Updates from March, 2013 Toggle Comment Threads | Keyboard Shortcuts

 • mokrish 10:50 am on March 15, 2013 Permalink | Reply
  Tags: அகத்தியன்   

  இவர்கள் சந்தித்தால்… 

  பல வருடங்களுக்கு முன் ஒரு வார இதழில்  ‘இவர்கள் சந்தித்தால் என்றொரு தொடர் வந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள், ஒரே துறையில் போட்டியில் இருக்கும் பிரபலங்கள் மாறுபட்ட குணாதிசயம் கொண்ட இரு பிரபலங்கள் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பது கற்பனை கலந்த நகைச்சுவையாக வந்த பகுதி.

  இது இப்போதும் தொலைகாட்சியிலும் இணையதளங்களிலும் தொடரும் ஒரு கற்பனை. பெரியார்-பிரோமனந்தா, சந்தனக் கடத்தல் வீரப்பன் – ஒசாமா பின்லேடன், தியாகராஜ பாகவதர் – டி. ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நேரில் கலந்துரையாடுவது போல அமைக்கப்படும். சென்ற வருடம் வந்த The Avengers என்ற ஹாலிவுட் திரைப்படம்  Marvel Comics ல் வந்த வெவ்வேறு காமிக்ஸ் கதாபாத்திரங்களை ஒரே படத்தில் இணைத்து வசூலில் ‘சும்மா அதிருதில்ல’ என்று மிரட்டியது. மகாபாரதத்தில் அனுமன் பீமனை சந்தித்தது போல் ஒரு காட்சி உண்டு.

  இது போல ஒரு திரைப்பாடல் உண்டு. இயக்குனர் அகத்தியன் எழுதி் தேவா  இசையில் SPB -சித்ரா -தேவா பாடிய ஒரு பாடல் படத்தின் பெயர் சொன்னாலே இந்த பாடலில் சந்திக்கும் இரண்டு கதாபாத்திரங்கள் யார் என்று புரிந்துவிடும் – படம் கோகுலத்தில் சீதை . தலைப்பே பாதி கதை சொல்கிறதே!

  சீதை கோகுலத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? கண்ணன் பற்றி இவள் என்ன நினைப்பாள்? கோகுலம் வந்த சீதையைப் பற்றி குழலூதும் கண்ணன் என்ன நினைக்கிறான்? கேளுங்கள்  http://www.youtube.com/watch?v=asOAL4mgqyE

  கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
  மானுமில்லை ராமனில்லை  கோகுலத்தில் நானா
  சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை

  சீதைக்கு ஒரே Confusion . “இதென்ன இடம்? நாங்கள் வானவாசம் வந்த இடம் போல இல்லையே ?  ராமனையும் காணோம் மானையும் காணோம். ஏதோ மகளிர் கல்லூரி வாசல் போல் ஒரே பெண்கள் கூட்டம். ஒ இது கங்கைக்கரைத்தோட்டமா? அதான் ஒரே கன்னிப்பெண்கள் கூட்டமா? நடுவில் இருப்பவன் கண்ணனா ? இது கோகுலமா ? ஆடைகளை எடுத்து ஒளித்து -என்ன விளையாட்டு இது ” என்று அவள் நினைப்பதைச்  சொல்லும் வரிகள்

  ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தின்  கூத்தானவன்

  கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டான்  அவன்

  ஆடை அள்ளி கொண்டான் அவன் அழகை அள்ளி தின்றான் அவன்

  ஆனாலும் பூஜைக்கு கண்ணன் வந்ததும் சீதை என்ன செய்கிறாளாம்?

  கண்ணா உன்னை நாள் தோறுமே

  கை கூப்பியே பாடுவேன்

  சரி மாயக்கண்ணன் நிலை என்ன ? இதுவரை நடந்தது என்று ஒரு preamble சொல்கிறான். நீ காண்பது மாயை நான் சொல்வதைக் கேள் என்கிறான்

  ஆசைக் கொரு ஆளாகினான் கீதை எனும் நூலாகினான்

  யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு  போராடினான்

  ஆடை அள்ளி கொண்டாடினான் திரௌபதிக்கு தந்தாடினான்

  பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை  கண்டு கைகூப்பினான்’

  ஆனால் சீதையை கோகுலத்தில் பார்த்தவுடன் என்ன சொல்கிறான்? அவள் வருகையினால் வாழ்க்கையே பிருந்தாவனம் ஆகிறதாம். அதனால் அவளை வணங்கினான் என்று கவிஞர் சொல்கிறார்

  கதை காட்சி என்று பொருத்தி ஒரு interesting கற்பனை. கதை எழுதியவரே பாடலும் எழுதியதால் கதையோடு தொடரும் சிந்தனை.

  ஆனால் எனக்கு ஒரு வரி புரியவில்லை. சீதை கோகுலத்தில் நின்று பாடும்போது ஏன் ‘ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை’ என்று பாடுகிறாள்? புரிந்தவர்கள் சொல்லுங்கள்

  மோகனகிருஷ்ணன்

  104/365

   
  • Venkatesh A R 10:56 am on March 15, 2013 Permalink | Reply

   Lovely

  • kalees 12:40 pm on March 15, 2013 Permalink | Reply

   ஹீரோ தனக்குப் பிடித்த பெண்களை அவர்கள் சம்மத்துடன் அடைய நினைப்பவன். ஹீரோயினையும் அப்படி அணுக, அவள் மறுத்துவிடுகிறாள் .

   ஒரு சூழ்நிலையில் அவன் வீட்டிலேயே அடைக்கலம் அடைகிறாள். இவள் வந்தவுடன் அவனும் கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் திருந்த ஆரம்பிக்கிறான்.

   அப்போ வருவது தான் இந்தப் பாடல்

   கோகுலத்து கண்ணா கண்ணா
   சீதை இவள் தானா
   மானுமில்லை ராமனுமில்லை
   கோகுலத்தில் நானா
   சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
   (ஆனால் அங்கே) ராவணின் நெஞ்சில் காமமில்லை

   அப்புறம், கண்ணனின் ரொமான்ஸ் லீலைகளைப் பற்றி பாடுகிறாள்

   ஆசைக்கொரு ஆளானவன்
   ஆனந்தத்தில் கூத்தானவன்
   கோபியர்கள் நீராடிட
   கோலங்களை கண்டானவன்
   ஆசை அள்ளி கொண்டானவன்
   அழகை அள்ளி தின்றானவன்
   போதையிலே நின்றானவன்

   பின்னர் ஹீரோ பாடுகிறான்.எனக்கிட்ட கொஞ்ச நல்ல விஷயமும் இருக்கும்மா

   ஆசைக்கொரு ஆளாகினான்
   கீதை என்னும் நூலாகினான்
   யமுனை நதி நீராடினான்
   பாண்டவர்க்கு போராடினான்
   ஆடை அள்ளி கொண்டாடினான்
   த்ரௌபதிக்கு தந்தாடினான்
   பெண்களுடன் கூத்தாடினான்
   பெண்ணை கண்டு கை கூப்பினான்

  • rajinirams 12:55 pm on March 15, 2013 Permalink | Reply

   படத்தில் கார்த்திக் சுவலட்சுமியை தன் இடத்திற்கு அழைத்து வந்து களங்கப்படுத்தாமல் காத்து நிற்பார்-அவர் பெண் பித்தராக இருந்தாலும்.அவரை பொருத்த வரை”ராவணனின் நெஞ்சில் காமமில்லை”-சரிதானே.

  • anonymous 10:31 pm on March 15, 2013 Permalink | Reply

   இவர்கள் சந்தித்தால்? = Nice Topic!
   புராண நாடகத்தில் இவை நெறைய உண்டு; (அனுமன்-பீமன், இராமன்-கண்ணன் சந்திப்புக்கள் – செளகந்திகா மலர் தேடும் போது)
    
   ஆனா இலக்கியத்தில்? சினிமாவில்?

   இதை ஒரு Series-ஆக எழுதுங்களேன், மோகன கிருஷ்ணன்?
   இது போல, கற்பனைச் சந்திப்புக்கள் இலக்கியத்திலும் சினிமாவிலும், கொஞ்சமாத் தான் எட்டிப் பார்ப்பவை; ஆர்வம் கிளறும்..

    
   அன்னை வேளாங்கண்ணி –ன்னு ஒரு படம்; கனவுப் பாட்டு தான்;
    
   ஆனா, மாதாவின் ஆசியால், இருவருக்குமே ஒன்னா வரும் கனவு; (ஜெமினி & ஜெயலலிதா)
   கனவு வந்ததும், கனவிலேயே, தம்பதிகள் ஆயிடுவாங்க; கிட்டத்தட்ட இவர்கள் சந்தித்தால் போல;
   வானமென்னும் வீதியிலே குளிர் வாடை எனும் தேரினிலே
   ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள் –ன்னு நல்ல பாட்டு..
    
   மறைந்த ஆதித்த கரிகாலனும், பொன்னியின் செல்வன் அருள்மொழியும் சந்திக்குறாப் போல ஒரு கதை கூட உண்டு!
   இந்தப் பாட்டிலே கண்ணன் & சீதை:)

    
   //பெண்களுடன் கூத்தாடினான்; பெண்ணைக் கண்டு கைகூப்பினான்//
    
   ரொம்ப அற்புதமான வரிகள்!
   இயக்குநரே பாட்டையும் எழுதினா, சில புதையல்கள் கிடைப்பதுண்டு; அப்படி ஒன்னு, இந்த அகத்தியனின் வரிகள்;
   It speaks abt Kannan’s personality – as a mix of (காமம் + மதிப்பு)
   பெண்களுடன் கூத்தாடினான் + பெண்ணைக் கண்டு கைகூப்பினான்
    
   ஒரு ஆண், பல பெண்களை மணந்து கொள்வது, இன்னிக்கும் அரசல் புரசலாப் பாக்குறோம்;
   ஆனா, ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்பே, ஒரு பெண், பல ஆண்களை மணந்து கொள்வது? = Kannan acknowledged it, acknowledged her, even though society was speaking bad-mouth!
    
   கண்ணன் = ஒரு Complex Personality!
   =இந்திரனுக்குப் பூசை வேணாம்-ன்னு சாத்திரங்களைத் தடுத்து நிறுத்தும் Rebel
   =பெண்களோடு, மிக்க தோழமை, but with respect & not womanizing
   =ஆண்கள் பண்ணிக்கிட்டா தப்பில்லை என்ற காலத்தில், பெண்ணுக்குப் பல தாரம்(ன்)
   =Tactic Management/ சிரிச்சிக்கிட்டே கொல்லும் பொறுக்கி:))
   =Even respecting திருநங்கை/ ஓரினச் சேர்க்கை, like in the case of சிகண்டி

   Kannan is really complex
   அதான் சீதையின் வியப்பும், குழப்பமும் இந்தப் பாட்டில் தொனிக்குது..
   She compares with Rama & going aghast on seeing Kannan!
   கண்ணன் ஒருக்காலும் அவளைத் தீக்குளிக்கச் சொல்லி இருக்க மாட்டான் – பூமிக்குள் அனுப்பி இருக்கவும் மாட்டான்!
   —-
    
   அகத்தியன் வரிகளைப் பாருங்களேன்; அப்படியே, சுந்தராம்பாள் அம்மா பாடும் அதே Style:) = ஒன்றானவன் உருவில் ரெண்டானவன்..தந்தானவன்..
    
   ஆசைக்கொரு ஆளானவன்
   ஆனந்தத்தில் கூத்தானவன்
   கோலங்களைக் கண்டானவன்
   ஆசை அள்ளிக் கொண்டானவன்
   அழகை அள்ளித் தின்றானவன்
   போதையிலே நின்றானவன்
   பூஜைக்கின்று வந்தானவன்

  • anonymous 11:08 pm on March 15, 2013 Permalink | Reply

   //ஆனால் எனக்கு ஒரு வரி புரியவில்லை.
   சீதை கோகுலத்தில் நின்று பாடும்போது ஏன் ‘ராவணனின் நெஞ்சில் காமம் இல்லை’ என்று பாடுகிறாள்? புரிந்தவர்கள் சொல்லுங்கள்//
    
   :)) I slightly touched this in the previous comment..
   அகத்தியன் வரிகளைப் பாருங்க;
   “என் வாழ்க்கையே பிருந்தாவனம்; நானாகவே நான் வாழ்கிறேன்”
    
   சீதை, “நானாகவே நான் வாழ்கிறேன்” –ன்னு சொல்லுறா-ன்னா, அதன் பொருள்(அர்த்தம்) என்ன?
    
   =பெண்களுடன் கூத்தாடினான் + பெண்ணைக் கண்டுக் கை கூப்பினான்
   =சோகமில்லை; சொந்தம் யாரும் இல்லை;
   =மானுமில்லை ராமனுமில்லை, கோகுலத்தில் நானா?
   =ராவணின் நெஞ்சில் காமமில்லை
    
   இது ஒரு பெண்ணின் உள்-தவிப்பு;
   “முந்தைய இராமன் – இன்றைய கண்ணன்” –ன்னு ஒரு பெண் மனசின் ஒப்பீடு!
    
   =கண்ணன் இருக்கும் இடத்தில் சோகம் இல்லை! ஆனா இராமன்?
   =கண்ணன் கூத்தாடினான்; ஆனா இராமன்?
   =கண்ணன் பெண்ணைக் கண்டுக் கை கூப்பினான்; இராமன் கூப்புவானா?
   =கண்ணன் இருப்பிடத்தில் சோகமில்லை; சொந்தம் யாரும் இல்லை; நானாகவே நான் வாழ்கிறேன்; யாருக்கும் (கற்பை) நிரூபிக்க அல்ல!
   =கண்ணன் இருப்பிடத்தில், அதீத உறவு-உரிமையால், பலர் பார்க்க, பெண் மனசை ஒடித்தல் இல்லை; தீக்குளிப்பு இல்லை; ஆனா இராகவன்?
    
   அதான், “இராவணன் நெஞ்சில் காமமில்லை” –ன்னு பாடுறா!
   ஏன்னா, கண்ணன் இருக்கும் இடத்தில், இராவணனுக்குக் காமம் –ன்னு முத்திரையும், அந்தக் காமத்தால் கற்பு-தீக்குளிப்பு –ன்னு முத்திரையும் இருக்காதே!
   அதான், ஒரு கவிஞரா, இராவணன் மேல் ஏத்திச் சொல்லுறாரு, ஒரு வீரியத்துக்காக!
    
   சீதையின் கனவாய்:
   மானும் இல்லை; ராமனும் இல்லை
   சோகம் இல்லை; சொந்தம் இல்லை
   இராவணின் நெஞ்சில் காமம் இல்லை;
   எல்லாம் கண்ணன், எல்லாம் கண்ணன்!
    
   பெண்களுடன் கூத்தாடினான்;
   பெண்ணைக் கண்டுக் கை கூப்பினான்
   நானாகவே நான் வாழ்கிறேன்
   நானாகவே நான் வாழ்கிறேன்
    
   Such a strange, womanish dream – Pangs of the heart of seetha

   • anonymous 11:22 pm on March 15, 2013 Permalink | Reply

    By the way, இவர்கள் சந்தித்தால்? Style, சங்கத் தமிழிலும் உண்டு!:)
    ஒரு நாள் வாரலன், இரு நாள் வாரலன் –ன்னு குறுந்தொகைக் கவிதை! = Dream Meeting, Dream Wishes;)

  • amas32 9:51 pm on March 17, 2013 Permalink | Reply

   எனக்குத் தோன்றுவது சற்றே மாறுப்பட்ட சிந்தனை. சீதையின் நிலை கண்டு வருந்துகிறேன். கோகுலத்தில் இருக்கும் சீதைக்கும் அசோகவன சீதைக்கும் என்ன வேறுபாடு? இரண்டு இடத்திலும் மருட்சியுடன் தானே இருக்கிறாள். அவள் அரசகுமாரி. இராமனின் மனைவி. உலகம் அறியாதவள். இராமனைப் பிரிந்து மகிழ்ச்சி இழந்து அவள் எங்கு இருந்தால் என்ன? கண்ணன் அவளுடைய இராமன் இல்லை. எப்படி இராவணன் வேறோ அதே மாதிரி கண்ணனும் வேறு. அவளுக்குத் தேவை இராமன் மட்டுமே. அவள் இல்லம் அயோத்தியில் மட்டுமே.

   amas32

 • G.Ra ஜிரா 11:42 am on January 4, 2013 Permalink | Reply  

  காதல் கடிதம் 

  கடிதம் எழுதுவது எளிது. சொல்ல வந்ததைச் சொல்லத்தானே கடிதம். ஆகையால் எழுதுவது எளிது.

  ஆனால் காதல் கடிதம்?

  அவளொரு பெண். காதல் வந்து விட்ட பெண். காதலனுக்குக் கடிதம் எழுத வேண்டும். என்ன எழுதுவது என்று தெரியாமல் தவிக்கிறாள். அந்த தவிப்பே அவள் இதயத் துடிப்பை கூட்டுகிறது.

  டிக் டிக் டிக் டிக் என்று அவளுடைய இதயத் துடிப்பு அவள் காதுகளுக்கே கேட்கிறது. அது இதயத் துடிப்பா இதயக் கதவைக் காதலன் தட்டும் ஓசையா என்று அவளுக்குப் புரியவே இல்லை.

  டிக் டிக் டிக் டிக்
  என்ன சொல்லி நான் எழுத
  என் மன்னவனின் மனம் குளிர
  (இப்படியொரு பாட்டை சுசீலாம்மாதான் பாட வேண்டும். இராணித்தேனீ படத்திற்காக இளையராஜா இசையில் பாட்டை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=keS3RIYZP1Y ரசிக்கலாம்)

  எப்படியோ… காதலனோ காதலியோ கடிதத்தை எழுதி முடித்து விடுகிறார்கள். அது வெறும் கடிதமா? வெள்ளைத் தாளில் நீல மை தொட்டு எழுத்தால் எழுதிய கடிதமா? இல்லவே இல்லை. காதலர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள். அவர்கள் அனுப்புவது கடிதம் அல்ல. உள்ளம். அதில் இருப்பவை எழுத்துகளா? இல்ல. எண்ணம். ஏன் என் இதயத்தையே கடிதமாக்கி எண்ணத்தை எழுத்தாக்கி அனுப்புகிறேன் தெரியுமா? உன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளத்தான் என்று கருத்தும் சொல்வார்கள் இந்தக் காதலர்கள்.

  நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
  அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
  உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
  (பேசும் தெய்வம் திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் பாடியது. பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=eXbPX5wr6bQ கேட்கலாம்)

  இன்னும் சில காதலர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இயற்கை ரசிகர்கள். இயற்கையே இவர்களோடு சேர்ந்து காதலிக்கிறது என்று எண்ணிக் கொள்கின்றவர்கள். இவர்களுக்கு இயற்கையும் உதவுகிறது. மேகம் தூது போகிறது. அன்னம் தூது போகிறது. காற்றும் கூட தூது போகிறது. இந்தக் காதலியும் அப்படியொரு இயற்கைக் காதலிதான். அவளுக்குக் கடிதம் எழுதக் காகிதம் கிடைக்கவில்லை. எழுதுகோல் கிடைக்கவில்லை. அவளுக்குக்கும் கவலையில்லை.

  காதல் கடிதம் தீட்டவே
  மேகம் எல்லாம் காகிதம்
  வானின் நீலம் கொண்டு வா
  பேனா மையோ தீர்ந்திடும்
  (ஜோடி திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk கேட்கலாம்)

  சரி. காதல் கடிதத்தை எழுதியாகி விட்டது. அந்தக் கடிதம் உரியவருக்குப் போய்ச் சேர்ந்ததா? போகும் வழியிலேயே கூடாதார் கை பட்டு மாய்ந்து விட்டதா? யாரிடம் கேட்க முடியும் நெஞ்சம்? கடிதத்துக்கு பதில் கடிதம் வரும் வரையில் வந்ததா வந்ததா என்றுதான் காதலர் உள்ளம் ஏங்கி நிற்கும்.

  காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
  வந்ததா வந்ததா
  கடிதம் வந்ததா?
  (சேரன் பாண்டியன் படத்தில் சௌந்தர்யன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=v6iiE88yVFM கேட்கலாம்)

  இரண்டு பக்கங்களிலும் கடிதங்கள் பரிமாறின. கடிதம் மட்டுமா? உள்ளங்களும் அந்த உள்ளங்களுக்கும் இடையே இருக்கும் எண்ணங்களும்தான். இதுவரை காதலை மட்டும் சொன்ன காதல் கடிதங்களுக்கு இப்போது சொல்வதற்கு நிறைய தகவல்கள் இருக்கின்றன. உள்ளம் சந்தித்தாலும் உருவங்கள் சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நலமா என்பதைக் கூட கடிதத்தில் கேட்க வேண்டிய நிலை.

  நலம் நலமறிய ஆவல்
  உன் நலம் நலமறிய ஆவல்
  நீ இங்கு சுகமே…. நான் அங்கு சுகமா?

  நீ இங்கு சுகமே…. நான் அங்கு சுகமா?
  நலம் நலமறிய ஆவல்
  உன் நலம் நலமறிய ஆவல்
  (காதல் கோட்டை திரைப்படத்தில் தேவாவின் இசையில் அனுராதா ஸ்ரீராமும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=Ksbjs1K56BA கேட்கலாம்)

  எத்தனையோ தடைகளுக்குப் பிறகு காதல் வெற்றி பெறுகிறது. ஊர் ஒத்துக் கொள்ள உலகம் ஏற்றுக் கொள்ள வெற்றி நடை போடுகிறது காதல். இதுவரை கைகளில் எழுதப்பட்ட கடிதங்கள் இப்போது கண்களால் எழுதப்படுகின்றன. அந்தக் கண்களுக்குள்தான் ஆயிரம் ஆயிரம் உரையாடல்கள்.

  அன்புள்ள மான்விழியே
  ஆசையில் ஓர் கடிதம்
  நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை

  அன்புள்ள மன்னவனே
  ஆசையில் ஓர் கடிதம்
  அதை கைகளில் எழுதவில்லை இரு கண்களில் எழுதி வந்தேன்

  நலம் நலம்தானா முல்லை மலரே
  சுகம் சுகம்தானா முத்து சுடரே
  இளய கன்னியின் இடை மெலிந்ததோ
  எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
  வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ
  வாடை காற்றிலே வாடி நின்றதோ
  (குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தில் பி.சுசீலாவும் டி.எம்.சௌந்தரராஜனும் இணைந்து பாடிய பாடலை இந்தச் சுட்டியில் http://www.youtube.com/watch?v=Zy8RM-nayTg கேட்கலாம்)

  காதல் கடிதங்கள் வாழ்க!

  அன்புடன்,
  ஜிரா

  034/365

   
  • Mohanakrishnan 11:14 pm on January 4, 2013 Permalink | Reply

   படித்தேன் படித்தேன் கடிதம் அடடா வரிகள் அமுதம். தபால்களையே தாம்பூலங்களாக கொண்டு ஒரு நிச்சயதார்த்தமே நடந்திருக்கிறது (நன்றி வாலி)

  • elavasam 4:44 am on January 5, 2013 Permalink | Reply

   காதல் கடிதம் பற்றிய பதிவு எனப் பேசிவிட்டு கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற உன்னதத்தை தவிர்த்த உங்களை என்ன சொல்லித் திட்ட?

  • amas32 (@amas32) 3:41 pm on January 13, 2013 Permalink | Reply

   Internet யுகத்தில் காதல் கடிதங்கள் காற்றோடு போயாச்சு! குருஞ்செய்திகளில் கூட எழுத்துக்களைக் குறைத்து மொழியைக் கொலை செய்த செய்திகளாகத் தான் காதலர்கள் தங்களுக்குள் அனுப்பிக் கொள்கிறார்கள்.

   அன்புள்ள மான் விழியே அற்புதமான ஒரு காதல் கடிதம். காதல் கடிதங்கள் உண்மை காதலர்கள் இடையே காப்பாற்றப் பட வேண்டிய பொக்கிஷம் 🙂

   amas32

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel