விருந்தினர் பதிவு: கொல்லையில் தென்னை

இரவு நேர பண்பலையில் எப்பொழுதுமே நாம் கேட்டறியாத அல்லது கேட்டு நீண்ட நாட்கள் ஆகிப் போன பாடல்களை ஒலிபரப்புவதால்  நான் அதற்கு ரசிகை.. அப்படி ஒரு நாளில் ஜெயச்சந்திரனின் அருமையான தாலாட்டு

கொல்லையில தென்னை வச்சி குருத்தோலைப் பெட்டி செஞ்சி சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ ,மரக் கிளையில் தொட்டில் கட்ட மாமனவன் மெட்டுக் கட்ட  அரண்மனையை விட்டு வந்த அல்லி ராணி கண்ணுறங்கு..

இந்தப் பாடல் சின்னதாய்ப் போயிற்றே என்று முதன் முதலாய்க் கேட்ட தருணத்தில் இருந்தே மனக் குறை . அதிக இசைக்கருவிகள் இன்றி  இரவு நேர இதத்துக்கு இழுக்கு சேர்க்காமல் நேர்த்தியாக இசையமைத்திருக்கிறார் ரஹ்மான்.    இப்பாடலில் வரும் கொல்லையில என்பது கிராமத்துப் பேச்சு வழக்கு. வீட்டின் பின் புறத்தை கொல்லைப் பக்கம் என்பார்கள். சின்ன வயதில் புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதுண்டு. அங்கே பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் ஏதேனும் மரங்கள் செடிகள் இருக்கும்.முன்புறமும் சிறிதளவேனும் இடம் விட்டு செடிகள் வளர்த்து வீடுகள் பார்க்கவே அழகாகவும் குளுகுளுவென இருக்கும். வீடு என்று ஒன்று கட்டினால் இப்படிதான் கட்ட வேண்டும் என்று தீர்மானமே உண்டு எனக்கு. நகரத்து கான்கிரீட் காடுகளில் இது குறைந்து விட்டது. இந்தப் பதிவுக்கு மூல காரணம் அந்த கொல்லை அல்ல 🙂 பாடலில் வரும் குருத்தோலை என்ற சொல்.

குருத்தோலை என்றதும் எனக்கு உடனே பனை ஓலை தான் நினைவுக்கு வந்தது. (ஆனால் பாடலை எழுதிய வைரமுத்து கொல்லையில தென்னை வச்சு குருத்தோலைப் பெட்டி செய்துன்னு தானே எழுதி இருக்கிறார்..அவர் தவறு செய்ய வாய்ப்பு இருக்காதே என்று தென்னை ஓலையிலும் குருத்தோலைப் பெட்டி செய்யப்படுமா என விபரம் சேகரித்தேன்..

குருத்து -முளை இந்த முளை விடும் இலையே ஓலையாக இருப்பது தென்னை மற்றும் பனைக்கு மட்டும் தானாம் ..

பனை ஓலையில்,விசிறிகள்,பெட்டி ,கூடை ,கிலுக்கு என நிறைய செய்வார்கள். பனை ஓலை கிலுக்கு ப்ளாஸ்டிக் கிலுக்கு போல அல்லாமல் அதிக சத்தமின்றி அழகாகவும் அருமையாகவும் இருக்கும். பனை ஓலையில் கைப்பை கூட உண்டு. என்ன மடங்காது :)(திருப்புலானி கோவில் தலத்தில் விற்கிறார்கள்.இப்படி ஒரு காலத்தில் பனை ஓலையில் செய்தவற்றை ஆர்வத்துடன் வாங்கியதுண்டு..இந்தக் குருத்தோலைப் பெட்டியும் அதில் ஒன்று. இன்றும் என் அம்மா பூஜை அறையில் காணிக்கைக் காசுகள் ,காதோலை கருக மணி போட இந்தப் பெட்டி தான் பயன்படுத்துகிறார். (வீட்டில் இருக்கும் பெண்ணடி தெய்வத்தை நினைத்து வணங்க இந்தக் காதோலைக் கருகமணி தான் )

கருப்பட்டி ,வெல்லம் இதில் வைத்து விற்றுப் பார்த்திருக்கிருக்கிறேன். (கருப்பட்டி நினைச்சாலே நாக்கில் எச்சில் ஊறுது .கருப்பட்டி காப்பி குடித்தவர்கள் பாக்கியவான்கள் 🙂 )

குருத்தோலை ஞாயிறு என கிறித்துவர்கள் கொண்டாடுவார்கள்.

தென்னங்குருத்து ,குருத்தோலை தென்னை மரத்திற்கும் உண்டு. கல்யாண  வீடுகளில் மாவிலையோடு சேர்த்து தோரணமாய்ப் போடுவது இந்தக் குருத்தோலையைத் தான் . மதுரையில் தென்னங்குருத்து என்றே தள்ளுவண்டியில் இன்னமும் விற்கின்றார்கள்.உடல் நலத்திற்கு நல்லது எனக் கேள்விப் பட்டு வாங்கிச் சாப்பிட்டதுண்டு.ருசியாகவே இருக்கும். நல்ல காரியங்களுக்கு இந்தத் குருத்தோலை தவறாமல் கிராமத்தில் இடம் பெறும் .பல கிராமப்புற சினிமா திருவிழாப் பாடல்களில் அதை நீங்கள் காணலாம் .(மதுரை மரிக் கொழுந்து வாசம் பாடலில் கூட ஆரம்பத்தில் காட்டுவாங்க) கிராமங்களில் காட்டு வேலை செய்பவர்கள் மரக் கிளையில் தொட்டில் கட்டி பிள்ளைகளை உறங்க வைப்பார்கள். (அதெல்லாம் ஒரு காலம் ) ..

எனக்குத் தெரிந்து குரல் வளம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ ஒரு ஆராரோ ஆரிரரோ தாலாட்டுக்கு மயங்காத பிள்ளைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒரே தாலாட்டு ஜோ ஜோ 🙂 என் அண்ணன் பிள்ளைகளை கட்டுப் படுத்தும் மந்திரம் இது:) தாலாட்டு குழந்தைக்கு மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சிருக்காங்க .தாலாட்டு புரியாவிடிலும் நமக்கு வேண்டியவர்கள் நமக்கு மிக அருகாமையில் தான் இருக்கிறார்கள் என்ற பாதுகாப்பையும் ஆசுவாசத்தையும் குழந்தைக்குத் தரும் என்று அவதானிக்கிறேன். எவருமில்லாத அமைதியான சூழலில் அழும் குழந்தை அதை உறுதிப் படுத்தும்.குரல் கேட்டதும் குழந்தை இயல்பாகி மீண்டும் உறங்க ஆரம்பிக்கும்.

இப்படியாக இந்தப் பாடல் பல நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது .இந்தப் பாடலில் உள்ள ஒரே உறுத்தல் அவ்ளோ பெரிய அம்மணி நக்மாவை குழந்தையா  நினைச்சு தொட்டிலில் போட்டு ஆட்டுவதுதான். காதலுக்குக் கண்ணில்லைன்னு சும்மாவா சொன்னாங்க :))

சில படங்கள்:

1. குருத்தோலைப் பெட்டி:

petti

2. பனை ஓலைக் கிளுக்கு:
petti

3. தென்னங்குருத்து

Thennanguruthu (2)

4. பாடலின் வீடியோ:

http://www.youtube.com/watch?v=LO6Vllv85Rk

உமா கிருஷ்ணமூர்த்தி

தென் மதுரைச் சீமையைச் சேர்ந்தவர். ட்விட்டரில் பெரியாள். தன்னுடைய வலைப்பதிவுக்கு (http://umakrishhonline.blogspot.in/) ”நிச்சயம் புரட்சிப்பெண் அல்ல, மனித கூட்டங்களின் நடுவே எனக்கென்று ஒரு அடையாளத்தை மட்டுமே விரும்புகின்றேன்” என்று Tagline வைத்திருக்கிறார்.

”வேற எதாவது சொல்லுங்க” என்றால் இப்படிப் பதில் வருகிறது: “மண் சட்டியில் சோறு ஆக்கி விளையாடுவது பிடிக்கும். பல்லாங்குழி வீட்டில் வைத்து இருக்கிறேன். மழை நின்றபிறகு மரத்தில் உள்ள நீரை உதிர்த்து விளையாடுவது பிடிக்கும். ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுவது பிடிக்கும்”