Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:21 pm on November 5, 2013 Permalink | Reply  

  மீன்கொடி தேரில் 

  நிலவின் நிறம் பதிவுக்காக வாலி 1000 புத்தகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது பாடல் வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ‘சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ?’ என்ற வரிகளில் இடையை மீன்கொடி என்கிறாரே என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இவர்தானே மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே’ என்றார்?

  நண்பர் @nchokkan னிடம் கேட்டேன். அவர் அது மீன் இல்லை மின்கொடி தான்., மின்கொடி மருங்குல் சுருங்கமேல் என்று ஆழ்வாரும் துதிக்கின்ற மின்கொடி என்று அபிராமி பட்டரும் சொன்ன மின்னல் கொடி தான் என்று விளக்கம் தந்தார். கே ஜே யேசுதாஸ் மின்கொடி என்றுதான் பாடுகிறார்.

  ஆனால் மன்மதனுக்கு மீன்கொடி தானே அப்படி ஒரு கோணம் இருக்குமோ பார்க்கலாம் என்று தேடினேன் மன்மதன் எப்படி வருகிறான்? வெண்நிலவைக் குடைபிடித்து வீசுதென்றல் தேர் ஏறி மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய வரும் மன்மதனுக்கு யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை எனும் படைகள் இல்லை என்று தண்டியலங்காரம்

  யானை இரதம் பரியாள் இவையில்லை

  தானும் அனங்கன் தனுக்கரும்பு –

  என்ற பாடலில்.சொல்கிறது. திரிகூட ராசப்பக் கவிராயர் கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள் என்ற வரியில் பெண்களே மன்மத சேனை என்கிறார்.

  மன்மதன் சேனை? என்னை போல் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய வேலாலே விழிகள் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=iPDQDMh1yAE

  வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

  சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

  வேல் போன்ற விழிகள் நூல் போன்ற இடை. ஆனால் இடையில் மன்மதன் சேனைகள் என்கிறார். தொடர்ந்து

  கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும்

  சிட்டு கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்

  என்று மின்னலை கண்களில் வைக்கிறார். மீன் போல் கண்கள். மின்னல் போல இடை.என்பதை தலைகீழாக மாற்றி கண்களில் மின்னல் இடையில் மீன்கொடியோடு வரும் மன்மதன் சேனை என்கிறார்

  சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ – இது அச்சுப்பிழைதான் ஆனால் அர்த்தமுள்ள அச்சுப்பிழையோ? கண்களில் இருப்பது பாண்டியனின் மீன்கொடி. இடையில் மன்மதனின் மீன்கொடி. சரிதானே?

  மோகனகிருஷ்ணன்

  338/365

   
  • rajinirams 11:10 pm on November 6, 2013 Permalink | Reply

   அருமை.தெய்வத்திருமணங்கள்-வானமும் பூமியும் ஆலிங்கனம்-கண்ணதாசன் பாடலில் “மன்னவன் தன்னையே மறக்கவொன்னாததால் பொன்னுடல் கொதித்தது-பூவெல்லாம் துடித்தது-“மின்னிடை”மெலிந்தது-மேகலை சுழன்றது என்ற வரிகள் வரும்.ஒரு பெண்ணை பார்த்து பாடலில் “கொடி மின்னல்”போல் ஒரு பார்வை என்ற வரிகளும் நினைவு வந்தது. நன்றி.

 • mokrish 10:05 pm on September 28, 2013 Permalink | Reply  

  நோய் விட்டுப்போகும் 

  சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் @amas32 ‘நோயற்றே வாழ்வே செலவற்ற செல்வம்’ என்று புது மொழி சொன்னார். தொடர்ந்து இன்றைய மருத்துவம், செலவுகள் என்று ஒரு பெரிய விவாதம்.

  நோயற்ற வாழ்வு பற்றி மாற்று கருத்து இருக்க முடியாது. Health is wealth. நோயற்ற உடல் என்பது பதினாறு செல்வங்களில் ஒன்று என்று அபிராமி பட்டர் ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் சொல்கிறார்

  கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,

  கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,

  சலியாத மனமும்

  என்ற வரிகளில் குறையாத வயதும் குன்றாத இளமையும் கழுபிணி இல்லாத உடலும் என்று நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு பற்றி மூன்று செல்வங்கள். வாலி பேசும் தெய்வம் படத்தில் ஒரு பாடலில் (இசை கே வி மகாதேவன் பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி சூலமங்கலம் ராஜலக்ஷ்மி) இந்த செல்வங்களை rearrange செய்கிறார்

  http://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es

  நூறாண்டு காலம் வாழ்க

  நோய் நொடி இல்லாமல் வளர்க

  ஊராண்ட மன்னர் புகழ் போலே

  உலகாண்ட புலவர் தமிழ் போலே

  குறையாது வளரும் பிறையாக

  குவியாத குமுத மலராக

  குன்றாத நவநிதியாக

  துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

  நீ வாழ்க.. நீ வாழ்க..

  நீண்ட ஆயுள் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்றால் முதலில் நோய் இல்லாத உடல் வேண்டும். கலையாத கல்வியும், குன்றாத நவநிதியும் என்ற மற்ற செல்வங்கள் எல்லாம் அடுத்த priority தான்

  அனைவரும் அரை நிஜார் அடிடாஸ் சகிதம் நடந்து, ஓடி நல்ல ஆரோக்கியம் தேடிக்கொண்டே இருக்கிறோம். வள்ளுவர் மருந்து என்று ஒரு அதிகாரம் வைத்து முக்கியமாக உணவைப் பற்றியே பேசுகிறார். நல்ல உணவு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி என்று நினைக்கும் போது சுலபம்தான் ஆனால் நடைமுறையில்?

  நோய் வராமல் தடுப்பதுதான் நலம். வந்து விட்டால் அலோபதி, ஹோமியோபதி நேச்சுரோபதி என்று அலைந்து  இவை எதுவும் கை கொடுக்கவில்லையென்றால் வெங்கடாஜலபதி தான் துணை !

  மோகனகிருஷ்ணன்

  301/365

   
  • Suri 3:51 am on September 29, 2013 Permalink | Reply

   Normandu Kalamazoo Valhalla was written by vali not by kannadasan

   • என். சொக்கன் 1:21 pm on September 29, 2013 Permalink | Reply

    Regret the error. It is corrected now

   • rajinirams 2:35 pm on September 29, 2013 Permalink | Reply

    Uma Chelvan-மிகவும் நெகிழ வைத்த பின்னுட்டம்.

    வாழ்க்கையில் முதலிலேயே “நடையாய் நடந்து விட்டால்”பிறகு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்காது.”செரிக்காத உணவும் எரிக்காத சக்தியும் தான் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள்.வெறும் வயிற்றில் 750 மி.லி.தண்ணீர் அருந்திவிட்டு அரை மணி நேரம் அதிவேக நடைப்பயிற்சி நம்மை பாதுகாக்கும் என்று புத்தகத்தில் படித்திருக்கிறேன். மேலும் வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது கலைவாணர் வாக்கு. இந்த பாடல் மட்டுமல்ல பல வாழ்த்து பாடல்கள் வாலி எழுதியவையே-பிறந்த நாள் இன்று பிறந்த நாள்,பாவலன் பாடிய புதுமைப்பெண்,என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து,நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள். நன்றி.

  • Uma Chelvan 1:16 pm on September 29, 2013 Permalink | Reply

   நோயற்ற வாழ்வே குறைவில்லாத செல்வம். பலவகையான நோய் உள்ளவர்களை தினமும் பார்பவர்களுக்கு அதன் முழு அர்த்தமும் நன்றாக விளங்கும். அப்பொழுது நான் மதுரை பெரிய hospitalலில் house surgency ட்ரைனிங்லில் இருந்த நேரம். Cancer ward ல் போஸ்டிங். ஒரு 18 வயது இளைஞன் blood cancer என்று அட்மிட் ஆகி இருந்தான். திருநெல்வேலி பக்கம் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன். ஒரே பையன், அப்பா கிடையாது.மிகவும் வறிய குடும்பம். அவனுக்கு ஒரு நாள் blood குடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். நானும் பகல் முழுவதும் முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை. இரவு 10 மணி போல் வீட்டிற்கு கிளம்பி கொண்ட்ருந்த என் chief முன் போய் நின்று எவ்வளவு முயன்றும் என்னால் blood collect பண்ண முடியவில்லை. காலையில் மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு கிடக்க வில்லையெனில், நானே blood கொடுக்கிறேன் sir, என்றேன். சிறிது நேரம் ஏதும் பேசாமல் என் முகத்தயே பார்த்து கொண்டு இருந்தவர் பின் மௌனமாக தலையை மட்டும் ஆட்டி, வேண்டாம்மா, இப்படி எத்தனை பேருக்கு கொடுப்பீங்க என்றார்.அவர் சொன்னதன் அர்த்தம் நன்றாக புரிந்தாலும், காலைக்குள் blood கிடக்கவில்லை என்றால் நான் blood கொடுப்பது என்று மனதுக்குள் முடிவு செய்து அவன்ரூம்க்கு போனேன். infection ஆக கூடாது என தனி ரூம்ளில் இருந்தான். அவனிடம் மிகவும் கஷ்டபட்டும் blood கிடைக்கவில்லை , காலையில் நான் வந்து உனக்கு blood தருகிறேன் என்றேன். அதை கேட்டதும் ” அக்கா”, என்ற ஒரு வார்த்தையுடன் கண்ணீர் விட்டு கதறி அழுதான். என்னாலும் அதருக்கு மேல் நிற்க முடியாமல் பேசாமல் ரூமை விட்டு வெளியே வந்தேன். 10 மணிக்கு மேல் ஆகி விட்டதால் mess லில் சாப்பாடு இல்லை. பசி, அலைச்சல் , வருத்தம் ……அடுத்தநாள் காலை, அவன் ரூமில் அவன் இல்லை. night duty நர்சிடம் , சிஸ்டர் எங்கே அந்த பையன் என்று கேட்டேன். அவன் இன்று காலை 3 மணிக்கு இறந்து விட்டான். நீங்க வர கொஞ்ச நேரம் முன்புதான் அவனை அவன் ஊருக்கு எடுத்து சென்றார்கள். என்றார். I was totally, totally devastated இது நடந்து 20 வருடங்களுக்கு மேல ஆகிறது. இன்றும் அவன் முகமும் அவனின் அக்கா என்ற கதறலும் பசுமையாக என் மனதில் . இவ்வளவு டிராமடிக் சீன் எல்லாம் US லில் கிடையாது. Patient comfort is very important here.. சாகும் பொழுது வலி இல்லாமல் சாக வேண்டும் என்று Heavy dose “Morphine” கொடுப்பார்கள் . அமைதியான முறையில்.எல்லாம் நடக்கும். நம் ஊரில் எப்படி என்று உங்களுக்கே தெரியும். My professional ethic’s prevents me to discuss further about our place.

  • amas32 4:10 pm on September 29, 2013 Permalink | Reply

   உமா செல்வன், உங்கள் பகிர்வு என் மனத்தை அதிர வைக்கிறது. என் இளம் வயதிலிருந்தே பலவித நோய்களுக்கும் ஆட்ப்பட்டிருக்கேன், அவதிப் படுபவர்களையும் பார்த்திருக்கிறேன். என்னை பொறுத்த வரை நோயில்லா வாழ்வே சொர்க்கம். நரகமும் சொர்க்கமும் வேறு எங்கோ இல்லை . நம் தினப்படி வாழ்வில் தான் உள்ளது.

   சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். வாழ்வில் மற்ற எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க முதலில் ஆரோக்கிய வாழ்வு அமைய வேண்டும்.

   amas32

 • mokrish 9:40 am on June 30, 2013 Permalink | Reply  

  அன்னமிட்ட கைகளுக்கு 

  நடிகர் சந்தானம் உரத்த குரலில் ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று டிவியில் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தார்.  முதலில் ஒரு involuntary சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைத்த  வரிகள்.

  இது சூப்பர் ஸ்டார் பிரபலப்படுத்திய ‘ஆண்டவன் கொடுக்க நினைத்ததை யாரும் தடுக்க முடியாது’ என்ற கருத்தின் இன்னொரு வடிவம். நாகூர் என்ற சொல் ஒரு clue போல் தோன்ற, அந்த நூல் பிடித்து சென்றால் திருக்குர்ஆன் வாசகம் பற்றி வாலி எனக்குள் MGR என்ற தொடரில் எழுதிய செய்தி ஒன்று கிடைத்தது

  ‘அவரவர்க்கான அரிசியில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது!’ என்கிறது திருக்குர்ஆன்.  நீ – வாயைத் திறந்து வைத்துக் கிடந்தாலும் உனக்கல்லாத உணவு உன் வாய்க்கு வாய்க்காது; நீ – வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும், உனக்கான அரிசியை ஆண்டவன் உன் வாயை வலியத் திறந்து ஊட்டி விடுவான். இந்த மறைவாசகத்தை நாம் மறுதலிப்பதற்கில்லை!’

  வாலி இதை ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற படத்தில் ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்ற பாடலில் (இசையமைத்து பாடியவர் எம்‌எஸ்‌வி)  http://www.youtube.com/watch?v=T6743o-yK7U

  அரிசியின் மேலே அவனவன் பேரை

  ஆண்டவன் எழுதி வைப்பான் – அதை

  அடுத்தவன் யாரும் கெடுப்பதற்கில்லை

  அவனவன் தின்று தீர்ப்பான்

  எவரெவருக்கு என்னென்ன தேவை

  இறைவன் கொடுக்கின்றான் – அதை

  அவசர மனிதன் ஆத்திரப்பட்டு

  அதற்குள் எடுக்கின்றான்

  என்று பதிவு செய்கிறார். படத்தில் MSV கைதிகளிடம் பேசுவது போல் காட்சி.  ‘உங்களுக்காக கவிஞர் வாலி ஒரு அற்புதமான பாடலை எழுதியிருக்கிறார்’ என்று பாராட்டிவிட்டு பாடுவார்.

  நல்ல வரிகள் தான். ஆனாலும் கொஞ்சம் நெருடல். ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? கோடிக்கணக்கானவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினி இருப்பது நமக்கு தெரியும். அவர்கள் பெயர் இருக்கும் உணவு  எங்கே ? அவர்கள் பெயர்கள் எல்லாம் விட்டுப்போக இது என்ன வாக்காளர் பட்டியலா?

  எல்லாருக்கும் உணவு கிடைக்கும்படி செய்துவிட்டு அதன் பிறகு அவரவர் பேர் எழுதிய அரிசியை க்யூவில் வந்து ஆதார் கார்ட் காட்டி வாங்க வைக்கலாம் . பல பேர் பட்டினி கிடைக்கும்போது இந்த வரிகள்  சரியா? அல்லது இதற்கு வேறு அர்த்தமா? மதங்களும் இறைவன் மொழியும் உணர்த்தும் பொருள் என்ன?

  • இவ்வுலகத்தில் எவ்வளவு மனிதர்கள் தோன்றினாலும் அவர்களுக்கான உணவு இறைவனிடத் திலிருந்து கிடைக்கும் என்று சிலர் இந்த திருக்குர்ஆன் வரியை  பகிர்ந்து உண்ணுதல் என்ற பொருளில் விளக்குவர்.

  • பைபிள் காட்சி ஒன்று – இயேசுவின் போதனைகள் நடக்கும் இடத்தில சுமார் 5000 பேர் கூடுகின்றனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து உணவை பகிர்ந்து  அதை மக்களுக்கு கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். சாப்பிட்டது போக மீதியும் இருந்தது. அதை பன்னிரண்டு கூடைகள் நிரப்பினர். (லூக் 9: 10-17)

  • சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்து அந்த அன்னம், தயிர் கலந்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதில் ஒரு பாகம், அருகிலுள்ள  குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?

  பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

  பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்

  அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்

  மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத

  வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்

  யாவருக்கும்

  என்ற அபிராமி பட்டர்  பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது

  வள்ளுவர் ஈகை பற்றி சொல்லும்போது பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என்று குறிப்பிடுகிறார்.பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

  மோகனகிருஷ்ணன்

  211/365

   
  • D sundarvel 10:01 am on June 30, 2013 Permalink | Reply

   Nice interpretation. Remembering “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் உயிர்கள் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”.

  • சிவா கிருஷ்ணமூர்த்தி 12:30 pm on June 30, 2013 Permalink | Reply

   //பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.//
   சரியாக வந்தடைந்துவிட்டீர்கள், அவ்வளவுதான் மெசேஜ்…

  • amas32 7:36 pm on June 30, 2013 Permalink | Reply

   As an off shoot of what you have written, ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன் கொண்டு போக முடியாது என்னும் வசனமும் என் நினைவுக்கு வந்தது 🙂 அதாவது என்று எழுதப்பட்டுள்ளதோ அது மாறப் போவதில்லை.

   ஆனால் நீங்கள் கூறியிருக்கும் இந்த வரிகளில் உள்ளப் பொருள் அருமை!
   //பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.//

   amas32

 • G.Ra ஜிரா 8:46 am on May 18, 2013 Permalink | Reply  

  பனிப் பானு 

  நிலவைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை வரும். குழந்தைக்கு தூக்கம் வரும். காதலர்களுக்கு ஏக்கம் வரும். ஏழைகளுக்குப் பசி வரும். கோழைகளுக்கு பயம் வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று வரும்.

  அந்த நிலவைப் பாடாத கவிஞன் இல்லை. பாடாவிட்டால் கவிஞன் இல்லை. இலக்கியச் சுவைகள் எத்தனை உண்டோ, அத்தனை விதமான சுவைகளையும் வெளிப்படுத்தும் கவிதைகளிலும் நிலவு இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை.

  அப்படியிருக்க திரைப்படக் கவிஞர்கள் மட்டுமென்ன நிலவோடு கோவித்துக்கொண்டவர்களா?

  அவன் மனைவியை இழந்தவன். நெஞ்சமெல்லாம் சோகம். அவனை விரும்புகிறாள் ஒருத்தி. அவள் காதலை மறுக்க வேண்டும். அதே நேரத்தில் சோகத்தையும் சொல்ல வேண்டும். இரண்டையும் ஒரே வரியில் சொல்ல கவியரசர் கண்ணதாசனுக்கு கைகொடுக்கிறது நிலவு. “நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை”.

  அதே கவியரசர். வேறொரு கதாநாயகன். திருமணமானவன். பிடிக்காத கல்யாணம். தொடாதே என்று சொல்லிவிட்டாள் மனைவி. அவனுடைய ஆத்திரத்தையும் ஆற்றாமையையும் ஒரே வரியில் சொல்ல வேண்டும். மறுபடியும் நிலா உதவுகிறது. “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே”.

  நல்லவர்கள் இருவர். தவறு செய்கிறார்கள். அவர்கள் செய்வது கடத்தல். கடலில் தோணி கட்டி தோணியில் பாட்டு கட்டி ஆடிப்பாடி வருகிறார்கள். அவர்கள் களிப்புக்கும் கும்மாளத்துக்கும் நிலவு உதவுகிறது. “நிலா அது வானத்து மேலே. பலானது ஓடத்து மேலே” என்று எழுதினார் இளையராஜா.

  குழந்தைகளுக்கும் கோவம் வரும். அந்தக் கோவத்தை மாற்றுவது எளிதான செயலா? கோவித்தது சேயாக இருந்தாலும் ஆடியும் பாடியும் சமாதானப்படுத்துவது தாயாகத்தான் இருக்கும். அப்படிச் சமாதான வரிகளைச் செதுக்க கவிஞர் வாலிக்குத் துணை வந்ததும் நிலாதான். “மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே” என்று எழுதினார்.

  தூக்கத்துக்குக் காரணமாகும் நிலவுதான் ஏக்கத்தும் காரணமாகிறது. காதலர்கள் பிரிந்தாலும் துன்பம். கூடினாலும் பிரியப் போவதை எண்ணித் துன்பம். அந்தத் துன்பம் அவனைத் தூங்கவிடவில்லை. அப்படியொரு பாட்டெழுத வேண்டும். ”நிலவு தூங்கும் நேரம். நினைவு தூங்கிடாது” என்று எழுதினார் வாலிபக் கவிஞர் வாலி.

  காதலர்கள் உள்ளத்தில் எப்போதும் ஒரு பெருமிதம் இருக்கும். இந்தக் காதலனுக்கும் அப்படிதான். அவன் காதலி பேரழகி. அப்படியொரு பிரபஞ்ச அழகி அவனுக்குக் காதலி என்ற பெருமிதத்தைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவோடு கை கோர்த்தவர் வைரமுத்து. “சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்டிராங்கா? அடி ஆம்ஸ்டிராங்கா? சத்தியமாய் தொட்டது யார்? நான்தானே” என்று எழுதினார்.

  அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. வாழ்க்கை எப்படியெல்லாம் ஏமாற்றியது என்ற வெறுப்பைப் பாட்டில் சொல்ல வேண்டும். இந்த முறை நிலவை துணைக்கழைத்தவர் புலவர் புலமைப்பித்தன். “சந்திரனப் பாத்தா சூரியனாத் தெரிகிறது. செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது” என்று எழுதினார்.

  கும்மாளக் காதலர்களுக்குத் திருமணமும் ஆகிவிட்டது. குதித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கால்கட்டு போட்டாயிற்று. இன்று முதல் இரவு. அந்த அளவுக்கு மீறிய உற்சாகத்தை மகிழ்ச்சியின் உச்சத்தை வரிகளில் கொண்டு வர முடியுமா? நிலவிருக்க பயமேன். “நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை” என்று வைரவரிகளை வைரமுத்து கொடுத்தார்.

  இப்படியாக சோகம், ஏக்கம், ஆதங்கம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், உல்லாசம், ஆத்திரம், தாலாட்டு என்று எந்த வகை உணர்ச்சியையும் கவிதையில் வடிக்க உதவுவது நிலவு.

  என்ன? பக்திச் சுவை விட்டுப் போயிற்றா? யார் சொன்னார்கள்? இறையருளைப் பெற்றதும் சுந்தரரே “பித்தா பிறைசூடி” என்றுதான் பாடத் தொடங்கினார். சின்னஞ்சிறு குழந்தையாய் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டு பாடிய பொழுது “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி” என்றுதான் பாடினார்.”

  ஓ! திரைப்படப் பாடலாக இருந்தால்தான் ஒத்துக் கொள்வீர்களா? சரி. அதற்கும் பாடல்கள் பல உண்டு. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். ஆதிபராசக்தி திரைப்படத்தில் அபிராமி பட்டர் எப்படிப் பாடுகிறார்? ”சொல்லடி அபிராமி நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே” என்று கண்ணதாசன் எழுதிக் கொடுத்தபடிதானே பாடினார்?

  இந்தப் பாடல்கள் மட்டுந்தானா? இல்லை. இன்னும் எத்தனையெத்தனையோ பாடல்கள். “வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா” என்று பாட்டு முழுக்க எழுதினார் கவியரசர் கண்ணதாசன்.

  இந்த நிலவுக்கு எத்தனையெத்தனை பெயர்கள். மதியென்பார். சந்திரனென்பார். பிறையென்பார். வெண்ணிலா என்பார். முழுமதி, நிறைமதி, வளர்மதி, வெண்மதி என்று எத்தனையெத்தனையோ பெயர்கள்.

  ஈசனார் சூடிய பிறைச் சந்திரனை ஞானக்கண்ணால் பார்க்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பிறைச் சந்திரனை என்ன சொல்லிப் பாடுவது? உடனே ஒரு திருப்புகழ் பிறக்கிறது.

  பாதிமதி நதி போது மணிச்சடை நாதர் அருளிய குமரேசா
  பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா

  பிறைச்சந்திரன் பாதியாகத்தானே இருக்கிறது. அதனால் பாதிமதி என்றே பெயர் சூட்டிவிட்டார் அருணகிரிநாதர்.

  அதே அருணகிரி கந்தரந்தாதியில் நிலவுக்கு இன்னொரு பெயரைச் சொன்னார். அந்தப் பெயரை அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் சொன்னதில்லை.

  சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்
  சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்
  சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்
  சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே

  இந்தப் பாடலில் நிலவுக்கு அவர் சொல்லியிருக்கும் பெயர் பனிப்பானு. பானு என்றால் சூரியனைக் குறிக்கும். பனி குளுமையைக் குறிக்கும். நிலவு என்பது குளுமையான சூரியனாம். அதனால்தான் பனிப்பானு என்று புதுப்பெயர் சூட்டியிருக்கிறார் அருணகிரி. அழகான பெயரல்லவா?

  நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா! மலை மேலே ஏறி வா! மல்லிகைப்பூ கொண்டு வா!

  பதிவில் இடம் பெற்ற பாடலின் சுட்டிகள்.

  பாதிமதிநதி (யாமிருக்க பயமேன்) – http://youtu.be/FDMcv6CjglI
  நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு) – http://youtu.be/Z8MYbZVETDU
  நிலவைப் பார்த்து வானம் (சவாலே சமாளி) – http://youtu.be/FSdL74sUCNE
  நிலா அது வானத்து மேலே (நாயகன்) – http://youtu.be/ldPFymzsVd8
  நிலவு தூங்கும் நேரம் (குங்குமச் சிமிழ்) – http://youtu.be/0k6lUIhIqPo
  சந்திரனைத் தொட்டது யார் (ரட்சகன்) – http://youtu.be/ZIQXtyJQMIE
  சந்திரனப் பாத்தா (பிரம்மச்சாரிகள்) – http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3278
  மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) – http://youtu.be/UmCcv-4uv7k
  நிலவைக் கொண்டு வா (வாலி) – http://youtu.be/QOcrng-CkmE
  தோடுடைய செவியன் (ஞானக்குழந்தை) – http://youtu.be/-OT2RCgAvVA
  சொல்லடி அபிராமி (ஆதிபராசக்தி) – http://youtu.be/fCltNDw_oFA
  வான் நிலா நிலா அல்ல (பட்டினப்பிரவேசம்) – http://youtu.be/bV8V2oowwwI

  அன்புடன்,
  ஜிரா

  168/365

   
  • rajnirams 11:45 am on May 18, 2013 Permalink | Reply

   பனிப்பானு-புதுமையான தலைப்பில் அருமையான பதிவு.தமிழ் கவிஞர்கள் நிலவை வைத்துக்கொண்டு ஏராளமான பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.அதுவும் புலமைப்பித்தன் “ஆயிரம் நிலவிற்கு” ஒப்பாக பெண்ணை பாடியது தான் உச்சம்.வாலியின் நிலவு ஒரு பெண்ணாகி,நிலாவே வா,கண்ணதாசனின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,இரவும் நிலவும் வளரட்டுமே இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.நன்றி.

   • GiRa ஜிரா 8:29 am on May 21, 2013 Permalink | Reply

    ஆயிரம் நிலவே வான்னு அவர் எழுதிட்டாரேன்னு இன்னும் லட்சம் நிலவுகள்னு யாரும் எழுதலையா? 🙂

  • Arun Rajendran 12:38 pm on May 18, 2013 Permalink | Reply

   ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது -> love at first sight
   கல்யாணத் தேனிலா காய்ச்சாதப் பால் நிலா -> தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் எண்ணித் திளைத்தல்
   வானிலே தேனிலா ஆடுதே பாடுதே -> தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்தல்
   அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் -> பரிசில்கள் பரிமாறுதல்
   அமுதைப் பொழியும் நிலவே -> பிரிவு; வருத்தம் காதல் கலந்து வெளிப்பட பாடல்
   நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா -> தலைவி ஆற்றியிருத்தல்; காதலாகி கசிந்துருகி..
   நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -> மீண்ட தலைவன் தலைவியின் கோபம் தனித்தல்
   மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் -> காதல் கனிந்து மணமுடித்தல்
   நிலா காயுது நேரம் நல்ல நேரம் -> விரகம்; கூடி களித்தல்
   வாராயோ வெண்ணிலாவே நீ கேளாயோ -> தலைவன் தலைவி ஊடல்;வாழ்வியல்
   நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் -> and their love story continues

   இவண்,
   அருண்

   • GiRa ஜிரா 8:30 am on May 21, 2013 Permalink | Reply

    அடா அடா அடா… என்னவொரு பட்டியல்…. நிலாவுல கட்டில் போட்டேன்னு என்னச் சொன்னீங்களே… நீங்க வீடே கட்டியிருக்கீங்களே 🙂

  • amas32 7:04 pm on May 19, 2013 Permalink | Reply

   திரை இசைப் பாடல்களில் வரும் நிலவுப் பாடல்கள் மட்டுமே, கணக்கிட்டால் ஓராயிரம் தேறும் போல இருக்கிறதே! ஜோதிட சாஸ்திரப் படி கூட சந்திரன் மனத்தையாளும் ஒரு கிரகம். சந்திரனின் கிரக நிலை ஒருவனுக்குச் சரியாக இல்லாவிட்டால் அவன் பித்துப் பிடித்து அலைவான். காதல் வசப்படுவதும் அதனின் mild form தானே? 🙂

   Lovely post Gira 🙂

   amas32

   • GiRa ஜிரா 8:31 am on May 21, 2013 Permalink | Reply

    அப்போ இந்தக் காதல் கீதல் எல்லாத்துக்கும் சந்திரந்தான் காரணமா? இத மொதல்லயே சொல்லிருந்தா நாட்டுல சந்திரனுக்கு பெரிய பெரிய கோயில்கள் கெட்டியிருப்பாங்களே காதலர்கள். 🙂

  • Saba-Thambi 6:21 pm on May 20, 2013 Permalink | Reply

   பனிப்பானு , இன்று புதிதாக படித்த சொல்!
   நன்றி.

   • GiRa ஜிரா 8:32 am on May 21, 2013 Permalink | Reply

    பனிப்பானு – அருணகிரி வைத்த பெயர். ஓசையை மொழியாக்கி அதிலும் பொருளாக்கி அந்தப் பொருளும் அருளாக வைத்த பெருமான். அருணகிரிப் பெருமான்.

 • என். சொக்கன் 12:12 pm on April 20, 2013 Permalink | Reply  

  பதினாறும் பெருகப் பெறுக! 

  • படம்: நினைத்ததை முடிப்பவன்
  • பாடல்: பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
  • எழுதியவர்: புலமைப்பித்தன்
  • இசை: எம். எஸ். விஸ்வநாதன்
  • பாடியவர்: டி. எம். சௌந்தர்ராஜன்
  • Link: http://www.youtube.com/watch?v=T_6j9hdwKu8

  ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ,

  அதைப் பார்க்கின்ற என் உள்ளம் தாயாக!

  மிகப் பிரபலமான திருமண வாழ்த்து இது, ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!’

  அதென்ன பதினாறு? நிச்சயம் பதினாறு குழந்தைகளைப் பெறுவதாக இருக்கமுடியாது, பதினாறு வகைச் செல்வங்களை அடைதல் என்பதுதான் சரியான விளக்கம் என்று எல்லாருக்கும் தெரியும்.

  ஆனால், அந்தப் பதினாறு செல்வங்கள் எவை என்பது தெரியுமா? அப்படியே தெரிந்தாலும், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?

  பிரச்னையில்லை, அபிராமி பட்டர் எழுதிய ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் அந்தப் பதினாறு செல்வங்களும் ஒரே பாடலில் தரப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்துகொண்டால், அடுத்தமுறை இப்படி வாழ்த்தும்போது அர்த்தம் புரிந்து சொல்லலாம்:

  கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,

  கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,

  சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,

  தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,

  தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்

  துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,

  அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,

  அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!

  அபிராமி அன்னையே, அலைகடலில் உறங்கும் மாயன் திருமாலின் தங்கையே, பழமை நிறைந்த திருக்கடவூரின் வாழ்வே, அமுத ஈசன் உன்னை விட்டு விலகாமல் எப்போதும் ஒருபக்கம் பொருந்தியிருக்கிறவளே,

  1. கலையாத கல்வி
  2. நீண்ட ஆயுள்
  3. வஞ்சகம் இல்லாத நட்பு, நண்பர்கள்
  4. நிறைந்த செல்வம்
  5. என்றும் இளமை
  6. நோயற்ற உடல்
  7. சலிப்பற்ற மனம்
  8. அன்பு நீங்காத மனைவி / கணவன்
  9. குழந்தைப் பேறு
  10. குறையாத புகழ்
  11. சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை
  12. பிறருக்குக் கொடுக்கும் எண்ணம், அப்படிக் கொடுப்பதற்குத் தடைகள் இல்லாத சூழ்நிலை
  13. நிலைத்த செல்வம்
  14. நேர்மையாக ஆட்சி செய்யும் அரசன் (தான் நேர்மையாக வாழ விரும்பும் உள்ளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
  15. துன்பம் இல்லாத வாழ்க்கை
  16. உன்மேல் எப்போதும் அன்பு

  இந்தப் பதினாறு செல்வங்களையும் எனக்குத் தருவாய், அதோடு, உன்னுடைய பக்தர்களுடன் என்றென்றும் கலந்து பழகி மகிழும் வரத்தையும் அருள்வாய்!

  ***

  என். சொக்கன் …

  20 04 2013

  140/365

   
  • Adaimazai Group 12:43 pm on April 20, 2013 Permalink | Reply

   மிகத் தெளிவான விளக்கம்…
   தங்களின் அனைத்து தொகுப்புகளும் மிக அருமை.
   பாடல்களை பற்றி எழுதும் போது அதன் ராகத்தையும் குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்…

   சொக்கன், மோகன கிருஷ்ணன், ஜிரா மற்றும் எல்லா ஆசிரியர்களுக்கும் எங்கள் அடைமழை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்….

   • என். சொக்கன் 1:17 pm on April 20, 2013 Permalink | Reply

    நன்றி 🙂

    எனக்கு ராகங்கள் தெரியாது, அதுபற்றித் தெரிந்தவர்கள் விவரம் சொன்னால் உரிய இடத்தில் சேர்த்துவிடுகிறேன்.

  • Ananth 2:44 pm on April 20, 2013 Permalink | Reply

   பாடலில் ‘கழுபணி’ என்று உள்ளதே. அது ‘கழுபிணி’ இல்லை??

   • என். சொக்கன் 2:51 pm on April 20, 2013 Permalink | Reply

    அது தட்டச்சுப்பிழை, மன்னிக்கவும், சரி செய்துவிட்டேன், சுட்டிக்காட்டியதற்கு நன்றி

  • Ananth 2:56 pm on April 20, 2013 Permalink | Reply

   எனக்கு அந்த பாடல் தெரியும் ஆனால் அவை தான் 16 செல்வங்கள் என்று தெரியாது. பதிவுக்கு நன்றி 🙂

  • rajinirams 11:39 am on April 21, 2013 Permalink | Reply

   அருமையான விளக்கம்.நன்றி.

  • amas32 8:04 pm on April 21, 2013 Permalink | Reply

   /அதைப் பார்க்கின்ற என் உள்ளம் தாயாக! / என்ன அருமையான ஒரு வரி. தாய்மையின் சிறப்பை அந்த ஒரு வரியில் சொல்லிவிடுகிறார் பாடலாசிரியர். அனைத்து வரங்களையும் பெற்று தன் சேய் மகிழவேண்டும் என்பதே எல்லா தாய்மார்களின் ஒரே பிரார்த்தனை. பதினாறு செல்வங்களையும் பெற்று பெறு வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்ல உள்ளம் ஒரு தாய்க்கு ஈடானது என்று ஒரே வரியில் உணர்த்திவிடுகிறார்.

   amas32

  • GiRa ஜிரா 1:48 pm on April 22, 2013 Permalink | Reply

   அருமை. அருமை. பத்திப் பதிவுக்குள்ளும் காலடி எடுத்து வைத்த உங்களை வரவேற்கிறேன்.

   கலையாத கல்வியும் ஒருவிதத்தில் சினிமா பாடல்தான். ஆம். திருமலை தென்குமரி படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி நடித்திருப்பார்.

 • என். சொக்கன் 11:58 am on January 28, 2013 Permalink | Reply  

  இனிப்பு! 

  • படம்: ப்ரியா
  • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
  • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

  என் ஜோடிக் கிளியே,

  கன்னல் தமிழே,

  தேனில் ஆடும் திராட்சை நீயே!

  பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

  ‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

  அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

  அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

  திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

  அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

  இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

  வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

  ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

  ***

  என். சொக்கன் …

  28 01 2013

  058/365

  (பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )

   
  • GiRa ஜிரா 12:52 pm on January 28, 2013 Permalink | Reply

   அட்டகாசம்.

   கம்பரும் கன்னல் பத்திப் பேசுறாரு.

   கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் என்று மன்மதன் கரும்பு வில் வெச்சிருக்கறதப் பத்திப் பேசுறாரு. இலக்கியத்துல கன்னல் தேடுனா எக்கச்சக்கமா அம்புடும்.

   இனிப்பைக் கொடுக்கும் தாவரங்குறதால அதுக்கு அவ்வளவு புகழ் போல.

  • amas32 (@amas32) 7:51 pm on January 28, 2013 Permalink | Reply

   The recent post by @elavasam http://elavasam.posterous.com/174635736 also refers to the same topic. Nice coincidence 🙂

   //கன்னல் தமிழே,// என்பது பி.சுசீலா அவர்கள் பாடிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

   amas32

  • elavasam 8:12 pm on January 28, 2013 Permalink | Reply

   இதெல்லாம் ஓவர். ரெண்டு நாள் முன்னாடி உம்மாலதான் நானும் கன்னல் பத்தி எழுதினேன். அதைப் படிக்காம இங்க வந்து போட்டி போஸ்ட் போடும் உம்மை என்ன செய்யலாம்?

   http://elavasam.posterous.com/174635736

  • elavasam 8:21 pm on January 28, 2013 Permalink | Reply

   @amas32 – உண்மையின் பக்கத்தில் நின்று போராடுவதற்கு நன்றி!! :))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel