Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:02 pm on November 4, 2013 Permalink | Reply  

  ”ஓ” போடு 

  • படம்: பார்த்தேன் ரசித்தேன்
  • பாடல்: எனக்கென ஏற்கெனவே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: பரத்வாஜ்
  • பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=Y2_9E4M4zWo

  எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ!

  இதயத்தைக் கயிறு கட்டி இழுத்தவள் இவளோ!

  தமிழில் ’ஓ’ என்ற எழுத்து ஒரு பெயர்ச் சொல்லோடு ஒட்டி வந்தால், அது சந்தேகத்தைக் குறிப்பிடும்.

  ‘நான்’ என்றால் உறுதிப்பொருள், ‘நானோ’ என்றால் சந்தேகம்! (”டாடா நானோ” அல்ல!)

  ‘அவன்’ என்றால் உறுதிப்பொருள், ‘அவனோ’ என்றால் சந்தேகம்!

  ஆகவே, இந்தப் பாடலில் ‘எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ என்றால், காதலனுக்கு இன்னும் அவள்தான் தன்னுடைய காதலி, பின்னர் தன் மனைவியாகப்போகிறவள் எனும் நம்பிக்கை வரவில்லையோ? அதனால்தான் கொஞ்சம் சந்தேகமாகவே பாடுகிறானோ?

  காதலனுக்குச் சந்தேகம் வரலாம், கவிஞருக்கு வரலாமா? அவள்தான் என்று உறுதியாக அடித்துச் சொல்லவேண்டாமோ?

  வைரமுத்து அதைதான் செய்திருக்கிறார், தண்டியலங்காரத்தில் ‘அதிசய அணி’ என்று குறிப்பிடப்படும் அணியின்கீழ் வருகிற ‘ஐய அதிசயம்’ என்ற வகையில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

  ’ஐய அதிசயம்’ என்றால் ஐயப்படுவதன்மூலம் (சந்தேகப்படுவதன்மூலம்) ஒரு பொருளை உயர்த்திச் சொல்வது. ‘இவளோ’ என்றால், இங்கே ‘இவள்தான்’ என்று அர்த்தம்!

  உதாரணமாக, காதலியைப் பார்த்து ஒருவன், ‘அடியே நீ வெண்ணிலவோ, பூங்கொத்தோ, தேவதையோ, அப்ஸரஸோ, ஹன்ஸிகாவோ, நஸ்ரியாவோ’ என்றெல்லாம் வரிசையாக “ஓ” போட்டால், அதெல்லாம் சந்தேகம் அல்ல, நீதான் வெண்ணிலவு, நீதான் பூங்கொத்து, நீதான் தேவதை என்று உறுதியாகச் சொல்லி அவளை உயர்த்திப் பேசுவதாக அர்த்தம்!

  ஆஹா, இதுவல்லவோ கவிதை!

  ***

  என். சொக்கன் …

  04 11 2013

  337/365

   
  • Kannan 10:45 pm on November 4, 2013 Permalink | Reply

   Super. O Podu

  • rajinirams 11:45 pm on November 4, 2013 Permalink | Reply

   “ஐய அதிசயம்’ பற்றி எடுத்துரைத்த அருமையான பதிவு.-நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற “அழகோ”…குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் “பூங்குழலோ”-மதுரையில் பிறந்த -பாடல் இப்படி ….. நன்றி.

  • amas32 9:18 pm on November 5, 2013 Permalink | Reply

   நீ தான் என் நஸ்ரியாவோ, நயந்தாராவோ என்றால் காதலியிடம் இருந்து அடி தான் கிடைக்கும். காதலி has to be exclusive/special 🙂 நிலவோடு, காப்பியத் தலைவிகளோடு தைரியமாக ஒப்பிடலாம் ஏனென்றால் நிலவு ஒரு அற்புத அழகின் சின்னம், காவியத் தலைவிகளோ இன்று உயிருடன் இல்லை 🙂

   amas32

  • lotusmoonbell 9:20 pm on November 6, 2013 Permalink | Reply

   ஓ ஓ போட்டுவிட்டேன். நாலு வரிக்கு ஜே போடு!

 • என். சொக்கன் 11:42 pm on October 31, 2013 Permalink | Reply  

  ஒரு ’கமா’க் கட்டுரை 

  • படம்: உலகம் சுற்றும் வாலிபன்
  • பாடல்: அவள் ஒரு நவரச நாடகம்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=_JDAiNMowaE

  அவள் ஒரு நவரச நாடகம்,

  ஆனந்தக் கவிதையின் ஆலயம்,

  தழுவிடும் இனங்களில் மானினம்,

  தமிழும் அவளும் ஓரினம்!

  ஆங்கிலத்தில் எந்த இரண்டு சொற்களை இணைத்துப் பட்டியல் போட்டாலும், நடுவில் ஒரு கமா (காற்புள்ளி) அல்லது ‘and’ என்ற சொல்லைச் சேர்க்கிறோம். உதாரணமாக: Ram and Laxman அல்லது Ram, Laxman.

  இதை அப்படியே தமிழுக்கும் நீட்டி, இப்படி எழுதுகிறோம்: ராம் மற்றும் லட்சுமணன் அல்லது ராம், லட்சுமணன்.

  ஆனால் இந்த இரண்டு தவிர, தமிழில் மூன்றாவதாக இன்னொரு வகையும் உண்டு. பட்டியலில் உள்ள சொற்களுடன் ‘உம்’ சேர்த்து எழுதுவது. இப்படி: ராமனும் லட்சுமணனும்.

  இலக்கணத்தில் இதனை ‘எண்ணும்மை’ என்கிறார்கள். அதாவது, ராமன், லட்சுமணன் என்று எண்ணுகிற ‘உம்’மை. உதாரணமாக: நானும் அவனும், சந்திரனும் சூரியனும், பூவும் காயும்…

  இப்படி எங்கெல்லாம் ‘எண்ணும்மை’ வருகிறதோ, அங்கெல்லாம் நடுவில் காற்புள்ளி சேர்க்க வேண்டியதில்லை, ‘மற்றும்’ என்ற சொல்லும் வேண்டியதில்லை. இதையெல்லாம் அந்த ‘உம்மை’ பார்த்துக்கொள்கிறது. ‘தமிழும் அவளும் ஓரினம்’ என்று எழுதினால் போதும், ‘தமிழும், அவளும் ஓரினம்’ என்று கமா போட்டு எழுதவேண்டியதில்லை.

