Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • என். சொக்கன் 10:53 pm on November 16, 2013 Permalink | Reply  

  யாவும் நீ 

  • படம்: கரகாட்டக்காரன்
  • பாடல்: மாரியம்மா, மாரியம்மா
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா
  • Link: http://www.youtube.com/watch?v=tOUyOklDqkY

  மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா,

  காத்தும், கனலும் நீயம்மா,

  வானத்தப் போல் நின்னு பாரம்மா,

  வந்தேன் தேடி நானம்மா!

  நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்கிற ஐம்பூதங்களும் நீயாக இருக்கிறாய் என்று பாடுவது பக்தி இலக்கியத்தில் அடிக்கடி வெளிப்படும் அம்சங்களில் ஒன்று.

  உதாரணமாக, ‘நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று’ என்று சிவனைக் குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். ’நிலம், கால், தீ, நீர், விண் பூதம் ஐந்தாய்’ என்று பெருமாளை அழைப்பார் திருமங்கையாழ்வார். இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லமுடியும்.

  அதே மரபை மாரியம்மனுக்கும் எளிய சொற்களில் பொருத்தி சினிமாப் பாடலாகத் தருகிறார் கங்கை அமரன். ’மண் தொடங்கி விண்வரை அனைத்தும் நீயே’ என்று அந்தக் கிராமத்துக் காதலர்கள் அவளது கருணையைக் கோரி நிற்கின்றனர்.

  இன்னொரு கிராமத்துப் பாட்டில் வாலியும் இதே மரபைப் பின்பற்றி எழுதியிருப்பார், அங்கேயும் போற்றப்படுகிறவள் தேரில் உலா வரும் கருமாரி, மகமாயி, உமைதான்!

  நீர், வானம், நிலம், காற்று, நெருப்பான ஐம்பூதம்

  உனதாணைதனை ஏற்றுப் பணியாற்றுதே,

  பார்போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம்,

  இவை யாவும் எழிலே உன் பதம் போற்றுதே!

  ***
  என். சொக்கன் …

  16 11 2013

  349/365

   
  • Uma Chelvan 4:03 am on November 17, 2013 Permalink | Reply

   எங்கும் அவள், எதிலும் அவள் உமையவள் !!!

   மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே!
   குழலும் யாழ் இசையும் கொஞ்சும் மொழி எல்லாம் உன் குரல் வண்ணமே !

  • amas32 9:31 pm on November 17, 2013 Permalink | Reply

   ஐம்பூதங்களிலும் நீயே உறைகிறாய் என்ற கங்கை அமரனின் பாடல் வரிகள் போற்றிப் பாடப்படும் அம்மனைப் போல் எளிமை நிறைந்தவை.

   நாலே வரியில் வாலி சொல்லும் கருத்தும் அற்புதம். அமரன் சொன்னதை தான் சொல்கிறார் ஆனால் இன்னும் கொஞ்சம் high funda வாக உள்ளது.

   இரு பாடல்களும் அருமை!

   amas32

 • mokrish 9:21 pm on November 5, 2013 Permalink | Reply  

  மீன்கொடி தேரில் 

  நிலவின் நிறம் பதிவுக்காக வாலி 1000 புத்தகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது பாடல் வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ‘சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ?’ என்ற வரிகளில் இடையை மீன்கொடி என்கிறாரே என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இவர்தானே மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே’ என்றார்?

  நண்பர் @nchokkan னிடம் கேட்டேன். அவர் அது மீன் இல்லை மின்கொடி தான்., மின்கொடி மருங்குல் சுருங்கமேல் என்று ஆழ்வாரும் துதிக்கின்ற மின்கொடி என்று அபிராமி பட்டரும் சொன்ன மின்னல் கொடி தான் என்று விளக்கம் தந்தார். கே ஜே யேசுதாஸ் மின்கொடி என்றுதான் பாடுகிறார்.

  ஆனால் மன்மதனுக்கு மீன்கொடி தானே அப்படி ஒரு கோணம் இருக்குமோ பார்க்கலாம் என்று தேடினேன் மன்மதன் எப்படி வருகிறான்? வெண்நிலவைக் குடைபிடித்து வீசுதென்றல் தேர் ஏறி மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய வரும் மன்மதனுக்கு யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை எனும் படைகள் இல்லை என்று தண்டியலங்காரம்

  யானை இரதம் பரியாள் இவையில்லை

  தானும் அனங்கன் தனுக்கரும்பு –

  என்ற பாடலில்.சொல்கிறது. திரிகூட ராசப்பக் கவிராயர் கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள் என்ற வரியில் பெண்களே மன்மத சேனை என்கிறார்.

  மன்மதன் சேனை? என்னை போல் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய வேலாலே விழிகள் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=iPDQDMh1yAE

  வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

  சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

  வேல் போன்ற விழிகள் நூல் போன்ற இடை. ஆனால் இடையில் மன்மதன் சேனைகள் என்கிறார். தொடர்ந்து

  கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும்

  சிட்டு கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்

  என்று மின்னலை கண்களில் வைக்கிறார். மீன் போல் கண்கள். மின்னல் போல இடை.என்பதை தலைகீழாக மாற்றி கண்களில் மின்னல் இடையில் மீன்கொடியோடு வரும் மன்மதன் சேனை என்கிறார்

  சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ – இது அச்சுப்பிழைதான் ஆனால் அர்த்தமுள்ள அச்சுப்பிழையோ? கண்களில் இருப்பது பாண்டியனின் மீன்கொடி. இடையில் மன்மதனின் மீன்கொடி. சரிதானே?

  மோகனகிருஷ்ணன்

  338/365

   
  • rajinirams 11:10 pm on November 6, 2013 Permalink | Reply

   அருமை.தெய்வத்திருமணங்கள்-வானமும் பூமியும் ஆலிங்கனம்-கண்ணதாசன் பாடலில் “மன்னவன் தன்னையே மறக்கவொன்னாததால் பொன்னுடல் கொதித்தது-பூவெல்லாம் துடித்தது-“மின்னிடை”மெலிந்தது-மேகலை சுழன்றது என்ற வரிகள் வரும்.ஒரு பெண்ணை பார்த்து பாடலில் “கொடி மின்னல்”போல் ஒரு பார்வை என்ற வரிகளும் நினைவு வந்தது. நன்றி.

 • mokrish 7:54 pm on October 23, 2013 Permalink | Reply  

  இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

  அன்றொரு நாள் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான வெண்பா விளையாட்டு. நண்பர் @nchokkan கண்ணன் பற்றி வெண்பா எழுத நண்பர் @elavasam அதில் ஒரு கேள்வி கேட்க — இவர் பதில் சொல்ல என்று பரபரப்பான one day மாட்ச்  போல சுவாரசியமாக இருந்தது.

  எனக்கு வெண்பாவும் தெரியாது விருத்தமும் தெரியாது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயம் கண்ணனும் ராமனும். கண்ணன் பற்றிய பாட்டில் ஏன் ராமர் பற்றிய Reference என்று முதல் கேள்வி.. இருவரும் ஒன்றுதானே என்று ஒரு பதில். தப்பு செய்தவன் ஒருவன் மாட்டிக்கொண்டவன் வேறொருவன் என்று ஒரு மறுமொழி.  ஒரே பாட்டில் பல அவதாரங்கள் என்று ஒரு தனி track. அட அட

  அதே கேள்விகளுக்கு நாமும் பதில் தேடலாம் என்று ஒரு (விபரீத) ஆசை. ஆண்டாள் திருப்பாவையில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும்

  புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்

  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

  என்று ஒரே பாசுரத்தில் பாடியுள்ளதாகப் படித்தேன். மணாளன் எப்படி இருக்க வேண்டும் ஆண்டாள் கலங்குகிறாள். கண்ணனா ராமனா ? கண்ணுக்கு இனிய கண்ணனுக்கு ஒரு வரி மனத்துக்கு இனிய ராமனுக்கு ஒரு வரி என்று மாறி மாறி உருகுகிறாள்.  கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்தில் ஒரு matrimonial விளம்பரம் போல எழுதுகிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

  http://www.youtube.com/watch?v=lsY6sJPpAF0

  ராதைக்கேற்ற கண்ணனோ

  சீதைக்கேற்ற ராமனோ

  கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு

  கோதைக்கேற்ற காவலன் யாரோ

  அன்னை இல்லம் படத்தில் நடையா இது நடையா என்ற பாடலிலும் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) பொருத்தம் பார்க்கிறார்.

