தங்க மழை தூவும் திருநாளாம்

ஆதிசங்கரர் ஒரு ஏழையின் வீட்டில் யாசகம் வேண்டி நின்றார். அந்த வீட்டில் வறுமை குடிகொண்டிருந்தது. ஆனாலும் அந்த ஏழைப்பெண்மணி தன்னிடமிருந்த நெல்லிக்காயை எந்த தயக்கமும் இல்லாமல் தானம் செய்கிறார். அடுத்த வேளை உணவுக்கு எந்த வழியுமில்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த பெண்மணியின் குணம் கண்டு நெகிழ்ந்த ஆதிசங்கரர் மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார்.

இந்த கனகதாரா ஸ்தோத்திரம் கேட்டு மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள். கண்ணதாசன் பொன்மழை என்று இதை தமிழில் எழுதியிருக்கிறார்.

மந்திரம் உரைத்தாற் போதும் –

மலரடி தொழுதால் போதும்

மாந்தருக்கருள்வேன் என்று

மலர்மகள் நினைத்தால் போதும்

இந்திரப் பதவி கூடும் –

இகத்திலும் பரங்கொண்டோடும்

இணையறு செல்வம் கோடி

இல்லத்தின் நடுவில் சேரும்’

திருமகள் , பொன் மழை என்றவுடன் நாம் எல்லாருக்கும் ஒரு பாடல் நினைவுக்கு வரும். சொர்க்கம் படத்தில் ஆலங்குடி சோமு எழுதிய பொன் மகள் வந்தாள் (இசை எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர் டி எம் எஸ்) பாடலில் பொன்மழை நெடி

http://www.youtube.com/watch?v=4eMmgxr5KbE

பொன் மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்

தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா

வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்

செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்

வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜனாக

திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்

பொன், முத்து, வைரம், செல்வம், வெல்வெட் விரிப்பு, பொருள் கோடி என்று ஒரு லிஸ்ட் போடுகிறார். திருமகள் சம்மதம் தந்துவிட்டாள் என்கிறார்.

வெறும் மந்திரம் சொன்னால் பொன் மழை கிட்டுமா? கதையின் பொருள் அதுவா? இல்லை. கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில் தன்னிடமிருந்த நெல்லிக்காயை பகிர்ந்த செயலின் உன்னதம் சொல்ல அந்த செயலுக்கு ஈடாக பொன்னையும் அளவற்ற செல்வத்தையும் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. பகிர்ந்து உண்ணுதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. சரியா?

மோகனகிருஷ்ணன்
340/3657