  ***

  என். சொக்கன் …

  31 10 2013

  333/365

   
  • amas32 9:45 pm on November 1, 2013 Permalink | Reply

   நீங்களும் நாலு வரி நோட்டும் மாதிரி :-))

   amas32

 • என். சொக்கன் 11:17 pm on October 28, 2013 Permalink | Reply  

  அழகின் கதகதப்பு! 

  • படம்: உயிரே
  • பாடல்: தைய தையா
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், மால்குடி சுபா
  • Link: http://www.youtube.com/watch?v=pE3ykXZS4zA

  அவள் கண்களோடு இருநூறாண்டு,

  மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

  அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!

  ஐநூறா, ஐந்நூறா, எது சரி?

  வழக்கம்போல், இரண்டுமே சரிதான், எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து விடை மாறும்!

  சாலையில் நடந்து செல்கிறீர்கள். கீழே ஏதோ கிடக்கிறது, குனிந்து பார்த்தால், அது ஒரு நூறு ரூபாய் நோட்டு. மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். ‘ஐ! நூறு ரூபாய் கிடைத்தது எனக்கு’ என்கிறீர்கள்.

  ஆனால், அதே இடத்தில் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள் கிடைத்தால், ‘ஐநூறு ரூபாய்’ என்று சொல்லக்கூடாது, ‘ஐந்நூறு ரூபாய்’ என்றுதான் சொல்லவேண்டும்!

  ஐந்து + நூறு ஆகியவை இணையும்போது, ’ஐந்து’ என்ற சொல்லின் நிறைவில் உள்ள ‘து’ என்ற எழுத்து நீக்கப்படும், ஆனால் ‘ந்’ என்ற எழுத்து நீக்கப்படாது, இதனைத் தொல்காப்பியம் ‘நான்கும் ஐந்து ஒற்றுமெய் திரியா’ என்று குறிப்பிடுகிறது.

  ஆக, ஐந்(து) + நூறு = ஐந்நூறு.

  ***

  என். சொக்கன் …

  28 10 2013

  330/365

   
  • rajinirams 12:33 pm on October 29, 2013 Permalink | Reply

   ஐ! “ந்”த தகவல் புதுசு.நல்ல பதிவு.

  • amas32 11:22 am on November 2, 2013 Permalink | Reply

   //அவள் கண்களோடு இருநூறாண்டு,

   மூக்கின் அழகோடு முந்நூறாண்டு,

   அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்!//

   200 +300 =500?
   கண்களின் அழகோடு 200 ஆண்டுகள்,
   மூக்கின் அழகோடு 300 ஆண்டுகள்,
   ஆக மொத்தம் 500 ஆண்டுகள்?

   அழகோ அழகு 🙂

   amas32

 • என். சொக்கன் 3:33 pm on October 19, 2013 Permalink | Reply  

  விஸ்வநாதன், நெல் வேண்டும்! 

  • படம்: காதலிக்க நேரமில்லை
  • பாடல்: விஸ்வநாதன், வேலை வேணும்
  • எழுதியவர்: கண்ணதாசன்
  • இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
  • பாடியவர்: பி. பி. ஸ்ரீனிவாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=VndSgJLoKkU

  மாடி மேல மாடி கட்டி

  கோடி கோடி சேர்த்துவிட்ட சீமானே!

  ஆளு அம்பு சேனை வெச்சு, காரு வெச்சு

  போரடிக்கும் கோமானே!

  பழந்தமிழ் நாட்டில் மாடு கட்டிப் போரடித்தால் கட்டுப்படியாகாது என்று யானை கட்டிப் போரடித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இந்தப் பாட்டில் வருகிற விஸ்வநாதன் என்ற சீமான் Car வைத்துப் போரடித்ததாக எழுதுகிறார் கண்ணதாசன்.

  மாடோ, யானையோ, காரோ, போரடித்தல்ன்னா என்ன?

  நானும் பார்த்ததில்லை. படித்துத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.

  நெல்வயலில் இருந்து கதிர்களை அறுவடை செய்தபிறகு, அவற்றிலிருந்து தானிய மணிகளைப் பிரித்து எடுத்தால்தானே அரிசி கிடைக்கும்? அதற்காக, அறுத்த கதிர்களைக் கையில் பிடித்து அடிப்பார்கள், அவற்றிலிருந்து நெல் மணிகள் மொத்தமாகக் கீழே விழும்.

  ஆனால் அப்போதும், சில நெல் மணிகள் பிடிவாதமாகக் கதிரிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் பிரித்து எடுக்கவா முடியும்?

  அதற்காக, அடித்து முடித்த கதிர்களையெல்லாம் ஒரு களத்தில் வட்டமாகப் பரப்பிவைப்பார்கள். அதன்மீது மாடுகளை நடந்துவரச் செய்வார்கள். அவை மிதிக்க மிதிக்க, கதிர்களில் மீதமுள்ள நெல்மணிகள் அனைத்தும் உதிர்ந்துவிடும். இதற்குதான் போரடித்தல் அல்லது சூடடித்தல் என்று பெயர்.

  விளைந்த நெற்கதிர்களின் அளவு குறைவாக இருந்தால், மாடுகளை மிதிக்கச் சொல்லலாம். நிறைய்ய்ய்ய்ய இருந்தால்? அதற்குப் பெரிய யானைகளோ கார்களோ தேவைப்படும் என்று பாடல்களில் புலவர்கள் உயர்வு நவிற்சி அணியாக மிகைப்படுத்திச் சொல்லிப் புகழ்கிறார்கள்!

  இதற்குமேல் இந்த விஷயத்தை விவரித்தால் bore அடித்துவிடும்!

  ***

  என். சொக்கன் …

  19 10 2013

  321/365

   
  • lotusmoonbell 5:09 pm on October 19, 2013 Permalink | Reply

   கிராமப்புரங்களில் பெரும்பாலும் ராகிக் கதிர்களை சாலைகளில் பரப்பி விடுவதைப் பார்த்திருக்கிரேன். கார், லாரிகள்தான் ‘போரடி’க்கின்றன.

  • Saba-Thambi 8:10 pm on October 19, 2013 Permalink | Reply

   நன்றாக சூடு மிதித்திருக்கிறீர்கள். பாரட்டுக்கள்!

  • rajinirams 11:00 pm on October 19, 2013 Permalink | Reply

   கார் வெச்சு போரடிக்கும் கோமானே வார்த்தையை வைத்து”போரடிக்காத” நல்ல சுவாரஸ்யமான பதிவை போட்டிருக்குறீர்கள். சூப்பர்

  • amas32 9:37 am on October 20, 2013 Permalink | Reply

   Like Lotusmoonbell has mentioned, roads near villages will be strewn with gains and cars and lorries will do the work of oxen. But now even that is missing. I think all agricultural land are being converted to residential plots 😦

   amas32

  • Anany 9:20 pm on October 22, 2013 Permalink | Reply

   //நானும் பார்த்ததில்லை. படித்துத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.// enna koduma sir ithu,
   ungalukke theriyavillai endral indraiya ilaiya thalaimuraiyin kadhi ? ippadithan ellavatrayum izhanthu kondirukkirom

 • என். சொக்கன் 10:55 pm on October 3, 2013 Permalink | Reply  

  சரியோ? தவறோ? 

  • படம்: தெய்வத்தாய்
  • பாடல்: ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
  • எழுதியவர்: வாலி
  • இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=uegEKABaaSo

  கொடி மின்னல் போல் ஒரு பார்வை,

  மானோ மீனோ என்றிருந்தேன்!

  குயில் ஓசை போல் ஒரு வார்த்தை,

  குழலோ யாழோ என்றிருந்தேன்!

  இந்தப் பாட்டைத் திருவள்ளுவர் எழுதியிருந்தால், ‘மான் இனிது, மீன் இனிது என்பர் தம் காதலியர் கூர்மைக் கண் பாராதவர்’ என்று தொடங்கியிருப்பார்.

  அது நிற்க. இணையத்தில் ஒரு செய்தியைப் படித்துக்கொண்டிருந்தேன். ‘இந்தத் திட்டம் வருகிற நவம்பரிலோ அல்லது டிசம்பரிலோ அமலுக்கு வரும்’ என்று எழுதியிருந்தார்கள்.

  தமிழில் ஓகாரம், ‘ஆவது’ என்ற சொல்லில் முடியும் இரு சொற்களை அடுத்தடுத்து எழுதும்போது, இடையில் ‘அல்லது’ என்று சேர்க்கவேண்டியதில்லை. காரணம், அந்த ஓகாரம் / ‘ஆவது’ என்பதிலேயே ‘அல்லது’ என்பதும் இருக்கிறது.

  அதாவது, ‘மானோ மீனோ’ என்று சொன்னாலே, மானோ அல்லது மீனோ என்றுதான் அர்த்தம். ஒருவேளை அந்த ஓகாரம் இல்லாவிட்டால் ‘மான் அல்லது மீன்’ என்று எழுதலாம்.

  அதேபோல், ‘இன்றைக்காவது அல்லது நாளைக்காவது’ என்று எழுதவேண்டியதில்லை. ‘இன்றைக்கு அல்லது நாளைக்கு’ என்று எழுதலாம், ‘இன்றைக்காவது நாளைக்காவது’ என்று எழுதலாம், ‘இன்றைக்கோ நாளைக்கோ’ என்று எழுதலாம்.

  எதற்கு அநாவசியமாக அல்லதைச் சேர்க்கவேண்டும்? நல்லதைச் சேர்த்தால் போதுமே!

  ***

  என். சொக்கன் …

  03 10 2013

  306/365

   
  • Uma Chelvan 7:27 am on October 4, 2013 Permalink | Reply

   எதற்கு அநாவசியமாக அல்லதைச் சேர்க்கவேண்டும்? நல்லதைச் சேர்த்தால் போதுமே!

   மிக மிக அழகாக சொல்லி இருக்கீங்க Mr. சொக்கன்.

   எத்தனை ஜென்மம் எனக்கு அளித்தாலும்
   இசை ஞானமும் நல்ஒழுக்கமும் வேண்டும் -அத்தனயும் நீ
   எனக்கு அளித்தாலும் என் அருகினில் இருந்து ஆண்டிட வேண்டும் !!!!

   வாணி வாகதீஸ்வரி, வரமருள்வாய் !!!!

   நாளைக்கு முதல் நாள் நவராத்திரி…..கலைமகளின் கருணையும் கண்ணனின் வருகையும் என்றும் நல்லதே கொண்டுவரும் !!!

   பாடியவர் – கே ஜே. யேசுதாஸ்

   ராகம்- வாகதீஸ்வரி

  • Uma Chelvan 8:05 am on October 4, 2013 Permalink | Reply

   சொல்ல மறந்த கதை படத்தில் ராஜா ஒரு பாடலில் ( title song , எல்லா பாடலும் அவரே எழுதி இருக்கார்) படிச்ச படிப்பினால் நல்ல பண்பு வளரனும் என்று சொல்லி இருப்பார்.

   இதே படத்லில் வேறு ஒரு பாடலும் நன்றாக இருக்கும்…………குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காத்து அடிச்சதும்,கண்ண திறக்குது , கண்ணன் கண்ணு பட தேனை சுரக்குது ……….எவ்வளவு வித்தியாசம் முதல் பாடலுக்கும் இந்த பாடலுக்கும் ??

  • Saba-Thambi 3:13 pm on October 4, 2013 Permalink | Reply

   நவீன திருவள்ளுவர் வாழ்க!

 • mokrish 9:22 pm on September 22, 2013 Permalink | Reply  

  கூட்டம் கூட்டமாக 

  சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றித் திரிந்த காட்டு யானைகளை  பிடித்து முதுமலை வனச் சரணாலயம், ஆனைமலை வனச் சரணாலயத்தில் விட தமிழக அரசு ‘ஆபரேஷன் மலை’ என்ற நடவடிக்கை எடுத்தது. இது பற்றிய செய்திகளை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் படித்த எனக்கு ஒரு விஷயம் கண்ணில் பட்டது. ஆங்கில ஊடகங்கள் ‘herd of elephants’ என்று எழுத தமிழில்  யானைக் கூட்டம் என்றே இருந்தது.

  ஆங்கிலத்தில் இந்த Collective Nouns மிகவும் சுவாரசியமானது. ஒவ்வொரு பறவை, விலங்கு குழுவுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர். பல சொற்கள் கவிதை போல் இருக்கும். Colony of Ants, Troop of Apes, Swarm of bees, Flock of Birds, Pack of Hounds, Pride of Lions , School of fish என்று கேட்கும் போதே ஒரு graphic பிம்பம் தோன்றும். காக்கை கூட்டத்திற்கு என்ன பெயர் தெரியுமா ? A murder of Crows! யாரோ ஒரு ரசிகன் யோசித்து வைத்த பெயர்கள்.

  http://users.tinyonline.co.uk/gswithenbank/collnoun.htm#Birds

  தமிழில் எல்லாவற்றையும் கூட்டம் என்றே சொல்கிறார்களா? இலக்கியத்தில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் திரைப்பாடல்களில்  அப்படித்தான் என்று தோன்றுகிறது.

  எங்க வீட்டு பிள்ளை படத்தில் வாலி எழுதிய நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பிரபலமான பாடலில் காக்கைகள் கூட்டம் என்று எழுதி பின்னர் மாற்றப்பட்ட வரி ஒன்று வரும்

  அரச கட்டளை படத்தில் முத்துக்கூத்தன் எழுதிய ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் என்ற பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)  முயல் கூட்டம் என்கிறார்

  http://www.inbaminge.com/t/a/Arasa%20Kattalai/Aadi%20Vaa%20Aadi%20Vaa.eng.html

  மயிலாட வான்கோழி தடை செய்வதோ
  மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
  முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
  அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

  வைரமுத்து சிவப்பு மல்லி படத்தில் எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் டி எம் எஸ் டி எல் மகராஜன்) சிங்க கூட்டம் என்கிறார்

  http://www.inbaminge.com/t/s/Sivappu%20Malli/Erimalai%20Eppadi.eng.html

  சிங்க கூட்டம் நிமிர்ந்தால்
  துன்ப சிறையின் கதவு தெறிக்கும்
  நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
  இனி அழுதால் வராது நீதி

  கண்ணதாசன் அக்கரை பச்சை படத்தில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் SPB, எல் ஆர் ஈஸ்வரி) கிளிக் கூட்டம் என்கிறார்

  http://www.inbaminge.com/t/a/Akkarai%20Pachai/Oorgolam%20Poginra.eng.html

  ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம்

  ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று

  நா முத்துக்குமார் உனக்கும் எனக்கும் படத்தில் பூப்பறிக்க நீயும் போகாதே என்ற பாடலில் (இசை தேவி ஸ்ரீபிரசாத் பாடியவர் சங்கர் மகாதேவன்)

  http://www.youtube.com/watch?v=xAWGS5tB9Lw

  காட்டுக்குள்ள நீயும் போகாதே

  கொட்டுகிற தேனீ கூட்டம்

  தேனெடுக்க உதட்ட சுத்துமடி

  இப்படி இன்னும் பல பாடல்கள். பறவைக்  கூட்டம், நரிகள் கூட்டம்  குயில் கூட்டம் குட்டி போட்ட ஆட்டுக் கூட்டம், மான் கூட்டம், கடல்மீன் கூட்டம், வண்டுகள் கூட்டம், பட்டாம்பூச்சி கூட்டம் – என்று எல்லா கவிஞர்களும் முன் தீர்மானிக்கப்பட்ட மெட்டின் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் தொலைத்து கூட்டம் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்கள். இது சரியா?

  ஆடுகளும் மாடுகளும் மந்தை. கொஞ்சம் தேடினால் flock என்ற வார்த்தைக்கு இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம் என்ற அர்த்தம் கண்ணில் படுகிறது.  Swarm என்றால் வண்டின் மொய்திரள் என்ற அழகான விளக்கம்  கண்ணில் படுகிறது.

  தமிழில் Collective nouns உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்

  மோகனகிருஷ்ணன்

  295/365

   
  • rajinirams 11:41 pm on September 22, 2013 Permalink | Reply

   யானைக்கூட்டத்தை பார்த்து ஒரு நல்ல பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.இளம்பெண்கள் கூட்டமாக இருப்பதை பார்த்து காதல் மலர் கூட்டம் ஒன்று என்றதெய்வமகன் வரிகள் நினைவு வருகிறது. போருக்கு செல்லும் கூட்டத்தை மட்டும் படை என்றே கூறுவர்..வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்”படை” வெல்லும். நன்றி.

  • rajinirams 11:45 pm on September 22, 2013 Permalink | Reply

   இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வித்துவான் வெ.லட்சுமணன் வரிகள் கட்சி தொண்டர் படையையும் குறித்து எழுதினார்.

  • Niranjan 11:47 pm on September 22, 2013 Permalink | Reply

   தொல்காப்பியத்தில் இருக்கிறது. நான் கூட புதிய தலைமுறை நிகழ்ச்சியில் செய்திருக்கிறேன்.

   • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

    லிங்க் ப்ளிஸ் 🙂

    amas32

  • amas32 9:52 am on September 23, 2013 Permalink | Reply

   சிங்கம் சிங்கிளா தான் வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும் என்று தலைவர் அன்றே சொல்லிவிட்டார்! 🙂 அதனால் விலங்குகள்/பறவைகள் கூட்டம் என்பது தான் நானும் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் ஆட்டு மந்தை, மாட்டு மந்தை இன்றும் வழக்கில் உண்டு.

   amas32

   • rajinirams 5:56 pm on September 23, 2013 Permalink | Reply

    ஹா ஹா,சூப்பர்:-))

   • Mohanakrishnan 6:57 pm on September 23, 2013 Permalink | Reply

    சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது factually wrong. சுஜாதா என்ற யானைக்கும் அடி சறுக்கும் !

    • amas32 9:11 pm on September 24, 2013 Permalink

     அதெல்லாம் poetic liberty மாதிரி சூப்பர் ஸ்டாருக்கு டயலாக் எழுதும் போது இதெல்லாம் கண்டுக்கக் கூடாது ;-))

     amas32

    • mokrish 10:17 pm on September 24, 2013 Permalink

     அது சரி! மத்த படமெல்லாம் உலக சினிமா மாதிரி வேணும். இங்க வேற ரூலா?

  • Uma Chelvan 3:30 am on September 25, 2013 Permalink | Reply

   சிங்கிளா வந்த சிங்கத்தின் நிலையை பாரீர்!!!

   Sorry about the words at the bottom, since I copied this image from another site!!!):

 • என். சொக்கன் 9:37 pm on September 21, 2013 Permalink | Reply  

  மன்னவன் ஒருவன் 

  • படம்: மன்மதன் அம்பு
  • பாடல்: நீல வானம்
  • எழுதியவர்: கமல் ஹாசன்
  • இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
  • பாடியவர்கள்: கமல் ஹாசன், பிரியா ஹிமேஷ்
  • Link: http://www.youtube.com/watch?v=qfTB6KhPzHU

  என்னைப்போலே பெண் குழந்தை,

  உன்னைப் போலே ஒரு ஆண் குழந்தை,

  நாம் வாழ்ந்த வாழ்வுக்குச் சான்றாவது

  இன்னொரு உயிர்தானடி!

  ஆங்கிலத்தில் ஒரே ஒரு பொருள், அல்லது மனிதர் அல்லது விலங்கைக் குறிப்பிடுவதற்கு ‘a’ மற்றும் ‘an’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். அதூவே பன்மையாக வந்தால் ‘few’, ‘some’, ‘many’ என்பதுபோன்ற சொற்கள் உள்ளன.

  இவற்றுக்கு இணையாகத் தமிழில் உள்ள சொற்கள்: ‘ஒரு’, ‘ஓர்’, ‘சில’, ‘பல’…

  உதாரணமாக, “a ball” என்பது ”ஒரு பந்து” என மாறும், “few balls” என்பது “சில பந்துகள்” என்று ஆகும், “an ant” என்பது “ஓர் எறும்பு” என எழுதப்படும்.

  இந்தச் சொற்களைப் பயன்படுத்தும்போது ஒரே ஒரு பிரச்னை, ‘ஒரு’ அல்லது ‘சில’ என்றால் அது உயர்திணையா, அஃறிணையா, ஆணா, பெண்ணா என்று வித்தியாசம் காணமுடியாது.

  ஆங்கிலத்தில் இதற்குத் தீர்வு கிடையாது. தமிழில் உண்டு.

  ஒரு பந்து, ஓர் எறும்பு என்ற சொற்களைத் தமிழில் வேறுவிதமாகவும் சொல்லமுடியும்: பந்து ஒன்று, எறும்பு ஒன்று.

  அப்படியானால், ‘ஒரு ராஜா’, ‘ஒரு ராணி’ என்பதை எப்படி எழுதுவது?

  ‘ராஜா ஒருவன்’, ‘ராணி ஒருத்தி’.

  ‘சில ராஜாக்கள்’ என்பதை?

  ‘ராஜாக்கள் சிலர்’!

  ஆக, பெயர்ச்சொல்லுக்கு முன்னால் ஒரு, ஓர், சில, பல போன்றவற்றைப் பயன்படுத்தாமல், அதைத் தூக்கிப் பெயர்ச் சொல்லுக்குப் பின்னால் போட்டால், ஒருவன், ஒருத்தி, ஒன்று, சிலர், சிலது, பலர், பலது என்று அது பலவிதமாக மாறி, சம்பந்தப்பட்ட பெயர்ச் சொல் ஆணா அல்லது பெண்ணா, உயர்திணையா அல்லது அஃறிணையா, ஒருமையா அல்லது பன்மையா என்றெல்லாம் அழகாகக் காண்பித்துவிடுகிறது.

  சொல்லப்போனால், உயர்திணைக்கு ‘ஒரு’, ‘ஓர்’, ‘சில’, ‘பல’ போன்றவற்றைப் பயன்படுத்தவே கூடாது என்கிறார்கள். ‘ஒரு மன்னன்’ என்பதைவிட ‘மன்னன் ஒருவன்’ என்பதுதான் சரியாம். இதற்கு இலக்கண நெறிகள் எதையும் கண்டதில்லை. ஆனால் இதுதான் மரபு என்று வாசித்துள்ளேன்.

  அந்த மரபுப்படி, நீல வானத்தின்கீழ் இந்தக் காதலனும் காதலியும் விரும்புவது, ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை அல்ல, ஆண் குழந்தை ஒருவன், பெண் குழந்தை ஒருத்தி!

  ***

  என். சொக்கன் …

  21 09 2013

  294/365

   
  • amas32 9:19 pm on September 24, 2013 Permalink | Reply

   “சிங்கம் ஒன்று புறப்பட்டதே”, இந்த மரபின் கீழ் வரும். “மன்னவன் வந்தானடி தோழி” என்ற வரியும் இந்த மரபின் கீழ் வருமா?

   //நாம் வாழ்ந்த வாழ்வுக்குச் சான்றாவது

   இன்னொரு உயிர்தானடி!//

   என்ன உண்மையான உணர்வு!

   amas32

  • rajinirams 10:41 am on September 26, 2013 Permalink | Reply

   அறிந்திராத அருமையான தகவல். பாடல்களை பார்த்தால் “பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்” என்றும் ஒரு பெண்ணை பார்த்து ,ஒரு ராஜா ராணியிடம் என்றெல்லாம் மெட்டுக்கு ஏற்றவாறே வந்திருக்கின்றன. நன்றி.

  • rajinirams 12:09 pm on September 26, 2013 Permalink | Reply

   ஒரு பொண்ணு ஒண்ணை நான் பார்த்தேன் என்ற குஷியான வரிகள் தவறு தானே சார்.

 • என். சொக்கன் 11:58 pm on September 3, 2013 Permalink | Reply  

  மரபும் புதுசும் 

  • படம்: இதயம்
  • பாடல்: பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
  • Link: http://www.youtube.com/watch?v=zOYOXCneRME

  யாப்போடு சேராதோ பாட்டு, தமிழ்ப் பாட்டு,

  தோப்போடு சேராதோ காற்று, பனிக் காற்று,

  வினாத்தாள்போல் இங்கே கனாக் காணும் காளை,

  விடைபோலே அங்கே நடை போடும் பாவை,

  ஒன்றாய்ச் சேரும், ஒன்றாய்ப் பாடும்

  பொன்னாள், இன்று எந்நாளோ!

  தமிழில் ’யாப்பு’ என்றால், செய்யுள் என்று பொருள். எழுத்து, சொல் போன்றவற்றுக்கு இலக்கணம் இருப்பதுபோலவே, யாப்புக்கும், அதாவது ஒரு செய்யுளை இப்படிதான் எழுதவேண்டும் என்பதற்கும் தமிழில் இலக்கணம் உண்டு. அதற்குப் பொருந்தி எழுதப்படும் கவிதைகளை ‘மரபுக் கவிதை’ என்கிறோம்.

  உதாரணமாக, வெண்பா என்றால் முதல் சொல், இரண்டாம் சொல் இடையே இப்படிப்பட்ட பிணைப்பு வேண்டும், முதல், மூன்றாவது சொற்கள் மோனை வேண்டும், முதல், ஐந்தாவது சொற்கள் எதுகை வேண்டும்… இப்படி ஒவ்வொரு வகைப் பாடலுக்கும் வெவ்வேறு நெறிமுறைகள், அவற்றைப் பின்பற்றிச் சொற்களைக் கோத்தால் இனிமையாக இருக்கும். இவற்றை ஒருபோதும் மீறக்கூடாது.

  இதுபோல் எந்த இலக்கண நெறிக்கும் கட்டுப்படாமல் எழுதப்படுபவற்றைப் ’புதுக் கவிதைகள்’ என்கிறோம். அவற்றில் கருத்துக்குதான் மரியாதை, அவற்றை ஒரு குறிப்பிட்ட அமைப்பில் ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமில்லை.

  சினிமாப் பாட்டுகள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று. அதாவது, இலக்கணம் உண்டு, ஆனால் அது மரபு வழி வந்த இலக்கணம் அல்ல, புதிதாக ஒருவர் (இசையமைப்பாளர்) தந்த இலக்கணம். அதற்குமேலே, பாடலைக் கேட்கும் இனிமை கருதி, கவிஞரும் சில இலக்கணங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

  உதாரணமாக, இந்தப் பாடலில் முதல், இரண்டாவது வரிகளில் யாப்பு, தோப்பு என எதுகை உள்ளது, ஆனால் 3, 4வது வரிகளில் வினா, விடை என்று மோனை வந்துள்ளது, மூன்றாவது வரியில் வினா, கனா என்று எதுகை / இயைபு உள்ளது, நான்காவது வரியில் விடை / நடை என்று அதேபோன்ற எதுகை / இயைபு உள்ளது, இதே 3, 4 வரிகளிடையே சுத்தமான இயைபு இல்லை, ஆனால் காளை, பாவை என ஒரேமாதிரி ஒலி கொண்ட சொற்கள் உள்ளன. ஐந்தாவது வரியில், ஒன்றாய் என்ற சொல் இரண்டு முறை வந்துள்ளது, சேரும், பாடும் என இயைபு வருகிறது. ஆறாவது வரியில் பொன்னாள், எந்நாள் என்கிற எதுகை வந்துள்ளது.

  இதையெல்லாம் வாலி எழுதியதை வைத்து நாமாகச் சொல்வதுதான். இப்படிதான் எதுகை, மோனை அமைக்கவேண்டும் என்று அவருக்கு யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அவர் மாற்றி எழுதியிருந்தாலும் யாருக்கும் தெரிந்திருக்காது. மெட்டு செல்லுகிற திசையைக் கவனித்து, எங்கே எதுகை, எங்கே மோனை, எங்கே இயைபு வந்தால் இனிமையாக இருக்கும் என்று அவரே புரிந்துகொண்டு அமைத்திருக்கிறார்.

  அதுமட்டுமில்லை, யாப்பு தனி, பாட்டு தனி என்றில்லாமல் இரண்டும் சேர்ந்தால்தான் இனிமை, தோப்பில் பனிக் காற்று சேர்ந்தால்தான் இனிமை, வினாவுக்கு விடை கிடைத்தால்தான் இனிமை என்கிற கருத்துகளை உள்ளடக்கி, ‘ஒன்றாய்ச் சேரும், ஒன்றாய்ப் பாடும் பொன்னாள் என்றைக்கு?’ என்று அழகான முத்தாய்ப்பும் வைக்கிறார்.

  இதில் மரபும் உண்டு, புதுசும் உண்டு!

  ***

  என். சொக்கன் …

  03 09 2013

  276/365

   
  • uma chelvan 12:54 am on September 4, 2013 Permalink | Reply

   அருமையான விளக்கம்! என் போன்றவர்களுக்கு “வெண்பா” Mphil போலவும் மரபு கவிதை PhD போலவும் தான் :)). சினிமா பாடல்கள் கேட்கும் போது, இசையும் ராகமும், இனிமையும் இருந்தால் போதும். அதைதான் பெரும் பாலானவர்கள் பின் பற்றுவார்கள் என்று நம்புகிறேன்! .

   • என். சொக்கன் 11:55 am on September 4, 2013 Permalink | Reply

    //இசையும் ராகமும் இனிமையும் இருந்தால் போதும்//

    அப்படியல்ல. இசை, இயல் இரண்டும் முக்கியமே. (அப்புறம் நாடகமும்)

    வரிகள் இல்லாத instrumental music / BGMக்கு நம் ஊரில் அதிக மரியாதை, வரவேற்பு இல்லை என்பதைக் கவனியுங்கள்.

    • uma chelvan 9:52 pm on September 4, 2013 Permalink

     நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை.. என்னை போல் Limited Knowledge இருபவர்களுக்கு மட்டும்!!:)) இயல், இசை நாடகம் தானே, நீங்களே இசையை தானே முன்னால் வச்ருகீங்க?

  • amas32 7:55 am on September 4, 2013 Permalink | Reply

   //வினாத்தாள்போல் இங்கே கனாக் காணும் காளை,

   விடைபோலே அங்கே நடை போடும் பாவை,//

   இந்த வரிகள் கூட ரொம்ப அழகாய் உள்ளன 🙂 இவர்கள் ஒன்றாகச் சேரும் நன்னாள் எந்நாளோ? என்று கேட்கிறார். வினாத் தாள், விடை நல்ல உவமை 🙂

   amas32

  • rajinirams 4:52 pm on September 4, 2013 Permalink | Reply

   எதுகை மோனையுடன் வாலி வடித்த வரிகளுக்கு தங்கள் விளக்கம் மிக அருமை.முன்பே இந்த பாடலை ரசித்திருந்தாலும் உங்கள் விளக்கத்திற்கு பிறகு எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என வியந்து ரசித்தேன்.நன்றி.

 • என். சொக்கன் 11:37 pm on August 31, 2013 Permalink | Reply  

  மனக் கணக்கு 

  • படம்: கோபுர வாசலிலே
  • பாடல்: தாலாட்டும் பூங்காற்று
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=326Usof7ZOQ

  நள்ளிரவில் நான் கண் விழிக்க,

  உன் நினைவில் என் மெய் சிலிர்க்க,

  பஞ்சணையில் நீ முள் விரித்தாய்,

  பெண் மனதை நீ ஏன் பறித்தாய்?

  உங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இதை வாக்கியமாக்கச் சொன்னால் எப்படிச் சொல்வீர்கள்?

  ‘எனக்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்’.

  இதில் மற்ற வார்த்தைகள் ஒருபுறமாக இருக்கட்டும், அந்த ‘மரத்தை’ என்ற வார்த்தையைமட்டும் எடுத்துக்கொள்வோம். அது எப்படி வந்தது?

  மரம் + ஐ என்கிற வேற்றுமை உருபு, மரமை என்றுதானே மாறவேண்டும்? ஏன் ‘மரத்தை’ என்று ஆனது?

  தமிழ் இலக்கணத்தில் இதற்குச் ‘சாரியை’ என்று பெயர். ஒரு சொல்லின் நிறைவு எழுத்தாக ‘ம்’ இருந்து, அதோடு ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்ற வேற்றுமை உருபுகள் சேர்கிறபோது, இந்த இரண்டுக்கும் இடையே ’அத்து’ என்கிற சாரியை கூடும்.

  ஆக, மரம் + ஐ = மரம் + அத்து + ஐ = மரத்தை

  இதேபோல், மரம் + இல் = மரம் + அத்து + இல் = மரத்தில், மரம் + கு = மரம் + அத்து + கு = மரத்துக்கு… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

  இந்தப் பாட்டில், மரம் இல்லை, மனம்தான் இருக்கிறது. அதுவும் ‘ம்’ என்ற எழுத்தில் முடிவதால், இதே விதிமுறை பொருந்தும். அதாவது, மனம் + அத்து + ஐ = மனத்தை. ‘பெண் மனத்தை நீ ஏன் பறித்தாய்’ என்றுதான் எழுதவேண்டும்.

  அப்படியானால் பாரதியார் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று எழுதியதும் தவறா? அந்த வரி ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று இருக்கவேண்டுமா?

  உண்மைதான். ஆனால், கவிதைக்கு வேறு இலக்கணங்கள் உண்டு என்பதால், இதுபோன்ற சில மீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன. எல்லாக் கவிஞர்களும் தெரிந்தே மீறியிருக்கிறார்கள்.

  கொஞ்சம் பொறுங்கள், மனம் + ஐ என்று எழுதினால்தானே ‘மனத்தை’ என்று வரும்? அதையே நான் மனது + ஐ என்று எழுதினால்? அப்போது ‘மனதை’ என்பது சரிதானே?

  வடமொழியில் ‘மனஸ்’ அல்லது ‘மன்’ என்ற வடமொழிச் சொல் உள்ளது. ஆனால் தமிழில் அது பயன்படுத்தப்படுவதில்லை, ‘மனம்’ என்ற வேறு சொல் உள்ளது. இதைப் பலர் ‘மனது’ என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அது சரியான பயன்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

  உண்மையில், மனம் + ஐ = மனம் + அத்து + ஐ = மனத்தை என்பதுதான் இலக்கணம். இது தெரியாத யாரோ, ‘மனத்தை’ என்ற வார்த்தையை மனது + ஐ என்று தவறாகப் பிரித்து ‘மனது’ என்று ஒரு வார்த்தையை உருவாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. பின்னர் அதை இன்னும் கொச்சையாக்கி ‘மனசு’ என்று வேறு மாற்றிவிட்டார்கள்.

  தற்போது, ‘மனம்’க்கு இணையாக, ‘மனது’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அதைச் சரி என்று ஏற்றுக்கொண்டால் ‘மனதை’, ‘மனதில்’ என்று எழுதுவதும் சரி. ’மனம்’ என்பதுதான் வேர்ச்சொல் என்று வைத்துக்கொண்டால், ‘மனத்தை’, ‘மனத்தில்’ என்பதுதான் மிகச் சரி!

  ***

  என். சொக்கன் …

  31 08 2013

  273/365

   
  • Venugopal 11:49 pm on August 31, 2013 Permalink | Reply

   Wow! thank you!Totally something new! But ‘மனத்தை’, ‘மனத்தில்’ sounds different and we used to மனதை and மனதில்.

  • rajinirams 12:32 am on September 1, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு.”தேடினேன் வந்தது”-ஊட்டி வரை உறவு கண்ணதாசன் பாடலில் என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி என்று வரும்.சந்தத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்கிறார்கள் போலும். நன்றி.

  • Niranjan 12:31 pm on September 1, 2013 Permalink | Reply

   நல்ல பதிவு சார். ஆனால், மனம் என்பது தூய தமிழ்ச்சொல். மனஸ் என்ற வடமொழியிலிருந்து வந்ததல்ல.

  • amas32 6:02 pm on September 2, 2013 Permalink | Reply

   நீங்கள் வேறு ஒரு இடத்தில் இதைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது முதற்கொண்டு நான் மனத்தில், மனத்தை என்றே முடிந்த வரை தவறு செய்யாமல் எழுதி வருகிறேன். நன்றி 🙂
   amas32

 • என். சொக்கன் 11:43 pm on August 25, 2013 Permalink | Reply  

  நெஞ்சை அள்ளும் முன்னுரை 

  • படம்: மகாநதி
  • பாடல்: ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்
  • எழுதியவர்: வாலி
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன், ‘மகாநதி’ ஷோபனா
  • Link: http://www.youtube.com/watch?v=itZ1ESboqOk

  அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கிவைத்தனர் ஆலயம்,

  அம்மாடி என்ன சொல்லுவேன், கோயில் கோபுரம் ஆயிரம்,

  தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

  வாலியின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது. சொந்த ஊரைப்பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ, மனிதர் ரவுண்டு கட்டி விளையாடியிருப்பார். ஒவ்வொரு சொல்லும் அத்துணை அருமையாக வந்து உட்கார்ந்திருக்கும், ஒன்றை எடுத்துவிட்டு இன்னொன்றை வைப்பது சாத்தியமே இல்லை.

  அச்சுப்பிச்சு தங்கிலீஷ் வரிகளுக்காக வாலிமீது குற்றம் சாட்டுபவர்கள் அவருடைய இதுபோன்ற பாடல்களை ஒருமுறையாவது நிதானமாகக் கேட்கவேண்டும். இப்படியும் எழுதக்கூடியவர்தான் அவர். பிறகு அவர் கொட்டிய குப்பைகளுக்குக் கேட்டவர்கள் பொறுப்பா, எழுதியவர் பொறுப்பா?

  அது நிற்க. நாம் குறை சொல்லாமல் நல்லதைத் தேடி ரசிப்போம், இந்தப் பாடலைப்போல.

  ஸ்ரீரங்கத்தில் தொடங்கினாலும், அங்கே நின்றுவிடாமல், பொதுவாகவே சோழ மண்ணின் வர்ணனையாக அமைந்த பாட்டு இது. அன்றைய ஆலயங்களின் கோபுரங்களை வர்ணித்த கையோடு, அவற்றில் நுழையும்போது கேட்கும் தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் போன்ற தெய்வப் பூந்தமிழ்ப் பாடல்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

  கொஞ்சம் பொறுங்கள், அவர் பாடல்கள் என்று சொல்லவில்லை. ‘பாயிரம்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்?

  இப்போது எல்லாருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால், ‘முன்னுரை’ அல்லது ‘அறிமுக உரை’ என்று சொல்லலாம். அன்றைய கவிஞர்கள் ஒரு நூல் எழுதினால், அதற்குள் என்ன இருக்கிறது என்று விளக்கும்விதமாகப் ‘பாயிரம்’ என்கிற முன்னுரையைப் பாடல் வடிவிலேயே எழுதிச் சேர்ப்பார்கள். இந்தப் பாயிரத்தை நூலின் ஆசிரியரே எழுதலாம், அல்லது, அவருடைய நண்பரோ, சிஷ்யரோ, குருநாதரோகூட எழுதலாம். வாசகர்களுக்கு நூலைச் சரியாக அறிமுகப்படுத்தவேண்டும். அதுதான் நோக்கம். ஆர்வமுள்ளோர் இந்த இலக்கணத்தை முழுமையாகப் படிக்க இங்கே செல்லுங்கள்: http://365paa.wordpress.com/2012/05/07/306/

  ஆனால் ஒன்று, ஒருவர் வெறுமனே பாயிரத்தைப் படித்தால் போதாது. நூலையும் படிக்கவேண்டும்.

  நிலைமை அப்படியிருக்க, இங்கே வாலி ‘பாயிரம்’ என்ற சொல்லை எடுத்துப் பயன்படுத்தவேண்டிய அவசியம் என்ன? அது ‘ஆயிரம்’க்கு எதுகை, இயைபாக இருக்கிறது என்பதால்மட்டுமா?

  இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.

  ***

  என். சொக்கன் …

  25 08 2013

  267/365

   
  • uchelvan 1:35 am on August 26, 2013 Permalink | Reply

   நீர் வண்ணம் எங்கும் மேவிட – நஞ்சை புஞ்சைகள் பாரடி
   ஊர் வண்ணம் என்ன கூறுவேன் – தெய்வ லோகமே தானடி
   வேறெங்கு சென்ற போதிலும் – இந்த இன்பங்கள் ஏதடி

  • rajinirams 9:03 pm on August 26, 2013 Permalink | Reply

   “பாயிரம்”என்றால் பா ஆயிரம் என்று நினைத்துகொண்டிருந்தேன்.தங்கள் விளக்கத்திற்கு நன்றி. கவிஞர் வாலியின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.

  • amas32 6:33 pm on September 2, 2013 Permalink | Reply

   //இருக்கலாம். ஆனால் எனக்கு இதை எப்படிப் பார்க்கத் தோன்றுகிறது என்றால், கடவுளைப்பற்றி எத்துணை பாடல்கள் பாடப்பட்டாலும் சரி, அவையெல்லாம் வெறும் பாயிரம்தான், அறிமுகம்தான். அவற்றைப் படித்தால் முழு அனுபவம் கிடைக்காது. கோயிலுக்குள் சென்று இறைவன் முன்னே கை கூப்பி நிற்கும்போது நாம் அடையப்போகும் அந்த உணர்வுதான் நிஜமான கவிதை.//

   நீங்கள் நான் ட்விட்டர் வந்த புதிதில் சில கோயில்கள் போய் அந்ததந்த கோவில்களின் சிறப்புக்களை ட் வீட்டுக்களாகப் போட்டு வந்தீர்கள். அப்போ நான் வேண்டுதல்/பக்தி பற்றிக் கேட்டேன், எனக்குக் கோவிலின் அழகையும் தல புராணத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வமே அதிகம் என்று பதில் சொல்லியிருந்தீர்கள்.

   மேலே நீங்கள் எழுதியுள்ள வரிகள் உங்கள் உள்ளத்தை எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது 🙂
   நல்ல பதிவு!

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel