விருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்

சமீபத்தில் ஓர் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசனின் வசனம் என் கவனத்தை ஈர்த்தது.  

“ஊசிமுனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி” 

கவியரசு கண்ணதாசனின் ஓர் மிகச் சிறப்பான அம்சம் எல்லா மதங்களையும் மதிக்கும் மனப்பாங்கு – இந்த முதிர்ச்சி எல்லோருக்கும் வருவதில்லை. மதத்தின் பரந்த அறிவுமுதிர்ச்சி மற்றைய மத நூல்களையும் படிப்பதனால் ஏற்படுகிற தெளிவு. அவருடைய கொள்கையில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு சிற்றாறு.. சிற்றாறுகள் சேர்ந்து உருகவாக்குவது ஒரு மகா நதி.

நாஸ்திகனாக இருந்து கண்ணனின் தாசனாக மாறிய முத்தையா தனது பாடல்களில் காட்சிக்கு தகுந்தவாறு மற்றைய மத கோட்பாடுகளையும் தாரளமாக அள்ளித் தெளிப்பது வழக்கம்.  இந்த வகையில் மேலே குறிப்பிட்ட வசனம் கிறிஸ்தவ விவிலிய நூலில் (Holy Bible) இருந்து எடுக்கப்பட்டது.

இயேசு நாதருக்கும் ஓர் பெரிய பணக்காரனுக்கும் இடையே நடக்கும் சம்பவம், மேற்கோளின் சுருக்கமான பின்னணி: (லூக்கா 18:18-25)

பணக்காரன்: இயேசு நாதரே! நான் நித்திய வாழ்வை (Eternal life) பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்”

இயேசு நாதர்: நீ பத்துக் கட்டளைகளையும் கடைப் பிடிக்கிறாயா?

பணக்காரன்:  ஓ! நான் சிறுவயது முதல் இந்த கட்டளைகளை கடைப்பிடிக்கிறேன்

இயேசு நாதர்: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறை உண்டு. உனக்கு உள்ள எல்லா ஆஸ்திகளையும் விற்று ஏழைகளுக்கு கொடு அப்போது உனக்கு பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாகும். அதற்கு பின் என்னைப் பின் பற்றி வா!

இதைக்கேட்ட அந்த செல்வந்தன் மிகவும் துக்கமடைந்ததைப் பார்த்த இயேசு “ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.

இந்த சிறு சம்பாஷனை புதிய ஏற்பாட்டில் உள்ள முதல் 3  சுவிசேடகங்களும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் இதை camel and the eye of the needle என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். நடக்கமுடியாத சம்பவத்தை விவரிப்பதற்கு இந்த வசனம் ஓர் எடுத்துக்காட்டு. கவியரசு கண்ணதாசன் இதை பண ஆசையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

இப்போது இந்த திரைப் பாடலை கேட்டுப் பாருங்கள். அர்த்தம் புரியும்.

திரைப்படம்: பணத்தோட்டம்(1963)

பாடல்: குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம்( மனத்தோடம் போதுமென்று)

இசை: விஸ்வநாதன் -ராமமூர்த்தி

பாடலாசிரியர் : கவியரசு கண்ணதாசன்

பாடலின் சுட்டி:  http://www.youtube.com/watch?v=M1YnOtuff1c

பிற்குறிப்பு: விவிலிய நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாடு (New Testament) கிரேக்க மூல மொழியில் இருந்து தமிழுக்கு முதன்முதலாக மொழி பெயர்க்கப்பட்டது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் இதன் மூன்றாவது புத்தகத்தை (லூக்கா சுவிசேடகம் – Gospel of Luke) தன்னுடைய பாணியில் யேசு காவியம் எனும் தலைப்பில் படைத்தது குறிபிடத்தக்கது.

சபா- தம்பி

சபா-தம்பி பிறந்து வளர்ந்தது இலங்கையில். கால் நூற்றாண்டு காலத்துக்குமுன்னால் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர், தற்போது பெர்த் நகரத்தில் வசிக்கிறார். தமிழார்வம் ஏராளம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலத்தில்மட்டுமே எழுதிவந்திருக்கிறார், கண்ணதாசனும் #4VariNoteம் தந்த ஊக்கத்தில் தமிழிலும் எழுதத் தொடங்கி, தொடர்ந்து எழுதிவருகிறார்.

Twitter: @SabaThambi