உண்ணும் உணவும் நீரும் தந்த

பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் முடிந்தவுடன் திரை போட்டு அலங்காரம். பின் மஹா நைவேத்தியம். மடப்பள்ளியிலிருந்து ஒருவர் மூடிய பாத்திரத்தில் கொண்டு வந்ததை வைத்து நைவேத்தியம்

இது வழக்கில் வந்த சொல். சரியான சொல் – நிவேதனம் இது இறைவனின் கருணையைப் போற்றுகிற விஷயம்.  அறிவிப்பது அல்லது காண்பிப்பது என்று பொருள். இறைவனுக்கு நாம் உணவு படைப்பதில்லை. அவன் கருணையினால் கிடைத்ததை, அவனுக்குக் காண்பித்து, அவன் உத்திரவுடன் அதை நாம் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை. இது எல்லா மதங்களிலும் உள்ள நம்பிக்கை. அந்த கருணை நீடித்துக் கிட்ட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். ஆங்கிலத்தில் Meal Time blessing என்று ஒரு பாடல்

Thank you for the world so sweet,

Thank you for the food we eat.

Thank you for the birds that sing,

Thank you God for everything.

இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவை? ஒளவையார் அருளிய நல்வழியில்  

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றும் தா.

விநாயகரிடம் ஒரு Barter டீல். அருணகிரிநாதர் கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி என்று விநாயகர் விரும்பி உண்ணும் உணவுப் பொருள்கள் சொல்கிறார். திருப்பாணாழ்வார்

கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

என்று கண்ணன் தின்ற வெண்ணெய் பற்றி சொல்கிறார். சிவனுக்கு அன்னம், அனுமனுக்கு வடை, முருகனுக்கு பஞ்சாமிர்தம், பெருமாளுக்கு லட்டு வெண்பொங்கல்,புளியோதரை என்று ஒரு பெரிய மெனு கார்ட் இருக்கிறது.

நமக்கு கிடைத்த உணவை இறைவனிடம் காட்ட வேண்டும் என்றால் ஏன் இந்த லிஸ்ட்? மனப்பூர்வமாக எதையும் கொடுக்கலாம் என்பதே உண்மை. கண்ணப்பரும், குகனும், சபரியும் குசேலரும் தந்த எளிமையான நிவேதனங்களை இறைவன் ஏற்றுக்கொண்டானே?

ஆதி பராசக்தி படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை கே வி மகாதேவன் பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன்) ஒரு மீனவன் தான் தரும் எளிய உணவை ஏற்றுக்கொள்ள சொல்லும் வேண்டுதல்

http://www.youtube.com/watch?v=gRkiCrHRA-A

ஆத்தாடி மாரியம்மா-சோறு

ஆக்கி வெச்சேன் வாடியம்மா

ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்

தின்னு புட்டுப் போடியம்மா

பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்

பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே

பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்

மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

நிவேதனம் செய்ய multi cuisine உணவோ அலங்காரமோ தேவையில்லை. தேவர் படம் ஒன்றில் பக்தர் முருகனுக்கு ஒரு லாரி லோடு வழைப்பழம் அனுப்புவார். லாரி ஓட்டுநர் போகும் வழியில் இரண்டு பழங்களை பசியில் வாடும் ஒரு குழந்தையிடம் தருவார். முருகன் பக்தரின் கனவில் தோன்றி ‘ நீ அனுப்பிய இரண்டு வாழைப்பழங்கள் வந்தாச்சு நல்லா இருப்பா’ என்பார். பசித்திருக்கும் ஒருவருக்கு அளிக்கும் உணவே சிறந்த நிவேதனம்.

மோகனகிருஷ்ணன்

342/365