விருந்தினர் பதிவு: யானைக் குட்டிகள்

பாரதிக்குப் பின் வந்தவர்களில், (இதுவரை) கண்ணதாசனே நான் விரும்பும் மகா கவிஞன். அப்படியிருக்கையில், நான் இந்தக் குறிப்பைப் படிக்க நேர்ந்தது.

பாரதியைப்பற்றிக் கண்ணதாசன்:

‘ஆறு தொகுதிகள் கவிதைகள் எழுதி இருக்கிறேன், ஏராளமா சினிமா பாட்டெழுதி இருக்கிறேன், உரை நடை எழுதி இருக்கிறேன்… பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!  அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது!’

(from அர்த்தமுள்ள அநுபவங்கள் : இராம. கண்ணப்பன் : நர்மதா பதிப்பகம் வெளியீடு)

இதைப் படித்ததும், பாரதி பற்றி என் ஒரு மனம் கர்வப்பட்டாலும், இன்னொரு மனம் கண்ணதாசனுக்காக மிக நெகிழ்ந்தது.

காலத்தில் அழியாத

காவியம் தரவந்த

மாபெரும் கவி மன்னனே – உனக்கு

தாயொரு மொழி சொல்லுவேன்…                        *a

என்று, அவன் எழுதிய வரிகளாலேயே வருடிகொடுத்தும், தட்டிக்கொடுத்தும் தேற்ற விழைந்தது.

சினிமா நல்லதாகவோ அல்லாததாகவோ, எப்படியோ இருந்து போகட்டும். ஆனால் ஒரு சிறந்த கவிஞன்,

நிரந்தரமானவன், அழிவதில்லை – எந்த

நிலையிலும் அவனுக்கு மரணமில்லை                   *b

என்ற மிக உன்னதமான இடத்திலேயே கண்ணதாசன் இருந்துவருவதைச் சுட்டிக்காட்டத் தோன்றியது.

கொடிதிலும் கொடிது, இளமையில் வறுமை என்று ஔவையார் சொல்லுவதை எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் சரியாகவும் அழகாகவும் காட்டும் கண்ணதாசனின் பாடல் இது:

செல்வர்கள் இல்லத்தில்

சீராட்டும் பிள்ளைக்கு

பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி

இதில், ‘பொன்வண்ணம்’ என்பதற்கு, தங்கநிறத்தில் என்று பொருள் கொள்ளக்கூடாது. அது செல்வந்தர் இருப்பிடம். மாளிகை. எனவே, அவர்கள் வீட்டுக் குழந்தை, ‘பொன்னாலான அழகிய’ கிண்ணத்தில் பால் குடிக்கிறது. சரி, அங்கே ஏழை வீட்டில் என்ன நடக்கிறது?

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு

கலயங்கள் ஆடுது சோறின்றி

இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

தரித்திரம் தாண்டவமாடுகிறது. காசே கிடையாது. வீட்டில் ஒரு பிடி அரிசிகூட இல்லை. உப்பு வாங்கவும் துட்டு கிடையாது. துயரத்தில் பொங்கிய அழுகையால், கலயத்தில் விழுந்த கண்ணீரில் இருந்த உப்பு மட்டுமே, இனாமாகக் கிடைத்த தண்ணீரில் கலந்ததாம். ஒரு சின்ன வரியில் – கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி – மாபெரும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டிய சாகசம் கண்ணதாசனுக்கு மட்டுமே சொந்தம்!

கண்ணதாசன் பாடல் இன்னும் தொடர்கிறது..

மாணிக்க தேர் போல

மையிட்டுப் பொட்டிட்டு

மகராஜன் செல்வங்கள் விளையாடும்

கண்ணாடி வளையலும் காகித பூக்களும்

கண்ணே உன் மேனியில் நிழலாடும்

இல்லாத உள்ளங்கள் உறவாடும்

கண்ணாடி வளையல்களும் காகித பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும் என்று எடுத்துக்கொண்ட காட்சியை நிலை நிறுத்துகிறது!!

இந்த இரண்டு வரிகளுக்கும் முத்தாய்ப்பாக, இன்னும் இரண்டு வரிகள்.

கண்ணுறங்கு, கண்ணுறங்கு – பொன்னுலகம்

கண்ணில் காணும்வரை கண்ணுறங்கு, கண்ணுறங்கு

இதுவா பன்றி குட்டிபோல இருக்கு… மனசு ஆறமாட்டேங்குது!

மிகப்பரவலான தலைப்புகள் என்றாலும் அழகாகவும் ஆழமாகவும் –நுனிப்புல் மேயாமல் என்று பொருள் கொள்க- எழுத, வெகுச்சிலரால் மட்டுமே முடியும். அதிலும் கவிதை என்று வந்தால் அத்தகையவர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்துவிடும். அதனால் தான், என்னளவில், பாரதிக்குப்பின் (இன்றுவரை) கண்ணதாசன் மட்டுமே என்று சொல்கிறேன்.

பாரதியார் 39 வயது மட்டுமே வாழ்ந்தார் – அதுவும், தான் கனவுகண்ட சுதந்திர இந்தியாவைக் காணாமல் 1921-இலேயே மறைந்தார். ஆனால், தன் ஐம்பத்திநாலு வயதில், 1981-இல் மறைந்த கண்ணதாசன், சுதந்திர இந்தியாவின் மாற்றங்களை மட்டுமல்லாது, உலகளாவிய விஞ்ஞா ன வளர்ச்சியையும், ஏனைய தாக்கங்களையும் கண்டவர்.

ஆகவே, “பன்றி குட்டி போட்டமாதிரி இவ்வளவு எழுதி என்ன பிரயோசனம்? பாரதி இந்தக் கவிதைத் தொகுதி ஒன்றினால்மட்டும் உலகத்தை ஜெயிச்சுட்டானே!  அவன்தான் மகாகவி, என்னைப்பத்தியெல்லாம் பேசப்படாது” என்று கண்ணதாசன் சொல்லுவதன் உள்ளர்த்தம் வேறாயிருக்க வேண்டும். முகத்துக்கு நேரேவரும் மிகைப்புகழ்ச்சியால் நெளிபவர்கள், அதைக் கடப்பதற்காக, தனக்கிணையான அல்லது தன்னிலும் மேலான ஒரு மேதையின் பெயரை உபயோகிப்பது என்பது, இது முதல் தடவையல்ல. எனவே இதை நாம் இப்படியே விட்டுவிடலாம். 🙂

சினிமாப் பாடல்களில் தமிழின் சிறப்பைப்பற்றி சொல்லுவதும், அதைப் பற்றிச்செல்லுவதும் அடிக்கடி நடப்பது தான். அதில் எல்லார் மனதையும் சொக்கவைப்பவர் கண்ணதாசன்.

சந்தம் நிறைந்த தமிழ் -சங்கீதம் பாடும் தமிழ்

சிந்து பல கொண்ட தமிழ் -வெல்லும், வெல்லும்…

இந்த தேசம் முற்றும் ஆண்ட கதை -சொல்லும், சொல்லும்…

இந்த வரிகளைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும், எனக்கு திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியில், ‘பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே நினைவுக்கு வந்துவிடும். யார் அந்த ஒய்யாரி, அவள் பந்தாடினதில் என்ன விசேஷம் என்று பார்க்க, இங்கேசெல்லவும்.

கண்ணதாசன் பாடலில்,

செவ்வரியோடிய கண்களிரண்டினில் சேலோடு வேலாட – இரு

கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட…

என்ற வரிகள் ரசிக்கப் பட்டாலும், அதிகம் பேசப்பட்டது கீழேயுள்ள வரிகள் தாம்.

தோட்டத்திலே தென்னையிரண்டு முற்றித்திரண்டு பக்கம் உருண்டு,

கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து – அதைத்

தொடவோடிய விழியோடொரு விழி மோதிய கணமே – எனைத்

ஆனால், இவனுக்கும் முன்னால் எழுதிய பாரதி ஏற்கனவே இதையெல்லாம் எழுதிவிட்டான். இதோ, எந்தநேரமும் நின் மையலேறுதடீ – குறவள்ளி சிறுகள்ளி.. என்ற பாடலைக் கேளுங்கள். இந்த பாரதியார் பாடலுக்கு எல்.வைத்யநாதன் இசையமைத்துள்ளார். முழுப்பாடலும் கேட்டால் பிரமிப்பாயிருக்கும்.

தமிழ் என்றும் புதியது, எப்பொழுதும் திகட்டாதது. எனவே, கொஞ்சம் ஜாலியாக காய் வகைகளையும் கண்ணதாசனின் எழுத்தில் காணலாம்:

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ

கோதை எனைக் காயாதே கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

தமிழில் நன்றாக எழுதிப் படைப்பதனால், அவன் பேர் இறைவன். இணப்பிலிருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முழுமையாகக் கேட்டு ரசியுங்கள்.  🙂

=========

நாலு வரிக்காக எடுத்தாண்ட பாடல்கள்:

  1. காலத்தில் அழியாத காவியம் தரவந்த: http://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU
  2. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு: http://www.youtube.com/watch?v=eCC6tV8sgSM
  3. பூஞ்சிட்டுக் கன்னங்கள்: http://www.youtube.com/watch?v=zsBG59Y0k04
  4. சங்கம் வளர்த்த தமிழ்  http://www.youtube.com/watch?v=9fPHG8IE-vU
  5. இந்திரையோ, இவள் சுந்தரியோ  http://www.youtube.com/watch?v=u515oyKoO7I
  6. எந்த நேரமும் http://www.raaga.com/player4/?id=231999&mode=100&rand=0.6847409228794277
  7. அத்திக்காய் காய் காய்  http://www.youtube.com/watch?v=muWBARd3oAk பாட்டில்வரும்  வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் அதிகமான அர்த்தமிருப்பதால், இதில் இருக்கும் சப்-டைட்டில், பாடலை முழுமையாக ரசிக்க, உதவும்.

பி. வி. ராமஸ்வாமி

ரீடெய்ல் துறையில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவஸ்தர் பி. வி. ராமஸ்வாமி, ’ஜார்ஜ் ஆர்வெல்’லின் புகழ் பெற்ற நாவலான ‘விலங்குப் பண்ணை’யை அருமையான நடையில் தமிழாக்கம் செய்திருக்கிறார், தமிழ் இணையத்தில் நல்ல படைப்புகள் எங்கு தென்பட்டாலும் தேடிச் சென்று பாராட்டுகிற நல்மனத்துக்காரர்.

https://twitter.com/to_pvr