விருந்தினர் பதிவு: போதை மயக்கம்

இன்றைய இளையதலைமுறையினரை மிகவும் பாதித்திருக்கும் கொடிய பழக்கம் போதைப்பழக்கம்.நாட்டில் பல சமூகவிரோத செயல்கள்,விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் மது மற்றும் இன்ன பிற போதைப் பழக்கங்களே.பலரின் உடல்நலம் கெடுவது மட்டுமல்லாமல் பலரின் திறமைகள் மங்கிப் போவதற்கு காரணமும் இதுவே.சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து அவர்கள் “இளம் இயக்குனர்களே “மது”என்பது மதுரை என்ற வார்த்தையில் இருக்கட்டும்-உங்கள் வாழ்க்கையில் வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்

“உட்கப்படா அற் ஒளியிழப்பர்-எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகுவார்” என்று வள்ளுவரும் கள்ளுண்ணாமை குறித்து குறள்  எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் இதை பற்றிய மூன்று முக்கியமான பாடல்கள்-

கவிஞர் வாலி எழுதிய வரிகள்- “மானைப்போல் மானம் என்றாய்,நடையில் மதயானை நீயே என்றாய்,வேங்கை போல் வீரம் என்றாய் அறிவில் உயர்வாகச் சொல்லிக்கொண்டாய்-மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்” -தைரியமாக சொல் நீ மனிதன் தானா-இல்லை நீ தான் ஒரு மிருகம்-இந்த மதுவில் விழும் நேரம்…என மது அருந்திய ஒருவனை பார்த்து பாடப்படுவதாக அருமையாக எழுதியிருப்பார்.

இரண்டாவதாக வாலியின் இன்னொரு பாடல்-

“நல்ல மனுஷன் சாராயத்தை தொட்டதுமில்லை-அது தொட்டவனை லேசில தான் விட்டதுமில்லை-மனுஷனோட ரத்தத்தை தான் அட்டை குடிக்கும் ஆனா மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்-“குடிக்காதே தம்பி குடிக்காதே-நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே,உன் வீட்டை ஒரு கழுதை கூட மிதிக்காதே” என மிக எளிமையாக குடியின் தீமைகளை எடுத்து கூறியிருப்பார்.

மூன்றாவது பாடல்-கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்-” ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால் உயிரை சுவைக்கும்-பொய்யில்லை என போதைப் பழக்கத்தின் கேட்டைக் கூறி

“மயக்கம் என்பது மாத்திரையா-மரணம் போகும் யாத்திரையா

விளக்கு இருந்தும் இருட்டறையா -விடிந்த பின்னும் நித்திரையா

வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து வயதை தொலைத்து வாழுவதா?

இந்த உலகம் உன்னை அழைக்கிறது-அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை-நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை” என போதை பழக்கதிலிருந்து இளைஞர்கள் மீள்வதற்காக அற்புதமாக எழுதியிருப்பார்.

 

பதிவில் இடம்பெற்ற பாடல்கள்-

பாடல்:          தைரியமாக சொல் நீ மனிதன் தானா

படம்:             ஒளிவிளக்கு

எழுதியவர்:  கவிஞர் வாலி

இசை :           M.S.விஸ்வநாதன்

பாடியவர்:    T.M. சௌந்தர்ராஜன்.

சுட்டி:            http://youtu.be/zwOSls9qlqY

 

பாடல்:            குடிக்காதே தம்பி குடிக்காதே

படம்:                நான் குடித்துக்கொண்டே இருப்பேன்

எழுதியவர்:    கவிஞர்  வாலி.

இசை:              M.S.விஸ்வநாதன்

பாடியவர்:     T .M.சௌந்தரராஜன்

சுட்டி:               கிடைக்கவில்லை.

 

பாடல்:             ஒரு பண்பாடு இல்லையென்றால்

படம்:                ராஜா சின்ன ரோஜா

எழுதியவர்:    கவிஞர் வைரமுத்து

இசை:               சந்திரபோஸ்

பாடியவர்:       கே.ஜே.யேசுதாஸ்.

சுட்டி:                http://youtu.be/2rcTcGv08NM

நா. ராமச்சந்திரன்

பிறந்தது கடலூர், என்றாலும் வளர்ந்ததெல்லாம் சிங்காரச் சென்னைதான். ஒரு தனியார் நிறுவனத்தில் பணி. தற்போது பெங்களுரில் வசிக்கிறேன். ட்விட்டர் முகவரி: http://twitter.com/rajinirams