Updates from October, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 7:54 pm on October 23, 2013 Permalink | Reply  

  இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் 

  அன்றொரு நாள் ட்விட்டரில் ஒரு அட்டகாசமான வெண்பா விளையாட்டு. நண்பர் @nchokkan கண்ணன் பற்றி வெண்பா எழுத நண்பர் @elavasam அதில் ஒரு கேள்வி கேட்க — இவர் பதில் சொல்ல என்று பரபரப்பான one day மாட்ச்  போல சுவாரசியமாக இருந்தது.

  எனக்கு வெண்பாவும் தெரியாது விருத்தமும் தெரியாது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயம் கண்ணனும் ராமனும். கண்ணன் பற்றிய பாட்டில் ஏன் ராமர் பற்றிய Reference என்று முதல் கேள்வி.. இருவரும் ஒன்றுதானே என்று ஒரு பதில். தப்பு செய்தவன் ஒருவன் மாட்டிக்கொண்டவன் வேறொருவன் என்று ஒரு மறுமொழி.  ஒரே பாட்டில் பல அவதாரங்கள் என்று ஒரு தனி track. அட அட

  அதே கேள்விகளுக்கு நாமும் பதில் தேடலாம் என்று ஒரு (விபரீத) ஆசை. ஆண்டாள் திருப்பாவையில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும்

  புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்

  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

  என்று ஒரே பாசுரத்தில் பாடியுள்ளதாகப் படித்தேன். மணாளன் எப்படி இருக்க வேண்டும் ஆண்டாள் கலங்குகிறாள். கண்ணனா ராமனா ? கண்ணுக்கு இனிய கண்ணனுக்கு ஒரு வரி மனத்துக்கு இனிய ராமனுக்கு ஒரு வரி என்று மாறி மாறி உருகுகிறாள்.  கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்தில் ஒரு matrimonial விளம்பரம் போல எழுதுகிறார் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் எஸ் ஜானகி)

  http://www.youtube.com/watch?v=lsY6sJPpAF0

  ராதைக்கேற்ற கண்ணனோ

  சீதைக்கேற்ற ராமனோ

  கோதைக்கேற்ற கோவலன் யாரோ அழகு

  கோதைக்கேற்ற காவலன் யாரோ

  அன்னை இல்லம் படத்தில் நடையா இது நடையா என்ற பாடலிலும் (இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்) பொருத்தம் பார்க்கிறார்.

  தேரோட்டும் கண்ணனுக்கு ராதா

  சிங்கார ராமனுக்கு சீதா

  காரோட்டும் எனக்கொரு கீதா

  கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தோதா

  நம்மாழ்வார்  ராமன் கூனி மேல் மண் உருண்டை எறிந்த பழியை

  மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

  கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

  என்ற பாடலில் கண்ணன் மேல் போடுகிறார். .

  ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை என்பது ஆண்டாள் கட்சியா? நம்மாழ்வார் அதெல்லாம் இல்லை இருவரும் ஒன்றே என்கிறாரா? இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

  கண்ணதாசன் அந்த Bride / Bridegroom தேவை என்பதையெல்லாம் தள்ளிவைத்து இருவேடம் போட்டாலும் திருமால் ஒன்றே என்று உயர்ந்தவர்கள் படத்தில் (இசை சங்கர் கணேஷ் பாடியவர் எம் பாலமுரளிகிருஷ்ணா)

  http://www.palanikumar.com/filmsongdetails.phtml?filmid=2697&songid=13160

  ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே

  ராதையின் வடிவம் சீதையும் தாயே

  நால் வேதம் அவனாக உருவானதோ

  நாலாகும் குணம் பெண்மை வடிவானதோ

  என்று சொல்கிறார்.

  தசாவதார வரிசை ஒரு evolution செய்தி சொல்லும் என்று படித்தேன் . முதலில் நீர் வாழ் உயிரினம் அடுத்து ஒரு amphibian அப்புறம் ஒரு நிலத்தில் வாழும் வராகம் அடுத்து கொஞ்சம் மிருகம் கொஞ்சம் மனிதன் என்று அது ஒரு அழகான வரிசை. இதில் ராமனுக்கு அடுத்து கண்ணன். இதில் இருக்கும் evolution செய்தி என்ன?

