கதைதாங்கிகள்

திரைப்படங்களில் பாடல்கள் தேவையா இல்லையா என்பதே இன்றைக்கு பெரிய விவாதமாகி விட்டது. பாடல்களே இல்லாமல் படம் எடுப்பதாக பெரிதாக விளம்பரமெல்லாம் செய்கிறார்கள்.

பாடல்கள் இருந்தால் அந்தத் திரைப்படம் இயல்பான திரைப்படமே இல்லை என்ற அளவுக்கு இயக்குனர்கள் சிலரும் இசையமைப்பாளர்கள்(?!?) சிலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

பிறந்தால் தாலாட்டு. இறந்தால் ஒப்பாரி. வளர்ந்தால் கும்மி. ஏற்றிறைக்க பாட்டு. நெல் குற்ற பாட்டு. நாற்று நட பாட்டு. தெருவில் ஆடினாலும் பாட்டு. கோயிலில் ஆடினாலும் பாட்டு. இப்படியெல்லாம் இருந்த ஒரு பண்பாட்டு வழி வந்த சமூகத்தில் பாடல்கள் உயிரோடு கலந்தவை. பண்பாடு என்னும் சொல்லில் இருக்கும் பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் இசையோடு தொடர்புள்ளவைதானே!

அப்படியிருக்கும் போது பாடல்கள் திரைப்படத்தில் இடம் பெறுவது எப்படி தவறானதாக இருக்கும்?! எத்தனை காதலர்களுக்கு திரைப்படப் பாடல்கள் ஏணியாக இருந்திருக்கிறது தெரியுமா? எத்தனையோ பேரை சுசீலாம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்திருக்கிறார் தெரியுமா? டி.எம்.எஸ்சும் சீர்காழியும் பக்தியை வளர்த்து இன்னும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

சரியான இடங்களில் பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்று சொல்வது ஏற்புடைய விமர்சனம். பாடல்களைப் பயன்படுத்துவதே தவறு என்று சொல்வது மிகத் தவறான கருத்து.

ரா ரா சரசுக்கு ரா ரா
ரா ரா செந்தக்கு சேரா

சந்திரமுகி திரைப்படப் பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கும் பாட்டு அது என்றால் மிகையாகாது.

இத்தனைக்கும் அது தெலுங்குப் பாட்டு. தெலுங்குப் பாடலாசிரியர் புவன சந்திரா எழுதிய பாடல் வரிகள் சராசரி தமிழ் ரசிகனுக்குப் புரிந்திருக்கவும் புரிந்திருக்காது. ஆனாலும் மக்கள் கூட்டம் அந்த பாடலையும் படத்தையும் ரசித்து வெற்றி பெறச் செய்தது.

சந்திரமுகி படத்தில் மற்ற எல்லாப் பாடல்களையும் யோசிக்காமல் வெட்டி நீக்கி விடலாம். படத்தின் ஓட்டமோ கதையம்சமோ சிறிதும் பாதிக்காது. ஆனால் இந்தப் பாடல்?

ரா ரா சரசுக்கு ரா ரா” என்று எளிமையாகவும் அதே நேரத்தில் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும் படியும் தொடங்கும் இந்தப் பாடலை வெட்ட வேண்டும் என்றால் சந்திரமுகி என்ற மொத்தப் படத்தையுமே வெட்டி விடலாம்.

இத்தனைக்கும் இந்தப் பாடல் காட்சி சிக்கலானது. இரண்டு வேறுவிதமான காலகட்டங்களை இணைக்க வேண்டும். அந்த இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் ஒரு பெண்ணின் காதலை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய கங்கா தன்னை அன்றைய சந்திரமுகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளே.

ஆக முக்கிய பாத்திரங்கள் எல்லாம் அவளுடைய மன மேடையில் இரட்டை வேடம் போட வேண்டிய சூழ்நிலை.

இன்றைய டான்ஸ் புரபசர் விஸ்வநாதன் சந்திரமுகியாக மாறிக் கொண்ட கங்காவின் கண்களுக்கு அந்தக் காலத்து காதலனாகத் தெரிகிறான்.

மனோதத்துவ மருத்துவம் படித்த டாக்டர் சரவணன் அவளுக்கு வேட்டையன் என்னும் கொடியவனாகத் தெரிகிறான். சந்திரமுகியின் காதலனையும் அவளையும் கொன்ற கொடியவன் அவன். அந்த வேட்டையனை பழி வாங்க வந்திருப்பதாக கங்கா என்னும் சந்திரமுகி நினைக்கிறாள்.

இத்தனையையும் அந்த ஒரு பாட்டில் காட்ட வேண்டும். இந்தக் காட்சிக்கு தெலுங்குப் பாடலாசிரியர் பாட்டும் எழுத வேண்டும்.

முதலில் அவள் தான் காதலைப் பாடுகிறாள். காதலனை ரா ரா என்று அழைக்கிறாள். உயிரே உன்னுடையதுதான் எடுத்துக் கொள் என்று தாம்பாளத்தில் வைத்து காதலைக் கொடுக்கிறாள்.

பிராணமே நீதிரா
யேலுகோ நா தொரா
ஸ்வாசலோ ஸ்வாசவாய் ராரா

அவன் மீது உண்டாக காதல் எந்த ஜென்மத்தில் உண்டான பந்தம் என்று புரியாத ஒரு ஈர்ப்பு.

ஏ பந்தமோ இதி ஏ பந்தமோ
ஏ ஜென்ம பந்தால சுமகந்தமோ

பெண்ணான அவளே பாடிவிட்டாள். அவன் பாடாமல் இருப்பானோ. கனவோ நினைவோ என்று ஒரு குழப்பம். ஆனாலும் அது இனிமையாகத்தான் இருக்கிறது.

ஏ ஸ்வப்னமோ இதி ஏ ஸ்வப்னமோ
நயனால நடயாடு தொலி ஸ்வப்னமோ

இப்படியாக இவர்கள் பாடும் போது வந்துவிடுகிறான் வேட்டையன். தான் கொண்டு வந்த பெண்ணொருத்தி இன்னொருவனை விரும்புவதா? அவனும் பாடுகிறான்.

லக்க லக்க லக்க லக்க

அந்தக் காதலன் தலை உருள்கிறது. அவள் உடல் எரிகின்றது.

சரி. இப்படி வைத்துக் கொள்வோம். இந்தப் பாடல் இல்லை. ஆனால் இந்தப் பாடலில் வந்ததையெல்லாம் வேறுவிதமாக சொல்லிக் கொள்ளலாம் என்றால் என்ன செய்யலாம்?

இன்னொரு திரைப்படம் தான் எடுக்க வேண்டும். முதலில் சந்திரமுகி ஆந்திர விஜயநகரத்தில் இருப்பதைக் காட்ட வேண்டும். பிறகு வேட்டையன் அங்கு செல்ல வேண்டும். சந்திரமுகியைப் பார்க்க வேண்டும். காதலில் விழ வேண்டும். அவளைக் கொண்டு வரவேண்டும். அவள் இன்னொருவனைப் பார்க்க வேண்டும். இருவரும் காதலை யாருக்கும் தெரியாமல் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதை வேட்டையன் பார்க்க வேண்டும். அவன் காதலனைக் கொல்ல வேண்டும். சந்திரமுகியை எரிக்க வேண்டும்.

அப்பப்பா… எத்தனை வேண்டும்!!! இத்தனையையும் காண்பித்தால் படம் பார்க்கின்றவன் கொட்டாவி விட்டுக் கொண்டு கொக்கோ கோலா குடிக்கப் போயிருப்பான். படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார். படத்தை எடுத்த இயக்குனர் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் தாம் த தீம்த தோம் ததோம் என்று தாளம் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.

அதையெல்லாம் விடப் பெரிய கொடுமை… எதாவது ஒரு விடுமுறை நாளில்… எதாவது ஒரு தொலைக்காட்சியில் பொதுமக்களாகிய நாம் படத்தைப் பார்த்து கதறி அழ வேண்டும்.

இத்தனை கொடுமைகளையும் நடக்க விடாமல் ஒரேயொரு பாடல் காட்சியைப் புகுத்தி படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி மக்களை ரசிக்க வைத்ததை பாராட்டத்தான் வேண்டும்.

தமிழ்ப் படத்தில் தெலுங்குப் பாட்டெழுதிய கவிஞர் புவன சந்திராவுக்கு ஒரு லக்க லக்க லக்க லக்க…….

அன்புடன்,
ஜிரா

358/365