தலைவர்களின் தலைவிகள்

சங்க இலக்கியம் காதல் கொண்ட ஆணையும் பெண்ணையும் தலைவன் தலைவி என்றே அழைக்கிறது. மிகப் பொருத்தமான பெயர்தான். அவனுக்கு அவள் தலைவி. அவளுக்கு அவன் தலைவன். அவர்கள் ஊடிக் கூடி முயங்குவதுதான் காமம்.

அது சரி. ஊருக்கோ நாட்டுக்கோ தலைவன் ஒருவன் இருப்பானே. அவனுக்கும் ஒரு தலைவி இருப்பாளே! அவளுடைய நிலை எப்படி இருக்கும்?

சாதரண மனிதனாலேயே வீட்டுக்கும் வேலைக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படியிருக்க நாடாளும் தலைவன் நாட்டுக்கும் வீட்டுக்கும் சரியான அளவு நேரமும் கவனமும் ஒதுக்க முடியுமா?

முடியாது என்று அடித்துச் சொல்கிறார் துரியோதனனின் மனைவி பானுமதி.

அரண்மனை அறிவான்
அரியணை அறிவான்
அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கை முடித்து வைப்பான்
மனைவியின் வழக்கை கனவிலும் நினையான்
என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
இதுதானோ உங்கள் மன்னவர் நீதி!

நாட்டுக்கே அரசியானலும் இதுதான் அவள் நிலை. “தன்னுயிர் போலே மண்ணுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி” என்றுதான் அவளால் புலம்ப முடிந்தது. ஆனாலும் அவளுக்கும் ஒரு நம்பிக்கை.

இன்றேனும் அவன் எனை நினைவானோ
இளமையைக் காக்க துணை வருவானோ
நன்று! தோழி நீ தூது செல்வாயோ
நங்கையின் துயரச் சேதி சொல்வாயோ!

கவியரசர் கண்ணதாசன் வரிகளில் அத்தினாபுர அரசி பானுமதி அனுப்பிய தூது வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். வெற்றி பெற்றிருக்கவே விரும்புகிறேன்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பெண்கள் நிலை மாறியிருக்கிறதா? குறிப்பாக தலைவர்களின் தலைவிகளின் நிலை? இல்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.

இப்பொதெல்லாம் அந்தரங்க விஷயங்களை நம்பிப் பரிமாறுவதற்கான தோழிகளும் தோழர்களும் அரிதாகித்தான் போனார்கள். ஆகையால் முதல்வனின் முதல்வி அவளுக்காக அவளே பாடுகிறாள்.

உலகம் வாழ நிதி ஒதுக்கு
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு
அதற்கு நீதான் விதிவிலக்கு
மன்னனே… இதோ இவள் உனக்கு

அப்போதும் அவன் அசைந்து கொடுத்தது போலத் தெரியவில்லை. ஆசைகளை அள்ளித் தெளிக்கிறாள்.

பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்
பள்ளியறை வர நேரமில்லையா
ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி
உடைகள் தளர்த்திட வேண்டுமில்லையா!

காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா?” என்று தலைவியே தலையெழுத்தை நொந்து கொள்கிறாள். காலங்கள் மாறினாலும் தலைவிகளுக்கு புலம்பல் தான் வழி போல!

இந்த ஏக்கங்கள் தலைவிக்கு மட்டுந்தான் இருக்குமா? இல்லை. தலைவனுக்கும் இருக்கும் என்கிறார் கவிஞர் வாலி.

தலைவன் போர்க்கடமையில் இருக்கிறான். போர்ப்பாசறையில் இருந்தாலும் அவன் மனம் அவளது பாச அறைக்கு ஏங்குகிறது.

வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்!
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!

அப்படியானால் மகிழ்ச்சியான தலைவனும் தலைவியும் கிடையவே கிடையாதா? அவர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது? கவலை வேண்டாம் என்கிறார் கவிஞர் வாலி. மன்னவன் வந்தானடி என்ற படத்துக்காக ஒரு பாடல் எழுதினார்.

காதல் ராஜ்ஜியம் எனது!
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது!
இது மன்னன் மாடத்து நிலவு!
இதில் மாலை நாடகம் எழுது!

அடடா! இப்படி தலைவனும் தலைவியும் ஒன்றாக மனமகிழ்ந்து பாடுவது நமக்கெல்லாம் கேட்பதற்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது!

பதிவில் இடம் பெற்ற பாடல்கள்
பாடல் – என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர் – இசையரசி பி.சுசீலா
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
படம் – கர்ணன்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=ON5Wh1WuAH0

பாடல் – முதல்வனே வனே வனே வனே
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர் – எஸ்.ஜானகி
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
படம் – முதல்வன்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=k6X1d2zlqTw

பாடல் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – இசைஞானி இளையராஜா
படம் – தளபதி
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=aPp_i4qzoqI

பாடல் – காதல் ராஜ்ஜியம் எனது
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – மன்னவன் வந்தானடி
பாடலின் சுட்டி – http://www.youtube.com/watch?v=EMPVtUf42Dc

அன்புடன்,
ஜிரா

347/365