எது நடந்ததோ
நண்பர் புது வருட டைரி கொடுத்தார். முதல் பக்கத்தில் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசன மல்டி கலர் படம் போட்டு அதன் கீழே கீதாசாரம் என்று தலைப்பிட்டு ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்று தொடங்கும் சில வரிகள். இதுதான் கீதையின் சாரமா? இல்லை இதை கீதையின் சாரமாக ஏற்க முடியவில்லை என்கிறார் சோ. எனக்கு இது சிவகாசியில் flex banner எழுதும் ஒரு காலண்டர் கவிஞரின் கைவண்ணம் போல் இருக்கிறது.
வேதத்தின் பொருளை விளக்கவே பகவத் கீதை சொல்லப்பட்டது என்று படித்திருக்கிறேன் களத்தில் தேரை நிறுத்திய பார்த்தன் போர் செய்ய திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு சோர்ந்து நடுங்கினான். காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. கண்ணன் கீதை உரைத்தான்.
கர்ணன் படத்தில் இதே காட்சி. அர்ஜுனன் தன் ஆயதங்களை கீழே போட்டு கலங்கும்போது திரையுலகின் நிரந்தர கிருஷ்ண பரமாத்மாவான என் டி ராமாராவ் சொல்லும் அறம் தழைக்கவே கர்ம வீரன் செயல்படுகிறான் என்ற உபதேசம். கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேள்வி பதில் போல் அமைந்த காட்சி
http://www.youtube.com/watch?v=3vN8DFxTMzE
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடிப் பிறந்திருக்கும்
மேனியைக் கொல்வாய் மேனியைக் கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ
விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள் ..
என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீபம் நழுவவிட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ
புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான் கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கைவன்மை எழுக இக்களமெலாம் சிவக்க வாழ்க!
மூன்று மணி நேர படத்தில் கீதைக்கு மூன்று நிமிட பாடல்தான். அதில் சொல்லவேண்டியதை சொல்லி கண்ணதாசன் காட்டும் வித்தை அருமை.
பல வருடங்கள் கழித்து கண்ணதாசன் எழுதிய இன்னொரு கவிதை. வரிகள் நினைவில்லை. ஆனால் கதை இதுதான் அதில் அபிமன்யுவை இழந்த அர்ஜுனன் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறான். அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.
மோகனகிருஷ்ணன்
amas32 1:18 pm on November 24, 2013 Permalink |
//அப்போது அவன் மேல் கண்ணீர் துளி விழ நிமிர்ந்து பார்த்தால் தேரில் இருக்கும் கண்ணன் அழுவதைப் பார்க்கிறான். ‘நான் மகனை இழந்து அழுகிறேன் நீ எதற்காக அழுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான். அதற்கு கண்ணன் ‘அடேய் அர்ஜுனா இவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு உபதேசம் சொன்னேன் அத்தனையும் வீணானதே என்று அழுகிறேன்’ என்று சொல்வான்.// :-))
அதனால் தான் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று ஆதி சங்கரரும் பாடுகிறார். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்று cycle of birth and death லேயே உழன்று கொண்டிருக்கிறோம். உய்வதில்லை.
இன்று நீங்கள் கொடுத்திருப்பது எத்தனை அற்புத வரிகள் மோகனகிரிஷ்ணன்! 18 அத்தியாயங்களில் பகவான் கண்ணன் சொன்னதை சில வரிகளுள் அடக்கிவிடுகிறாரே கண்ணனின் தாசன்! மறுமுறை சொல்கிறேன் என்ன தவம் செய்ததோ தமிழ் மண் அவரை பெற்றதற்கு!
amas32
GiRa ஜிரா 11:16 am on November 25, 2013 Permalink |
உபதேசம் அர்ஜுனனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் கர்ணனுக்குத் தேவைப்படவில்லை.
அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்ன சொன்னாரோ அதன் படி கர்ணன் கடமையைச் செய்தான். எந்தப் பக்கம் இருந்தானோ அந்தப் பக்கத்துக்காகவே போரிட்டான். பாசம் தடுத்தது. ஆனாலும் தொடர்ந்து நன்றி மறவாது போரிட்டான். உயிரையும் கொடுத்தான்.
நீங்கள் சொல்வதிலிருந்தும் என்னுடைய எண்ணவோட்டத்திலிருந்தும் அர்ஜுனனுக்கு உபதேசித்தது விழலுக்கு இறைத்த நீர்தான் போல.
kamala chandramani 12:55 pm on November 25, 2013 Permalink |
எத்தனை உபதேசங்களைப் பெற்றாலும் மரணம் மனிதனை அழத்தான் வைக்கிறது! அன்பைப் பெறுவதற்கும், அன்பு செலுத்தவும் ஆதாரமாக உள்ள ஸ்தூல சரீரம் இல்லாமல் போனதற்குதான் அழுகை.
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கைத் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்த யோகி. அதனால்தான் மேலே கொடுத்துள்ள பாடல் பிறந்தது.
அருமையான பதிவு.’ ‘எது நடந்ததோ” -இந்த வரிகள் உண்மையில் கீதாசாரம் அல்ல என்று நானும் கேள்விப்பட்டேன்.
uma chelvan 7:26 pm on November 25, 2013 Permalink |
Very Well Said !!!
Deva 8:18 am on November 29, 2013 Permalink |
Nice. Need to listen the songs again to know kannadasan.