  தேரோட்டும் கண்ணனுக்கு ராதா

  சிங்கார ராமனுக்கு சீதா

  காரோட்டும் எனக்கொரு கீதா

  கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தோதா

  நம்மாழ்வார்  ராமன் கூனி மேல் மண் உருண்டை எறிந்த பழியை

  மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

  கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

  என்ற பாடலில் கண்ணன் மேல் போடுகிறார். .

  ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை என்பது ஆண்டாள் கட்சியா? நம்மாழ்வார் அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றே என்கிறாரா? இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

  கண்ணதாசன் அந்த Bride / Bridegroom தேவை என்பதையெல்லாம் தள்ளிவைத்து இருவேடம் போட்டாலும் திருமால் ஒன்றே என்று உயர்ந்தவர்கள் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் எம் பாலமுரளிகிருஷ்ணா)

  http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=2697&songid=13160

  ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

  ராதையின் வடிவம் சீதையும் தாயே

  நால் வேதம் அவனாக உருவானதோ

  நாலாகும் குணம் பெண்மை வடிவானதோ

  என்று சொல்கிறார்.

  தசாவதார வரிசை ஒரு evolution செய்தி சொல்லும் என்று படித்தேன் . முதலில் நீர் வாழ் உயிரினம் அடுத்து ஒரு amphibian அப்புறம் ஒரு நிலத்தில் வாழும் வராகம் அடுத்து கொஞ்சம் மிருகம் கொஞ்சம் மனிதன் என்று அது ஒரு அழகான வரிசை. இதில் ராமனுக்கு அடுத்து கண்ணன். இதில் இருக்கும் evolution செய்தி என்ன?

  மோகனகிருஷ்ணன்

  325/365

   
  • amas32 8:12 pm on October 23, 2013 Permalink | Reply

   மோகனக்ரிஷ்ணனனான உங்களுக்கு அது விளங்காதா? 😉 இராமன் ரூல்ஸ் ராமனுஜன். கிருஷ்ணன் சகலகலா வல்லவன். அடுத்த பரிணாம வளர்ச்சி அதுவாகத் தானே இருக்க வேண்டும். ஆறு அறிவுள்ள மனிதன் இன்னும் இன்னும் சாமர்த்தியத்தையும் செயல் திறனையும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையை இன்று நாம் கண் கூடாகப் பார்க்கவில்லையா? அதைத் தான் கிருஷ்ணனின் அவதாரம் நமக்குக் கட்டியுள்ளது. இன்றைய காலக் கட்டத்திற்குத் தேவையான நெளிவு சுளுவோடு வாழ கிருஷ்ணன் கற்றுத் தருகிறார் என்பது என் தாழ்மையானக் கருத்து.

   இராமனின் வாழ்க்கை ஒரு பாடம். கிருஷ்ணன் உபதேசம் செய்யவே அவதாரம் எடுத்தார். சிலது கேட்டுத் தான் கற்றறிய முடியும். அதை நமக்கு அருளியவர் கண்ணன்.

   அருமையானப் பாடல்கள் :-)) நன்றி!

   amas32

  • rajinirams 7:35 pm on October 24, 2013 Permalink | Reply

   ராமன்,கிருஷ்ணன் என்ற அவதாரங்களை வைத்து அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.
   “டபுள்ஸ்”படத்தில் நாயகனை-ராமனாக சித்தரித்து மனைவியும் கிருஷ்ணனாக காதலியும் நினைத்து பாடும் வைரமுத்துவின் பாடல் நன்றாக இருக்கும். “ராமா ராமா ராமா சீதைக்கேத்த ராமா உன் வில்லாய் நானும் வந்தேன் அம்பு பூட்டடா… கிருஷ்ணா கிருஷ்ணா உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா என்று வரும். தசாவதாரம் படத்தில் வாலியின் வரிகள் “ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,கண்ணனாக நீயே வந்து காதலையும் தந்தாய்”.இன்னொரு பாடல் வரிகள்: ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவமே ஸ்ரீ ராமன்,காதல் உணர்வுக்கு பேதமில்லை என்றவனே பரந்தாமன், ஸ்ரீ ராமனாக நாயகியோடு வாழ்வது ஓரின்பம்,ஸ்ரீ கிருஷ்ணனாக கோபியரோடு வாழ்வது பேரின்பம்-வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன். http://youtu.be/XkM4zfgSBDg

 • என். சொக்கன் 7:16 pm on October 16, 2013 Permalink | Reply  

  உயர் 

  • படம்: புதிய மன்னர்கள்
  • பாடல்: வானில் ஏணி போட்டு
  • எழுதியவர்: பழநிபாரதி
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: மனோ
  • Link: http://www.youtube.com/watch?v=HWmbi8YCEvs

  வானில் ஏணி போட்டு கொடி கட்டு!

  மின்னல் நமக்கு தங்கச் சங்கிலி,

  விண்மீன் எல்லாம் சின்ன மின்மினி,

  வானவில்தான் நம் வாலிப தேசக்கொடி!

  சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் அலுவலகம். ஆனாலும் எப்படியோ பெயர்ப்பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழுக்கும் சம உரிமை அளித்திருந்தார்கள்.

  என்னுடன் வந்திருந்த நண்பர் ‘மின் தூக்கி’ என்ற பெயரைப் பார்த்துவிட்டு நக்கலாகச் சிரித்தார். ‘அபத்தமான மொழிபெயர்ப்பு’ என்றார்.

  ‘ஏன்? Liftங்கறது ஆங்கிலப் பெயர், அதற்கு இணையான தமிழ்ச்சொல் தூக்குதல், அப்படின்னா மின்சாரத்தால இயங்கற ”தூக்கி”ங்கற பெயர் சரியாதானே இருக்கு?’ என்றேன்.

  ‘அதென்னவோ, எனக்குத் தூக்கிங்கற பெயர் இயல்பாத் தோணலை’ என்றார் அவர், ‘இதையே ஏணின்னு சொல்லிப்பாருங்க, அது ரொம்ப இயல்பா இருக்கு!’

  நண்பருக்கு விளக்க முயன்றேன். ‘நம்மைத் தூக்கிச் செல்லுதல்’ என்பது செயல், அதைச் செய்யும் கருவியைத் ‘தூக்கி’ என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

  சொல்லப்போனால், ‘ஏணி’ என்ற சொல்லே இப்படி வந்ததுதான்.

  தமிழில் ‘ஏண்’ என்றால் உயர்வு என்று அர்த்தம். ‘ஏணிலேன்’ என்று திருமங்கை ஆழ்வார் தன்னைச் சொல்லிக்கொள்வார். அதாவது, ஏண் இலேன், கடவுளுக்கு முன்னால் நான் எந்த உயர்வும் இல்லாத சாதாரண ஆள் என்று பொருள்.

  ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

  அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல் வரலாம்தானே?

  ***

  என். சொக்கன் …

  16 10 2013

  318/365

   
  • rajinirams 10:49 pm on October 16, 2013 Permalink | Reply

   “ஏண் என்றால் உயர்வு, நாம் உயர்வடைய உதவும் கருவிக்கு ‘ஏணி’ என்று பெயர்.

   அதே முறைப்படி, ‘தூக்கு’ என்ற சொல்லில் இருந்து ‘தூக்கி’ என்ற சொல்”

   எளிமையான விளக்கம்,அருமையான பதிவு.

  • amas32 9:41 pm on October 17, 2013 Permalink | Reply

   ஏணி, தோணி, அண்ணாவி, நார்த்தங்காய். இவை நான்கும் இருக்கும் இடத்திலேயே இருக்கும் ஆனால் நம்மை உயரவோ அல்லது நல்ல நிலைக்கோ அழைத்துச் செல்லும். ஏணி நம்மை ஏற்றிவிடும். ஆனால் அதற்கு மற்றப்படி மதிப்பில்லை. தோணி இக்கரையில் இருந்து அக்கரைக்கு இட்டுச் செல்லும் ஆனால் அதன் வாழ்வு அந்த நதியில் தான்.அண்ணாவி என்பது ஆசிரியர். அவர் நமக்கு ஆசானாக இருந்து நமக்குச் சொல்லிக் கொடுத்து நாம் மருத்துவராகவோ கலெக்டராகவோ ஆகிவிடுவோம். அவர் அதே ஆசிரியர் நிலைமை தான். நார்த்தங்காய் வேண்டாத சோற்றைக் கூட சாப்பிட உதவும் ஆனால் ஏப்பம் வரும் போதெல்லாம் நார்த்தங்காய் சுவை இருந்துக் கொண்டே இருக்கும். 🙂

   உங்கள் ஏண் என்னை இந்த விளக்கத்தை எழுத வைத்துவிட்டது 🙂

   நல்ல பதிவு, நன்றி 🙂

   amas32

   • Uma Chelvan 3:07 am on October 18, 2013 Permalink | Reply

    amas32…..அண்ணாவி. —ஆசிரியர் …….இதுவரை நான் கேள்வி பட்டதே இல்லை. தமிழ்தானா அல்லது வேறு எதாவது மொழியா?

  • Uma Chelvan 7:30 am on October 18, 2013 Permalink | Reply

   நார்த்தங்காய் பொதுவாக காய்சல் னின் பொது வரும் தலை சுத்தல் , வாய் கசப்பு, மயக்கம், வாந்தி வருவது போன்ற ( ஆனால் வராது, nausea ) உணர்வு போனறவகளை தடுக்கும் எனபதால் காரம் இல்லாமல் சாப்டும் (bland diet ) கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

 • என். சொக்கன் 10:30 pm on September 30, 2013 Permalink | Reply  

  காதல் கரம் 

  • படம்: இருவர்
  • பாடல்: ஹல்லோ மிஸ்டர் எதிர்க்கட்சி
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்: ஹரிணி
  • Link: http://www.youtube.com/watch?v=JqgwTxDeOa8

  காதலா, காதலா, உனை நான் விடமாட்டேன்,

  கைத்தலம் பற்றுவேன், பிரிய விடமாட்டேன்,

  கண்கள் மீதாணை, அழகு மீதாணை, விடவே விடமாட்டேன்!

  ’கைத்தலம்’ என்ற சொல்லை நம்மிடையே மிகவும் பிரபலப்படுத்தியவர்கள், இரண்டு கவிஞர்கள். ஒன்று ஆண்டாள், இன்னொன்று அருணகிரிநாதர்.

  ’வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்’ என்று கல்யாணக் கனவைச் சொல்லத் தொடங்கிய ஆண்டாள், ‘கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்’ என்கிறாள்.

  ஆண்டாள் இப்படிக் காதலோடு பாட, அருணகிரிநாதர் பக்தி நெறி நிற்கிறார். ‘கைத்தல நிறை கனி, அப்பமோடு அவல் பொரி’ என்று பட்டியல் போட்டுப் பிள்ளையாரை அழைத்து வழிபடுகிறார்.

  உண்மையில் ‘கைத்தலம்’ என்றால் என்ன?

  இந்த இரண்டு பாடல்களிலும், வைரமுத்துவின் இந்தத் திரைப்படப் பாடலிலும் கைத்தலம் என்றால் உள்ளங்கை என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. உள்ளங்கையைப் பற்றுவேன், உள்ளங்கையைப் பற்றக் கனாக்கண்டேன், உள்ளங்கையில் கனிகளை நிறைத்துவைத்தேன்’…

  ஆனால் ‘கைத்தலம்’ என்பது கையாகிய தலம், அதாவது முழுக் கையையும் குறிக்கும். உள்ளங்கையும் அதன் பகுதி என்பதால், அதையும் குறிக்கும்.

  கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்.

  ஓர் இளம் பெண். இவளுக்கு இடை இருக்கிறதா, அல்லது பொய்யான தோற்றமா என்று மயக்கமே ஏற்படும் அளவுக்குச் ‘சிக்’கென்ற பேரழகி.

  அவளுடைய காதலன், அவளை நெருங்குகிறான், கட்டித் தழுவுகிறான்.

  ஆனால் அவளோ, ஏதோ ஞாபகத்தில் மூழ்கியிருக்கிறாள். இப்போது அவளுக்குக் காதல் விளையாட்டுகளில் ஆர்வம் இல்லை. அவனுடைய கைகளை விலக்கிவிடுகிறாள்.

  உடனே, அந்தக் காதலன் அதிர்ந்துபோகிறான், அவள் அவனுடைய கையை ஒதுக்கிவிட்ட செயல், அவன் நெஞ்சில் கூர்வாள் பாய்ந்ததைப்போல் இருந்தது என்கிறார் கம்பர்.

  ஓர் ஆணின் நெஞ்சம் இப்படிப் புண்ணாவதை அவர் விரும்புவாரா? ‘கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்’ என்று சமாதானப்படுத்துகிறார். அதாவது, கையைதான் விலக்கினாள், கருத்திலிருந்து அவனை நீக்கவில்லை.

  புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!

  ***

  என். சொக்கன் …

  30 09 2013

  303/365

   
  • rajinirams 12:26 pm on October 1, 2013 Permalink | Reply

   கைத்தலம் என்றவுடனே நினைவுக்கு வருவது கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க என்ற கவியரசரின் பூ முடித்தாள் இந்த பூங்குழலி என்ற நெஞ்சிருக்கும் வரை படப்பாடல் தான்.கைத்தலம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கிய நல்ல பதிவு.நன்றி.

  • amas32 3:55 pm on October 1, 2013 Permalink | Reply

   கைத்தலம் என்பது அழகிய ஒரு சொல். வெறும் கைபிடித்துச் செல்லுதலைக் குறிக்காது தன்னையே ஒப்படைப்பதை/ஊன்றுகோலாகப் பற்றுவதைக் குறிப்பது போல தொனிக்கும். ஆண்டாள் பாசுரத்தின் பாதிப்போ என்னவோ? இந்தக் காதல் பாட்டில் கூட அப்படித் தான் வருகிறது. ஆனால் கைத்தல நிறை கனி என்று விநாயகரை நோக்கி அவ்வையார் சொல்லும்போது கை நிறைய என்று தான் தோன்றுகிறது.

   amas32

   • lotusmoonbell 4:17 pm on October 1, 2013 Permalink | Reply

    ‘கைத்தலநிறைகனி’ அருணகிரிநாதரின் திருப்புகழில் வருவது. அவ்வையின் பாட்டல்ல.

    • amas32 9:31 pm on October 1, 2013 Permalink

     ஆமாம் தவறு தான், அனைவரும் மன்னிக்க.

     amas32

    • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink

     நான் செஞ்ச தப்புக்கு நீங்க ஏனுங்க மன்னிப்புக் கேட்கறீங்க? 🙂

  • Uma Chelvan 5:52 pm on October 1, 2013 Permalink | Reply

   புரியலையா? அவ ஏதோ வேலை விஷயத்தை யோசிச்சுகிட்டிருக்காய்யா, டிஸ்டர்ப் பண்ணாதே, கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வா, அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம்!…..::::))))டிவி பார்த்து டைம் ஏன் waste பண்ணனும்??? சமையலறைக்கு போய் எதாவது சமைக்கலாம் இல்ல?. வீட்லில் கூடமாட ஒத்தாசை பண்ணனும்னு எண்ணமே வராதே!!!!!!:::::))))

   • என். சொக்கன் 8:50 pm on October 2, 2013 Permalink | Reply

    அது வந்துட்டா நாங்க ஏன் இப்படி இருக்கோம்? :)))

 • என். சொக்கன் 9:12 pm on September 18, 2013 Permalink | Reply  

  ளழளழ 

  • படம்: பயணங்கள் முடிவதில்லை
  • பாடல்: ஏ ஆத்தா
  • எழுதியவர்: கங்கை அமரன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
  • Link: http://www.youtube.com/watch?v=FkTJXOAuld4

  சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது,

  செவந்த தேகம் கண்டு என் மனசு பதறுது,

  பவள வாயில தெரியுற அழக,

  பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது!

  ’பச்சை மாமலைபோல் மேனி, பவள வாய் கமலச் செங்கண்’ என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதி மிகப் பிரபலமான பிரபந்தப் பாடல். அதில் வருவது பவள வாய். ளகரம்.

  இந்த சினிமாப் பாடலில் கங்கை அமரனும் ‘பவள வாய்’ என்றுதான் எழுதியிருக்கிறார். பாடிய SPBயும் தெளிவாக ளகரம் சேர்த்துப் பாடுகிறார்.

  ஆனால் பலர் ‘பவழம்’ என்றும் எழுதுகிறார்கள். அப்படியானால் ஆழ்வாரும், கங்கை அமரனும் எழுதியது தவறா? அல்லது, அவர்கள் எழுதியபடி ‘பவளம்’தான் சரியா?

  தமிழ் இலக்கணத்தில் ’போலி’ என்று ஒரு சமாசாரம் உண்டு. ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்து (அல்லது சில எழுத்துகள்) முறைப்படி எழுதவேண்டிய வழக்கத்திலிருந்து மாறிக் காணப்படும். பின்னர் அதை அப்படியே மக்கள் பயன்படுத்திப் பயன்படுத்தி அதுவே நிலைத்துவிடும்.

  உதாரணமாக, ‘மனம்’ என்பது ‘மனது’ அல்லது ‘மனசு’ என்று மாறும். ‘ஐந்து’ என்பது ‘அஞ்சு’ என மாறும். இவற்றை ‘நாலு வரி நோட்’டில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

  அதன்படி, இங்கே பவளம், பவழம் இரண்டில் ஒன்றுதான் சரி, இன்னொன்று போலி என்று நாம் ஊகிக்கலாம். அதாவது, பவளம் சரி என்றால், பவழம் போலி, அல்லது Vice Versa.

  பெரும்பாலானோர் ‘பவழம்’தான் சரி, ழகரம் உச்சரிக்க வராத மக்கள் அதைப் ‘பவளம்’ என்று மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை.

  காரணம், தமிழில் ழகரம் வரும் சொற்கள் ஏராளமாக உள்ளன. அவை எல்லாமா ‘ளகர’த்துக்கு மாறிவிட்டன? பவழம்தான் சரி, பவளம் போலி என்று உறுதியாகச் சொல்லத்தக்க சான்றுகள் எனக்குத் தெரிந்து இல்லை.

  பவளம், பவழம் இரண்டும் ஒரே மீட்டர் (புளிமா). எனவே, இவற்றில் ஒன்றைத் தூக்கிவிட்டு இன்னொன்றை அங்கே சுலபமாக வைத்துவிடலாம். ஒரு பாடலின் ஒலி அழகு கெடாது.

  அதேபோல், பவ’ள’ம், பவ’ழ’ம் என்ற சொல் இணையில் பிரச்னைக்குரிய எழுத்து (ழ அல்லது ள) மூன்றாவதாக இருக்கிறது. எனவே, மரபுக் கவிதைகளில் வருகிற எதுகை நயத்தை வைத்தும் இவற்றில் எது சரி என்று நாம் கண்டுபிடிக்கமுடியாது.

  ஆக, பவளமா, பவழமா என்கிற கேள்விக்கான விடையை நாம் மரபுக்கவிதை இலக்கணத்தை வைத்தும் பெற இயலாது.

  இதன் அர்த்தம், ‘ஐந்து’ என்பது சரி, ‘அஞ்சு’ என்பது போலி என்று உறுதியாகச் சொல்வதைப்போல், பவளம், பவழம் விஷயத்தில் நம்மால் ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வர இயலவில்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் பவழம், பவளம் இரண்டுமே பயன்பட்டுள்ளன.

  ஆகவே, இவற்றில் ஒன்று போலியாக இருந்தாலும்கூட, நெடுநாளாகப் பயன்பாட்டில் உள்ளதால் எது நிஜம், எது போலி என்பதே தெரியாத அளவுக்கு மயங்கிவிட்டோம்!

  பவளமோ பவழமோ, பொதுவாகச் செக்கச் சிவந்த உதட்டுக்குதான் உவமையாகச் சொல்லப்படும். அதைப் பார்த்த மோகத்தில் வாய் குழறுவது சகஜம்தான்!

  ***

  என். சொக்கன் …

  18 09 2013

  291/365

   
  • amas32 9:21 pm on September 18, 2013 Permalink | Reply

   எது நிஜமோ எது போலியோ தெரியாது ஆனால் பவளம் என்று சொல்லும் போது காதுக்கு இனிமையாக உள்ளது. அதே போல பவளமோ பவழமோ எந்தப் பெயரில் சொன்னாலும் மாலை ஒரே மாதிரி அழகாகத் தான் இருக்கும்.
   “A rose by any other name would smell as sweet” :-))

   amas32

  • elavasam 9:38 pm on September 18, 2013 Permalink | Reply

   மதில் மதிள், உளுந்து உழுந்து, மங்கலம் மங்களம் என்பதிலும் கூட இந்த மயக்கம் உண்டு.

   போலி என்று ஒன்று இருப்பதால் எல்லாவற்றையும் அதனுள்ளே அடக்கிவிடலாம். தொல்காப்பியரே போலி ஓக்கேன்னு சொல்லிட்டார். எதுவுமே தப்பில்லை என்று வாதாடுபவர்கள் உண்டு. நாளைக்கு வாழை வாளை என்று நம்மால் கெடுக்கப்பட்டவை எல்லாமும் கூட ஏறக்கத்தக்கவையாகிவிடும்.

  • rajinirams 10:23 pm on September 18, 2013 Permalink | Reply

   ஆமாம் சார்,நீங்கள் சொல்வது சரி தான்.கண்ணதாசன் -முத்து “பவளம்” முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா” என்றும் வாலி “பவழ”கொடியிலே முத்துக்கள் பூத்தால் என்றும் இரண்டு மாதிரி எழுதியிருக்கிறார்கள். நன்றி.

  • Uma Chelvan 3:04 am on September 19, 2013 Permalink | Reply

   I thought that it is “பவள கொடியிலே முத்துகள் பூத்தால்”

   • rajinirams 10:29 am on September 19, 2013 Permalink | Reply

    Uma Chelvan பவழக்கொடியிலே முத்துக்கள் தான்-இப்ப கூட கேட்டேன்:-))

  • க்ருஷ்ணகுமார் 12:24 pm on September 19, 2013 Permalink | Reply

   \\\ உதாரணமாக, ‘மனம்’ என்பது ‘மனது’ அல்லது ‘மனம்’ என்று மாறும் \\\

   ‘மனம்’ என்பது ‘மனது’ என்று மாறும் …..புரிகிறது

   ‘மனம்’ என்பது ‘மனம்’ என்று மாறும். 😉

   புரியல சார்.

   • என். சொக்கன் 12:27 pm on September 19, 2013 Permalink | Reply

    மன்னிக்க, தட்டச்சுப்பிழை, இப்போது சரி செய்துவிட்டேன்

 • என். சொக்கன் 11:36 pm on August 19, 2013 Permalink | Reply  

  விளக்கு வைத்தேன் 

  • படம்: திருமலை தென்குமரி
  • பாடல்: திருப்பதி மலை வாழும்
  • எழுதியவர்: தென்காஞ்சி பாரதிசாமி
  • இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
  • பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=MR0l_ja1qUA

  அன்பெனும் அகல் விளக்கை ஏற்றிவைத்தேன், அதில்

  ஆசையென்னும் நெய்யை ஊற்றிவைத்தேன்,

  என் மனம் உருகிடவே, பாடி வந்தேன், உன்

  ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்!

  பிரபலமான இந்தப் பாடலை எழுதியவர் பெயர் தென்காஞ்சி பாரதிசாமி என்று நேற்றுதான் தெரிந்துகொண்டேன். எளிய மொழியில் மிகவும் அழகான பக்திப் பாடல்!

  குறிப்பாக, இந்த நான்கு வரிகள், ஆழ்வாரின் இன்பத் தமிழ்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயலில் பூதத்தாழ்வார் எழுதிய முதல் வெண்பா. அதில், திருமாலுக்கு இப்படி ஒரு விளக்கை ஏற்றிவைக்கிறார்:

  அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக,

  இன்பு உருகு சிந்தை இடுதிரியா, நன்புருகி

  ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு

  ஞானத் தமிழ் புரிந்த நான்.

  நாராயணா,

  என்னுடைய அன்புதான் விளக்கு,

  நான் உன்மேல் கொண்டடிருக்கிறஆர்வம்தான் நெய்,

  எந்நேரமும் உன்னையே நினைக்கின்ற அந்தச் சிந்தனைதான் திரி…

  இவற்றைக் கொண்டு ஞானத் தமிழின் துணையால் நான் உனக்கு ஒரு விளக்கு ஏற்றிவைத்தேன்!

  எளிமையான பாடல்தான். இல்லையா?

  இப்போது சினிமாப் பாட்டு வரிகளை ஒருமுறை படித்துப்பாருங்கள். அழகான பாசுரத்தை இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி எத்துணை பேர்க்குக் கொண்டு சேர்த்துவிட்டது இந்தப் பாடல்!

  ***

  என். சொக்கன் …

  19 08 2013

  261/365

   
  • rajinirams 1:03 am on August 20, 2013 Permalink | Reply

   அடடா-இந்த பாடலை எழுதியவர் உளுந்தூர்பேட்டை சண்முகமோ பூவை செங்குட்டுவனோ எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தேன்-பெரும்பாலும் எல்லோருமே அறிந்த இந்த அற்புதமான பாடலை எழுதியவர் தென் காஞ்சி பாரதிசாமி என்பதை “வெளிச்சத்திற்கு” கொண்டு வந்ததற்காகவே உங்களை பாராட்ட வேண்டும். நன்றி. திருமலை திருமாலை வாழ்த்தி வணங்க இது நல்ல தமிழ் வார்த்தை பூக்களை கொண்ட பக்திமாலை.

 • என். சொக்கன் 10:52 pm on July 15, 2013 Permalink | Reply  

  என்றும் இளமை 

  • படம்: ஆட்டோ ராஜா
  • பாடல்: சங்கத்தில் பாடாத கவிதை
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4

  மூவாத உயர் தமிழ்ச்

  சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் தந்தது?

  சந்தத்தில் மாறாத நடையொடு, என்முன்னே யார் வந்தது?

  பிரபலமான பாடல்தான். ஆனால் கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்காவிட்டால், சரணத்துக்கும் பல்லவிக்கும் நடுவே வரும் அந்த வார்த்தையைக் கவனிக்கக்கூடமாட்டோம், ‘மூவாத’!

  அதென்ன மூவாத?

  ’மூவாத் தமிழ்’ என்று கேட்டிருக்கலாம், மூப்பு அடையாத, என்றைக்கும் வயது ஆகாமல் இளமையோடிருக்கிற தமிழ் என்று பொருள்!

  ’ஏவா மக்கள் மூவா மருந்து’ என்று ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம், அப்பா, அம்மா ஒரு செயலைச் செய் என்று ஏவாத முன்பே அதைச் செய்து முடிக்கிற குழந்தைகள் இருந்துவிட்டால், அந்தப் பெற்றோர் அமிர்தம் சாப்பிட்டதுபோல் தலை நரைக்காமல், உடம்பு தளராமல் வாழ்ந்துவிடுவார்களாம்!

  மூவா மருந்து என்றால், நம்மை மூப்பு அடையாதபடி இளமையாகவே வைத்திருக்கும் மருந்து!

  திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பாடும்போது, ‘மூவா மேனியான்’ என்பார். நம்மாழ்வாரும் திருமாலை ‘மூவா, முதல்வா!’ என்று அழைத்து நெகிழ்வார்.

  புலமைப்பித்தனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் இதையெல்லாம் படித்திருக்கிறார், ‘மூவாத உயர் தமிழ்’ என்று அதே சொற்களால் அவருக்குப் பிடித்த கடவுளைப் பாடிவிடுகிறார்!

  ‘மூவா’ எப்படி ‘மூவாத’ ஆனது?

  ம்ஹூம், ‘மூவாத’தான், ‘மூவா’ ஆனது, ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்!

  டென்டிஸ்ட் சமாசாரம் இல்லை, ‘மூவாத’ என்ற வார்த்தைக்குப்பின்னே ஒரு பெயர்ச் சொல் வந்தாகவேண்டும் (மூவாத மேனியான், மூவாத முதல்வன், மூவாத மக்கள், மூவாத தமிழ்… இப்படி), ஆகவே, அது ‘பெயரெச்சம்’ எனப்படும்.

  இந்தப் பெயரெச்சம் எதிர்மறையாக வரும்போது, அதாவது ‘பாடும் கவிதை’ என்று இல்லாமல், ‘பாடாத கவிதை’ என்று Negative பொருளில் எதிர்மறைப் பெயரெச்சமாக வரும்போது, அதன் நிறைவில் (அதாவது ஈறாக) உள்ள எழுத்து, ‘த’, அது கெடும், அதாவது நீங்கும், ‘மூவாத தமிழ்’ என்பது, ‘மூவாத் தமிழ்’ என்று மாறிவிடும், அதைதான் ‘ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்’ என்பார்கள்!

  இதேபோல், ‘எழுதாத கவிதை’ என்பது ‘எழுதாக் கவிதை’ எனவும், ’பேசாத பேச்சு’ என்பது ‘பேசாப் பேச்சு’ எனவும் மாறும். எல்லாம் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்!

  தமிழுக்கு ஈறு ஏது? அந்த விதத்திலும் அது மூவாத் தமிழ்தான்!

  ***

  என். சொக்கன் …

  15 07 2013

  226/365

   
  • app_engine 2:10 am on July 16, 2013 Permalink | Reply

   மிக அருமையான கட்டுரை!

   தொடரட்டும் உம் தமிழ்த்தொண்டு!

   வாழ்த்துகள்!

  • rajinirams 10:04 am on July 16, 2013 Permalink | Reply

   அடடா,அருமை.எவ்வளவு எளிமையாக ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சத்தை விளக்கி விட்டீர்கள்.
   புலமைப்பித்தன் பல்லாண்டு வாழ்க படத்தில் என்ன சுகம் பாடலில் “எழுதா”கவிதை இவள் தான் அடடா என்றும் ஊருக்கு உழைப்பவனில் அழகெனும் ஓவியம் இங்கே பாடலில் கவி கம்பன் “எழுதா”பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில் என்றும் அழகாக எழுதியிருப்பார்,அம்பிகாபதியில் கே.டி.சந்தானம் எழுதிய “வாடா”மலரே தமிழ் தேனே பாடலையும் சொல்லலாம்.நன்றி.

  • amas32 8:17 pm on July 17, 2013 Permalink | Reply

   அப்போ இந்தப் பாடலில் மூவா உயிர் தமிழ் என்று வராமல் மூவாத உயிர் தமிழ் என்று வந்துள்ளதே அதுவும் ஒகே தானா?

   amas32

   • என். சொக்கன் 11:30 pm on July 17, 2013 Permalink | Reply

    மூவாத என்பதுதான் அடிப்படை, அதன் ஈறு கெடுவது இன்னொரு வடிவம், ரெண்டும் சரிதான்

 • என். சொக்கன் 11:31 am on July 13, 2013 Permalink | Reply  

  விளையாட வா நிலவே! 

  • படம்: மின்சாரக் கனவு
  • பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே
  • எழுதியவர்: வைரமுத்து
  • இசை: ஏ. ஆர். ரஹ்மான்
  • பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
  • Link: http://www.youtube.com/watch?v=0la-zpyqpkU

  வெண்ணிலவே, வெண்ணிலவே,

  விண்ணைத் தாண்டி வருவாயா? விளையாட ஜோடி தேவை!

  இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்பே உன்னை அதிகாலை அனுப்பிவைப்போம்!

  குழந்தை விளையாடத் துணையாக, நிலவை அழைப்பது பிள்ளைத்தமிழின் இலக்கணம். அங்கே இதனை ‘அம்புலிப் பருவம்’ என்று அழைப்பார்கள்.

  இதற்கு மிகச் சிறந்த உதாரணம், பெரியாழ்வார் தன்னை யசோதையாகக் கற்பனை செய்துகொண்டு, குழந்தைக் கண்ணனை வர்ணிக்கும்விதமாக அமுதில் கோல் தோய்த்து எழுதிய நாலாயிரம் திவ்யப் பிரபந்தப் பாடல்கள், அவற்றுள் ஒன்றுமட்டும் இங்கே:

  என் சிறுக்குட்டன், எனக்கு ஓர் இன் அமுது எம்பிரான்,

  தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்,

  அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்

  மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

  நிலாவே,

  என் சின்னப் பிள்ளை கண்ணன், எனக்கு இனிய அமுதம் போன்றவன், அவன் தன்னுடைய சின்னக் கைகளை மேலே காட்டிக் காட்டி உன்னை விளையாட அழைக்கிறான்,

  அந்தக் கார்மேக வண்ணனோடு விளையாட உனக்கு ஆசை இல்லையா? ஏன் மேகத்தில் மறைந்துகொள்கிறாய்? மகிழ்ச்சியாக இங்கே ஓடி வா!

  குழந்தைக்கு விளையாட்டுத் துணையாகும் நிலவை, இங்கே வளர்ந்த இருவர் விளையாட விரும்பி அழைப்பதாகக் கொஞ்சம் வித்தியாசமாகக் கற்பனை செய்துள்ளார் வைரமுத்து.

  ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும்போது, மூன்றாவதாக ஒரு விளையாட்டுத் தோழன் தேவையா? உண்மையில் அவர்கள் அழைப்பது வானத்தில் உள்ள நிலவைதானா?

  இந்தக் கதையின்படி, அவர்கள் இருவரும் ஒருவரை காதலிக்கிறார்கள், ஆனால் அதைச் சொல்வதற்குத் தயங்குகிறார்கள், ஆகவே, ‘விண்ணை(தடைகளை)த் தாண்டி வருவாயா?’ என அவர்கள் அழைப்பது சந்திரனை அல்ல, எதிரே உள்ளவனை(ளை)தான்!

  ***

  என். சொக்கன் …

  13 07 2013

  224/365

   
  • amas32 5:04 pm on July 13, 2013 Permalink | Reply

   கௌதம் மேனன் திரைப்படங்களுக்கு நல்ல/தகுந்த பெயர் வைப்பார். நீங்கள் இங்கே சொல்லும் விளக்கத்தைப் பார்க்கும் போது “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தின் பெயர் அந்த கதைக்கு மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

   காதலர்கள் இன்னும் ஜோடி சேராததால் தனித்து நிற்கும் இருவரும் நிலவை ஜோடி சேர்க்கக் கூப்பிடுகிறார்களோ?

   இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னர் அதிகாலை அனுப்பி வைப்போம் என்பதும் கூட காதலர்கள் தங்கள் நிலை மற்றவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்கோ?

   அருமையான பாடல்!

   amas32

 • G.Ra ஜிரா 10:41 am on June 7, 2013 Permalink | Reply  

  ஆராரோ ஆராரிரோ! 

  தாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு” என்று தொலைக்காட்சியில் பி.சுசீலா உருகி உருகித் தாலாட்டிக் கொண்டிருந்தார். அதென்னவோ… தமிழ்த் திரையிசையில் எத்தனையெத்தனையோ தாலாட்டுப் பாடல்கள். அவைகளில் சிறந்த பாடல்களை எல்லாம் பார்த்தால் பெரும்பாலும் பி.சுசீலா பாடியதாகத்தான் இருக்கும்.

  தாலாட்டு… இந்தச் சொல்லை உச்சரிப்பதே சுகமாக இருக்கிறது. அந்த அளவுக்கு தாலாட்டு நம்முடைய பண்பாட்டில் கலந்திருக்கிறது.

  தாலாட்டு என்ற பெயருக்கு உண்டான பொருளே மிக அழகானது. தால் என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடுவதால் அதற்குத் தாலாட்டு என்று பெயர்.

  அப்படியானால் மற்ற பாடல்களைப் பாடும் போது நா ஆடாதா? ஆடும். கண்டிப்பாக ஆடும்.

  அப்படியானால் இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் தாலாட்டு என்று பெயர் ஏன்?

  காதலையோ பக்தியையோ வேறு எதையுமோ பாட்டில் வைக்க வேண்டுமானால் சொற்கள் தேவை. அந்தச் சொற்களில் நல்ல பொருள் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் இருந்தால்தான் பாட்டு. இல்லையேல் நிப்பாட்டு.

  ஆனால் தாலாட்டு அப்படியில்லை. ராரிராரிராரியிலேயே பாட்டு முழுவதையும் பாடிவிடும் நாட்டுப்புறத்துத் தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். இன்னொரு பெண்மணி மெல்லின விரும்பி போலும். லுலுலுலுலூ என்றே பாட்டின் பல்லவி அனுபல்லவி சரணத்தை நிரப்பி விட்டார். ஆனாலும் குழந்தைகள் அந்தத் தாலாட்டைக் கேட்டு தூங்கத்தான் செய்தன.

  சொல் இல்லை. பொருள் இல்லை. ஆனால் வெறும் ஒலியை உண்டாக்கி அதன் மூலம் குழந்தையின் மனதை அமைதிபடுத்தி உறங்க வைப்பது எவ்வளவு பெரிய வேலை. இந்த வேலையைச் சிறப்பாகச் செய்வதால்தான் தாலாட்டு என்ற சிறப்பு பெயர் தாலாட்டுக்கு அமைந்தது.

  அதுவுமில்லாமல் ஒரு குழந்தை முதன்முதலில் கேட்கும் பாடலே தாலாட்டுதான். வேறு எந்தப் பாட்டையும் விட அந்த முதற்பாட்டுக்காக ஒரு தாயின் நா அசைவதுதான் சிறப்பு. அதைத்தான் தாலாட்டு என்ற பெயர் சிறப்பிக்கிறது.

  தாலாட்டு என்பது நாட்டுப்புற வடிவம். அதன் சிறப்பையும் ஏற்றத்தையும் கண்டு செவ்வியல் இசை வடிவங்கள் தாலாட்டை உள்வாங்கிக் கொண்டன. பக்தி இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் நூல்களும் தாலாட்டை எழுதியிருந்தாலும்… நாட்டுப்புற வடிவத்தில் அமைந்த தாலாட்டே சிறப்பானது.

  ஆராரோ ஆரிரரோ
  ஆராடிச்சா என் கண்ணே
  அடிச்சாரைச் சொல்லி அழு
  அவராதம் போட்டிருவோம்
  மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டாலே
  அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே

  இப்படி எளிமையான வரிகளில் இலக்கியமாகிவிடுகிறது தாலாட்டு. தாலாட்டுப் பாடல்களில் ஒரு சிறப்பு உண்டு. தாலாட்டு என்பது தாய் பாடும் பாட்டுதான். ஆனால் தாய்மாமன் நிறைய வருவான். ஒரு குழந்தைக்கு தாய்க்கு அடுத்து தாய்மாமன் முக்கியமானவன்.

  குழந்தையின் ஒவ்வொரு பருவத்திலும் தாய்மாமன் செய்யும் சீரும் சிறப்பும்தான் பெருமை. மொட்டையடித்து காது குத்துவதில் தொடங்கி கல்யாணத்துக்கு மெட்டி மாட்டுவது வரையிலும்… அதையும் தாண்டியும் தாய்மாமன் உறவு தொடரும்.

  ஆயிரம் வைரம் அப்பன் தந்தாலும் தாய்மாமன் தரும் காற்காசு மோதிரத்தைதான் தாய் பெரிதாகப் பேசுவாள். அதனால்தான் தாலாட்டுப் பாடல்களின் தாய்மாமன் பெருமை இருக்கும். அதுவும் இயல்புக்கும் மீறி பெருங்கற்பனையாகவே இருக்கும்.

  தங்க கடிகாரம் வைர மணியாரம்
  தந்து மணம் பேசுவார் பொருள்
  தந்து மணம் பேசுவார்
  மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
  உலகை விலை பேசுவார்
  உலகை விலை பேசுவார்

  என்ன பாட்டு என்று தெரிகிறதா? ஆம். “மலர்ந்தும் மலராத பாதிமலர் போல” என்ற கவியரசரின் காவியப் பாடல்தான்.

  மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
  ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
  பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
  மாணிக் குறளனே தாலேலோ
  வையம் அளந்தானே தாலேலோ

  இதுவும் தாலாட்டுதான். பக்தி இலக்கியத் தாலாட்டு. சொல்வளமும் பொருள்வளமும் நிறைந்திருந்தாலும் இந்தப் பாடலில்நாட்டுப்புறத் தாலாட்டின் எளிமை இல்லாமல் இருப்பதை உணரலாம்.

  ஆனாலும் இதுவும் இனிய பாடல்தான். ஆழ்வார்கள் அத்தனை பேர்களில் இவருக்கு மட்டும் பெரியாழ்வார் என்று பெயர். எல்லாரும் நாராயணனைப் பாடினார்கள். இவர் மட்டும் தாலாட்டினார். குழந்தைக்குத் தாய்தான் பெரியவள். அந்த வகையில் நாராயணனையே தாலாட்டிய இவர் பெரியவராகி பெரியாழ்வார் ஆகிறார்.

  பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
  பாடல் ஒன்று – தாலாட்டு பிள்ளை ஒன்றை தாலாட்டு
  பாடியவர் – இசையரசி பி.சுசீலா
  பாடல் வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – இசைஞானி இளையராஜா
  பாடலின் சுட்டி – http://youtu.be/iDk5vZ224hs

  பாடல் இரண்டு – மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
  பாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்
  பாடல் வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
  இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
  பாடலின் சுட்டி – http://youtu.be/R9zT_GGGL7M

  அன்புடன்,
  ஜிரா

  188/365

   
  • amas32 10:58 am on June 7, 2013 Permalink | Reply

   //தாலாட்டு என்ற பெயருக்கு உண்டான பொருளே மிக அழகானது. தால் என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடுவதால் அதற்குத் தாலாட்டு என்று பெயர்// ரொம்ப அருமை 🙂

   //மாணிக் குறளனே தாலேலோ
   வையம் அளந்தானே தாலேலோ// தாலேலோ தாலேலோ தாலாட்டு!

   பலமுறை படித்துவிட்டேன் ஜிரா, சூப்பர் 🙂

   amas32

  • mokrish 11:10 am on June 7, 2013 Permalink | Reply

   மாமன் அடிச்சாரோ மல்லிகப்பூச் செண்டாலே அத்தை அடிச்சாரோ அரளிப்பூ தண்டாலே என்றே படித்திருக்கிறேன். இந்த நுண்ணரசியலை கவனியுங்கள்

  • mokrish 11:16 am on June 7, 2013 Permalink | Reply

   தாலாட்டு பாடி தூங்கவைக்கலாம். ஆனால் கண்ணதாசன் ஒரு பாடலில் மாயக் கண்ணனை எழுப்புகிறார் ‘ ‘கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
   அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ ‘

  • Arun Rajendran 11:41 am on June 7, 2013 Permalink | Reply

   எல்லா உணர்வுகளுக்கும் ஒரு இலக்கணம் வகுத்துடலாம்..இலக்கியம் படைத்திடலாம்..ஆனால் தாய்ப்பாசம்? எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காது…அப்பேர்ப்பட்ட சிறப்புடைய பாசத்தின் மிகுதியில், பேருவகையில், ஆனந்த கர்வத்தில், தன் பிள்ளை உறங்கப் பாடப்படும் தாலாட்டுக்கு மட்டும் இலக்கணம் வேணடுமா…ஜிரா சார் அருமையா சொன்ன மாதிரி சொல், பொருள் எதுவும் வேண்டாம்..ஓசை ஒன்றே போதும்..குழந்தைக்கு வேறு என்ன வேண்டும்?

   ஏகப்பட்ட தாலாட்டுப் பாடல்கள இராசா கொடுத்திருக்கார்…ஆனா எனக்கு மிகவும் நெருக்கமானது “ஆயர்பாடி மாளிகையில்” தான்….கவிஞரின் சொல்லாட்சிக்கு, எம்.எஸ்.வியின் இசை..பாடுவதோ பாடும் நிலா பாலு…பாவம் சின்னக் கண்ணன்..தூங்கத்தானே வேணும்…

   இவண்,
   அருண்

  • anonymous 4:07 pm on June 7, 2013 Permalink | Reply

   “தாலம் (எ) நாக்கை ஆட்டுதல்” பற்றி இனிமையாச் சொன்னமைக்கு நன்றி;

   தாலாட்டுக்கு = “ஆராட்டு” என்ற பேரும் உண்டு! (மலையாளத்திலும்)
   ஆறாட்டு (ஆற்றில் குளித்தல்) அல்ல; ஆராட்டு (ஆராரோ)

   பிள்ளைத் தமிழ், பத்து பருவங்களில்… செங்கீரைக்கு அடுத்து வரும் தாலப் பருவம்;
   *செங்கீரை = குழந்தை ஐஞ்சாம் மாசம்; அப்போ தான் தலை நிக்கும்;

   அப்போ, கீரைக் கொடியின் தளிர் இலை போல, தலையை லேசா ஆட்டும்;
   அந்த ஆட்டலுக்கு ஈடா, அம்மா, நாக்கை அசைத்து அசைத்துப் பேசுவது = தாலாட்டு!
   ——

   குழந்தைக்கு மொழி ஏது?

   தலை நின்னு, உன்னிப்பா உலகத்தைக் கவனிக்கும் பருவம்;
   அப்போ அது கூட பேசணுமே? எப்படிப் பேசுவது?

   குழந்தைக்கு உடல் மொழி தான் = கண்ணு, வாயி, கையை அசைக்கும்
   அம்மாவும் அதுக்கு ஈடா, வாயை அசைக்கணும்; அசைப்பதை உன்னிப்பா பாக்கும்

   ஆ = ஆராரோ -ன்னு மொழி அறிமுகம் ஆவது இங்கே தான்;
   = “தாய்” மொழி!

   • anonymous 4:25 pm on June 7, 2013 Permalink | Reply

    “அ” முதல் எழுத்து அல்ல! “ஆ” தான் முதல்!

    முதலில் நெடில், அப்பறம் தான் குறில்!
    தா-தா, மா-மா -ன்னு… குழந்தைக்கு நெடில் தான் இயல்பு; அப்பறமா அது குறிலாகி, மா->அம்மா ; “மொழி” என்ற ஒழுங்கு பிறக்கிறது;

    ஆ-ன்னே சொல்லலாமே; எதுக்கு “ஆ”ராரோ? “ஆ”-ராரிராரோ?

    குழந்தை உன்னிப்பா பாக்குது அல்லவா?
    தன் அசைவுக்கு, மத்தவங்களும் அசையறாங்களா? -ன்னு பாக்கும் போது தான், அதுக்கு நம்பிக்கை!
    மொழி என்பதே, உணர்ச்சிகளின் கொடுக்கல்-வாங்கல் தானே?
    ———

    அதனால், அதன் போக்கிலேயே -ராரிராரோ ன்னு அசைவு காட்டி,
    அசைத்து அசைத்து, “தாய்”-மொழியை அறிமுகம் செய்கிறாள் அம்மா!

    இது வெறுமனே அசைவு
    இதுல பொய் இல்ல, போலித் தனம் இல்ல
    யாப்பு-சோப்பு, இலக்கணம்-தலைக்கனம்…….. ஒன்னும் இல்ல

    உள்ளத்தில் உள்ள உண்மை, அன்பா வெளி வரும்
    “தாய்” மொழி = அதுவே தாலாட்டு!

   • anonymous 4:35 pm on June 7, 2013 Permalink | Reply

    (Following is my own personal opinion only)

    இப்படித் தாலாட்டில் “போலித்தனம்” என்பது அறவே இல்லை!
    அதனால் தான் சுசீலாம்மா -வின் குரல் மட்டும் = தாலாட்டுக்கு அத்தனை சோபிக்கிறது

    குரலை மாத்திப் பாடணும்,
    ஏத்தி இறக்கணும்
    ஹேய், ஆஹ் போன்ற குரல் ஜாலங்கள் = இதெல்லாம் தாலாட்டில் அறவே இல்லை!

    குழந்தையிடம் உள்ள உள்ளத்து உண்மை = இயற்கை (எ) குரல்…
    ராரீ ராரீ ரோஓஓஓஓஓ

    வரம் தந்த சாமிக்குப் – பதமான லாலி
    ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
    பார்போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே
    ராரீ ராரீ ரோஓஓஓஓஓ

    with due respect to other singers,
    this is just my view only; that too only w.r.t. thaalaattu – sorry for the digression if any!

  • anonymous 4:56 pm on June 7, 2013 Permalink | Reply

   தாலாட்டு = குழந்தைக்கா? தாய்க்கா? நமக்கா?:))
   யாருக்கு ஆறுதல்?

   எல்லாருக்கும் தான்…

   என்ன தான் குழந்தைக்குப் பாடினாலும்…
   அதில், தன் “அடி மனசு சோகங்களையும், சந்தோசங்களையும்” கூட, சேத்து வச்சித் தான் பாடுறா!
   தாலாட்டு -> இலக்கியம் ஆவது, இங்கே தான்!
   ————

   தங்கக் குடை பிடிச்சு – தாசிமாரை முன்ன விட்டு
   உங்கப்பன்
   தாசிக்கே விட்ட பணம் – தங்க மடம் கட்டலாமே

   வெள்ளிக் குடை பிடிச்சு – வேசிகளை முன்ன விட்டு
   உங்கப்பன்
   வேசிக்கே விட்ட பணம் – வெள்ளி மடம் கட்டலாமே!
   ————

   என் ஒடம்பில் அவன் உடம்பு – உரசி வந்த புள்ள
   என் மனசில் அவன் மனசு – உரசாமப் போனதென்ன?

   நான் உரச வேண்டியதை, நாகமணி உரசுறாளாம்
   நீ உசர நான் இருக்கேன்; நீலமணி கண்ணுறங்கு

   ஆ-ராரோ ஒரசினாலும், அவருக்கே என் மனசு
   ஆ-ராரோ ஆ-ரரிரோ, என் ஆம்பிளையே கண்ணுறங்கு
   ————

   தன்னவனைக் கூடத்
   தாலாட்டில் சொல்லி அழும் “பெண் உள்ளம்” என்னான்னு சொல்ல? முருகா!

  • anonymous 5:27 pm on June 7, 2013 Permalink | Reply

   தமிழ் இலக்கியத்தில் = பெரியாழ்வார் தான் தாலாட்டுக்கு முன்னோடி
   -ன்னு தொலைக்காட்சியில், சமயப் போக்குள்ள சிலரு சொல்லுவாய்ங்க; அதெல்லாம் சும்மா!:)

   “ஆ-ராரோ ஒரசினாலும், என் ஆம்பளைக்கே என் மனசு” -ன்னு பெரியாழ்வாரால் explicit-ஆ பாட முடியாது:))
   தாலாட்டு = நாட்டுப் புறத்துக்கே உரியது! நாட்டுப்புற இலக்கியம்!
   ———

   பெரியாழ்வார், “பிள்ளைத் தமிழ்”-க்குத் தான் முன்னோடி;
   தாலாட்டுக்கு அல்ல!

   செங்கீரை, காக்கை விரட்டல், குளிப்பாட்டல் -ன்னு… விதம் விதமா அனுபவிச்சிப் பாடினாரு;
   அதுவே, பின்னாளில், பத்துப் பருவம் -ன்னு ஒழுங்கு பெற்று, பிள்ளைத் தமிழாய் ஆனது!

   *பெருமாள் அழுவாமல் தூங்க,
   *சிவபெருமானே வந்து மாலை குடுப்பதாக, ஆழ்வார் பாடுவாரு:)

   உடையார் கன மணியோடு ஒண் மாதுளம்பூ
   இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு
   *** விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான் ***
   உடையாய் அழேல் அழேல் தாலேலோ!
   உலகம் அளந்தானே தாலேலோ!

   இன்றளவும், திருப்பதி-திருமலை, நள்ளிரவு ஏகாந்த சேவையிலே,
   சிவபெருமான் ஜோதி (கும்ப விளக்கு) ஒன்று காட்டப்படும்!
   அதுக்கு மரியாதை செய்து, அதில் உள்ள மாலையை எடுத்து, தொட்டிலில் கட்டி, இந்தப் பாசுரம் பாடுவது வழக்கம்;
   ———

   மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும், திருச்செந்தூர் பிள்ளைத் தமிழும் பின்னால் வந்தவை; எனினும்… மிக அழகான தாலாட்டுப் பாடல்கள் அவற்றில் இருக்கு!

   In fact, MS amma’s 1st song (gramaphone recorded – as a 10 year old kid) is from Tiruchendur piLLai tamizh only!

   சரவண மருவும் தண்டமிழ் முருகா
   தாலோ தாலேலோ
   சதுமறை பரவுஞ் செந்திலை உடையாய்
   தாலே தாலேலோ

   உன்..
   முத்தம் தனக்கு விலை இல்லை
   முருகா முத்தம் தருகவே
   முத்துச் சொரியும் கடல் அலைவாய்
   முருகா முத்தம் தருகவே

   • anonymous 5:29 pm on June 7, 2013 Permalink | Reply

    சங்கத் தமிழிலும், தாலாட்டின் கூறுகள் உண்டு!

    நாட்டுப்புறப் பாட்டும் = இலக்கியமே -ன்னு தொல்காப்பியம் பேசும்;
    ** நாட்டுப் பாட்டு = பண்ணத்தி **

    பண், தானே நத்துமாம்; பண் + நத்தி
    இதுக்கு அடிவரை (இலக்கணம்) கிடையாது -ன்னு தொல்காப்பியரே, மலைச்சிப் போயிச் சொல்லுவாரு! http://goo.gl/OBX51

  • rajnirams 6:35 pm on June 7, 2013 Permalink | Reply

   அருமை.தால்+ஆட்டு-தாலாட்டு என்பதை அறிந்து கொண்டேன்.சில சமயங்களில் சில விஷயங்கள் தாலாட்டுவதை போன்ற உணர்வை ஏற்படுத்தி விடும் என்பதற்கு உதாரணம்-கடல் மீன்கள் படத்தின் “தாலாட்டுதே வானம்”,தாலாட்டும் காற்றே நீ வா பாடல்கள்.. பிறந்த குழந்தையை மட்டுமல்ல,தன் காதலியையும் தாலாட்டி மகிழ்வேன் என்று காதலன் பாடும் பாடல்-“தாலாட்ட நான் பொறந்தேன்” தாலாட்டி பாடி தாயாக வேண்டும் பாடல்கள்.டி.ஆரின் வித்தியாசமான சிந்தனை இது குழந்தை பாடும் தாலாட்டு. “ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோ-இது காதலியின் தாலாட்டு. நன்றி.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel