மணியே மணியின் ஒலியே

புறநகரில் இருக்கும் கோவிலில் தீபாராதனையின்போது பக்தர்களே கோவில் மணியடித்து வழிபடுகிறார்கள். விசாரித்தபோது கிடைத்த தகவல் – கோவில் நிர்வாகம் மின்சாரத்தில் இயங்கும் கருவியை வாங்கலாம் என்று திட்டம் போட்டபோது காலனியில் வாழும் மக்கள் ‘புதிதாக உலோகத்திலான கோவில் மணியே வாங்கலாம், மணியடிக்க வேலையாள் தேவையில்லை, பக்தர்களே அந்த வேலையை செய்வோம்’ என்று சொல்லி, நன்கொடைகள் மூலம் செய்து முடித்திருக்கிறார்கள். சபாஷ்.

கணீர் என்று ஒலிக்கும் மணி, இனிமையான மங்கள வாத்திய இசை இவையே கோவிலுக்கு அழகு. ஐயப்பன் கோவிலில் கேட்கும் மேள வாத்திய (செண்டை ?) இசை அருமை.  இப்போது சென்னையில் பல ஆலயங்களில் பூஜையின் போது மின்சார இசைதான் கேட்கிறது. மத்தளம், மணி, சேகண்டி என்று பல வாத்திய ஒலிகளின் கலவையாக ஒலிக்கும் இசை. வாத்தியத்தின் வடிவமைப்பை ரசிக்கும் அளவிற்கு ஒலியை ரசிக்க முடிவதில்லை.

என் பள்ளிப்பிராயம் முழுவதும் ஒரு சிறு நகரத்தில்தான். கோவிலிலும் நான் படித்த கிறிஸ்துவ பள்ளியிலும் பெரிய அழகான உலோக மணிதான். அந்த நாதம் அன்றாட வாழ்வின் பகுதியாக இணைந்தே இருந்தது. மகிழ்ச்சி துக்கம் என்று எல்லா உணர்வுகளிலும் ஒரு அருமையான தோழனாக வந்த Reverberating ஒலி.

கண்ணதாசன் மணியோசை படத்தில் எழுதிய  ‘தேவன் கோவில் மணியோசை’ என்ற பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) கேளுங்கள்

http://www.youtube.com/watch?v=VGChKUDqAZI

தேவன் கோவில் மணியோசை

நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்

பாசத்தின் ஓசை மணியோசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்

உதவும் கோவில் மணியோசை

தாயார் வடிவில் தாவி அணைத்தே

தழுவும் நெஞ்சின் மணியோசை

இது உறவினை கூறும் மணியோசை

இவன் உயிரினை காக்கும் மணியோசை

என் விருப்பம் பாரம்பரியமான மணியோசைதான். ஆகம சாஸ்திரப்படி கோவிலில் மணியடிப்பது துர்தேவதைகளை விரட்டவே என்று படித்தேன். மின்சார மணியிலும் அதை விரட்ட முடியுமே என்றால் என்னிடம் பதில் இல்லை.

மோகனகிருஷ்ணன்

348/365