  மோகனகிருஷ்ணன்

  325/365

   
  • amas32 8:12 pm on October 23, 2013 Permalink | Reply

   மோகனக்ரிஷ்ணனனான உங்களுக்கு அது விளங்காதா? 😉 இராமன் ரூல்ஸ் ராமனுஜன். கிருஷ்ணன் சகலகலா வல்லவன். அடுத்த பரிணாம வளர்ச்சி அதுவாகத் தானே இருக்க வேண்டும். ஆறு அறிவுள்ள மனிதன் இன்னும் இன்னும் சாமர்த்தியத்தையும் செயல் திறனையும் அதிகப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலையை இன்று நாம் கண் கூடாகப் பார்க்கவில்லையா? அதைத் தான் கிருஷ்ணனின் அவதாரம் நமக்குக் கட்டியுள்ளது. இன்றைய காலக் கட்டத்திற்குத் தேவையான நெளிவு சுளுவோடு வாழ கிருஷ்ணன் கற்றுத் தருகிறார் என்பது என் தாழ்மையானக் கருத்து.

   இராமனின் வாழ்க்கை ஒரு பாடம். கிருஷ்ணன் உபதேசம் செய்யவே அவதாரம் எடுத்தார். சிலது கேட்டுத் தான் கற்றறிய முடியும். அதை நமக்கு அருளியவர் கண்ணன்.

   அருமையானப் பாடல்கள் :-)) நன்றி!

   amas32

  • rajinirams 7:35 pm on October 24, 2013 Permalink | Reply

   ராமன்,கிருஷ்ணன் என்ற அவதாரங்களை வைத்து அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள்.
   “டபுள்ஸ்”படத்தில் நாயகனை-ராமனாக சித்தரித்து மனைவியும் கிருஷ்ணனாக காதலியும் நினைத்து பாடும் வைரமுத்துவின் பாடல் நன்றாக இருக்கும். “ராமா ராமா ராமா சீதைக்கேத்த ராமா உன் வில்லாய் நானும் வந்தேன் அம்பு பூட்டடா… கிருஷ்ணா கிருஷ்ணா உன் புல்லாங்குழலாய் வந்தேன் நீ வாசிடா என்று வரும். தசாவதாரம் படத்தில் வாலியின் வரிகள் “ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,கண்ணனாக நீயே வந்து காதலையும் தந்தாய்”.இன்னொரு பாடல் வரிகள்: ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவமே ஸ்ரீ ராமன்,காதல் உணர்வுக்கு பேதமில்லை என்றவனே பரந்தாமன், ஸ்ரீ ராமனாக நாயகியோடு வாழ்வது ஓரின்பம்,ஸ்ரீ கிருஷ்ணனாக கோபியரோடு வாழ்வது பேரின்பம்-வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன். http://youtu.be/XkM4zfgSBDg

 • G.Ra ஜிரா 10:48 am on April 2, 2013 Permalink | Reply
  Tags: கஸ்தூரி, ஷாகுல் ஹமீது   

  குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்! 

  தண்ணீர் தண்ணீர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தில் கண்ணதாசனும் வைரமுத்துவும் பாடல்களை எழுதியிருக்க, ஒரு நாட்டுப்புற பாட்டையும் மெட்டமைத்துப் பயன்படுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர்.

  மானத்திலே மீனிருக்க
  மதுரையிலே நீயிருக்க
  சேலத்திலே நானிருக்க
  சேருவது எக்காலம்?
  பாடியவர் – கஸ்தூரி
  பாடல் – நாட்டுப்புறப் பாட்டு
  இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
  பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=Xqf6s_bFU8A#t=3m9s

  சுமை தூக்கிச் செல்லும் பெண் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே நடக்கின்றாள். அப்படி அவள் பாடும் அடுத்த வரியைக் கேட்கும் போது வேறொரு பாடல் நினைவுக்கு வந்தது.

  கார வீட்டுத் திண்ணையிலே கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
  என்ன பொடி போட்டானோ இழுத்தரைக்க முடியலையே

  இப்போது புரிந்திருக்கும் எனக்கு நினைவுக்கு வந்த பாட்டு எது என்று. திருடா திருடா படத்தில் வந்த “ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல” பாடல்தான் அது.

  கார வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில
  மஞ்சள அரைக்கும் முன்ன மனச அரைச்சவளே
  பாடியவர் – சாகுல் அமீது
  பாடல் – வைரமுத்து
  இசை – ஏ.ஆர்.ரகுமான்
  பாடலின் சுட்டி – http://youtu.be/F-gNjRvJcuY

  ஒரு நாட்டுப்புறப் பாடலின் வரியை அப்படியே எடுத்து காட்சிக்குப் பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் கவிப்பேரசு வைரமுத்து.

  மஞ்சள் தமிழ்ப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு ஊரின் வளமையைக் காட்ட இஞ்சியும் மஞ்சளும் விளையும் மண் என்று புலவர்கள் தாங்கள் எழுதும் பாடல்களில் குறிப்பிடுவார்கள்.

  மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது. அதுவும் கொத்துக் கிழங்குகளாக இருக்கும். மஞ்சளில் பலவகைகள் இருந்தாலும் கிழங்கு மஞ்சளும் கஸ்தூரி மஞ்சளும் விரலிமஞ்சளும் தமிழர்களால் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

  கிழங்கு மஞ்சள் உருண்டையாக இருக்கும். முன்பெல்லாம் குளியலறைகளில் உளியால் கொத்தப்பட்ட வட்டவடிவமான சிறு கல் இருக்கும். அதில் காய்ந்த கிழங்கு மஞ்சளை உரசி பெண்கள் பூசிக் குளிப்பார்கள். இப்போதெல்லாம் மஞ்சள் பொடியாகவே வந்து விடுவதால் யாரும் மஞ்சளை உரசிப் பூசுவதில்லை. கஸ்தூரி மஞ்சளும் இதற்குத்தான் பயன்படுகிறது. கிழங்கு மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சள் நறுமணம் நிறைந்தது.

  சரி. நாம் உணவில் கலக்கும் மஞ்சள் எது? அது விரலிமஞ்சள். விரல் விரலாக நீளமாக இருக்கும். இந்த மஞ்சள் கொத்தைத்தான் பொங்கலன்று வழிபாட்டில் வைப்பார்கள். இந்த மஞ்சளைத் துண்டு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த பின் இடித்து வைத்துக் கொண்டால் அந்தப் பொடி உணவு வகைகளில் சேர்க்கப் பயன்படும்.

  மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி. வயிற்றுக்குள் சென்று கிருமிகளைக் கொல்வது மட்டுமல்லாமல் உணவுப் பொருள் கெட்டுப் போகாமலும் இருக்கப் பயன்படுகிறது. அசைவச் சமையலில் மஞ்சளைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். பட்டிக்காடுகளில் சமைக்கும் முன்னர் கோழியையும் மீனையும் மஞ்சள் தேய்த்துக் கழுவுவார்கள். அதே போல ஆட்டுக்கறியில் உப்புக்கண்டம் செய்யும் போது மஞ்சள் சேர்க்கப்படும்.

  மஞ்சள் புகை நுரையீரலுக்கும் சளிக்கும் நல்லதென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். காய்ந்த விரலிமஞ்சளை லேசாக விளக்கின் சுடரில் காட்டி முகர்ந்தால் சளித்தொல்லை அண்டாது.

  ஆரத்தி எடுக்கின்றார்கள் அல்லவா, அது ஏன் சிகப்பாக இருக்கிறது? சுண்ணாம்புக் கரைசலில் சிறிது மஞ்சளைக் கரைத்து ஆரத்தி எடுப்பார்கள். இந்த ஆரத்திக் கரைசலை வருகின்றவர்கள் நெற்றியில் பொட்டாக வைத்து தட்டில் மிச்சமிருக்கும் கரைசலை வாசலின் இரண்டு பக்கத்திலும் கொட்டி விடுவார்கள். இந்தக் கரைசல் சிறந்த கிருமிநாசனி. இதையெல்லாம் மருத்துவத்தில் தனிப்படிப்பாக படிக்காமல் வாழ்க்கை முறையிலேயே செய்திருக்கிறோம். இன்றைக்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து விடுகிறார்கள். காரணத்தை விட்டுவிட்டு காரியத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

  குங்குமம் செய்யும் மூலப்பொருளும் மஞ்சள் பொடியே. அதைப் பெண்கள் நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்வதாலும் ஆண்கள் பூசிக் கொள்வதாலும் என்ன பயன் உண்டாகும் என்று இனியும் விளக்க வேண்டியதில்லை.

  இன்றைக்கு மஞ்சள் குங்குமங்கள் குறைந்து வேதியியல் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் குங்குமத்தை நெற்றியில் சூட்டிக் கொள்வதால் பலருக்கு நெற்றியில் அந்த இடம் கருத்துப் போகிறது. நல்ல மஞ்சள் குங்குமத்தை கையில் தேய்த்தால் கையில் மஞ்சள் நிறம் பரவும். மஞ்சளின் நறுமணமும் கிளம்பும்.

  இப்போது சொல்லுங்கள். மஞ்சள் மங்கலப் பொருள்தானே?!

  அன்புடன்,
  ஜிரா

  122/365

   
  • kamala chandramani 1:20 pm on April 2, 2013 Permalink | Reply

   அருணகிரிநாதர் பல திருப்புகழ்ப் பாடல்களிலும் ‘மஞ்சள் மினுக்கிகள்’ என்பார்.அந்தக்காலத்து அழகு சாதனம் மஞ்சள். இப்போது கண்ட க்ரீம்களையும் தடவி முகத்தைப் பாழடித்துக்கொள்கிறார்கள்.அருமையான பதிவு

  • Saba 3:11 pm on April 2, 2013 Permalink | Reply

   அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

   மஞ்சளில் உள்ள alkaloid கேர்கியூமின் (curcumin) என அழைக்கப்படும். வைத்திய துறையில் Alzheimer நோய்க்கு தற்போது முன்னோடி மருந்து.
   Research shows that the Alzheimer disease is very low in Subcontinent and is due to curcumin in curries. American president late Ronald Reagan would have been in right mind if he and if he would have changed the diet to curries. Many curcumin tablets are available nowadays which are extracted from our humble மஞ்சள்.

   சில சுட்டிகள்:
   (http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1702408/)

   (http://curcumin-turmeric.net/)

  • amas32 7:22 pm on April 2, 2013 Permalink | Reply

   மஞ்சளுக்கான காப்பீட்டு உரிமையை அமெரிக்கா பெற்றுக்கொள்ள முயற்சி எடுத்துக் கொண்டு வருவதைப் பற்றி நான் கொஞ்ச நாட்கள் முன்னாடி இணையத்தில் படித்தேன். இந்தியா முழித்துக் கொண்டு ஆவன செய்திருக்கும் என்று நம்புவோமாக!

   மஞ்சளுக்கு இன்னொரு மகிமையும் உண்டு. வேண்டாத ரோமங்களை உதிர்க்க இதை பயன்படுத்திப் பலன் பெறலாம். அதனால் தான் அந்த காலத்தில் பெண்கள் முகத்தில் மஞ்சள் தேய்த்துக் குளித்தனர், to get rid of unwanted facial hair!

   Very nice post 🙂

   amas32

   • Niranjan 8:09 pm on April 2, 2013 Permalink | Reply

    அருமையான பதிவு. Super Gira 🙂 🙂

 • mokrish 2:56 pm on January 6, 2013 Permalink | Reply
  Tags: அறிவியல்   

  விஞ்ஞானத்தை வளர்க்க … 

  இலக்கியம் இலக்கணம் எல்லாம் சரி. தமிழ்த் திரைப் பாடல்களில் அறிவியல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதா? தொழில் நுட்பம், இயற்பியல், புவியியல், பறவைகள் பற்றி பயிர்கள் பற்றி ? அல்லது

  கூந்தல் கருப்பு ஆஹா
  குங்குமம் சிவப்பு ஆஹா

  போன்ற அரிய உண்மைகளை மட்டும் சொல்லிப்போனதா? கலைவாணர் தான் முன்னோடி. அவர் ஒரு பாடலில்

  விஞ்ஞானத்தை வளர்க்க போரேன்டி
  மேனாட்டாரை விருந்துக்கழைச்ச்சி காட்டப்போரேன்டி

  என்று ஆரம்பித்து அணுசக்தியால ஆள கொல்லாம ஆயுள் விருத்தி பண்ணப்போவதையும், புஞ்சை நிலத்தில் பருத்தி செடியில் புடவை ரவிக்கை காய்க்கபோவதையும் சொல்கிறார். அதே பாடலில் அவர் மனைவி வீட்டுக்கு வேண்டிய விஞ்ஞானமாக சிலவற்றை கேட்கிறார். நெல்லு குத்த நீரெரைக்க மாவரைக்க மெஷினும், குழாயும் குளிர் மெஷினும் கட்டிலுக்கு மேல Fan னும் காலம் காட்டும் கருவியும் கேட்கிறார். வழக்கம் போல கணவர் கேட்டதெல்லாம் இன்னும் நடக்கவில்லை. மனைவியின் கனவுகள் இன்றைய வாழ்வில் நிஜங்கள். வழக்கம் போல!

  அப்புறம் கண்ணதாசன். அவர் எதை பாடவில்லை? ஓதிய மரங்கள் பருத்திருந்தாலும் உத்திரமாகாது என்றும் உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்றும் அவ்வப்போது Botany விஷயங்கள் சொல்வார்.

  குயில் இட்ட முட்டை என்று காக்கைக்கு தெரியும்
  அது கூவும்போதும் தாவும்போதும் யாருக்கும் புரியும்

  என்று பறவைகள் பற்றி சொல்வார்.

  காலையில் மலரும் தாமரைப்பூ
  அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
  இரவில் மலரும் அல்லிப்பூ

  பூக்கள் பூக்கும் தருணம் சொல்லும் பாடல் பிரபலம். (புலமைப்பித்தன் சொன்ன ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை என்பது பூ இல்லை!).

  அன்னம் பாலையும் நீரையும் பிரித்தது பற்றியும் இசையை அருந்தும் சாதக பறவை பற்றியும் மழை வருவது மயிலுக்குத்தெரியும் என்றும் மற்ற கவிஞர்களும் எழுதியதுண்டு . தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்றும் நிலவில் பொருள்கள் எடை இழக்கும் நீரிலும் பொருள் எடை இழக்கும் என்றும் வாலியும் வைரமுத்துவும் physics சொல்லியிருக்கிறார்கள். நதிகளில்லாத அரபுதேசம் , நிலவு இல்லாத புதன் கிரகம் என்னும் வரிகளை காதலுக்கு சொல்லி மகிழ்ந்த பாடலும் உண்டு. ஆணின் தவிப்பு பெண்ணின் தவிப்பு என்று வைரமுத்து வேறுபாடுகள் சொல்லும் வரிகள் ரசம்.

  இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிரிருக்கும் என்று வைரமுத்து சொல்கிறார். மின்சார கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடு கட்டும் என்கிறார் நா முத்துக்குமார். உண்மையா? தெரியவில்லை. தங்கத்தை தட்டி தட்டி சிற்பிகள் சிலை செய்யும்போது ஏன் சாறு பிழிந்தார்கள் என்றும் தெரியவில்லை. அது ஒரு தனி ஆராய்ச்சி

  எல்லாவற்றிற்கும் சிகரம் வழக்கம் போல் கண்ணதாசன் வரிகள் தான்.

  நிலவே உன்னை அறிவேன் அங்கே மேலே ஓர் நாள் வருவேன்
  மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனி போல் நானும் கரைவேன்

  நிலா நிலா ஓடி வா என்று சொல்லாமல் நான் அங்கே வருவேன் என்று சொன்ன பாடல். வெண்ணிற ஆடை படத்தில். இது வெளியான ஆண்டு 1965. நிலவில் மனிதன் இறங்கியது 1969ல். சந்திரனை முதலில் தொட்டது கண்ணதாசன் தான்

  மோகனகிருஷ்ணன்

  036/365

   
  • amas32 (@amas32) 3:13 pm on January 13, 2013 Permalink | Reply

   //வழக்கம் போல கணவர் கேட்டதெல்லாம் இன்னும் நடக்கவில்லை. மனைவியின் கனவுகள் இன்றைய வாழ்வில் நிஜங்கள். வழக்கம் போல!// நடக்கும் சாத்தியக் கூரு இருப்பதை மனைவி கேட்கிறாள், இது ஒரு தப்பா? Female gender is more practical 🙂

   //நிலா நிலா ஓடி வா என்று சொல்லாமல் நான் அங்கே வருவேன் என்று சொன்ன பாடல். வெண்ணிற ஆடை படத்தில். இது வெளியான ஆண்டு 1965. நிலவில் மனிதன் இறங்கியது 1969ல். சந்திரனை முதலில் தொட்டது கண்ணதாசன் தான்// ஆஹா! ஒரு ஆண் மகனின் மனோரதமும் பூர்த்தியாகிவிட்டதே! :-))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel