வண்ண வண்ண சேலைங்க

விசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.

திரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின்  மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில்  மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.

பாரதியார் என்ன சொல்கிறார்? துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது.  அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் சொல்கிறார்.

பொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல

         புண்ணியவாளர்தம் புகழினைப்போல்

தையலர் கருணையைப் போல் – கடல்

         சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்

பெண்ணொளி வாழ்த்திடுவார்-அந்தப்

         பெருமக்கள் செல்வத்தின் பெருகுதல்போல்

வண்ணப் பொற் சேலைகளாம் – அவை

         வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே !

வாலியும்  பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா! என்று சீதரனை விளித்தாள். உடனே

இருளினால் செய்த

எழில்மேனியன் -எங்கிருந்தோ

அருளினான்

ஆடைமேல் ஆடைமேல்

ஆடைமேல் ஆடைமேல்

ஆடையாய் இடைவிடாது

சங்கம்; சக்கரம்

தங்கும் தனது

கைத்தறியில் – உடை நெய்து

கையறு பெண்ணுக் கனுப்பிட

என்ற வரிகளில் அவன் பல புடைவைகள்  அனுப்பினான் என்றே சொல்கிறார்.

வைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே  என்று ஒரு cinematic ஜோடனை.

http://www.youtube.com/watch?v=LkPxCJ5ux-c

பெண்கள் உடை  எடுத்தவனே

தங்கைக்கு உடை கொடுத்தவனே

சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி

ஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.

http://www.youtube.com/watch?v=ayX_wJ8otVM

கண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம்  பாடியவர் பி சுசீலா)

http://www.inbaminge.com/t/p/Poovum%20Pottum/Ennam%20Pola%20Kannan%20Vanthan.eng.html 

எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா

பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா

என்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.

மோகனகிருஷ்ணன்