Updates from November, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 9:21 pm on November 5, 2013 Permalink | Reply  

  மீன்கொடி தேரில் 

  நிலவின் நிறம் பதிவுக்காக வாலி 1000 புத்தகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது பாடல் வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ‘சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ?’ என்ற வரிகளில் இடையை மீன்கொடி என்கிறாரே என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது. இவர்தானே மதுரையில் பறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே’ என்றார்?

  நண்பர் @nchokkan னிடம் கேட்டேன். அவர் அது மீன் இல்லை மின்கொடி தான்., மின்கொடி மருங்குல் சுருங்கமேல் என்று ஆழ்வாரும் துதிக்கின்ற மின்கொடி என்று அபிராமி பட்டரும் சொன்ன மின்னல் கொடி தான் என்று விளக்கம் தந்தார். கே ஜே யேசுதாஸ் மின்கொடி என்றுதான் பாடுகிறார்.

  ஆனால் மன்மதனுக்கு மீன்கொடி தானே அப்படி ஒரு கோணம் இருக்குமோ பார்க்கலாம் என்று தேடினேன் மன்மதன் எப்படி வருகிறான்? வெண்நிலவைக் குடைபிடித்து வீசுதென்றல் தேர் ஏறி மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய வரும் மன்மதனுக்கு யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை எனும் படைகள் இல்லை என்று தண்டியலங்காரம்

  யானை இரதம் பரியாள் இவையில்லை

  தானும் அனங்கன் தனுக்கரும்பு –

  என்ற பாடலில்.சொல்கிறது. திரிகூட ராசப்பக் கவிராயர் கால் ஏறும் காமனுக்காக் கை ஏறும் படைப் பவுஞ்சாய்க் கன்னிமார்கள் என்ற வரியில் பெண்களே மன்மத சேனை என்கிறார்.

  மன்மதன் சேனை? என்னை போல் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய வேலாலே விழிகள் என்ற பாடலில் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)

  http://www.youtube.com/watch?v=iPDQDMh1yAE

  வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்

  சிறு நூலாலே இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

  வேல் போன்ற விழிகள் நூல் போன்ற இடை. ஆனால் இடையில் மன்மதன் சேனைகள் என்கிறார். தொடர்ந்து

  கட்டும் கைவளை சொட்டும் மெல்லிசை மொட்டும் உன்னுடன் ஓடும்

  சிட்டு கண்களில் வெட்டும் மின்னலும் பட்டம் போல் விளையாடும்

  என்று மின்னலை கண்களில் வைக்கிறார். மீன் போல் கண்கள். மின்னல் போல இடை.என்பதை தலைகீழாக மாற்றி கண்களில் மின்னல் இடையில் மீன்கொடியோடு வரும் மன்மதன் சேனை என்கிறார்

  சிற்றிடை தான் கண்பறிக்கும் மீன்கொடியோ – இது அச்சுப்பிழைதான் ஆனால் அர்த்தமுள்ள அச்சுப்பிழையோ? கண்களில் இருப்பது பாண்டியனின் மீன்கொடி. இடையில் மன்மதனின் மீன்கொடி. சரிதானே?

  மோகனகிருஷ்ணன்

  338/365

   
  • rajinirams 11:10 pm on November 6, 2013 Permalink | Reply

   அருமை.தெய்வத்திருமணங்கள்-வானமும் பூமியும் ஆலிங்கனம்-கண்ணதாசன் பாடலில் “மன்னவன் தன்னையே மறக்கவொன்னாததால் பொன்னுடல் கொதித்தது-பூவெல்லாம் துடித்தது-“மின்னிடை”மெலிந்தது-மேகலை சுழன்றது என்ற வரிகள் வரும்.ஒரு பெண்ணை பார்த்து பாடலில் “கொடி மின்னல்”போல் ஒரு பார்வை என்ற வரிகளும் நினைவு வந்தது. நன்றி.

 • mokrish 9:40 am on June 30, 2013 Permalink | Reply  

  அன்னமிட்ட கைகளுக்கு 

  நடிகர் சந்தானம் உரத்த குரலில் ‘நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று டிவியில் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தார்.  முதலில் ஒரு involuntary சிரிப்பு வந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைத்த  வரிகள்.

  இது சூப்பர் ஸ்டார் பிரபலப்படுத்திய ‘ஆண்டவன் கொடுக்க நினைத்ததை யாரும் தடுக்க முடியாது’ என்ற கருத்தின் இன்னொரு வடிவம். நாகூர் என்ற சொல் ஒரு clue போல் தோன்ற, அந்த நூல் பிடித்து சென்றால் திருக்குர்ஆன் வாசகம் பற்றி வாலி எனக்குள் MGR என்ற தொடரில் எழுதிய செய்தி ஒன்று கிடைத்தது

  ‘அவரவர்க்கான அரிசியில் அவரவர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது!’ என்கிறது திருக்குர்ஆன்.  நீ – வாயைத் திறந்து வைத்துக் கிடந்தாலும் உனக்கல்லாத உணவு உன் வாய்க்கு வாய்க்காது; நீ – வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாலும், உனக்கான அரிசியை ஆண்டவன் உன் வாயை வலியத் திறந்து ஊட்டி விடுவான். இந்த மறைவாசகத்தை நாம் மறுதலிப்பதற்கில்லை!’

  வாலி இதை ஒரு கொடியில் இரு மலர்கள் என்ற படத்தில் ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்ற பாடலில் (இசையமைத்து பாடியவர் எம்‌எஸ்‌வி)  http://www.youtube.com/watch?v=T6743o-yK7U

  அரிசியின் மேலே அவனவன் பேரை

  ஆண்டவன் எழுதி வைப்பான் – அதை

  அடுத்தவன் யாரும் கெடுப்பதற்கில்லை

  அவனவன் தின்று தீர்ப்பான்

  எவரெவருக்கு என்னென்ன தேவை

  இறைவன் கொடுக்கின்றான் – அதை

  அவசர மனிதன் ஆத்திரப்பட்டு

  அதற்குள் எடுக்கின்றான்

  என்று பதிவு செய்கிறார். படத்தில் MSV கைதிகளிடம் பேசுவது போல் காட்சி.  ‘உங்களுக்காக கவிஞர் வாலி ஒரு அற்புதமான பாடலை எழுதியிருக்கிறார்’ என்று பாராட்டிவிட்டு பாடுவார்.

  நல்ல வரிகள் தான். ஆனாலும் கொஞ்சம் நெருடல். ஒவ்வொரு தானிய மணியிலும் அதை உண்ணப் போகிறவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? கோடிக்கணக்கானவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினி இருப்பது நமக்கு தெரியும். அவர்கள் பெயர் இருக்கும் உணவு  எங்கே ? அவர்கள் பெயர்கள் எல்லாம் விட்டுப்போக இது என்ன வாக்காளர் பட்டியலா?

  எல்லாருக்கும் உணவு கிடைக்கும்படி செய்துவிட்டு அதன் பிறகு அவரவர் பேர் எழுதிய அரிசியை க்யூவில் வந்து ஆதார் கார்ட் காட்டி வாங்க வைக்கலாம் . பல பேர் பட்டினி கிடைக்கும்போது இந்த வரிகள்  சரியா? அல்லது இதற்கு வேறு அர்த்தமா? மதங்களும் இறைவன் மொழியும் உணர்த்தும் பொருள் என்ன?

  • இவ்வுலகத்தில் எவ்வளவு மனிதர்கள் தோன்றினாலும் அவர்களுக்கான உணவு இறைவனிடத் திலிருந்து கிடைக்கும் என்று சிலர் இந்த திருக்குர்ஆன் வரியை  பகிர்ந்து உண்ணுதல் என்ற பொருளில் விளக்குவர்.

  • பைபிள் காட்சி ஒன்று – இயேசுவின் போதனைகள் நடக்கும் இடத்தில சுமார் 5000 பேர் கூடுகின்றனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து உணவை பகிர்ந்து  அதை மக்களுக்கு கொடுக்குமாறு கூறினார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். சாப்பிட்டது போக மீதியும் இருந்தது. அதை பன்னிரண்டு கூடைகள் நிரப்பினர். (லூக் 9: 10-17)

  • சிவன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்து அந்த அன்னம், தயிர் கலந்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதில் ஒரு பாகம், அருகிலுள்ள  குளத்தில் கரைக்கப்படும். ஏன் அப்படி?

  பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு

  பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்

  அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சிவனுக்கும்

  மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத

  வானவர் குழாத்தினுக்கும் மற்றுமொரு மூவருக்கும்

  யாவருக்கும்

  என்ற அபிராமி பட்டர்  பாடல் வரிகளுக்கு ஏற்ப, இறைவனது பிரசாதம் எறும்பில் தொடங்கி நீர்வாழ் உயிரிகள், மனிதர்கள் என சகல ஜீவராசிகளுக்கும் இதன் மூலம் சென்றடைகிறது

  வள்ளுவர் ஈகை பற்றி சொல்லும்போது பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை என்று குறிப்பிடுகிறார்.பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

  மோகனகிருஷ்ணன்

  211/365

   
  • D sundarvel 10:01 am on June 30, 2013 Permalink | Reply

   Nice interpretation. Remembering “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் உயிர்கள் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”.

  • சிவா கிருஷ்ணமூர்த்தி 12:30 pm on June 30, 2013 Permalink | Reply

   //பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.//
   சரியாக வந்தடைந்துவிட்டீர்கள், அவ்வளவுதான் மெசேஜ்…

  • amas32 7:36 pm on June 30, 2013 Permalink | Reply

   As an off shoot of what you have written, ஒருத்தன் பெண்டாட்டியை இன்னொருத்தன் கொண்டு போக முடியாது என்னும் வசனமும் என் நினைவுக்கு வந்தது 🙂 அதாவது என்று எழுதப்பட்டுள்ளதோ அது மாறப் போவதில்லை.

   ஆனால் நீங்கள் கூறியிருக்கும் இந்த வரிகளில் உள்ளப் பொருள் அருமை!
   //பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுக்கும்போது அவனது அரிசியில் பெயர் எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று தோன்றுகிறது.//

   amas32

 • என். சொக்கன் 11:58 am on January 28, 2013 Permalink | Reply  

  இனிப்பு! 

  • படம்: ப்ரியா
  • பாடல்: ஹேய், பாடல் ஒன்று
  • எழுதியவர்: பஞ்சு அருணாச்சலம்
  • இசை: இளையராஜா
  • பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
  • Link: http://www.youtube.com/watch?v=7CORvsjQT60

  என் ஜோடிக் கிளியே,

  கன்னல் தமிழே,

  தேனில் ஆடும் திராட்சை நீயே!

  பழைய பாடல்களில் கன்னல் மொழி, கன்னல் தமிழ், கன்னல் சுவை போன்ற பயன்பாடுகளை நிறைய பார்க்கலாம். குறிப்பாகக் கன்னத்துக்கும் வண்ணத்துக்கும் இயைபாக இதனைப் பயன்படுத்துவார்கள்.

  ‘கன்னல்’ என்றால் கரும்பு. இதையே கரும்புச் சாறைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று, கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள். அவர் பயன்படுத்துகிற உவமைகளும் பாவனைகளும் அற்புதமானவை.

  அந்த வரிசையில், கண்ணனையும் கன்னலையும் ஒரே வரியில் சேர்த்துப் பெரியாழ்வார் பாடியது: ‘கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி…’

  அதாவது, ஒரு குடம் நிறைய கரும்புச் சாறை நிரப்பிவைத்திருக்கிறார்கள், அதிலிருந்து சாறு வழிந்து வெளியே வருகிறது. அதுபோன்றதாம், குழந்தைக் கண்ணன் வாயிலிருந்து வடியும் ஜொள்ளு 🙂

  திருவருட்பாவில் வள்ளலாரும் இந்தப் பதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார், ‘என்னுயிரில் கலந்து இனிக்கின்ற பெருமான்’ என சிவபெருமானைப் போற்றித் தொடங்கும் அவர், ‘கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டா?’ என்கிறார். அதாவது, ‘நீ கரும்புய்யா, உன்கிட்ட கசப்பு ஏது?’

  அபிராமி அந்தாதியில் ஒரு வரி: கைக்கே அணிவது கன்னலும் பூவும். அதாவது, அபிராமித் தாயாரின் ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பூவும் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

  இந்தச் சொல் எப்படி வந்திருக்கும்? முனைவர் நா. கணேசன் தரும் விளக்கம் இது:

  வயலில் இருந்து கரும்பை அறுவடை செய்தபின், ஆலைக்கு அனுப்புவார்கள். அங்கே அதனைப் பிழிந்து, காய்ச்சிச் சுண்டவைப்பார்கள், இதற்குக் ‘கருகக் காய்ச்சுதல்’ என்று பெயர்.

  ஆக, கருகக் காய்ச்சப்படும் தாவரம் ==> கரும்பு / கரிம்பு / கரிநல் / கன்னல்!

  ***

  என். சொக்கன் …

  28 01 2013

  058/365

  (பின்குறிப்பு: ட்விட்டரில் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டு, இதனை #4VariNote வரிசையில் இடம் பெறச் செய்யுமாறு கேட்டவர் @umakrish. அவருக்கு நன்றி 🙂 )

   
  • GiRa ஜிரா 12:52 pm on January 28, 2013 Permalink | Reply

   அட்டகாசம்.

   கம்பரும் கன்னல் பத்திப் பேசுறாரு.

   கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் என்று மன்மதன் கரும்பு வில் வெச்சிருக்கறதப் பத்திப் பேசுறாரு. இலக்கியத்துல கன்னல் தேடுனா எக்கச்சக்கமா அம்புடும்.

   இனிப்பைக் கொடுக்கும் தாவரங்குறதால அதுக்கு அவ்வளவு புகழ் போல.

  • amas32 (@amas32) 7:51 pm on January 28, 2013 Permalink | Reply

   The recent post by @elavasam http://elavasam.posterous.com/174635736 also refers to the same topic. Nice coincidence 🙂

   //கன்னல் தமிழே,// என்பது பி.சுசீலா அவர்கள் பாடிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

   amas32

  • elavasam 8:12 pm on January 28, 2013 Permalink | Reply

   இதெல்லாம் ஓவர். ரெண்டு நாள் முன்னாடி உம்மாலதான் நானும் கன்னல் பத்தி எழுதினேன். அதைப் படிக்காம இங்க வந்து போட்டி போஸ்ட் போடும் உம்மை என்ன செய்யலாம்?

   http://elavasam.posterous.com/174635736

  • elavasam 8:21 pm on January 28, 2013 Permalink | Reply

   @amas32 – உண்மையின் பக்கத்தில் நின்று போராடுவதற்கு நன்றி!! :))

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel