரை, தமிழ் இலக்கியங்களில், பாலி மொழி கலவாமலேயே, தங்கள் சமயக் கருத்தை எழுதினார்கள்; அவர்கள் தமிழின் தனித் தன்மையை மதித்தார்கள்;
   வேதநெறியின் சமஸ்கிருதம் கலப்பு செய்தது போல், தமிழில் பாலி மொழி கலக்கவில்லை பாருங்கள்; அதுவே அத்தாட்சி;

   எப்படி விளக்கு = விளக்கம் ஆனதோ,
   அப்படி சங்கு = சங்கம்!

   விளக்கு ஒளியால் பெறும் தெளிவு = விளக்கம்;
   சங்கு ஒலித்து ஒழுங்கு உறும் அவை = சங்கம்!

   தலைச் “சங்க” நாண் மதியம் -ன்னே ஒரு ஊரு உண்டு;
   சங்கம் = கழகம்/ மன்றம் ; இவையெல்லாம் இணையான சொற்களே;

   மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் கூட, முதலில் ஸங்கம் என்று கருதினாலும், பின்னர் ஆய்ந்து, தன்னையே மாற்றிக் கொண்டு, விளக்கினார்;
   ————-

   இந்தப் பாட்டில்,
   “தோன்றி, கண்டு, மன்றம்” -ன்னு வல்லினம் ஒலிக்க அமைச்சி இருக்காரு கவிஞரு; அதான் சங்கம் என்றோ, கழகம் என்றோ சொல்லாமல், மன்றம் என்ற சொல்லைச், சந்தமாப் போடுறாரு:)

   • Kannabiran Ravi Shankar (KRS) 11:33 am on December 10, 2012 Permalink | Reply

    இதே போல்…
    தமிழ் மறையான திருக்குறளில் = “ஆதி-பகவன்” வடமொழியோ?
    சிலப்பதிகாரத்தில் = “அதிகாரம்” வடமொழியோ?
    -ன்னு எல்லாம் எழுப்பப்பட்டதுண்டு; ஆனால், பாவாணர், தக்க விடையிறுத்துள்ளார்;

    ஆவதால் = ஆதி (தோற்றம்)
    பகுப்பதால் = பகல் / பகவன்; Not Sri Valmiki Bhagawan:))
    தமிழ் வேர்ச் சொற்கள் – அதன் ஆராய்ச்சி – பாவாணர்/ தெ.பொ.மீ நூல்களிற் காணலாம்;

    மன்னர்களிடம் வேலை பார்த்த பண்டிதர்களால், கல்வெட்டு/அரசு அலுவலில், கிரந்தம் புகுந்துவிட்ட பின்னாலும் கூட. (6th-7th CE)
    இலக்கியத்தில் மட்டும் புக விடாமல் பார்த்துக் கொண்டார்கள்… தமிழ்க் கவிஞர்கள்… ஆழ்வார்கள், நாயன்மார்கள்… கம்பன் உட்பட (10-11th CE),

    கம்பனுக்குப் பின் வந்த காலத்திலும் கூட, இந்தத் தொல்காப்பிய நெறி கடைப்பிடிக்கப்பட்டது;
    நாயக்கர்கள் ஆட்சி/ தஞ்சை சரபோஜி – மராத்தியர் ஆட்சிக் கட்டத்தில் தான், துதி பாடும் தன்னலக் கொள்கையால், கவிஞர்கள் -> புலவர்களாக மாறி விடத், தளரத் துவங்கியது

    அப்படியொரு உறுதி 15ஆம் நூற்றாண்டு வரைக்கும்!
    அப்படி இருக்க, ஆதித் தமிழிலே, “ஸங்கம்” என்று விட்டு விடுவார்களா என்ன, தமிழ்ச் சமூகப் பெருங்குடிச் சான்றோர்கள்? – இதை ஓர்ந்து பார்த்தால், விடை கிடைக்கும்!

    தமிழ்ச் சங்கம் வேறு; வடசொல் ஸங்கம் வேறு!
    தமிழ்க் கந்தன் வேறு; வடசொல் ஸ்கந்தன் வேறு!

  • Arun Rajendran 12:33 pm on December 10, 2012 Permalink | Reply

   KRS Sir,

   மிக அருமையான விளக்கம்… இதுகாறும் நான் கொண்டிருந்தத் தவறானப் புரிதலை /பிழையைத் திருத்தியமைக்கு நன்றி..கற்றுக்கொண்டேன்

   உங்கள் (சொக்கன், KRS -> Dosa) முயற்சிக்கு என் பாரட்டுக்கள் மற்றும் வணக்கங்கள்..

   அன்புடன்,
   அருண்

   • Kannabiran Ravi Shankar (KRS) 5:38 pm on December 10, 2012 Permalink | Reply

    புரிதலுக்கு நன்றி அருண்;
    எங்கேனும் தகவற் பிழை இருப்பின், நீங்களும் தவறாது சொல்லுங்கள்;
    அறியாதன அறிதலும், அறிந்தன பகிர்தலும் makes Tamizh fun for learning:)

    இப்போ தான் தோனிச்சி;
    கம்பன் காலத்தில், கிரந்தம் எப்பவோ, உள்ளாற வந்துருச்சி; ஆனாலும் திட்டிவிடம் -ன்னு எழுதுவான் கம்பன்:) = திருஷ்டி விஷம்:)

    பார்வையிலேயே நஞ்சுள்ள பாம்பு; திட்டிவிடம்; எதுக்குக் கம்பன் திட்டி விடுறான், யாரை?-ன்னு சிரிப்பு வந்துருச்சி:))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel